பொது சிவில் சட்டம் எனும் பெயரில் பிளவு அரசியல்

போபாலில் எட்டு முஸ்லிம் இளைஞர்கள் மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக  இருக்கட்டும், முஸ்லிம் பெண்கள் முத்தலாக் கொடுமையால அவதியுறுவதாக நரேந்திரமோடி நீலிக் கண்ணீர் வடிப்பதாக இருக்கட்டும் இதை யாரும் நம்புவதில்லை. ஆனாலும் இன்று அவர்கள் உருவாக்கியுள்ள பிளவு அரசியலின் துணையோடு இவற்றைப் பெரிய எதிர்ப்புகளின்றி வெற்றிகரமாகச் செய்துகொண்டு உள்ளனர்.

மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் கொல்லப்பட்ட முகமது அக்லக்கின் மனைவி, தன் கணவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈசான் ஜாஃப்ரி கண்ணெதிரே கண்டதுண்டமாக வெட்டி எரிக்கப்பட்டதற்கு நீதி வேண்டி 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஸாகிய ஜாஃப்ரி, என்கவுன்டர்கள் என்று சொல்லப்பட்டுக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இர்ஷத் ஜெஹான் மற்றும் ஷொராபுதீனின் மனைவி கவுசர் பீவி என்கிற இந்த முஸ்லிம் பெண்கள் மீதெல்லாம் இரக்கம் தோன்றாத மோடி முத்தலாக்கால் பாதிக்கப்படும் பெண்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறாராம். இதற்கான ஒரே தீர்வு பொதுசிவில் சட்டமாம்.

முதலில் ‘பொது சிவில் சட்டம்’ எனச் சொல்வதே தவறு. இங்கே கிரிமினல் சட்டங்களும், சிவில்சட்டத்தில் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை முதலான தனிநபர் சட்டங்கள் தவிர பிற அனைத்து சிவில்சட்டங்களும் எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் உள்ளன. பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் சொல்ல வருவது எல்லா மதத்தினருக்குமான ‘பொது தனிநபர் சட்டம்’ என்பதுதான்.

இன்னும் சரியாகக் கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது  ‘பொது தனிநபர் சட்டம்’ கூட அல்ல. இந்துத் தனிநபர் சட்டத்தைப் பிற மதங்களின் மீது திணிப்பதுதான். அதன் மூலம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அழிப்பதுதான் இவர்களின் நோக்கம்.. சிறுபான்மையினர் இன்று கலவரப் பட்டிருப்பதன் பின்னணியும் இதுதான்.

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் சொல்வது இது நமது அரசியல் சட்டத்தின் 44 வது பிரிவில் உள்ளது என்பதுதான். இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சரியாகச் சொல்வதானால் மதம், மொழி, இனம் எனப் பலதிறப்பட்ட மக்கள் சமூகங்கள் வாழும்ஒரு துணைக் கண்டம் இது. இதற்குள் எல்லாவற்றிலும் கருத்தொற்றுமை சாத்தியம் இல்லை என்பதாலதான் நமது அரசியல் சட்டம் ‘அடிப்படை உரிமைகள்’ எனவும், ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில்தான் இந்த ஏற்பாடு. வழிகாட்டு நெறிமுறைகளாகச் சொல்லப்பட்டவை காலப்போக்கில் அரசியல் சட்ட அடிப்படைகள் ஆக்கப்பட வேண்டும் என்பது பொருள்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பொது தனிநபர் சட்டம் மட்டுமின்றி வேறு பலவும் உள்ளன, அடித்தள மக்களுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில்  வழங்கப்பட்டுள்ள இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (334ம் பிரிவு), ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல் (343) என்பதெல்லாமும் வழிகாட்டு நெறிமுறைகள்தான். இதை எல்லாம் இன்று நடைமுறையில் சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை.

தவிரவும் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்மைத் தன்மையின் அடிப்படையில் இங்கே நூற்றுக்கனகான தனிநபர்ச் சட்டங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலப் பழங்குடிகள் மத்தியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை இருப்பதால் அங்கு மட்டும் அது தனிநபர் உரிமைகளில் ஒன்றாக்கப் பட்டுள்ளது. .

ஏதோ இன்று முஸ்லிம் சட்டத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, இந்துச் சட்டத்தில் எல்லாம் சரியாக்கப்பட்டுவிட்டன  என்பதில்லை. இன்றும் கூட ஒரு இந்துக் கணவன் தன் மனைவி அவனது பெற்றோருடன் இருக்க மறுக்கிறாள் எனச் சொல்லி அவளை விவாகரத்து செய்ய முடியும். கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து போன பின்னும் கூட இந்துக் குடும்பம் என்றாலே கூட்டுக் குடும்பம் என நம் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்வதன் விளைவு இது. கூட்டுக் குடும்பம் என்கிற பெயரில் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதம் உள்ள இந்துக்கள் வரிச் சலுகை பெறுவதால் ஆண்டுக்குப் பல லட்சம் கோடி இழப்பு நாட்டுக்கு ஏற்படுகிறது.

சொல்லப்போனால் பொதுத் தனிநபர் சட்டத்தை வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்ததே தவறு. பொது தனிநபர் சட்டம் மத்திய அரசுக்கு உட்பட்டது மட்டுமல்ல. மாநில அரசாங்கச் சட்டங்களும் உண்டு. அம்பேத்கரைப் பொறுத்த மட்டில் அவர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் இந்து மதத்தில் பெண்கள் மற்றும் அடித்தள மக்கள் மீதான வன்முறைகளும் ஒதுக்கல்களும் அதிகம் என்பதால் அதை முதலில் சரி செய்தாக வேண்டும் என்பதையே முக்கிய கரிசனமாகக் கொண்டிருந்தார்.  ஆனால் அன்றைய சூழலில் அதற்கு ஆதரவில்லை. அதனால்தான் பொது சிவில் சட்டம் என்பதை வழிகாட்டு நெறிமுறையில் பொதிந்து அப்போதைக்கு அது ஒத்திவைக்கப்பட்டது.  அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்பேத்கர் இந்துச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தபோது அவருக்கு ஆதரவில்லை. மனம் நொந்து அவர் பதவி விலகினார். பின்னாளில் நேரு இந்துச் சட்டத் தொகுதியைத் தனித்தனியாகப் பிரித்துச் சட்டமாக்கினாலும் அவற்றில் பல சமரசங்களும் இடம் பெற்றன.

இரண்டு அம்சங்களை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.இப்படிச் செய்ததன் மூலம் ‘பொது சிவில் சட்டம்’ இயற்றுதல் என்கிற அரசியல் சட்ட நோக்கத்திலிருந்து விலகி ‘இந்துத் தனிநபர் சட்டம்’ மட்டும் திருத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு வகையில், பொது சிவில் சட்டம் அல்லது பொது தனிநபர் சட்டத்தைச் சாத்தியப் படுத்துவது சிக்கல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  1. இந்துத் தனிநபர்சட்டம் திருத்தப்பட்டதால் பெண்களுக்கோ, அடித்தள மக்களுக்கோ எந்தப் பெரிய பலனும் ஏற்பட்டுவிடவில்லை. எடுத்துக்காட்டாக இன்று இந்துக்கள் மத்தியில் பலதாரமணம் சட்டபூர்வமாக் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அளவில் உள்ள புள்ளி விவரங்களின்படி பலதார மணத்தைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்துக்களாயின் முதல் தாரம் தவிர மற்ற தாரங்கள் concubine, keep, mistress, வைப்பாட்டி என்றே அழைக்கப்படுகின்றனர். நீதிமன்றமும் அதே சொற்களையே பயன்படுத்துகிறது. அவர்களுக்கு சொத்து, ஜீவனாம்சம் என மனைவிக்குச் சமமான பாதுகாப்புகளும் கிடையாது. முஸ்லிம் ஆண்கள் நான்குதாரங்கள் வரை திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தாலும் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை என்பது ஒரு பக்கம். அப்படியே ஒருவர் திருமணம் செய்துகொண்டாலும் அவரது மனைவியர் எல்லோரும் சட்டபூர்வமாக அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் ஆகின்றனர். அதோடு முஸ்லிம் பெண்களுக்குக் கணவன் வீட்டார் வழங்கும் ‘மகர்’ எனும் பாதுகாப்பும் உண்டு.

இந்துச் சமூகத்திற்குள் விதவைகள் முதலானோரின் நிலையில் இன்று வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றால் அவை சட்டத் திருத்தங்களின் மூலமாக ஏற்பட்டவையல்ல. மாறாக சமூகத்திற்குள்ளிருந்தும், புற உலகில் ஏற்பட்டுள்ள பௌதீக மாற்றங்களின் ஊடாகவும்தான் இது நிகழ்ந்துள்ளது.

இத்தகைய மாற்றங்கள் இப்போது முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்று முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து  மோடியும் மற்றவர்களும் சொல்வதென்ன? 1. முஸ்லிம் பெண்களை அவர்களின் கணவர்கள் மும்முறை ‘தலாக்’ எனச் சொல்லி எளிதில் விவாகரத்து செய்துவிடுகின்றனர். 2. விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கான ஜீவனாம்சம் ‘இத்தா’ எனப்படும் அடுத்த மூன்று மாதவிடாய்க் காலத்திற்கு (menstrual cycles) மட்டுமே அளிக்கப்படுகிறது. 3, மணவிலக்கு பெற்றுப் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேந்து வாழ வேண்டுமானால் அந்தப் பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற வேண்டும்.

இவை பெண்களுக்கு எதிரானவை என்பதில் ஐயனில்லை.  முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டவைதான். ஆனால் நடைமுறையில் இவை இன்று நீதிமன்றத் தலையீட்டின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷா பானு வழக்குத் தீர்ப்பு (1895 SCR (3) 844) , ராஜிவ் காந்தி இயற்றிய முஸ்லிம் பெண்கள் சட்டம் (The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986) ஆகியவற்றுக்குப் பின்னும் கூட இந்திய உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் முத்தலாக், இத்தா காலத்திற்கு மட்டுமே ஜீவனாம்சம் முதலியவற்றை ஏற்பதில்லை. டானியல் லத்திஃபி வழக்கில் (Writ Petition (civil) 868 of 1986 ) வழங்கப்பட்ட தீர்ப்பில் (2011) இத்தா காலத்திற்கு மட்டுமின்றி விவாகரத்து செய்யப்பட்ட மனைவி உயிருடன் இருக்கும் வரை அல்லது வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரை அவருக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  Shamim Ara v State of UP வழக்கு (2002) மற்றும் Dagdu Pathan v Rohimbi Pathaan (2002) ஆகிய வழக்குகளில் தொடர்ந்து மும்முறை தலாக் சொல்வது, சாட்சிகளின்றி தலாக் சொல்வது, போதிய இடைநிலையாளர்களை வைத்து சமரச முயற்சிகள் செய்வது ஆகிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத விவாகரத்துகள் செல்லாது எனத் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன (விவரங்களுக்குப் பார்க்க: amarx.in/ முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?

 

இந்தத் தீர்ப்புகளுக்குப் பின் இன்று எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் இந்த உரிமைகளைக் கோரி நீதிமன்றங்களை அணுகினால் அவர்களுக்கு நீதிவழங்கப்படுகிறது. மேற்குறித்த நிபந்தனைகள் மீறப்பட்ட தலாக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. புதிய சட்டத் திருத்தங்கள் செய்யாவிட்டாலும் இவை இன்று நீதிமன்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சட்டக் கொள்கைகளாக (judicially evolved principles) ஏற்புப் பெற்றுவிட்டன. எப்படி ‘அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை’ என்பது இன்று சட்ட ஏற்பு பெற்றுள்ளதோ அப்படி.

சரி, இதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா எனக் கேள்வி எழுவது இயல்பு. இந்தப் பிரச்சினை இப்போது உருவான பின்னணியைப் பார்ப்போம். சில மாதங்கள் முன் ஷயாரா பானு எனும் முஸ்லிம் பெண் தனக்குச் சொல்லப்பட்ட தலாக் செல்லாது எனவும், தான் கணவர் வீட்டில் இருந்தபோது வன்முறைக்குள்ளாக்கப் பட்டதாகவும் வழக்குத் தொடர்ந்தார். இவரது வழக்குரைஞரான பாலாஜி சீனிவாசன் எனும் ஒரு பா.ஜ.க அனுதாபி ஊடக கவனம் பெறும் பொருட்டு இந்த வழக்கைத் திசை திருப்பினார். தலாக்கை ரத்து செய்தல், ஜீவனாம்சம், குடும்ப வன்முறைக்குத் தண்டனை என்கிற வேண்டுதல்களை நீதிமன்றம் முன் வைக்காமல் ‘பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும்’ என்கிற வேண்டுதலை வைத்தார். உடனடியாக ‘அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB)’ இதில் தலையிட வேண்டியதாயிற்று. தேன் கூட்டைக் கலைத்தது போல இன்று இதை முஸ்லிம்களைத் தாக்கும் ஆயுதமாக இந்துத்துவம் கையில் எடுத்துள்ளது. நரேந்திர மோடிவரைக்கும் தங்களின் ‘முஸ்லிம் அன்பை’க் காட்ட ஒரு வாய்ப்பாகி விட்டது.

இந்தப் பிரச்சினையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சத்திற்கு வருவோம். எதிர்பார்த்தது போலவே ஆணாதிக்க மதிப்பீடுகள் நிறைந்த முஸ்லிம் சட்ட வாரியம் இதை எதிர்த்தது. அதன் மனுவில் காணப்பட்ட சில வாசகங்கள் பெண்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டன. எனினும் முஸ்லிம் சட்ட வாரியம் முன்வைத்த வேண்டுதலில் இரண்டு அம்சங்கள் வரவேற்கத்தன. 1. சற்று முன் குறிப்பிட்ட டானியல் லத்தீஃபி வழக்கைச் சுட்டிக்காட்டி  உயிருள்ளவரை ஜீவனாம்சம் வழங்குதல் முதலியவற்றை சட்டவாரியமும் ஏற்றுக் கொண்டது. 2.அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்முறையைப் பொருத்த மட்டில் சில ஆண்டுகள் முன் இயற்றப்பட்ட எல்லா மதங்களுக்கும் பொதுவான ‘குடும்ப வன்முறைச் சட்ட’த்தைப் பயன்படுத்தி உரிய நிவாரணம் பெறலாம் என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது.

ஆக, நீதிமன்றங்கள் முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்களில் இப்போது ஏற்படுத்தியுள்ள திருத்தங்களை ஓரளவுக்குச் சட்ட வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையே இந்திய மக்களின் பொதுவான கருத்தாக நாம் கருத இடமுண்டு.

தனிநபர் சட்டங்கள் என்பன ஒரு வகையில் சிறுபான்மைச் சமூகங்களின் அடையாளங்களில் ஒன்றாகிவிடுகின்றன. மேலும் மேலும் பாதகமான அரசியல் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுத் தாங்கள் இந்தியச் சமூகத்திற்குள் இரண்டாம் நிலையினராக முத்திரை குத்தப்படும் நிலையை மனதில் கொண்டு இன்று முஸ்லிம்கள் கொண்டுள்ள கவலையையும், எதிர்வினையையும் நாம் மதிப்பிட வேண்டும்.

ஒட்டு மொத்தமாக இந்தப் பிரச்சினையை ஆராயும்போது நாம் வரக்கூடிய முடிவுகளை இப்படிச் சுருக்கலாம்.

  1. பல்வேறுபட்ட சமூகங்கள் அருகருகே வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில் ‘பொது சிவில் சட்டம்’, அல்லது ‘பொது தனிநபர் சட்டம்’ என்பன சாத்தியமில்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு மதத்திற்குமான தனி நபர்ச் சட்டப் பிரிவுகள் திருத்தங்களே செய்யப்படக் கூடாதவை என்பதல்ல. அவை திருத்தங்களுக்கு உட்பட்டவையே.
  2. தனிநபர்ச் சட்டங்களுக்கும் அரசியல் சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உள்ள முரண்களும், இடைவெளிகளும் காலப் போக்கில் களையப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. முஸ்லிம்களுக்குள்ளேயும் முற்போக்கு சக்திகளால் இவை முன்னெடுக்கபடுகின்றன. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன் (BMMA)’ எனும் அமைப்பு இது தொடர்பாக 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களிடம் கையொப்பங்கள் பெற்றுள்ளது. பல முஸ்லிம் ஆண்களும் அதில் கையொப்[பமிட்டுள்ளனர். இர்ஃபான் ஹபீப், ஜாவேத் ஆனந்த், ஃபைஸான் முஸ்தபா முதலான முஸ்லிம் அறிவுஜீவிகளும் இதை முன்னெடுக்கின்றனர். இது வரவேற்கப்பட வேண்டும்.
  3. இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சினை. உள்ளுக்குள் எழும் சீர்திருத்தக் கருத்துக்கள் காலப்போக்கில் வளர்ச்சி பெறும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். உரிய ஜனநாயகபூர்வமான விவாதங்கள், கருத்தொருமிப்பு ஆகியவற்றிற்கு இடமில்லாமல் அவசரமாகத் தலையிட்டு சட்டம் இயற்றுவதை ஏற்க முடியாது. இதை அரசியலாக்கி மக்களைப் பிளவு படுத்தும் இந்துத்துவ அரசியல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *