சென்ற ஜூன் முதல் வாரத்தில் புனே நகரம் மற்றும் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் முஸ்லிம்கள் மத்தியில் இரட்டிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இழப்பு, அதன் மூலமாக உருவாக்கப்பட்ட அச்சம் என்பது ஒரு பக்கம். இது அரங்கேற்றப்பட்ட நேரம் உருவாக்கியுள்ள அச்சம் இன்னொரு பக்கம். பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன் பதவி ஏறியுள்ள நிலை, “நான் ஒரு இந்து தேசியவாதி” எனத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் ஒருவர் பிரதமராகியுள்ள சூழல், இந்தப் பின்னணியில் ‘இந்து ராஷ்டிர சேனா’ என்கிற ஒரு அமைப்பு முன்நின்று, இதர முஸ்லிம் வெறுப்பு சக்திகளை இணைத்து நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய அச்சத்தை சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதை நேரில் கண்டபோது மிக்க வேதனை ஏற்பட்டது.
‘மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூடமைப்பு’ (NCHRO) சார்பாக அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பங்கேற்று புனே சென்ற போது சென்ற ஜூன் 17,18,19,20 ஆகிய தேதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட தாக்கப்பட்ட மசூதிகள், உடைத்து நொறுக்கிச் சேதம் விளைவிக்கப்பட்ட முஸ்லிம்களின் கடைகள் எல்லாவற்றையும் நேரில் சென்று பார்த்தோம். மாவட்ட ஆட்சியர் சவ்ரவ் ராய், துணை ஆட்சியர் சுரேஷ் ஜாதவ், இந்தத் தாக்குதல்களை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் பி.கே பந்தார்கர், கோபினாத் படீல் ஆகியோரையும் சந்தித்தோம்.
எங்கள் குழுவில் NCHRO அமைப்பின் தேசியச் செயலாளர் ரெனி எய்லின், மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஷபனா கான், பபிதா கேஷர்வாணி, பூனாவில் செயல் படும் கபீர் கலா மஞ்ச் அமைப்பின் சுதிர் தவாலே மற்றும் ரூபாலி ஜாதவ், பென்களூருவைச் சேர்ந்த பேரா ஜி.கே இராமசாமி ஆகியோர் இருந்தனர். உள்ளூர் நண்பர்கள் சிலரும், பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பின் பொறுப்பாளர்கள் இருவரும் தாக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காட்டினர்.
பிரச்சினை மே மாத இறுதியில் தொடங்கியது. யாரோ ஒரு நபர் அல்லது ஒரு சிலர் முகநூலில் மகாராஷ்ட்ர இந்துத்துவ அரசியலின் திரு உருக்களான (icons) சிவாஜி மன்னன், சிவசேனை நிறுவனர் பால் தாக்கரே ஆகியோரை இழிவு படுத்தி ஒரு பதிவைச் செய்துள்ளனர். இன்று வரை அது யார், எங்கிருந்து செய்தனர் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. பதிலி ‘சர்வர்’களின் (proxy servers) மூலமாக வெளி நாடுகளிலிருந்து இப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன; இதன் மூல நபர் அல்லது நபர்கள் யார் எனக் கண்டு பிடிப்பது அத்தனை எளிது அல்ல எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து நாங்கள் மாவட்ட இணை ஆட்சியரிடம் கேட்டபோது அவரும் இதையே திருப்பிச் சொன்னதோடு, கூடுதலாக, “தற்போது இந்தோனேசியாவிலிருந்து இந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் இது உறுதியான செய்தி அல்ல” என்றார்.
ஆக இன்று வரை அது யார் செய்தது எனத் தெரியவில்லை. அந்தப் பதிவைப் பகிர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான எதிர்ப்பு கிளம்பியவுடன் காவல் துறையின் சைபர் பிரிவு இந்தப் பதிவுகளையும் பகிர்வுகளையும் நீக்கியுள்ளது. இந்த அரசியல் உள் நோக்கமுள்ள பதிவை யார் வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும். சிவாஜியையும் தாக்கரேயையும் பிடிக்காதவர்களும் செய்திருக்கலாம்; முஸ்லிம்களின் மீது பழி போட்டு ஒரு வன்முறையைத் தூண்டத் திட்டமிட்டவர்களும் கூடச் செய்திருக்கலாம். முசாபர் நவர் கலவரம் இவ்வாறான ஒரு போலி வீடியோவை இணையத்தின் ஊடாகப் பரப்பியதன் மூலம் தூண்டப்பட்டது என்பது கவனத்துக்குரியது.
இங்கும் கூட, இந்த விஷமத்தனமான பதிவுக்கு யார் காரணமாக இருந்திருந்த போதிலும் அரசும், காவல் துறையும், பொறுப்பான அரசியல் தலைவர்களும் உடனடியாகக் களத்தில் இறங்கி உண்மையை விளக்குதற்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மீது வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கவும் வேண்டும். ஆனால் அரசும் காவல்துறையும் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
தனஞ்சை தேசாய் என்கிற நபரின் தலைமையில் சில ஆண்டுகளாக பூனா நகரில் இயங்கி வரும் ‘இந்து ராஷ்டிர சேனா’ எனும் அமைப்பு இந்த முக நூல் பதிவை ஒட்டி மே இறுதி வாரத்தில் ஆங்காங்கு வன்முறையில் ஈடுபட்டது. தொடக்கத்தில் அரசுச் சொத்துக்களே தாக்கப்பட்டன. 250 அரசுப் பேருந்துகளை வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சவ்ரவ் கூறினார். மே 31 முதல் வன்முறையின் இலக்கு முஸ்லிம்கள் மீது திருப்பப் பட்டது.
வன்முறைகள்
மே 31 இரவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய ஹான்டேவாடி, லோனி, லான்டேவாடி, போசெரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் தொழுகைத் தலங்கள், மதரசாக்கள், கடைகள் ஆகியன தாக்கப்பட்டன. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் (இரவு 9 மணி முதல் 12 வரை) ஒரே மாதிரியாகத் தாக்கப்பட்டுள்ளன. மோட்டர் சைகிள்களில் வந்த 19 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இதைச் செய்துள்ளனர். எல்லோர் கைகளிலும் உருட்டுக் கட்டைகள். இரும்புத் தடிகள், ஹாக்கி மற்ரும் கிரிக்கெட் மட்டைகள், தல்வார் (கத்திகள்) ஆகிய ஆயுதங்கள் இருந்துள்ளன. தாக்கியவர்கள் பெட்ரோலும் கைவசம் வைத்திருந்துள்ளனர்.
“ஜெய் பவானி”, “ஜெய் மகாராஷ்டிரா” என்கிற முழக்கங்களுடன் தாக்குதல்கள் நடந்துள்ளது. தாக்குதல்கள் வெளியிலிருந்து கற்களை வீசி கண்ணாடி சன்னல்கள் மற்றும் கதவுகளை உடைப்பதுடன் தொடங்கியுள்ளன. போசெரி யில் உள்ள நூர் மொஹல்லா வில் முஸ்லிம்களின் 40 வீடுகள் இவ்வாறு சேதப்படுத்தபட்டுள்ளன. வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள லான்டேவாடியில் உள்ள மதீனா மசூதி அடித்து நொறுக்கப் பட்டுள்ளதோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கவும் பட்டுள்ளது. அப்போது மாடியில் 12 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்ட 35 பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்துள்ளனர். எல்லோரும் பக்கத்து மாடிக்குத் தாவிக் குதித்துத் தப்பியுள்ளனர். தாவிக் குதிக்கும்போது மவுலவி முகம்மது ஆலத்தின் கால் முறிந்து இன்னும் அவர் சிகிச்சையில் உள்ளார்.
ஹான்டேவாடியில் உள்ள மேமன் மசூதி தாக்கப்பட்டபோதும் அங்கும் குழந்தைகள் படித்துக் கொண்டு இருந்துள்ளனர். தொழிலதிபர் மேமன் என்பவரால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த புதிய மசூதி குறி வைத்துத் தாக்கப்படுள்ளது. இரவு 9 மணிமுதல் அரை மணி நேர இடைவெளிகளில் மும்முறை தாக்குதல் நடந்ததாகவும் போலீசுக்குப் பலமுறை தகவல் கொடுத்தும் எல்லாம் முடிந்தபின் இரவு 12 மணிக்குத்தான் அவர்கள் வந்தனர் என்றும் மேமன் நிர்வாக மேலாளர் முகம்மது அசீஸ் ஷேக் கூறினார். அதே நேரத்தில்தான் வான்டேவாடி மசூதியும் எரிக்கப்பட்டது, அடுத்த கட்டிடத்தில் இருந்த தீயணைப்பு அலுவலகத்தைப் பலமுறை தொடர்பு கொண்டும் தீயை அணைக்க அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஹான்டேவாடியில் மஸ்ஜித் ஏ சுடேஜா என்ற இன்னொரு தொழுகைத் தலமும் தாக்கப்பட்டுள்ளது. அதன் மவுலவி தலைக் காயத்துடன் சிகிச்சையில் உள்ளார்.
புனே நகர விளிம்பில் உள்ள சோனி என்னுமிடத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ரோஸ் பேகரி, பெங்களூர் பேக்கரி, மகாராஷ்ட்ரா பேக்கரி ஆகியவை கற்கள் வீசித் தாக்கப்பட்டு கண்ணாடி ஷோ கேஸ்கள், ஃப்ரிட்ஜுகள், ஷட்டர் கதவுகள் முதலியன நொறுக்கப்பட்டுள்ளன. தனது பேக்கரியில் இருந்த 35,000 ரூபாய் பணத்தையும் தாக்க வந்தவர்கள் கொள்ளை அடித்துச் சென்றதாக ரோஸ் பேக்கரி உரிமையாளர் ஷபான் சுலைமான் ஷேக் கூறினார். போகிற வழியில் உள்ள ஆலம்கிர் மசூதியையும் கல்வீசித் தாக்கிவிட்டு ஓடியுள்ளனர்.
இறந்தவர்கள் மீதும் கலவரக்காரர்கள் இரக்கம் காட்டவில்லை. லான்டேவாடியில் உள்ள ஒரு கபர்ஸ்தானில் இருக்கும் கல்லறைகளையும் ஒரு தகரம் வேய்ந்த தொழுகைத் தலத்தையும் அவர்கள் உடைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி நடந்துள்ளன என்பதையும். இவற்றில் 35 லிருந்து 70 அல்லது 80 பேர்கள் வரை பங்கு பெற்றுள்ளனர் என்பதையும் மீண்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஜூன் 2 கொடுந் தாக்குதல்
தாக்குதல் நடந்தபோது எங்குமே உடனடியாகக் காவல்துறை வந்து பாதுகாப்பு அளிக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதன் பின் அடுத்த நாளும் கூட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறப்புக் காவல் படை முதலியவற்றை நிறுத்துவது முதலான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இதன் விளைவு ஜூன் 2 புனே முஸ்லிம்களுக்கு இன்னும் கொடிய பொழுதாக விடிந்தது. ஒன்றைப் புரிவது அவசியம். புனே முஸ்லிம்கள் பெரிய அளவு வசதியானவர்கள் அல்ல. தாக்கப்பட்ட மசூதிகள் பலவும் மிகவும் எளிமையானவை. தகரக் கூறைகள், இரும்பு ஏணி மாடிப் படிகள் இப்படியாலானவை. புனே மக்களுக்கு ரொட்டி (bread) ஒரு முக்கிய உணவு. ரொட்டிக் கடைகள் பலவும் உ.பி முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. இவர்களில் பலருக்கு மராட்டி மொழியும் தெரிந்திருக்கவில்லை. மகாராஷ்டிர இந்துத்துவ சக்திகள் தற்போது வட நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வந்து தொழில் செய்யும் ‘இந்திக்காரர்களை’க் குறி வைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் பொருள் தாக்குதல் காரர்களின் இலக்கு மகாராஷ்டிர முஸ்லிம்கள் அல்ல என்பதல்ல. அடுத்த இரண்டு நாளில் கொல்லப்பட்ட மொஹ்சின் ஒரு மகாராஷ்ட்ர முஸ்லிம்தான்.
ஜூன் 2 இரவிலும் இதேபோல இதே நேரத்தில் இதே வடிவத்தில் பல இடங்களில் முஸ்லிம்களின் பேக்கரிகள், ஓட்டல்கள், மசூதிகள், வீடுகள் முதலியன தாக்கப்பட்டன. காலேபடேல், சையத் நகர், ஹடாஸ்பர் மார்கெட், உன்னதி நகர் முதலிய பகுதிகள் அன்று குறிவைக்கப்பட்டன. படேல் பேக்கரி, வெல்கம் பேக்கரி, பாரடைஸ் பேக்கரி, சகாரா ஓட்டல், நல்பந்த் மசூதி முதலியன நாங்கள் நேரில் சென்று பார்த்தவற்றில் ஒரு சில. சகாரா ஓட்டலை ஒட்டி முஸ்லிம்களுடன் நெருக்கமாக வசித்துக் கொண்டுள்ள தலித் பவுத்தக் குடியிருப்பு ஒன்றையும் கலவரக்காரர்கள் விட்டு வைக்கவில்லை. நீலா படுகோம்பே எனும் பெண்மணியும் மாருதி பாபா ஷின்டே எனும் பெரியவரும், “நாங்க 45 வருசமா இங்கே இருக்கிறோம். இப்படி நடந்ததே இல்லை” என்றனர். உருளி தேவாச்சி எனுமிடத்திலும் ஒரு ஜும்மா மசூதி தாக்கப்பட்டுப் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் பார்த்தோம்.
இந்தத் தாக்குதல்களின் ஓரம்சமாகத்தான் சோலாப்பூரிலிருந்து வந்து இங்கு ஸ்வார்கேட் பகுதியில் ஒரு டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த அந்த இளம் பொறியாளர் ஷேக் மொஹ்சின் (28) அடித்துக் கொல்லப்பட்டது. ஹடாஸ்பரில் உள்ள உன்னதி நகர் ஷைன் அஞ்சுமன் மசூதியில் இரவு நேரத் தொழுகையை முடித்துவிட்டு, நண்பன் ரியாஸ் அகமது முபாரக் ஷெந்த்ருவைத் தனது பைக்கின் பில்லியனில் அமரவைத்துக் கொண்டு இரவு 9 மணி வாக்கில் மொஹ்சின் புறப்பட்டபோது அவருக்கு இந்த மசூதியில் தான் தொழுவது இதுதான் கடைசி முறையாக இருக்கும் எனத் தெரிந்திருக்க நியாயமில்லை.
ஒரு முன்னூறு மீட்டர் தொலைவு கூடச் சென்றிருக்க மாட்டார்கள். “ஜெய் பவானி”, “ஜெய் மகாராஷ்ட்ரா” என வெறித்தனமாக முழங்கிக் கொண்டு பைக்கில் இரும்புத் தடிகள், ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மட்டைகளுடன் வந்த கும்பலைக் கண்டு தங்களின் பைக்கை ஓரமாக ஒதுக்கி நிறுத்தியுள்ளனர். மொஹ்சினின் குறுந்தாடியும் அவர் அணிந்திருந்த ஷெர்வானியும் அவரை அடையாளப் படுத்தின. கிரிக்கெட் மட்டைகளும் இரும்புத் தடிகளும் அவர் மீது உக்கிரமாக இறங்கின. பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரியாஸ் முபாரக் உடற் காயங்களுடன் தப்பி ஓடியுள்ளார். இரத்த வெள்ளத்தில் மொஹ்சினை விட்டுவிட்டு அந்தக் கும்பல் புறப்பட்டபோது சுமார் நூறு மீட்டர் தொலைவில் இத்தனையையும் கண்களில் அச்சத்துடன் கண்டு திகைத்து நின்றிருந்த இசாஸ் யூசுஃப் பாக்வான், அமீர் ஷேக் ஆகிய இருவரையும் பார்த்துள்ளது. தம்மை நோக்கி அந்தக் கும்பல் வருவதைக் கண்டு ஓடிய இசாஸ் அப்படியே தன் கிராமத்திற்குச் சென்றவர்தான். இன்னும் திரும்பவில்லை. கையில் எலும்பு முறிவுடன் உயிர் தப்பிய அமீர் ஷேக்கின் கண்களில் இன்னும் அச்சம் விலகவில்லை.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மொஹ்சின் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
அஞ்சுமன் மசூதிக்கு நாங்கள் சென்றபோது மதிய நேரத் தொழுகையை முடித்துவிட்டு இமாமும் மற்றவர்களும் வெளியே வந்தனர். மொஹ்சின் அந்த மசூதிக்கு நேரம் தவறாமல் தொழுகைக்கு வரும் இளைஞன். தனது சம்பாத்தியத்தில் சோலாப்பூரில் இருந்த தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவர். எந்த இயக்கம் அல்லது அரசியல் தொடர்பும் இல்லாதவர். கண்களில் நீர் மல்க எல்லோரும் மொஹ்சினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை அங்கே ‘பாதுகாப்பு’க்கு அமர்த்தப்பட்டிருந்த காவலர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி கேட்டுக் கொண்டிருந்தார்.
அமீர்ஷேக்கின் நிலை பரிதாபமானது. 29 வயது. திருமணமானவர். இரண்டு குழந்தைகள். பழைய இரும்பு வணிகம். சம்பவத்திற்குப் பின் அவரிடம் யாரும் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. மொஹ்சினின் கொலைக்கு அவர் நேரடி சாட்சி. அதுவே அவரது உயிருக்கு ஆபத்தும் கூட.
நாங்கள் என்ன செய்ய இயலும். கைகளைப் பற்றி தைரியம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றோம்.
இன்று அங்கே…
எங்கள் மதிப்பீட்டின்படி 40 வீடுகள், 25 மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 5 எரிக்கப்பட்டுள்ளன. 35 டூ வீலர்கள், 29 சைக்கிள்கள். 5 டெம்போக்கள், 10 பழ வண்டிகள் (தேலாக்கள்), ஒரு பெட்ரோல் பங்க், சுமார் 30 பேக்கரிகள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மொத்த சொத்திழப்பு சுமார் 4.5 கோடி ரூபாய்கள் இருக்கலாம். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மரணம்.
இந்துக்கள் தரப்பில் நால்வர் காயமடைந்துள்ளனர். கஸ்பாபேட் என்னுமிடத்தில் மசூதியைத் தாக்க வந்த கும்பலை அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் எதிர்த்தபோது இது நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் கடும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடைபெற்றுள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் சுமார் 20 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 200 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஹ்சின் கொலை தொடர்பாக 23 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹ்சின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், கலவர இழப்பு நிதியிலிருந்து மேலும் 5 லட்சமும், மத்திய அரசிடமிருந்து 3 லட்சமும் பெற்றுத் தர இயலும் எனவும் மாவட்ட ஆட்சியர் எங்களிடம் கூறினார். காயம்பட்டவர்களுக்கும், சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களுக்கும் எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது இதற்கான பரிந்துரை எதுவும் காவல்துறையிடமிருந்து வரவில்லை என்றார். காவல்துறை அந்தத் திசையில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் கடைகள் தாக்கப்பட்டவர்கள் தம் சொந்தச் செலவில் ரிப்பேர் வேலைகளைச் செய்து கொண்டு அடுத்த பத்துப் பதினைந்டு நாட்களில் மீண்டும் கடைகளைத் திறந்துள்ளனர். இனி இழப்பீட்டை மதிப்பிடுவதற்கு யாரும் வந்தால் உரிய தடயங்களும் இருக்கப்போவதில்லை. வெல்கம் பேக்கரி வாசலில் எரிக்கப்பட்ட ரொட்டி சுடும் எந்திரம் கிடந்ததைப் பாத்தோம்.
காயம்பட்டவர்களுகான இழப்பீடு குறித்துக் கேட்டபோது ஏழு நாட்களுக்கு மேல் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு மட்டுந்தான் இழப்பீடு தர சட்டத்தில் இடமுண்டு என்றனர். ஆனால் அச்சம் காரணமாகக் காயம் பட்ட ஏழு பேர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் உடனடியாக வீடு திரும்பியுள்ள்னர்,
மொத்தத்தில் சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மகாராஷ்டிர அரசுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களும் நடந்தது நடந்து விட்டது; இழப்பீட்டிற்குக் காத்திராமல் வணிகத்தைத் தொடர்வோம் என்கிற மனநிலைக்கு வந்துள்ளனர்.
இழப்பீட்டுத் தொகைகளைத் தாக்கியவர்களிடமே வசூலிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா என மாவட்ட ஆட்சியரைக் கேட்டபொழுது, ஒரு கணம் திகைத்த அவர், தாக்கியவர்கள் யார் என உறுதியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கும் முயற்சிப்போம் என்றார்.
இந்து ராஷ்ட்ர சேனா
தாக்குதல்களில் முக்க்கிய பங்கு வகித்த இந்து ராஷ்டிர சேனா அமைப்பு தடை செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்தது குறித்துக் கேட்டபோது அது தொடர்பாக காவல் துறை ஆணையரிடமிருந்து பரிந்துரை வரவேண்டும் எனப் பதில் வந்தது. அதோடு தாக்குதலில் இந்து ராஷ்டிர சேனா மட்டும் பங்கு கொள்ளவில்லை. வேறு சிலருக்கும் பங்கிருந்ததற்கு வாய்ப்புள்ளது என்றும் பதில் வந்தது. கைது செய்யப்பட்ட எல்லோரும் இந்து ராஷ்ட்ர சேனா உறுப்பினர்கள் தான் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இவ் அமைப்பு உறுப்பினர் பட்டியல் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்றார் விசாரணை அதிகாரி கோபினாத் படீல்
அதிகாரிகள் சொல்வதில் சில உண்மைகள் இல்லாமலும் இல்லை. இந்தத் தாக்குதலை முனெடுத்தது இந்து ராஷ்ட்ர சேனாதான் என்ற போதுலும் சில இடங்களில் தன்னை ஒரு மதச்சார்பற்றக் கட்சி எனச் சொல்லிக் கொள்ளும் தேசியக் காங்கிரஸ் கட்சியினரும் (NCP) தாக்குதலில் பங்கு பெற்றுள்ளனர். இது இன்று மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி என்பது குறிப்பிடத் தக்கது. ஜாமாத் ஏ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த பேரா, அசார் அலி வார்சியும் இதைக் குறிப்பிட்டார்.
இதில் கவனத்திற்குரிய அம்சம் என்னவெனில் இந்துத்துவத்தின் பிளவு அரசியல் மகாராஷ்டிரத்தின் மதச் சார்பற்ற சக்திகளிடமும் புரையோடிப் போயுள்ளது என்பதுதான். திலகர், சாவர்க்கர் காலத்திலிருந்து இந்துத்துவம் ஆழ வேர் பாய்ச்சியுள்ள ஒரு மாநிலம் அது. சமீப காலங்களில் இந்துத்துவ பயங்கரவாதத்தின் தலை நகரமாகவும் அது உள்ளது. மல்கேயான், நான்டிட் முதலான இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்கள், சாத்வி ப்ரக்ஞா கும்பலுடன் இராணுவ அதிகாரிகள் பலர் தொடர்பு கொண்டிருப்பது, இந்துத்துவ சக்திகள் நடத்தும் போன்சாலா இராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகியன மகாராஷ்ட்ராவை மையம் கொண்டு செயல்படுவதை நாம் மறந்துவிட இயலாது.
இந்துத்துவ பயங்கரவாதத்தைப் புலனாய்வு செய்த நேர்மையான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்காரேயின் கொலையில் ஒளிந்துள்ள மர்மம் இன்னும் முழுமையாகக் கட்டவிழ்க்கப்படவில்லை. இத்தகைய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் மகாராஷ்டிரத்தை மையங் கொண்டு செயல் பட்டு வருவது குறித்த கவன ஈர்ப்பை 2010 தொடங்கி பல்வேறு நல்லெண்ணங் கொண்ட அமைப்புகளும் மகாராஷ்ட்ர மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் காவல்துறை அதைப் பொரருட் படுத்தவில்லை என்கிறார் முன்னாள் மகாராஷ்ட்ர காவல்துறை ஐ.ஜி முஷ்ரிஃப்.
இந்தப் பின்னணியில் இருந்துதான் கடந்த சில ஆண்டுகளாக புனேயை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிற மும்பையைச் சேர்ந்த தனஞ்சய் தேசாயுடைய இந்து ராஷ்ட்ர சேனாவின் செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அமைப்பு குறித்து பல கட்டுரைகள் மராட்டிய ஆங்கில இதழ்களில் கிடைக்கின்றன. புனேயில் மட்டும் சுமார் 4000 பேர் தேசாயின் பின்னுள்ளனர் எனக் கூறப்படுகிறது. உயர் சாதியைச் சேர்ந்த தனஞ்சை தேசாயின் இந்த ஆதரவாளர்கள் அனைவரும் பெரும்பாலும் அடி நிலையினர். அவ்வளவு பேரும் வேலை இல்லாத இளைஞர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்வது, நிலத் தகராறுகள், ரியல் எஸ்டேட் பிரச்சினைகளில் தலையிடுவது முதலான செயல்பாடுகளினூடாக இந்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வருமானம் ஈட்ட வழி செய்யப் படுகிறது என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.
தேசாய் மீது மும்பையிலும் புனேயிலும் குறைந்த பட்சம் 22 வழக்குகள் உள்ளன. அவற்றில் மூன்று கொள்ளை மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பானவை. பிற அனைத்தும் வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பானவை, 2007ம் ஆண்டில் ஒரு இந்துப் பெண் முஸ்லிம் இளைஞனைக் காதலித்து ஓடிப் போனது தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சி ஒன்றின் மீது தாக்குதல் தொடுத்தபோது தேசாய் மற்றும் இந்து ராஷ்ட்ர சேனாவினர் கவனத்திற்கு வந்தனர். பின்னர் வெடி குண்டு வழக்குகளில் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது இவர்கள் நீதிமன்றத்தின் முனறந்தக் கைதுகளைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.
புனேயைப் பொருத்த மட்டில் 12 சதம் மக்கள் முஸ்லிம்கள். இன்று தாக்குதல் நடந்துள்ளவை அவர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதிகள் லான்டேவாடி, ஹடாப்சர் முதலான பகுதிகளில் இந்து ராஷ்ட்ர சேனா வலுவாக உள்ளது. அங்குதான் தாக்குதல்களும் வலுவாக நடந்துள்ளன.
வரலாற்று ரீதியாக மராட்டிய ஆட்சியின் மையமான புனேயில் கரந்த 15 ஆண்டுகளாக வலதுசாரி இந்துத்துவ சக்திகள் தீவிரமாக வேலை செய்கின்றன. சென்ற ஜனவரி 5, 2004ல் ‘சாம்பாஜி பிரிகேட்’ என்கிற அமைப்பினர் புனேயின் புகழ் பெற்ற ‘பன்டார்கர் கீழைத் தேய ஆய்வு நிறுவனத்தை’ (BORI) தாக்கி புத்தகங்கள் முதலியவற்றை அழித்தனர். சில பேராசிரியர்களும் தாக்கப்பட்டனர். ஜேம்ஸ் லெய்ன் என்கிற அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய “சிவாஜி: முஸ்லிம் நாட்டில் ஒரு இந்து அரசன்” என்கிற நூலில் உள்ள கருத்துக்கள் சில தங்களுக்குப் பிடிக்காததால், அந்த நூலாசிரியர் நன்றி சொல்லியுள்ள ஆந்த ஆய்வு நூலகத்தையும் பேராசிரியர்களையும் தாங்கள் தாக்கியதாக சாம்பாஜி பிரிகேட் கூறியது. ஜனவரி 13, 2010ல் தகவல் உரிமைப் போராளி சதீஷ் ஷெட்டி என்பவர் தால்கேயான் என்னுமிடத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். 2013 ஆகஸ்ட் 20 அன்று புகழ்பெற்ற பகுத்தறிவுவாதி டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்து நாளிதழில் இதைக் கண்டித்து எழுதிய திரைப்படம் மற்ரும் நாடகத் தயாரிப்பாளரும் நடிகருமான அமோல் பலேல்கர், “இந்த ஆண்டு இதுவரை 10 சமூகப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் புனேயில் கொல்லப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார். இந்த 5 பேர்களில் ஜூலை 8, 2013ல் கொல்லப்பட்ட பிரகாஷ் கோந்தாலே ஒருவர். இந்துத்துவ வெறுப்பு அரசியலைக் கடுமையாக எதிந்த்து வந்த கோந்தாலேயைக் கொன்றதற்காக இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளோர் இந்து ராஷ்ட்ர சேனா அமைப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்று புனே முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள் இந்தத் தாக்குதல்களை இந்தப் பின்னணிகளிலிருந்து நாம் பார்க்க வேண்டும். மொஹ்சினின் கொலை என்பது அவரது தாடி மற்றும் அவர் அணிந்திருந்த ஷெர்வானி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வெறும் தற்செயலான நடவடிக்கை அல்ல. அதற்குப்பின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையும் சதிச் செயலும் உள்ளன. மொஹ்சின் இல்லாவிட்டால் தாடியும் தொப்பியும் அணிந்த வேறொரு முஸ்லிம் அன்று கொல்லப்பட்டிருப்பார் என்பதுதான் உண்மை.
பிரச்சினை மிகவும் ‘சீரியசான’ ஒன்று. தனஞ்சய் தேசாய் மீது இன்று சதித்திட்ட வழக்கு போடப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது. காவல்துறை, நிர்வாகம், ஆளும் கூட்டணிக் கட்சி எல்லாவற்றிலும் புரையோடிப்போயுள்ள இந்துத்துவக் கருத்தியல் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உரிய நீதி கிடைக்காது என்கிற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. தனஞ்சை தேசாய் மற்றும் இந்து ராஷ்டிர சேனாவை ஏதோ இன்னொரு இந்துத்துவ அமைப்பு எனக் காணாமல் இந்தத் தாக்குதலின் பின்னணி இன்னும் விரிவான பயங்கரவாதத் தொடர்புகளுடையது என்கிற நோக்கிலிருந்து புலனாய்வு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இன்றைய சூழலில் இது சாத்தியமா?
சாத்தியமாகாவிட்டால் இது போன்ற தாக்குதல்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் இன்னும் அதிகமாகலாம்.