கீதையை ‘ராஷ்ட்ரீய கிரந்தமாக’ அறிவிக்க வேண்டும் என மத்திய அயலுறவுஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் கீதைதோன்றிய 5051ம் ஆண்டைக் கொண்டாடிய ‘பகவத் கீதை பிரேரண உத்சவ’த்தில் அவர் இதைவற்புறுத்தியுள்ளார். என்றைக்கு அமெரிக்கத் தலைவர் ஒபாமாவுக்கு மோடி கீதையைப் பரிசளித்தாரோ அப்போதே அது ஒரு தேசியப் புனித நூல் என்பதற்குக் கால்கோள் இடப்பட்டுவிட்டது எனவும் அது மனதுக்கு மட்டுமல்ல உடம்புக்கும் நல்லது எனவும் குறிப்பாய் மனநோய் உள்ளவர்கள் (depression) அவசியம் படிப்பது நல்லது என்கிற ரீதியிலும் பேசியுள்ளார். இதற்கு மாயாவதி, கருணாநிதி, மம்தா முதலானவர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.
மம்தா சொல்லியுள்ளது போல ஒரு மதச் சார்பற்ற ஜனநாயக நாட்டிற்குஅரசியல் சட்டம்தான் தேசிய நூல். ஏதாவது ஒரு மதத்தினர் தம் புனித நூலாக ஏற்றுக் கொண்டதைத்தேசியப் புனித நூலாகவும் அறிவிக்க வேண்டுமானால் முதலில் அரசியல் சட்டத்தைத் திருத்தி, அந்த நாட்டை அந்தக் குறிப்பிட்ட மதத்தைக் கடைபிடிக்கும் நாடாக அறிவிக்க வேண்டும். வெறும்31 சதம் வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி அப்படிச் செய்ய முடியுமா என்பது ஒருபுறம் இருக்க இந்துத்துவவாதிகள் தம் hidden agenda வை நிறைவேற்றுவதற்கு இப்படி ஒவ்வொன்றாக நூல் விட்டுப் பார்ப்பதுவழக்கம் என்பது நமக்குத் தெரியாததல்ல.
இது நிற்க. கீதை குறித்து சில செய்திகள்.
- கீதை மகாபாரத்தத்தின் ஏராளமான கிளை நூல்களில் ஒன்று. மகாபாரத்ததின்.இதிகாசக் கட்டமைப்பிற்கு முற்றிலும் பொருந்தாத ஒரு தத்துவக் கதையாடல் அது. மொழி நடையிலும்அது முழு நூலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. மகாபாரதம் தோன்றி நீண்ட காலத்திற்குப்பின் உருவான குப்தர் காலத்துச் செவ்வியல் சமஸ்கிருத மொழியில் வெளிப்படும் அதன் காலம்,அதாவது அது இறுதி வடிவம் பெற்ற காலம் கி.பி 3ம் நூ. அதாவது அதன் வயது இப்போது அதிகபட்சம்1700 ஆண்டுகள். 5051 ஆண்டுகள் என்பதெல்லாம் வழக்கமாக இந்துத்துவவாதிகள் அடிக்கும் அறிவியலுக்குப் புறம்பான கப்சாக்களில் ஒன்று.
- வேதங்களை பிரமாணமாகக் கொண்ட பார்ப்பன மதத்தில் அதிருப்தியுற்று உருவான சிரமண மதங்கள் பால் மக்கள் ஈர்க்கப்படதன் பின்னணியில் அதை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இடைச் செருகல்தான் கீதை. பவுத்தம் முதலியன முன்வைத்த ‘கன்மம்’ (கர்மம்) முதலான கோட்பாடுகளுக்குள் பிராமணீய, குறிப்பாக வருணக் கோட்பாட்டைக் கொணர்ந்து, அந்த அம்சத்திற்கு அழுத்தம் கொடுத்து உருவானதுதான் கீதை. மிகவும் நுணுக்கமாகவும், தந்திரமாகவும் இது மேற்கொள்ளப்படுள்ளது.நற் செயல்களின் ஊடாகவே இறுதி விடுதலை அடைய இயலும் என்கிற போதி சத்துவக் கோட்பாட்டிற்குமாறாக ‘பக்தி’யின் மூலம் இறையடி சேர்தல்” என்கிற இந்துத்துவ அணுகலுக்கும் இங்குகால்கோள் இடப்படுகிறது. (புத்த) தர்மம் என்பதற்குப் பதிலாக வருண தருமம் (சுதர்மம்)என்கிற கருத்தாக்கமும் முன்மொழியப் படுகிறது. ‘சுதர்மம்’ எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குப் பவுத்தம் முன் வைக்கப்பட்ட பாலி மொழியில் சொல் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
- மகாபாரத்ததில் கீதை இடம்பெறும் சூழல் (context) இதுதான். எதிரேநிற்கும் ரத்த உறவினர்களைக் கொன்று குவித்து என்ன சாதிக்கப் போகிறோம் என நொந்து சலித்துக்கொள்கிறான் பார்த்தன். வில்லையும் அமபையும் வீசி எறிகிறான். அன்று செல்வாக்குடன் எழுந்த பவுத்த அறம், பார்த்தனின் கூற்றாக, இந்த வடிவில் விவாதத்தின் பரபக்கமாக முன்வைக்கப்படுகிறது. போரினால் வருணம் தருமம் எல்லாம் அழியுமே என்றும் சொல்கிறான். இல்லை சுயதருமம், அதாவது உன் வருண தர்மத்தை நீ காப்பதேமுக்திக்கு வழி என்று பதிலுறுக்கிறான் கிருஷ்ணன். பயன் கருதாமால், என்ன விளையும் என்பதைநோக்காமல் உன் கடமையை, அதாவது பிறவித் தொழிலைச் செய் எனக் கூறி, பித்துற்று நின்ற பார்த்தனைஊக்குவிக்கிறான். ஆத்மா அழியாது போரில் விளையும் மரணங்களைக் கருதாது உன் கொலைத் தொழிலைத்தொடர் என உபதேசிக்கிறான். அப்படியும் திருப்தியுறாது நிற்கும் பார்த்தனிடம் தன் விசுவரூபம்காட்டி அவனைப் பிரமிக்க வைத்துத் தன் வாதததை நிலை நிறுத்துகிறான். தன் நியாயத்தை நிலைநாட்ட பரமாத்மனுக்கு தன் தர்க்க பலம் மட்டும் போதவில்லை.
- இதே போன்ற தருணத்தில் பவுத்தம் என்ன தீர்வை முன்வைக்கிறது? புத்தரின் வரலாற்றில் ஓர் சம்பவம். ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் கோலியர் மற்றும் சாக்கிய இனக் குழுக்களிடையே நீண்ட நாள் பகை. அப்போதைக்கப்போது பிரச்சினை மேலுக்கு வரும். புத்தருடைய காலத்திலும் பிரச்சினை கடுமையாக வெளிப்பட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிப் பெரு வெள்ளம்.முடிவெடுப்பதற்காக சாக்கிய இனக்குழுப் பேரவை கூடியது. கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டுமென எல்லோரும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினர். புத்தர் போர் வேண்டாம். பேசித் தீர்ப்பதே சரியான வழி என எவ்வளோவோ மன்றாடிப் பார்த்தார். கேட்பார் இல்லை. வாக்கெடுப்பில் போர் தொடுப்பது என முடிவாயிற்று.
இனக்குழு மரபுப்படி பேரவை முடிவை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் படும். மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உண்டு. அனைத்து இனக்குழு உரிமைகளையும் சுற்றத்தையும் துறந்து வெளியேறுவதே அது. புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு இதுவே. அத்த கண்ட சுத்தத்தில் புத்தர் உரைப்பார்:
i. ஆயுதம் தாங்குவது பயங்கரமாகத் தோன்றியது.இந்த மக்கள் எப்படிச் சண்டை இடுகிறார்கள் பாருங்கள்.
ii. குறைவான நீரில் மீன்கள் துடிப்பது போல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.
iii. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகியது. திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்கள் கடைசி வரை பகை கொண்டு திரிவதைக் கண்டேன். எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று.
5. புத்த தருமத்தை ஏற்று அரசாண்ட அசோகரின் காலத்தில் போர்கள் நிறுத்தப்பட்டன.போர்ப் படைகள் கலைக்கப்பட்டு வீரர்கள் ஆக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பவுத்தஆட்சி அழிக்கப்பட்டு மீண்டும் போர், கொள்ளை முதலான கூறுகளுடன் சுங்க வம்சம் தொடங்கிஉருவான இந்துத்துவப் புந்துயிர்ப்பின் பின்னணியில் உருவானதுதான் கீதை. இன்றளவும்நேருவை எதிர்த்து இந்துத்துவம் வெறியுடன் முன்வைக்கும் ஐந்து காரணிகள் இவைதான்: i.அண்டை நாடுகளுடனான உறவுகளில் பஞ்சசீலம் (அதாவது அறம் சார்ந்த நட்புறவு) ii.இராணுவத் தன்மையற்ற அரசு (Non Military State) iii. அயலுறவில் அணி சேராக் கொள்கை iv.திட்டமிட்ட பொருளாதாரம் vவ். சோஷலிசம் ஆகியன அவரது ஆளுகையின் அடிப்படைகளாக இருந்தனஎன்பதுதான் (பார்க்க: ஆர்.எஸ்.எஸ் இதழின் முன்னாள் ஆசிரியரும் தற்போது பா.ஜ.க எம்.பியுமான தாருண் விஜய் ,டிசம்பர் 12, 2014 ஃப்ரன்ட்லைன் இதழில் எழுதியுள்ளகட்டுரை).
போர்வெறியுடன் கூடிய ஒரு இராணுவத் தன்மை மிக்க அரசின் அடையாளமாகவே இன்று கீதை பா.ஜ.க அரசால் முன்வைக்கப்படுகிறது.
6. கி.பி9ம் நூற்றாண்டில் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் நாடெங்கும் கீதையைப் பரப்பியது வருணதருமத்தை நிலைநாட்டும் பொருட்டு என்பார் பிரேம்நாத் பசாஸ் (இந்திய வரலாற்றில்பகவத் கீதை, விடியல் பதிப்பகம்).
7. காந்தியின் வருகைக்கு முந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மீண்டும் பகவத்கீதை கொண்டாடப்பட்டது. திலகர், அரவிந்தர், பாரதி என எல்லோரும் கீதைக்கு உரை எழுதினர். ‘அனுஷீலன் சமிதி’ போன்ற தொடக்க காலத் தீவிர இயக்கங்கள் தனிநபர்தீவிரவாதத்தின் மூலம் பிரிட்டிஷ்காரர்களைக் கொன்று அவர்களை நாட்டை விட்டுவிரட்டுவது என்கிற நிலை எடுத்துச் செயல்பட்ட போது அவர்களுக்கு உந்து சக்தியாகஇருந்தது கீதை. மிலேச்சர்களின் ஆட்சியில் வருண தர்மம் அழிகிறது. அந்த ஆட்சியை ஒழிப்பதே இன்றைய கடமை. பலனை எதிர்நோக்காமல் கருமத்தைச் செய் என உணர்ச்சியூட்ட கீதைபயன்படுத்தப்பட்டது. அரவிந்தரின் மாணிக்டோலாத் தோட்டத்தில் வெடி குண்டுகள்மட்டுமல்ல கீதைப் பிரதிகளும் கிடந்தன. குதிராம் போஸ் போன்றோர் தூக்கு மரம் ஏறுமுன் கடைசி ஆசை என்ன எனக் கேட்டபோது கையில் கீதையுடன் மரணத்தைத் தழுவ வேண்டும்என்றனர். (விரிவுக்குப் பார்க்க என் முதல் நூலான ‘சிற்றிலக்கியங்கள் சிலகுறிப்புகள்’. அதிலுள்ள ‘பாரதியும் பகவத்கீதை’யும் கட்டுரை. இரண்டாம் பதிப்பு புலம் வெளியீடு).
8. காந்தி விடுதலைப் போரின் திசையை மாற்றினார். அவரும் கீதைக்கு உரைஎழுதினார், அந்த வரலாறு காவியத் தன்மை கொண்டது. (எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ நூலிலுள்ள’காந்தியும் இந்துமதமும்’ கட்டுரையில் விரிவாக அது குறித்து எழுதியுள்ளேன்). “இங்கு என் உரையில் சற்று அதிக உரிமை எடுத்துள்ளேன். சென்ற அத்தியாயங்கள் ஏறத் தாழகீதையின் எளிய மொழி பெயர்ப்பாகவே அமைந்தன. இங்கோ பொது அர்த்தத்தை விளக்குவதன்பொருட்டுச் சில கருத்துக்களைச் சேர்த்துள்ளேன். சுலோகங்கள் சில விடுபட்டுள்ளன.ஆயினும் பயனுள்ள எதுவும் தவிர்க்கப் படவில்லை.” எனப் பகிரங்கமாக அறிவித்துஅவர் கீதை உரை என்கிற பெயரில் புதிய கீதை ஒன்றை எழுதினார். கீதையில் ஆங்காங்கு வெளிப்படும் அவருக்குச் சாதகமான கருத்துக்களைத்தொகுத்து கீதையை செயல், கடமை, தொண்டு ஆகியவற்றை வலியுறுத்தும் நூலாக முன்வைத்தார். பார்த்தன் போரை மறுத்துரைக்கும் முதல் அத்தியாயத்திற்கு ‘அர்ஜுனன் துக்கம்’ எனத்தலைப்பிட்டு நாம் அனைவரும் அர்ஜுனனைப் போலப் போரைக் கண்டு துக்கப்பட வேண்டும் என்றார்.நூலின் பரபக்க வாதததையே நூலின் பூர்வபக்க நியாயமாக உரை எழுதியவர் காந்தி ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இதற்காக அவர் இந்துத்துவவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்து மத விரோதி எனக் குற்றம் சாட்டப்பட்டர். கிறிஸ்தவக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் என்றும் ஏசப்பட்டார். காந்தி அதற்கு இப்படிப் பதிலிறுத்தார்:
“அஹிம்சைய அதன் உச்ச பட்ச வடிவத்தில் வற்புறுத்துவதால் என்னை இந்து எனச் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் என்னை இந்து வேடமிட்டுள்ள கிறிஸ்தவன் என்கிறார்கள். கீதையை கலப்படமற்ற அகிம்சையைப் போதிக்கும் மகா காவியமாக நான் பொருள் கொள்வதற்காக அவர்கள் என்னைக் கீதையைத் திரிப்பதாகவும் கடுமையாக விமர்சிக்கின்றனர். கீதை சில நேரங்களில் கொலை செய்வதையும் ஒரு கடமையாகச் சொல்வதாக எனது இந்து நண்பர்கள் சிலர் சொல்லவும் செய்கின்றனர். அன்று ஒரு கற்றறிந்த சாஸ்திரியார் கீதை குறித்த என் விளக்கத்தை மிகவும் அலட்சியமாக ஒதுக்கி, ‘நன்மைக்கும் தீமைக்கும் இடையே என்றென்றும் நடந்து கொண்டுள்ள போட்ராட்டம் மற்றும் அந்தப் போரில் எந்தத் தயக்கமும் இரக்கமும் இன்றி தீமையை அழித்தொழிப்பது ஆகியவைதான் கீதை சொல்லும் செய்தி என்று கூறப்படும் விளக்கத்தின் மீது யாரும் சான்றளிக்கத் தேவையில்லை’ எனக் கூறினார்…. எனது மதம் என்பது என்னைப் படைத்தவனுக்கும் எனக்குமான தனிப்பட்ட விஷயம். நான் ஒரு இந்து. இந்துக்கள் அவ்வளவு பேரும் என்னை ஒதுக்கினாலும் கூட என்னை இந்து அல்லாதவனாக்க இயலாது…” (Young India, May 29, 1924).
கீதை குறித்து காந்தி சொன்னது சரியா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சினை. ஒரு பிரதியை எவ்வாறு வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கீதையை முன்னிறுத்தும் இந்துத்துவவாதிகள் உண்மையில் கீதையை எப்படிப் பொருள் கொள்ள விரும்புகின்றனர் என்பதுதான் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.