மணிமேகலை 20 : எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள்

நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள் 20                     

எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்க வேண்டும் என்பதே

கிறிஸ்துவிற்கும், அசோகருக்கும் முந்திய நூற்றாண்டுகளில் பிராமணத்திற்கும் சிரமணத்திற்கும் இடையே கங்கைச் சமவெளியில் நடந்த கருத்து மோதல்களின் பல்வேறு அம்சங்களில் இல்லறத்தையும் துறவறத்தையும் முன்வைத்து நிகழ்ந்த மோதலும் ஒன்று. ஒரு மனிதன் எத்தனை பொருள் ஈட்டினும், அவை அனைத்தையும் அவன் அறச்செயல்களிலேயே செலவழித்த போதிலும் தனியனாக இருந்து அவன் அதைச் செய்தால் அவன் புண்ணிய உலகை அடைவது சாத்தியமில்லை என்பது பிராமணச் சிந்தனை. வணிகத்தின் ஊடாகப் பெருஞ்செல்வம் ஈட்டி, மதுரை மாநகரில் அரச விருதுகளுடன் வாழ்ந்து வந்த தருமதத்தனிடம் இல்லறத்தில் ஈடுபட்டு, பத்தினியோடு இணைந்து செய்யாத எந்த அறமும் பயனற்றது என்று அறிவுரைப்பவனாக ‘அந்தணாளன்’ ஒருவனை முன்னிறுத்துவதன் ஊடாக அதுதான் வைதீகம் முன்வைக்கும் அறம் என்பதைச் சாத்தனார் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் பெரும் புலவர் சாத்தனார் அத்தோடு நிறுத்தவில்லை. வழக்கம்போல அன்று வைதீகத்திற்கு எதிர் நிலையாய் நின்ற அவதீகம் (சிரமணம்) இது தொடர்பாக உரைக்கும் மாற்று அறத்தை உடனடியாக அங்கே முவைக்கிறார். பிராமண X சிரமண அறங்களை இவ்வாறு எதிர் எதிராக (juxtapose) வைத்து சிரமணத்தை விளக்குவதும் முன்னிறுத்துவதும் சாத்தனார் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று என்பதைக் கவனித்து வருகிறோம். மணிமேகலைக் காப்பியத்தில் பதிக்கப்பட்டுள்ள கிளைக் கதைகள் பௌத்த அறங்களை விளக்கப் பயன்படும் களங்களாக அவரால் அமைக்கப் பட்டிருப்பதை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். தருமதத்தன் – விசாகை கிளைக்கதையும் இங்கு அவ்வாறே அமைக்கப்படுகிறது.

பத்தினி ஒருவளின்றிச் சேர்க்கும் செல்வமும், செய்யும் அறமும் பயனற்றது என்கிற அந்தணாளனின் கருத்தை ஏற்ற தருமதத்தன் தன் அறுபதாம் அகவையில், கன்னி மாடத்தில் வாழ்வைக் கழித்து வரும் விசாகையைப் பத்தினியாக ஏற்றுத் தான் சேர்த்த செல்வங்களை அறச் செயல்களுக்குப் பயன்படுத்தும் நோக்குடன் அவளிருக்கும் காகந்தி நகருக்குத் திரும்பிய செய்தியை விசாகை அறிகிறாள். கன்னிமாடத்தை விட்டு நீங்கி அவனைச் சந்திக்க நாணமோ, தயக்கமோ இன்றி பலரும் காண வீதிவழி சென்றாள். ஒரு காலத்தில் ஊர் வம்பால் பிரிய நேர்ந்தவர்கள் அவர்கள். இன்று அவ் ஊரறிய அவனைப் பார்க்கச் செல்கிறாள் அவள். அவன் அவள் இருக்கும் இடம் நோக்கிச் செல்லும் முன்பாகவே, அவளே அவனிடம் நோக்கிச் செல்கிறாள். இருவரின் வயதும், வாழ்நெறிகளும் ஊரலர்களுக்கு இன்று வாய்ப்பில்லாமல் ஆக்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன் அவர்கள் மீது எழுந்த வீண் பழிச்சொல்லுக்கு இப்போது இடமில்லாமற் போயிற்று.

அவனை நேர்கண்ட அவள், “நாம் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் அல்லர். முன்பு நம்மைக் குறித்து எழுந்த வம்புகளுக்குக் காரணமான நம் அழகுகள் எங்கு சென்று ஒளிந்தன? நம் இளமையும், காம இச்சையும் இன்று எங்கே போயின? மன உறுதியற்றவனே சொல்! இப்பிறவியில் நான் உன்னடி சேரேன். அடுத்த பிறவியில் நான் உன் மனையாளாகி உன் ஏவல்களை நிறைவேற்றுவேன். இவ் உடல், இளமை, வளந்தரு செல்வம் எவையும் நிலையானவை அல்ல. புண்ணிய உலகை புதல்வர்களாலும் தந்துவிட இயலாது. என்றென்றும் உயிருக்கு உற்ற துணையாய் இருப்பது அறம் ஒன்றே. தானம் செய்!” – என்றனள் விசாகை.

தருமதத்தன் அதை ஏற்றான். மாமன் மகளிடன் தன் மிக்க பெருஞ் செலவத்தைக் காட்டி இருவரும் வானத்து விண்மீன்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமான நல்லறங்களைச் செய்து வாழ்ந்தனர். கன்னியாகவே வாழ்ந்து மூத்தவள் அவள். குற்றமற்றவள் என கந்திற்பாவையால் ஊர் முன் சான்று கூறப்பட்டு வாழ்ந்து வருபவள். ஊர்ப்பழிச் சொற்கள் ஏதுமின்றி தருமதத்தனுடன் அறச் செயல்களைச் செய்து வந்தவள் ஒருநாள் வீதி வழியே வந்துகொண்டிருந்தபோது மன்னன் ககந்தனின் மூத்த மகனும், ஏற்கனவே மருதியிடம் வம்புசெய்து தகப்பனால் கொல்லப்பட்டவனின் அண்ணனுமான ஒருவன் காம வெறியுடன், விசாகையின் கழுத்தில் தன் சுருள் மயிர்த்தலையில் சூடி இருந்த மாலையை எடுத்துச் சூட்டும் நோக்குடன், “முன்னோர் உரைத்த மணம் இதுதான்” எனக் கூறிய வண்ணம், மாலையை எடுக்கத் தன் தலை முடிக்குள் கைவைத்தபோது, அந்தக் கையை அவன் மறுபடி அங்கிருந்து அகற்ற இயலாமற் போயிற்று.

தன் மகனின் உயர்ந்த கை மீண்டும் தாழ இயலாமற் போன அவலத்திற்கு அவன் விசாகையிடம் நடந்து கொண்ட முறை மீறிய செயலே காரணம் என்பதை அறிந்த மன்னன் ககந்தன் கடுஞ்சினம் கொண்டு, மகனை இழக்கும் துயரைப் பற்றிக் கருதாது அவனை வெட்டி வீழ்த்தினான்.

ககந்தனின் இரு மகன்களும் தந்தையின் கரங்களாலேயே வெட்டி வீழ்த்தப்பட்டதற்கான காரணம் அவர்கள் இருவரும் பெண்களின் விருப்பறியாமல் நடந்து கொண்டதே. விசாகையின் வரலாற்றினூடாக சாத்தனர் “யாழோர் மணமுறை” முதலான  “தொல்லோர் கூறிய” மணமுறைகளும் காப்பிய காலத்திற்கு முந்திய சங்க மதிப்பீடுகளும் அவருடைய காலத்தில் மாறிவிட்டன என இரு முறை சுட்டுகிறார். பெண்களின் விருப்பறியாமல் மேற்கொள்ளப்படும் கட்டாய மணங்களை மரண தணடனைக்குரிய குற்றங்களாகக் காட்டுவதன் ஊடாக பௌத்தத்தில் அவற்றுக்கு இடமில்லை என உணர்த்துகிறார். அதே போல “பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும் / புத்தேள் உலகம் புகார்” முதலான வைதீகக் கருத்தாக்கங்களும் பொருந்தாது எனச் சொல்வதன் ஊடாக துறவறத்தை மேன்மைப்படுத்தும் சிரமண மதிப்பீடுகள் போற்றப்படுவதும் இங்கு கவனத்துக்குரியது. ‘பத்தினியோடு இணைந்து செய்யும் தருமம் ஒன்றே பலனளிக்கும்’ – என ஒரு மூத்த அந்தணன் முன்வைக்கும் கருத்தையும், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அறச் செயலுக்கு எந்த நிபந்தனையும் இல்லை’ எனத் துறவு மேற்கொண்டு கன்னிமாடம் ஒன்றில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கருத்தையும் எதிர் எதிராக நிறுத்தி அப்பெண்ணின் கருத்தே சரி எனக் காட்டுகிறார் சாத்தனார்.

இந்தக் கிளைக் கதைகள் எல்லாம் அரசனின் மகன் உதயகுமாரன் காஞ்சனனின் வாளால் மாண்ட செய்தியை அவனிடம் பக்குவமாக உணர்த்த வந்த முனிவர்கள் சொன்னவை என்பது கவனத்துக்குரியது. மையக் கதையின் ஊடாக, அதன் ஓட்டம் சிதையாமல், பௌத்த அறங்களை விளக்கும் முகமாகக் கிளைக் கதைகள் மணிமேகலையில் பதிக்கப்பட்டுள்ளன.

இப்படியாக அரசன் மகனாயினும் பெண்களிடம் அத்து மீறும்போது அவர்கள் தண்டிக்கப்படுவது இன்று புதிதல்ல எனும் பொருள்பட “இன்றேயல்ல” (22:19) என அரசனைச் சந்திக்க வந்திருந்த முனிவர்கள் கூறியதைக் கூர்மையாக அவதானித்த மன்னன், “இன்று மட்டுமல்ல எனச் சொன்னீர்களே, இன்று இப்படி ஏதும் நடந்துள்ளதா?” என வினவ, இளவரசன் கொல்லப்பட்ட செய்தியை முனிவர்கள் சொல்கின்றனர்.

அரசன் அதற்கு அமைதியாகப் பதிலளிக்கிறான்:

“நான் அளிக்க வேண்டிய தண்டனையை அதற்குத் தகுதியற்ற விஞ்சையன் அளித்துள்ளான். மன்னனின் காவல் முறையாக இல்லாதபோது முனிவர்களின் தவத்திற்கும், மாதர்களின் கற்பிற்கும் பாதுகாப்பில்லாம்மல் போகும். மகனாயினும் குற்றம் இழைத்ததற்காகத் தண்டித்த மன்னவன் வழி வந்த ஒருவன் மரபில் இப்படி ஒரு தீவினையாளன் தோன்றினான் எனும் செய்தி பிற மன்னவர்கள் காதில் விழுமுன் அவனது உடலை எரியூட்டுவதோடு அந்தக் கணிகையின் மகளையும் காவலில் வை”

-எனச் சோழிய ஏனாதிக்கு (படைத் தளபதி) ஆணையிட்டு அகன்றான் மன்னன்.

மன்னன் அவ்வாறு நீதிக்குத் தக நடந்துகொண்ட போதிலும் அரசி அவ்வளவு எளிதாகத் தன் மகனது மரணத்தை அறம் தவறியமைக்குக் கிடைந்த நியாயமான தணடனை என எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. மகனின் மரணத்திற்குக் காரணமானவளாகத் தன்னால் கருதப்படும் மணிமேகலையை அவள் பழி வாங்கத் திட்டமிட்டாள்.

மன்னவனாயினும், இளவரசனாயினும், அரசியாயினும் அவர்களுக்கு மனக்குழப்பமும் துயரமும் ஏற்படும் காலத்தே தான் கற்றவற்றைத் தன் பேச்சாற்றலின் ஊடாக அவர்களுக்கு எடுத்துரைத்து ஆறுதல் அளிக்கும் அறிவும் தகுதியும் பெற்றவளான வாசந்தவை எனும் மூதாட்டி அரசியை அடைந்து அவள் துயர் நீக்க ஆறுதல் மொழி பகர்கிறாள்.

அரசியைக் குறிப்பிடும் இடத்தே “திருநிலக் கிழமைத் தேவியர்” என்பார் சாத்தனார். “நில உரிமை உடைய தேவியர்” என்பது பொருள். அரசிக்கு நிலக் கிழமை இருந்தது இதன் மூலம் சுட்டப்படுகிறது.

“தன் மண்ணைக் காக்கவோ, இல்லை பிறர் மண்னை வெற்றி கொள்ளவோ மேற்கொள்ளும் போரில் வீரச்சாவு அடைவதைத் தவிர மன்னர்க்கு மூப்படைந்து சாவது உட்பட வேறுவகை இறப்புகள் புகழுக்குரியன அல்ல. நின் மகனின் சாவு குறித்து எந்த ஆறுதல் சொல்லவும் என் நா எழவில்லை.  எனினும் அரசைக் காக்கும் மன்னனின் முன் உன் துயரை வெளிப்படுத்தாதே” என ஆறுதல் சொல்லி அகன்றாள் அந்த மூதாட்டி. ஆனால் அரசி அத்தனை எளிதாக ஆறுதல் அடையத் தயாராக இல்லை.

இதற்கிடையில் மணிமேகலை கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டாள். உரு மாற்றிக் கொள்ளவும், பறந்து செல்லவும் வரம் பெற்றவளான மணிமேகலை அப்படியெல்லாம் செய்யவில்லை.  மணிமேகலையை வஞ்சித்துத் தண்டிக்க மனம் கொண்ட அரசி, அரசனிடம் சென்று, “பிக்குணிக் கோலம் கொண்ட மணிமேகலையின் பின் சென்ற நம் மகன் அரசாளும் தகுதியற்றவன். காமனும் கண்டு மயங்கும் தன் இளமையைப் பிக்குணிக் கோலத்திற்குள் ஒடுக்கிக்கொண்டவளும், நல்லறிவு பெற்றவளுமான மணிமேகலை இருப்பதற்குச் சிறை தகுந்த இடமில்லை. சிறந்த நெறியுடையார்களையே மன்னர்கள் தன் பிள்ளைகளாகக் கருத வேண்டும். அப்படி இல்லாதோர் மறக்கப்பட வெண்டியவர்கள். அவளை இந்தச் சிறை நோயிலிருந்து விடுவி” எனக் கூறி அவளை வஞ்சகமாகத் தன் கைக்குள் கொண்டு வந்து அகன்றாள் அரசி. சிறையை “நோய்” எனச் சாத்தனார் குறிப்பிடுவது கவனத்துக்குரியது.

என்னோடு அவள் இருந்தாலும் இருக்கலாம் அல்லது தன்னோடு ஓட்டை எடுத்துக் கொண்டுத் தன் பிச்சை வாழ்வைத் தொடர்ந்தாலும் சரி எனச் சொல்லி அழைத்துச் சென்ற அரசி, மணிமேகலைக்கு பித்தேற்றும் மருந்தைப் புகட்டினாள். ஆனாலும் மறுபிறப்புணர்ந்தவளான மணிமேகலை தன் அறிவு நிலையை இழந்தாள் இல்லை. அடுத்து கல்லா இளைஞன் ஒருவனை அழைத்து மணிமேகலையை வல்லாங்கு செய்து அவளது இள முலைகளில் புணர்ச்சிக் குறிகளைப் பதித்துப் பின் அவளுடன் கூடியிருந்ததாகக் கதை பரப்புமாறு கூறி அவன் கைநிறையக் காசும் கொடுத்து அனுப்பினாள் அரசி. அவனைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ந்து கொண்ட மணிமேகலை மந்திரம் ஓதி ஆண் உருவம் அடைந்தாள். அதைக் கண்டு அஞ்சிய அவன் ஊரை விட்டே ஓடினான். அடுத்து அரசி, மணிமேகலைக்குத் தீரா நோய் எனவும், அவள் உணவு உண்ண இயலாதவள் ஆயினாள் எனவும் சொல்லி பட்டினி போட்டுச் சாகடிக்க முனைந்தாள். ஊணின்றி உயிர் வாழும் மந்திர  சக்தி உடையவள்  மணிமேகலை எனும் உண்மை அறியாத அரசி அந்த முயற்சியிலும் தோற்றாள்..

விம்மி நடுங்கிக் கலங்கிய அரசி, “என் மனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்க மாட்டாது தவநெறி மிக்க உனக்குச் சிறுமை செய்தேன். பொன்னை ஒத்தவளே பொருத்துக் கொள்வாய்” என மணிமேகலையைத் தொழுது நின்றாள்.

மணிமேகலை பேசத் தொடங்கினாள்:

“உன் மகன் உதயகுமாரன் முன்னொரு பிறவியில் ராகுலனாகப் பிறந்து என் கணவனாக வாழ்ந்த போது திட்டிவிடம் தீண்டி இறந்தான், அதைப் பொறாது நான் என்னுயிரையும் நெருப்பிலிட்டு அழித்துக் கொண்டேன். அன்று உன் இந்த இளவரசனுக்காக நீ எங்கே நின்று அழுதாய்? இப்போது அவன் எரிக்கப்பட்ட போது நீ அவன் உடலுக்காக அழுதாயா? உயிருக்காக அழுதாயா? உடலுக்கழுதாயானால் அந்த உடலைப் புறங்காட்டிலே எரித்தார்களே அவர்கள் யார்? உயிருக்காக அழுதாயானால் வினைப்பயனுக்குத் தக அவ்வுயிர் மீளவும் புகும் இடத்தை அறிந்து உணர்தல் உன்னால் இயலாதது. அன்பிற்குரிய உன் மகனின் அந்த உயிர் இன்று எந்த உடலில் உள்ளது என அறியாத நீ எல்லா உயிர்களிடமுமே அன்பும் இரக்கமும் கொண்டவளாக அல்லவா இருக்க வேண்டும்?

“பெருந்தேவியே! நின் மகனை வெட்டிக் கொன்ற கள்வன் காஞ்சனன் செய்ததைக் கேள். விருந்தினர்க்குச் சோறு படைக்க வந்த சமையற்காரன் தடுக்கி வீழ்ந்து சமைத்த உணவைக் கீழே கொட்டியதைப் பொறுக்காமல் அவனை வெட்டி  வீழ்த்தினான் முற்பிறவியில் உன் மகன். அந்தத் தீவினையின் பயன்தான் இப்பிறவியில் காஞ்சனனின் வாளால் இன்று வெட்டி வீழ்த்தப்பட்டது.

“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என நீ கேட்பாயானால் பூங்கொடியை ஒத்தவளே! அதையும் சொல்வேன்”

– எனக் கூறி உவவனத்தில் தான் மலர் கொய்யப் போனது தொடங்கி, கந்திற் பாவையின் உரையைக் கேட்டுத் தன் முற்பிறவிகளை அறிந்து தான் தெளிவடைந்தது ஈறாக உற்றது அனைத்தையும் ஒன்றும் ஒழியாமல் சொன்னாள் மணிமேகலை.

அவரவர் வினைப்பயனை அவரவர் அனுபவித்தே ஆக வெண்டும். இப்பிறவியில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையும். இதை உணர்ந்து உயிர்கள் அனைத்திடமும் சமமான அன்பு செலுத்த வேண்டும். எல்லாம் வினைப்பயன் என்கிறபோது தண்டித்தல், பழிவாங்கல், எந்தக் காரணங்களுக்காகவும் உயிர்களைத் துன்புறுத்துதல் ஆகியன ஆகாது என்பது பௌத்த அறம்.

(அடுத்து அரசிக்கு மணிமேகலை உரைக்கும் அறமும் சாவகம் சென்று ஆபுத்திரன் நாடடைதலும்)

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *