மணிமேகலை 30
பாட்டனை வணங்கி ஆசிபெற்று உலகோர் பசிநீக்கும் அந்தத் தெய்வப் பாத்திரத்தைக் கையிலேந்திய வண்ணம் கொடிகள் பறக்கும் மதில்களையுடைய வஞ்சி மாநகரின் மேற்திசையிலிருந்து விண் மேலெழுந்து வடதிசை நோக்கி வானத்தில் பறந்து காஞ்சிமாநகர் அடைந்தாள் மணிமேகலை. தமிழிலக்கியத்தில் முதன் முதலாகக் காஞ்சிமாநகரைக் காண்கிறோம். தேவர் கோமான் இந்திரனால் காக்கப்படும் விண்ணக நகரே போன்ற வளம் மிக்க அக் காஞ்சி அப்போது வறுமையுற்று வளமெல்லாம் இழந்து புல்லெனக் கிடந்தது. அது கண்டு மனம் கசிந்த மணிமேகலை கொடிகள் பறக்கும் கோட்டை மதிலால் சூழப்பட்ட அப் பழம்பெரும் நகரை வலம் வந்து நகர் நடுவில் ஓரிடத்தே இறங்கினாள்.
அங்கே சோழ மன்னன் தொடுகழற் கிள்ளிவளவனின் இளையோனும் காஞ்சி மன்னனுமான இளங்கிள்ளியால் போதிமரத்தடியில் அமர்ந்த புத்த பகவனுக்குக் கட்டப்பட்ட சேதியத்தைத் தொழுதபின் தென்மேற்குத் திசையில் சென்று அங்கமைந்திருந்த பூம்பொழில் ஒன்றில் அமர்ந்தாள் மணிமேகலை.
காஞ்சி முதன் முதலாக தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய நகராக இடம் பெறுவது என்பது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைவது குறித்து இத் தொடரில் முன்பே கண்டோம். அது ஒரு வகையில் சோழ அரசுக்குக் கட்டுப்பட்டு சோழ மன்னனின் சகோதரனின் அதிகாரத்தின் கீழ் இருந்ததும் இதனூடாகப் புலப்படுகிறது. சோழ மன்னன் கிள்ளியைச் சொல்லும்போது “தொடுகழற் கிள்ளி” என்கிறார் புலவர். பாதங்களைத் தொட்டுக் கொண்டுள்ள காலணிகளை அணிந்தவன் எனப் பொருள்படும் இச்சொல்லாக்கம் பின்னாளில் “தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார்” (கம்ப இராமாயணம், பாடல் 1081) -எனவும் “தொடுகழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான்” (பாடல் 6508)” – எனவும் இராமனின் அழகை வியக்கும் கம்பனின் பாடல் வரிகளை நினைவுபடுத்துகிறது.
அழகிய கைகளில் அமுதசுரபியுடன் மணிமேகலை பூஞ்சோலையில் அமர்ந்துள்ள செய்தி மெய்க்காப்பாளன் மூலமாக அரசனுக்குச் செல்கிறது. கோவலன் மகள், தவ வாழ்வை ஏற்றோள், நமது ‘தருமத வனத்தின்கண்’ “மாமழைபோல் வந்திறங்கியுள்ளாள்” எனும் செய்தி அறிந்த மன்னன் தனது அமைச்சர் முதலான மந்திரச் சுற்றத்தோடு அங்கு சென்று, “நல்லற நங்கையே ! என் செங்கோல் தாழ்ந்ததாலோ, துறவோர் தவநெறி பிறழ்ந்ததாலோ, எம் பெண்களின் கற்புக் குறைபட்டோ ஏது காரணத்தாலோ எம் நாடு வறுமையில் உழல்கிறது. செய்வதறியாது கலங்கியிருந்த என்முன் ஒரு பெருந் தெய்வம் தோன்றியது. ‘கவலை மற. உன் தவப் பேறாக ஒரு காரிகை இங்கு தோன்றுவாள். அவள் கையில் உள்ள பெருமை மிக்க பாத்திரத்தில் அள்ள அள்ளச் சுரக்கும் ஆருயிர் மருந்தால் இந்நாடு காப்பாற்றப்படும். அவள் அருளால் இந்திரன் தாங்காத அளவிற்கு மழையும் பொழியச் செய்வான். அவள் இந்த நகரில் தோன்றியபின் நிகழ இருக்கும் பேரறங்கள் பலப்பல. மேகம் வரண்டபோதும் நீர்வளம் குறையாது. முன்னோரால் அமைக்கப்பட்ட கோமுகிப் பொய்கையுடன் மாபெரும் மணிபல்லவமே இங்கே வந்துள்ளது எனக் கூறும் வகையில் பொய்கையும் பொழிலுமாய் இங்கு அமைத்துக் கொடு’ எனச் சொல்லி அத் தெய்வம் அகன்றது” எனக் கூறி அதன்படிச் செய்து அமைத்ததே இவ்விடம் என அதையும் மணிமேகலைக்குக் காட்டினான்.
தன் முற்பிறப்புகள் உணர்த்திய அம் மணிபல்லவத் தீவகம் போன்றே விளங்கிய அச்சோலையைக் கண்டு மனம் மகிழ்ந்த மணிமேகலை அங்கு அத்தீவில் இருந்ததைப் போலவே அறவோனின் பாதபங்கயப் பீடிகை ஒன்றையும் முறைப்படி அமைத்தாள். தீவுத் தெய்வமான தீவதிலகையையும், கடற் தெய்வமான மணிமேகலா தெய்வத்தையும் அவற்றுக்கு உரிய வகையில் கோவில் அமைத்து இருத்தி, காஞ்சி மன்னனைக் கொண்டு அவற்றுக்கு உரிய வகையில் விழாவும், சிறப்பும் செய்து வணங்கி நின்றாள்.
வணங்கி முடித்த கையோடு பசிப்பிணி நீக்கும் மருந்தாய் அமைந்த அமுத சுரபியைத் தன் அழகிய கைகளில் ஏந்திய மணிமேகலை, “எல்லா உயிரும் வருக” என அழைத்தாள்.
தமிழிலக்கிய வரலாற்றில், ஏன் காப்பிய வரலாறுகளிலேயே, அதற்கு முன்னும் பின்னும் இல்லாத ஒரு அருங்காட்சி இப்போது அரங்கேறுகிறது. மணிமேகலையின் அழைப்பைக் கேட்டு பசியால் துயருற்றிருந்த கண்ணற்றோர்,, செவிப்புலன் செயல்படாதோர், முடமானோர், தவநோன்பினர், உடுக்க உடையும் அற்றோர், பன்னூறாயிரம் விலங்கினங்கள், இதர உயிரினம் எல்லாமும் திரண்டு நின்று வணக்கத்திற்குரிய அன்னை மணிமேகலையின் கரங்களில் விளங்கிய அமுதசுரபியால் தம் பசிப்பிணி தீர்த்து அவரை வாழ்த்திச் சென்றனர். காப்பியம் என்றால் போரும் காதலும் என்பதாகவே அமையும் என்கிற வரலாற்றை மாற்றி துறவையும், பசியாற்றலையும் வைத்து எழுதபட்ட மகா காவியம்மணிமேகலை. வஞ்சகம் , கொடுமை, அழித்தொழிப்பு என்பதாகவே காவியங்கள் அமையும் என்கிற இலக்கணம் தகர்க்கப்படும் வியப்பில் நாம் ஆழ்கிறோம். பக்தி, பணிவு என்பவற்றின் இடத்தில் இந்த பௌத்த காவியத்தில் அன்பும் அருளும் முதன்மை பெறுகின்றன. மாயம், மந்திரம் ஆகியவற்றின் மூலம் எதிரிகளை அழிப்பது என்கிற இடத்தில் இங்கே விண்ணில் பறக்கும் மந்திரம், உருமாறும் தந்திரம் எல்லாம் அறச் செயல்களுக்காக மட்டுமே அமைவதையும் காண்கிறோம்.
‘தீத்தொழில்’ என உலகோர் பழிக்கும் குலம் ஒன்றில் பிறந்து, தந்தையைப் பறி கொடுத்து நிற்கும் ஒன்றும் அறியாத அந்தச் சின்னஞ் சிறிய பெண் இன்று மாமன்னர்கள் தேடிவந்து வணங்கிச் செல்லும் நிலை பெறுவதையும் பார்க்கிறோம். பௌத்தம் அவளுக்கு அந்த விடுதலையையும் மேன்மையையும் அளித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டோரையும், சிறைக் கைதிகளையும் கருணை அடிப்படையில் மன்னிப்பதற்கென அரசு அதிகாரிகளை நியமித்த மன்னனையும் கூட உலக வரலாற்றில் நாம் பௌத்தத்தில்தானே கண்டோம்.
பசிப்பிணி களைந்து மக்கள் சென்றுகொண்டிருந்த தருணத்தில் மணிமேகலையின் அன்னையரரான மாதவியும், சுதமதியும் தீயவற்றை நீக்கிய அரவண அடிகளும் நம் “மன்னுயிர் முதல்வி” பசிதீர்த்துக் கொண்டிருந்த அவ்விடம் வந்தனர். “உயிர்களில் முதன்மையானவள்” என இங்கே மணிமேகலையைப் போற்றுகிறார் சாத்தனார்.
அவர்களை அடைந்து அவர்தம் திருவடி வணங்கிப் பாதங்களைக் கழுவி, ஆசனத்தில் அமர்த்தினாள் மணிமேகலை. உண்ணும் நேரம் வந்தவுடன் அறுசுவை கூடிய நால்வகை உணவுகளையும் அளித்தாள். உண்டபின் பசிய வெற்றிலையும் கற்பூரமும் கொண்டு தந்தாள். “என் மனத்தினுள் விருப்பாக நிறைந்துள்ள அறநெறிப் பேறு இன்று எனக்குக் கிட்டுவதாக”- எனக் கூறி உலக மயக்கத்தை நீக்கியவளாக அறவணரைத் தொழுதாள் மணிமேகலை.
வணங்கிய அவளை வாழ்த்தினார் அறம் திகழும் நாவினை உடைய அறவண அடிகளார். தன் காதலியான நாகநநாட்டு இள்வரசியைப் பிரிந்து, மகனையும் இழந்து நின்ற சோழமன்னன் நெடுமுடிக்கிள்ளி மகனைத் தேடி அலைந்த நிலையில் புகாரில் ஆண்டுதோறும் நடக்கவிருந்த இந்திரவிழாவையும் எடுக்காது விட்டதையும், அதன் விளைவாய் மணிமேகலா தெய்வமும், இந்திரனும் இட்ட சாபத்தால் புகார் அழிந்ததையும், அதை ஒட்டி மணிமேகலையைக் காண அவர்கள் இங்கு வந்துள்ளதையும் விளக்கினார் அறவணர்.
தீவதிலகை மூலம் தான் அதை முன்பே அறிந்துள்ளதையும், வஞ்சி சென்று ஆணுருக் கொண்டு வெவ்வேறு சமயங்களின் உள்ளுறைகளையும் தான் அறிந்த வரலாற்ற அவர்களுக்குச் சொன்னாள் மணிமேகலை. தான் கொண்டிருந்த போலியான தவமுனிவன் வேடத்தைப் போலவே அவ் ஐவகைச் சமயங்களும் போலியானதாகவும், செம்மை அற்றதாகவும் இருந்ததால் தான் அவற்றைச் சிந்தையில் வைக்கவில்லை எனவும் கூறிய மணிமேகலை, “அடிகள்! எனக்கு மெய்ப்பொருள் அருள்வீர்” என மீண்டும் வேண்டினள்.
காப்பியம் தன் இறுதியை எட்டுகிறது. அரவணர் அறம் உரைக்கலானார். முதலில் பிற மதங்களை விளக்கி அவை எவ்வாறு பொருந்தாது என்பதைச் சொல்கிறார். அடுத்துத் தன் மதம் விளக்குகிறார்.. நிகழும் நல்லேது,, நல்ல திட்டாந்தம், பக்கப் போலிவகை, ஒன்பது போலிகள்,, ஏதுப்போலி, நான்கு வகை விருத்தங்கள், இரண்டு திட்டாந்தங்கள் எனப் படிப்படியாக உண்மைகாணும் வகையைச் சொல்லி முடிக்கிறார்.
பௌத்த அறமாக மணிமேகலை உருவான காலகட்டத்தில் வெளிப்போந்திருந்த இந்தத் தத்துவ விளக்கங்கள் பௌத்தத்தில் எந்தத் தத்துவப் பள்ளி சார்ந்தவை என்பதில் அறிஞர்களிடையே சர்ச்சைகள் உண்டு. ஆழமான இந்தியத் தத்துவப் பயிற்சிப் பின்புலத்துடன் புரிந்து கொள்ள வேண்டிய செறிவு மிக்க இப்பகுதியை மிகவும் சுருக்கிக் கூடியவரை எளிமையாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம்.
புத்தர் நுணுக்கமான தத்துவ விசாரங்களைச் செய்தவர் அல்ல. அவர் காலத்தில் கங்கைச் சமவெளியில் நடைபெற்ற தீவிரமான விவாதங்களில் ஆர்வம் காட்டியவரும் அல்ல. மாலுங்ய புத்தன் எனும் சீடர் ஒருவர் தன் தத்துவக் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்காவிட்டால் தான் சங்கத்திலிருந்து விலகிவிடுவதாகச் சொன்னபோது மறுமொழியாகப் புத்தர் சொன்னது இதுதான்:
“ஒருவனது உடம்பில் விஷ அம்பு தாக்கிவிட்டது. இந்த அம்பு எங்கிருந்து வந்தது, எந்தப் பழங்குடியினர் அதை எய்தார்கள், இது எதனால் செய்யப்பட்டது என்கிற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதவரை அந்த அம்பை உடலிலிருந்து உருவ மாட்டேன், வைத்தியனிடம் போகமாட்டேன் என ஒருவன் சொல்வது போலவும், தீபிடித்த வீட்டினுள் அகப்பட்டுக் கொண்ட ஒருவன் இந்தத் தீ எப்படிப் பிடித்தது என அறியாதவரை வீட்டை விட்டு வெளியேறமாட்டேன் எனச் சொல்வது போலவும்தான் இருக்கிறது நீ சொல்வது.
மாலுங்க்ய புத்தா, இந்த உலகம் நிரந்தரமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட இன்று இங்கு பிறப்பு, மூப்பு, சாவு, துக்கம் எல்லாம் இருக்கின்றன. மனித இருப்பின் இத் துயரங்களுக்கு இப்பிறவியிலேயே மாற்று கண்டுபிடிப்பதுதான் என் பணி”
என அப்படியான வீண் விவாதங்களைத் தவிர்த்தவர் அவர்.
எல்லா இருப்புகளின் நிபந்தனையாகவும் ‘துக்கம்’ உள்ளது. பற்று, ஆசை, தன்னை மையமாகக் கொண்ட அணுகல்முறை ஆகியவற்றின் விளைவே துக்கம் எனும் அதிருப்தி நிலை.. தன்மைய நோக்கு, பற்று, ஆசை எல்லாம் நீக்கக் கூடியவையே. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் அடிப்படையிலான எண்வழிப் பாதையின் மூலம் (அஷ்டாங்க மார்க்கம்) இவ்ற்றை வேரறுத்து அழிக்க முடியும். பௌத்த மரபில் இது நான்கு பேருண்மைகள் என அழைக்கப்படும். துக்க நீக்கம் என்பதே புத்த உரைகளின் அடிப்படையாக உள்ளன.
துக்கம் எனும் இந்த மருள் நிலையை (state of delusion) வெல்ல புத்தர் ஒரு எண்வழிப் பாதையைக் காட்டினார். அவை: 1. சரியான புரிதல் அல்லது பார்வை 2.சரியான குறிக்கோள் அல்லது நோக்கம் 3. சரியான பேச்சு, 4.சரியான நடத்தை 5. சரியான வாழ்முறை, 6. சரியான முனைவு, 7.சரியான ஓர்மை (mindfulness) 8 சரியான தியானம் அல்லதுமனக்குவிப்பு. ‘சரியான’ என்பதற்கு right எனப் பொருள் கொள்ளாமல் correct அல்லது perfect எனும் பொருள் கொள்ள வேண்டும்..
இதை ஜெரால்ட் ஹேர்ட் எனும் இன்றைய ஐரிஷ் தத்துவவியலாளர் இப்படி விளக்குவார்:
1.எது தறு என்பதை நீ தெளிவாகப் பார்க்க வேண்டும் 2. .நீ சுகமாக்கப்பட வேண்டியவன் என்பதை ஏற்க வேண்டும். 3. சுகமாக்கப்படுவதை, அதாவது துயர் நீக்கப்படுவதை நோக்கிச் செயல்பட வேண்டும். 4.சுகமாக்கப்படுவதை நோக்கிப் பேச வேண்டும் 5. உன் வாழ்முறை இந்தத் துயர் நீக்க நடவடிக்கைகளுடன் முரண்படக் கூடாது. 6.சரியான வேகத்துடன் இது செயல்படுத்தப்பட வேண்டும் 7. இடைவெளியின்றி தொடர்ந்து நீ இது குறித்துச் சிந்திக்க வேண்டும். 8. ஆழ்மனத்தைச் செயல்படுத்த நீ அறிய வேண்டும்.
இப்படித்தான் எளிய சொற்களில் உய்தலுக்கான தன் வழிமுறையை புத்தர் முன்வைத்தார்.
அன்றைய கங்கைச் சமவெளியில் ஓங்கியிருந்த உபநிடதக் கோட்பாடுகளையும் அவர் இப்படி மிக எளிமையாகவே எதிர்கொண்டார். ப்ருஹதாரண்ய உபநிடதம் முன்வைத்த ஆன்மீகத்தை இப்படிச் சுருக்கலாம்: 1. மனிதன் தன் கர்மங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கிறான் 2. இப்பிறவிச் சுழலிலிருந்து நிரந்தரமாகத் தப்புவதற்கு ஒரே வழி ப்ரம்மத்தை அறிவதே. வேதத்தில் மறைதுள்ள மெய்ப்பொருளே ப்ரம்மம் 3. சாரமாக ஆத்மா இருப்பதால் அது மாறுவது இல்லை. அது ‘சத்’ , அதாவது ‘இருப்பது’ (exists). உருப்பெற்றுக் கொண்டிருப்பது அல்ல (opposed to becoming). ‘இருப்பு’ (existence) என்பது நிறைவானது. ஏதேனும் ஒன்று குறைபடும்போதே ‘துக்கம்’ நிகழ்வதால் ‘இருப்பு’ துக்கமற்றது.
ஆனால் புத்தர் முன்வைக்கும் முதல் பேருண்மையே துக்கம்தான். துக்கம் என்பது திருப்தி இன்மை. வாழ்வின் இறுதியில் எஞ்சுவது அதுவே. அதனால் துக்கத்தை வெல்ல வாழ்வனுபவங்களுக்கு அப்பாற் செல்ல வேண்டும் என்றது பௌத்தம்.வாழ்வின் பண்புகளாக புத்தர் சொண்ணவை:
1.அநிச்ச – அநித்தியம் – வாழ்வு நித்தியமற்றது.
- துக்க – திருப்தியின்மை – வாழ்வு திருப்தியற்றது.
- அனத்த – அனாத்மம்- வாழ்வு ஆன்மா அற்றது.
உபநிடதங்கள் ”ஆத்மன்” என்பது மாறாதது (‘சாரம்’). புத்தருக்கோ வாழ்வு அநித்தியமானது. மாறுவது. எனவே அது ஆத்மன் அல்லாதது. அது அனாத்மன் என்றார் புத்தர். அதாவது உபநிடதங்கள் ‘ஆத்மன்’ என்பதை வைத்த இடத்தில் புத்தர் ‘அனாத்மன்’ என்பதை வைத்தார்.
உயிர் = பிரபஞ்சம் = சாரம் (1=1=1) – இது உபநிடதம்
உயிர் = பிரபஞ்சம் = சாரமின்மை (0=0=0) – இது பௌத்தம்
இவ்வாறு சாரம் இல்லை என்பதால் சுயதருமம் இல்லை. வருணப் பண்பு, வருணக் கடமை, சாதிப் புத்தி என்பதெல்லாம் இல்லை என்றாகியது.
இதுதான் புத்தர் முன்வைத்த ஆத்ம மறுப்பு வாதம். மணிமேகலையில் நாம் இனி பேசப்போவது புத்த தத்துவமல்ல. அதனடியாக உருவான தர்க்க முறை குறித்துத்தான் இறுதிக் கட்டமாக நாம் பேசப் போகிறோம். மணிமேகலையின் காலம் கி.பி ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு எனலாம். புத்தரின் காலம் கி.மு.6ம் நூ. இடையில் ஆயிரத்தும் மேற்பட்ட வருடங்கள் ஓடியிருந்தன. கங்கைச் சமவெளியிலிருந்து பௌத்தம் தென் இந்தியா, கிழக்கு ஆசியா, சீனம் வரை பரவிருந்தது. பல்வேறு தர்க்க முறைகள் அப்போது செழித்து வளர்ந்திருந்தன. பௌத்தத்திற்குள்ளும் பல போக்குகள் உருவாகி இருந்தன. இவற்றுள் மணிமேகலை கூறும் பௌத்த தர்க்கத்தை எங்கு வைப்பது என்பது குறித்து இங்கு பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
(அடுத்த இதழில் மணிமேகலை முன்வைக்கும் பௌத்த தர்க்கத்தை எப்படிப் புரிந்து கொள்வது)