காந்தி ஒரு புதிரும் அல்ல  பழமைவாதியும் அல்ல

காந்தி ஒரு புதிர் 2   (முன் பதிவுத் தொடர்ச்சி; தன்னளவில் முழுமையானதாக இதைத் தனியேயும் படிக்கலாம்)                                         

பன்முக ஆளுமை என்பதற்கு ஒரு உச்சபட்ச எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் காந்தி. ஏதோ தம் வீட்டிலுள்ள ஒரு பெரியவரிடம் கலந்து ஆலோசிப்பதைப் போல மக்கள் அவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர். அத்தனை பணிகளுக்கும் மத்தியில் ஒவ்வொன்றையும் ‘சீரியசாக’ எடுத்துக்கொண்டு அவர் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதை வியப்பாகச் சுட்டிக் காட்டுவார் லூயி ஃபிஷர். பிரிட்டிஷ் அரசுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவர் தீவிரமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் யாரோ ஒருவர், “மக்கள் கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நீங்கள் ஏன் கண்டிப்பதில்லை?” எனக் கேட்பார். ‘யங் இந்தியா’ வில் ‘கேபினட் மிஷன்’ பற்றிய காந்தியின் அணுகல் முறை பற்றி ஒரு கட்டுரை இடம் பெறும். அடுத்த பக்கத்தில் மாம் பருப்பின் பயன்பாடுகள் பற்றி அவரே ஒரு குறிப்பு எழுதியிருப்பார். பசியாற்றுவதற்கும் உடல் நலத்திற்கும் அது மிகவும் நல்லது என்பார். அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ராம நாமம் பற்றியும் ஒரு குறிப்பு இருக்கும். ஏன் எருமைப்பாலைக் காட்டிலும் பசும்பால் நல்லது என்பது குறித்தும் இன்னொரு பக்கத்தில் ஒரு விளக்கம் இருக்கும்.

மக்களுக்கான அர்சியலைப்பற்றி மட்டுமல்ல அவர்களின் நல்வாழ்வு, அறம், பண்பாடு எல்லாவற்றையும் பற்றிய கரிசனம் கொண்டவராக காந்தி காட்சி தந்தார். கடலைக் கொட்டையின் பயன்பாடுகள் குறித்து அடிக்கடி ஏதாவது எழுதுவார். அவரது ‘ஹரிஜன்’ இதழில் அவர் எழுதும் கடிதங்களில் ஒன்று அரசியல் சுதந்திரம் பற்றியதாக இருக்கும். அடுத்த கடிதத்தில் இனிப்புகள் செய்வதர்கான சர்க்கரை ‘ரேஷனை’ குறைக்க வேண்டும் என எழுதி இருப்பார். மூன்றாவது கடிதம் குற்றச் செயல்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய மாற்றுச் சிந்தனை ஒன்றை முன்வைக்கும். அடுத்த கடிதம் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியா இராணுவம் வைத்துக் கொள்ளக் கூடாது என (!) அறிவுறுத்தும். ஐந்தாவது கடிதம் எக்காரணத்திற்காகப் பொய் சொல்வதையும் ஏற்க முடியாது என்பதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறியாக முன்வைக்கும்.

“அவர் மகாத்மா. துறவி. அரசியலும் பட்டாணிக் கடலையும் அவருக்கு ஒன்றுதான்” – என்பார் ஃபிஷர்.

உருளி எனும் ஊரில் அவர் தங்கியிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இன்னொருவர் இப்படி நினைவுகூர்கிறார்: காலையில் அந்தக் கிராம மக்கள் அவரைக் காண வருகின்றனர். இரவு அங்கு ஒரு வீட்டில் நடந்த திருட்டைப் பற்றி அவரிடம் முறையிட்டு என்ன செய்யலாம் எனக் கேட்கின்றனர் காந்தி மூன்று சாத்தியங்களை அவர்கள் முன் வைக்கிறார். “1. போலீசில் புகார் கொடுக்கலாம். ஆனால் அது போலீஸ்காரர்கள் உங்களிடம் லஞ்சம் பெறுவதில்தான் முடியும். 2. பயந்து கொண்டு சும்மா இருக்கலாம். ஆனால் அது கோழைத்தனம். 3. அந்தத் திருடன் எந்த அளவிற்கு ஒரு ‘கிரிமினலோ’ அதேபோல நாமும் ‘கிரிமினல்கள்’ தான். நீங்கள் உங்கள் மேலேயே ‘டார்ச்’ விளக்கை அடித்துப் பார்த்தீர்களானால் திருடனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஒரு டிகிரிதான் வித்தியாசம். அளவுக்கு மீறி சொத்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் திருடர்கள்தான்..”.

“லூசா நீ..?”- எனக் கேட்டு மக்கள் அகலவில்லை. கையெடுத்துக் கும்பிட்டு அவர் சொன்னதை ஏற்றுத் திரும்புகின்றனர்.

காந்தி ஒரு புதிர்.

எந்த அரசு அதிகாரமும் இல்லாத அவர் தன்னைப் பின்பற்றிய மக்களுக்கு ஒரு சுய கண்ணியத்தையும் சுய மரியாதையையும் அளித்தார். அதனூடாக அவர்கள் ஒரு கூட்டு அதிகாரம் (collective power) பெறவும், உணரவும் வழி வகுத்தார். அவரது அரசியலில் ‘முன்னணிப்படை’ (vanguard), மக்கள்திரள் என்கிற பிரிவினை இல்லை. பெரிய அளவில் மக்களை, அடித்தட்டு மக்களையும் பெண்களையும் அரசியல் களத்தில் இறக்கியவர் அவர். அதில் எல்லாத் தரப்பினரும் இருந்தனர். மாயவரத்தில் (மயிலாடுதுறை) அவர் தங்கியிருந்தபோது தேவதாசிகள் அவரை வந்து சந்திக்கின்றனர். அவர் அந்தத் தொழிலை விடுமாறு அவர்களுக்கு அறிவுரை சொல்லுகிறார்லவர்கள் தங்களின் கழுத்தில், காதில் கிடந்த தங்க நகைகளைக் கழற்றி அவரது அப்போதைய போராட்ட நிதிக்குப் பணிந்தளித்து அகல்கின்றனர்.

காந்தி முன்வைத்த எந்தக் கருத்தாக்கத்தையும் அதைக் குறித்த சொல்லிற்கு அகராதிகள் அளிக்கும் பொருளை வைத்துப் புரிந்து கொள்ள இயலாது. அவர் அந்தச் சொற்களின்மீது புதிய பொருள்களை ஏற்றி அவற்றை முற்றிலும் புதிய அர்த்தமுள்ள புதிய சொற்களாக முன்வைத்தார். அவை புதுப் பொலிவுடன் முற்றிலும் புதிய கருத்தாக்கங்களாக ஒளிர்ந்தன.

அவரது ‘அஹிம்சை’ வன்முறையைக் கைவிடுதல் மட்டுமல்ல. எதிரியை நேசித்தல் என்பதை அது நிபந்தனையாக்கியது. அது அன்பால் அவனை வெல்லுதலைப் பொருள் கொண்டது. நாம் நியாயத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும்போதும் யாரை எதிர்த்துப் போராடுகிறோமோ அவர் மீது பகையுணர்ச்சி (hostility) கூடாது; அவர்களை உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் காயப்படுத்த (hurt) கூடாது.

அவரது ‘புலனடக்கம்’ எனும் கருத்தாக்கம் விந்தைக் கட்டுவது மற்றும் புணர்ச்சியைத் தவிர்ப்பது மட்டுமல்ல. காம எண்ணங்களையே இதயத்திலிருந்து அகற்றுவது. காம உணர்வைத் தூண்டும் உணவுப் பொருள்களையே நீக்குவது. உணவு என்பது உடலில் உயிரைத் தக்கவைக்கத் தேவையான ஆகக் குறைந்த அளவாகவே இருக்க வேண்டும்.mahatma-gandhi-auction

‘திருடாமை’ என்பது பிறர் பொருள்களைக் களவு செய்யாமல் இருப்பது மட்டுமல்ல. அவசியத் தேவைக்கு மிகுதியாக நாம் வைத்துள்ள எல்லாமே திருடப்பட்டவைதான். “நாற்காலி இல்லாமல் உன் வேலையைச் செய்ய முடியுமானால் நாற்காலியை வைத்திருக்கவே கூடாது” – என்றவர் அவர்..

‘சுதேசி’ என்பது அந்நிய இறக்குமதித் துணிகளைப் புறக்கணிப்பது எனத் தொடங்கினாலும் பின்னர் எந்திரத்தால் உற்பத்தி செய்த துணிவகைகளையே தவிர்ப்பது என்பதாக மாறியது. பொதுவாக மனித உழைப்பைத் தேவையற்றதாக ஆக்கும்  எந்திரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதே சுதேசி என்பதன் பொருளாகப் பின் மாறியது. “சுதேசி என்கிற கருத்தாக்கத்தைப் பின்பற்றுபவர்கள் சத்தியத்திற்குப் புறம்பான எதையும் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்” –என்கிற நிலையை இறுதியில் எட்டியது (Kathrin Tridrick, Gandhi, A political and Spiritual Life).

என்ன இருந்தாலும் காந்தி தீண்டாமை உட்பட வருணாசிரமத்தை அங்கீகரிக்கும் இந்துமதத்தை ஏற்றுக் கொண்டவர்தானே என்று கேட்பது காதில் விழுகிறது. அவர் இந்துமதத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட எல்லோரும் அவரை ஏற்பதில்லையே. இந்த நாட்டை இந்து நாடாகக் கண்டவர்கள் அவரைக் கொன்று தீர்த்தார்களே அது ஏன் என்கிற கேள்வியையும் நாம் கூர்ந்து ஆராய வேண்டும்.

எல்லாவற்றிலும் தன் கருத்தை ஏற்றி அவற்றை அவற்றின் ‘ஒரிஜினல்’ அடையாளம் தெரியாமல் புதிதாக்கினார் காந்தி. அவரது இந்து மதம் எல்லோரும் புரிந்து கொண்ட இந்து மதமல்ல. அது காந்தியின் இந்துமதம் என்பார் டெர்செக் (Donald J Terchek, Struggling for Autonomy, p.57). காந்தியின் அஹிம்சை, காந்தியின் சுதேசியம் என்பதுபோலவே அவர் முன்வைத்த அந்த மதம் காந்தியின் இந்துமதமாக இருந்ததும் அது மற்ற யாருடைய இந்து மதத்தைக் காட்டிலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரவியதும்தான் அன்றைய கோட்சேக்கள் முதல் இன்றைய மோகன் பகவத்கள் வரை அவரை ஏற்க இயலாதவர்களாக ஆகிவிட்டது.

அப்படி என்ன அவர் இந்து மதத்திற்குப் புதிய விளக்கம் அளித்தார்? இங்கு நாம் காந்தியச் சிந்தனையின் integrity பற்றிச் சற்றே சிந்திப்பது அவசியம். அப்போதுதான் எல்லோரும் நினைப்பதுபோல அவர் முரண்பாடுகளின் மூட்டை அல்ல என்பது விளங்கும். அவரது சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒருங்கிணைந்தவை. அரசியல், அறவியல், மதவியல்… என காந்தியச் சிந்தனையின் அனைத்து அம்சங்களும் முரணற்றவை. ஒன்றை ஒன்று பலப்படுத்துபவை.

ஆலய வழிபாடு தொடங்கி அவர் காலத்திய இந்து மதம் முன்வைத்த பல மரபுகளை காந்தி ஏற்றுக் கொண்டதில்லை. அவரது இந்து மதம் மூடுண்டது அல்ல; அது திறந்த ஒன்று. வளைந்து கொடுக்கக் கூடிய (resilient) ஒன்று. அதனாலேயே இந்து மதம் என்னை ஈர்க்கிறது என்றார்.

“நான் இந்து எனச் சொல்லிக் கொள்வதில் ஏன் பெருமை அடைகிறேன் என்றால் இந்து என்ற அந்தச் சொல்லாக்கம் (that term) சகிப்புத் தன்மை மிக்கது மட்டுமல்ல, இந்தப் பூமியின் நாலா திசைகளிலும் தோன்றிய இறைத்தூதர்களின் (prophets) போதனைகள் எல்லாவற்றையும் அதற்குள் நாம் இணைத்துக் கொள்ள (assimilate) முடிவதாகவும் உள்ளது” (Statement to Press, Nov 04, 1932, Collected Works 51:145) எனப் பத்திரிகையாளர்கள் முன் பிரகடனப் படுத்தியவர் அவர். ஆம், இந்து மதத்திற்கென இறுக்கமான, கை வைக்க இயலாத ஒற்றைப் புனித நூல் அல்லது ஒரே இறைத் தூதர் அல்லது அவதாரம் இல்லை என்பதை காந்தி இந்து மதத்தின் குறைபாடாக அன்றி  மிகவும் சாதகமான ஒன்றாகப் பார்த்தார்.

அப்புறம் சுட்டுக் கொல்லமாட்டார்களா? ஆம், தனது கொலைகாரர்களுக்கும் ஒரு நியாயத்தைத் தந்துவிட்டுப் போனவர்தான் காந்தி.

“இந்துமதத்தில் எவை எல்லாம் தவறானவை எனத் தான் கருதுவதை எல்லாம் அவர் தாக்கினார். பெண்களின் நிலை, தீண்டாமை, பிராமணர்கள் வகித்த பங்கு, சடங்குகள் முதலியன அவரால் மறுக்கப்பட்டவைக்குச் சில எடுத்துக்காட்டுகள். இந்து மத வரையறையின் அடிப்படைக் கூறுகள் எனக் கருதப்படாத அஹிம்சை முதலான சில கொள்கைகளை, அவையே அதன் மையைக் கோட்பாடுகள் என உயர்த்திப் பிடித்தவர் அவர். அற உணர்வு (conscience), அன்பு (love) முதலான சில கருத்தாக்கங்களை பிற மரபுகளிலிருந்து இறக்குமதி (import) செய்து அவற்றை இந்து மதத்தின் பிரிக்க இயலாத கூறுகளாக அவர் முன்வைத்தார். இத்தகைய புத்துருவாக்கங்களின் ஊடாக களச் செயல்பாட்டை நோக்கிய ஆன்மீகம் என்கிற ஒரு புதிய பார்வையைத் (vision) தந்தார்; இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் புதிய ‘இந்துயிசத்தை’ (Hinduism) இந்தியாவின் சமூகச் சீர்திருத்தம் மற்றும் அரசியல் அணிதிரட்டல்கள் ஆகியவற்றிற்கான ஒரு கருவியாக ஆக்கினார்” என்கிறார் டெர்செக் (Donald J Terchek. op.cit).

டெர்செக்கின் இந்த மேற்கோளின் கடைசி வாக்கியம் முக்கியமானது. காந்தி இப்படியாகச் செய்த மாற்றங்களின் ஊடாக அவர் ஏதொரு ஆன்மீகப் பிரச்சாரத்தையும் என்றும் மேற்கொண்டதில்லை. முழுக்க முழுக்க அவர் அரசியல் அணிதிரட்டலுக்கும் இந்து சமூகச் சீர்திருத்தத்துக்கும் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தினார். அவர் அரிஜன ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியபோதும், “பசு எனக்கு தெய்வம்தான். ஆனால் அது எப்படி இன்னொருவருக்கும் தெய்வமாக இருக்க முடியும்” எனக் கேட்டு பசுவதைத் தடைச்சட்டம் ஒன்றை அவரது வாழ்நாளில் இயற்றவிடாமற் செய்தபோதும்தான் இந்து மத பீடங்கள் ஆடின; சுதந்திர இந்தியாவை இந்து நாடாக ஆக்க முயன்றவர்கள் ஆத்திரம் கொண்டனர். சுட்டும் தீர்த்தனர்.

நன்கு யோசித்துப் பார்த்தால் காந்தியிடம் எந்தப் புதிரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ல முடியும். அவர் ஒரு திறந்த புத்தகம். அவரைவிட வெளிப்படையாக இருந்தவர் யாருமில்லை.

சமாதானத் தேவதையாகவும் பிரிட்டிஷ் அரசைக் கலங்க அடித்தவராகவும் கொண்டாடப்படும் அவர்தான் தென் ஆப்ரிகாவில் இருந்தபோது அங்கு நடந்த போயர் மற்ரும் (1899-1902), ஸூலு (1906) யுத்தங்களின் போது இந்திய ஆம்புலன்ஸ் படையை (Indian Ambulance Corps) அமைத்து பிரிட்டிஷ் இராணுவத்தில் ஒரு சார்ஜன்ட் மேஜராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சம்பரான் சத்தியாக்கிரகம் (1917), கெடா சத்தியாக்கிரகம் (1918) முதலானவற்றில் ஏராளமான அடித்தள மக்களையும் விவசாயிகளையும் மத வேறுபாடுகளைத் தாண்டி ஒருங்கிணைத்து பிரிட்டிஷ் ஆட்சியைக் கதிகலங்கடித்த அவர்தான் கெடா சத்தியாக்கிரகப் போராட்டம் முடிந்த கையோடு முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுப் படைக்கு ஆள் திரட்டினார். குஜராத்தின் கோத்ரா இன்று வேறொரு காரணத்திற்காக எல்லோருக்கும் தெரிந்த ஒரு நகரம். அங்கு பெருந்திரளாக உள்ள தாக்கூர்கள் மத்தியில் 1918, ஏப்ரல் 16 அன்று தனது இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணியை விளக்கிப் பேசி, நாடகம் ஒன்றையும் நடத்தி போருக்கு ஆதரவாக நிதி திரட்டிய வரலாற்றை முதல் உலகப் போர் குறித்து விரிவாக எழுதியுள்ள வேதிகா கான்ட் பதிவு செய்கிறார் (Vedica Kant, India and the First World War – “if I Die Who Will Remember Me”). இன்றும் புனேயில் உள்ள இந்திய இராணுவ மருத்துவமனையில் இராணுவ உடையுடன் கூடிய காந்தியின் புகைப்படத்தை நாம் காண முடியும். காந்தியை வியந்த ஏராளமான ஐரோப்பிய அறிஞர்களுள் ஒருவரான பாதிரியார் சி.எஃப் ஆன்ட்ரூஸ் இதற்காக காந்தியைக் கடுமையாக விமர்சித்தது பிரசித்தம்.

முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் நிலைபாட்டை அன்றைய இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஆதரிக்கத்தான் செய்தனர். ஆனால் பதிலாக எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல் பிரிட்டிஷ் அரசின் போருக்கு ஆதரவாக நின்றது காந்தி மட்டுமே என வேதிகா கூறுவது குறிப்பிடத் தக்கது. அன்றைய உலக அரசியல் சூழலில் பிரிட்டனின் பக்கமே நியாயம் இருப்பதாக உணர்ந்தது, எதிரியை வெறுக்காமல் நேசிப்பது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தது ஆகியவற்றின் விளைவுதான் காந்தியின் அந்த அன்றைய நிலைபாடு.

காந்தியைச் சரியாக விளங்கி கொண்டால் அவரிடம் எந்தப் புதிரும் இல்லை.

அவர் பழமைவாதியும் இல்லை. அவர் மிகவும் நவீனமான சிந்தனைகளைத் தாங்கி இருந்தவர். அவரை ஆக நவீனமான பின்நவீனத்துவ அரசியலைச் செய்தவர் என்றும் ஒரு ஆய்வு நூலுண்டு (Lloyd I Rudolph, Susanne Hoeber Rudolph, Post Modern Gandhi, OUP, 2006). நவீனத்துவத்தின் (modernism) மீது விமர்சனம் வைத்து அது எத்தனை வன்முறையானது என்பதை உலகிற்குச் சுட்டிக் காட்டியது பின்நவீனத்துவம் (Post Modernism). காந்தியும் தன் வாழ்நாள் செய்தியாக அதைத்தான் உலகிற்குத் தந்து சென்றார் என்கின்றனர் இந்த இந்தியவியல் ஆய்வாளர்கள். நவீன உலகு, இன்றைய உற்பத்திமுறை, அவற்றின் மீதான மக்களின் மோகம் ஆகியன பற்றிய கடுமையான விமர்சனமாக அமைந்த காந்தியின் Hind Swaraj நூல்தான் (1909) உலகளவில் நவீனத்துவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதல் என்கின்றனர் இத்தம்பதியர். இடுப்பில் கட்டிய ஒரு துண்டுத் துணியும் கையில் ஒரு குச்சியுமாய்க் காட்சியளித்த அந்த மனிதனை ஒரு மரபுவாதி அல்லது பழமைவாதி என நினைப்பதுபோல அபத்தம் ஏதுமில்லை என்கிற முன்னுரைப்புடன் அவர்கள் தமது நூலைத் தொடங்குகின்றனர்.

இன்னொரு பக்கம் காந்தியை ஒரு “அராஜகவாதி” (anarchist) என வகைப்படுத்துபவர்களும் உண்டு. அரசதிகரத்தின் ஊடாகக் கட்டமைக்கப்படும் ஒழுங்கின் உள்ளார்ந்த வன்முறையைச் சுட்டிக் காட்டும் அணுகல்முறையைத்தான் ‘அராஜகம்’ என்பர். காந்தி குறைந்தபட்ச அரசு என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தவர். அரசை அவர் “ஒரு தவிர்க்க முடியாத தீமை” எனவும், “எவ்வளவுக்கெவ்வளவு அரசு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது” எனவும் கூறியவர். காந்தியின் குரு எனக் கருதப்படுகிற டால்ஸ்டாயும் ஒரு அராஜக மரபில் வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

காந்தி எதிர்ப்பு என்பது காந்தியைப் புரியாமை, மற்றும் புரிந்துகொள்ள முயற்சிக்காமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களால் சமகாலத்தில் பெரிதும் நேசிக்கப்பட்டவர்களை ஒட்டு மொத்தமாக நாம் பார்க்க வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் ஊடாக மட்டும் அவர்களை மதிப்பிட்டுவிட முடியாது என்பதற்கு காந்தி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காந்தியைப் பயின்றால் அவர் புதிரும் இல்லை, அவரிடம் முரண்களும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *