எழுதியவர் : நிகழ் அய்க்கண்
{எனது70 ஆண்டு நிறைவை குடந்தை நண்பர்கள் கொண்டாடிய நிகழ்ச்சி குறித்து நேரில் வந்திருந்த என் மாணவரும் நண்பருமான நிகழ் அய்க்கண் ‘காக்கைச் சிறகினிலே’ இதழில் (நவ 2019) எழுதியது}
பேராசிரியர் மார்க்ஸ்.கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழக-இந்திய அளவில் பொதுத்தளத்தில் இயங்கிவரும் ஒரு அறிவுஜீவி – பன்முகச்சிந்தனையாளர் – மனித உ ரிமை செயற்பாட்டாளர், இ வரின் எழுபதாவது பிறந்தநாளைக்கொண்டாடும் விதமாக கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அம்மாசமுத்திரம் தோழர்கள் இளங்கோவன், சரவணன், அயூப்கான் ஆகியோர் முயற்சியில் கடந்த 13.10.2019 ஞாயிறு அன்று,ஒருநாள் நிகழ்வாக கும்பகோணம் க்ரின்பார்க் ஹோட்டலில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வைச் சிறப்பிக்கும் விதமாக தமிழகமெங்கில் இருந்தும் ஏராளமான வாசகர்களும் நண்பர்களும் ஏராளமாக வந்திருந்தனர். அவரோடு பணியாற்றிய பேராசிரியர் சிவகுமார்,பேராசிரியர் கல்விமணி, களப்பணியாற்றிட்ட தோழர்.பொதியவெற்பன்,ஓடை,பொ. துரையரசன், புதுவை.கோ.சுகுமாறன் மற்றும் பேராசிரியருடன் இணைந்து களப்பணியாற்றிய முன்னாள் மாணவர்கள், வழக்கறிஞர்கள் தய். கந்தசாமி, தகட்டூர் ரவி மற்றும் எழுத்ட்க்ஹாளர் நிகழ்.அய்க்கண், பழங்குடி இருளர் அமைப்பு நிர்வாகிகள், சுற்று வட்டாரத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள் மக்களின் உரிமைக்காக களப்பணி யாற்றிட நாடுமுழுக்க குறுக்காகவும்-நெடுக்காகவும் பயணிக்கிறார். தான் பற்று கொண்டுள்ள கருத்தியலின் அடிப்படையில் ஊடகங்களில் பதிவாக்கம் செய்தும்,தொடர் உரையாடலின் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தன்மை கொண்ட சமத்துவம் – சுதந்திரம் – சகோதரத்துவம் – நீதி சார்ந்த கருத்துக்களை செறிவூட்டி விழிப்படையவும் செய்து வருகிறார்.
ஒரு “பிரிஸ”(PRISM)த்தில் பட்ட ஒளிக்கதிர்கள் ஏழு வண்ணங்களாக வெளிப்படுவது போல, பேராசிரியரிடமிருந்து வெளிப்படும் கருத்துக்களும் பல்வித வண்ணங்களில் (பன்மைத்துவ பார்வை) வெளிப்பட்டு ஒளிர்கிறது.
நமது காலத்தின் சாட்சியாக விளங்கும் பேராசிரியரின் அசராத களப்பணியையும்,அயராத,கருத்தியல் பார்வையையும் பற்றி சற்று பின்னோக்கி பார்க்கும் போது பிரமிக்க வைக்கிறது. இவரது பதிவுகளிலிருந்து மிகமிகச்சிலவற்றை மட்டும் நான் புரிந்துகொண்ட வகையில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
தஞ்சைமாவட்டம்,பாப்பாநாடு அருகேயுள்ள ஒரு கிராமத்தில், கம்யூனிச கருத்துக்களில் தீராத பற்றுகொண்ட குடும்பத்தில் பிறந்த இவர்,பள்ளிப்படிப்பை பாப்பாநாடு மற்றும் ஒரத்தநாட்டிலும், பட்டப்படிப்பை தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியிலும், பட்டமேற்படிப்பை சென்னை மாநிலக்கல்லூரியிலும் முடித்து,பேராசிரியப்பணியில் தஞ்சை சரபோஜி கல்லுரியில் சேர்கிறார்.இடதுசாரிக்கொள்கையின் மீது கொண்ட ஆர்வத்தால், மார்க்ஸிய பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றியும்.தீக்கதிர் நாளிதழ் மற்றும் செம்மலரில் கட்டுரைகளை எழுதி வருகிறார். அப்படியொருமுறை முதுபெரும் இயக்கத்தோழர் ஐ..மாயாண்டிபாரதி அவர்களின் சிறை அனுபவங்களைப்பற்றி பேட்டி எடுத்ததற்காக, கட்சியின் நடவடிக்கைக்குள்ளாகி நீக்கப்படுகிறார்.
பின்னர்,மார்க்ஸிய லெனினிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டும், செந்தாரகை இதழில் எழுதியும் வருகிறார்.அவ்வியக்கமானது சோவியத்யூனியனை “சமூக எகாதிபத்தியம் “ என வரையறுத்தது பேராசியருக்கு இவ்வாறு குறிப்பிடுவது உடன்பாடில்லாததால், பின்னர் அங்கிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்கிறார்.
இடதுசாரி கருத்தியலாளர்களுக்கும் – களப்பணியாளர்களுக்கும் 1989 ஆம் ஆண்டிற்குப்பிறகான காலகட்டம் என்பது மிகவும் சிக்கலானது.சோவியத் யூனியன் –கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிதைகிறது.அம்பேத்கர் நூற்றாண்டு,பாபர்மசூதி இடிப்பு ஆகியவற்றையொட்டிய காலமிது.பேரரசியலைத்தாண்டி நுண்ணரசியல்,அடையாள அரசியல்,தலித்தியம் மேலெழும்பிய காலமும் கூட. இத்தருணத்தில் மாற்று அரசியலுக்கான தேவை குறித்து தீவிரமாக செயல்படுகிறார் .அப்போதுதான் சகதோழர்களுடன் சேர்ந்து “நிறப்பிரிகை “ இதழ் வெளிவருகிறது.
இவ்விதழானது அரசியல்-சமூகம் -சாதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்வேறு அமைப்புகள்,செயற்பாட்டாளர்களூடன் சேர்ந்து கூட்டுவிவாதத்தை முன்னெடுத்ததின் காரணமாக மக்களிடையே பரவலான வரவேற்பைப்பெற்று மார்க்ஸிய கருத்தியலின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இதனையொட்டி,பேராசிரியர்,பின்நவீன உலகில் அ ரசியல் வடிவங்களில் ஏற்பட்டுவருகிற மாற்றங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தி அதனடிப்படையில் செயல்படவும்- பேசவும் – பதிய வும் செய்கிறார்.
சோவியத் யூனியன்,கிழக்கு ஐரோப்பிய சோசலிஸ அரசுகள் வீழ்ந்ததின் விளைவு, உலகளாவிய அளவில், தாராளமய உற்பத்தி முறையானது மாறி, நவதாராள உற்பத்திமுறைக்கு வித்திடுகிறது.இ ந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.இரு உலகம் ஓர் உ லகமானது.
கருத்தியலின் காலம் முடிந்துவிட்டது எனவும், நவதாராளவாதமே மீட்சிக்கு அருமருந்து எனவும், இனி கலாச்சாரங்களுக்கிடையே தான் மோதல்கள் உருவாகும் என ஆட்சியாளர்களாலும், ஓயாத கூச்சல்களுடன் ஆதரவாளர்களாலும் கட்டமைக்கப்படுகிறது.
தாராளமயகாலத்தில் (மக்கள் நல அரசு )மக்கள் அனுபவித்துவந்த சலுகைகளையும் – உரிமைகளையும் நவதாராளமயமானது,கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க ஆரம்பிக்கின்றன.
இ ச்சமயத்தில்,இந்திய அளவில் தேசியவாதமும் இந்துத்துவமும் கைகோர்க்கிறது.இதன் விளைவாக,பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பும்,பாபர்மசூதி இடிப்பும் அ தன் பிறகான இன அழிப்பு போரும் நிகழ்கிறது.
மொத்தத்துவ நோக்கு,ஒற்றை மையம் சார்ந்த அணுகல்முறை இனி சாத்தியமில்லை எனக்கருதி,தலித்,இஸ்லாம்,போன்ற விளிம்புநிலையினரின் அடையாள அரசியலின் தேவை குறித்து பேராசிரியர் பேசுகிறார்.
தமிழ்ப்புராணங்கள்,வரலாற்றுப்புதினங்கள்,புனைவு இலக்கியங்களில் ஒளிந்திருக்கும் சாதிஆதிக்க மனோபாவங்களை கட்டுடைக்கிறார்.
1980 ஆம் ஆண்டுகளுக்குப்பிறகான காலம் முதல் இன்று வரை விளிம்புநிலை மக்கள் மீது நடத்தப்பட்ட.தாக்குதல்கள், அடக்குமுறைகள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து பிற யாவரையும்விட இவர் தனித்தும்-இணைந்தும் செயல்பட்டு அதிகம் கவனப்படுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாது,இந்துத்துவத்தின் கோர முகங்களை ஒருபக்கம் மக்களிடையே அம்பலப்படுத்துகிறார்..மறுபக்கம் இந்துத்துவத்திற்கு எதிராக களமாடிய போராளிகள் மற்றும் அவர்களின் கருத்தியல்களை (உதாரணத்திற்காக, அம்பேத்கர்,தலித்,பெரியாரியம்,காந்தி, இஸ்லாம்,பெளத்தம் குறித்து) ஆழ மாகவும் விரிவாகவும் முன்னெடுத்து வலுச்சேர்ப்பவராக இருக்கிறார்.
கல்வியினூடாக பாடத்திட்டத்தில் இந்துத்துவ கருத்துக்கள் புகுத்தப்படுவதையும்,வர லாற்றுத்திரிபுகளையும் தோடர்ந்து சுட்டிக்காட்டி பதிவு செய்கிறார்.களப்பணியும் ஆற்றிவருகிறார்.
பேராசிரியருடைய கட்டுரைகள்,அறிக்கைகள்,நேர்காணல்களை கூர்ந்து படிக்கும்போது ,கடந்த காலங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக,இ வர் முன்னெடுத்த கருத்துக்களும்- ஆற்றிய களப்பணியும் தற்போதைய இந்துத்துவத்தின் பாஸிசப் போக்குகள் அதிகரித்துவரும் காலத்துடன், பொருந்தி,சமூகநீதி மற்றும் சமூக நல்லிணக்கம் பற்றிப்பேசும் மக்களிடத்தில் பேசுபொருளாக மாறியிருப்பதை காணும்போது பேராசிரியரின் தொலைநோக்குப்பார்வையை காணமுடிகிறது.
நான் புரிந்து கொண்ட வகையில், பேராசிரியர் அவர்கள்,மார்க்ஸியம்-பெரியாரியம்-அம்பேத்கரிய கருத்தியல்களுக்கிடையேயான இணக்கமான புள்ளி-வேறுபடும் புள்ளிகளை கோடிட்டுக்காட்டி,அனைவருக்குமான நீதி-சமத்துவம்-சுதந்திரம்-சகோதரத்துவத்தினை வலியுறுத்துகிறார்.
இந்துமதம்-இஸ்லாம்-கிறித்துவம்-பெளத்தம் ஆகிய மதங்களின் அடிப்படைகளை ஆய்ந்து நடைமுறையில் மதமானது பன்மைத்துவம்,அறநெறி,பயன்பாடு,சகோதரத்துவத்தை உள்ளடக்கியிருப்பது அவசியம் என்கிறார்.
அனைத்து ஒடுக்கப்பட்ட,உழைக்கும் மக்களின் விடுதலைக்காக காலச்சூழலுக்கேற்றவாறு பேராசிரியரினது பார்வையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டேசெல்கிறது.
விளிம்புநிலை மக்கள் நலனில் அக்கறை கொண்டு, கடந்தகால அரிய வரலாற்றுத்தகவல்களை சேகரித்து நிகழ்காலத்தில் நம்பிக்கையுடன் மீட்டளிக்கிறார். எதிர்காலத்தில் இம்மக்களுக்கு உதவும் என. கருத்தியல்-களப்பணியில் தொடர்ந்து செயலாற்றும் பேராசிரியரின் 80-வது பிறந்த நாளையொட்டியும் பதிவுசெய்ய விரும்புகிறேன் இன்னும் கூடுதல் தகவல்களுடன்.