மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) ஏன் ஒழிக்கபட வேண்டும்?

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் எவ்வித நியாயங்களும் இன்றி, கையில் எந்த ஆயுதமும் இல்லாத ஒரு தொழிலாளியை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையைச் (சி.ஐ.எஸ்.எஃப் )சேர்ந்த ஒரு படை வீரன் சுட்டுக் கொன்றதும், இதைக் கண்டிக்கத் திரண்ட தொழிலாளிகள் மீது தடியடி நடத்தப்பட்டதும் இன்று இன்னொரு மத்திய மாநில உறவுப் பிரச்சினை வடிவெடுக்கக் காரணமாகியுள்ளது.

சுட்டுக் கொன்ற சி.ஐ.எஸ்.எஃப் படை வீரனை இன்று தமிழகக் காவல் துறை, கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. ‘இராணுவ” அந்தஸ்துள்ள ஒருவரைத் தாங்களே விசாரித்துக் கொள்ள இயலும், எனவே தமிழக அரசு அந்தப் படை வீரனைத் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என சி.ஐ.எஸ்.எஃப் கோரும் என இப்போது எதிர்பார்க்கப் படுகிறது. இன்னொரு பக்கம் சி.ஐ.எஸ்.எஃப்பை நெய்வேலியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் இன்று பரவலாக எழுந்துள்ளது.

தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் அமைப்பாக உருப்பெற்ற ஒன்று இப்படியான ஒரு பிரச்சினைக்கு இன்று காரணமாகியுள்ள வரலாறு,, இந்திய அரசதிகாரத்தின் ஆக்டோபஸ் கரங்கள் எவ்வாறு படிப்படியாக விரிந்து பரவி வந்துள்ளது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் 1969 மார்ச் 10 அன்று வெறும் 2800 காவலர்களுடன் உருவாக்கப்பட்டது இந்த சி.ஐ.எஸ்.எஃப். முன்னதாக மத்திய அர்சுகுச் சொந்தமான தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கென இப்படியான சிறப்புப் படைகள் எதுவும் கிடையாது, 1969ல் இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் அன்றைய மத்திய உள்துறைத் துணை அமைச்சர் வி.சி.சுக்லா முன்மொழிந்தபோது, மாநிலப் போலீசின் சில அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளக் கூடிய இத்தகைய படை தேவை இல்லை என அம்முயற்சி எதிர்க் கட்சிகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது, எனினும் அரசு பிடிவாதமாக அதை நிறைவேற்றியது.

“தொழிற்சாலைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தொழிற்சாலைகளைப் பாதுகாப்பது” (protection and security) என்பது இச்சட்டத்தின் குறிக்கோளாக அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பதுதான் நோக்கமென்றால் .ஏன் இப்படி போலீஸ் அதிகாரம் உள்ள ஒரு படையை தொழிலகங்களுக்கு என ஏற்படுத்துகிறீர்கள் என்கிற கேள்விக்கு அரசு திருப்திகரமான பதில் எதையும் அளிக்கவில்லை.

பின் 1983 ஜூன் 15 அன்று மத்திய அரசு இச்சட்டத்தைத் திருத்தி சி.ஐ.எஸ்.எஃப்பை தனது “ஆயுதப் படைகளில்” ஒன்றாக (armed force of the union) அறிவித்துக் கொண்டது. வட கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டு வரும் போராட்டங்களின் விளைவாக ‘சென்சிடிவ்’ ஆன நிறுவனங்களான அணு உலை, விண்வெளி ஆய்வகம் முதலானவற்றையும் இதர முக்கிய தொழிலகங்களையும் காக்க இத்தகைய சிறப்புப் படைப் பிரிவு தேவைப்படுகிறது என அப்போதைய உள் துறைத் துணை அமைச்சர் என்.ஆர்.லஸ்கர் இதற்குக் காரணம் சொன்னார். மாநில அரசு விரும்பினால் அதுவும் இந்த சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தற்போது 2,00,000 துருப்புக்கள் உள்ள உலகிலேயே பெரிய தொழிற் பாதுகாப்புப் படையாக இது உள்ளது. சுமார் 300 தொழில் நிறுவனங்களில் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் பாதுகாப்பிற்காகத்தான் இது உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு சொல்லிக் கொண்டாலும், தொழிற்சாலைச் சொத்துக்கள் களவாடப்படுவதையோ, நிர்வாகத் திருட்டுகளால் நிறுவனங்களுக்குப் பெரிய இழப்புகள் ஏற்படுவதையோ சி.எஸ்.எஃப்.ஐ தடுத்து நிறுத்தியதாக வரலாறு இல்லை. பொதுக்கணக்கு ஆயம் (PAC) பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் மற்றும் திருட்டு ஆகியவற்றின் மூலம் இழப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது. துர்காபூர் எஃகு ஆலையின் ஆடிட் அறிக்கை ஒன்று,. டன் கணக்கான எஃகுத் தண்டுகள் கரையான் அரித்துக் காணாமற் போய்விட்டதாகக் கணக்கு எழுதப்பட்டிருந்ததை அது அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் கண்டுபிடித்துத் தடுக்க வக்கற்ற சி.ஐ.எ ஸ்.எஃப் படை வாய்ப்பு வந்தபோதெல்லாம் தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவத் தயங்கியதில்லை. நிர்வாகத்திற்குத் துணையாக நின்று போராட்டங்களை அது ஒடுக்கி வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனகளில் வலுவாக உருவாகி வந்த தொழிற்சங்கங்களின் உரிமைப் போராட்டங்களைப் பாதுகாப்பு என்கிற பெயரில் ஒடுக்குவதே சி.ஐ.எஸ்.எஃப் உருவாக்கத்தின் உண்மையான பின்னணி என்பது போகப் போகத் தெளிவாகியது.

1981ல் ‘அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு’ (ESMA) ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒன்று அகில இந்திய அளவில் நடைபெற்றபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த அகமதாபாத் “இயல் அறிவியல் ஆய்வுக் கூட’ப் பணியாளர்களை சி.ஐ.எஸ்.எஃப் படையினர் தாக்கியதோடு, அவர்களை லாக் அப்பிலும் அடைத்து வைத்திருந்தது அப்போது சர்ச்சைக்குள்ளாகியது. 1980ல் டல்லி ராஜ்ஹாரா பகுதியில் ஒரு பழங்குடிப் பெண்ணை இப்படையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சித்ததை அறிந்த சுரங்கத் தொழிலாளிகள் இவர்களைக் கெரோ செய்தனர். சி.ஐ.எஸ்.எஃப் சுட்டதில் ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 38 பேர்கள காயமடைந்தனர். இப்படி நிறையச் சொல்லலாம்,

இதில் கவனத்திற்குரிய இன்னொரு அம்சம் என்னவெனில் 1983ம் ஆண்டுச் சட்டத் திருத்தம் என்பது தொழிலாளர்களை மட்டுமின்றி, சி.ஐ.எஸ்.எஃப் ஐயும் ஒடுக்கும் நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டது, பொதுத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தித் தங்களது உரிமைகளையும், ஊதியங்களையும் ஓரளவு பாதுகாத்துக் கொள்வதை அருகிருந்து பார்த்து வந்த சி.ஐ.எஸ்.எஃப் படையினர், தாங்களும் அமைப்பாகித் தங்கள் கோரிக்கைகளை வைக்க முனைந்தனர். மேலதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கையும் அவர்கள் எதிர்த்தனர். 1979 பிப்ரவரியில் அவர்கள் மத்தியில் தங்கள் பிரச்சினைகளை மையப்படுத்திய துண்டறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன. ராஞ்சியில் சி.ஐ.எஸ்.எஃப் கமாண்ட்டர் ஒருவருக்குப் பிடிக்காத ஒரு ஆய்வாளர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார் என்கிற செய்தி படையினர் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சி.ஐ.எஸ்.எஃப்பின் அகில இந்தியப் பிரதிநிதிகள் டெல்லிக்குப் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது அவர்களை அரசு கைது செய்தது. இது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழி வகுத்தது,

ஜூன் 25 அன்று பொகாரோவில் போராட்டத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையினரை இராணுவம் சுற்றி வளைத்தது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் இராணுவத்தினர் நால்வரும், சி.ஐ.எஸ்.எஃப்பினர் 19 பேர்களும் கொல்லப்பட்டனர், உண்மையில் 65 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்தவர்களெல்லாம் கூட பைனட்டால் குத்திக் கொல்லப்பட்டதாகவும் அன்று பேசப்பட்டது.

சி.ஐ.எஸ்.எஃப் மீதான இந்த இராணுவத் தாக்குதலின்போது பொகாரோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் படையும் (CRPF), பீகார் மிலிடரி போலீசும் இராணுவத்துடன் ஒத்துழைக்க மறுத்தன, போராடிக் கொண்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையினர் ஐ.என்.டி.யூ.சி போன்ற தொழிலாளர் அமைப்புகளின் மாநாடுகளுக்குச் சென்று தமது கோரிக்கைகளுக்கு ஆதரவு தேடினர், தம்மைத் தொழில் நிறுவனங்களின் ஊழியர்களாக நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் கூட அவர்கள் வைத்தனர்,

போராட்டம் தொடர்ந்தது. 1980ல் ராஞ்சியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பிரிவிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 500 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். 200 பேர்மீது வன்முறை மற்றும் தேசத்துரோக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் 1983ம் ஆண்டுத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 1968ம் ஆண்டுச் சட்டத்தின்படி கடமை தவறும் அல்லது குற்றம் இழைக்கும் சி.ஐ.எஸ்.எஃப் காவலர்கள் 1922 ம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் கீழ் தண்டிக்கப் படுவார்கள். தவிரவும் அவர்களுக்கு கூலி அளிப்புச் சட்டம் (1936), தொழில் தகராறுச் சட்டம் (1947), தொழில் நிறுவனங்கள் சட்டம் (1948) ஆகியவற்றின் பலன்கள் மறுக்கப்பட்டிருந்தது. 1983ம் ஆண்டுத் திருத்தம், இத்துடன்ன் கூடுதலாகப் பல தடைகளை அறிவித்தது. எக்காரணம் கொண்டும் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் எந்தத் தொழிற்சங்க அமைப்புகளிலும் அனுமதியின்றி சேரக் கூடாது என்பது மட்டுமல்ல, வேறு எந்த சாட்தாரணத் தொடர்புகளையும் கூட வைத்துக் கொள்ளக்கூடாது; அரசியல் மட்டும் மத அமைப்புகள் மட்டுமின்றி தொழிற்சங்கங்கள், நல அமைப்புக்கள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்; தவிரவும் ஏதும் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ பேசவோ கூடாது; பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிப்பதோ, கட்டுரைகள் எழுதுவதோ எதுவும் கூடாது என்பன புதிய திருத்தத்தின் முக்கிய அம்சங்கள். அவர்கள் போராடுவதை மட்டுமின்றி, கோரிக்கைகள் வைப்பதும் கூட இவ்வாறு குற்றங்கள் ஆக்கப்பட்டன..

இது தவிர சி.ஐ.எஸ்.எஃப்பில் உள்ள அடிப்படை வீரர்களின் மீதான உயரதிகாரிகளின் அதிகாரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஒழுங்கீனம், கடமை தவறுதல், கோழைத்தனம் ஆகியவற்றுக்கான சிறைத் தண்டனை ஆறு மாதங்கள் என்பது இப்போது ஓராண்டாக அதிகரிக்கப்பட்டது. கைது செய்யப்படக்கூடிய குற்றங்களாக வரையறுக்கப்பட்டிருந்தவை, இப்போது பிணையில் வெளிவர இயலாத குற்றங்களாக்கப்பட்டன. வீரர்களின் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு நீதிபதியின் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இப்படியான மாற்றங்களைச் செய்வதற்கு ஏதுவாகவே சி.ஐ.எஸ்.எஃப் “இராணுவம்” என வரையறுக்கப்பட்டது, இராணுவம் என்கிறபோது நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் மேற்கண்டவாறு அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு வந்து விடுகிறது. இராணுவ ஒழுங்கைக் காப்பாற்றுவது என்கிற பெயரில் அரசியல் சட்டத்தின் 33ம் பிரிவு இந்த அதிகாரங்களை அரசுக்கு அளிக்கிறது.

இப்படி சி.ஐ.எஸ்.எஃப் படையினரின் போராட்ட உணர்வை முடிவுக்குக் கொண்டு வந்த மத்திய அரசு, அதற்கு ஈடாக அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கென, தொழிலாளர்களுக்கு எதிரான அவர்களின் அதிகாரங்களை அபரிமிதமாக்கியது.

ஏற்கனவே அவர்களுக்கு அளிகப்பட்டிருந்த தொழிலாளர்களைக் கைது செய்யும் உரிமை இப்போது மேலும் விசாலமாக்கப்பட்டது. தன்னைத் தாக்கியவரை மட்டுமின்றி, அத்தகைய சந்தேகத்டிற்குரியவரையும் , தனது பணியைச் செய்யத் தடையாக இருப்பவரையும் சி.ஐ.எஸ்.எஃப் கைது செய்யலாம். தன்னை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய யாரிடமும் இப்படி நடந்துகொள்வோரையும் அது இப்படிக் கைது செய்யலாம். இராணுவம் என்கிற வரையறையும், இந்தக் கைது செய்யும் அதிகாரமும் ஒன்றாக இணையும்போது சி.ஐ.எஸ்.எஃப்பின் அதிகாரம் எல்லையற்றதாகி விடுகிறது.

“முன்னதாக நாங்கள் புலித்தோல் போர்த்திய ஆடுகளாகத்தான் இருந்தோம். நாங்கள் இப்போது தடியடி நடத்தலாம்; கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசலாம்; வன்முறைக் கும்பல்களை இப்படிச் சிதறடிக்கலாம்” என அப்போது ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி இறுமாப்புடன் கூறியது இதழொன்றில் வெளிவந்திருந்தது,

தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் நிறுவனமாகி இன்று தொழிலாளிகளை ஒடுக்கிக் கொல்லுகிற அளவிற்குச் சென்றுள்ள கதை இதுதான்.

ஏழை இந்தியாவின் கோடீசுவர வேட்பாளர்கள்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தமது வேட்புமனுவுடன் அளித்துள்ள சொத்து மதிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அளித்துள்ள இந்தச் சொத்துக் கணக்கு எவ்வளவு யோக்கியமானது என்பது வேறு விடயம். அவர்கள் காட்டியுள்ள கணக்கின் படியே இந்த முடிவுகள் இங்கே தரப்படுகின்றன.

மொத்தம் தமிழகத்தில் போட்டியிட்ட 844 வேட்பாளர்களில் 178 பேர் கோடீசுவரர்கள் (21%). இது சென்ற தேர்தலைக் காட்டிலும் கிட்டத்தட்ட 2 மடங்கு. கோடீசுவரர்கள் அல்லாதோர் பெரும்பாலும் சுயேச்சைகள் அல்லது சிறிய கட்சிகளைச் சேர்ந்தோர்.

காங்கிரஸ் வேட்பாளர்களில் 85 % கோடீசுகள்: பா.ஜ.க வில் 67%, அ.தி.மு.கவில் 80%, தி.மு.க 97%, தே.மு.தி.க 86%, ஆம் ஆத்மி 52%, ம.தி.மு.க 86%, பா.ம.க 50%, சி.பி.எம் 11%, சி.பி.ஐ 13%; பகூஜன் சமாஜ் கட்சி 5%,

நமது வேட்பாளர்களின் சராசரிச் சொத்து

சராசரிச் சொத்து எவ்வளவு தெரியுமா 2.56 கோடி.

இது சுயேச்சைகளின் சொத்து மதிப்புகளையும் சேர்த்துக் கணக்கிட்டது. அவர்களில்தான் பஞ்சைப் பராரிகள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவர்களைத் தவிர்த்துக் கட்சி வேட்பாளர்களின் சராசைச் சொத்து மதிப்பை மட்டும் கணக்கிட்டால்.. உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்…

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரிச் சொத்து 18.6 கோடி, பா.ஜ.க 31.77 கோடி, அ.தி.மு.க 6.34 கோடி, தி.மு.க 10.19 கோடி, தே.தி.மு.க 9.95 கோடி ஆம் ஆத்மி 2.79 கோடி, பா.ம.க 5 கோடி, முஸ்லிம் லீக் 4 கோடி, புதிய தமிழகம் 16 கோடி, ம.ம.க 1 கோடி, வி.சி.க 91 லட்சம், சி.பி.எம் 43 லட்சம்;

புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கசிகள் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். எல்லோரும் கோடீஸ்கள் தான். அவர்களின் சொத்து மதிப்பே இங்கு சராசரி மதிப்பாக வருகிறது.

தமிழ்நாட்டு கோடீஸ்கள் சிலரின் விவரங்கள்….

வசந்தகுமார் (கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்) சொத்து 285 கோடி மட்டும்..

ஏ.சி.ஷண்முகம் (வேலூர், பா.ஜ.க) 108 கோடி;

கே.என்.ராமச்சந்திரன் (ஶ்ரீ பெரும்புதுர், அ.தி.மு.க ) 93 கோடி;

ஜகத்ரட்சகன் (ஶ்ரீ பெரும்புதூர், தி.மு.க): 78 கோடி:

பாரிவேந்தன் பிச்சமுத்து (பெரம்பலூர், பா.ஜ.க) 77 கோடி;

கார்தி சிதம்பரம் (சிவகங்கை, காங்) 59 கோடி;

தேவநாதன் யாதவ் ( திருநெல்வேலி, த மா கா ) 32 கோடி;

அன்புமணி ராமதாஸ் (தருமபுரி, பா.ம.க ) 31 கோடி;

டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி, புதிய தமிழகம்) 16 கோடி;

தம்பிதுரை (கரூர், அ.தி.மு,க) 13 கோடி;

தயாநிதி மாறன் ( மத்திய சென்னை, தி மு க) 10 கோடி;

மணிசங்கர் அய்யர் (மயிலாடுதுறை, காங்) 8 கோடி:

எஸ்.பி. உதயகுமார் (கன்னியாகுமரி, ஆம் ஆத்மி) 5 கோடி;

உ.வாசுகி (வட சென்னை, சி.பி.எம்) 2 கோடி:

தமிழ்நாட்டு கோடீஸ் வேட்பாளர்கள் இன்னுஞ் சிலரின் விவரங்கள்….

நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தயாநிதி மாறனின் தேர்தல் வேட்பு மனு வாக்குமூலத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதி செய்தாயிற்று.

சி.பி இராதாகிருஷ்ணன் (கோவை, பா.ஜ.க 66 கோடி), ஆரோன் ரஷீத் (தேனி, காங், 64 கோடி), பிரபு (கோவை, காங் 60 கோடி), சாருபாலா தொண்டைமான் (திருச்சி, காங், 57 கோடி), பொங்கலூர் பழனிச்சாமி (பொள்ளாச்சி, தி.மு.க, 40 கோடி), முஹம்மத் ஜலீல் (இராமநாதபுரம், தி.மு.க, 29 கோடி), இராம சுகந்தன் (தருமபுரி, காங் 20 கோடி), கிருஷ்ணசாமி வாண்டையார் (தஞ்சாவூர், காங்) 17 கோடி…

இவர்களை எல்லாம் விட நம்ம தயாநிதி மாறன் ஏழைதான். பாவம், அவர் காட்டியுள்ள சொத்து மதிப்பு 10,94, 29,143 ரூபாய்கள் மட்டுந்தான்.
என்னா கொடுமை சார் இது.

குறிப்பு: தேர்தல் ‘ஃப்ராடு‘-களுக்கு எத்தனையோ வழிமுறைகள்..

வேட்பு மனுக்களில் சொத்து தொடர்பாக தயாநிதி மாறன் செய்துள்ள அப்பட்டமான பொய் வாக்குமூலங்கள் பற்றிப் பலரும் இங்கே தங்களின் ஆத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மாறன் மட்டுமா, அநேகமாக எல்லா பெரிய / சிறிய கைகளுமே இந்த ஃப்ராடைச் செய்துள்ளன.

எனக்குத் தெரிந்த ஒரு அறிவுஜீவி எழுத்தாள வேட்பாளர் தன் சொத்து என ஒரு கோடியை விடவும் சற்றுக் குறைவாகத் தன் தேர்தல் மனு வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். (அதனால்தான் அவர் குறித்த பதிவு என் பட்டியல்களில் வரவில்லை).

ஆனால் எனக்குத் தெரிந்த வகையிலேயே கும்பகோணம் அருகில் அந்த வேட்பாளருக்கு, அவரது மனைவியின் பெயரில் கோடிகள் மதிப்பில் ஒரு சொத்துள்ளது. அதை அவர் 4 கோடி ரூபாய்க்கு விற்கக் கடந்த ஒரு வருடமாக முயற்சித்துக் கொண்டுள்ளார்.

இன்று அவர்மீது கொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ள ஒரு சொத்து குவிப்பு புகாரிலும் இந்தச் சொத்தும் உள்ளது.

இப்படி வேட்பாளர் மனு வாக்குமூலத்தில் சொத்துக் கணக்கைக் குறைத்துக் காண்பிபதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.

ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் நுழைந்தாலும் பணக்காரன் சொர்கத்திற்குள் நுழைய இயலாது என்பது பழமொழி. உபயம் ஏசுநாதர். ஊசி முனைக் காதுக்குள் ஒட்டகங்கள் நுழைந்தாலும் கோடீஸ்கள் அல்லாதோர் இந்திய நாடாளுமன்றத்திற்குள் நுழைய இயலாது என்பது புது மொழி

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்., நான்கு நாட்களாக நாளிதழ்களில் இவைதான் தலைப்புச் செய்திகள்.

பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை.

போலீஸ் பக்ருதீன் கைதுடன் தொடர்புடைய மூன்று கூற்றுகள் இங்கே…

முதலாவது இரு மாதங்களுக்கு முன் இப்பக்கத்தில் நான், “மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டை அடித்தள முஸ்லிம்கள்’ என்கிற தலைப்பில் இட்ட பதிலிருந்து.. எவ்வாறு இப்பகுதிகளில் சிலர் குற்றமிழைக்காதபோதும் காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும், பொய் வழக்குப் போடப்படுவதும், உளவு சொல்லக் கட்டாயப்படுத்தப் படுவதும் நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருந்தேன், அந்தக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் முதலில்..

அடுத்து நேற்றைய ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ், பக்ருதீனின் சகோதரரை நேர்கண்டு எழுதியதில் ஒரு பகுதி, மகேஷுக்கு நம் நன்றிகள்,

இறுதியில் பக்ருதீன் மீதான வழக்குகளை நடத்திய வழக்குரைஞர் ரஜினியிடம் தொலைபேசி மூலம் அறிந்து கொண்டது.

இவர்கள் யாரும் பக்ருதீனையோ மற்றவர்களியோ குற்றமற்றவர்கள் எனக் கூறவில்லை, நீதிமன்றம் அதை முடிவு செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்கட்டும், ஆனால் இத்தகையோரும் மனித்ர்கள்தான், எனினும் இவர்கள் எவ்வாறு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர் என்பது குறித்த ஒரு சிறிய சிந்தனை உசுப்பல்தான் இது.

1. எனது கட்டுரையிலிருந்து…

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

2. நேற்றைய (அக் 7, 2013) ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ் எழுதியுள்ள, “ஆறுதல் சொல்ல எங்களுக்கு யாருமில்லை” என்கிற கட்டுரையின் முக்கிய சில பகுதிகள்:

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்?

போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான். 3 நாட்களுக்கு முன்பு வரை போலீஸாரால் நாங்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம். இனிமேலும், எங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்பப்படுத்த மாட்டார்கள்.

போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் போலீஸார் சொல்வதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. எங்கள் வாப்பா சிக்கந்தர் பாட்சா, உதவிக் காவல் ஆய்வாளராக இருந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1989ல் இறந்துபோனார். நாங்கள் 3 மகன்கள். மூத்தவன் முகமது மைதீன், அடுத்து நான் (தர்வேஸ் மைதீன்), 3வது மகன் தான் போலீஸ் பக்ருதீன் என்று போலீஸாரால் அழைக்கப்படும் பக்ருதீன் அலி அகமது. எங்களைக் காப்பாற்றுவதற்காக அம்மா செய்யது மீரா, வெளிநாட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போய்விட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தோம்.

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

அவனுக்கு ‘நிக்காஹ்’ செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது ஏ.சி. (உதவி ஆய்வாளர்) வெள்ளத்துரை பொது இடத்தில் என் தம்பியை தாக்கினார். இதில் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தது, அவருக்கு அவமானமாகிவிட்டது. உடனே, 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டார்.

என் தம்பியின் திருமண முயற்சி தடைபட்டுப் போய்விட்டது. போலீஸ் மீது அவனுக்குப் கோபம் அதிகமாகிவிட்டது. நான் நல்லவனாகவே இருந்தாலும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்று கூறி ஊரைவிட்டே போய்விட்டான்.

28.10.11ல் சேலம் விரைவு நீதிமன்றத்தில் வாய்தாவுக்காக போனவன்தான், அதன் பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மறுநாள் அத்வானியை கொல்வதற்காக பாலம் அடியில் வெடிகுண்டு சிக்கியதாக செய்திகள் வந்தன. அன்று முதல் விசாரணை என்ற பெயரில் என்னையும், என் குடும்பத்தினரையும் போலீசார் துன்புறுத்தினர். அடித்தார்கள், தனி அறையில் அடைத்து வைத்தார்கள், அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டினார்கள், ரெய்டு என்று வீட்டைச் சூறையாடினார்கள், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டோம். ஊரைவிட்டு ஓடிப்போகவில்லை. போலீஸார் அழைக்கும்போதெல்லாம் போனேன்.

அத்வானிக்கு குண்டு வைத்த வழக்கில் என்னை கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கிடைக்க தன் தாலியை விற்று என் மனைவி வழக்கு நடத்தினாள். ஒருநாள் நீதிபதியிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறிய பிறகே எனக்கு ஜாமீன் கிடைத்தது.

பக்ருதீனை கைது செய்துவிட்ட பிறகாவது, அப்பாவியான என்னையும், செய்யது சகாபுதீனையும் இந்த வழக்கில் இருந்து போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். என் 4 வயது பையனுக்கு முழு விவரம் தெரிவதற்குள், எனக்குப் போலீஸார் வைத்த தீவிரவாதி என்ற பெயரைத் துடைக்க வேண்டும்” என்றார்.

3. வழக்குரைஞர் ரஜினி, மதுரை :

(தொலைபேசியில் கூறியது)

“எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பருதீனைத் தெரியும். அவன் அம்மாவை ரொம்ப நன்றாகவே தெரியும். ஏதோ பிறக்கும்போதே தீவிரவாதியாகப் பிறந்தவன் என்பதுபோல இன்று அவனை ஊடகங்கள் சித்திரிக்கின்றன. போலீசும் அப்படித்தான் சொல்கிறது. பரமசிவம் கொலை வழக்கில் எல்லாக் குற்றவாளிகளுக்கும் நான்தான் வழக்காடினேன். ஜாமீனில் கூட பக்ருதீனை விடவில்லை. கடைசியில் பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் அவ்வளவு பேரும் விடுதலை செய்யப்பட்டாங்க. அவன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ விரும்பினான். நெல்பேட்டையை சேர்ந்த விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் வசித்துக் கொண்டிருந்த ******* என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தான். அவளின் குழந்தையைத் தன் குழந்தை என்றே சொல்லிக் கொஞ்சுவான். அந்தப் பெண்ணின் தம்பியும் வழக்கில் இருந்தவன். அவள் இவனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவனைப் பிடிக்காததல்ல காரணம். “என் தம்பி வழக்குக்காக கோர்ட் கோர்ட்டா அலைஞ்சுட்டிருக்கேன். இவரையும் கட்டிகிட்டு இவருக்காகவும் கோர்ட் கோர்டா அலையணுமா அக்கா?” என்பாள் அவள். அப்புறம் வேறொரு பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்த்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் வேறொரு வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தான். ஒரு நாள் அவன் அம்மா வீட்டுக்கு ஓடி வந்தாங்க.”எம் மவன ஜெயில்ல போட்டு வார்டருங்க அடிசுட்டாங்கம்மா. கோர்ட்டுக்குக் கொண்டு வாராங்களாம். ஏதாவது செய்யுங்கம்மா..” ன்னு அழுதாங்க. நான் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் பெடிஷன் போட்டேன். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறைக்குச் சென்று விசாரணை செய்ய வேணும்னு ஆர்டர் வாங்கினேன்.

பரமசிவம் கொலை வழக்கில் விடுதலை ஆன பிறகு அவன் ரொம்ப அமைதியாதான் இருந்தான் எல்லோரையும்போல திருமணம் செஞ்சுட்டுக் குடும்பம் நடத்தத்தான் விரும்பினான். அத்வானி வந்தபோது குண்டு வைத்த வழக்கில் அவன் குடும்பத்தையே தொந்தரவு செய்தாங்க. அவன் அண்ணன் மீது பொய் வழக்கு போட்டாங்க. அவன் அம்மா ப்ரெஸ் மீட் வச்சு பக்ருதீனுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லன்னு அறிவிச்சாங்க.

பிலால், பக்ருதீன் மனைவி எல்லோரையும் போலீஸ் புத்தூரிலிருந்து இங்கே கொண்டு வந்து வச்சிருக்காங்களாம். நாளைக்குப் போய்ப் பாக்கணும்”

பக்ருதீனை ‘அவன்’ ‘இவன்’ என ரஜினி அழைத்தது ஊடகங்கள் கூறும் பொருளில் அல்ல.. வயதுக் குறைவு, நீண்ட நாள் பழக்கம், அவ்வளவுதான்.