இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்..

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான NCHRO மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.

காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒய்.கே. ஷபானாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

என் பேனலின் முன் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்தவர்களில்  சென்ற வாரம் ஹைதராபாத்தில் சந்தித்த  அந்தஅழகிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப்  பற்றிக் கொண்டேன்.

ஹைதராபாத்தில் . இதே UAPA சட்டத்திற்கெதிரான அரங்கக் கூட்டம் ஒன்றிற்கு  வந்திருந்தவர்களில் அவனும் ஒருவன். அவன், இவன் எனக் குறிப்பிடுவதை மரியாதைக் குறைவால் அல்ல. அன்பின் மிகுதியும் அப்படி விளிப்பதில் முடியும்தானே.

யாரோ சொன்னார்கள். ஹைதராபாத் மக்கா மசூதி வழக்கில் பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கடுஞ் சித்திரவதைகளையும், பல மாதச்சிறையையும் அனுபவித்து, இறுதியில் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டவன், பெயர் இம்ரான் என்றார்கள். அப்போதும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மவுனமாக இருக்கத்தான் முடிந்தது.

கொஞ்சம் பேச வேண்டும் என்றேன். அவனுக்கு ஏதோ அவசரம். நான் தங்கியுள்ள அறைக்கு மாலை வருகிறேன் எனச் சொன்னான்.அவன் சரியாகத்தான் வந்தான், நான்தான் அப்போது அறையில் இல்லை. அன்று ஹைதராபாத்தில் விரிவாகப் பேசமுடியவில்லையே என ஏமாற்றமடைந்திருந்த எனக்கு இன்று டெல்லியில் அவனைப் பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது பேனலின் முன் முதலாவதாக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர் ராஜஸ்தான் மாநிலத்தவர். ஐந்து பிள்ளைகள். ஒரு பள்ளி நடத்துகிறார். ஆயுதங்களுடனும் ஆபாசமான முழக்கங்களுடனும் பஜ்ரங்தள் ஊர்வலம் ஒன்று நடந்தபோது அப்படி ஊர்வலம் போவதை எதிர்த்துள்ளார். கைது, சித்திரவதை, UAPA சட்டம் என நீண்ட நாள் சிறைவாசத்திற்குப் பின் குற்றமற்றவர் என விடுதலையானவர். பெயர் முகம்மது ஹனீஃப்.

அவர் சென்றவுடன் நான் இம்ரானை அழைத்தேன்.

###

பெயர்: சையத் இம்ரான் கான். வயது 30 (இப்போது). கல்வி: பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்). வேலை : ICICCI வங்கி (அப்போது).

அப்பா ஒரு மத்திய அரசு ஊழியர் (அப்போது). ஒரு தம்பி, ஒரு தங்கை. ஊர் : செகந்தராபாத்தில் போன்பள்ளி.

சுவாமி அசீமானந்தாவின் இப்போதைய வாக்குமூலம், 2007 மக்கா மசூதி குண்டு வெடிப்பு இந்துத்துவவாதிகளின் சதி என்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அன்று முஸ்லிம் தீவிரவாதிகள், லக்‌ஷர் ஏ தொய்பா, பாகிஸ்தானில் பயிற்சி, இந்திய முஜாஹிதீன் என்கிற அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் அப்படியே செய்திகள் பரப்பின. முஸ்லிம் இளைஞர்கள் பலர் சுற்றி வளைக்கப்பட்டார்கள், கைடு செய்யப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவந்தான் இம்ரான்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பிற்கு (25, மே, 2007) எட்டு நாளைக்குப் பின் சுமார் 200 பேர் கொண்ட ஒரு போலீஸ் படை இம்ரானின் வீட்டைச் சுற்றிக் கொண்டது. நாலைந்து போலீஸ் வான்கள், கொஞ்சம் ஊடகக்காரர்கள் சகிதம் அந்தப் படையெடுப்பு நடந்துள்ளது..

என்ன காரணம் என அவனிடமோ இல்லை பெற்றோர்களிடமோ சொல்லாமல், சும்மா ஒரு விசாரணை, போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துவிட்டுப் போ என அவன் அழைக்கப்பட்டுள்ளான். வேனில் ஏறுமுன் கறுப்புத் துணியால் ஆக்கப்பட்ட ஒரு பையால் தன் முகம் மூடப்பட்டபோதுதான் இம்ரானால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

பிள்ளையை அத்தனை காமரா வெளிச்சங்களுக்கும் மத்தியில் இப்படி முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி போலீஸ் வானில் ஏற்றியதைப் பார்த்திருந்த அவனது பெற்றோருக்கும் உடன்பிறந்தார்களுக்கும் எப்படி இருந்திருக்கும் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

கருப்புத் துணி விரித்த இருளின் ஊடாக எங்கோ இழுத்துச் சென்று ஒரு பண்ணை வீட்டில் அடுத்த பத்து நாட்கள் சட்ட விரோதக் காவல்.

தினசரி அடி. மின்சார ஷாக்குகள்..

தினம் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அநுமதி. அசந்து தூக்கம் கண்களைச் சுழற்றினால் இமைகளில் க்ளிப் போட்டுக் கண்களை மூட விடாது செய்து தூக்கத்தை விரட்டுதல்…

இம்ரானிடம் அவனுக்கு விளங்காத பல கேள்விகள், அவனுக்குத் தெரிந்திராத பெயர்களைச் சொல்லி விவரங்கள் கேட்டுந்தான் இத்தனைச் சித்திரவதைகளும்.

“லக்‌ஷர் ஏ தொய்பாவுடன் உனக்கு எத்தனை நாளாகத் தொடர்பு?”

“பயிற்சிக்காகப் பாகிஸ்தானுக்கு நீ என்னென்ன தேதிகளில் சென்றிருந்தாய்…”

“தெரியாதா? அடேய் என்ன சொல்கிறாய்..? நீ இப்படிக் கேட்டால் சொல்வாயா?”

“சொல்லமாட்டாயா? சொல்லமாட்டாயா? இப்ப சொல்லுடா, சொல்லுடா, சொல்லுடா,,,”

###

இரண்டுமுறை இம்ரானுக்கு நார்கோ அனாலிசிஸ் செய்துள்ளனர். இன்று அந்த “உண்மை அறியும் சோதனை”, நிரந்தர மூளை ஊனத்தை ஏற்படுத்திவிடக்கூடும் எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நான் விரிவாக அன்று இதழ்களில் எழுதியுள்ளேன் எனது ‘நெருக்கடிநிலை உலகம்’ தொகுப்பிலும் உள்ளது. இது தொடர்பான பெரும் போராட்டங்களுக்கும் நீதிமன்றக் கண்டனங்களுக்கும் பின்தான் இன்று  அந்ததச் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவனுக்கு நார்கோ சோதனை செய்த டாக்டர் மாலினி கிறிஸ்தவ கன்னியாஸ்திரி அபயா கொலையில் (1992) குற்றவாளிகளைக் காப்பாற்ற பொய்யான டெஸ்ட் ரிசல்ட் எழுதியதால் சி.பி.ஐ அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர். புகழ் பெற்ற ஆருஷி வழக்கிலும்போலீசிடம் லஞ்சம் பெற்றுப் பொய் சர்டிஃபிகேட்டுகள் கொடுத்தவர் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. 2009ல் அவர் தன் பிறந்த நாளை மாற்றி பொய் சர்டிஃபிக்ட் கொடுத்து ஏமாற்றிய குர்றத்திற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட புகழுக்கும் உரியவர் அவர் ..

“லேடி போரிங் ஹாஸ்பிடலுக்கு நார்கோ சோதனைக்காக அழைச்சிட்டுப் போய் உட்கார வச்சிருந்தாங்க. அப்போ T9 டி.வியில என் படத்தைக் காட்டி என்னமோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் பதட்டமாயி அங்கே இருந்த நர்ஸ்கிட்ட என்ன சொல்றாங்கன்னு கேட்டேன்.

‘அது, நீ ஒரு பயங்கரவாதி, நார்கோ டெஸ்ட்ல எல்லாத்தையும் நீ ஒத்துக்கிட்டன்னு சொல்றாங்க’… அப்டீன்னு அந்த நர்ஸ் சொன்னாங்க”

எனக்கு வியப்பு.

“என்ன இம்ரான், டெஸ்ட் பண்றத்துக்கு முன்னாடியே அப்படி நியூஸ் வெளியிட்டாங்களா என்ன..?”

‘’ஆமா சார்…”

###

மொத்தம் 17 மாதங்கள், 24 நாட்கள் சிறை வாசம். இதில் 10 நாட்கள் சட்டவிரோதப் போலீஸ் காவல்; 15 நாட்கள் சட்டபூர்வக் காவல்.

“சட்டவிரோதமாக் காவலில் வச்சிருந்ததை நீங்க நீதிமன்றத்தில் சொல்லல்லி இம்ரான்?”

“இல்லை.  கோர்ட்டுக்குக் கொண்டுபோன அன்னைக்குத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது கைது செஞ்சதா நீதிபதியிடம் ஒத்துக்கொண்டால் உடனே விட்டர்றதா சொன்னாங்க. விட்டுடுவாங்கன்னு சொன்னதால நானும் அப்படியே சொன்னேன்.”

நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் கூட, முதல் ஆறு மாதம் தனி செல்லில்தான் வைத்திருந்திருக்கின்றனர், ஆறு மாதத்திற்குப் பின் வழக்கு விசாரணை கர்நாடகப் போலீசிடமிருந்து சி.பி.அய்க்கு மாற்றப்பட்ட பிறகு சிறைக்குள் தனிக் கொட்டடி என்கிற நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

###

ஹைதராபாத்தில் ஒரு அற்புதமான மனித நேய வழக்குரைஞர். பெயர் முஸாபருல்லாஹ் கான். இப்படியான பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மிக்க தைரியமாகவும், இலவசமாகவும் வழக்காடும் மனிதருள் மாணிக்கம். அவர்தான் இம்ரானுக்காகவும், அவன் மீது தொடுக்கப்பட்ட UAPA மற்றும் இ.த.ச  120 ஏ, 144, 143, வெடிமருந்துச் சட்டம், பண மாற்றீடுக் குற்றச்சாட்டு முதலான எல்லா வழக்குகளிலும் சட்ட உதவி செய்துள்ளார்,

வழக்குரைஞர் முஸாபருல்லாவைப் பற்றிச் சொல்லும்போது இம்ரானின் குரல் கம்மியது.

###

சி.பி.ஐ இறுதியாக இம்ரானை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து Clean chit கொடுத்தது, ஆந்திர போலீஸ் அவன் மீது வீண்வழக்குப் போட்டதாக அறிக்கை அளித்தது.

பதினேழு மாதங்கள் 24 நாட்களுக்குப் பின் அவன் வீட்டுக்கு வந்தான்; அவனது வாழ்க்கையில் 17 மாதங்களும் 24 நாட்களும் மட்டுமல்ல, அவனது ICICCI வங்கி வேலை…. இன்னும் என்னென்னவற்றையோ அவன் இழந்தான்.

அவன் தந்தை வி.ஆர்.எஸ் கொடுத்து அரசு வேலையிலிருந்து விலகினார். அவனது தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பயங்கரவாதியின் குடும்பம்…..

“எனக்கும் கூடத்தான் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க மாட்டேன் என்கிறது..”

###

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல. சி.பி.ஐ. க்ளீன் சிட் கொடுத்தபின்னும் கூட மோடியின் குஜராத் போலீஸ் ஏதோ விசாரணை என இம்ரானை அழைத்துச்செல்ல முயன்றுள்ளது. பதறிப்போன இம்ரான் ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் ஓடியுள்ளான். கவலைப்படாதே உன்னை குஜராத் போலீஸ் கைது செய்யவோ, அழைத்துச்செல்லவோ அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இப்போது நிலைமை எப்படி இம்ரான் எனக் கேட்டேன்.

“இப்போதும் கூட அப்பப்ப போலீஸ், உளவுத் துறை வந்து ஏதாவது விசாரிச்சிட்டுத்தான் இருக்கிறாங்க..”

“இப்ப என்ன வேலைல இருக்கீங்க?”

சிரித்தான் இம்ரான்.

“ஒரு இன்டிபென்டன்ட் ரிசர்ச்சரா ஒரு கார்பொரேட் நிறுவனத்தில வேல செஞ்சிட்டிருந்தேன், சில நாட்கள் முன்னாடி என்னோட படத்தோட கூகிள்ல யாரோ இதை எல்லாம் போட்டிருந்தாங்க. இப்ப அந்த நிறுவனம் என்ன வேலய விட்டு நிறுத்திட்டு..”

எங்கள் பேனலுக்கு முன் வருபவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வருமானால் நான் கேள்விகளைக் கேட்பது எனவும், உருது அல்லது இந்தியில் மட்டுமே பேசக்கூடியவர்களானால் வழக்குரைஞர் ஷபானா கேட்பது எனவும் எங்களுக்குள் ஒப்பந்தம்..  இம்ரான் மிக அழகான ஆங்கிலத்தில் என்னிடம் பேசிக் கொண்டிருந்தான், அவன் விடை பெற்றபோது அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த ஷபானாவின் கண்கள் கலங்கி இருந்தன. குரல் கம்மியியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *