ரொம்ப சின்ன வயதிலிருந்தே எனக்கு முல்லாவுடன் பரிச்சயம் உண்டு. அந்தப் பேறை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக நான் ‘குமுதம்’ இதழுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ‘நல்லாத்தான் சொன்னாரு முல்லா’ என்கிற தலைப்பில் குமுதத்தில் முல்லா கதைகளை வெளியிட்டு வந்தார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குட்டி இலவச வெளியீடாக முல்லா கதைகளின் சிறு தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டதாகவும் ஞாபகம்.
சாண்டில்யனையும், ரா.கி.ரங்கராஜனையும், சுஜாதாவையும் ஆவலுடன் வாசித்துக் கொண்டிருந்த காலம் அது. இவற்றுக்கிடையே கண்ணில் தட்டுப்பட்ட முல்லா எல்லோருக்கும் மேலாக நெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். சஃபி சொல்வது போல பிரிய நண்பராய் மட்டுமல்ல, இனிய தோழராய், பாசமுள்ள தந்தையாய், ஆசைப் புதல்வியாய், இனிக்கும் காதலியாய், எதார்த்த வாழ்வின் தர்க்கங்களால் கெட்டி தட்டிப் போன மனத்தை இளக்கித் தரும் ஔடதமாய் முல்லா நெருக்கம் கொண்டார். இந்த அனுபவம் என்னைப் போலவே முல்லாவை அறிந்த மற்றவர்களுக்கும் கிட்டியிருக்கும் என நம்புகிறேன்.
இதே காலகட்டத்தில் பாட நூல்களின் வாயிலாக அறிமுகமான தெனாலிராமனுடன் இத்தகைய ஒட்டுதல் எனக்கு ஏற்பட்டதில்லை. பாட நூல்களின் மூலமான அறிமுகம் மட்டும் அதற்குக் காரணமாகவில்லை. வேறு ஏதோ ஒன்று தெனாலிராமனுடன் ஒட்டுதல் ஏற்படுவதற்குத் தடையாக இருந்தது. இத்தனைக்கும் ஒரு வகையில் ராமன் நமது உள்ளூர்க்காரர். அரசையும் (பார்பன) அரச குருவையும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் மட்டம் தட்டும் அவரது விகட சாகசம் ரசிக்கத் தக்கதுதான். இருந்தாலும் முல்லாவைப் போல ராமன் நம் நெஞ்சில் இடம் பிடித்ததில்லை.
சஃபி மொழியாக்கித் தொடுத்துள்ள இந்தக் கதைகளை ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போதுதான் இதற்குரிய விடை கிடைக்கிறது. தெனாலிராமன் ஒரு புத்திசாலி, கெட்டிக்காரர், சாதுர்யமிக்கவர். யாரிடமும் அவர் தோற்பதில்லை. தன்னை அவமானப் படுத்தியவர்களை அவர் மன்னித்ததில்லை. அரசாலும் இனம் காண முடியாத ராஜ துரோகிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி ராமன் அவர்களைக் கொல்லாமலும் வருவதில்லை.
முல்லை பி.எல். முத்தையா தொடுத்துள்ள 48 தெனாலி ராமன் கதைகளை என்.சி.பி.எச் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 1986 தொடங்கி பிப்ரவரி 2006க்குள் 14 பதிப்புகள் வெளிவந்துள்ளன. முத்தையாவின் மிகச் சிறிய முன்னுரை ஒன்று அதில் உண்டு. தெனாலிராமன் கதைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,
“மந்திரம், மாயம், தெய்வீகம் எதுவும் ஊடாடாமல் தந்திரம், யுக்தி, நகைச்சுவை, பகுத்தறிவு இவையே பிரதானமாகக் கொண்டு (இவை) விளங்குகின்றன…. வாசகர்களின் அறிவு வளர்ச்சியைக் கருதி, பல்வேறு துறையில் நூல்களை வெளியிடுவதில் முன்னணியில் திகழ்கின்ற “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்” இந்நூலை வெளியிடுவதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி”.
என்பார் முத்தையா.
நமது மரபில் தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன வாசகரின், கேட்போரின் “அறிவு வளர்ச்சி கருதியவை”. பஞ்ச தந்திரக் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆர்தர் டபிள்யூ. ரைடர் (1925) அவற்றை, “புத்திசாலித்தனமாக வாழ்வதற்கான கலையைக் கற்றுத்தரும் ஒப்புயர்வற்ற வழிகாட்டி” என்பார். ‘பஞ்ச தந்திரம்’ ஒரு “நீதி சாஸ்திரம்”. ‘நீதி’ என்பதன் கொருள் ‘justice’ அல்ல. வாழ்வைக் கெட்டிக்காரத் தனமாக வாழ்வதே ‘நீதி’. துறந்தவர்களுக்கான தருமம் அல்ல நீதி; மாறாக சமூக வாழ்விலுள்ளவர்கள் பாதுகாப்புடனும், வளத்துடனும், உறுதியுடனும் வாழ்ந்து வெற்றி பெறுவதற்கான வழி முறைகளே நீதி என விளக்கமளிக்கிறார் ரைடர்.
கிறிஸ்துவிற்குச் சில நூற்றாண்டுகள் முந்தியதாகச் சொல்லப்படும் ‘பஞ்ச தந்திரம்’ உருவானதற்குச் சொல்லப்படும் முன்னுரைக் கதையும் இதையே சொல்கிறது. ஒரு அரசனுக்கு மூன்று பிள்ளைகள். படிப்பே ஏறாத அந்த முட்டாள்ப் பிள்ளைகளைக் கெட்டிக்காரர்களாக்க வழி தேடுகிறான் மன்னன். முறையான கல்வி பயிற்றுவிப்பதென்றால் இலக்கணம் கற்கவே பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்கும். பிறகு இதர சாஸ்திரங்களைக் கற்க வேண்டும். பின்னரே அறிவுக்கண் திறக்கும். எனவே சுருக்கு வழியொன்றை அமைச்சர்கள் உரைக்கின்றனர். “விஷ்ணு சர்மன் என்றொரு கிழப் பிராமணன் உள்ளான். பல்வேறு கலைகளிலும், வித்தைகளிலும் பயிற்சியுள்ளவன். உங்கள் பிள்ளைகளின் அறிவுக் கண்ணைத் திறப்பதற்கு அவனே வல்லவன்” என்பதே அவர்கள் காட்டிய வழி.
விஷ்ணு சர்மன் ஆறே மாதத்தில் அந்த மூன்று மர மண்டைகளிலும் அறிவு கொளுத்தினான். அதற்கு அவன் கண்ட உபாயமே பஞ்ச தந்திரம். அய்ந்து தலைப்புகளில் அவன் சொன்ன 84 பஞ்ச தந்திரக் கதைகளினால் அவர்கள் புத்திசாலிகளாயினர்.
புத்த ஜாதகக் கதைகள் சற்று வித்தியாசமானவை. மனிதத் துக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு அறவாழ்வையே ஒரே வழிமுறையாக உபதேசித்துத் திரிந்த புத்த பகவன் வாழ்வறங்களை விளக்குவதற்காக அவ்வப்போது சொன்ன சுமார் 500க்கும் மேற்பட்ட கதைகளே புத்த ஜாதகக் கதைகள். குறைந்த பட்சம் கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் தொகுக்கப்பட்டவை இவை. பாலி மொழியிலிருந்து பேரா. ஈ.பி., கோவெல் அவர்களின் தலைமையில் மொழி பெயர்க்கப்பட்ட 537 கதைகள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.
கோதம புத்தருக்கு முன் ‘எண்ணில் புத்தர்கள்’ தோன்றியதாகக் கருதுவது புத்த மரபு. போதி சத்துவர்களாகப் பல பிறவிகள் எடுத்தவர் புத்தர். இந்தப் போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாகப் பகவன் புத்தர் சொன்ன கதைகளே இவை. எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கே புத்தர் இந்தக் கதையைச் சொன்னார் என்கிற முன்னுரையுடன் இவை தொடங்கும். கதைக்குப் பின் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் இப்பிறவியில் யாராக உள்ளனர் எனப் புத்தர் விளக்கக் கதை முடியும். அற அடிப்படையிலான திறன் சார்ந்த வாழ்வை வற்புறுத்தியவர் புத்தர். இதே அறங்களை விளக்கும் முகமாக இக்கதைகள் அமைந்தன.
ஆக ஏதோ ஒரு வகையில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழி முறைகளைச் சொன்னவையாக நமது மரபுக் கதைகள் அமைந்தன. மிகப் பழைய பஞ்ச தந்திரங்களனாலும் மிகச் சமீபத்திய (கிருஷ்ண தேவராயர் காலத்திய) தெனாலி ராமன் கதைகளானாலும் சரி அவை நிகழ் வாழ்வின் விதி முறைகளையும், தர்க்கங்களையும் விளக்கி அவற்றிற்கேற்ப வாழ்வை அமைத்து முன்னேறத் தோன்றியவை.
முல்லாவின் கதைகள் இந்த இடத்தில்தான் வேறுபடுகின்றன. முல்லாவை நம்மில் ஒருவராய் உணர்ந்து நெருக்கம் கொள்ளும் தருணம் இதுதான். முல்லா நிகழ் வாழ்வின் தர்க்கங்களை ஏற்பதில்லை. முல்லா அவற்றைக் கலைத்துப் போடுகிறார். முல்லா சாதுர்யமானவர் அல்ல. இன்றைய வாழ்வு மதிப்பீடுகளின்படி வெற்றி பெற்றவருமல்ல. அவரது சாதுரியமெல்லாம் பேச்சில் மட்டுமே. அவர் பல ஞானவான்களையும், பிரதாபங்களைக் கொட்டி அளக்கும் போர் வீரர்களையும் எதிர்கொண்டு நம்மைச் சிரிக்க வைத்தவர்தான். ஆனால் அவர்களுக்கும் மேலாகத் தன்னை நிறுவிக் கொள்வதன் மூலம் அவர் அதைச் செய்வதில்லை. ‘வீரப்பிரதாபம்’ (131), ‘ஆன்மீக குரு’ (159) முதலிய கதைகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தன்னை முட்டாளடித்துக் கலைத்துப் போடுகிறார். முல்லாவிடம் காணப்படும் சுய எள்ளலை நமது மரபில் காணவே முடியாது. முல்லா ஒரு புத்திசாலித்தனமான முட்டாள்.
எந்த நீதியையும் அவர் சொல்வதில்லை. எந்த அற போதனையையும் அவர் செய்வதில்லை. பதில் சொல்ல இயலாத எந்தக் கேள்விக்கும் அவரிடம் நீங்கள் விடை தேட முடியாது. அவருக்கு அதைப்பற்றியெல்லாம் ‘எதுவும் தெரியாது’. அவரே சொல்வது போல (‘பள்ளி’ – 54). “விஷயங்கள் உண்மையில் அதனதன் தன்மையில் அப்படி ஏன் இருக்கின்றன?” என்பது குறித்த சிந்தனையை உசுப்புவதே அவரது பணியாக அமைகிறது. வழக்கமாக நாம் உலகைப் பார்க்கும் முறையிலிருந்து நம்மைத் திசை திருப்பிவிடுகிறார் முல்லா.
எதார்த்த வாழ்வின் “அர்த்தங்களை” அவர் குலைத்துப் போடுகிறார். ஆளைவிட ஆடைக்குத்தான் இங்கு மரியாதை எனில் விருந்துப் பலகாரங்களை அந்த ஆடைக்கு அர்ப்பணிப்பது தானே சரியாக இருக்க முடியும்?. ‘அர்த்தம்’ (பொருள்), அர்த்தத்தின் பின்னே உள்ள ‘ஒழுங்கு’, ‘குறியீடு’, ‘அமைப்பு’ ஆகியவை குறித்த முன்னூகங்களையும் நம்பிக்கைகளையும் அவரது பேச்சுக்கள் கலைத்துப் போடுகின்றன; அவற்றுடன் சமர் புரிகின்றன. தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் முல்லா அத்தோடு உலகை நியாயப் படுத்துவதற்கு நமது கலாச்சாரம் பயன்படுத்தும் மரபுகளையும் ஒழுங்கு முறைகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கிறார்.
நடைமுறையிலுள்ள தர்க்கங்கள், பகுத்தறிவு சார்ந்த மதிப்பீடுகள் ஆகியவற்றின் தோல்விகள் மீது கவனத்தைத் திருப்பும் முல்லா வெளிப்படையாகத் தெரியும் மேல்மட்ட அர்த்தங்களுக்கு அப்பாலுள்ள இரண்டாம் நிலை அர்த்தங்களின் மீது நம்மை ஈர்க்கிறார்.
பிளேட்டோவும் பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானிகளும் எழுப்பிய கேள்விகளைத் தாண்டி பின் வந்த தத்துவவாதிகள் யாரும் எதையும் புதிதாய்ச் சொல்லிவிடவில்லை என்றொரு கருத்து உண்டு. பிளேட்டோ காலத்திருந்து இன்று வரை நமது மொழி மாறாத போது நமது கேள்விகள் மட்டும் எப்படி மாறும் என்பார் விட்கென்ஸ்டெய்ன். முல்லா நமக்குப் புதிய மொழியையோ. புதிய தர்க்கத்தையோ கற்றுத் தந்துவிட்டார் என நான் சொல்ல வரவில்லை. ஆனால் நமது மொழியின் மாறா நிலையை, நமது தர்க்கத்தின் வன்முறையை நமக்கு உணர்த்திவிடுகிறார் முல்லா.
நகைச்சுவை என்பது ஒரு வகை உணர்வோ. அறுசுவைகளின் ஒன்று மட்டுமோ அல்ல. உலகை வழமையான பார்வையிலிருந்து விலகிப் பார்க்கும் முறைமைகளில் ஒன்று. இந்த வகையில் தான் எப்போதும் நகைச்சுவை என்பது ஒரு விமர்சனமாகவே அமைந்து விடுகிறது. நகைச்சுவை, பைத்திய நிலை, கனவு முதலியன அதிகாரங்களுக்கு எதிராகவே அமைவதன் பின்னணி இதுதான்.
இதனால்தான் பாசிசத்தால் நகைச்சுவையைச் சகிக்க இயலாமலுள்ளது. ஹிட்லர் ஆட்சியில் நகைச்சுவை ஒடுக்கப்பட்டது குறித்த நூலொன்று சமீபத்தில் வந்துள்ளது. ஜெர்மன் மொழித் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான ருடால்ஃப் ஹொஸோக் எழுதியுள்ள ஒரு நூலில் சொல்லப்படும் சில செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. 1944ம் ஆண்டு மரியன் எலிஸ்கே என்கிற ஒரு ஜெர்மன் தொழிலாளி மரண தண்டனைக் குள்ளாக்கப்பட்டார். அவர் செய்த குற்றம் ‘ஜோக்’ ஒன்றைப் பரப்பியதுதான். ‘வெறுப்புக் கருத்துக்கள் மூலம் அரசின் போர் முயற்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டார்’ என்பது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர் சொன்ன நகைச்சுவை இதுதான். பெர்லின் நகரிலிருந்த வானொலி கோபுரத்தின் மீது ஹிட்லரும் கோயரிங்கும் நின்றிருந்தனர். “பெர்லின் நகரவாசிகளை குஷிப்படுத்த நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன்” என்றார் ஹிட்லர். “அப்படியானால் நீங்கள் இங்கிருந்து கீழே குதிக்கலாமே” – இது கோயரிங். இதைச் சொன்னதற்காகவே மரண தண்டனை.
அப்படியும் ரகசியமாகப் பல ஜோக்குகள் நாஜி ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கவே செய்தன. அவற்றில் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. ஹிட்லர் ஒரு பைத்தியக்கார விடுதியைப் பார்வையிடச் சென்றார். பைத்தியங்கள் எல்லோரும் ஒழுங்காக உடை உடுத்தப்பட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனை நிர்வாகம் கடும் சிரத்தை எடுத்துக் கொண்டு அவர்களை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தது. ஹிட்லர் அவர்களை பார்வையிட வந்த போது ஒரே நேரத்தில் அனைவரும் கையுயர்த்தி அவருக்கு வணக்கம் சொன்னார்கள். பார்வையிட்டு வந்த ஹிட்லர் ஒரு நபர் மட்டும் வணக்கம் சொல்லாமல் நிற்பதைப் பார்த்து எரிச்சலுற்றார். “ஏன் வணக்கம் சொல்லவில்லை?” என உறுமினார். நடுங்கிய அந்த நபர் சொன்னார் “மெய்ன் ஃப்யூரர், நான் ஒரு நர்ஸ், பைத்தியமல்ல”.
ஹிட்லரின் ஆட்சித் தொடக்கத்தில் புழக்கத்திலிருந்த ‘ஜோக்’ இது. நாளாக நாளாக கெடுபிடிகள் அதிகமாயின. ‘ஜோக்’குகள் மூலம் பாசிசத்தையோ. அதிகாரங்களையோ வென்றுவிட முடியும் என்பதல்ல. ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை ஒடுக்கப்பட்ட மக்களின் மன இறுக்கத்தை நெகிழ்த்துகின்றன. காந்தி ஒரு முறை சொல்லவில்லையா? “நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ செத்திருப்பேன்” என்று. காந்திக்கு மட்டுமன்று நம் எல்லோருக்கும் பொருத்தமானதே இது.
நமது அரங்க மரபில் ‘விதாஷகர்கள்’ நாயகர்களைச் சுற்றி எழுப்பப்படும் அதிகாரங்களைக் குலைத்துப் போடுவதைக் காண முடியும். வீரப்பிரதாபங்களுடன் அரங்கில் முன்னிறுத்தப்படும் நாயகனை விதூஷகன் வெகு சாதாரணமாகக் கிண்டலடித்து விடுவான். ஒரு வகையான ‘அந்நிய மாதல்’ உத்தியாகவும் அது விளங்கும். இந்த நிலை எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற ‘சூப்பர் ஹீரோ’க்கள் உருவான போது ஒழிந்தது. கதாநாயகர்களுக்கு சூத்து கழுவுபவர்களாக நகைச்சுவை நடிகர்கள் மாற்றப்பட்டனர். கவுண்டமணி காலத்தில் கொஞ்சம் நிலைமை மாறியது. ஆனால் அதனாலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தனது படங்களில் அவரைத் தவிர்க்கக்கூடிய நிலையும் உருவாகியது.
சின்ன வயதில் நமக்கு நெருக்கமாக இருந்த முல்லா, நமக்கு வயதாக ஆக அந்நியமாகிப் போகும் நிலையை சஃபி தனது கவிதையொத்த முன்னுரையில் சுட்டிக் காட்டியுள்ளார். வாழ்வின் தர்க்கங்களுக்கு நாம் பலியாகிப் போவதன் விளைவு அது. எந்த ஒரு பிரச்சினையும், கெட்டிக்காரத் தனமாக மட்டுமே அணுகுவதற்கு நாம் நம்மைத் தயார் படுத்தி வைத்துள்ளோம். சூழலின் இயங்கு விதிகளை அதற்காகவே நாம் அறிந்து வயப்படுத்துகிறோம். இதன் மூலம் நாம் வெற்றி பெறுவது உண்மை தான். ஆனால் இந்த வெற்றியினூடாக நாம் சூழலுக்குள் அமிழ்ந்துவிடுகிறோம். ஆனால் முல்லா பலமுறை சூழலின் விதிகளுக்கு எதிராகவே எதிர்வினையாற்றுகிறார். தான் பொற்காசுகளை மறைத்து வைத்த இடத்தில் ஒட்டகச் சாணம் இருப்பதைப் பார்த்து அவர் பதறுவதில்லை. யார் அதை எடுத்துச் சென்றிருப்பார் எனத் துப்பறியத் தொடங்குவதுமில்லை. மாறாக இந்த மலை உச்சிக்கு ஒட்டகம் எப்படி வந்தது என்ற வியப்பில் ஆழ்வார். சூழலின் விதிகளை உணர்ந்து இயங்காமல் அவர் ‘தப்பு’ செய்கிறார். ஆனால் அதன் மூலம் சூழலில் அமிழ்ந்து விடாமல் ‘தப்பித்து’ விடுகிறார். பிழை செய்கிறார். அதனால் பிழைத்துவிடுகிறார். ஆனால் நாமோ வெற்றி பெற்று சூழலுக்குள் அமிழ்கிறோம். நமது தனித்துவத்தை இழக்கிறோம்.
சற்றே நம்மை இந்தத் தர்க்கத்தின் வன்முறையிலிருந்து தப்புவதற்கு உதவி செய்த சஃபிக்கும் இதை வெளியாகும் ‘புதிய காற்று’ நிறுவனத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். இஸ்லாமில் சுஃபி, பவுத்தத்தில் ‘ஸென்’, ஆகிய உட்கிளை மரபுகளில் இவ்வாறு அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் கதைகள் உருவாகியது நமது சிந்தனைக்குரிய ஒன்று. உருது மற்றும் அரபி மொழிகளில் உருவான ‘லாடஇஃப்’, ‘லடிஃபா’, ‘ஹகாயத்’ முதலிய முதலியன போல பழம்பெருமை மிக்க நம் தமிழில் ஏன் உருவாகவில்லை? வீரமாமுனிவர் எனப்பட்ட தமிழறிஞரும் கிறிஸ்தவப் பாதிரியாருமான கான்ஸ்டான்டினோ பெஸ்கி அவர்களின் ‘பரமார்த்த குரு கதை’க்கு முன்னதாக இப்படியானதொரு இலக்கிய வகை இங்கு உண்டா?