பாபர் மசூதித் தீர்ப்பு எதிர்பார்த்தது போலத்தான் வந்துள்ளது. பெரிய வியப்பொன்றும் இல்லை. பாபர் மசூதி வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் அத்துமீறப்படுகின்றனர். அதற்கு அரசு ஆதரவு இருக்கிறது. அது ஆங்கில அரசானாலும் சரி, காங்கிரஸ் அரசானாலும் சரி, பா.ஜ.க அரசானாலும் சரி அதுதான் வரலாறாக இருந்துள்ளது.
1528ல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. இதுதொடர்பான முதல் வழக்கு 1853 வாக்கில்தான் தொடரப்பட்டது. பாபர் மசூதி பிரச்சினை அப்போதுதான் தொடங்குகிறது. 1855ல் பாபர் மசூதியை ஒட்டி நுழைவாயிலுக்கு வெளியே ஒரு பகுதியை இராமன் பெயரால் மகந்த் ரகுபர்தாஸ் என்பவரோடு ஒருசிலர் ஆக்ரமித்துத் திண்ணை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துகின்றனர்..
1857ல் பகதூர்ஷா தலைமையில் சிப்பாய்ப் புரட்சி வெடிக்கிறது. அதில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக நின்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையை எதிர்க்கின்றனர். ஆங்கிலப் படைகள் புரட்சியை ஒடுக்கி இந்தியத் துணைக் கண்டம் விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். அந்நியச் சுரண்டலுக்கு எதிராக இப்படி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாய்த் திரள்வதை ஆங்கில அரசு விரும்பாததை நாம் அறிவோம்..
புரட்சி நடந்த அதே ஆண்டில் மசூதி வளாகத்தில் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த அந்த “ராம் சபுத்ரா” எனும் அந்தத் திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலி அமைத்து இராமர் முதலான சிலைகளை வைத்து வழிபாடு செய்ய ஆங்கிலேயர்கள் அனுமதிக்கின்றனர்.. எனினும் அந்தத் திண்ணைமீது கூரை அமைக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இப்படியாகப் பிரச்சினை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ரகுபர்தாஸ் வழக்குத் தொடர்ந்தும் பயனில்லை. முஸ்லிம்கள் மசூதியில் தொழுவதும் இவர்கள் வெளியில் உள்ள இந்தத் திண்ணையில் உள்ள விக்கிரகங்களுக்குப் பூசைகள் செய்வதும் (limited rights) தொடர்ந்தன.
1931ல் அயோத்தியில் நடந்த ஒரு மிகப் பெரிய மதக் கலவரத்தில் பாபர் மசூதி தொடர்பான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்த கல்வெட்டு உடைத்து அகற்றப்படுகிறது.
1947ல் இந்தியா சுதந்திரம் அடைகிறது. பாகிஸ்தான் பிரிவினை, அதை ஒட்டிய கொடூரமான மதக் கலவரங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நேரு செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுகிறார். காஷ்மீர் யாருக்கு, இந்தியாவுக்கா, பாகிஸ்தானுக்கா இல்லை அது ஒரு சுதந்திரநாடாக விளங்குமா என்கிற கேள்விக்குறியோடுதான் முதல் இந்திய – பாக் போருக்கு மத்தியில் காஷ்மீர் தற்காலிகமாகவும், தனித்துவமான சிறப்புரிமைகளுடனும் இந்தியாவுடன் இணைக்கப்படுகிறது.
அந்தக் கதை ஒருபக்கம் இருக்கட்டும். அப்போது காங்கிரசுக்குள்தான் இன்றைய பா.ஜ.கவும் இருந்தது என்பதையும் நேரு அமைச்சரவையில் அவர்கள் பங்கேற்றார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தி கொல்லப்பட்ட பின்தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை முதலான அமைப்பைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கக் கூடாது என்பது நிபந்தனையாக்கப்பட்டு அமைச்சரவையில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி முதலானவர்கள் வெளியேறி “பாரதீய ஜனசங்” கட்சியைத் தொடங்குகின்றனர். ஆனாலும் நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். அதன்பின்னும் கூட நேரு அமைச்சரவையில் இருந்த துணைப்பிரதமர் வல்லபாய் படேல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் வல்லபபந்த், ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் உட்படப் பலரும் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்றான மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. பசுவதைச் சட்டம் இயற்றப்பட வேண்டும், சோமநாதபுரம் ஆலயத்தை அரசு செலவில் புதுப்பித்துக் குடமுழக்கு நடத்த வேண்டும், அம்பேத்கரின் இந்து திருமணச் சட்டத்தை ஏற்கக் கூடாது முதலான கொள்கைகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு வற்புறுத்தியவர்கள் இவர்கள்.
இந்தப் பின்னணியை மனதில் ஏற்றுக் கொண்டுதான் நாம் பாபர் மசூதிப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இப்படியான சூழலில்தான் 1949 மே 22 – 23 தேதிகளுக்குப் பொதுவான நள்ளிரவில் பாபர் மசூதியின் பெருங் கதவுகள் உடைக்கப்பட்டு மசூதியின் தொழுகை மையத்தில் இராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. முதல்நாள் இரவு ‘இஷா’ தொழுகையை முடித்துச் சென்றபோது அயோத்தி முஸ்லிம்களுக்கு அதுதான் தாங்கள் அங்கே மேற்கொண்ட கடைசித் தொழுகை என்பதை அறிந்திருக்கவில்லை. காலையில் அவர்கள் ‘சுப்ஹு’ தொழுகைக்கு வந்தபோது மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டுப் புனிதம் அழிந்து (desecration) கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. சிலைகள் வைக்கப்பட்டுப் புனிதம் அழிந்த அந்த மசூதியில் சிலைகள் நீக்கப்படாமல் தாங்கள் தொழ முடியாது என அவர்கள் திரும்புகின்றனர்.
அப்போது ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகியாக (District Magistrate) இருந்த K.K.K. நய்யார் ஒரு அப்பட்டமான இந்துத்துவவாதி. இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய நபர். அவருடைய ஒப்புதலுடன்தான் மசூதிக்குள் இந்தச் சிலை வைப்பு நடந்தது. பின்னாளில் இந்த அதிகாரி தன் பணியை விட்டு விலகி பாரதீய ஜனசங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத் தக்கது. மசூதிக்குள் சிலை வைக்கப்பட்ட செய்தி அறிந்த நேரு பதறினார். அப்போது அவர் உ.பி மாநில முதலமைச்சர் வல்லப பந்த், அரசியல் சட்டம் இயற்றப்படும் இடைக்காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி மற்றும் தனது நண்பர் ஒருவருக்கும் எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு எனது ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு’ நூலில் உள்ளன. அவற்றை வாசித்தால் இப்படி பாபர்மசூதி இழிவு செய்யப்பட்டது பின்னாளில் நமது ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எப்படி மிகப் பெரிய ஆபத்தாக முடியும் என்பதை நேரு முன்னூகித்துத் துடித்தார் என்பது விளங்கும். அவர் எத்தனை வேண்டிக் கொண்டும் முதல்வர் பந்த் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்ட அந்தச் சிலைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
1949 டிசம்பர் 29 ஃபைசாபாத் நீதிமன்றம் அரசிடம் மசூதியைப் பாதுகாக்கும் பொறுப்பை அளிக்கிறது. ஃபைசாபாத் கூடுதல் நடுவர் முனிசிபல் தலைவரை ‘ரிசீவராக’ நியமிக்கிறார். மசூதியைப் பூட்டி, ‘சீல்’ வைத்து அது ‘சர்ச்சைக்குரிய பகுதி’ என அறிவிக்கப்படுகிறது. மாநில அரசு எல்லாவற்ரையும் மௌனமாக ஏற்றுக் கொண்டது..
1949ல் முஸ்லிம்கள், இந்துக்கள் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகினர். 1950ல் மசூதிக்குள் வைக்கப்பட்ட ராம் லல்லாவுக்கு பூசை செய்ய அனுமதிக்குமாறு இந்துக்கள் தரப்பில் இரு வழக்குகள் தொடரப்படுகின்றன. மசூதியில் வைக்கப்பட்ட ராமர் சிலைகளுக்குத் தினமும் பூசை செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. எனினும் வணங்க வருவோர் உள்ளே செல்ல இயலாது. வாசல் மூடப்பட்டிருக்கும். வெளியிலிருந்தே வணங்க வேண்டும்.
1959ல் ‘நிர்மோகி அகாரா’ எனப்படும் வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ராமானந்தி பைராகி சாதுக்கள் அமைப்பு ஒன்றும் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. அதுவும் ராமர் அங்குதான் பிறந்தார் எனவும் தாங்களே பாபர் மசூதி உள்ள இடத்தை நிர்வகிக்கும் ‘ஷெபாய்த்’ (மேலாளர்) எனவும் அவர்கள் உரிமை கோரினர். 1961டிசம்பர் 11 அன்றுதான் ‘சன்னி வக்ஃப் வாரியம்’ வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. ‘லிமிடேஷன்’ சட்டத்தின்படி காலம் கடந்துவிட்டதால் அவர்கள் இனி வழக்கில் சேர முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்தது. எனினும் 12 ஆண்டுகள் வரை ஒருவர் தமது உரிமையைக் கோரலாம் என்கிற வரையரையைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களின் மேல் முறையீட்டை அனுமதித்தது..
காந்தி கொலைக்குப் பிறகு சற்றே அடங்கிக் கிடந்தவாறே தம் இயக்கங்களை வலுவாகக் கட்டிக் கொண்டிருந்த இந்துத்துவத் தீவிர அமைப்புகள் மீனாட்சிபுர மதமாற்றத்தை (1983) ஒட்டி இந்திய அளவில் ஏற்பட்ட சர்ச்சைகளின் பின்னணியில் வெளிப்படையாகக் களத்தில் இறங்கிச் செயல்படத் தொடங்கின. 1984ல் ‘விசுவ இந்து பரிஷத்’ பாபர் மசூதியைத் தகர்த்து அங்கே ராமர் கோவில் கட்டுவது என வெளிப்படையாக அறிவித்துச் செயல்படத் தொடங்கியது. பாபர் மசூதிக்கு அருகில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் ஒன்றையும் நாட்டியது. அனுமதி இன்றிக் கட்டப்பட்ட அந்த அடிக்கல் அகற்றப்படவும் இல்லை அதை ஒட்டி 1986 ல் முஸ்லிம்களும் பாபர் மசூதியைப் பாதுகாப்பதற்கென ‘பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவை’ உருவாக்கினர்.
1986 பிப்ரவரி 1 அன்று ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே பாபர் மசூதியைத் திறந்து, உள்ளே சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கு பூசை செய்ய அனுமதிக்கிறார். அதாவது அன்றுமுதல் பக்தர்கள் மூடப்பட்ட கதவுக்கு வெளியிலிருந்து வணங்காமல் மசூதிக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர் சிலைகளுக்கு நடக்கும் பூசையில் கலந்துகொண்டு வணங்கலாம். ராஜீவ் காந்தி தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசின் ஒத்துழைப்புடன் அது நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது. நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து எந்தச் சட்ட நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட முஸ்லிம்களின் அதிருப்தியை ஈடு செய்ய ராஜீவ் காந்தி 1986 பிப் 25 அன்று அப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த ஷாபானு தீர்ப்பிற்கு எதிராக நாடாளுமன்ற்த்தில் மசோதா கொண்டு வந்தது தனிக் கதை.
1989ல் இந்துக்கள் சார்பாக இன்னொரு வழக்கும் தொடரப்பட்டது. வழக்கைத் தொடர்ந்தது இராமனின் “அடுத்த நண்பர்”. நீதித்துறை மொழியில் யாரொருவர் நேரடியாக வந்து வழக்காட முடியாதோ அவருக்குப் பதிலாக நீதி மன்றத்தில் வழக்காட அனுமதிக்கப்படுபவர் ‘அடுத்த நண்பர்’ (next friend) எனப்படுவார். அப்படியான அடுத்த நண்பர் உயிருள்ள மனிதராக இருக்கவேண்டும் என்பதில்லை என்கிற அடிப்படையில் இங்கு ‘ராம் லல்லா’ சிலையும், இராமர் பிறந்த இடமும் (ஜன்மஸ்தானம்) இதன் மூலம் வழக்காடிகளாக (juridical entities) நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டன.1989 ஜூலை 10 அன்று எல்லா வழக்குகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
1990ல் எல்.கே அத்வானி பாபர் மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டுவதற்கான, தன் இரத யாத்திரையைத் தொடங்கினார். கஜினி முகமதால் பலமுறை தாக்கப்பட்டதாகக் கருதப்படும் சோமநாதபுரம் ஆலயத்திலிருந்து தொடங்கிய அந்த ரத யாத்திரை வடமாநிலங்கள் பலவற்றின் ஊடாகவும் மக்களைப் பிளவுறுத்தும் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்தவண்ணம் அயோத்தியை நோக்கி வந்தது.
1992 டிசம்பர் 6 அன்று மத்திய மாநில அரசுகளின் கண்முன் ஷார்சி முகலாயக் கட்டிடக் கலையின் அற்புதச் சின்னமாக விளங்கிவந்த அந்த அழகும் வலுவும் மிக்க மசூதி இடித்துத் தகர்த்து மண்ணாக்கப்பட்டது. அது மட்டுமல்ல மசூதி இருந்த அந்த இடத்தில் இராமர் சிலைகளை வைத்து பூசை செய்ய தற்காலிகக் கூறையுடன் கூடிய அமைப்பு ஒன்றும் கட்டப்பட்டது. ஒரு பிருமாண்டமான கட்டிடத்தை உடைத்து அள்ளி அகற்றத் தேவையான உரிய வசதிகள் மற்றும் கருவிகளுடன் அது நடந்தது. இரண்டே நாட்களில் எல்லாம் முடிந்தன. அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய காவற்படைகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அன்றைய பிரதமர் நரசிம்மாராவ் எல்லாம் முடிந்ததை உறுதி செய்து கொண்டபின் உ.பியை அப்போது ஆண்ட கல்யாண்சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியைக் கலைத்தார். மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியே கட்டித் தரப்படும் என வாக்குறுதி ஒன்றையும் அள்ளி வீசினார். ஆனால் அவரது பதவிக் காலம் முடியும் வரை அவர் அந்தத் திசையில் எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை.
1993ல் இரண்டு சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. பாபர் மசூதி இருந்த 2.77 எக்கர் நிலத்தைக் கையகப்படுத்தவதற்கான சட்டம் ஒன்று. மற்றது 1947 ஆக 15 அன்று வழிபாட்டுத்தலங்கள் எங்கெல்லாம் இருந்தனவோ அந்த நிலை இனி மாற்றமின்றித் தொடரும் என்பது..
இவ்வளவு விரிவாக இந்த வரலாற்றைச் சொல்ல நேர்ந்ததன் அவசியம் ஏன் ஏற்பட்டது எனில் இந்தப் பிரச்சினை தொடங்கிய அன்று முதல் இன்றைய தீர்ப்பு வரை ஒவ்வொரு நடவடிக்கையும் அரசுகளின் ஒத்துழைப்புடனேயே நடந்தன; அவற்றை நீதிமன்றங்கள் ஏற்பளித்து நியாயப்படுத்தின என்பவற்றை நாம் முதலில் உறுதியாக மனதில் பதித்துக் கொள்வது அவசியம். இந்த வரலாற்றின் ஒரு தர்க்கபூர்வமான முடிவாகத்தான் இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்வது அவசியம். இனி இன்றைய இந்தத் தீர்ப்பு குறித்துச் சிலவற்றைப் பார்ப்போம்.
1.ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் சட்ட அமர்வு இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐவரில் யாரும் மாற்றுக் கருத்து ஒலிக்காமல் ஒருமித்த குரலில் தீர்ப்பை எழுதியுள்ளனர். வழக்கமாக யாராவது ஒருவர் தீர்ப்பை எழுதுவார். மற்றவர்கள் ஒப்புதல் அளித்துக் கையொப்பம் இடுவார்கள். இந்த வழமை இங்கு மீறப்பட்டுள்ளது ஐவரில் யார் இதை எழுதினார்கள் எனச் சொல்லப்படாததோடு இல்லாத வழக்கமாக ஒரு பின்னிணைப்பு ஒன்றும் (addendum) இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அது சட்டத்தைத் தாண்டி இராமர் கோவில் பற்றிய நம்பிக்கைகளைப் பேசுகிறது. இதுவும் அனாமதேயமாகப் பெயரில்லாமலேயே இணைக்கப்பட்டுள்ளது. ஏன் என யாரும் அறியோம்.
- மசூதிக்கு முன்னதாக அங்கே ஏதேனும் கட்டுமானம் இருந்திருந்தாலும் அது ஒரு கோவில் என்பதற்கு சாட்சியம் ஏதுமில்லை என்பதை இன்றைய தீர்ப்பு வாயளவில் ஏற்றுக் கொண்ட போதிலும் மசூதி இருந்த இடத்தில் முன்னதாக இராமர் கோவில் இருந்ததாக வழக்காடியவர்களுக்கே அங்கே ராமர் கோயில் கட்ட தீர்ப்பு உரிமை அளிக்கிறது. அதாவது எந்த சாட்சியங்களும் இல்லாமலேயே தீர்ப்பு ஒரு சாரருக்குச் சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. ஆறுதலாக இன்னொரு தரப்பான முஸ்லிம்களுக்கு அயோத்திக்குள் அவர்கள் விரும்பும் மற்றோர் இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் எனக் கூறுகிறது. உரிமை இல்லைச் சொன்னபின் அந்தத் தரப்பிற்கு மாற்று நிலம் அளித்து அப்படி வழி இல்லை ஆயினும் அரசியல் சட்டத்தின் 372ம் பிரிவு அளிக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இது செய்யப்பட்டுள்ளது.
- 1528ல் பாபரின் தளபதி மீர்பாகியால்தான் இம்மசூதி கட்டப்பட்டது என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு உண்மை. ஆனால் 1528 முதல் 1857 வரை அங்கே தொழுகை நடந்தது என்பதற்கு முஸ்லிம் தரப்பு எந்த சாட்சியத்தையும் அளிக்கவில்லை என தீர்ப்பில் சொல்லப்படுகிறது.1857ல் நடந்த முதல் சுதந்திரப் போரில் இப்பகுதியில் நிறைய ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர். அப்படியான நிலையில் மசூதியில் தொழுகை நடந்தது என்பதற்கு இன்று என்ன சாட்சியத்தை அளிக்க இயலும். “மசூதியோ, கோவிலோ, குருத்துவாராவோ எதுவானாலும் தொழுவதற்குத்தானே கட்டுவார்கள். படுத்துத் தூங்குவதற்கா கட்டுவார்கள்?” என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேட்பது குறிப்பிடத் தக்கது.
- தீர்ப்பளித்துள்ள இந்த உச்சநீதிமன்ற அமர்வு ஆக மூத்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட ஒரு அரசியல்சட்ட அமர்வு. ஒரு ஜனநாயக அமைவின் ஆக உன்னதமானதும் இறுதியானதுமான அடிப்படை நமது அரசியல் சட்டம் (constitution) மட்டுமே. ஆம் “மட்டுமே”. அடுத்தபடியாகத் தீர்ப்பின் அடிப்படை “சான்று” அல்லது “சாட்சியம்” (witness).இவற்றைக் காட்டிலும் எதுவும் அடிப்படையானதாகவோ புனிதமானதோ இருக்க முடியாது. – “நம்பிக்கை” உட்பட. அரசியல் சட்டம், சாட்சியம் என்கிற இந்த இரண்டு அம்சங்களும் இந்தத் தீர்ப்பில் நிறுவப்பட்டுள்ளனவா என்பதைப் பார்ப்போம்.
முதலில் அரசியல் அரசியல் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். நமது அரசியல் சட்டத்தின் 25, 26ம் பிரிவுகள் குடிமக்களின் மத உரிமைகளை வரையறுக்கின்றன. மத உரிமைகள் என்பன எந்த ஒரு மதத்தையும் கடைபிடிக்கும் உரிமை மட்டுமல்ல. தமது வழிபாட்டுத் தலங்களையும், மரபுகளையும் அந்தந்த மதங்களைச் டேர்ந்தவர்கள் காத்துக்கொள்ளும் உரிமையும் அதில் அடங்கும். பாபர் மசூதி இடிப்பில் அந்த உரிமை முற்றாக மீறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பில் ஓரிடத்தில்ம் கூட அரசியல்சட்டத்தின் 26ம் பிரிவு மேற்கோளாகக் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அடுத்து சான்று எனும் அம்சத்தை எடுத்துக் கொள்வோம். 1528 ம் ஆண்டு முதல் அங்கே ஒரு மசூதி இருந்தது. 450 ஆண்டுகளாக அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர். 1992ல் அது உலகின் கண்முன் ஒரே நாளில் இடித்து வீழ்த்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இட்ட ஆணையின்படி நடத்தப்பட்ட அகழ்வாய்வு மசூதிக்கு முன் அங்கொரு கட்டுமானம் இருந்தது எனக் கூறியபோதும், அது ஒரு இராமர் கோவில் என்பதை எல்லாம் அந்த ஆய்வு நிறுவவில்லை என்பதை இந்தத் தீர்ப்பு வெளிப்படையாக ஏற்றுப் பதிவு செய்கிறது. அதாவது மசூதிக்கு முன்னதாக மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் இருந்தது என்பதற்கு எந்த எந்தச் சாட்சியமும் இல்லை என்பதை இந்தத் தீர்ப்பு ஏற்றுப் பதிவு செய்கிறது. இராமர் கோவில் இருந்தது என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கைகள் பரஸ்பரம் போற்றி மதிக்கப்பட வேண்டியவை என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் ஒரு தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு அது ஒரு அடிப்படையாகவோ சான்றாகவோ முடியாது. அது மட்டுமல்ல 1528 முதல்1857 வரை பாபர் மசூதியில் தொழுகை நடந்தது என்பதற்கு முஸ்லிம்கள் எந்தச் சான்றையும் முன்வைக்கவில்லை எனச் சொல்லும் இந்த நீதிவான்கள் எந்தச் சாட்சியமும் இல்லாமலேயே மசூதிக்கு முன் அங்கொரு இராமர் கோவில் இருந்தது என ஏற்றுக் கொண்டுள்ளது வியப்பை அளிக்கிறது.
இன்றைய தீர்ப்பு சட்டம், சாட்சியம் என்கிற இரு அடிப்படைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்கிற வகையில் ஏற்க இயலாத ஒன்று.
இது ஒரு குடிமக்கள் அரசியல் சட்டத்தின்மீது நம்பிக்கை இழப்பதற்கே இட்டுச் செல்லும். அந்த வகையில் நவம்பர் 09, 2019 என்பது நமது அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு வேதனை மிகு நாளாகவே பதியப்படும்.
ஒரு சில முஸ்லிம் அமைப்புகளும் சிறு குழுக்களும் தவிர இடதுசாரிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது இன்னும் பெரிய சோகம். நீதிமன்றத் தீர்ப்பிற்கு உள் நோக்கம் கற்பிக்கக் கூடாதுதானே ஒழிய அதை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு என்பதை எப்படி அவர்கள் புறக்கணித்தார்கள்? வரலாற்றின் முன் அவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்துத்தான் ஆக வேண்டும்.