ஒரே நேரத்தில், மத்திய மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-க்குச் சில உறுதியான கொள்கைகள் உண்டு. இந்தியத் துணைக் கண்டத்தை மொழி வாரியாக இல்லாமல், 72 நிர்வாக அலகுகளாகப் பிரித்து ஆள்வது, நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றுவது, இந்தியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை மாற்றி அமைப்பது…. முதலான அவர்களின் ஆசைகளில் மத்திய – மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்பதும் ஒன்று. 2009, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும் அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் மத்திய – மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்பதைக் குறிப்பிட்டிருந்தார்கள். திட்ட ஆணையத்தை (planning commission) ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில், அவர்கள் இன்று அமைத்துள்ள ‘நிதி ஆயோக்’ அமைப்பும்கூட ‘மத்திய – மாநிலத் தேர்தல்களைத் தனித்தனியே நடத்துவதால் செலவு ஆகிறது’ எனச் சொல்லி, ‘ஒரே நேரத்தில் இரண்டையும் நடத்த வேண்டும்’ எனப் பரிந்துரைத்தது. சென்ற பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்தை மோடி முன்வைத்து, “குறுகிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து இந்தப் பிரச்னையைப் பார்க்க வேண்டாம்” என்றும் எதிர்க் கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்தப் பின்னணியில்தான் சென்ற வாரம் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது பற்றிப் பேசியுள்ளார்.

இந்தக் கருத்துக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் இரண்டு. அடிக்கடி தேர்தல் வருவதால், உறுதியான கொள்கை முடிவுகளை எடுத்துச் செயல்பட முடியவில்லையாம். அதாவது இவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகள் தேர்தலில் இவர்களின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் என்கிற அச்சத்தால், ஆட்சியில் இருப்பவர்கள் ‘ஆட்சிச் செயல்பாடுகளில்’ (governance) கவனம் செலுத்த முடியவில்லையாம். அடிக்கடி தேர்தல் இல்லாவிட்டால், தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாக மக்களுக்குப் பிடிக்காத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாம். இது எப்படி இருக்கு…!

marx-a

இரண்டாவதாக அவர்கள் சொல்லும் காரணம் ‘வீணான’ தேர்தல் செலவுகளைக் குறைக்கலாம் என்பது. இதுபற்றி உண்மையில் கவலைப்பட வேண்டியது கார்பொரேட்கள்தான். பெரிய அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை, அவை எத்தனை நூறு கோடிகளானாலும் கார்பொரேட்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். அதுபற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதுமில்லை. தேர்தல் முடிந்த கையோடு செய்த செலவைக் காட்டிலும் இரட்டிப்பாக வருமானம் அவர்களுக்குக் கிட்டி விடுகிறது. அதோடு தேர்தல் செலவுகள் என்பன கருப்புப் பணத்தைச் செலவிட அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் ஆகிவிடுகிறது.

தனித்தனியே தேர்தல் நடத்துவதால், அரசு நிதி வீணாகிறது என அழுகிற நிதி ஆயோக் சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தல் செலவாக மதிப்பிட்டது 240 கோடி ரூபாய். இதன்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் என்றால் ஓராண்டு பட்ஜெட்டில் தேர்தலுக்கு ஆகும் செலவு வெறும் 48 கோடிதான். 2017- 18ம் ஆண்டுக்கான குஜராத் அரசின் பட்ஜெட் செலவு 1,72,000 கோடி ரூபாய். அதாவது மொத்த ஆண்டு பட்ஜெட்டில் ஓராண்டுக்குச் சராசரியாகத் தேர்தலுக்காக ஆகும் செலவு வெறும் 0.03 % மட்டுமே. ஜனநாயகத்தின் மிக அடிப்படையான அடையாளம் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல்கள்தான். ஆட்சிகள் மீது மக்கள் தங்களின் மதிப்பீட்டைக் காத்திரமாக வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பை இந்தச் சிறு தொகையைக் காட்டிப் பறிக்க முயல்வதை எப்படி ஏற்பது?

உண்மை நோக்கம் இதுவெல்லாம் அல்ல. தமிழகம், கேரளம், கர்நாடகம், மே.வங்கம், டெல்லி, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரம் இப்படிப் பல மாநிலங்களில் பி.ஜே.பி இன்று பலவீனமாக உள்ளது. ஒரிசா, ஆந்திரம், மகாராஷ்டிரம் முதலான மாநிலங்களிலும் பி.ஜே.பி கூட்டணி இன்று  உடைந்துள்ளது. இந்நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினால் தங்களுக்கு வாய்ப்பு என பி.ஜே.பி கருதுகிறது.

மத்திய – மாநில தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது அகில இந்தியக்கட்சிகளுக்கு வாய்ப்பாகவும் மாநிலக் கட்சிகளுக்கு இழப்பாகவும் முடியும் என்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. அரசின் கொள்கை முடிவுகளை ஆய்வு செய்யும் மும்பை IDFC நிறுவனம் 1999, 2004, 2009, 2014  முதலான ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களை ஆய்வு செய்து, ‘தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும்போது 77% வாக்காளர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது’ என்பதை நிறுவியுள்ளது. ‘வாக்காளர்களின் முடிவெடுக்கும் திறனை இது பாதிக்கும்’ என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அகமதாபாத்தில் உள்ள ‘இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM)’ முன்னாள் தலைவர் ஜகதீஷ் சோக்கர், டெல்லியில் உள்ள ‘வளரும் சமூகங்கள் தொடர்பான ஆய்வு மையத்தின்’ (CSDS) இயக்குநர் சஞ்சய்குமார் ஆகியோர் 1989 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாறு மத்திய – மாநிலத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட 31 தேர்தல்களை ஆய்வு செய்து அவற்றில் 24 தேர்தல்களில் ஒரே கட்சியே இரண்டிலும் அதிக வாக்குகளைக் குவித்துள்ளதை நிறுவியுள்ளனர்.

ஒரே நேரத்தில் இப்படி இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பது மட்டுமல்ல… இந்த ஆய்வு முடிவுகள் அகில இந்தியக் கட்சிகளுக்கே அது சாதகம் என நிறுவுவதையும் கவனிக்க வேண்டும். மாநில உரிமைகள், மாநில சுயாட்சி ஆகியன இதன் மூலம் கேலிக் கூத்தாகின்றன.

நெருக்கடி நிலைக்கால (1975-77) அனுபவம் நமக்கு உண்டு. ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் நீதிமன்றம், பத்திரிகைகள் எல்லாம் அப்போது ஒடுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டதன் ஊடாக நாடாளுமன்றமும் செயலிழந்தது. இப்படி ஜனநாயகத்தின் தூண்கள் எல்லாம் முடக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய நாடாளுமன்றத் தேர்தல்தான் நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தது என்பதை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது.

தவிரவும் இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது பல சட்டச் சிக்கல்களுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிராக அமையும். எடுத்துக்காட்டாக வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகக் கொள்வோம். அப்படி நடந்தால், சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்ட குஜராத், இமாசலப் பிரதேசம் முதலான மாநிலச் சட்டமன்றங்கள் இரண்டாண்டுகளுக்குள் கலைக்கப்படும் நிலை ஏற்படும். ஐந்தாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தை எப்படிக் கலைக்க முடியும்?

அல்லது ஏதோ ஒரு நெருக்கடியில் மாநில அரசு கவிழ்கிறது அல்லது சட்டமன்றம் கலைக்கப்படுகிறது எனக் கொள்வோம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்வரை அம்மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில்லாமல் மத்திய அரசின் ஏஜென்ட்டாக உள்ள ஆளுநர் ஆட்சியிலேயே தொடர வேண்டுமா?

இரண்டு தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் இன்னும் சில காரணங்கள் மிக அபத்தமானவை மட்டுமல்ல… கொடூரமானவையும் கூட. தேர்தல்கள் வருவதால் சுற்றுச்சூழல் கெடுகிறதாம். அதாவது தேர்தல் பிரச்சாரங்களால் போக்குவரத்து அதிகமாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுதல், வாகனப் புகையால் வளி மண்டலம் அசுத்தமடைதல், தேர்தல் உரைகள் செவித்திறனைப் பாதித்தல் (noise pollution) இதையெல்லாமும் கூடச் சிலர் இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கான ‘நியாயங்களாக’ முன்வைக்கின்றனர். இது ஒரு அப்பட்டமான நடுத்தர வர்க்க மேட்டிமைக் குரல் என்பதை விளக்க வேண்டியதில்லை. இதில் கொடுமை என்னவெனில், இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றும் (Parliamentary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice) இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக இந்தக் கருத்தை முன்வைத்திருப்பதுதான்.

போராட்டங்கள் நடத்துவது, வீதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்புவது முதலான அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளும் இந்த வகையில் சுற்றுச் சூழலையும் அமைதியான வாழ்க்கையையும் கெடுப்பவைதான். போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துபவைதான். இப்படியெல்லாம் சொல்லித்தான் இந்திராகாந்தி நெருக்கடி நிலையையே முன்வைத்தார். எல்லாச் சர்வாதிகாரிகளும் சொல்கிற காரணங்கள்தான் இவை.

இன்றைய நமது தேர்தல் முறையில் எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. முக்கியமாக போட்டியிடுபவர்களில் அதிக வாக்குகளைப் பெறுகிறவர்கள் வென்றதாகக் கருதப்படும் இன்றைய முறையில் 30 விழுக்காடு வாக்குகளைப் பெற்றவர்கள் ஆட்சிக்கு வரும் முறையை ஜனநாயகம் என ஏற்பதில் சிக்கல்கள் உள்ளன. இவைகளில் எல்லாம் மாற்றங்கள் வேண்டும் என நாமும் கோருகிறோம். ஆனால், இத்தகைய கோரிக்கைகளை எல்லாம் மூர்க்கமாக மறுப்பது அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது என்கிற நிலைபாட்டை எடுக்கும் மோடி அரசு நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாக நடத்துவது என்கிற கருத்தைக் கசிய விடுவது மிகவும் ஆபத்தான ஒன்று. குறைகள் இருந்தபோதும் சுமார் 70 ஆண்டுகளாக இன்றைய தேர்தல் முறையின் ஊடாகத்தான் இங்கே பல ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. முதல் 22 ஆண்டு காலம் இங்கே இரு தேர்தல்களும் ஒன்றாகத்தான் நடைபெற்று வந்தன. காங்கிரஸ் கட்சி பிளவுற்றதைத் (1969) தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பே இரு தேர்தல்களும் தனித்தனியாக நடத்தப்படும் நிலை தொடங்கியது. இதே பின்னணியில்தான் மாநிலக் கட்சிகளின் உருவாக்கமும் கிட்டத்தட்ட இந்தியா முழுமையிலும் நடந்ததன் ஊடாக இன்னும் ஒரு படி நமது அரசியல் முன்னோக்கி நகர்ந்தது.

பி.ஜே.பி அரசு இன்று இந்த வரவேற்கத் தக்க மாற்றங்களைப் பின்னோக்கி நகர்த்த முயற்சிப்பது ஆபத்தானது; ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் இது!

பிப் 02, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *