பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்

(ஆக 03. 2018 அன்று MEIPPORUL.IN ல் வெளிவந்தது)

மாடுகளைக் கடத்துகின்றனர், கொல்லுகின்றனர், மாட்டுக் கறி வைத்திருக்கின்றனர், சாப்பிடுகின்றனர் எனக் காரணம் சொல்லி, அப்படிக் குற்றம் சாட்டப்படுபவர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது இன்று நம்முன் ஒரு முக்கியக் கவலைக்கும் அச்சத்துக்கும் உரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. தற்போது இந்திய அளவில் ஆங்காங்கு நடைபெறும் இந்த வன்முறைகளையும் கொலைகளையும் வெறும் மதக் கலவரங்கள் அல்லது எப்போதாவது நடக்கும் மற்ற கும்பல் வன்முறைகளுடன் சமப்படுத்திவிட இயலாது. இவை உயிர் பறிப்புக் கொலைக் குற்றங்கள் மட்டுமல்ல. பல வகைகளில் இவை தனித்துவமானவையாகவும் கவலைக்குரியவையாகவும் அமைகின்றன.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஆங்காங்கு மதக் கலவரங்கள் நடைபெற்று வந்துள்ளன. பெரிய அளவில் சொத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு அவை காரணமாகியுள்ளன.  குறிப்பான அரசியற் சூழல்களில், குறிப்பான காலங்களில், குறிப்பான அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் அவை வழிநடத்தப்பட்டுள்ளன. விநாயக சதுர்த்தி ஊர்வலங்களை முன்வைத்து சில ஆண்டுகளுக்குமுன் திருவல்லிக்கேணியிலும், தொடர்ந்து முத்துப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நடைபெறும் வன்முறைகளும், சில ஆண்டுகளுக்கு முன் கந்தமால் (ஒடிசா), மங்களூர் (கர்நாடகா) முதலான இடங்களில் நடைபெற்ற வன்முறைகளும் இவ்வகையில் அடங்குபவை. நரேந்திர மோடியின் ஆளுகையில் குஜராத்திலும் (2002), இந்திரா காந்தி கொலையை ஒட்டி டெல்லியிலும் (1984) நடைபெற்ற கலவரங்களும் இவ்வகையில் அடங்குபவை. இவை ஒருவகையில் அடையாளம் காட்டக்கூடிய குறிப்பான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை.

ஆனால் இன்று பசுவின் பெயராலும் மாட்டிறைச்சியின் பெயராலும் நடக்கும் கொலைகள் ஒரு வகையில் decentralize செய்யப்பட்டு, பலவற்றில் எந்த ஒரு குறிப்பான மதவாத இயக்கத்தையும் அடையாளம் காட்ட இயலாத வகையில் ஆங்காங்கு தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுபவையாக இருக்கின்றன.

குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் அல்லது திருடர்களைக் கொல்வது, அல்லது அப்படி ஒருவரைக் கருதிக் கொல்வது என்பதும் இப்படிப் பல நேரங்களில் நடந்துவிடுகிறது என்ற போதிலும் அவை மாட்டின் பெயரால் நடத்தப்படும் கொலைகளைப் போல வீரச் செயல்களாகவோ பெருமைக்குரியவையாகவோ கருதப்படுவதில்லை. இவற்றின் ஊடாகப் “பசுவின் புனிதம்” போன்ற பழமைவாதக் கண்ணோட்டங்கள் அல்லது நம்பிக்கைகள் ஏதும் உறுதி செய்யப்படுவதும் இல்லை.

ஆனால் இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.

இப்படிக் குற்ற உணர்வு முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு குற்றமாக இது அரங்கேறுகிறது. இது யாருடைய வீட்டுக்குள்ளும் நடந்து, யாருக்கும் தெரியாத அளவிற்குத் தடயங்கள் மறைக்கப்படுகிற வழமையான குற்றம் அல்ல. ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு எல்லோர் முன்னாலும் அரங்கேற்றப்படும் ஒரு செயல்பாடு. கொன்றவர்களின் உடல்களை நகரத்திலேயே அதிக உயரமான கோபுரத்தில் தொங்கவிட்டுத் திரும்பும் அளவிற்கு இது பெருமைக்குரிய ஒரு நடவடிக்கை. அதற்குத் தோதாக தண்டனை விலக்குக் கலாச்சாரம் ஒன்று இத்தகைய கொலைகளுக்குப் பக்கபலமாக உருவாக்கப்பட்டுள்ளது. பசுக் கொலையாக இல்லாதபோதும் இத்தகைய நிலையை விளக்க இன்னொரு சமீபத்திய எடுத்துக்காட்டை இங்கே நினைவூட்ட இயலும். குஜராத் 2002 ல் முஸ்லிம்களின் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்குப் பழங்குடியினர் பயன்படுத்தப்பட்டதை அறிவோம். ‘டெஹல்கா’ இதழ் மேற்கொண்ட ‘ஸ்டிங்’ ஆபரேஷனில் ரிச்சர்ட் என்பவன் தான் எப்படி அந்த “பல்கீஸ் குட்டியை” பாலியல் வன்முறைக்குள்ளாக்கிக் கொன்றேன் என்பதை அத்தனை பேர் முன்னும் பெருமையோடு சொல்வான். சுற்றி அமர்ந்து கேட்டு ரசிப்பவர்களில் அவனது மனைவி, பெற்ற தாய் எல்லோரும் இருப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு துணுக்குறும், வெட்கப்படும் குற்றம் அல்ல. ஏனெனில் முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். அவர்களின் இருப்பை அழிப்பதில்தான் தனது இருப்பின் நியாயப்பாடு உள்ளதாக நம்பும் மனநிலை.

இவை குறிப்பான இலக்கை நோக்கிய வன்முறைகள் (targeted violence). பசுக்களின் பெயரில் நடத்தப்படும் கொலைகளில் அதிக அளவில் முஸ்லிம்களும், ஒரு குறிப்பிட்ட அளவில் தலித்களும்தான் அவற்றின் இலக்கு. இந்தக் கொலைகள் பொது வன்முறைகளிலிருந்து வேறுபட்டவை. இங்கே இலக்குகளுக்கான பொது அடையாளங்களும் வரையறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. அதற்குள் பொருந்தும் யாரும் இங்கே கொல்லப்படலாம். அதற்குத் தண்டனை கிடையாது. அது பெருமைக்குரிய செயல்பாடு. பலநேரங்களில் அது வாழ்க்கை ஏணியில், அரசியல் பதவிகளில் மேலேறப் பயன்படும் நடவடிக்கை.

“ஜீ! இவர்தான் ‘அந்த’ நடவடிக்கையை முன்னெடுத்துச் செஞ்சவரு”.. “ஓ! நீங்கதானா? வணக்கம் ஜி!”

இப்படி ஒரு கும்பல் வன்முறைக்குக் காரணமானவர் என்கிற ஏற்பு ஒருவர் மேல் நோக்கி நகர்வதற்கும் அதிகாரத்தை அனுபவிப்பதற்குமான உரிமம் ஆகிவிடுகிறது.

ஆனால் சட்டப்படி இது குற்றமாயிற்றே? சட்டப்படி இது குற்றம்தான் ஆனால் தர்மப்படி இது குற்றமல்ல. தர்மப்படி இது புண்ணியம். பெருமைக்குரிய செயல்.

இப்படிப் பசுவின் பெயரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளில் அப்படி ஒன்றும் அதிகம் பேர்கள் கொல்லப்படுவதில்லையே என்கிற கேள்வி எழலாம். உண்மைதான். குஜராத் 2002 அல்லது மும்பை 1992 ஆகிய வன்முறைகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர்களுக்கு மேலல்லவா கொல்லப்பட்டார்கள்? இங்கே கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று என்கிற அளவிலேயே இருந்த போதும் இந்தக் கொலைகள் குறியீட்டு முக்கியத்துவம் (symbolic) வாய்ந்தவை. சடங்கு (ritual) முக்கியத்துவம் கொண்டவை. இலக்காக்கப்படும் சமூக உறுப்பினர்களின் நெஞ்சில் அச்சத்தை விதைத்து, அதனூடாகப் பசுவை வணங்குவது, பசுஞ் சாணத்தையும், மூத்திரத்தையும் மருந்துகளாகவும் புனிதங்களாகவும் முன்னிறுத்துவது எல்லாம் நடந்து விடுகிறதே. சார்த்தர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

“பாசிசம் என்பது எத்தனை பேர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. அவர்கள் எப்படிக் கொல்லப்படுகிறார்கள் என்பதுதான் அதில் முக்கியம்.”

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று காவல் நிலையத்திலிருந்த ஒருவரை இழுத்து வந்து ஊர்வலமாகக் கொண்டு சென்று, போகும் வழியிலெல்லாம் அடித்தே இழுத்துச் சென்று எல்லோர் முன்னும் கொன்று தொங்கவிட்டுவிட்டு ஏதும் நடக்காததுபோல அமைதியாகத் திரும்புவதையும், அல்லது “இல்லை..இல்லை..அது ஆட்டுக்கறிதான்.. மாட்டுக்கறி இல்லை..” என ஒரு குடும்பமே கதறக் கதற ஒரு மனிதனை அவர்கள் முன் அடித்துக் கொன்று வீசி எறிந்துவிட்டுச் சென்ற ஒருவன் சிலமாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலை ஆகிக் கழுத்தில் மாலையுடன் ஊர்வலமாக வரும் காட்சியையும் ஒருகணம் கண்முன் கொணர்ந்து பாருங்கள்.

இவை இங்கே பாசிசம் துளிர்த்து நிற்பதன் அடையாளங்களன்றி வேறென்ன.

1880–1930 கால கட்டத்தில் அப்படித்தான் அமெரிக்காவில் சுமார் 1500 கருப்பின ஆப்ரிக்க அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களால் கொல்லப்பட்டனர். வெள்ளைப் பெண்களின் மீது பாலியல் கொடுமைகளுக்குக் காரணமாயிருந்தனர் அல்லது ஆடு மாடுகளைத் திருடுகின்றனர் எனப் பொய்க் குற்றம் சாட்டி அவர்கள் பொது வெளிகளில் கொல்லப்பட்டனர். அது மட்டுமல்ல. அப்படிக் கொல்லப்பட்ட கருப்பின மக்களின் உடற்பாகங்கள் வெற்றிச் சின்னங்களாகவும், வீரத்தின் சான்றுகளாகவும் (trophies) பெருமிதங்களோடு காட்சிப்படுத்தப்படவும் பட்டன. அது 19ம் நூற்றாண்டு. இது 21ம் நூற்றாண்டு. இப்போது இப்படியெல்லாம் இலக்காக்கப் படுபவர்களின் உடற்பாகங்களைக் காட்சிப்படுத்த முடியாது. அதனாலென்ன. கொல்லும் காட்சியை ‘வீடியோ’ எடுப்போம், பொதுத் தளங்களில் அவர்கள் கதறக் கதறக் கொல்லப்படுவதைச் சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவோம்.

இப்படியான மாட்டின் பெயரிலான கொலைகள் ஏன் இப்போது திடீரென அதிகமாகியுள்ளன? எல்லோரும் அறிந்த காரணந்தான். இப்போது இத்தகைய கொடூரக் குற்றங்களுக்காக ஒருவர் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவு. தண்டனை விலக்கு (immunity) என்பது அதன் உச்சநிலையில் செயல்படும் காலம் இது. அமித்ஷா வேண்டுமானால், “எங்கள் ஆட்சியைக் காட்டிலும் காங்கிரஸ் ஆட்சியில் இப்படிப் பசுக் கொலைக்காகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்” எனச் சொல்லி அதன் மூலம் “பிரச்சினை பசுவின் பெயரிலான கொலைகள் அல்ல; மாறாக யார் ஆட்சியில் எத்தனை கொலைகள் நடைபெற்றன என்பதுதான்” எனத் திசை திருப்ப முயற்சிக்கலாம். ஆனால் பெரிய அளவில் இப்படித் துணிச்சலாகக் கொல்வது என்பது மோடி ஆட்சிக்கு வந்தபின்தான் அதிகமாகியுள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இதற்கு ஒரே காரணம் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்கிற நம்பிக்கை கொலையாளிகளுக்கு ஊட்டப்பட்டு இருப்பதுதான்.

அதை நியாயப்படுத்த அவர்கள் கையாளும் முறை இன்னும் கொடூரமானது. அவர்கள் மனிதர்கள் என்றால்தானே அவர்களைக் கொல்வது குற்றம். அவர்களை மனிதர்களினும் கீழ்நிலையில் உள்ளவர்களாக முன்வைத்தால் அதன்பின் அது பெரிய குற்றமாகாது. அவர்கள் நம் சமூக அற ஒழுங்கிற்கு அப்பாற்பட்டவர்கள். நாம் எல்லவற்றிலும் மேலானவர்கள். நம்முடைய வழமைகள், தர்மங்கள், நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் வேறுப்பட்டவர்கள் அவர்கள். இந்த மனநிலை இன்று பரவலாக்கப்பட்டுள்ளது. வன்முறையை மேற்கொள்கிறவர்கள் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களைத் தம் சமூக அறங்களிலிருந்து தாழ்ந்த அறங்களைக் கொண்டவர்களாகக் கருதுகின்றனர்.

“இரண்டு சமூகங்களும் வெவ்வேறு அற ஒழுங்குகளுடன் வாழ்பவை. அவர்களின் அற ஒழுங்குகள் நம்மிலும் தாழ்ந்தவை. நாம் காலம் காலமாக வந்த ஒழுங்கைக் காப்பாற்றித் தக்க வைக்க நிற்பவர்கள். அதற்கு எவ்வகையிலும் குறைவும் அழிவும் நேராமல் கண்காணிக்கும் அறப் பொறுப்பு நமக்குண்டு. அவர்கள் அழிக்க வந்தவர்கள். நாம் காப்பாற்ற நிற்பவர்கள். அவர்கள் பசு ராட்சஷர்கள்; நாம் பசு இரட்சகர்கள்.”

அந்தவகையில் பசுவின் பெயரால் இன்று கொல்லப்படுபவர்கள் மனித நிலையிலிருந்தே தாழ்ந்தவர்கள் என்கிற நிலைபாட்டை கொல்பவர்கள் வந்தடைகின்றனர்.

இவ்வாறு கொல்லப்படுகிற சமூகம் மனித நீக்கம் (dehumanization) செய்யப்படுகிறது. அவர்களுக்கு “ஆள்நிலைத் தன்மை” (personhood) மறுக்கப்படுகிறது. அதாவது அவன் அல்லது அவளுக்கு ஒரு “ஆள்” (person) எனும் ஏற்பு வழங்கப்பட்டு, அந்த அடிப்படையில் ஒரு சமூக உறுப்பினருக்குரிய மாண்புகளான எல்லாவற்றிலும் சம உரிமை, பங்களிப்பு முதலியன மறுக்கப்படுகிறது.

இவ்வாறு “ஆள்” எனும் ஏற்பு மறுக்கப்பட்ட ஒருவரைக் கொலை செய்யும் குற்றச் செயல் அச்சமூகத்தின் புனித ஒழுங்கைக் காக்க வந்த ஒரு புனிதச் செயலாக மாறும் மாயம் நம் கண்முன் நிகழ்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *