இராணுவமயமாகும் இலங்கை

2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களைப் புறக்கணித்து தனது இனவாத ஒடுக்குமுறைகளை பௌத்த- சிங்களப் பேரினவாத அரசு எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை இந்த நூல் ஆழமாக முன்வைக்கிறது. நேரில் சென்று கண்ட அனுபவங்களின் பின்னணியில் இன்றைய இலங்கையைப் பேசும் இக் கட்டுரைகள் ஈழத் தமிழ் இதழ்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவை. மூன்றாவது முறையாக இலங்கை சென்றபோது கூட்டங்களில் பேசக்கூடாது என அ.மார்க்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம்.இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக்கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

வகுப்புவாத அரசியலுக்கு எதிரான மாபெரும் ஆவணமாகத் திகழும் இந்நூல் மதச்சார்பின்மை,சிறுபான்மையினர் பாதுகாப்பு,பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போரட்டம் எனப் பல தளங்களிலும் விரிந்து,நம் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல தவறான எண்ணங்களையும் பொய்களையும் அழுத்தமாக எதிர்த்துப் போராடுகிறது.புனைவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடிச் செல்கிறது.