பல சமயங்கள் ஒரு சேரச் செழித்திருந்த தமிழ் மண்

          நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  25                                                    

பல்வேறு சமய, தத்துவச் சிந்தனைகள் செழித்திருந்த தமிழ் மண்

வைதீகம், ஆசீவகம், பௌத்தம், சாங்கியம், பூதவாதம் எனப் பல நெறிகளும், செழித்திருந்த காலம் மட்டுமல்ல, அவற்றுக்கிடையே ஆரோக்கியமான விவாதமும் நடந்து கொண்டிருந்த காலம் அது. சேரமன்னன் செங்குட்டுவன் வடக்கே படையுடன் சென்று, கங்கையைக் கடந்து, கனக விசயர் முதலான வடபுல மன்னர்களை வென்று, அவர்தம் தலைகளில், இமய மலையிலிருந்து பெயர்த்தெடுத்த கற்களைச் சுமக்கச்  செய்து கொண்டு வந்தான் எனவும், அவற்றைக் கொண்டே  கண்ணகிக்குக் கோவில் கட்டினான் என்றும் நம்பிக்கைகள் உருவான காலத்தில் எழுந்த காவியம் மணிமேகலை. இக்காதையின் இறுதி வரிகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.

செங்குட்டுவனை, ” பூக்காத வஞ்சியில் பூத்த வஞ்சி  மலர்களைச்சூடிய விரர்கள் வலம் வரும் சேர நாட்டுச் செங்கோல் வேந்தன்” எனக் கூறும் சாத்தனார், அந்த வீரர்கள் தாம் செல்லும் நாட்டை எல்லாம் சேரநாடாக ஆக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிறார். திருமுடியில் வாகை சூடிய அச்சேரனின் வஞ்சியில் எடுக்கப்பட்ட கண்ணகிப் படிமத்தை வணங்கி ஆசிபெற்ற மணிமேகலை, முன் அத்தியாயத்தில் கண்ணகி அவளுக்குச் சொன்னபடியே  ஆணுருவில் வஞ்சி மாநகருக்குள்  நுழைகிறாள். பௌத்தம் முன்னிறுத்தும் நான்கு பேருண்மைகளையும் புரிந்தேற்கும் வண்னம் இத்தருணத்தில் அவளுக்குத் “திருந்திய நல் ஏதுக்கள் முதிர்ந்திருந்தன” என நிறைவுறுகிறது  முந்திய காதை.

புத்தர் உறைத்துச் சென்ற நான்கு பேருண்மைகள் என்பன என்ன?

(i) வாழ்வின் அடிப்படையாக ‘துக்கம்’ தான் உள்ளது (ii) ‘ஆசை’ யும் பற்றுமே எல்லா துக்கங்களுக்கும் அடிப்படை (iii) தன்னை மையமாகக் கொண்ட நோக்கு, ஆசை அதன் விளைவான துக்கம் எல்லாம் நீக்கப்படக் கூடியவையே. (iv) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் அடிப்படியிலான எண்வழிப்பாதை (அஷ்டாங்க மார்க்கம்) மூலம் ‘சரியான வாழ்வை’ வாழும் யாரும் துக்கத்தை வெல்ல முடியும் – என்கிற இப்பேருண்மைகளை உணர்ந்தேற்கும் நிலையை மணிமேகலை எனும் கணிகைக் குலத்தில் பிறந்த ஒரு இளம்பெண் வந்தடைதலையும், அதனூடாக அவள் பெறும் அனுபவங்களையும் சொல்வதுதான் மணிமேகலைக் காவியம் என்பதை நாமும் உணர்ந்து கொள்கிறோம்.

இனி நாம் காணப்போகும் மணிமேகலையின் இறுதி நான்கு அத்தியாயங்களும் அன்று இந்தியத் துணைக்கண்டத்திலும் தமிழகத்திலும் முகிழ்த்திருந்த முக்கிய பல சமயங்களின் கருத்தாக்கங்களையும், அவற்றில் பௌத்த சிந்தனைகள் எவ்வாறு மேம்பட்டு நிற்கின்றன என நிறுவுபவையாகவும் அமைகின்றன.

இப்போது நாம் காணப் போகும் “சமயக் கணக்கர்- தம் திறம் கேட்ட காதை’ யில் மணிமேகலை ஆணுருக்கொண்டு புறச்சமயக் கணக்கர் பலரையும் கண்டு அவர்தம் மதக் கோட்பாடுகள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொள்கிறாள். யாருடனும் வாதிடுவதில்லை. இறுதியாகச் சந்திக்கும் பூதவாதிக்கு மட்டும் மறுமொழி சொல்வாள். இதனூடாக இந்தியத் துணைக்கண்டத்தில் அன்று செழித்திருந்த பல்வேறு மத நெறிகளின் அடிப்படைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

‘சமயக் கணக்கர்’ என்பதில் உள்ள ‘கணக்கு’ எனும் சொல் ‘தத்துவம்’ அல்லது ‘மெய்யியல்’ எனும் பொருளில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. கணக்கர் என்பதை ‘தத்துவ விற்பன்னர்’ அல்லது ‘சமயவாதி’ அல்லது ‘சமய நெறியை ஆய்ந்துரைப்போர்’ எனப் பொருள் கொள்ளலாம். ‘அளவை’ என்பது தர்க்கம் (logic).

அ. அளவை வாதி

மணிமேகலை முதலில் சந்திப்பது வைதிக நெறியைச் சேர்ந்த ‘அளவை வாதி’ யை. வைதிக வாதி என்பது வேதங்களை ஏற்றவர், அதனடியாக அணுகுபவர் எனப் பொருள்படும். அவனிடம் ‘நின் கடைப்பிடி இயம்பு’ எனக் கூறி அவன் கடைபிடிக்கும் தத்துவத்தைக் கூறுமாறு மணிமேகலை கேட்டவுடன் அவன் தொடங்குவான்.

வேத வியாசன், கிருத கோடி, சைமினி (ஜைமினி) முனிவன் ஆகியோர் முறையே பத்து, எட்டு, ஆறு என்கிற எண்ணிக்கைகளில் தமது அளவைகளை அவரவர்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளனர். இவர்களில் சைமினி ‘.மீமாம்சை’யை எழுதியவர்.

அடுத்து பிரமாணம் என்பது எந்த அடிப்படை அல்லது ஆதாரம், அல்லது கொள்கையினடியாக ஒன்றை ஏற்றல் என்பது. அப்படியான பத்து பிரமாணங்களை அவன் பட்டியலிடுவான். அவை:

1.கண்ணால் கண்ட காட்சி,

  1. கருதுதல் (சிந்தனையில் மதிப்பிடல் அல்லது அனுமானத்திலிருந்து அனுமேயத்தை உய்த்தறிதல்),
  2. உவமம் (ஒப்புமையின் அடிப்படையில் முடிவுக்கு வருதல்),
  3. ஆகமம் (நூற் பிரமாணம் அல்லது நூலறிவு),
  4. அருத்தா பத்தி (ஆயர் குடியிருப்பு என்றால் அது கங்கையின் அருகில் இருக்கும் என ஒன்றிலிருந்து இன்னொன்றை அறிதல்),
  5. இயல்பு (ஒன்றின் தன்மை அறிந்து முடிவு கோடல். யானை மேல் இருப்பவன் கீழே கிடக்கும் ஏதொன்றையும் எடுத்துத் தருமாறு கேட்கும்போது அங்குசத்தை எடுத்துத் தருதல்),
  6. ஐதீகம் ( உலகுரை அல்லது வழி வழி வந்த கருத்து அல்லது நம்பிக்கை,)

8, அபாவம் (இன்மை – அதாவது குதிரைக்கு கொம்பு இல்லை என உணர்ந்தறிதல். ஒன்றைச் சொல்லும்போதே அது உறுதியாக அப்படியல்ல என முடிவுக்கு வருதல்),

  1. மீட்சி ஒழிவறிவு (இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் எனப் பொருள் கோடல்),
  2. எய்தியுண்டாம் நெறி (சம்பவத்தால் அறிதல், அதாவது ஒரு பொருளுக்கு அருகிலுள்ள இரும்பு சுழல்வதைக் கண்டு அதைக் காந்தம் என அறிதல்)

அத்தொடு நிறுத்தவில்லை அந்த வைதிகவாதை. அடுத்து ‘பிரமாண ஆபாசங்கள்’ என என எட்டு அளவைக் குற்றங்களைப் பட்டியலிடுவான். அவை:

  1. சுட்டுணர்வு : ஏதொன்றின் தோற்ற உண்மையை மட்டும் கண்டு பிறவற்றை ஆராயாது ஏற்றல் (நிருவிகற்ப காட்சி).
  2. திரியக்கோடல் : காணும் ஒன்றைத் திரித்துணர்தல். எதிரொளிக்கிறது என்பதாலேயே இப்பியை சிப்பி எனக் கொள்ளுதல் (விபரீதக் காட்சி)
  3. ஐயம் : எதையும் உறுதிப்படுத்தாமல் ஐயமுற்று நிற்பது.
  4. தேராது தெளிதல் : ஆராயமற் முடிவெடுத்தல். ‘தேரான் தெளிவும், தெளிந்தார்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’ – குறள்.
  5. கண்டுணராமை : கண்ணால் கண்டும் உணராமை. புலியைக் கண்டும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலாமல் நிற்றல்.
  6. இல்வழக்கு : முயற் கொம்பு என்பதுபோல இல்லாத ஒன்றை வெறும் சொற்பொருளிலிருந்து கற்பித்துக் கொள்ளல்.
  7. உணர்ந்ததை உணர்தல்: குளிருக்கு நெருப்பருகே அமர்தல் ஆறுதல் அளிக்கும் என அறிந்தும் அதனை மீண்டும் சோதித்து அறிய முனைதல்.
  8. நினைப்பு : ஒருவர் சொல்வதை காரண ஆய்வின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.

ஆ. சைவவாதி

அடுத்து  ஈசன் (சிவன்) ஒருவனையே இறைவன் எனக் கொள்ளும் ஒரு சைவனைச் சந்தித்து அவன் வணங்கும் தெய்வம் குறித்து  உசாவுகிறாள் மணிமேகலை.

ஞாயிறு திங்கள், இயமானன் (‘நான்மறையோனுமகத்து இயமான்பட’- மாணிக்கவாசகர்) மற்றும் மண், நீர், தீ, காற்று, வான் எனும் ஐம்பூதங்கள் என எட்டினையும் தன் உடம்பாகவும் தான் உயிராகவும் கொண்டுத் தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் யாவற்ரையும் படைத்துத் திருவிளையாடல் புரிபவனே எம் இறைவன் எனப் பதிலுறுக்கிறான் அவன்.

இ. பிரமவாதி

இந்தப் பேருலகெல்லாம் பிரமதேவன் இட்ட முட்டை என முடித்துக்கொள்கிறான் இவன். பிரமவாதம் என்பது வைதிக அறுவகை நெறிக்குள் அடங்காது. புராணங்களில் மட்டுமே காணப்படுவது. இங்கு கூறப்படும் கருத்து மனுதருமத்தில் (1-9) காணப்படுவது.

ஈ. வைணவ வாதி

நீலவண்ணக் கடவுளின் புராணத்தை ஓதும் வைணவன் ‘நாராயணனே காப்பு’ என முடித்துக்கொண்டான்.

உ. வேத வாதி

‘கற்பமே’ (வேதங்களின் ஆறங்கங்கள்). கைகள், சந்தமே (ஒலி நயம்) கால்கள், எண்களே கண்கள் (எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்), தெளிவான விளக்கம் அளிக்கும் நிருத்தமே (பாவம் / அபிநயம்) செவியாகவும், சிக்கையே (சிட்சை) மூக்காகவும், இவற்றோடு சொல் இலக்கணமே முகமாகவும் கொண்டு எந்தச் சார்பும் இன்றித் தான்தோன்றியாக வெளிப்பட்ட வேத புருடர்க்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. அவ்வேத வாக்குகளே எம் சமய நெறியாகும் என விளக்கினான் வேதவாதி.

‘மெய்த் திறம் (மெய்யான திறன்) அல்லது உலக வழக்கு எனக் கூறப்படும் எதிலும் இவ் வைதிகர் கூறுவன பொருந்தாது என எண்ணியவாறு தம் காலத்திய இன்னொரு முக்கிய சமயப் பிரிவான மற்கலியின் ஆசீவக நெறியறிந்த ஒரு முதியோனை அணுகினாள் மணிமேகலை.

ஊ. ஆசீவக வாதி

ஆசீவகர் கொள்கையச் சற்று விரிவாகவே பேசுகிறார் சாத்தனார். எல்லை இல்லாத பொருள்களில் எங்கும் எப்போதும் அகலாது பின்னிக் கிடந்து புலப்படுபவனும், எல்லையில்லாத அறிவினை உடையவனுமாகிய அவனே எங்கள் இறைவன். அவன் (மற்கலி) உரைத்த நூற்பொருட்கள் ஐந்து வகையாம். அவை திடம் தரும் உயிர், மற்றும் நிலம், நீர், தீ, காற்று எனும்  நால்வகை அணுவகைகள். அவ்வணுக்கள் நுண்மையானவை ஆனாலும் அவை தம்மை உற்றும், கண்டும் உணர்ந்திடுமாறு ஒன்றோடொன்று கூடுதலும் பிரிதலும் செய்யும். மலை, மரம், உடம்பு எனத் திரளவும் செய்யும். வெவ்வேறாகிப் பிரியவும் செய்யும். அவ்வாறு திரளவும், பிரியவும் செய்யும் வகையினை ஆராய்ந்தறிவதே உயிர் எனப்படும். ஆசீவகத்தின் அணுக் கொள்கையின்படி உயிரும் ஒரு அணுவே. அது உற்றும் கண்டும் உணர்ந்திடும் வகையில் கூடவும் செய்யும் பிரியவும் செய்யும். “ஒன்றாய், வேறாய், உடனாய்” எனும் ஆசீவகத்தின் ஒருமைவாதக் கோட்பாடு இங்கே குறிக்கப்படுகிறது. ஆசீவக நெறியை மறுக்கும் நீலகேசியிலும் (659 – 729) ஆசிவகத்தின் அணுக் கொள்கை இவ்வாறு விளக்கப்படுவதைக் காணலாம்.

ஆசீவகவாதி தொடர்கிறான்: நில அணுக்கள் வன்மையானதாக அமையும். நீரணுவானது வீழ்ந்தும், குளிர்ச்சியும் சுவையும் உடையதாகவும் இருக்கும்.. ‘இழின்’ எனும் ஒலியோடு வீழ்ந்து நிலத்தின் ஆழத்தே உறிந்து கொள்ளப்படும். தீ அணுவோ எரிவதும் மேல்நோக்கி எழுவதுமான பண்புகளைக் கொண்டிருக்கும்.. காற்றணுவோ குறுக்கிட்டு (விலங்கி) அசையும் பண்பு கொண்டிருக்கும்..

நிலம், நீர், தீ, காற்று எனும் இந்நான்கும் ஆதியில்லாத அநாதியான பரமாணுக்கள். பிரிதல், பின் கூடுதல் எம்கிற வேறு இயல்புகளை எய்தும் விகாரமுடையவை. ஆனால் இதனால் இவை கேடுற்றுச் சிதைந்தழிவதும் இல்லை. புதிதாய் ஓரணு தோன்றி இன்னொன்றுக்குள் புகுவதும் இல்லை. அநாதியான நீரணுக்கள் நிலவணுக்களாகத் திரிவதும் இல்லை. ஓரணு ஈரணுக்களாய்ப் பிரிவதும் இல்லை. தவிரவும் நெல் அவலாய் பரந்துபடுவதுபோல போல இவை விரிவதும் இல்லை. உலாவுவதும், தாழ்வதும், உயர்வதும் உண்டு. நில அணுக்களால் அமைந்த மலை, பின் சிதைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடலாம். பலவாகக் கூடியிருப்பன பின் பிரிந்துத் பின் பழைய அணுத்தன்மை உடையதாக மாறவும் கூடும். மரமாய்ச் செறிந்துள்ள அணுக்கள் திண்மையாய்ச் செறிந்து வேறேதேனும் ஆகலாம். மூங்கிலும் மர அணுக்கள் ஆனபோதிலும் அவை மூங்கிலாய் உருப்பெறும்போது உள்ளே துளைகொண்ட  தன்மையதாகவும் ஆகலாம். வித்தாகி மீண்டும் முளைக்கவும் ஆகலாம். தேயாத முழுநிலவைப்போல வட்டமான செழித்த நிலப்பரப்பாகவும் ஆகலாம்..

இந்த அணுக்கள் நிலம் நீர் முதலான பஞ்சபூதங்களாய் உருப்பெரும்போது இந்த நால்வகை அணுக்களும் அவையவைக்கு உரிய அளவிலேயே இருக்க வேண்டும். அவற்றில் எதுவும் குறையவோ கூடவோ கூடாது.. ஒன்று, முக்கால், அரை, கால், பங்கு என அவை வேறுபடும். எடுத்துக்காட்டாக நிலமாகிய பூதம் உருப்பெறும்போது அதில் நில அணு ஒன்று அமைந்தால் நீரணு முக்கால், நெருப்பு அரை, காற்று கால் எனும் அளவுகளில் பங்கு பெரும். இவற்றில் எது மிகுந்துள்ளதோ அதனால் அது பெயர் பெறும்.. இப்படியான வீதத்தில் அணுக்கள் செறிந்து அமையும் போதுதான் அவை நிலம் அல்லது நீர் என்பது போலப் பண்பு கொண்டிருக்கும். அதாவது நிலமாய் உறுதி பெறுதல் அல்லது நீராய் பள்ளம் நோக்கி ஓடுதல், நெருப்பாய்ச் சுடுதல், காற்றாய் வீசுதல் முதலான தொழில்களை அடைந்திடும்.

தெய்வ, ஞானக் கண்களை உடையோர் ஒவ்வோர் அணுவையும் கண்டறிவர். ஏனையோர் பூதமாய்த் திரண்டு நிற்பவற்றின் உண்மைகளை அறியார். கரும் பிறப்பு,, கருநீலப் பிறப்பு, பசும் பிறப்பு, செம் பிறப்பு, பொன்பிறப்பு, வெண் பிறப்பு என மக்கள் இவ் அறுவகைப் பிறப்பிலும் பிறந்து இறுதியாக அதி வெண்மையான பிறப்பில் பிறந்து வீடுபேறடைவர். தாம் துன்பமுற்று அழிந்து படுவதை விரும்பாதோர் வீடுபேற்றிற்கு உரியதான அதிவெண்பிறப்பில் பிறப்பதற்கு உரியோர் ஆவர். இதுவே ‘செம்போக்கு’ எனும் நன்னெறியாகும். இந்நெறியில் தவருற்றுத் துன்புற்றால் அதுவே ‘மண்டல’ நெறி என அறிதல் வேண்டும்.

ஆசீவகத்தின் பார்வையில் வீடுபேற்றுக்கான வழி இப்படியாக அறுவகைப் பிறப்புகளிலும் பிறந்து படிப்படியாக உயர வேண்டும் என்றாகிறது. இவ்வாறு பல்வகைப் பிறப்புகளுக்கும் நிறங்கூறுவது என்பது சீவக சிந்தாமணி முதலான சமணக் காப்பியங்களிலும் காணப்படுவதை வேங்கடசாமி நாட்டார் சுட்டிக் காட்டுகிறார். பெரியாழ்வாரும் வீடுபேற்றுக்குரியவர்களை ‘வெள்ளுயுர்’ எனக் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இறுதியாக அந்த ஆசீவகன், “நற்பேறுகளைப் பெறுதலும், பெற்றவற்றை இழத்தலும், இடையூறுகள் நேர்தலும், பொருந்தும் இடத்தை அடைதலும், இன்பத்தையும் துன்பத்தையும் அடைதலும், பொருந்திய இடத்திலிருந்து நீங்கலும், பிறத்தலும், சாதலும் கரு உயிர்த்தபோதே உயிருடன் கலந்து விடும். இந்த இன்பமும், துன்பமும் ஆகிய இவையும் அணுவெனப்படும்.. முன்னுள்ள ஊழே பின் நல்லது கெட்டதற்குக் காரணமாகிறது. இதுதான் மற்கலி கோசகர் தன் நூலில் உரைத்துள்ளவையாம்” எனத்தன் ஆசிவக நெறியை மணிமேகலைக்கு உரைத்தான்.

கிட்டத்தட்ட இந்த அத்தியாயம் மணிமேகலைக் காப்பியத்தின் மொழியாக்கமாகவே அமைந்துள்ளது. சாத்தனாரின் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வளமான தத்துவ விவாதங்கள் குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இது உதவும். சாங்கியம், பூதவாதம் முதலான மேலும் சில முக்கிய போக்குகளையும் அவற்றின் மீதான கருத்துக்களையும் தொடர்வோம்.

(அடுத்து நிகண்ட வாதம் சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகிய நெறியாளர்களின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.)

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *