நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

அ.மார்க்ஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பது முக்கியமான கேள்வியாக மேலெழுந்துள்ளது. எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் தொழிற்சங்கத்தினர் எனப் பலரும் பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து பாரதீய ஜனதா கட்சிக்கும் அதற்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள் எனப் பொதுமக்களை நோக்கி வேண்டும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது…

தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது என்பதும், அவ்வாறு வாக்களிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதும் ஒரு அடிப்படை உரிமை. இன்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அவ்வாறு மக்களின் ஆதரவை நாடிப் போய்க் கொண்டுள்ளனர். இதற்கு மத்தியில்தான், “யாருக்கு ஓட்டளிப்பது என்கிற உங்களின் தேர்வு உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் நாங்கள் பரிந்துரைக்கவும் இல்லை. அதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை மட்டும் நாங்கள் உங்கள் முன் வைக்கிறோம்”. – என இன்று பல்வேறு சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முதலியோர் இந்தியாவெங்கும் களம் இறங்கியுள்ளனர்.

இதற்குமுன் வேறெப்போதும் இப்படியான நிலை ஏற்பட்டதில்லை. இன்று ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது?

நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த முறை அவர்களைத் தோற்கடித்துவிட ஜனநாயகத்தில் வாய்ப்புள்ளது.. ஆனால் நாம் தேர்ந்தெடுப்பவர்கள் இனி தேர்தல் நடத்துவதையே சாத்தியமில்லாமல் செய்யக் கூடியவர்களாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது?

அப்படியான ஒரு சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இன்று கூட (ஏப்ரல் 06, 2019) சென்னையில் கல்வியாளர்கள், அறிவியல் அமைப்பினர் முதலானோர் ஒன்று கூடி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் “யாரைத்  தேர்ந்தெடுக்கக் கூடாது என” – என விளக்கினார்கள். வரும் ஏப்ரல் 11 அன்று அப்பட்ரியான ஒரு பிரகடனத்தைச் சென்னையில் தமிழ் எழுத்தாளர்கள் முன்வைக்கின்றனர்.

இப்போது தேர்தல் தேதிகள் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு மாதம் முன்பு கூட மக்கள் மத்தியில் ஒரு ஐயமும் அச்சமும் இருந்தது. புல்வாமா தாக்குதலைக் காரணமாகச் சொல்லி தேர்தலை ரத்து செய்துவிடுவார்களோ என்கிற ஐயம் இந்தியா முழுமையிலும் ஒரு பேச்சுப் பொருளாக இருந்ததை அறிவோம்.

அப்படி மக்கள் ஐயம் கொள்ளும் அளவிற்கு ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை இல்லாதவர்களின் ஆட்சி இப்போது நடந்து கொண்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கும் எந்தக் கட்சிக்கும் இல்லாத சில “பெருமைகள்” பா.ஜ.கவுக்கு உண்டு. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.முக என எந்தக் கட்சியானாலும் அவை சுயேச்சையாக இயங்குபவை. ஆனால் பா.ஜ.க அப்படியல்ல. அதைப் பின்னிருந்து ஆட்டி வைக்கும் சக்தியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இருப்பதையும், அதுவே பிரதமர் உட்பட முக்கிய துறைகளின் அமைச்சர்கள் யார் எனத் தீர்மானிப்பது,ம் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்தான். ஆர்.எஸ்.எஸைப் பொருத்த மட்டில் அதைத் தோற்றுவித்த தலைவர்கள், அது தோன்றிய நாளிலிருந்தே பின்னாளில் பெரும் இகழுக்கு ஆளாகி ஒழித்துக் கட்டப்பட்ட பாசிச சக்திகளுடன் மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்ததைய நாம் அறிவோம். மாரியோ காசெல்லி முதலான ஆய்வாளர்கள் இதை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நமது அரசியல் சட்டத்தை இவர்கள் ஏற்பதில்லை என்பதையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம நமது அரசியல் சட்டத்தைக் கவிழ்ப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் வெளிப்படையாக முயற்சிப்பதையும் நாம் அறிவோம். மோடியின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எவ்வாறு நீதிமன்றம், திட்ட ஆணையம், சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி முதலான அரசியல் சட்ட  அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அமைக்கப்பட்ட நிறுவனங்கள் (statutory bodies) எல்லாம் இவர்களால் சீரழிக்கப்பட்டன என்பதை ‘மக்கள் களம்’ இதழில் நான் விரிவாக எழுதியுள்ளேன்.

இன்று இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வரையில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வெளி வரவில்லை. பிற கட்சிகள் அனைத்தும் தத்தம் அறிக்கைகளைத் தந்துவிட்டன. சென்ற நாடாளுமன்ற்த் தேர்தலிலும், தேர்தல் தொடங்குவதற்கு முதல்நாள்தான் தேர்தல் அறிக்கையை அவர்கள் அளித்தார்கள். அதனாலேயே இப்போது தேர்தல் ஆணையம் குறைந்த பட்சம் தேர்தல் தொடங்குவதற்கு இரண்டுநாள் முன்னதாகவாவது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

l_440199_043358_updates

பா.ஜ.க அரசு இப்படியான சட்டபூர்வமான நிறுவனங்களை மட்டும் அல்லாமல் கல்வித்துறையில் பெரிய அளவில் தலையிட்டுள்ளதோடு பட்டியல் இனத்தவரும் இதர அடித்தள மக்களும் மேற்கல்வி படிப்பதற்குப் பல்வேறுவகைகளில் இப்போது தடையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அவர்கள் நிறைவேற்றப் போகிறார்களோ இல்லையோ, சில நல்ல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பட்டியல் இனத்தவர் மீதான வன்முறைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பா.ஜ.க ஆட்சியில் நீக்கப்பட்ட 200 புள்ளி ரோஸ்டர் முறையை மீண்டும் கொண்டுவருவதாகவும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செய்வது குறித்த அர்சியல் சட்டத் திருத்தம் செய்வதாகவும், ‘பஞ்சமி’ மற்றும் ‘மகர்’ நிலங்களை ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றி பட்டியல் சாதியினருக்குத் திருப்பி அளிப்பதாகவும், பாடத் திட்டத்தில் பட்டியல் இன மக்களின் பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடங்களைச் சேர்ப்பது எனவும், 6 முதல் 12ம் வகுப்பு வரை தரமான ஆங்கிலம் பயிலக் கூடிய நிலையைப் பட்டியல் இன மாணவர்களுக்கு உருவாக்குவதாகவும், பழங்குடி மக்களின் வன உரிமைகளை நிலைநாட்டப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும், பட்டியல் இன மகக்ளுக்கான போபால் பிரகனத்தில் முன்மொழியப்பட்ட உறுதியாக்க நடவடிக்கைகள் (affirmative action) மற்றும் ஒவ்வொரு அலுவகத்திலும் பன்மைத்துவக் குறியீடு வெளியிடுதல் முதலானவற்றைச் செயல்படுத்துவது  குறித்தும் காங்கிரஸ் அறிக்கை பேசியுள்ளது.

நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இதை எல்லாம் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப் போகிறார்களோ இல்லையோ கொள்கை அளவிலேனும் இப்போது அவர்கள் முன்மொழிந்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை பா.ஜ.க எவ்வளவு எரிச்சலுடனும், ஆத்திரத்துடனும் எதிர்கொள்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். “இந்தத் தேர்தல் அறிக்கையை நக்சலைட்கள், ஜிகாதிகள் (அதாவது முஸ்லிம் பயங்கரவாதிகள்) ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் தயாரித்துள்ளது” என அருண் ஜேட்லியும் மற்ற பா.ஜ.க தலைவர்களும் இன்று மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்து எதிர்கொண்டு உள்ளதை நாம் பார்க்கிறோம்..

ஆர்.எஸ்.எஸ் 1925 ம் ஆண்டு நாக்பூரில் தொடங்கப்பட்டது. சரியாக நூறாண்டில், அதாவது  2025 ம் ஆண்டில் இங்கே இந்துத்துவ அரசை அமைப்பது என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இது இரகசியமல்ல. வெளிப்படையாக அவர்கள் பேசி வருவதுதான். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் நடக்க உள்ளது. அதில் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க உள்ளனர் என்கிற அச்சம் இன்று முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி தலித் மற்றும் பழங்குடியினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அவர்கள் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள  நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதாக மாற்றி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் இறையாண்மையையும் பலவீனப்படுத்துவது, அவர்களின் நோக்கங்களில் ஒன்று. அடுத்த கட்டமாக நமது அமைப்பின் இன்னொரு முக்கிய அடையாளமாகிய மதச்சார்பின்மை என்பதை ஒழித்துக் கட்டுவது என்கிற நோக்கில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்கிற அச்சமும் ஜனநாயக உணர்வுடையோர் மத்தியில் உள்ளது. இவை வெளிப்படையாகப் பேசப்பட்டபோதும் இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த மறுப்பும் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் உ.பியைச் சேர்ந்த ஒரு சங்கப் பரிவாரத் தலைவர் 2019 தேர்தல்தான் இந்தியாவில் நடக்கும் கடைசி நாடாளுமன்றத் தேர்தல் என வெளிப்படையாகப் பேசியதையும் கூட அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.

இந்த அடிப்படையில்தான் இன்று ஆங்காங்கு ஜனநாயக உணர்வுடையோர், அறிஞர்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள் எனப் பல தரப்பினரும் “நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்போம்” எனும் முழக்கத்தோடு மக்களைச் சந்தித்து வருகின்றனர்.

ஆம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் சங்கப் பரிவாரங்களிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும். அந்த வகையில்தான் நாம் யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்கிற கேள்வியை இப்போது முன்வைக்க வேண்டியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *