(ஆகஸ்ட் மாதம் ‘உயிர்மை’ மாத இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை. அந்தக் கட்டுரையில் பின்னிணைக்கப்பட்ட இணைப்பு இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. டாக்டர் ஜாஹிர் நாயக் மீது மோடி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எத்தனை ஆபத்தானவை என்பது பற்றிய அந்த இணைப்பு முன்னதாக என் பக்கங்களில் இடம் பெற்றுள்ளதால் அதை இங்கு தவிர்த்துள்ளேன்)
முஸ்லிம் மதப் பிரச்சாரகர் டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை நான் ஒரே ஒரு முறை, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னை அம்பேத்கர் மணி மண்டபம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அரங்கில் கேட்டுள்ளேன். பெரும்பாலும் உயர் தட்டு முஸ்லிம்கள் பங்கு பெற்ற கூட்டம் அது. முஸ்லிம் பிரச்சினைகளில் ஆர்வம் உள்ளவன், அவர்களின் நியாயங்களைப் பேசுபவன் என்கிற வகையில் முஸ்லிம் நண்பர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்திருந்தனர். டாக்டர் ஜாஹிர் நாயக் இஸ்லாத்தில் ஆழமான புலமையுடைய ஒரு முக்கிய பிரச்சாரகர் என்கிற வகையில் நானும் அந்த அழைப்பை ஏற்று உரையைக் கேட்கச் சென்றிருந்தேன். அழகிய ஆங்கிலத்தில் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம் மத நூற்களிலிருந்து ஏராளமாக மேற்கோள் காட்டி ஜாகிர் நாயக் பேசிய பேச்சு யாரையும் ஈர்க்கக் கூடியது. கூட்ட இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில்கள் நிகழ்ச்சியிலும் அவர் தன் இஸ்லாமியப் புலமையை நிலைநாட்டினார். அவ்வளவு எளிதில் அவரை யாரும் மடக்கி விட இயலாது என்பதை உணர்ந்து கொண்டேன்.
மீண்டும் அவரது உரையைக் கேட்க எனக்குச் சில வாய்ப்புகள் வந்தன. அவரது பேச்சுக்கள் அடங்கிய குறுந்தட்டுகள் பலவும் அவ்வப்போது பரிசாகக் கிடைத்தன. ஆனால் நான் அந்த வாய்ப்புகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னை ஏனோ ஜாகிர் நாயக் ஈர்க்கவில்லை என்பதுதான் காரணம்.
இஸ்லாத்தில் ஆர்வமுடையவனாக இருந்தும், ஒரு இஸ்லாமிய இதழில் நபிகளின் வரலாற்றைத் தொடர்ந்து எழுதுவதற்காக ஏராளமான இஸ்லாமிய நூல்கள், சீரத்கள் ஆகியவற்றைப் பயின்று கொண்டும் இருந்த போதிலும் என்னை ஏன் ஜாகிர் நாய்க்கின் உரைகள் ஈர்க்கவில்லை?
நபிகளை எழுதுவதற்கு எனக்கு மிகவும் ஆதாரமாக இருந்த நூற்களில் இப்னு இஷாக்கின் சீரத் முதன்மையானது. இயேசு, புத்தர் முதலானோருடன் ஒப்பிடும்போது நபிகள் மிகவும் இளையவர். மிகவும் அதிகாரபூர்வமான, நம்பத் தகுந்த வரலாறுகளும் (சீரத்), அவரது உரையாடல்களும் (ஹதீஸ்) நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் எதைத் தேர்வு செய்வது? எவற்றை அடிப்படையாகக் கொள்வது?
எந்த ஒரு வரலாற்று நாயகர்கள் குறித்து எழுதப்படும் பதிவுகளைப் பொருத்த மட்டில் சமகாலத்திலும், சம காலத்திற்கு மிக அருகிலான கால கட்டங்களிலும் எழுதப்படும் நூற்கள் மிகவும் கச்சாவாக இருக்கும். உண்மைகள் பூசி மெழுகப்படாமல் நமக்குக் கிடைக்கும். போகப் போக, அதுவும் வரலாற்று நாயகர்கள் இறை அந்தஸ்து பெறக்கூடிய நிலை வந்தால் அத்தகைய புனித நிலைக்குத் தகாதவை, பொருத்தமற்றவை என்பன தெரிந்தும் தெரியாமலும் தணிக்கைக்கு உள்ளாக்கப்படும். அந்தத் தணிக்கைகள் சுய தணிக்கைகளாகவும் இருக்கலாம்; அதிகாரங்களின் ஊடாக மேற்கொள்ளப் பட்டவையாகவும் இருக்கலாம். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு நமது இராமாயணம். வால்மீகியின் ‘இராம காதை’யில் இராமனின் அவதாரப் பண்புகள் குறைவு. ஒரு அவதாரமாகக் கட்டமைக்க வேண்டி அதற்குப் பொருந்தாத பண்புகள் செதுக்கப்பட்ட தூய இராமனாகவன்றி குற்றங்களும் குறைகளும் கூட உள்ள ஒரு மானுடனாகவே இராமன் அதில் படைக்கப்பட்டிருப்பான். வால்மீகிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய நம் கம்பன் தன் காவியத்திற்கு இட்ட பெயர் ‘இராமாவதாரம்”. ஒரு அவதாரத்திற்குப் பொருந்தாத பண்புகள் செதுக்கப்பட்டு ஒரு தூய இராமனை கம்பர் படைத்திருப்பார்.
வரலாறுகளை, அதிலும் குறிப்பாக இறை வரலாறுகளை வாசிக்கும்போதும் கேட்கும்போதும் இந்தப் பிரச்சினையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் எனது நபிகள் பற்றிய நூலில் முகமது நபிகள் எனும் வரலாற்று நாயகனில் வெளிப்படும் மானுடத் தன்மையை முதன்மைப்படுத்தி எழுதி இருந்தேன். அதற்கு எனக்கு நபிகள் வாழ்ந்த காலத்திற்கு ஆக நெருக்கமான மிகப் பழைய வரலாறான இப்னு இஷ்ஹாக்கின் சீரத்தே பெரிதும் அடிப்படையாக இருந்தது. இப்போது எல்லோராலும் பயிலப்படும் நபிகளின் வழக்கமான வரலாறுகளில் காணப்படாத சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் எனது நூலில் உண்டு. அதனாலேயே அது இன்றும் பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக அதில் ஒரு சம்பவம். நபிகளின் ஒரே மகனான இப்றஹீம் குழந்தையாக இருக்கும்போதே இறந்து போகிறார். அந்தக் குழந்தையைப் பெரிதும் நேசித்த நபிகள் குழந்தைக்கு இறுதிச் சடங்குகள் முடித்த பின்னும் அழுது கொண்டு அந்த இடத்தை விட்டு அகல மறுக்கிறார். கூட இருந்தோர் வற்புறுத்தி அழைத்து வருகின்றனர். அப்போது அப்துல் ரஹ்மான் கேட்கிறார், “நீங்கள்தான் யாரும் இறந்தால் அழக்கூடாது எனக் கூறியுள்ளீர்களே, பிறகு ஏன் இன்று இப்படி..?”
அழுது ஆர்பாட்டம் .செய்யக்கூடாது எனத்தான் சொன்னேனே ஒழிய உள்ளத்தில் கசியும் அன்பு கண்களில் கசிவதை எப்படித் தடுத்துவிட இயலும் என்பார் முஹம்மது. இதை நீங்கள் வழக்கமாக இங்கு பயிலப்படும் நபிகளின் வரலாற்றைச் சித்திரிக்கும் நூல்களில் காண இயலாது. ஏன் எனில் இறந்த போது யாரும் அழக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய நிலைபாடு என்பதாக உருவாகியுள்ள கருத்தாக்கத்திற்கு இந்த உரையாடல் பொருந்தாததாக உள்ளது என்பதுதான் அதற்குக் காரணம். இப்படி நிறையச் சொல்லலாம். இப்படி நிறைய நிகழ்வுகளை என் நூலில் காணலாம்.
எழுதப்பட்ட எந்த ஒரு வாசகத்தையும் எப்படி வேண்டுமானாலும் வாசித்துவிட இயலும் என்பதுதான் இன்று நவீன பிரதியியல் முன்வைக்குக் கோட்பாடு. “பாரத நாடு பழம்பெரும் நாடு. நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்..” என மகாகவி பாரதி பாடியது ஆங்கிலேய அரசுக்கு எதிராக. ஆனால் இன்று அதை முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் பயன்படுத்துவது இதற்கொரு எடுத்துக்காட்டு. “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” எனும் அவரது தத்துவப் பாடலை ஒரு பாலியல் புணர்வு நிகழ்வை முழுமையாக விவரிக்கும் பாடலாகவும் வாசித்து விட இயலும்.
எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பது உங்கள் இலக்கிய விசாரங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் இறை வாக்குகளுக்கு அது பொருந்தாது என ஒருவர் சொல்லலாம். அவர்களுக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மெக்காவில் உள்ள Grand Mosque ன் முன்னாள் இமாம் ஷேக் ஆடல் அல் கல்பானி அவர்கள் தன்னை ஒரு சலாஃபிஸ்ட் என அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர். ஆனால் அவர் ‘தேஷ்’ (IS) பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணும் சலாஃபிசம்தான் என்று சொல்லுகிறார்.
“நாங்களும் தேஷ் ஐப் போலவே சலாஃபிசம்தான் பேசுகிறோம். ஆனால் வேறு கோணத்தில்…… எங்களது புனித நூல்களிலிருந்தும் கோட்பாடுகளில் இருந்தும்தான் அவர்கள் (IS) தங்கள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றனர்…”
என ஷேக் அல் கல்பானி அவர்கள் கூறுவதை நீங்கள் யூ ட்யூபில் காணலாம். சலாஃபிசத்தை உருவக்கியவரான இமாம் இப்ன் ஏ தைமியா அவர்களின் பல ஃபத்வாக்களை மேற்கோள் காட்டி IS அமைப்பினர் தம் செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்வதை அவர்களின் ஆன்லைன் செய்தி மடலான தாஃபிக்கில் காணலாம்.
ஆக புனித நூற்களையும் கூட யாரும் எப்படியும் வாசித்து விட இயலும், எப்படியும் பயன்படுத்திவிட முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நபிகள் மற்றும் இஸ்லாத்தின் வரலாறு பிற மத வரலாறுகளிலிருந்து மிகவும் இளைய ஒன்று என்றேன். மிகவும் நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு வரலாற்றின் நாயகர் நபிகள் நாயகம். அவரது உரையாடல்களும் (ஹதீஸ்), திருக்குர் ஆன் ஆயத்துகளும் அப்படியான பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி அருளப் பெற்றவை. அவற்றை அந் நிகழ்வுகளிலிருந்து பிரித்துப் பொதுமைப் படுத்தும்போது கவனம் தேவை.
ஒரு முஸ்லிம் மதப் பிரச்சாரகர் இந்தப் பின்னணியில் சந்திக்கும் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான யூதேய மதங்கள் (நம் பவுத்தமும் கூட) பரப்புதற்குரிய மதங்கள் (proselytising religions). இம்மதங்களைப் பின்பற்றுவோர் தமக்குக் கிடத்துள்ள நற்செய்தியை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் கடமை உடையோர். அழைப்புப் பணி என்பது அவர்களின் மதக் கடமைகளில் ஒன்று. அப்படிச் செய்யும்போது தங்கள் மதமே பிறவற்றைக்காட்டிலும் சரியானது என அவர் சொல்லித்தான் ஆக வேண்டும்.
“எனக்கு இந்த நாத்திக வாதத்தில் அப்படி ஒன்றும் பெரிய ஆர்வம் இல்லை. கடவுள் இருக்கு என்கிறவன் இல்லை என்பவனை முட்டாள்னு சொல்லணும்; இல்லைங்கிறவன் இருக்குங்கிறவனை முட்டாள்னு சொல்லணும். இதற்கு முடிவில்லை..” எனும் பொருளில் தந்தை பெரியார் ஒருமுறை பேசியிருப்பார். மதங்களுக்கிடையே உள்ள விவாதங்களிலும் இப்படித்தான் தன்னுடைய மதம் மட்டுமே சிறந்தது என ஒரு பிரச்சாரகர் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்படிச் சொல்லும்போது மற்ற மதங்கள் குறை உடையன என்கிற கருத்து தவிர்கக் இயலாதது. ஆனால் இது போன்ற கருத்து வெளிப்பாடுகள் எதுவும் பற்றி எரியக் கூடிய இன்றைய சூழலில் எத்தனை பிரச்சினைக்குரியவை என்பதை விளக்க வேண்டியதில்லை. அதுவும் முஸ்லிம் பிரச்சாரகர்களைப் பொருத்த மட்டில் 1400 ஆண்டுகட்கு முன் உருவாக்கப்பட்ட மத வரையறைகள், சட்டங்கள் ஆகியவற்றில், எவ்வித மாற்றங்களையும் அவர்களால் ஏற்க இயலாது. பயங்கரவாதம், மத அடிப்படையிலான வெறுப்பு அரசியல் ஆகியன தலைதூக்கி நிற்கும் இன்றைய சூழலில் இது மிகவும் பிரச்சினைதான். பேச்சுக்களில் மிகுந்த கவனமும் எச்சரிகையும் தேவை.
இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போதுதான் டாக்டர் ஜாஹிர் நாயக்கின் மதப் பிரச்சாரப் பேச்சுக்களை இன்று பேச்சுரிமைக்காகவும் மதவாதத்திற்கு எதிராகவும் இயங்கும் பலரும்கூட விமர்சிக்க நேர்ந்துள்ளது. ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு ஆய்வுத் துறை வல்லுனரும் செவ்வியல் அரேபிய மற்றும் இஸ்லாமிய அறிவுத் துறை அறிஞருமான பேரா. குலாம் ரசூல் தெஹ்ல்வி அவர்கள் ஜாஹிர் நாயக்கை பெண் வெறுப்பு, அடிப்படை வாதம் மற்றும் மத ஒற்றுமைக்கு எதிரான பேச்சுக்களைப் பேசும் சலாஃபிஸ்ட் என்கிறார். சென்ற ஜூலை 13 அன்று Muslims for Secularism and Democracy எனும் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் அறிஞர்களும் மேற்கூறிய இதே காரணங்களுக்காக டாக்டர் ஜாஹிர் நாயக் மீது இ.த.ச 153 A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பையில் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதில் கையொப்பமிட்டுள்ள இர்ஃபான் எஞ்சினீயர், ஜாவேத் ஆனந்த், ராம் புனியானி, ஆனந்த் பட்டவர்தன், மிலிந்த் ரானடே முதலான பலரும் தொடர்ந்து இந்ந்துத்துவ வன்முறைகளையும், வெறுப்பு அரசியலையும் கடுமையாக எதிர்த்து வருவோர் என்பது குறிப்பிடத் தக்கது.
பல் மத நம்பிக்கையாளர்களும் வாழும் நாடு இது. இதில் பிற நம்பிக்கைகளை விமர்சிக்கும்போது அது யாராக இருந்த போதிலும் கவனம் தேவை. அரசாங்க நடவடிக்கை இருக்கட்டும். நமக்கே அந்தக் கட்டுப்பாடுகள் தேவை. அது ஒரு அடிப்படை குடிமைச் சமூகப் பண்பு. “பன்றிகள் மட்டுமே தன் மனைவியைப் பிற ஆடவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கமுடையவை. பன்றிகளை உண்ணுவோரும் அப்படித்தான்” என்றெல்லாம் பொது வெளியில் எப்படிப் பேச இயலும்? பர்தா முறையை ஆதரித்துப் பேசுவதும், அப்படி அணிவது எங்களின் கலாச்சார உரிமை எனப் பேசுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்காக பர்தா அணியாத பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைக்கு அவர்களின் பண்பாட்டு உடைகளே காரணம் எனச் சொல்வது எப்படிச் சரியாகும்?
“ஆண்கள் தங்கள் மனைவி மட்டுமின்றி அவர்களின் வலது கையில் பற்றப்பட்டுள்ள பெண்களின் மீதும் உரிமை உடையவர்கள்” என்கிற பொருள்படும் புனித வாசகங்கள் நாயக்கின் உரையில் பயன்படுத்தப்பட்டது இன்று சர்ச்சை ஆகும்போது அந்த வாசகம் போர்க்காலத்தில் விதவையான பெண்களுக்கு வாழ்வளிக்கும் நோக்கில் அருளப்பெற்றது என விளக்கம் அளிக்கப் படுகிறது. முற்றிலும் உண்மை. ஆனால் அதன் பொருளென்ன? இறை வாக்கானாலும் அதையும் காலம், சூழல் ஆகியவற்றுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதுதானே.
நான் பலமுறை திருப்பித் திருப்பி மேற்கோள் காட்டுகிற உம்பெர்டோ ஈகோ அவர்களில் அந்தக் கருத்தை மீண்டும் ஒரு முறை நினைவூட்டி முடிக்கிறேன்.
” ஒரு பண்பாட்டை இன்னொரு பண்பாட்டால் அளக்க இயலாது. நர மாமிசம் தின்னும் ஒரு கூட்டத்திடம் நான் அகப்பட்டுக் கொண்டால் கூட உங்கள் பண்பாடு மோசமானது என நான் சொல்ல மாட்டேன். வேண்டுமானால் நான் பிள்ளை குட்டிக்காரன் என்னை விட்டுவிடுங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்வேன்..”
இது ஏதோ தப்பிப்பதற்கான ஒரு உத்தி அல்ல. இது ஒரு அடிப்படையான குடிமைப் பண்பு.
குறிப்பு: நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் இன்னொரு கூற்று மகாத்மா காந்தியுடையது. அவர் சொல்வார்: “ எனாக்கு மதங்கள் பற்றிப் பேசும்போது பயன்படுத்தப்படும் இரண்டு சொற்களைப் பிடிக்காது. அவை tolerance மற்றும் compromise. பொறுத்துக்கொள்ளுதல் அல்லது சகித்துக் கொள்ளுதல் என்னும்போது மற்ற மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்து விடுகிறது. இதை என் அஹிம்சைக் கோட்பாடு ஏற்பதில்லை. நம் மதத்தின் மீதுள்ள நன் மதிப்பை நாம் பிற மதங்கள் மீதும் காட்ட வேண்டும். நம் மதத்தில் உள்ள குறைபாடுகளியும் நாம் ஏற்க வேண்டும். ..” என்பார். பிற மதங்களில் காணப்படும் நல்லம்சங்களைக் கொண்டு நம் மதத்தில் காணப்படும் குறைபாடுகளை நிரப்ப வேண்டும் என்கிற கருத்தும் அவரிடம் இருந்தது. அதே சமயத்தில் அவர் இன்னொரு அற்புதமான கருத்தையும் முன்வைத்தார். எல்லா மதங்களும் சமமானவை எனச் சொல்லும்போது அது ஒவ்வொரு மதத்திலும் விளங்கும் தனித்துவங்களை (வித்தியாசங்களை) மறுதலிப்பதாகி விடக் கூடாது என்பதுதான் அது. அத்தகைய தனித்துவங்களை அழிப்பதுதான் இந்துத்துவ பாசிசத்தின் நோக்கமாக இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு” என நபிகள் நாயகம் குறிப்பிட்டது வேறு எப்போதையும் விட இன்று கவனத்துக்குரிய ஒன்று..