மார்க்ஸின் அந்நியமாதல் கோட்பாடு

கார்ல் மார்க்ஸ் 200

{மக்கள்களம் இதழில் எழுதி வரும் தொடரில் நான்காம் கட்டுரை, ஆகஸ்ட் 2017}

மார்க்சீயம் என்பது ஒரு வளர்ந்து வரும் அறிவியல். அது மார்க்சோடு முடிவடைந்து விடவில்லை. ஆனால் மார்க்சீயவாதிகளில் பலருக்கு அப்படி ஒரு எண்ணமுண்டு. மார்க்சை ஒரு புனிதத் திரு உருவாகக் கட்டமைத்து எல்லாவற்றையும் மார்க்சே சொல்லிவிட்டார், அப்படி அவர் சொன்னவை மாற்றங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவை எனக் கருதுவதன் விளைவு அது. மார்க்ஸின் முக்கிய கோட்பாடுகலில் ஒன்றான ‘அந்நியமாதல்’ (alienation) குறித்து மார்க்சியரிடையே சென்ற நூற்றாண்டில் எழுந்த ஒரு முக்கிய சர்ச்சையைப் பார்ப்போம்.

கருத்துக்களின் உருவாக்கத்தில் பொருளாயத வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுதான் மார்க்சீயப் பொருள்முதல்வாதம் (Marxist materialism). அதாவது கருத்துக்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன, எல்லாவற்றையும் ஆக்குகின்றன என்பதாக அல்லாமல் நாம் வாழும் பொருளாயத வாழ்வின் (material life) ஊடாகவே கருத்துக்கள் உருவாகின்றன என்பது மார்க்சீயத்தின் அடிப்படைகளில் ஒன்று.

இந்தப் பொருள்முதல்வாதத்தையும் மார்க்சியம் இரண்டாகப் பகுக்கும். ‘இயங்கியல் பொருள்முதல்வாதம்’ (dielectical materialism), வரலாற்றுப் பொருள்முதல்வாதம்'(historical materialism) என இவற்றைச் சொல்வர். சமூகத்திற்குள் நிலவுகிற முரண்பாடுகள், அவற்றின் ஊடாக உருவாகும் தீர்வுகள் என சமூக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதம். இந்த அடிப்படையில் வரலாற்றை விளக்குவதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம். வரலாறுதோறும் உற்பத்தி நிலைமைகள் மாறிக் கொண்டே உள்ளன. மனிதர் தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ள உருவாக்கிக் கொள்ளும் கருவிகள், அவற்றின் ஊடாக அவர்கள் தம் அன்றையப் பொருளாயதத் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும்  முறைகள், அத்தகைய செயல்பாடுகளின் ஊடாக மனிதர்களுக்கிடையே ஏற்படும் உறவுகள் ஆகியவற்றின் ஊடாகத்தான் வரலாறு இயங்குகிறது.

பொருளாயத உற்பத்தி என்பது மனித வாழ்விலிருந்து பிரிக்க இயலாத ஒன்று. ஒரு காலத்தில் இரும்பின் பயன்பாடு, குதிரைகள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தி வேகமாக இயங்குதல் போன்றவை எல்லாம் மனிதர்க்குச் சாத்தியமில்லாமல் இருந்தன. அப்போது அவர்களின் தேவைகள் குறைந்த பட்சமாகவும், அவர்களுடைய உற்பத்தி என்பது அவர்களின் குறைந்தபட்சத் தேவைகளுக்கானதாகவும் மட்டுமே இருந்தது. தேவைகளே முழுமையாகப் பூர்த்தியாகாத நிலையில் உபரி உற்பத்தி (surplus production) என்பது சாத்தியமில்லை. எல்லோரும் சேர்ந்து உழைத்தார்கள், கிடைத்ததைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கிடையே நிலவுடமையாளர். பண்ணையடிமை அல்லது முதலாளி, தொழிலாளி என்றெல்லாம் வேறுபாடுகள் இல்லை.

கால ஓட்டத்தில் புதிய சாத்தியங்கள் உருவாகின்றன. இரும்பைப் பயன்படுத்தி மண்ணை உழுதும், தண்ணீரைத் தேக்கிப் பாசன வசதிகளை உருவாக்கியும் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும் என்பது நிறுவப்படுகிறது. இவ்வாறு புதிய உற்பத்திக் கருவிகள் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுக்குகின்றன. அப்போது உருவாகும் உபரி உற்பத்தி (surplus production) ஒரு சிலர் உழைக்காமல் எல்லாவற்றையும் அனுபவிப்பதற்கு வாய்ப்பை அளிக்கிறது. அப்போது பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் (social and political hierarchies) உருவாகின்றன. இவற்றை மார்க்சீயம் ‘வர்க்கங்கள்’ (classes) எனக் குறிப்பிடும். இப்படி வர்க்கங்கள், இருப்பவர், இல்லாதார் என்றெல்லாம் சமூகம் பிளவுறும்போது அவற்றுக்கிடையே முரண்கள் (contradictions) உருவாகும். இந்த முரண்களின் ஊடாகத் தோடர்ந்து வர்க்கங்களுக்கு இடையே மோதல்கள் (class struggle) நடைபெற்றுக் கொண்டிருக்கும். இவற்றின் ஊடாகத்தான் சமூகம் இயங்குகிறது, வளர்கிறது.

இந்த வரலாற்றுப் போக்கைச் சொல்வதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம். கார்ல் மார்க்ஸ் வரலாற்றை இப்படித்தான் விளக்கினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தக் கருவிகள், வர்க்கங்கள், வர்க்கங்களுக்கிடையே அமையும் உறவுகள் ஆகிய எல்லாம் வேறுபடும். எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் யோசிப்போம். நிலவுடமை முறையில் பண்ணையாருக்கும் பண்ணையடிமைக்கும் உள்ள உறவின் தன்மைகளும் முதலாளிய முறையில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள உறவின் தன்மைகளும் வேறுபடும். பண்ணையைடிமையுடன் ஒப்பிடும்போது ஒரு  தொழிலாளி சுதந்திரமானவராகவும் சுயமரியாதை உடையவராகவும் இருப்பார்.

இப்படியான ‘பண்ணை அடிமை முறை” (feudalism), முதலாளிய முறை (capitalism), அதற்குப் பின் வரக் கூடிய பொதுவுடமை முறை (communism), இவை எல்லாவற்றிற்கும் முந்தியதும், வர்க்க வேறுபாடுகளே தோன்றாததுமான ‘புராதனப் பொதுவுடமை முறை’ (primitive communism) ஆகியவற்றை உற்பத்தி முறைகள் (mode of production) என்று மார்க்சீயத்தில் குறிப்பிடுவர்.

நான் சொல்ல முற்பட்டது வேறு. இங்கு சொல்லிக் கொண்டிருப்பது வேறு. மார்க்சீயப் பொருளாதாரம் மார்க்சீயத் தத்துவத்திலிருந்து பெரிதும் பிரிக்க இயலாத ஒன்று. மார்க்சீயப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதற்கான சில அடிப்படைக் கருத்தாக்கங்கள் இவை என்பதால் இவற்றை மிகச் சுருக்கமாக இங்கே அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று.

இப்போது தொடங்கிய இடத்திற்குத் திரும்புவோம். வரலாறு தொடர்ந்து இயக்கத்தில் உள்ளது. எனவே எந்த ஒரு காலகட்டத்திற்கும் உரிய எந்த ஒரு நிகழ்வையும் புரிந்துகொள்ள அந்தக் காலட்டம் பற்றிய, அதாவது அந்தக் காலட்டத்தில் நிலவிய உற்பத்தி முறை, உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவை குறித்த புரிதல் அவசியம். சுருங்கச் சொல்வதானால் வரலாற்றுப் பின்னணி முக்கியம்.ஐந்த வரலாற்றுப் பின்னணி என்பது யார் ஆண்டார், அவர் யாரை வென்றார் அல்லது யாரிடம் தோற்றார் என்பவை அல்ல. மார்க்சியல் ஒரு காட்டத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலகட்ட உற்பத்தி முறையிலேயே கவனம் கொள்கிறது.

இப்படி முதலாளிய உற்பத்திமுறையின் பின்னணியில் மார்க்ஸ் முன்வத்த, மிகவும் சச்சைக்கு உட்பட்ட ஒரு கருத்துத்தான் ‘அந்நியமாதல்’ (alienation). மார்க்ஸ் இது குறித்து என்ன சொன்னார் எனப் பார்ப்பதற்கு முன் மார்க்சின் இந்தக் கருத்து மேலுக்கு வந்த பின்னணியை முதலில் பார்க்கலாம்.

Karl_Marx_by_ohyran[1]

முதல் உலகப் போருக்குப் பின் ருஷ்யாவில் புரட்சி வெடித்து அங்கே லெனின் தலைமையில் முதன் முதலாக மார்க்சீயச் சித்தாந்தங்களின் அடிப்படையிலான ஒரு சோஷலிச சமுதாயத்தைப் படைக்கும் முயற்சி தொடங்கியது. மார்க்சியம் எதிர்பார்த்ததைப்போல முதலாளியம் முற்றி அதன் முரண்பாடுகள் உச்சத்தில் நின்ற நாடுகளில் முதல் புரட்சி ஏற்படவில்லை. மாறாக ஒப்பீட்டளவில் வளர்ச்சியில் பிந்தங்கியிருந்த ஜாரிஸ்ட் ருஷ்யாவில் புரட்சி வெடித்ததை விளக்குவது மார்க்சீயருக்கு ஒரு பெருஞ் சவாலாக அமைந்தது. எனினும் உலகெங்கிலும் உள்ள மார்க்சீயர்கள் அனைவரும் மிக்க ஆர்வத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுகையில் இருந்த ருஷ்யாவின் வளர்ச்சிப் போக்கை நோக்கினர். மார்க்சியர் மட்டுமல்ல மகாகவி பாரதி போன்றோரும் வியந்து நின்றனர். ஆனால் போகப் போக உலகமெங்கிலும் உள்ள மார்க்சியருக்கு ஏமாற்றம் விளைவிப்பதாகத்தான் சோவியத் ருஷ்யாவின் போக்கு இருந்தது. இன்னொரு பக்கம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான மேலை நாடுகள் எதிலும் புரட்சியை நோக்கிய நகர்வு சாத்தியமில்லாமலே ஆனது. அங்கிருந்த பொதுவுடமைக் கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுவுடமைப் புரட்சி போன்ற முழக்கங்களை எல்லாம் கைவிட்டு ‘சமூக ஜனநாயகம்’ (social democracy) முதலான கருத்தாக்கங்களை முன்வைக்கத் தொடங்கின. இந்தப் பின்னணியில் உலகெங்கிலும் உள்ள  மார்க்சியச் சிந்தனையாளர்கள் பலரும் தாம் இதுகாறும் மார்க்சீயமாக நம்பி வந்தவற்றைச் சற்றே விமர்சனக் கண்ணோட்டத்துடன் நோக்கத் தொடங்கினர். அப்படி உருவான ஒரு போக்குத்தான் ‘மேலை மார்க்சியம்’ (Western Marxism).

ஆனால் மேலை மார்க்சியம் என்பது ஒரே தன்மையான ஒரு ஒற்றைப் போக்கு அல்ல. லூயி அல்துஸ்ஸர், வால்டர் பெஞ்சமின், பெர்டோல்ட் ப்ரெக்ட், ஃப்ரான்க்ஃபர்ட் பள்ளியினர், லூசியோ கொல்லெட்டி, அந்தோனியோ கிராம்ஸ்சி, நிகோஸ் பவுலன்ட்சாஸ்.. என ஒரு நீண்ட மார்க்சீய அறிஞர் பட்டியலொன்றை இதற்குள் அடக்க இயலும். இவர்களுள் கார்ல் மார்க்சின் ‘அந்நியமாதல்’ (alienation) எனும் கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர்களும் உண்டு. அதை மறுத்து அது ஒரு இளம் மார்க்சின் முதிர்ச்சியற்ற கருத்தாக்கம் என ஒதுக்கியோரும் உண்டு.

இப்போது அந்நியமாதல் குறித்த இருசாரரின் கருத்துக்களையும் சுருக்கமாகக் காண்போம்.

ஒரு முதலாளித்துவ சமூகத்தில் மனிதர்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களிலிருந்து அந்நியப்படுகின்றனர். பொருள்களிடமிருந்து மட்டுமின்றி அந்த உழைப்பு ஒழுங்கமைப்பிலிருந்தும்,, சமகால மனித உயிரிகளிடமிருந்தும், ஏன் தம் மனிட இயல்பிலிருந்துமே அந்நியப்படுகின்றனர் என்பதுதான் அந்நியமாதல் என்பதன் மூலம் மார்க்ஸ் முன்வைத்த கருத்து.

ஒரு முதலாளிய அமைப்பில் இயற்கை வளங்கள் தொடங்கி, கருவிகள், தொழிற்சாலைகள் ஆகியன மட்டுமே உற்பத்திச் சாதனங்களாகக் கருதப்படுவது தவறு. உழைப்பும் அங்கு ஒரு முக்கியமான உற்பத்திச் சாதனமாகிறது. ஒரு முதலாளியச் சமூகத்தில் தொழிற்சாலைகள், கருவிகள், இயற்கை வளங்கள் ஆகியவை மட்டும் முதலாளியின் தனிச் சொத்தாக (private property) அமைவதில்லை. தொழிலாளியின் உழைப்பும் (labour) கூட தொழிலாளிக்குச் சொந்தமில்லாமல் போய்விடுவதைத்தான் மார்க்ஸ் அந்நியமாதல் என்கிறார். தொழிலாளியின் வேலைக்கு அவருக்கு ஊதியம் கிடைக்கிறது என்கிறபோது எப்படி அதுவும் அவரிடமிருந்து அந்நியமாகிறது?

முதலில் அவர் உழைப்பிற்கு உரிய ஊதியம் கிடைக்கிறது என்பதே தவறு. அவருடைய உழைப்பின் மதிப்பைக்காட்டிலும் குறைந்த தொகையே அவரைச் சென்றடைகிறது என்பதைத் துல்லியமாக நிறுவினார் மார்க்ஸ். தொழிலாளியின் இந்த ‘உபரி உழைப்பு’ தான் (surplus labour) முதலாளியிடம் லாபமாகக் (profit) குவிகிறது என மார்க்ஸ் கணக்கிட்டுக் கூறியதை ஆவருக்குப் பின் யாரும் இதுவரை தவறு என நிறுவியதில்லை.

அது கூடக் கிடக்கட்டும். அவரது உழைப்பும் எவ்வாறு அவரிடமிருந்து அந்நியமாகிறது என்பதை ஆராய்வோம். மனிதர் என்போர் வெறும் வேலை செய்யும் எந்திரமோ, தொழிற்சாலைக் கருவிகளில் ஒன்றோ அல்ல. அவர் மற்றெல்லா உயினங்களையும் போல ஒரு உயிர்வாழ் உயிரி (biological being). எல்லா உயிர்களையும்போல அவரும் இயற்கையோடு ஊடாடி (interact), அதனூடாக இயற்கையையும் மாற்றி அமைகிறார். பின் எந்தப் புள்ளியில் மனிதர் தேநீக்கள் அல்லது சிலந்திகள் போன்ற உற்பத்தி செய்யும் பிற உயிரிகளிடமிருந்து வேறுபடுகின்றனர்? பிற உயிரிகள் அப்படித் தொழிலில் ஈடுபடுவதற்கு அவற்றின் உயிர்வாழ்வதற்கான இயற்கை உந்துதலே (instincts0 காரணமாகிறது. ஆனால் மனிதரோ பிரக்ஞை பூர்வமாகவும், தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் அதனைச் செய்கின்றனர். உணர்வுபூர்வமாக உலகை மாற்றுகின்றனர். அதன் மூலம் தங்களின் ‘மனிதசாரத்தை’ உணர்ந்து கொள்கின்றனர். மார்க்ஸ் மனிதரை species being எனச் சொல்வதன் பொருள் இதுவே. எது நம்மைப் பிற உயிரிகளிடமிருந்து பிரித்துக்காட்டுகின்றதோ அதை நாம் சுதந்திரமாக நிறைவேற்றும்போதே நாம் மனிதர் என்கிற உணர்வை அடைகிறோம். அது சாத்தியமாகாதபோது நாம் ஒரு தனித்துவமிக்க சுதந்திர உயிரி எனும் நிலையை இழக்கிறோம். இதையே மார்க்ஸ் ‘அந்நியமாதல்’ என்கிறார்.

இந்த அந்நியமாதல் எவ்வாறெல்லாம் நிகழ்கிறது?

depositphotos_6047473-stock-photo-karl-marx-stone-statue-chongqing

1.தொழிலாளிகள் சக மனிதர்களிடமிருந்து அந்நியமாதல்: முதலாளியச் சமூகத்தில் தொழிலாளிகள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுச் செயல்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கார்பொரேட் உலகில் இதன் உச்சகட்டத்தை நாம் நிரந்தரமாக அனுபவித்துக் கொண்டுள்ளோம். எப்படிப் போட்டி போட்டுக்கொண்டு பொருள்களை உற்பத்தி செய்வது அவற்றின் விலையைக் குறைக்கின்றதோ அதேபோல இங்கே உழைப்பு சக்தியின் மதிப்பும் வீழ்கிறது. இது அவர்களைப் பொருளாதார ரீதியாக வீழ்த்துவது மட்டுமல்ல, இது தொழிலாளிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் அந்நியமாக வழிவகுக்கிறது. மனிதர்கள் உலகை மாற்றுவோர். அதற்கு அவர்கள் மத்தியில் ஒத்துழைப்பு அவசியம். முதலாளியம் அவர்கள் மீது திணிக்கும் போட்டி அந்த ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் (solidarity) அழிக்கிறது.

2.தொழிலாளர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களிலிருந்தே அந்நியமாதல் : முதலாளிகள் உழைப்பதில்லை. தொழிலாளிகளின் உழைப்பால் உற்பத்தி செய்வதை விற்று அவர்கள் லாபம் கொழிக்கின்றனர். இவ்வாறு தொழிலாளிகளின் உழைப்பு அவர்களுக்கு எதிராக உள்ள முதலாளிகளுக்கு வளம் சேர்க்கவே பயன்படுகிறது. தாம் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நுகர்வோர்களாகவும் அவர்களமிருக்கின்றனர். அந்த வகையிலும் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். இன்னொரு பக்கம் இவற்றினூடாக முதலாளிகள் தொழிலாளர்களுக்கு எதிராக வலுவடைகின்றனர்.

3.தொழிலாளர் தம் உழைப்பு நடவடிக்கைகளிலிருந்தே அந்நியமாதல்: என்ன பொருள்களைச் செய்வது, அவற்றை எப்படிச் செய்வது, எத்தகைய சூழலில் அதைச் செய்வது என்பதையெல்லாம் முதலாளியே தீர்மானிக்கிறான். எனவே தொழிலாளிக்குத் தன் படைப்புத் திறனை வெளிப்படுத்த முழு வாய்ப்பும் இல்லாமல் உள்ளது. ஒரு நாற்காலியைத் தன் கற்பனைத் திறனுடன் செய்து முடிக்கும் ஒரு தொழிலாளிக்கும், ஆயிரம் நாற்காலிகளுக்கு ‘ஆர்டர்’ வாங்கி அதன் ஒரு ஒற்றைக் காலை மட்டும் நூற்றுக் கணக்கில் செதுக்கிப் போட ஆணையிடப்படும் தொழிலாளிக்கும் உள்ள ஒரு வேறுபாடுகளை விளக்க வேண்டியதில்லை. அப்படிச் செதுக்க நிர்ப்பந்திக்கப்படுபவர் தன்னை ஒரு படைப்பாளியாகவன்றி ஒரு எந்திரமாகவே உணர்கிறார். ஒரு முழு நாற்காலியைப் படைத்த திருப்தி அவருக்கு மறுக்கப்படுகிறது.

“மனிதன் தன்னைத்தானே வரையறுத்துக் கொள்வதற்கும், மானுட சுதந்திரத்திற்கும் அடையாளமாக உள்ள உழைப்புச் செயல்பாடு இங்கே உயிர்வாழ்வதற்காகத் தன்னைத் தானே கீழ்மைப் படுத்திக் கொள்ளும் ஒன்றாக மாறிவிடுகிறது…. இப்படியான செயற்பாடுகளில் ஒரு தொழிலாளி தன்னைத் தானே உறுதி செய்துகொள்வதற்குப் பதிலாகத் தன்னைத்தானே மறுத்துக் கொள்கிறான். திருப்தி அடைவதற்குப் பதிலாகத் துயரடைகிறான். அவனது உயிர் மற்றும் உடல் ஆற்றலைச் சுதந்திரமாக வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக அவன் தனது உடலையும் சிந்தையையும் அழித்துக் கொள்கிறான். ஒரு தொழிலாளி தன்னைத் தன் வேலைக்கு வெளியேதான் உணர்ந்துகொள்கிறான். வேலையின்போது அவன் தன்னையே தன்னிலிருந்து வெளியே காண்கிறான். வேலை செய்யாதபோதே அவன் இயல்பாய் உணர்கிறான். வேலை செய்யும்போது அவன் இயல்பாய் உணர்வதில்லை” என்பார் மார்க்ஸ்.

மார்க்சின் ‘அந்நியமாதல்’ கோட்பாட்டின் சுருக்கம் இதுவே. சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான ஒரு மார்க்சீயச் சிந்தனையாளரான லூயி அல்துஸ்ஸர் கார்ல் மார்க்சின் இந்த அந்நியமாதல் கோட்பாடு என்பது அவரது பிற்கால மார்க்சீயச் சிந்தனைகளோடு பொருந்தவில்லை எனவும் இந்தச் சிந்தனை 1845 க்கு முந்திய இளம் மார்க்சிடம் மேலோங்கி இருந்த ஹெகலிய சிந்தனையின் எச்ச சொச்சம்தான் எனவும், பிற்கால மார்க்ஸ் இதனை முதன்மைப்படுத்தவில்லை எனவும் மிக நுணுக்கமாக வாதிட்டதை இனி பார்ப்போம்.

(அடுத்த இதழில் அல்துஸ்சரின் மறுவாசிப்பும் அவரது ‘கருத்தியல் அரசு கருவி’ எனும் கோட்பாடும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *