அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)

 (இலங்கையில் வெளிவரும் வார இதழ் “மீள்பார்வை” யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்)

 

1) இந்திய அரசியலின் இன்றை நிலையை எப்படி நோக்குகிறீர்கள் அதன் எதிர்காலம் எவ்வகையில் அமையும் என கருதுகிறீர்கள்?

 

இன்றைய நிலை கவலைக்குரியதாகத்தான் உள்ளது. அமெரிக்கா -இஸ்ரேல் – இந்தியா என்பதாக ஒரு கூட்டணி உருவாகியுள்ளது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. ‘ஷங்காய் கார்பொரெஷன்’, அணிசேரா நாடுகள் (NAM) அமைப்பு போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளின் கூட்டமைப்பு முயற்சிகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. அப்படி ஆனதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சி போய் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அது ஆதரவாக இருக்கும் எனத் தமிழகத்தில் பேசி பாஜகவை  மறைமுகமாக ஆதரித்த தமிழ்த் தேசியர்கள் இன்று தலை கவிழ்ந்து கிடக்கின்றனர். இதர அண்டை நாடுகளுடனான, குறிப்பாக நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான உறவும் சீர்கெட்டுள்ளது. உள்நாட்டில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பாஜக ஆட்சி ஏற்பட்டபின் நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, GST வரி விதிப்பு முறை ஆகியவற்றின் பாதிப்புகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்குச் சொல்லொணா துன்பத்தை விளைவித்ததோடு அதனால் தேசிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனும் உண்மை இன்று மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. ஆனாலும் இந்த வெறுப்புகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள எதிர்க் கட்சிகள் போதிய திறமையுடனும் வலுவுடனும் இல்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, இடதுசாரிகளும் மாநிலக் கட்சிகளும் கூடப் பலமிழந்து கிடக்கின்றன. பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை ஊட்டி அதன் மூலம் அரசைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக செய்யும் தீவிர முயற்சிகளும் அவற்றின் விளைவான வன்முறைகள் அதிகரிப்பதும் மிக்க கவலை அளிப்பதாக உள்ளன.

 

2) இந்தியாவில் அண்மைக்காலமாக இந்துத்துவவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இது குறித்து.

 

இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியன. 1. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உலகளவில் இப்படியான நவ தாராளவாத, நவ பாசிச சக்திகள் மேலுக்கு வந்துள்ள ஒரு உலகளாவிய போக்கின் ஓரங்கமாகவும் இதை நாம் காண வேண்டு. செப்டம்பர் 11 (9/11) க்குப் பின் உலகளவில் மேற்கொள்ளப்படுகிற “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”, முஸ்லிம் வெறுப்பு முதலியன பா.ஜ.க வளர்வதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலயாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான வேட்கைகள், பொருளாதாரத்திலும் சிந்தனையிலும் ஓர் இடது சாய்வு, பஞ்ச சீலம்’ அணிசேரா நாடுகள் முதலான அறம் சார்ந்த அரசியல் கோட்பாடுகள், அணிசேர்க்கை முயற்சிகள் எல்லாம் இன்று அழிந்துள்ளன. இந்த உலகளாவிய பின்னணியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தையும் நாம் காண வேண்டும். 2. இரண்டாவதாக இதில் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் பா.ஜ.க எனும் அரசியல் கட்சிக்குப் பின்னுள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மிக மிக வலுவான கட்டமைப்பும் வலைப்பின்னலும். மதத்தின் பெயரால் அவர்கள் கட்டமைத்துள்ள எண்ணற்ற அமைப்புகள், அர்ப்பணிப்பு மிக்க தீவிரவாத சக்திகள், காந்தி கொலைக்குப் பின் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட காலத்திலும் கூடத் தம்மை அவர்கள் அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து வலுப்படுத்தி வளர்ந்த முறை ஆகியன அவர்களின் இன்றைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் இந்தத் தீவிரப் பணிக்கு இணையாக இங்கு எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் இன்று வேலை செய்யவில்லை. பல்லாயிரக் கணக்கான கல்வி நிலையங்கள், ‘சாகா’க்கள் எனப்படும் இராணுவப் பயிற்சிகள், ‘கர்வாபசி’ எனப்படும் மதமாற்றங்கள் என இயங்கும் அவர்களின் தீவிரப் பணிகளை எதிர் கொள்ள இங்கு யாருக்கும் மன உறுதியும் இல்லை. அதோடு இன்று வெளிநாடுகளில் பணி செய்யும் உயர்சாதி இந்தியர்கள் மத்தியில் உருவாகிவரும் ஒருவகைத் தொலைதூரத் தேசியம் (long distance nationalism) பெரிய அளவில் இவர்களுக்கு நிதி சேகரிக்கவும் உலக அளவில் ஆதரவு திரட்டவும் பயன்படுகிறது. இது குறித்து நான் மிக விரிவாக எழுதிவரும் கட்டுரைத் தொடரை (#இந்துத்துவமும்_சியோனிசமும்) என் முகநூல் பக்கத்தில் காணலாம்.

 

3) முத்தலாக் தீர்ப்பையும் அதற்கு பின்னாலுள்ள அரசியலையும் எப்படி பார்க்கிறீர்கள்?

 

முத்தலாக் முறை இங்கு முஸ்லிம் சமூகத்தில் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை. இதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. இவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்க்கு எதிரானவர்கள் அல்ல. குர்ரானிய நெறிமுறைகளுக்கு மாறாக ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லிக் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களின் நியாயங்களைத்தான் இவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இங்கொன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் கட்டுப்பெட்டித் தனமான ‘அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்’ உட்பட முஸ்லிம் உலமாக்களும் கூட யாரும் இபந்த்டி தொலைபேசி மூலம், தபால் மூலம் முத்தலாக் சொல்வதை எல்லாம் ஏற்பதில்லை. இருந்தாலும் ஆங்காங்கு இது ஒரு சிறிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது உண்மை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. கூடுதலாக நீங்கள் இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அமசம் என்னவெனில் இந்திய நீதிமன்றங்கள் பல காலமாகவே இந்த ஒரே நேர முத்தல்லாக்கைச் (Instant triple Talaq) சட்டபூர்வமானது என ஏற்பதில்லை. நீதிநெறிமுறை ஊடாக உருவாக்கப்படும் கோட்பாடாக (judicially evolved principle) இன்று இது செயல்பட்டு வருகிறது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் இதன் மூலம் உரிய நீதி வழங்கப்பட்டுள்ளனர். அதே போல முத்தலாக் சொல்லப்படும் பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என்பதையும் இந்திய நீதிமன்றங்கள் உறுதியாகக் கடை பிடித்து வந்துள்ளன. குடும்பத்திற்குள் பெண்கள் மீதான வன்முறை என்பதைப் பொருத்த மட்டில் எல்லோருக்கும் பொதுவான “குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட”த்தின் மூலம் முஸ்லிம் பெண்களும் நீதி பெற முடியும். இம்மாதிரியான பல வழக்குகளையும் தீர்ப்புகளையும் நான் எனது நூலிலும் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். பிரச்சினை என்னவெனில் கல்வியறிவும், விழிப்புணர்வும் மிகவும் குறைந்த முஸ்லிம் சமூகத்திற்குள் இப்படியான உரிமைகள் நடைமுறையில் இருப்பதை எல்லாம் முஸ்லிம் ஜமாத்கள், அரசியல் அமைப்புகள், மொத்தத்தில் முஸ்லிம் ஆண்களால் கீழே, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. அதனால்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரே நேர முத்தலாக்குகளும் இங்கே நடைமுறையில் இருந்தன. இதனால் சமூகத்தின் கீழ்த் தட்டில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக் கூடிய நிலை இருந்தது.

 

முஸ்லிம் வெறுப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து இயங்கும் பா.ஜகவின் ஒரு முக்கிய ஆயுதம் முஸ்லிம் தனி நபர் சட்டத்தை (Muslim Personal Law) ஒழித்துக் கட்டுவது. இங்கு சிவில் மற்றும் கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டங்கள் எல்லாம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதுதான். திருமணம், வாரிசு, வக்ஃப் சொத்துக்கள் முதலானவை மட்டும் தனி நபர்ச் சட்டத்திற்குள் வருகின்றன. அதையும் ஒழிப்பது என்பது முஸ்லிம்களின் அடிப்படை அடையாளத்தையே அழிப்பது என்கிற வகையில் இந்துத்துவத்தின் இந்த முயற்சியை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நடுநிலையாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் எதிர்த்து வருகின்றனர்.

 

இந்தப் பின்னணியில்தான் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண் தனக்கு அளிக்கப்பட்ட முத்தல்லாக்கிற்கு எதிராக ஒரு முஸ்லிம் பெண் ஒரு வழக்குரைஞரை அணுகினார். அவர் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். அவர் அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி பெற்றுத் தருவது என்பதற்கு அப்பால் தலாக் கிற்கே எதிராக அந்த வழக்கைத் தொடுத்தார். அவர் எதிர்பார்த்தபடி இதன் மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமானார். பா.ஜ.க அரசும் இதற்கு ஆதரவாகக் களத்தில் புகுந்தது. இதில் வெற்றி அடைந்தால் இதன் மூலம் முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தையே ஒழித்து விடலாம் என்பது அதன் கணக்கு.

 

ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு இப்போது வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: (அ) ஒரே நேர முத்தலாக் செல்லாது (ஆ) இந்தத் தீர்ப்பு முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தின் மீது பிற விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது (incobsequential) (இ) தனிநபர்ச் சட்டம் முதலான மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதோ மதம் தொடர்பான நடவடிக்கைகளில் நுழைந்து அவை சரி, தவறு எனச் சொல்வதோ நீதிமன்றத்தின் வேலை அல்ல – என்பன தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். ஆக இது உண்மையில் முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்கும் தீர்ப்புத்தான். இதன் மூலம் தனி நபர் சட்டங்கள் என்பன அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்கிற அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரே நேர முத்தலாக் செல்லாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். எனவேதான் முஸ்லிம் சட்ட வாரியமே இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது. மோடி அரசு இது ஏதோ தனக்கு வெற்றி எனச் சொல்லிக் கொள்வது தன் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்குத்தான்.

 

4) இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்புக்கள் அதிகரிப்பதற்கு பின்னாலுள்ள காரணங்கள் என்ன?

 

நான் ஏற்கனவே சொன்னவைதான். இதை உலகளாவிய ஒருவகை அரசியல் அற வீழ்ச்சியின் விளைவாகவும், இந்தியாவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் பின்னணியிலும் பார்க்க வேண்டும். கூடுதலாக உலகமயச் செயற்பாடுகளின் ஊடாக மத்தியதர வர்க்கம் ஊதிப் பெருப்பதும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. இவர்கள் மத்தியில் தேசப் பாதுகாப்பு / அதற்கு ஆபத்தாக பாகிஸ்தான் அருகமைந்திருப்பத /, அது ஒரு முஸ்லிம் நாடாக இருப்பது / இந்திய முஸ்லிம்கள் அதற்கு விசுவாசமாக உள்ளனர் என்பன போன்ற அடிப்படைவாதக் கருத்துக்கள் எளிதில் செல்லுபடியாகின்றன.

 

5) அண்மையில் நரேந்திர மோடி இலங்கை வந்தார். இப்பின்னணியில் இலங்கையில் இந்திய அரசியலின் தாக்கம் எந்தளவு தூரம் இருக்கும்?

 

போருக்குப் பிந்திய சூழலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்திய மூலதனத்தை விரிவாக்குவது, இலங்கை சீனாவுக்கு நெருக்கமாவதைக் கூடிய வரையில் தடுப்பது என்பனதான் மோடி அரசின் நோக்கம். அதற்கு மேல் தமிழர் நலனை முதன்மைப்படுத்தியதாக அவரின் அணுகல் முறை அமைவதற்கு வாய்ப்பே இல்லை. திரிகோணமலை துறைமுகக் கட்டுமானப் பணியில் பங்கு, திரிகோணமலை மற்றும் ஹம்பந்தோட்டாவில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பங்கு முதலியவைதான் இரண்டு நாடுகளுக்கும் இடையே முக்கிய பேச்சுப் பொருளாக அமைந்ததே ஒழிய போர்க் குற்ற விசாரணை, தமிழ்ப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுதல், காணாமற் போன தமிழர்கள் பற்றிய உண்மைகள், இலங்கை இந்திய ஒப்பந்த நிறைவேற்றம் ஆகியவை பேசப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மோடியின் வருகை மகத்தான வெற்றி எனவும் இரண்டு பிரதமர்களுக்கும் இடையேயான ‘இரசாயனம்’ படு பிரமாதமாக ஒத்துப் போவதாகவும் இலங்கை அமைச்சர் சரத் அமானுகமா சொல்லியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஒன்றை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனி ஈழம் அமைய அது உதவாது. இலங்கை சிங்கள இனவாத அரசுகளுக்கே அது துணையாக அமையும். தனி ஈழம் பிரிந்தால் அது இந்தியா சிதைய ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பதே இந்திய அரசியலாரின் புரிதல். தமிழ் அல்லது இந்து எனும் அடையாளத்தின் அடிப்படையில் பா.ஜ.க அரசு தனக்கு உதவும் என எண்ணி ஈழத்தில் சிவசேனா போன்ற பெயர்களில் இந்து அடையாளங்களுடன் கூடிய அமைப்புகளை உருவாக்கும் மறவன் புலவார், யோகேஸ்வரன் முதலானோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் என்கிற அடிப்படையிலும் சிங்கள இனவெறிக்குப் பலியாகிறவர்கள் என்கிற அடிப்படையிலும் இணைந்து நிற்க வேண்டிய தமிழர்களும், முஸ்லிம்களும் பிளவுபடுவதற்கே இது இட்டுச் செல்லும். இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் சென்ற முறை இலங்கை வந்தபோது தமிழ்த் தலைவர்கள் அவரைச் சந்தித்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளவாறு வடக்கு – கிழக்கு மாௐஆணங்களின் இணைப்பை வற்புறுத்த வேண்டும் எனக் கோரியபோது என்ன நடந்தது? இனிமேல் இந்தியா அதை வற்புறுத்தாது என அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

 

6) இலங்கை அரசியலின் அண்மைக்காலப் போக்குகளை நீங்கள்  எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

போருக்குப் பிந்திய சூழலை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டும், இலங்கை அரசியலில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்திய அரசின் நோக்கங்கள், மற்றும் இன்றைய புவி அரசியல் சார்ந்த மாற்றங்கள் ஆகியவற்றைச் சரியாகக் கணக்கில் கொண்டு அரசியல் காய்களை நகர்த்துவதாக இன்றைய இலங்கை அரசியல், குறிப்பாக தமிழர்களின் அரசியல் இல்லை. மாறாக தேர்தல் அரசியல் சார்ந்த அபத்தங்கள், முரண்கள், பதவிப் போட்டிகள் என்பதாகத் தமிழர் ஒற்றுமை பலவீனமாகும் நிலையே உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய அதிகாரப் பகிர்வு மட்டுமின்றி போருக்குப் பிந்திய சூழலில் மேலெழுந்த எந்தக் கோரிக்கையிலும் பெரிதாக முன் நகர்வு இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி முப்பதாண்டுகள் ஆகியும் 13 வது சட்டத் திருத்தம் நிறைவேற வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை. இந்தத் திசையில் கடந்த ஓராண்டில் சில நகர்வுகள் தென்பட்டபோதும் இன்னொரு பக்கம் பவுத்த தலைமைப் பீடம் அதை வெளிப்படையாக எதிர்த்துள்ளதால் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த அமைப்பில் முன்னேற்றம் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் தமிழர்கள் மத்தியில் உறுதிப்படுவதைப் பற்றி இலங்கை அரசோ பவுத்தத தலைமையோ கவலைப்படுவதாக இல்லை.

 

7) சர்வதேச அரசியல் போக்குகள் குறித்து..

 

நான் முன்னரே சொன்னதுதான். சோவியத்தின் வீழ்ச்சி என்பது வெறும் சோவியத்தின் வீழ்ச்சியாக மட்டும் இல்லை. அறம் சார்ந்த அரசியலின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கத் தலைமையிலான NATO வுக்கு மாற்றாக அமைந்த COMECON, NAM எதுவும் இன்று இல்லை. லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் சற்றுத் தாக்குப் பிடித்தாலும் அவை பொருளாதார ரீதியாகப் பலவீனமாகவே உள்ளன. சோவியத்திலிருந்த பிரிந்த நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் கூட்டணியில் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை NATO வில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற வாக்குறுதியை மீறி இன்று அவை அதில் உள்ளடக்கப்படுவது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் கொல்லைப்புறம் வரைக்கும் இன்று NATO படைகளும் ஏவுகணைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பனிப்போர்க் கால முடிவுக்குப் பின்னும் கூட இன்னும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும்தான் உள்ளன. முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட அரபு எழுச்சி மிகவும் நம்பிக்கையூட்டத் தக்கதாகத் தொடக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இல்லை. மீண்டும் எகிப்தில் இராணுவ ஆட்சி; துருக்கியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு வேகமாக உள்ளது. நம் கண்முன் அழிந்து கொண்டுள்ள சிரியா இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள அற வீழ்ச்சியின் ஒரு பௌதிக வெளிப்பாடு. முஸ்லிம் நாடுகள் மத்தியில் அமெரிக்க ஏஜன்டாக இருந்து செயல்படும் சவுதி அரசின் செயல்பாடுகள் மிக ஆபத்தானவையாக உள்ளன. எனினும் உலக மயமான முதலாளியப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திப்பது தொடர்கிறது. முதலாளியம் நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகும் என்கிற மார்க்சின் கணிப்பு பொய்க்கவில்லை. தொழிலாளிகளின் தலைமையில் சோஷலிச அரசு என்பதுதான் இன்று பொய்த்துள்ளது.

 

8) அறிவுஜீவிகள் எவ்வளவு தூரம் சமூக ஊடகங்களை கையாள்கிறார்கள்?

 

சமூக ஊடகங்கள் நமது கால கட்டத்தின் ஒரு மிக முக்கியமான வளர்ச்சி. முதலாளித்துவ ஊடகங்களுக்கும் ஒரு வகையில் எதேச்சாதிகார அரசுகளுக்குமே கூட அது ஒரு மிகப் பெரிய சவால். உண்மைகளை இனி அவ்வளவு எளிதாக அதிகாரத்தின் துணை கொண்டு மறைத்துவிட இயலாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றின் மீதான கட்டுப்பாடு என்பதை நோக்கி இன்று அதிகாரங்கள் நகர்கின்றன. ஒரு ஜனநாயகப் படுத்தப்பட்ட ஊடகம் என்கிற வகையில் எளிதில் அது அக்கப்போர்களால் நிரம்புகிற ஆபத்தையும் நாம் கூடவே காண முடிகிறது. இந்த ஊடகங்களைச் சரியான வகையில் பயன்படுத்துவது என்பது நம் கையில்தான் உள்ளது. இதற்கான சரியான பயிற்சியை நாம் இளைஞர்களுக்கும் இயக்க அணிகளுக்கும் அளிக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் நிச்சயமாக இவை பயனுள்ள, சக்தி வாய்ந்த ஆயுதங்களாக நமக்கு அமையும்.

 

மிக்க நன்றிகள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *