அல்துஸ்ஸரின் அமைப்பியல் மார்க்சியம்

(கார்ல் மார்க்ஸ் 5  – கார்ல் மார்க்ஸ் 200 தொடரில் இன்று வெளிவந்துள்ள ஐந்தாம் கட்டுரை, மக்கள் களம், செப் 2017)

karl-marx-reading-louis-althusser-reading-capital-copy

ஃப்ரென்ச் மார்க்சியரும், ஃப்ரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து செயல்பட்டவருமான லூயி அல்துஸ்ஸர், கார்ல் மார்க்சின் மிகவும் ஆழமான சிந்தனைகள் பல நேரங்களில் அவரைப் பின்பற்றியவர்களாலும் கூடத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன எனக் கருதியவர். மார்க்சை எவ்வாறு வாசிப்பது என்பது அவரது முக்கியமான நூல்களில் ஒன்று. ‘வரலாற்றுவாதம்’, ‘கருத்துமுதல்வாதம்’, ‘பொருளாதாரவாதம்’ முதலான பல்வேறு தவறான அணுகல்முறைகளின் விளைவாக மார்க்சைப் புரிந்து கொள்வதில் பல தவறுகள் ஏற்பட்டுள்ளன என்பது அவரது வாதம். எடுத்துக்காட்டாக பொருளாதாரமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என மிகவும் எந்திரகதியாக எல்லாப் பிரச்சினைகளையும் பார்ப்பதால் விளையும் தவறுகளைச் சொல்லலாம். மார்க்சின் மிக முக்கிய பங்களிப்பான வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைச் சரியாகப்  புரிந்துகொள்ள வேண்டும் எனச் சொன்ன அவர், அதன் முதல் படியாக கோட்பாட்டளவிலும், செயல்பாட்டளவிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு ஏராளமாக எழுதிக் குவித்த மார்க்சின் சிந்தனைகளை மாற்றமில்லாத ஒரே முழுமையாகப் பார்ப்பதைக் கைவிட வேண்டும் என்றார். மார்க்சின் கருத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்களின் பால் அவர் கவனம் ஈர்த்தார். மார்க்சின் எழுத்துக்களை மிக்க கவனத்துடன் வாசித்தால் அவரது முக்கிய நூல்களில் ஒன்றான ‘ஜெர்மன் கருத்தியல்’ (The German Ideology, 1985) எனும் நூல் அவரது சிந்தனைப் போக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய புள்ளி என்பதை உணர முடியும் என அவர் குறிப்பிட்டார். “அறிவுத்தோற்றவியல் முறிவு” (epistemological break) என அவர் இந்தப் புள்ளியை விளக்கினார். அதற்குப் பின் மார்க்சின் சிந்தனைப் போக்கில் ஏற்படும் மாற்றத்தைப் புரிந்து கொள்ள ‘நுணுக்க வாசிப்பு’ (symptomatic reading) ஒன்றையும் அவர் முன்வைத்தார். இந்தச் சிந்தனையின்படி “அந்நியமாதல்” எனும் மார்க்சியக் கருத்தாக்கம் இந்த அறிவுத்தோற்றவியல் உடைவுக்கு முன்பட்ட ஒன்று. 1845 க்குப் பிந்திய, சிந்தனை முதிர்ச்சி மிக்க மார்க்சிடம் ‘அந்நியமாதல்’ கோட்பாட்டை முதன்மைப்படுத்திய இளம் மார்க்சின் அடையாளங்கள் இல்லை என்பது அல்துஸ்ஸரின் கருத்து.

எந்த ஒரு சிந்தனைப்போக்கிலும், செயல்பாட்டிலும் அவ்வக் காலகட்டத்தின் வரலாறு ஒரு முக்கிய போக்கு வகிக்கிறது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் ஒரு முக்கிய பங்களிப்பு என்பதை நாம் அறிவோம். அது மார்க்சின் சிந்தனை வெளிப்பாட்டிற்கும் பொருந்தும் என்பது அல்துஸ்ஸரின் கருத்து.

1818 ல் பிறந்தவர் மார்க்ஸ்.1845 க்கு முற்பட்ட இளம் மார்க்சின் காலத்தில் ஜெர்மானிய அறிவுச் சூழலில் மிகப் பெரிய செல்வாக்குடன் விளங்கிய சிந்தனையாளர்களாக இருந்தவர்கள் ஹெகலும் ஃபாயர்பாக்கும் என்பதைப் பார்த்தோம். ஒரு கோட்பாட்டை (thesis) இன்னொரு எதிர்க் கோட்பாடு (anti-thesis) மறுக்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று மறுப்பதென்பது இரண்டும் ஒன்றையொன்று அழித்துக் கொள்வதல்ல. மாறாக இந்த இரண்டிலிருந்தும் இரண்டுமல்லாத ஒரு மூன்றாவது கிளர்ந்தெழுகிறது (synthesis). இப்படித்தான் மனித சிந்தனையின் வளர்ச்சிப்போக்கை விளக்குகிறது ஹெகலின் இயங்கியல் கோட்பாடு. ஒரு சுருள் கம்பியைப்போல (spiral) இந்த வளர்ச்சி அமைகிறது. “முழுமையான உண்மையை” (absolute truth) நோக்கிய மேல் நோக்கிய வளர்ச்சி இது. இந்த முழுமையான உண்மைதான் ‘கடவுள்’ என்பது ஹெகல் முன்வைக்கும் கருத்து. மதம் மற்றும் மானுட சுதந்திரம் என்கிற எல்லைக்குள் நின்றது ஹெகலின் சிந்தனை.

“கடவுளுக்கான என்றென்றைக்குமான வாழ்வு” என்பது தன்னைக் கண்டடைவதே. கடவுளோடு தன்னை அடையாளம் காண்பதே. இந்த மேல்நோக்கிய நகர்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னிலிருந்து தானே ‘அந்நியமாதல்’ நிகழ்கிறது; இவ்வாறு அந்நியப்படுதல் மூலம் புதிதானதும் மேலானதுமான இன்னொரு அடையாளத்தை நோக்கி இந்த இயக்கம் நிகழ்கிறது. இத்தகைய இயக்கமே அதன் சுதந்திரமும், விடுதலையும் (freedom) கூட..” என்பார் ஹெகல்.

இதைத்தான் கருத்துமுதல் இயங்கியல் என்கிறோம். மதம், வரலாற்றுச் சூழலிலிருந்து அகற்றப்பட்ட மனிதம் (humanism), கருத்தின் மேல் நோக்கிய வளர்ச்சி, அதனூடாக நிகழும் அந்நியமாதல் ஆகியனவே ஹெகலியத்தின் அடிப்படைக் கூறுகள். சமூகம், சமூக அமைப்பு, வரலாறு ஆகியவற்றிற்கு இதில் பங்கில்லை என்பதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. ஹெகலின் இந்த இயங்கியலை மார்க்ஸ் வரலாற்றுக்குப் பொருத்தினார். ‘உடமைகள்’ என்கிற கருத்தாக்கம் இல்லாத புராதனச் சமூகம், தனி உடமைகள் தோன்றிய வர்க்க சமூகங்களான அடிமைச்சமூகம், நில உடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம் இறுதியில் பொது உடமைச் சமூகம் என்பதான ஒரு மேல் நோக்கிய வரலாற்று இயங்கியலை அவர் முன்வைத்தார். ஹெகலியச் சிந்தனைப் போக்கில் ‘மனிதம்’ என்கிற இடத்தில்  மார்க்ஸ் “மனித சமூக அமைப்பு” (social structure) என்பதை வைத்தார். இப்படி “அமைப்பு” என்பதற்கு மார்க்ஸ் அளித்த முக்கியத்துவத்தின் மீது அல்துஸ்ஸர் நம் கவனத்தை ஈர்த்தார்.marx

அன்று ஹெகலியச் சிந்தனை மீது இளைஞர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தனர். கடவுள், மதம், கருத்து என்கிற அடிப்படைகளில் சிந்தித்த ஹெகலின் சிந்தனை முறையைப் பின்பற்றிய “இளம் ஹெகலியர்கள்” கூட்டத்தில் இவற்றை எல்லாம் ஏற்காத ஃபாயர்பாக்கும்கூட  ஒருவராக அடையாளம் காணப்படும் அளவிற்கு அன்று ஹெகலியச் செல்வாக்கு மிகுந்திருந்தது. மார்க்சைக் காட்டிலும் 14 வயது மூத்தவரான ஃபாயர்பாக் ஹெகலிய அந்நியமாதல் கோட்பாட்டைத் தன் கடவுள் மறுப்புச் சிந்தனைக்குப் பயன் படுத்தினார். அந்த வகையில் இந்த இளம் சிந்தனையாளர்கள் ஹெகலை ஏற்றுக் கொண்டு அவரைத் தலைகீழாக்க முயன்றனர். கடவுள் என்று ஒன்று கிடையாது. அது மனித சிந்தனையின் ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே. மனிதரின் இந்தக் கண்டுபிடிப்பு இன்று மனிதரையே ஆள்வதாக ஆகிவிட்டது. மனிதர் தன்னிடமிருந்தே அந்நியமாக இது வழி வகுத்தது என்றார் ஃபாயர்பாக். மனிதன் இந்த அந்நியமாதலிலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டுமானால் மத மதிப்பீடுகளிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் தன்னை ஒரு இயற்கையான உயிரியாகக் கருதுவான், தன்னிலிருந்தே தான் அந்நியமான நிலையிலிருந்து விடுதலை அடைவான் என்றார் பாயர்பாக்.

ஆக அன்றைய ஜெர்மானியச் சிந்தனை அந்நியமாதல் என்பதைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது தெளிவு. கார்ல் மார்க்சும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பது அல்துஸ்ஸரின் கருத்து. “1844 பொருளாதார மற்றும் தத்துவக் கையெழுத்துப் படிகள்” (1844 Economic and Philosophical Manuscripts) எனும் மார்க்சின் புகழ் பெற்ற நூலில்தான் அவர் தனது அந்நியமாதல் எனும் கோட்பாட்டை முன் வைக்கிறார் என்பது கவனத்துக்குரியது. “…. மதத்தில் அதுதான் நடக்கிறது. எந்த அளவிற்கு மனிதன் (மேன்மையான எல்லாவற்றையும்) கடவுளுக்குரியதாகக் கொண்டு வைக்கிறானோ அவ்வளவுக்கு அவன் தன்னிடம் ஒன்றுமில்லாதவனாகிறான்..” என மார்க்ஸ் சொல்வது இந்தப் பொருளில்தான்.

ஆனால் மார்க்ஸ் ஹெகலுடனோ இல்லை ஃபாயர்பாக்குடனோ நின்று விடுபவரல்ல என்பதை நாம் அறிவோம். மார்க்சின் மிக முக்கியமானதும் சுருக்கமானதுமான படைப்பாகிய ‘Theses on Feuerbach’ ல் (1845) ஃபாயர்பாக்கின் இந்தச் சிந்தனையை வெறும் ‘கருத்து அடிப்படையிலான பொருள்முதலியம்’ (contemplative materialism) என அவர் ஒதுக்குவது குறிப்பிடத் தக்கது. தனது இயங்கியல் பொருள் முதலியச் சிந்தனைக்கு அது பொருந்தி வரவில்லை என்கிற அடிப்படையில் அவர் இப்படி ஃபாயர்பாக்கை ஒதுக்க வேண்டி இருந்தது. ஃபாயர்பாக் குறித்த 11 வது கோட்பாட்டில், “தத்துவவாதிகள் இதுவரை உலகை விளக்கிக் கொண்டிருந்தனர். இனி தத்துவத்தின் வேலை உலகை மாற்றுவதுதான்” எனக் கூறியதன் ஊடாக மார்க்ஸ் தன்னை ஃபாயர்பாக், ஹெகல் ஆகிய இருவரிடமிருந்தும் துண்டித்துக் கொள்வது நிகழ்கிறது.imagenes_althusser_825a5e92

இது நிகழ்ந்தது 1845 ல். அப்போதுதான் மார்க்சின் இன்னொரு முக்கிய நூலான ‘ஜெர்மன் கருத்தியல்’ (German Ideology) உருவாகியது. ஜெர்மானியத் தத்துவங்களை விமர்சித்து எழுதப்பட்ட இந்த நூலை மார்க்ஸ் உயிருடன் இருந்தவரை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. அது குறித்துக் கேட்டபோது, “அதை நான் என் புரிதலுக்காக எழுதினேன். (எனவே அச்சிடுவதற்குப் பதிலாக) எலிகளின் விமர்சனத்திற்கு விட்டுவிட்டேன்” எனக் கூறியது கவனிக்கத்தக்கது.

ஆக 1845 என்பது மார்க்சின் சிந்தனை முதிர்ச்சி பெறுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அதற்கு முன் ஜெர்மானியக் கருத்துமுதல் சிந்தனையின் தாக்கமே அவரிடம் கூடுதலாக இருந்தது. அதற்குப் பிந்திய “முதிர்ச்சி அடைந்த” மார்க்ஸ் அந்நியமாதல் என்கிற கருத்து முதல் தன்மையுடன் கூடிய கோட்பாட்டைக் கைவிட்டார் என்பது அல்துஸ்ஸரின் கருத்து. மனிதரைப் பிற உயிரிகளிடமிருந்து பிரித்து பிரக்ஞை பூர்வமாகச் செயலாற்றும் தனித்துவமான ‘இன உயிரியாக’ப் (species being) பார்ப்பது என்கிற இறுக்கமான பொருள்முதல் சிந்தனையுடன் கூடிய பிற்கால மார்க்சின் சிந்தனைகளின் அடிப்படையிலேயே மார்க்சின் ஒட்டுமொத்தச் சிந்தனைகளையும் நாம் வாசிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். ‘மூலதனத்தை வாசித்தல்’ (Reading Capital) என்பது அவரது முக்கிய நூல்களில் ஒன்று. ஜெர்மானியக் கருத்துமுதல் சிந்தனையை மார்க்ஸ் கைவிடுகிற இந்தப் புள்ளியைத்தான் அல்துஸ்ஸர் அவரது “அறிவுத்தோற்றவியல் முறிவு” என்கிறார்.

வெறும் மனிதாபிமான (humanist) அடிப்படையிலான சிந்தனையான ‘அந்நியமாதல்’ கோட்பாட்டிற்கு முதிர்ச்சியடைந்த மார்க்சின் எழுத்துக்களில் இடமில்லை என்கிற அல்துஸ்ஸரின் கருத்தை மறுப்பவர்களும் உண்டு. ஜெராஸ், வைல்ட் போன்ற சிந்தனையாளர்கள் மார்க்சின் பிற்காலப் படைப்புகளான ‘க்ரன்ட்ரிஸ்’, ‘புனிதக் குடும்பம்’, மூலதனத்தின் முதற் தொகுதி முதலானவற்றிலும் கூட அந்நியமாதல் கோட்பாட்டின் தாக்கங்கள் உண்டு என்கின்றனர். மனிதத் துயர்,  ஏழ்மை, சுரண்டல் முதலானவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள அநியமாதல் கோட்பாடு அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.

யாருடைய சிந்தனையிலும் முதிர்ச்சி ஏற்படுவதும், இளமைக்காலக் கருத்துக்கள் சற்று வளர்ந்தும்  மாறியும் வருவதும் தவிர்க்க இயலாத ஒன்று. 1845 க்கு  முன் மார்க்ஸ் ஒரு தத்துவ மாணவர் மட்டுமே. அதற்குப் பின்னும் அவர் தத்துவ விவாதங்களிலிருந்து விலகவில்லை ஆயினும், முதன்மையாக அவர் ஒரு முதலாளியத்திற்கு எதிரான போராளியாகவும், இயக்கவாதியாகவும் இருந்தார். அவரது ஆய்வுகளும் கூட முதலாளியத்தின் இயக்க விதிகளைக் கண்டறிவது என்பதாகவே இருந்தன. அந்த வகையில் அவரிடம் ஒரு சிந்தனை முறிவை அடையாளம் காட்ட முடியும் எனினும் மார்க்ஸ் ‘அந்நியமாதல்’ சிந்தனையை ஏற்றுக் கொண்டபோதும் கூட அது ஹெகல், ஃபாயர்பாக் ஆகிய இருவரிடமிருந்தும் வேறுபட்டும் இருந்தது. ஒரு முதலாளியச் சமூக அமைப்பில் மனிதர்கள் எவ்வாறு அந்நியமாக நேர்கிறது என்பதித்தான் அவரது ‘அந்நியமாதல்’ பேசியது என்பதையும் நாம் மறந்து விட இயலாது.

இனி அல்துஸ்ஸரின் இத்தகைய சிந்தனையின் இன்னொரு முக்கிய பங்களிப்பைக் காண்போம். “மனிதன்” என்பதைக் காட்டிலும் மனித சமூக “அமைப்பு” என்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் “அமைப்பு” (structure) என்கிற கருத்தாக்கத்திற்கு மார்க்ஸ் அளிக்கும் முக்கியத்துவத்தின்பால் கவனத்தை ஈர்க்கிறது அல்துஸ்ஸரிய மார்க்சியம். அந்த வகையில் அல்துஸ்ஸரின் அணுகல்முறையை “அமைப்பியல் மார்க்சியம்” (Structuram Marxism) எனவும் அவரை ‘மார்க்சிய அமைப்பியல்வாதி’ (Structural Marxist) எனக் கூறுவதும் உண்டு.

மார்க்சிய அமைப்பியல்வாதிகள் தனிமனித விருப்புறுதி, சுதந்திரத் தேர்வு, படைப்புத் திறன் ஆகியவற்றிற்கு முக்கியம் அளிப்பதில்லை. அவ்வக்கால சமூக அமைப்புகளே அனைத்திலும் முக்கியம் என்கின்றனர். இந்த அடிப்படையில் அவர்கள் அமைப்புகள் எவ்வாறு தம்மைத் தக்கவைத்துக் கொள்கின்றன என்கிற ஆய்விற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். “அரசு” எனும் அடக்குமுறைக் கருவி குறித்து லெனின் அளித்துள்ள விளக்கத்தை மேலும் ஒரு படி மேலுயர்த்துகிறது அல்துஸ்ஸரியம். ‘அரசு கருவி’ என்பது இங்கே இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அவை:

1.ஒடுக்குமுறை அரசு கருவி (Repressive State Apparatus) : இராணுவம், காவல் மற்றும் உளவுத் துறைகள் முதலியன இதில் அடங்கும்.

  1. கருத்தியல் அரசு கருவி (Ideological State Apparatus) : கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், சமூக மற்றும் பண்பாட்டுக் கருத்தியல்கள் முதலியன.

இத்தகைய கருத்தியல் கருவிகள் ஒரு அமைப்பைத் தக்கவைப்பதில் மிக நுணுக்கமாகச் செயல்படுகின்றன. இது குறித்த முக்கியத்துவத்தை கவனப்படுத்துவது மார்க்சிய அமைப்பியலின் சிறப்புகளில் ஒன்று. கருத்தியல் தொடர்பான முக்கியமான ஆய்வுகளுக்கு இது வித்திடுகிறது.

தவிரவும் பொருளாதார அடித்தளம், மேற்கட்டுமானம் என சமூக அமைப்பை செவ்வியல் மார்க்சியம் இரு கட்டுமானங்களாகப் பிரித்து பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனப் பார்ப்பது ‘சாதி’ போன்ற பல இதர முக்கியமான சமூக அடித்தளங்களைப் புறக்கணிப்பதற்கு ஏதுவாவதை நாம் அறிவோம். அமைப்பியல் மார்க்சியம் சமூக அமைப்பை மூன்று மட்டங்களில் பிரித்தணுகுகிறது. அவை:

1.பொருளாதாரம் : நமது தேவைகளுக்கான அனைத்து விதமான உற்பத்தி சார்ந்த  செயல்பாடுகளையும் இது குறிக்கிறது.

2.அரசியல் : கட்சிகள் மட்டுமின்றி சமூகத்தில் நிலவும் எல்லாவிதமான அமைப்புகளின் செயல்பாடுகளையும் இது குறிக்கிறது.

3.கருத்தியல்: தம்மையும் உலகையும் மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், மதிப்பிடுகிறார்கள், அணுகுகிறார்கள் என்கிற கருத்தாக்கங்களை இது குறிக்கிறது.

பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனப் பார்க்காமல் சமூகத்தில் நிலவும் அரசியல், கருத்தியல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தின் பால் கவனம் ஈர்க்கும் வகையில் அந்தக் களங்களில் நடத்தப்பட வேண்டிய போராட்டங்களை மார்க்சிய அமைப்பியல் கவனப்படுத்துவது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு (தனி) மனிதர் என்பதைக் காட்டிலும் (சமூக) அமைப்பு என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைப்பியல் மார்க்சியம் முதலாளித்துவம் போன்ற ஒரு அமைப்பு வீழ வேண்டுமானால் அந்த அமைப்பு நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்பதை ஒரு முக்கிய நிபந்தனை ஆக்குகிறது. அது வரை அந்த அமைப்பு தனக்கு எதிரான சிந்தனைகளை எல்லாம் மேலுக்கு வராமல் தடுக்கும் வல்லமை வாய்ந்ததாக உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது.

எனினும் இப்படி சமூக அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் தனி மனித முயற்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றிற்கான முக்கியத்துவம் இதில் மழுங்க அடிக்கப்படுகின்றது என்பது அமைப்பியல் மார்க்சியத்தின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம்.

(அடுத்த இதழில் மார்க்சியப் பொருளாதாரம் குறித்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *