(கத்தோலிக்கத் திருச்சபையினர் (ஜன 30) திருச்சியில் “அரசியல் களம் காணும் பொது நிலையினர்” என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள இரு நாள் கருத்தரங்கில் ஒரு அமர்வில் கருத்துரைத்தேன். விரிவான உரையின் இறுதியில் நான் சொன்னது இது.)
“இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை சதத்திற்கும் குறைவு. அவர்களும் தென் மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலுமே செறிந்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் ஆறு சதம். முஸ்லிம்களைக்காட்டிலும் கிறிஸ்தவர்கள் சிறிது அதிகம். இரு சமூகங்களுமே இன்று வளர்ந்து வரும் வலதுசாரி பாசிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும், இயக்க ரீதியிலும் திரண்டுள்ள அளவிற்கு கிறிஸ்தவர்கள் திரளவில்லை.
முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் அணி திரண்டிருப்பதால் அவர்களுக்கு இன்று அரசியல் அரங்கில் அங்கீகாரம் உள்ளது, மரியாதை உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு அது இல்லை. முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளத்துடன் கூடிய கட்சிகளின் சார்பாகத் தேர்தலில் பங்கேற்கிறார்கள். தேர்தல் கூட்டணிகளில் பங்கு பெறுகின்றனர். பெரிய அரசியல் கட்சிகளுடன் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறித்துப் பேரம் பேசுகின்றனர். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இணைக்க வேண்டியதாக உள்ளது.
ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் அரங்கில் அந்த ஏற்பு இல்லை. காரணம் நீங்கள் அரசியல்மயப் (politicise) படவில்லை என்பதுதான்.
1938ல் சோலாபூரில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தங்கியிருந்த நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் ஒரு குழுமமாக வந்து அவரைச் சந்தித்துத் தங்களுக்கு அறிவுரை கோரி நின்றனர். அவருக்கு அண்ணல் சொன்ன அறிவுரை, “நீங்கள் அரசியல் மயப்பட வேண்டும்” என்பதே. “தலித்கள் நாங்கள் மாகாண சபையில் 15 உறுப்பினர்கள் உள்ளோம். ஆனால் கிறிஸ்தவர்கள் நீங்கள் ஒரு பிரதிநிதி கூட இல்லை.எங்கள் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அரசு விடுதிகள் உள்ளன. உங்களுக்கு அதெல்லாம் இல்லை. உங்களில் பலர் படித்துள்ளீர்கள். நல்ல வேலைகளில் உள்ளீர்கள். ஆனால் உங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் அரசியலை அலட்சியம் செய்வதன் விளைவு இது” என்றார்.
(“Your society is educated. Hundreds of boys and girls are matric. These people have not agitated against this injustice unlike the uneducated untouchables. If any girl becomes a nurse or any boy becomes a teacher they are involved in their own affairs, they do not get involved in public affairs. Even clerks and officers are busy in their work, he ignores the social injustice. Your society is so much educated, how many are District judges or magistrates? I tell you, this is because of your neglect towards politics,because there in nobody to talk of and fight for your rights. …” )
அவர் சொன்னது இன்றும் பொருத்தமாக உள்ளது.
தமிழக முஸ்லிம்கள் இப்படி அரசியல் மயப்பட்டுள்ளபோது நீங்கள் ஏன் அரசியல்மயப்பட இயலாமல் உள்ளது?
எனக்குத் தோன்றுகிற சில காரணங்களை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன்.
1. கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாதிற்கும் வரலாற்று ரீதியாக ஒரு வேறுபாடு உண்டு. கிறிஸ்து அநீதிகளுக்கு எதிராக நின்றார், அதற்காக அவர் துன்பங்களை ஏற்றார். ‘என் தேவனே, என் தேவனே, என்னைக் கைவிட்டீரே’ என மனம் வெதும்பிச் சிலுவையில் மாண்டார். கிறிஸ்துவிற்குப் பின்னர் அடுத்த 300 ஆண்டுகள் கிறிஸ்தவம் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட (persecuted) மதமாகத்தான் இருந்தது. ஆனால் இஸ்லாத்தின் வரலாறு வித்தியாசமானது. இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு இறை வாக்குகள் வரத் தொடங்கிய காலத்தில் அவரும் துன்புறுத்தப்பட்டார். அவர் மக்காவிலிருந்து புலம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவர் விரைவில் அந்த நிலையை மாற்றியமைத்தார். அவரது எஞ்சிய காலம் வெற்றிகளில் கழிந்தது. அவருக்குப் பின் இஸ்லாம் ஏற்றத்தில் இருந்தது வெற்றிகளைக் குவித்தது. நபிகள் குறித்து ஆய்வு செய்வோர் அனைவரும் ஒன்றைச் சொல்வார்கள். அவர் ஒரு இறைத்தூதர் மட்டுமல்ல. ஒரு Statesmen கூட. ஒரு political poject ஒன்று இஸ்லாத்திற்கு உண்டு. அது இறப்பிற்குப் பிந்திய இறுதித் தீர்ப்பு என்பதோடு தன்னைநிறுத்திக் கொள்ளவில்லை. இந்த உலகிலேயே நீதியை நிலைநாட்டும் பொறுப்பையும் அது முன் வைத்தது. கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக மாறியபோதிலும் அதன் உருவாக்கம் அப்படியாக இல்லை. அது மூன்றாம் உலக நாடுகளில் “விடுதலை இறையியலாக”(Liberation Theology) வடிவெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றது என்பதும் அதன் தொடக்க காலப் பாடுகளிலிருந்து பெற்ற உத்வேகந்தான். தமிழகத்திலும் கூட தலித் இயக்கங்களின் உருவாக்கத்தில் கத்தோலிக்க மதமும், சீர்திருத்தக் கிறிஸ்தவமும் ஆற்றிய பங்கை மறுக்க முடியாது. எனினும்கூட அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலவில்லை.
2.தமிழகத்தில் முஸ்லிம்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. ஆம் கிறிஸ்தவர்கள் இல்லை. இங்கே கிறிஸ்தவ உடையார்கள் உண்டு; கிறிஸ்தவ வன்னியர்கள் உண்டு: கிறிஸ்தவப் பிள்ளைமார்கள் உண்டு; கிறிஸ்தவ நாடார்கள் உண்டு; கிறிஸ்தவ மீனவர்கள் உண்டு; கிறிஸ்தவ தலித்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. இதன் விளைவு முஸ்லிம்கள் “முஸ்லிம்” என்கிற அடையாளத்தில் இணைவது போல இங்கே கிறிஸ்தவர்கள் இணைய முடியவில்லை.
3.கிறிஸ்தவத் திருச்சபைகள் மிக வலுவான படிநிலைப்படுத்தப்பட்ட ஒரு கார்பொரேட் வடிவம் எடுத்துள்ளது. மத நிறுவனமே இங்கு கிறிஸ்தவ அடையாளத்தைப் பேணும், காப்பாற்றும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. “மேய்ப்பன் (ஆயர்) / ஆடுகள்” எனும் கிறிஸ்தவ மத உருவகம் ஒன்றே போதும் இந்நிலையை விளக்க. எனவே கிறிஸ்தவ மக்களின் நல்லது கெட்டதுகளை எதிர்கொள்வதற்கு திருச்சபை ஒன்றே போதும் என்கிற நிலை வந்து விடுகிறது. ஆனால் திருச்சபைகள், அவை ஒரு மத நிறுவனங்கள் என்கிற வகையில் பல்வேறு நிலைகளில் அரசுடன் சமரசம் மேற்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது. கூடங்குளம் இதற்கொரு நல்ல உதாரணம். இதன் விளைவு? கிறிதவப் பொது நிலையினரிடம் (laity) அரசியல் முனைப்பு (political initiative) இருப்பதில்லை.
முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது இங்கே கிறிஸ்தவர்கள் மத்தியில் அரசியல் முனைப்பு மழுங்கிக் காணப்படுவதன் பின்னணியாக எனக்குப் படுபவை இவை. மட்டற்ற மனித நேயமும், சேவை மனமும், விடுதலைப் போராட்டங்களில் அர்ப்பணிப்பும் காட்டும் கிறிஸ்தவம் தன்னளவில் தனக்கான ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலாத நிலை உள்ளதற்கு இவை முக்கிய காரணங்களாக உள்ளன.
கிறிஸ்துமஸ் தினம் கூட கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். பாதிரிமார்கள் உயிருடன் எரிக்கப்படக் கூடிய, கன்னியர்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படக் கூடிய, கிறிஸ்தவ ஆலயங்கள் தீக்கிரையாக்கப்படக் கூடிய கால கட்டம் இது. தலித்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலை, மதமாற்றத் தடைச் சட்டங்களின் ஊடாக மத உரிமைகள் பரிக்கப்படும் நிலை ஆகியவற்றிற்கு நமது அரசியல் சட்டத்திலேயே வழிவகுக்கப்பட்டுள்ள நிலை.
இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி முஸ்லிம்களைப் போல கிறிஸ்தவர்களும் அரசியல் மயப்பட வேண்டும். உங்கள் பிரச்சினைகளை இப்படி அறைக்குள் இருந்து கருத்தரங்குகள் நடத்திக் கொண்டிருப்பதன் மூலம் தீர்த்துவிட இயலாது. வீதியில் இறங்க வேண்டும். வீதிக்கு வரும்போது மட்டுமே உங்கள் பிரச்சினை ஊடக கவனம் பெறும். தொலைக் காட்சிகளில் விவாதப் பொருளாகும். அரசை உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும். வலுவான அரசியல் கட்சியாக உருப்பெறுங்கள். சுயேச்சையாகச் செயல்படுங்கள். ஒவ்வொன்றிற்கும் திருச்சபையை நம்பியிராதீர்கள். உங்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்குங்கள். இடதுசாரிகள், பிற சிறுபான்மையினர், தலித்கள், மதச்சார்பற்ற கட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து நின்று பாசிசத்தை எதிர் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை.