சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் அன்றைய இளைஞர்களைத் தன் மொழியால் வளைத்துப் போட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். அவருடைய கவிதைகள், வார இதழ்களில் அவர் எழுதிய உரைக் காவியங்கள் ஆகியவற்றை காத்திருந்து வாங்கி வாசித்த இளைஞர் பட்டாளம் தமிழகத்தில் உண்டு. நமக்குத் தெரிந்த செய்தியானாலும் தெரியாத செய்தியானாலும் ஒன்றை இத்தனை அழகாகச் சொல்ல இயலுமா, இப்படியும் அதைச் சொல்ல முடியுமா என வியக்க வைத்தவர் அவர்.
பொதுத் தளத்தில் இயங்கும் பல சிறுபான்மையர் தமது மத அடையாளங்களைக் காட்டிக் கொள்வதில் தயக்கம் கொள்வதுண்டு. புனை பெயர்கள், உடை, தோற்றம், மொழி முதலானவற்றின் ஊடாகத் தம் அடையாளங்களை மறைத்துக் கொள்ளும் நிலை உண்டு. கவிஞர்கள் அபி, மு. மேத்தா முதலானோர் முஸ்லிம்கள் என்பதை நான் வெகு தாமதமாகவே அறிந்தேன். ஆனால் கவிக்கோ அவர்கள் பெயரிலாகட்டும், தோற்றத்திலாகட்டும் பேச்சிலாகட்டும் அவர், தான் ஒரு முஸ்லிம் என்பதை மறைத்ததில்லை. தனது எழுத்துக்களில் எந்நாளும் மதச் சார்பின்மையை வற்புறுத்தத் தயங்காத அவர் இன்று பெரும் இக்கட்டிற்கு உள்ளாகி இருக்கும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து விலகியதில்லை. “பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்” என வெளிப்படையாக ஒரு வெறுப்புக் குரல் இன்று உரத்து முழங்கப்படும் சூழலில் அப்துல் ரகுமான் அவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் முஸ்லிம் அமைப்புகள் தற்காப்பு நோக்கில் அணி திரள நேரும்போதெல்லாம் அவர்களோடு நிற்பது குறிப்பிடத்தக்கது.
1960களின் பிற்பகுதி தொடங்கி 1970 கள் .என்பன உலக வரலாற்றிலும், இந்தியத் துணைகண்ட வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும் ஒரு முக்கியமான காலகட்டம். உலக அளவில் மாற்றங்கள் வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்ற ஒரு காலகட்டம்.. உலகை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற இந்த ஆவேசம் இலக்கிய உலகில் வானம்பாடிக் கவினர்கள் மூலம் வெளிப்பட்டது. ஏற்கனவே 1960களில் இங்கே தமிழ்க் கவிஞர்கள் கவிதை மீது குந்தி இருந்த இலக்கணச் சுமையைத் தூக்கி எறிந்து புதுக் கவிதைகளை உருவாக்கி இருந்தனர். ஆனால் மணிக்கொடிப் பாரம்பரியத்தில் வந்த அவர்கள் மக்கள் பிரச்சினைகளை, அன்றாட அரசியலைத் தொடுவதே கொடும் பாவம் என்கிற அளவிற்கு முழுக்க முழுக்க இவற்றிலிருந்து ஒதுங்கினர்.
இந்தப் பின்னணியில் தான் அந்த 1960 களின் பிற்பகுதியில் உருவான அரசியல் பிரக்ஞை இலக்கிய உலகில் வானம்பாடி இயக்கமாக உருப் பெற்றது. ஆனால் அவர்கள் சற்றே திகட்டும்அளவிற்குக் கவிதைகளை அரசியல் முழக்கங்களால் நிரப்பி வெகு விரைவில் அந்நியப்பட்டனர். மீண்டும் கவிதையை முழக்கங்களிலிருந்து விடுவித்து உருவானதுதான் படிமக் கவிதை இயக்கம். வானம்பாடி யுகத்தில் உருவாகி, விரைவில் அதிலிருந்து விடுபட்டு படிமக் கவிதை யுகத்தில் அதன் உச்சத்தைத் தொட்டவர்களில் ஒருவர்தான் கவிக்கோ.
கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாடு என்ன? எளிமையாகச் சொல்வதானால் உரைநடை என்பது ஏதொன்றையும் அப்படியே சொல்வது. கவிதை என்பது ஒன்றை அப்படியே சொல்லாமல் வேறு மாதிரிச் சொல்வது. “தீ சுடும்” என்றால் அது உரைநடை; “தீ இனிது” எனப் பாரதி சொல்லும்போது அது கவிதை. அப்படிச் சொல்லும்போது நாம் அந்தப் பொருளிலிருந்து விலகி நின்று அதைக் கவனிக்கிறோம். அருகாமை அளிக்கும் ‘பரிச்சய உணர்வு’ நம்மில் அழிகிறது. ஒரு defamiliarisation அங்கு நடக்கிறது. புத்துப் புது அர்த்தங்கள், புதுப்புது சிந்தனைகள் நம்மில் முளைக்கின்றன. கவிக்கோ அவர்களின் ஒரு படிமக் கவிதை:
முதுமை
நிமிஷக் கரையான் / அரித்த ஏடு
இறந்த காலத்தையே பாடும் / கீறல் விழுந்த இசைத்தட்டு
ஞாபகங்களின் / குப்பைக் கூடை
வியாதிகளின் / மேய்ச்சல் நிலம்
காலத்தின் குறும்பால் / கார்டூன் ஆகிவிட்ட / வர்ண ஓவியம்
ஆனால் இந்தப் படிம அலங்காரம் விரைவில் கவிதையின் மீதான இன்னொரு சுமை ஆனது. அளவுக்கதிகமான நகைகளையும் பகட்டான உடைகளையும் அணிந்த உருவம் போல அது அலுப்பூட்டியது. இன்று தமிழ்க் கவிதை இந்தப் படிம அலங்காரங்களை ஒதுக்கி விட்டு எளிமைக் கோலம் தரித்து நடைபயில்கிறது. கவிக்கோ படிம அலங்காரங்கள் இல்லாமல் எழுதிய கவிதைகள் அவரது படிமக் கவிதைகளைக் காட்டிலும் மனதைத் தொடுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்று:
கருப்பைக்குள்ளே
மரணக் குகைக்குள்ளே
கர்ப்பக் கிரகங்களின் ஊடே
சாகாத கேள்விகளின் வழியாக
ஆதிக்கும் முன்னே
அந்தத்திற்கும் அப்பால்
எங்கும் என்னுள்
பின் தொடந்து வந்தது
வேட்டை வெறியோடு
ஆதி இருள்
கவிக்கோவின் ஒரு கவிதையை சொல்லி முடிக்கலாம்.. ஏசுவின் மலைப் பிரசங்கத்தின் பல பகுதிகள்ஒரு அற்புதமான கவிதையாக மிளிர்கின்றன.. கீழே உள்ள இந்த அற்புதமான கவிதை வரிகளுக்குச் சொந்தமானவர் சூசையப்பரின் மகன் ஏசு கிறிஸ்துதான்.
“வானத்துப் பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை
காட்டுமலர்ச் செடிகளைப் பாருங்கள்
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
ஆனால் சாலமோன் தனது மேன்மையான நாட்களில் கூட
அவற்றைப்போல அணிந்ததில்லை”
மகாகவி பாரதி விவிலியத்தைப் படித்தாரோ இல்லையோ கிட்டத் தட்ட அதே கருத்தை, “இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஒளடத மூலிகை பூண்டுபுல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?” எனப் பாடியுள்ளதை அறிவோம்.
கவிக்கோ மேற்சொன்ன அந்த விவிலியக் கவிதையை இப்படி உருமாற்றுகிறார்:
“ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்
ஒரு பறவையின் வேர்வையை மற்ற பறவைகள் குடிப்பதில்லை
காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
ஒரு புஷ்பத்தின் உடையை மற்றொரு புஷ்பம் பறிக்கிறதில்லை
மனுஷ் குமாரனே சகலமும் பிடுங்கப்பட்டுப் போனானே
இம்முறை சிலுவையில் அறையப்படுவதற்கு
அல்ல அறைவதற்கு வந்திருக்கின்றேன்”
ஆன்டவனிடம் பாரத்தை இறக்கிவிட்டுச் சும்மா இருங்கள் என்கிறார் ஏசு. அன்பு செய்யுங்கள் அது போறும். வேறு எந்தக் கடமையும் வேண்டாம் என்கிறார் பாரதி. ஆனால் கவிக்கோ அவர்களோ மண்ணில் தென்படும் இந்த அவலங்களைக் கண்டு சும்மா இருக்க இயலாது. இறைமகனோ இறைத்தூதரோ அவருடைய பணி சிலுவையில் அறையப்பட்டு மடிவதல்ல. அநீதிகளை அழித்தொழிக்கக் களம் இறங்குவோம் என்கிறார்.
இந்த மனநிலை எப்படி உருவாகிறது? ஏசு, புத்தர், நபிகள் எல்லோரும் அநீதிகளுக்கு எதிரானவர்களாகத்தான் இருந்தனர். ஆனால் நபிகள் ஒருவரே அந்த அநீதிகளுக்கு எதிராகக் களம் இறங்கியவர். வாளெடுத்தவர். போராடியவர். ஏசு எந்த மக்களுக்காகப் போராடினாரோ அந்த மக்களின் கண் முன்னே சிலுவையில் தொங்கினார். ‘என் தேவனே என் தேவனே என்னைக் கைவிட்டீரே’ எனப் புலம்பியவாறு அவர் உயிர் பிரிந்தது. புத்தரின் கண் முன் அவர் பிறந்த சாக்கிய இனக்குழு அழிக்கப்பட்டது. நபிகள் அப்படி வாளாவிருக்கவில்லை. இக உலகில் அறம் சார்ந்து வாழ்ந்துப் பர உலகில் பலன் காண்பீர் என்று மட்டும் அவர் சொல்லவில்லை. இக உலகிலேயே நீதியும் சமத்துவமும் உள்ள ஒரு உலகை அமைக்கும் பணியும் மனிதர்க்கு உண்டு என்றார். கவிக்கோஇதை எதிரொலிக்கிறார்..
இறுதியாக ஒன்று. இன்று எழுத்தாளர்கள் கொல்லப்படுவதையும் கருத்துரிமை மறுக்கப்படுவதையும் எதிர்த்து விருதுபெற்ற எழுத்தாளர்கள் அறுபதுக்கும் மேல் தம் விருதுகளைத் துறந்து புரட்சி மேற்கொண்டுள்ளனர். தமிழகத்திலிருந்துதான் யாரும் இல்லை. இந்நிலையில் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் தனது சாகித்ய அகாதமி பரிசைத் துறந்தார் எனில் அதுவே அவர் மேற்சொன்ன. அவரின் கவிதைக்கு உண்மையாக உள்ளார் என்பதன் பொருளாக அமையும்.