அ.மார்க்ஸ்
நடந்து முடிந்துள்ள அமெரிக்காவில் தேர்தல் குறித்து எழுதத் தொடங்கும்போது இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு வன்முறை நடந்தேறியுள்ளது. உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடு எனக் கருதப்படும் அமெரிக்காவில் பெரும்பான்மை அடிப்படையில் ஐயத்திற்கு இடமின்றி வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை ஒன்றை அரங்கேற்றியுள்ளார் தேர்தலில் தோற்றவரும் தற்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவருமான டொனால்ட் ட்ரம்ப். ஐந்து பேர்கள் இறந்துள்ளனர். சுமார் 50 பேர்கள் வரை காயமடைந்துள்ளனர். உலகமே இன்று ட்ரம்பைக் கண்டித்துள்ளது. அவரைத் தன் முன்மாதிரியாக்க் கொண்டுள்ள நரேந்திர மோடியும் வேறு வழியின்றி மெல்லிய குரலில் கண்டித்துள்ளார். கடும் கண்டன்ங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் இப்போது தன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கத் தேர்தல்முறை; ஒரு குறிப்பு
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. ஒரு ஜனாதிபதி, அவர் எவ்வளவு செல்வாக்கு உடையவராக இருந்தபோதும் இரண்டு முறைகள் – அதாவது எட்டாண்டுகளுக்கு மேல் அதே பதவியில் தொடர முடியாது. அதற்குப்பின் அவர் மீண்டும் போட்டியிட முடியாது. வேறெப்படியும் அரசியல் அதிகாரத்தைச் செலுத்தவும் முடியாது.
பதவி ஏற்ற நான்காவது ஆண்டில் நடைபெறும் அடுத்த தேர்தலில் மட்டும் அவர் நிற்கலாம். வெற்றி பெற்றால் இன்னொரு நான்காண்டுகள் அவர் பதவியில் தொடரலாம். எனவே யாரும் ஆயுளுக்கும் பதவியில் இருக்க முடியாது. தனக்குப் பிந்திய ஜனாதிபதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையும் இல்லை. அவர் சகாப்தம் அரசியல் அளவில் அத்தோடு முடியும்.
அமெரிக்காவில் “ஜனநாயகக் கட்சி” மற்றும் “குடியரசுக் கட்சி” என இரண்டே கட்சிகள்தான் உண்டு. ஜனாதிபதி தேர்தல் என்பது அங்கு ஜனவரியில் தொடங்கி பல்வேறு மட்டங்களில் எட்டு மாதங்கள் நடக்கும். இதில் முதல் கட்டத்தில் (Primary Election) கட்சி வேட்பாளர் யார் என்பதை ஒவ்வொரு கட்சியும் உட்கட்சித் தேர்தல் ஒன்றின்மூலம் தீர்மானிக்கும். அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் ஒவ்வொன்றாக முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி/ பிப்ரவரி முதல் ஜூன் மத்தியில் வரை) கட்சியின் வேட்பாளர் யார் என்பது வாக்களிப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படும். சற்று விளக்கமாகச் சொல்வதென்றால் நமது நாட்டில் உள்ளது போலக் கட்சித் தலைமை அடுத்த பிரதமர் வேட்பாளரைத் தீர்மானிப்பதுபோல அமெரிக்காவில் தீர்மானிக்க முடியாது. மாறாகக் கட்சி உறுப்பினர்கள்தான் வாக்களித்து தங்கள் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பர். எனவே கட்சித் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கு தனது அடுத்த அரசியல் வாரிசு யார் எனத் தீர்மானிக்கும் ஆக முக்கிய அதிகாரம் இருப்பதில்லை.
இப்படி முதற்கட்டமாக நடைபெறும் வேட்பாளர் தேர்தலில் ”Primary Election” மற்றும் ”Caucuses” என இரண்டு வடிவங்கள் உண்டு. Primary Election என்பதை அரசும் அம்மாநில நிர்வாகங்களும் (State and Local Governments) நடத்தும்; Caucuses என்பதில் அரசியல் கட்சிகள் தனியார் அமைப்புகளுடன் இணைந்து இதனை நடத்தும். சில மாநிலங்களில் இரண்டு வடிவமும் கூட இருக்கும்.
இதில் ஒரு நல்லஅம்சம் என்னவெனில் இந்தியா போல அங்கு கொடுமையான ஒரு வாரிசு அரசியல் சாத்தியமில்லை என்பதுதான்.
அமெரிக்கத் தேர்தலில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவெனில் வெற்றிபெற்றவர் உடனடியாகப் பதவி ஏற்பது கிடையாது. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்தான் பதவி ஏற்பு நடைபெறும். வரும் ஜனவரி 20 அன்றுதான் இப்போது வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனும் துணைத் தலைவராக வெற்றிபெற்றுள்ள கமலா ஹாரிசும் பதவி ஏற்கின்றனர்.
இந்த இடைவெளியில்தான் ஜனவரி 04 அன்று வரலாறு காணாத வடிவில் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது. ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியுற்று ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடென் வெற்றி பெற்றதை ட்ரம்ப் அடியாட்கள் ஏற்கவில்லை. இத்தனைக்கும் இரண்டு நாட்கள் முன்பு நடந்த இரு தொகுதித் தேர்தல்களிலும் கூட ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாக ட்ரம்ப் கட்சியினர் தொடுத்த வழக்கிலும் அவர்களுக்கு வெற்றி இல்லை. ஆனாலும் இப்படி ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை ஏற்க இயலாது என ட்ரம்ப் பிடிவாதம் செய்தார். இந்த நிலையை ஜனநாயக உணர்வுள்ள எல்லோரும் – அமெரிக்கக் கூட்டாளியான இங்கிலாந்து பிரதமர் உட்பட – கண்டித்துள்ளனர். இந்நிலையில் வேறு வழியின்றி இன்று நரேந்திர மோடியும் கண்டித்துள்ளார். இறுதியில் ட்ரம்ப் பணிய வேண்டியதாயிறு
பெர்னி சாண்டர்சும் ஜோ பைடனும்
இம்முறை நடந்த இந்த முதற்கட்டக் கட்சி அளவிலான தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ்சும் ஜோ பைடனும் போட்டியிட்டனர். உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள் எல்லோரும் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெறவேண்டும் என மனதார விரும்பினர். மற்ற நாடுகளைப் போலன்றி அமெரிக்கத் தேர்தல் உலக அளவில் கவனம் பெறுவதை அறிவோம். உலகின் மிகப் பெரிய வல்லரசு என்கிற வகையில் அதற்கு இந்த மதிப்பளிக்கப்படுகிறது. டிரம்பின் இந்த நான்காண்டு கால ஆட்சி, உலகெங்கிலும் வாழும் ஜனநாயக சக்திகள், வெறுப்பு அரசியலை வெறுப்போர் என எல்லோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்ததை அறிவோம். அந்த வகையில் எப்படியாவது இம்முறை அங்கு ஜனநாயக் கட்சி வெற்றி பெற வேண்டும் என நினைத்தோம். அதிலும் ஜனநாயகக் கட்சிக்குள் ஜோ பைடனைக் காட்டிலும் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றால் நல்லது என நினைத்தோம்.
பெர்னி சாண்டர்ஸ் ஒப்பீட்டளவில் அமெரிக்க அரசியல் எல்லைக்குள் பைடனைக் காட்டிலும் கூடுதலான இட்துசாரிப் பண்புகளைக் கொண்டவர். ஒருவகையான “ஜனநாயக சோஷலிஸ்ட்” என அவர் குறிப்பிடப்படுவார். பொதுவான வகையில் எல்லோருக்கும் நன்மை அளிக்கக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைக் கொள்கையாகக் கொண்டவர் என இவர் மதிக்கப்படுகிறார். அமெரிக்காவைப் பொருத்தமட்டில் “எல்லோருக்கும் பயனளிக்கும் பொருளாதாரத் திட்டம்” என்பதுதான் ஆக முற்போக்கான அணுகல் முறை. தொழிலாளிகள் மற்றும் ஏழை எளியோர்களுக்குப் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கை என்றெல்லாம் அங்கு பேச இயலாது. ட்ரம்ப் அல்லது இதர குடியரசுக் கட்சியினரைப்போல வெளிப்படையாக முதலாளியப் பொருளாதாரத்தை ஆதரிக்காத நிலை என்பதே அங்கு பெரிய முற்போக்கு அரசியல்தான்.
”கல்வி உரிமை எல்லோருக்குமானது- பணம் உள்ளவர்களுக்கே சிறந்த கல்வி என்பது கூடாது”,
“மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது என்கிற வகையில் கருச்சிதைவு செய்துகொள்வதைக் குற்றமாக்கக் கூடாது”,
”மத்திய அளவில் குறைந்த பட்ச கண்ணியமான ஊதிய நிர்ணயம் செய்தல்”, “எல்லோருகுமான நலவாழ்வுத் திட்டம்,”
“போர் எதிர்ப்பு”,
“நிகரகுவா, கியூபா போன்ற சற்றே இடதுசாரி அணுகல்முறையுள்ள நாடுகளைக் கடும் எதிரியாகப் பாராமை”,
“இஸ்ரேலின் யூத இனவெறியைக் கண்டித்தல்”
-முதலான அம்சங்களில் இவ்வாறு சாண்டர்ஸ் ஒப்பீட்டளவில் முற்போக்கான கொள்கைகளைக் கொண்டவராக இருந்தார். அதனாலேயே அவர் முதற்கட்டத் தேர்தலிலேயே தோற்கடிக்கவும் பட்டார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது டெல்லியில் நடந்த வன்முறை அதில் முஸ்லிம்கள் அதிக அளவில் கொல்லப்பட்டது ஆகியவற்றை சாண்டர்ஸ் கண்டித்ததும், அதை சங்கிகள் இங்கு எதிர்த்ததும் நினைவுகூரத் தக்கது.
சாண்டர்சைக் காட்டிலும் பைடனை ஜனநாயகக் கட்சியினர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவர் நின்றால்தான் ட்ரம்புக்கு எதிரான வெற்றி வாய்ப்பு அதிகம் (electability in the general election) என்பதே காரணம் என ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது. அதாவது அமெரிக்க மக்களின் உளவியலின்படி பெர்னி சாண்டர்ஸ் கொள்கை அளவில் ஒரு தீவிரவாதி (!). எனவே அவரை வேட்பாளராக நிறுத்தினால் பொதுவானவர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். எளிதில் மீண்டும் ட்ரம்பே வெற்றி பெறுவதற்கு அது இட்டுச் செல்லும். எனவே ஒப்பீட்டளவில் மிதவாதியான ஜோ பைடனை ஆதரிப்பதே வெற்றி வாய்ப்புக்கு வழியாக இருக்கும் என அவர்கள் கட்சியில் இருந்த சற்றே முற்போக்கானவர்களும் கூட நினைத்தனர் என்பது இதன் பொருள்.
பைடனைப் பொருத்த மட்டில் அவர் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே ஒரு வலதுசாரி எனலாம். அவர் துணைத்தலைவராக இருந்த காலத்தில் ஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைகளை ஆதரித்தவர் அவர். குடிமக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பு முதலானவற்றிலும் அவர் அப்படி ஒன்றும் முற்போக்கான பார்வையைக் கொண்டவரல்ல. இப்படியான முதலாளிய ஆதரவு வலதுசாரி அணுகல் முறைகளே ஆமெரிக்க ஜனநாயகத்தில் வெற்றி வாய்ப்புக்கு உரியன என்பது கவனத்துக்குரியது.
இந்திய அமெரிக்க உறவின் எதிர்காலம்
இந்திய – அமெரிக்க உறவைப் பொருத்தமட்டில் மன்மோகன் ஆட்சிக் காலம் தொட்டே இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாகி வந்ததை அறிவோம். இந்த நிலை மோடி ஆட்சியில் மிக அதிகமாகியது. இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ட்ரம்ப் ஆளுகையின்போது இது உச்சத்தைத் தொட்டது. செய்தித் தொடர்பு வலுவாக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் (Defence cooperation pacts like the Communications Compatibility and Security Agreement – COMCASA), தொழில் பாதுகாப்பு இணைப்பு (Industrial Security Annex -ISA), மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் முதலியன எல்லாமும் இனி பைடனின் ஆட்சியிலும் பெரிய மாற்றங்கள் இன்றித் தொடரும் எனவும், இராணுவ ரீதியான நெருக்கத்தில் குறைவு ஏதும் இருக்காது என்றும் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன.
கடந்த ஆண்டுகளில் கால்வான் முதலான எல்லைப் பகுதிகளில் சீன – இந்திய மோதல்கள் ஏற்பாட்டுள்ள நிலையில், ஏற்கனவே சீனாவுடன் இலங்கைத் தீவு இன்னும் நெருக்கமாக உள்ள சூழலில், பொது எதிரியான சீனாவுக்கு எதிராக இந்திய – அமெரிக்க உறவு நெருக்கமடைந்திருப்பதை அறிவோம்., மிகப் பெரிய அளவில் இந்தியா அமெரிக்காவுடன் ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்திய – அமெரிக்க கூட்டு இராணுவ பயிற்சிகள் முதலியன ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளதையும் நாம் அறிவோம். பைடனின் ஆட்சியில் இதிலெல்லாம் எந்த மாற்றங்களும் இருக்காது என இது தொடர்பான கட்டுரைகள் குறிக்கின்றன (Dr. Bappaditya Mukherjee, Joe Biden’s foreign policy priorities and interests: Implications for India, Financial Express, December 21, 2020).
பைடனின் ஆட்சிக் காலத்தில் பருவநிலை மாற்றம் முதலிய பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் மத்திய கிழக்கு நடவடிக்கைகளில் ட்ரம்ப் கால அணுகல்முறையில் பல மாற்றங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பது கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.
உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர் கொள்வதைப் பொருத்தமட்டில் ஒபாமா கால அணுகல்முறை தொடரும் என்கின்றனர்.
கமலா ஹாரிஸ் நம்ம ஊர் மாமியா?
பைடனால் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ”கமலா ஹாரிஸ் மன்னார்குடி அய்யராக்கும். தினம் அவ இட்லிதான் சாப்பிடுறாள்” என இங்கே பார்ப்பனர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் கூட, குறிப்பாக அ.தி.மு.க வினர் கும்மியடித்து மகிழ்ந்ததைப் பார்த்தோம்.
அந்த அம்மையாரை தமிழாள், பிராமணாள் என்றெல்லாம் இவர்கள் கொண்டாடுவது அபத்த நகைச்சுவை. அவர் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் செட்டில் ஆன ஒரு குடும்பத்தில் அங்குள்ள இனக் கலப்பில் பிறந்தவர். சரி ஏதோ ஒரு வகையில் தமிழ் நாட்டு இரத்தம் ஓடுகிறது என்று கற்பித்துக் கொண்டாலும் அதில் பெரிதாக மகிழ்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை அவரது முந்திய சில அணுகல் முறைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜோ பிடென் இவரைத் தனது துணைத் தலைவர் வேட்பாளாரகத் தேர்வு செய்தபோதே பைடனை ஆதரித்த பலரும் முகம் சுளித்தனர். எனினும் அதை ஒரு பிரச்சினை ஆக்கி பைடனின் வெற்றியக் கெடுக்க வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் மௌனம் காத்தனர். பைடனை ஆதரித்தவர்களின் தேர்வு இந்த அம்மையார் அல்ல. முன்னதாக பெர்னி சாண்டர்ஸ் துனைத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்திருந்த எலிசபெத் வாரன்தான் சரியான தேர்வு என்பதே ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் பைடென் பிடிவாதமாகக் கமலா ஹாரிசையே தேர்வு செய்தார்.
கமலா ஹாரிசை சாதாரண மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?
முன்னதாக அந்த அம்மையார் சான்ஃப்ரான்சிஸ்கோவில் மாவட்ட அட்டர்னி ஜெனரல் ஆகவும் பின்னர் கலிஃபோர்னியா மாநில அட்டர்னி ஜெனெரல் ஆகவும் இருந்தபோது அவர் எடுத்த சில பிற்போக்கான நிலைபாடுகள் அவர் எப்படியானவர் என்பதை நிறுவி இருந்தன. பெரும்பாலான அடித்தள மக்களுக்கு, குறிப்பாகக் கருப்பின மக்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு அவர் எதிராக இருந்தார் என்பதுதான் அவர் மீதான அதிருப்தியின் காரணம். உயர் நிலை மேல்தட்டினருக்கேயான ஒழுக்கவாத அணுகல்முறையுடன் அச்சட்டங்களை அவர் அணுகியதுதான் அவரது அத்தகைய நிலைபாட்டிற்குக் காரணமாக இருந்தன. சில எடுத்துக்காட்டுகள் இப்போது சுட்டிக் காட்டப்படுகின்றன. அவை:
(1) மாணவர்கள் மூன்று முறை அவர்களின் பாட வகுப்புகளுக்கு சுமார் 30 நிமிடங்கள் வரை வராதிருந்தால் அவர்களை (தண்டனைக்குரிய சிறு குற்றங்களைச் செய்த) குற்றவாளிகளாக ஆக்கும் சட்டத்தை (truancy as a misdemeanor) கமலா ஆதரித்தார்.
(2) போதைப் பொருளான மரிஜுவானாவைப் பழக்கமாக இல்லாமல், எப்போதாவது கொண்டாட்டங்களின் போது பாவிப்பதைப் (use of recreational marijuana) பெருங் குற்றமாக ஆக்கக் கூடாது என்கிற கருத்து சட்டமாக்கப்படுவதை அவர் எதிர்த்தார்.
(3)இந்திய உயர்சாதிப் பாரம்பரியத்தில் வந்தவரல்லவா, அவர் மரண தண்டனையை ரத்து செய்யும் சட்ட ஆக்கத்திற்கும் (death penalty initiative) எதிராக இருந்தார். மரண தண்டனை ரத்துக் கருத்துக்கள் மேலுக்கு வந்த இரு முறைகளும் அவர் அவ்வாறே நிலைபாடுகளை எடுத்தார்.
(4) கருப்பின மக்கள் இருவர் காவல்துறையால சுட்டுக் கொல்லப்பட்டபோது அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.
கமலாவின் தேர்வை எதிர்த்துக் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என பைடனின் ஆதரவாளர்கள் மௌனம் சாதித்தபோதும், அவரது தேர்வைக் கண்டித்தவர்களும் இருக்கத்தான் செய்தனர். ’சன்ரைஸ்’ இயக்கத்தின் (Sunrise Movement) அரசியல் இயக்குநர் ஈவான் எபெர் ஜோ, கமலாவின் தேர்வை பைடனின் சொந்தத் தேர்வு எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார். பெர்னி சாண்டர்சுக்கு ஆதரவான “அவர் ரெவொல்யூஷன் (Our Revolution) அமைப்பின் லாரி கோஹென், ”கமலா ஒன்றும் எலிசபெத் வாரென் அல்லது கரேன் பாஸ் அளவு இல்லை ஆயினும்… இப்போது அதை விமர்சிப்பதில் பொருளில்லை என நினைக்கிறேன்,,” எனத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். எப்படியாவது ட்ரம்ப் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாகவும் இருந்ததால் யாரும் இதைப் பெரிய பிரச்சினை ஆக்கவில்லை..
பைடனும் ஒரு நேரத்தில் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான். அவர் குறித்தும் கூட அப்படி ஒன்றும் பெரிய மரியாதை எல்லோருக்கும் இருந்தது எனச் சொல்ல முடியாது. தீவிரமானவராக இல்லாதபோதும் ஓரளவு அனுசரித்துப் போகக் கூடியவர் எனும் நம்பிக்கை ஜனநாயகக் கட்சிக்கார்களுக்கு பைடென் மீது இருந்தது. அவ்வளவுதான். ஆனால் அப்படியான நம்பிக்கை கமலா ஹாரிசிடம் அவர்களுக்கு இல்லை. எனினும் சகித்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.
பைடென் ஜனாதிபதி நாற்காலியைக் குறி வைத்து இயங்கியது குறைந்தபட்சம் இது மூன்றாவது தடவை. மிக மோசமான இனவாதியாக அறியப்பட்ட ஸ்ட்ரோம் தெர்மோண்டின் ஆதரவாளராக இருந்தவர் பைடென். தெர்மோண்ட் புகழ்பெற்ற அமெரிகக் குடியரசுத் தலைவர்களில் ஒருவரான ஃப்ரான்க்லின் டி ரூஸ்வெல்ட்டை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர். பைடன் , எல்லோரையும் விட்டுவிட்டு, கமலா ஹாரிசைத் தன் சகபாடியாகத் தேர்ந்தெடுத்தபின் பலரும் இதை எல்லாம் நினைவு கூர்கின்றனர்.
பைடெனுக்கும் கமலா ஹாரிசுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே உறுதியான கொள்கைகள் உடையவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் இல்லை. அமெரிக்க அரசியலில் இந்த “ஹெல்த் இன்சூரன்ஸ்” என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை அறிவோம். அதிலும் கமலா நிலையான கருத்தை முன்வைத்ததில்லை. முதலில் அரசாங்கமே இன்சூரன்ஸ் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென பல்டி அடித்து இன்னொரு திட்டத்தை அவர் முன்வைத்ததையும் இன்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிடென் கமலாவைத் தேர்ந்தெடுத்தது இப்போதைக்கு ட்ரம்பை வீழ்த்துவது எனும் நோக்கில் எல்லோராலும் மௌனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இனி ஜனநாயகக் கட்சியின் எதிர்காலம் கமலா போன்றவர்களின் கையில் போவது குறித்த கவலை இனவாதத்தை எதிர்க்கும் எல்லோர் மனத்திலும் உருப்பெற்றிருப்பதை இது குறித்த பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் முற்போக்குச் சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களிலிருந்து தெரிகிறது.
மொத்தத்தில் இந்த பிடென் – கமலா வெற்றி என்பதை சாதித்துக் கொடுத்துள்ளது யார் அல்லது எது எனச் சற்று ஆழ்ந்து யோசித்தால் அந்தப் புண்ணியத்தைத் தேடிக் கொள்வது ட்ரம்ப் வெறுப்புத்தான். எப்படியாவது ட்ரம்பைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணம் உள்ளவர்களின் எண்ணிக்கை சற்றே, ஆம் சற்றே, கூடுதலாக உள்ளது என்பது மட்டுமே நாம் இந்தத் தேர்தல் முடிவின் ஊடாகப் பெறும் ஒரே ஆறுதல்.