சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்
(‘சிற்றிலக்கியங்கள்’ எனப் பொதுத் தலைப்பாக இருந்தாலும் உலா, கலம்பகம், பரணி, பள்ளு, குறவஞ்சி ஆகிய ஐந்து சிற்றிலக்கிய வடிவங்களே இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 47 உலாக்களும் 60 கலம்பகங்களும் 15 பரணிகளும் 35 பள்ளுகளும் 34 குறவஞ்சிகளும் இன்று நமக்குக் கிடைக்கின்றன.(1)
உலா 8ஆம் நூற்றாண்டிலும் பள்ளு 16ஆம் நூற்றாண்டிலும் குறம் 18ஆம் நூற்றாண்டிலும் தோன்றின என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.(2)
காமராஜர் உலா, சீனத்துப் பரணி என இருபதாம் நூற்றாண்டுவரை இத்தகையை சிற்றிலக்கியங்கள் புலவர்களால் கையாளப் பட்டிருக்கின்றன. இத்தகைய ஒரு நீண்ட காலகட்டத்தில் தோன்றிய, எண்ணிக்கையில் அதிகமான இந் நூற்கள் அனைத்தையும் ஆராய்வது குறுகிய காலத்தில் மேற்கொண்டு ஒரு சிறிய கட்டுரையில் அடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமன்று. எனவே இக்கட்டுரைக்குச் ‘சில குறிப்புகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையைத் தனி நூலாக விரிக்குமளவிற்கு வாய்ப்பெல்லைகளும் தேவைகளும் உண்டு. இதில் எழுப்பப்பட்டிருக்கும் சில பிரச்சினைகள் தனிக் கட்டுரைகளாக விரித்தெழுதப்படுகிற தகுதியுடையவை. – ஆசிரியர்.)
ஒன்று
எழுத்தாளர்கள், அதிலும் கவிஞர்கள் தாங்கள் வலியுறுத்திவந்த கருத்துக்களை அழகுணர்ச்சியுடன் சொல்ல வேண்டியது அவசியம். உருவத்தைக் காட்டிலும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளும் நாம், பேராசிரியர் சிவத்தம்பி, ‘‘இலக்கியம் வெறும் கருத்துக் கோவையன்று. அது அழகுணர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. கருத்தாழமற்ற ஆனால் கலையழகுள்ள ஒர் ஆக்கம் இலக்கியமாகக் கருதப்படலாம். ஆனால் கலையழகற்ற கருத்தாழமுள்ள ஆக்கம் இலக்கியமாகாது”(3) என்று கூறுவதை மனங்கொள்ளல் அவசியம். இத்தகைய நோக்கில் ஓசைநயம், கவிச்சுவை, சந்த இனிமை, நாட்டுப் பாடல் அம்சங்களைத் தன்வயப்படுத்துதல் ஆகிய தன்மைகளில் சிறந்து விளங்குகின்ற சிற்றிலக்கியங்கள் எழுத்தாளர்கள் பயிலத்தக்க ஓர் இலக்கிய வகையாகும். ஆனால் அத்தகைய கண்ணோட்டத்தில் இங்கு சிற்றிலக்கியங்களை விளக்கிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை என்பதால் இவ்வகை இலக்கியங்களின் தோற்றம், உள்ளுறை ஆகியவற்றைச் சமூகவியல் நோக்கில் பார்த்துச் சில குறிப்புகளைச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
இலக்கியத்திற்கும் அரசியல் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய உருவாக்கம் அரசியல் உருவாக்கத்திலிருந்து பிரிக்க இயலாதது. அவ்வக்காலத்து இலக்கியங்கள் என்பன அவ்வக்காலத்து அரச உருவாக்கத்தின் இலக்கிய வெளிப்பாடாகவே தோன்றுகின்றன. அரசின் தோற்றத்தோடு சங்க கால வீரயுகக் கவிகளும் அதிகார முழுமைபெற்ற பேரரசுக் காலத்தில் பெருங்காப்பியங்களும் பேரரசுகள் சிதைவுற்று எண்ணற்ற சிற்றரசுகளாகச் சீரழிந்தபோது குறுநில மன்னர்களையும் சிறு தெய்வங்களையும் பாடிய சிற்றிலக்கியங்களும் தோன்றின என்பர் ஆராய்ச்சியாளர்.(4)
எனவே இச்சிற்றிலக்கியங்கள் சமூகவியல் நோக்கில் பார்க்க அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் அக்காலத்திய அரசமைப்புகளையும் நாம் ஓரளவேனும் ஆராய வேண்டும். இங்கு நமக்கொரு பிரச்சினை எழுகின்றது. பொதுவாகப் பேரரசுகள் சிதைவுற்ற 13இலிருந்து 18ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்பர். ஆனால் உலா, கலம்பகம், பரணி போன்ற இச்சிற்றிலக்கியங்கள் பேரரசுகள் வலிமையுடன் கோலோச்சிய 9, 11ஆம் நூற்றாண்டுகளிலேயே தோன்றி வளர்ந்தன. பேரரசுகள் சிதைவுற்ற காலகட்டத்திலும் அவை தொடர்ந்து வளர்ந்திருக்கின்றன.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு நாம் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். சிற்றிலக்கியங்கள் எந்தக் காலகட்டத்தின் சிறப்பிலக்கிய வடிவங்களாக விளங்கின என்பது முதற்கேள்வி. நமது இலக்கிய வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் 13இலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தையே நாம் சிற்றிலக்கிய காலம் எனக் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது. அப்படியாயின் பேரரசுகளின் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கட்கும், பின்னால் தோன்றிய சிற்றிலக்கியங்கட்கும் அடிப்படையில் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா என்கிற இரண்டாவது கேள்வி எழுகின்றது.
குறிப்புகள்
- 1. செயராமன், ந.வீ, ‘சிற்றிலக்கியச் செல்வம்’, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1978, பக். 212 – 239
2. செயராமன், ந.வீ, ‘உலா இலக்கியங்கள்’, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1966, பக். 10
3. சிவத்தம்பி கா, ‘இலக்கியமும் கருத்து நிலையும்’, தமிழ்ப் புத்தக நிலையம், சென்னை, 1982, பக். 19
4. சிவத்தம்பி கா., ‘ஈழத்துத் தமிழ்க்கவிதைப் பாரம்பர்யம்’ (கட்டுரை அச்சில்)
இரண்டு
இதற்கு ஒவ்வொரு சிற்றிலக்கிய வடிவத்தையும் எடுத்துக்கொண்டு காவிய காலத்திலும் – பின்னர் சிற்றிலக்கிய காலத்திலும் அவற்றின் உள்ளுறையை நாம் பரிசீலிக்க வேண்டும். நூற்றாண்டுவாரியாக இலக்கிய வரலாற்றை எழுதிய மு. அருணாசலம் பாட்டுடைத் தலைவர்களை மட்டும் வைத்துக்கொண்டு காலங்களுக்குத் தக்காற்போலப் பிரபந்தங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன எனக் கீழ்கண்டவாறு ஒரு பட்டியல் போடுகிறார்.(5)
காலம் ————————————- பாட்டுடைத் தலைவர் ————————————— சிறப்புக் குறிப்பு
சங்க காலம்———————————தலைவர்(அ)வள்ளல் ——————————-தெய்வத்தைச் சிறப்பித்தல் இல்லை
பாசுர காலம்——————————-தெய்வம் மட்டும் ———————————–மனிதரைச் சிறப்பித்தல் இல்லை
சோழர் காலம் —————————–சோழ அரசர்கள் ———————————தெய்வத்தைச் சிறப்பித்தல் இல்லை
பிற்காலம் ———————————–தெய்வமும் தலைவனும் ———————–தாழ்ந்தோரைச் சிறப்பித்தல் உண்டு
இப்பட்டியலிலிருந்து, பேரரசு காலத்திய சோழ அரசர்களைச் சிறப்பித்துப் பாடுவதே சிற்றிலக்கியங்களின் முக்கியப் பண்பாக இருந்தது தெரிகிறது. பரணி என்கிற சிற்றிலக்கிய வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தோமானால் பேரரசு காலத்தில் தோன்றிய கொப்பத்துப் பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி ஆகிய அனைத்துமே சோழப் பேரரசர்கள், வேற்று நாட்டரசர்களை வென்றடக்கிய புகழைப் பாடுபவை, தக்கயாகப் பரணி, புராண நிகழ்ச்சியொன்றைப் பாடுபொருளாக எடுத்துக் கொண்டதெனினும் உண்மையில் அது இரண்டாம் இராசராசனைச் சிறப்பித்துப் பாடிய நூலே. 16ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டுத் தோன்றிய பரணிகளாவன: சோதிப் பிரகாசரின் அக்ஞவதைப் பரணி, மேகவதைப் பரணி, வைத்தியநாத தேசிகர் அருளிய பாசவதைப் பரணி, சீனிப் புலவரின் திருச்செந்தூர்ப் பரணி, தொட்டிக்கலை சுப்பிரமணிய முதலியார் எழுதிய திருக்கைலாசச் சிதம்பரேசர் பரணி எனப் பட்டியல் நீளும். எனவே சோழப் பேரரசர்களின் காலத்தில் அவர்களின் போர்க்கள வெற்றிகளைப் புகழ்ந்துபாட எழுந்த பரணிகள் 16,17ஆம் நூற்றாண்டுகளின் தத்துவ மற்றும் சித்தாந்தக் கருத்துகளைப் பாடுபொருளாகவும் 18,19ஆம் நூற்றாண்டுகளில் இறைவன் புகழைப் பாடுபொருளாகவும் கொண்டன என்பது தெளிவாகிறது.
உலாவை எடுத்துக்கொண்டால் பக்தி இயக்க காலத்தில் தோன்றிய சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கைலாய ஞான உலாவும் நம்பியாண்டார் நம்பியின் ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையும் இறைவன் புகழைப் பாட எழுந்தவை. பேரரசுக் காலத்தில் தோன்றிய விக்கிரமச் சோழனுலா, இராசராசச் சோழனுலா, சங்கரச் சோழனுலா ஆகியவை சோழப் பேரரசர்களின் உலாச் சிறப்புகளை விதந்தோத வந்தவை.
பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய உலா நூற்களில் சிலவாகிய ஏகாம்பரநாதருலா, ஞானவினோதனுலா, திருவானைக்கா உலா, திருப்பனந்தாள் உலா, மதுரை சொக்கநாதருலா, கயற்றாறரசன் உலா, சிவந்தெழுந்த பல்லவராயன் உலா போன்றவை இறைவனையும் சிற்றரசர்களையும் பாட எழுந்தவை. இவ்வாறே கலம்பகம் போன்ற மற்ற இலக்கிய வடிவங்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இவற்றிலிருந்து பேரரசுக் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கட்கும், சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கட்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவாகிறது. பேரரசுக் கால இலக்கிய வடிவங்களின் பொதுப் பண்புகளாகிய தன்னேரில்லாத் தலைவன் புகழ் பாடுகிற தன்மையும் தலைவனை இறைவனாகப் பாடுகிற தன்மையும் இக்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களின் பண்புகளாகவும் விளங்கின. குடிநெறி மரபு கொளல் போன்ற பகுதிகளில் உலாக்களும் பரணிகளும் அரச பரம்பரையைத் தெய்வப் பரம்பரையோடு இணைக்கும் வேலையைத் திறம்படச் செய்தன. எடுத்துக்காட்டாக, கலிங்கத்துப் பரணி கூறும் இராச பாரம்பரியத்தில், திருமால், மரிசி, காசிபன், ஞாயிறு, அரும்பெறற் புதல்வனை ஆழியில் மடித்த மனு எனத் துவங்கி சிபி, சாரதிராசன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், நாக கன்னிகையை மணந்த கிள்ளி வளவன், காவிரிக்குக் கரையெடுத்த கரிகாற் சோழன் ஆகியோரை இணைத்து, பிற்காலச் சோழ மன்னர்களில் பராந்தகனில் துவங்கி குலோத்துங்கச் சோழனில் முடித்துப் புராணங்களையும் வரலாற்றையும் மிகத் திறம்பட இணைத்து நாடாளும் மன்னனுக்கு உலகாளும் இறையந்தஸ்து அளிக்கும் திறமை கவனிக்கத்தக்கது. அதே கலிங்கத்துப் பரணியில் கடவுள் வாழ்த்தில் சிவனையும் மாலையும் நான்முகனையும் யானை முகனையும் ஆறுமுகனையும் நாமகளையும் உமையையும் சப்த கன்னி களையும் வணங்கும்போது அவ்வத் தெய்வங்களோடு இணைத்துக் குலோத்துங்கனை வாழ்த்தி யார் கடவுள், யார் மன்னர் எனப் படிப்போர் குழம்ப ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தும் பாங்கும் குறிப்பிடத்தக்கது.
சோழர் காலத்தைப் பற்றி அரிய ஆராய்ச்சிகளைச் செய்துள்ள பேராசியர் சுப்பராயலு அவர்கள் 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சோழ சாம்ராஜ்யம் விரிவடைய மன்னனுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி அதிகரித்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.(6)
சோழர் காலத்திற்குமுன் ‘பெருமான்’ என்றும் ‘பெருமானடிகள்’ என்றும் விளிக்கப்பட்ட மன்னன் சோழர் காலத் தொடக்கத்தில் ‘உடையார்’ எனவும் சாம்ராஜ்யம் விரிய விரிய ‘உலகுடைய பெருமாள்’ என்றும் அழைக்கப்பட்டதை இதற்குச் சான்றாகச் சுட்டிக் காட்டுகிறார் அவர். அரசனுக்குப் பயன்படுத்தப்பட்ட இத்தகைய பட்டங்கள் அக்காலத்திய தெய்வங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டி வியப்பார். சோழ அரசர்கள் புகழ்பெற்ற கடவுள்களின் தோழர்களாகக் கல்வெட்டுகளில் போற்றப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.(7)
இதே காலகட்டத்தில் தோன்றிய மேற்குறிப்பிட்ட பரணிகளும் உலாக்களும் இதே குறிக்கோளை இலக்கியங்களில் நிறைவேற்றியது ஒப்புநோக்கற்குரியது. மேலும் ராஜராஜன் காலத்திற்குப் பின்னரே மெய்க்கீர்த்திகள் படைக்கும் வழக்கம் தோன்றியமையும் அதற்குப் பின்னரே அரசனைப் போற்றும் சிற்றிலக்கிய வடிவங்கள் அதிகமாகத் தோன்றியமையும் அரச உருவாக்கத்திற்கும் இலக்கிய உருவாக்கத்திற்கும் உள்ள பொருத்தப்பாட்டை விளக்கும்.
அடுத்து சிற்றிலக்கியங்கள் யாவற்றிலும் அகத்திணைக்குரிய செய்திகளுக்கு அதிக இடமும் முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டிருக்கின்றன. காதல், பிரிவு, காமம் பற்றிய செய்திகள் இவ்வடிவங்களுள் பெரும் பகுதியில் வியாபித்துள்ளன. இப்பேரரசு காலத்திற்குமுன் செல்வாக்குடன் விளங்கிய வணிக வர்க்கத்தின் தத்துவங்களாகிய சமண, பௌத்த மதச் சித்தாந்தங்கள் பெண் வெறுப்பு, புலனடக்கம், துறவு, மகளிரிழிவு முதலிய கோட்பாடுகளை வலியுறுத்தி வந்திருந்தமையும் இதற்கு எதிர்ப்பாக எழுந்த பக்தி இயக்க காலத்தில், அவைதீக மதத் தாக்குதல்களால் ஒதுங்கி இருந்த அகப்பொருள், மானுடக் காதலாகவும் தெய்வீகக் காதலாகவும் நேர்வாழ்வுபெற்ற வரலாற்றையும் கலாநிதி கைலாசபதி போன்றோர் விளக்கியுள்ளனர்.(8)
எனவே காலத்தின் தேவையை ஒட்டிப் பழைய அகப்பொருள் உலா, கலம்பகம், பரணி (கடை திறப்பு) போன்ற வடிவங்களாகியுள்ளன. கால ஓட்டத்தில் எவ்வாறு பண்டைத் தமிழரின் அகத்திணைக் கோட்பாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் நெகிழ்ச்சியுற்று கைக்கிளை, பெருந்திணை போன்றவை இலக்கியத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதையும் கைலாசபதி அக்கட்டுரையில் சுவைபட நிறுவியுள்ளார். போர்க்களச் சடங்குகள் மனித மனத்தில் எவ்வாறு உருவாகுகின்றன, அவை எவ்வாறு இலக்கியத்தின் பாடு பொருளாகத் தனி இலக்கிய வடிவமும் எடுக்கின்றன என்பதனையும் பரணி பற்றிய ஒரு குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.(9)
மேலும், பேரரசும் பெருந்தத்துவமும் நிலைபெற்று, பெருங்கோயில்கள் எழுப்பப்பட்டு அவை நிறுவனங்களாகி அன்றாட மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த காலகட்டத்தில் கோவில்களில் பெரும் தேர்த் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. திருத்தொண்டர் படைக்குழாம் புடைசூழத் திருவாரூர் இறைவன் திருவீதியுலா வருவது, திருக்குறுகை வீரட்டத்தின் ஏழுநாள் விழா மற்றும் திருவீதி உலாத் ஆகியவற்றை திருநாவுக்கரசரும் இறைவன் விடைஏறி திருவீதி போகக் கொண்டதை அப்பரும் பாடியுள்ளார்.
இதற்கிணையாகப் பெருங்கதை தொடங்கி, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற பெருங்காப்பியங்களிலும் காவிய நாயகர்கள் உலாவரும் காட்சிகள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. உலா போன்ற இலக்கியங்கள் தோன்றுவதன் பௌதீகப் பின்னணியாக இவை விளங்குகின்றன. பாட்டுடைத் தலைவனை இறைவனாகவும் மையல் கொள்ளும் பெண்களை உயிர்களாகவும் ஏற்றுக்கொள்ளும் பேரரசு காலத் தத்துவத்திற்கு முரணில்லாத வகையில் தன்னேரில்லாத் தலைவனை அரசனாகவும் காமுறும் பெண்களைக் குடிகளாகவும் கொண்டு உலா இலக்கியங்கள் தோன்றின. பேரரசுப் பெருக்கத்திற்கு அடிநாதமாக உள்ள போர்ச் செயல்களைப் புகழ்ந்து, படைத்தலைவர்களை வாழ்த்தி மக்கள் மத்தியில் வீர உணர்வை விதைப்பதற்குப் பரணிகள் தோன்றின அகத் துறைகளை முதன்மைப்படுத்தி அரசன் புகழ்பாடும் கலம்பகங்கள் தோன்றின.
இறுதியாக, பேரரசுகளை உருவாக்கிக் கட்டிக்காத்து அரசியல் நிர்வாகம் செய்வதிலும் வாழ்நாளில் பெரும் பகுதியைப் போர் செய்வதிலும் கழித்திருந்த பேரரசர்கள் இடையிடையே கேட்டு மகிழ்வதற்குச் சிறு பிரபந்தங்களே தகுதியாக இருந்தன என்பதையும் காவிய காலத்தில் சிற்றிலக்கிய வடிவங்கள் தோன்றி வளர்ந்ததற்கு ஒரு காரணமாகவும் சுட்டிக் காட்டலாம். மொத்தத்தில், பேரரசு காலத்தில் காவியங்கள் எந்தச் சூழ்நிலையில் தோன்றினவோ அத்தகைய சூழ்நிலையே அக்காலத்திய சிற்றிலக்கியங்கள் தோன்றுவதற்கும் காரணமாயின.
குறிப்புகள்
- 5. அருணாச்சலம் மு. தமிழ் இலக்கிய வரலாறு – 12ஆம் நூற்றாண்டு,,காந்தி வித்தியாலயம், மயிலாடுதுறை 1973, பக். 46
6.
7.
8. கைலாசபதி க, ‘ஒப்பியல் இலக்கியம்’, பாட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1978, பக். 170
9. கைலாசபதி க, ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’, மக்கள் வெளியீடு, சென்னை, 1978 பக். 210 – 217
மூன்று
இனி, சிற்றிலக்கிய காலத்தின் வரலாற்றுப் பின்னணியைச் சற்றுப் பார்ப்போம். விஜயாலயன் கி.பி.846இல் தோற்றுவித்த சோழப் பேரரசின் வீழ்ச்சி, கி.பி. 1216இல் மூன்றாம் இராசராசனை வட ஆற்காட்டுச் சேந்த மங்கலத்தைச் சேர்ந்த படைத்தலைவனாகிய காடவர்கோன் கோப்பெருஞ் சிங்கன் வென்று சிறைப்பிடித்ததோடு தொடங்கியது. மூன்றாம் இராசேந்திர னோடு (1246-1279) சோழப் பேரரசு குலைந்து பாண்டியரின் கரம் ஓங்கியது. கி.பி. 1303 வரை பாண்டியராட்சி நடைபெற்றது. குலசேகரப் பாண்டியனின் பிள்ளைகளான சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் அரசுரிமைக்காகப் போரிட்டுக்கொள்ள, டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக்காபூர், சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாகப் பெரும் படையுடன் கி.பி. 1311ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மதுரையில் நுழைந்து மதுரை நகரையும் கோவிலையும் கொள்ளையடித்து இளவல்கள் இருவரையும் ஓட்டிவிட்டுத் தானே மதுரையைக் கைப்பற்றியதோடு மதுரையில் பாண்டியராட்சி வீழ்ந்தது.(10)
வேற்றுமொழி பேசுவோரின் ஆட்சியின்கீழ் தமிழகம் வந்தது. மாலிக்காபூருக்குப் பின் ஆங்காங்கு படைத் தலைவர்கள் சிறுநிலப் பகுதிகளை வளைத்துக்கொண்டு குறுநில மன்னர்களாக மாறினர், குலசேகரச் சம்புவரையன், புதுக்கோட்டை சேமப் பிள்ளை, தளபதி உலூப்கான், தென்காசிப் பாண்டியன் போன்ற சிற்றரசர்கள் பலர் முளைத்தனர்.(10b)
விஜயநகர அரசின் தென்பிராந்திய தளபதி குமார கம்பண்ணன், வீரவல்லாளன், சம்புவரையன் ஆகியோரின் துணையோடு மதுரை சுல்தானை கி.பி. 1368இல் வென்றதோடு விஜயநகரப் பேரரசின் ஆளுகையின் கீழ் தமிழகம் வந்தது. அச்சுத தேவராயன் (1533) காலத்தில் மதுரையில் விசுவநாத நாயக்கனும் தஞ்சையில் சேவப்ப நாயக்கனும் அரசப் பிரதிநிதிகளாகி, பிரதிநிதி ஆட்சிமுறையைத் தோற்றுவித்தனர்.(11)
தளிக்கோட்டையில் விஜயநகர அரசு வீழ்ந்தவுடன் இவர்கள் கி.பி. 1642இல் சுயாட்சி பெற்றனர்.(12)
மதுரை, செஞ்சி, தஞ்சை ஆகிய பகுதிகளில் தனித்தனி நாயக்க ஆட்சிகள் தோன்றின. மீனாட்சி அரசியின் காலத்தில் மதுரையிலும், பீஜப்பூர் படையெடுப்போடு செஞ்சியிலும் நாயக்கராட்சிகள் வீழ்ச்சியடைந்தன. 1674இல் நடைபெற்ற பீஜப்பூர் படையெடுப்போடு தஞ்சையில் மராட்டியர் ஆட்சி நிறுவப்பட்டது. 1691இல் நடைபெற்ற முஸ்லிம் படையெடுப்போடு முகலாயப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் மக்களிடமிருந்து பெருந்தொகை பிடுங்கப்பட்டுக் கப்பமாக மேலாதிக்க அரசுக்கு அனுப்பப்பட்டது.(13)
1771இல் தஞ்சை ஆங்கிலப் படையெடுப்புக்குள்ளாகியது. தஞ்சை மன்னன் தன்னுடைய வரி வருமானத்தில் எழுபது சதவீதத்தைக் கம்பெனிக்குக் கொடுக்குமாறு இப்போரின் மூலம் நிர்ப்பந்திக்கப்பட்டான். 1773இல் கம்பெனியின் ஆதரவோடு ஆற்காட்டு நவாப் தஞ்சைமீது படையெடுத்தான். நகரங்கள் சூறையாடப்பட்டன. கிராமங்களில் விளைச்சலில் 54 சதவிகிதம் வரை நிலவரியாகப் பிடுங்கப்பட்டது.(14)
1776இல் தஞ்சை மன்னனின் கீழ் ஒரு பொம்மை அரசாங்கத்தை பிரிட்டிஷார் நிறுவினர். பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோருடைய உதவியுடன் 1781-85 ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராகச் சென்னையை நோக்கிப் பெரும் படையுடன் வந்த ஹைதர் அலி தஞ்சையைப் பெருமளவில் சூறையாடினான். வடதஞ்சையை ஹைதரின் படை கொள்ளையடித்தது. பன்னிரெண்டாயிரம் குழந்தைகள் தஞ்சை யிலிருந்து அகதிகளாக மைசூருக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தஞ்சை மக்கள் கொலை செய்யப்பட்டனர். எஞ்சி யிருந்த மக்கள் அருகிலிருந்த காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.(15)
மொத்தத்தில் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தஞ்சையில் நிலையான ஆட்சி ஏதும் நடைபெறவில்லை. சோழப் பேரரசிற்குப் பின் தோன்றிய விஜயநகரப் பேரரசைப் பற்றிப் பேராசிரியர் பர்ட்டன் ஸ்டெய்ன்.
”விஜயநகர அரசின் ராணுவத் தன்மையும், 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 17ஆம் நூற்றாண்டின் இறுதிவரை நடைபெற்ற தொடர்ந்த போர் நடவடிக்கைகளும், இராணுவச் சர்வாதிகாரத்திற்கு உட்படாத அமைதியான ஆட்சி போலத் தோற்றமளித்து சோழர்காலத்தோடு உள்ளார்ந்து முரண்பட்டு விளங்கியது.”(16) -என்று குறிப்பிடுகிறார்.
நிலையான ஆட்சி இல்லாததோடு, இருந்த ஆட்சிகளும் வலிமை வாய்ந்தனவாக இல்லை. மராட்டிய மன்னன் சிவாஜி உட்படப் பலரும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களிடமிருந்து பெருந் தொகைகளைக் கப்பமாக வசூலித்துச் சென்றனர்.
”ஆட்சிச் சீரழிவோடு வேளாண்மை, பொருள் உற்பத்தி, வணிகம் போன்றவற்றிலும் தேக்கம் ஏற்பட்டது. பொருளாதார வளம், பண்பாட்டுச் சிறப்பு, அரசியலமைப்பு அனைத்தும் சீர் குலைந்தன.”(17) என்று வரலாற்றாசிரியர் ராஜய்யன் குறிப்பிடுவது பெருமளவிற்கு உண்மையாகும். சோழர் காலத்தில் உள்நாட்டார்களின் கையிலிருந்த கப்பல் வணிகம் பதினான்காம் நூற்றாண்டில் அராபிய வணிகர் களிடத்திலும், பதினாறாம் நூற்றாண்டில் இருந்து ஐரோப்பியர்கள் கையிலும் சென்றது. அவர்கள் தங்கள் வணிகத்திற்கு ஏற்ற பொருட்களை உற்பத்தி செய்யுமாறு கிராம மக்களைக் கட்டாயப்படுத்தினர். குறைந்த கூலி கொடுத்துத் தமிழ்நாட்டு நெசவாளர்களை வெளிநாட்டு ஏற்றுமதிக்கு ஏற்ற துணிகளை நெய்யச் செய்தனர்,
ஆங்கிலேயராட்சி உறுதிப்பட்டபின் இறக்குமதியை அதிகப்படுத்தி உள்நாட்டுக் கைத்தொழில்களைச் சீர்குலைத்ததின் விளைவாக ஏராளமானோர் வேலையிழந்தனர்.(18)
சோழர்கால நிலவுடைமை முறை, கிராம சபை முறை ஆகியவற்றில் பின்னாளைய அரசர்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தினர், ‘நாயங்கார’ முறை ‘ஆயக்கார’ முறை போன்ற நிர்வாக முறைகள் கொண்டுவரப்பட்டன. மத்தியகால இந்தியாவில் நிலமான்ய முறை இருந்ததெனக் கூற முடியாது என வாதிடும் சர்க்கார்,
”தென்னிந்தியாவில் மத்திய காலத்தின் பின் பகுதியில் நிலவிய அமரநாயக்க முறையைத் தவிர, நிலமான்யச் சமுதாயத்தை ஒத்த சமுதாயம் இந்தியாவில் இருந்ததற்கு ஆதாரமில்லை,”(19) என்று குறிப்பிடுவதிலிருந்து அமரநாயக்க முறையை அவர் ஒரு முழுமையான நிலவுடைமை அமைப்பாகக் கருதுவது புரிகிறது. சோழர் காலச் சமுதாயத்தை ஓர் நிலமான்யச் சமுதாயமாகக் கருத முடியாது. மாறாக அது ஒர் சிக்கலான ஆசிய உற்பத்தி முறைச் சமுதாய அமைப்பைப் போலவே தோன்றுகிறது என வாதிடும் பேராசியை கத்லீன் கஃப், “விஜயநகர, மராத்தா அரசுகள் அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்தன. அவர்களின் அரசமைப்பை திறைசெலுத்தும் நிலமான்ய அமைப்பாகக் கருதலாம்”(20) என்று குறிப்பிடுகிறார். அன்றைய சமுதாய அமைப்பைப் பற்றிய விரிந்த ஆராய்ச்சியில் இறங்குவதற்கு இது ஏற்ற சந்தர்ப்பமன்று.
பொதுவாக, இக்காலகட்டத்தில் உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன என்பது மட்டும் உண்மை. மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட கர்ணம், ரெட்டி, தலையாரி ஆகிய அதிகாரிகள் மத்திய அரசிற்கும் கிராமங்களுக்கும் இணைப்பாகச் செயல்பட்டனர். இவர்களறியாமல் கிராமத்தில் எத்தகைய செயல்களும் நடைபெற இயலாது என்ற நிலைமை ஏற்பட்டது, சோழர் காலத்தில் கிராமங்களுக்கிருந்த ஓரளவு சுயாட்சியும் ஒழிந்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கிராமங்கள் வந்தன.
பாளையக்காரர்கள், அமரநாயக்கர்கள், சுபேதார்கள் போன்ற அதிகாரிகளைக் கொண்டு வரி என்ற பெயரில் மக்களிடமிருந்து விளைச்சலின் பெரும்பகுதி சுரண்டப்பட்டது. விளைச்சலில் பத்தில் ஒன்பது பங்குவரை வாரமாகச் சுரண்டப்பட்டது. புதுக்கோட்டைப் பகுதியில் பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் நிலப்பிரபுவிற்கும் குடிமக்களுக்குமிடையே விளைச்சல் கீழ்கண்ட விகிதத்தில் பிரிக்கப் பட்டது.(21)
வரகு, திணை முதலியன 2 : 1
புஞ்சை 4 : 1
செங்கல்பட்டில் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேங்காய் விளைச்சலில் நான்கில் மூன்று பகுதி வாரமாகக் கைப்பற்றிக் கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு.(22) ஹைதரின் நான்காண்டு படை யெடுப்பின்போது விளைச்சலில் 62 சதவிகிதத்தை அவன் கைப்பற்றி யுள்ளான்.(23) தஞ்சையில் நிறுவப்பட்ட ‘பொம்மை ராஜா’, 62 சதவிகிதம் வரை விவசாயிகளிடம் சுரண்டி அதில் 75 சதவீதம்வரை ‘அமைதியை நிலைநாட்டுவதற்காக’ வெள்ளையர்களுக்குத் திறையாய்ச் செலுத்தியுள்ளான்.’(24)
இந்தச் சுரண்டல் எல்லாக் காலகட்டத்திலும் எல்லா இடங்களிலும் ஒரே சீராக இருந்ததில்லை. இவ்வாறு சுரண்டப்பட்ட பெருந்தொகைகள் அனாவசியமான போர்களுக்கும் வீண் ஆடம்பரங்களுக்கும் செலவிடப் பட்டன. பசியும் பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்தாடின. பஞ்சங்களிலும், அம்மை, பிளேக் போன்ற நோய்களிலும் கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர். மாண்டுபோன பிணங்களை வெளியேற்றக்கூட முடியாத நிலைமைகளை அக்கால இலக்கியங்களில் காணலாம்.(25)
பெரும் பஞ்சங்களின் விளைவாக விலைவாசி ஏறி மனிதரை மனிதர் சாப்பிட்டதாகக் கல்வெட்டுகள் கூறும்.26 1618 இலிருந்து 1619 வரை தமிழகத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சங்கள் பற்றி மூர்லண்ட் குறிப்பிட்டுள்ளார்.(27)
இத்தகைய கொடுமைகளின் விளைவாக மக்கள் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. கூட்டம் கூட்டமாகக் குடியிருப்புகளை விட்டு அவர்கள் இடம்பெயர்ந்தனர். அச்சுதராயர் காலத்தில் திருப்பத்தூரில் இருந்து மிகக் கொடியமுறையில் வரி வசூலித்துகொண்டிருந்த ராயப்ப நாயக்கரின் கொடுமை தாளாது ‘மத்யானி வடபாநு’ கிராம மக்கள் கடமை, காணிக்கை போன்ற வரிகளைக் கொடுக்க முடியாமல் திருபுவாலைக்குடி உடைய நாயனார்கோவில் அதிகாரிகளிடம் நிலங்களை விற்றுவிட்டுக் குடும்பம் குடும்பமாக வெளியேறி இருக்கின்றனர்.(28)
ஸ்வபானு வருஷத்தில் கம்மாளர், கொல்லர், பொற்கொல்லர், தச்சர் போன்ற கைவினைஞர்கள் வரிகொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறத் திட்டமிட்டபோது தஞ்சையை ஆண்ட சின்னப்ப நாயக்கன் வரிகளைத் தள்ளுபடி செய்திருக்கிறான்.(29)
கி.பி. 1446இல் திருவாடியில் வரிக் கொடுமை தாளாது விவசாயிகளும் கைவினைஞர்களும் நாட்டைவிட்டு வெளியேறியதன் விளைவாக நாட்டில் மக்கள் இல்லாமல் போனதையொட்டி அரசன் அப்பகுதியின் அதிகாரியாக விளங்கிய நாகராச உடையாருக்கு வரிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரத்தை வழங்கி இருக்கிறான்.(30) ராமனாதபுரத்தைச் சேர்ந்த பூங்குடி நாட்டிலுள்ள வேலன்குடி என்னுமிடத்தில் அவ்வூரைச் சேர்ந்த மறவர்கள் அரசாங்கக் கடனைத் தீர்க்க இயலாததனால் திருக்கோலக்குடி ஆண்ட நாயனார் கோவிலுக்குத் தங்கள் நிலத்தை விற்றிருக்கின்றனர்.(31) திருச்சி ஜில்லாவில் திருவரங்குளத்தைச் சேர்ந்த பகுதியில் கடன்களைத் தீர்க்க இயலாத விவசாயிகள் ஸ்வாமி நரச நாயக்கரின் கெடுபிடிகள் தாளாமல் நிலத்தை விற்றி ருக்கின்றனர்.’(32) வரிக் கொடுமை தாளாமல் பல சந்தர்ப்பங்களில் மக்கள் இணைந்து அதிகார வர்க்கத்தை எதிர்த்திருக்கின்றனர். விருத்தாசலத்திலும் பெண்ணாடத்திலும் ஸ்ரீமுஷ்ணத்திலும் இத்தகைய எதிர்ப்புகள் நிகழ்ந்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.(33)
வெளிநாட்டு அடிமை வர்த்தகர்களிடம் பஞ்சம், பட்டினியால் பாதிக்கப்பட்ட கீழ்மட்டத் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே விற்றுக்கொண்டதற்கும் வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளிலிருந்து ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மற்ற இடங்களைக் காட்டிலும் சுங்க வரிகள் சென்னையில் குறைவு என்பதால் சென்னையில் இத்தகைய அடிமை வியாபாரம் ஏராளமாக நடைபெற்றது என்கிறார் வரலாற்றாசிரியர் மாணிக்கம்.(33b)
சோழமண்டலக் கடற்கரையில் பிள்ளைகளை விற்பதற்காக அலைந்த தாய்மார்களைப் பற்றியும் மலபார் பகுதியிலிருந்து அரிசியையும் தேங்காயையும் ஏற்றிவந்து அவற்றைக் கொடுத்து அடிமைகளை வாங்கிச் சென்றதையும் போர்த்துக்கீசிய மாலுமி பார்போசர் குறிப்பிடுகிறார்.(33c)
நாகப்பட்டினம் துறைமுகத்தில் பத்து ஷில்லிங்கிற்கு ஓர் அடிமை என்ற வீதத்தில் 5000 அடிமைகளை இலங்கைக்கு வாங்கிச் சென்றதைப் பற்றி டச்சுப் பாதிரி பிலிப் பால்தாஸ் குறிப்பிடுகிறார்.(33d) தரங்கம்பாடியில் ஓர் இத்தாலியப் பாதிரி கணவனுக்குத் தெரியாமல் அவன் மனைவியையும் நான்கு மகன்களையும் முப்பது ‘பகோடா’க்களுக்காக வஞ்சகமாக விற்றதையும் அவர்களை விடுவிக்க முயற்சிசெய்த கணவனின் பரிதாபகரமான முயற்சிகள் இரக்கமின்றி முறியடிக்கபட்டதையும் நிக்கோலஸ் மனுசி என்ற வெனிஷிய வர்த்தகர் குறிப்பிடுகிறார்.(33e)
மொத்தத்தில் அன்றைய தமிழகத்தின் சமூகப்-பொருளாதார நிலைமையை,
“திறை, கப்பம் ஆகிய பெயர்களில் தஞ்சையின் உபரிகளெல்லாம் உரிஞ்சப்படுவது தொடரத் தொடர மராமத்துப் பணிகள் குறைய ஆரம்பித்தன. விஜயநகர ஆட்சியாளர்கள் வைணவத்தை ஆதரித்துச் சில பெரிய கோவில்களைக் கட்டினர். ஆனால் புதிய நீர்ப்பாசன வசதிகள் மிக மிகக் குறைந்த அளவிலேயே மேற் கொள்ளப்பட்டன. 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின் மிகச் சில கோவில்கள்தான் கட்டப்பட்டன. மேலாதிக்க அரசுகளுக்குத் திறை செலுத்தும் பொருட்டு 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் நிலவரி 50 சதத்திற்கும் மேலாக்கப்பட்டது. கிராம நிலங்களில் பாடுபட்டு உழைத்துப் பயிர்ச்செலவு செய்கிற விவசாயிக்கு விளைந்த நெல்லில் ஐந்தில் ஒரு பங்கும், புன்செய் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்குந்தான் கிடைத்தன. கீழ்வாரத்திலும் பெரும்பகுதி நிலவுடமை வர்க்கத்திற்குப் போய்ச் சேரத் தொடங்கி இந்த மதிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கொடும் பஞ்சங்கள் ஏற்பட்டன. அடிக்கடி படை யெடுப்புகளும் போர்களும் நடைபெற்றன”(34)
என்று கத்லீன் கஃப் தஞ்சையைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இவற்றின் விளைவாகப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய தேக்கம் ஏற்பட்டது. படையெடுப்புகளின் விளைவாகத் தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமாகிய தஞ்சையில் நெல் விளைச்சல் எவ்வாறு சீர்குலைந்தது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் நிறுவுவார் கத்லீன். 1780-81இல் 301,526 மெட்ரிக் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1782-83இல் 39,576 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது.(35) இது ஹைதர் அலியின் படையெடுப்பின் விளைவு. ராஜய்யன் போன்ற வரலாற்றாசிரியர்களும் கேசவன் போன்ற இலக்கிய ஆராய்ச்சியாளர்களும் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.(36) மேலே சுட்டிக்காட்டியவாறு இந்தப் பொருளாதாரத் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகளும் தாழ்ந்த சாதி நில அடிமைகளுந்தான். அன்றைய நிலவுடமை ஆதிக்க சக்திகளாக விளங்கிய பார்ப்பனர்களும் வேளாளர்களும் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனார்கள்.
விஜயநகர கால அரசின் மதக் கண்ணோட்டங்கள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியம். தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் எழுதிய அறிஞர்களில் ஒருவராகிய எம்.என்.பூர்ணலிங்கம் பிள்ளை பண்டை இலக்கியக் காலம், புத்த ஜைன காலம், மத மறுமலர்ச்சிக் காலம், இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் எனப் பாகுபாடு செய்யும்போது கி.பி. 1400லிருந்து கி.பி. 1700க்கு இடைப்பட்ட காலத்தை ‘மடங்கள் மற்றும் மத நிறுவனங்களின் காலம்’ எனப் பாகுபாடு செய்வார்.(37)
முஸ்லிம் மதத்தால் ஏற்பட்ட ‘சீரழிவுகளைத்’ துடைத்து இந்துப் பண்பாட்டை நிலை நிறுத்துவதற்காகத் தோன்றியதாகத் தங்களைப் பாவித்துக்கொண்ட விஜயநகர மன்னர்களின் காலத்தில் சைவ,வைணவத் தத்துவங்கள் ஓங்கின.(38)
அரசின் அடிப்படைப் பணி வேதங்களின் அடிப்படையில் சுயதர்மம் பேணுதல், அதாவது வருணா சிரம தர்மங்களைப் பேணுதலைக் கட்டாயப் படுத்துவதெனக் கொண்டனர்.(39) மத்திய காலத்தைப் போல வேறெந்தக் காலத்திலும் அரசு மக்களின் தனி வாழ்வில் இந்த அளவிற்குத் தலையிட்டதில்லை என்பார் வரலாற்றாசிரியர் டி.வி. மகாலிங்கம்.
விஜயநகர, நாயக்க ஆட்சிக் காலத்தில் அரசமைப்பிலும் நிர்வாக அமைப்பிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு, தெலுங்கு அதிகார வர்க்கம் தமிழகமெங்கும் நிறைந்தபோதிலும், வர்ணாசிரமம் பேண வந்த விஜயநகர மன்னர்களின் காலத்தில் பார்ப்பனர்களின் செல்வாக்கில் குறைவேற்படவில்லை. தொடர்ந்த போர்களிலும் படையெடுப்புக்களிலும் ஈடுபட்டுவந்த விஜயநகரப் பேரரசின் நிர்வாகம் இராணுவத்தன்மை வாய்ந்ததாக இருந்தது. போர்க் தலைவர்களே (நாயக்குகள்) நிர்வாகத் தலைவர்களாக மாறினர். வெடிமருந்துகளின் பயன்பாடும், முஸ்லிம் படையெடுப்புகளும் அதிகரித்ததின் விளைவாகக் கோட்டைகளின் முக்கியத்துவம் பெருகின. கோட்டை அதிகாரிகள் (துர்கா தன்னாயகர்கள்) என்கிற அதிகாரிகள் கோட்டைகளுக்கு மட்டுமின்றிக் கோட்டைக்குட்பட்ட பகுதிகளுக்கும் பேரதிகாரிகளாக விளங்கினர்.(40) இந்தக் கோட்டை அதிகாரிகளில் பெரும்பாலோர் பார்ப்பனர்களாக இருந்ததைக் கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து வியப்புடன் சுட்டிக்காட்டுவார் பர்டன் ஸ்டெய்ன்.(41).
கிருஷ்ண தேவராயரது காலத்திய இலக்கியமாகிய அமுக்தமால்யம்’ கோட்டையதிகாரிகளாகப் பார்ப்பனர்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. பார்ப்பனர்கள் திறமை யாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருப்பர் என அவ்விலக்கியம் கூறுகிறது.(42)
சோழர் காலத்திலிருந்து பார்ப்பனர்களுடன் சேர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்தவர்களாகிய வெள்ளாளர்களும் நாயக்கராட்சிக் காலத்தில் வர்ணாசிரமத்தின் காவலர்களாகவே விளங்கினர். வேளாளர்களின் மேலாதிக்கத்தைப் போற்றுகிறதும், அவர்களின் பெருமைகளைப் புகழ்கிறதுமான சதக இலக்கியங்கள் வேளாளர்களைச் ‘சத்சூத்திரர்கள்’ என்று பெருமை கொள்ளுகிறது.(43)
சோழிய வேளாளர்கள் பிரம்மாவின் காலடியிலிருந்து தோன்றியவர்கள் என்று கூறி வருணாசிரமத் தத்துவத்தின் புராண அடிப்படையைச் சோழ மண்டலச் சதகம் ஏற்றுக்கொள்கிறது. சோழமண்டலச் சதகமும் தொண்டை மண்டலச் சதகமும் மனுதர்மத்தை பேணுபவர்களாக வேளாளர்களைப் போற்றுகிறது. பார்ப்பனர்களைப் போன்று வேளாளர்ளைத் ‘தூய்மையானவர்களாக’ப் போற்றும் சதகங்கள் கோவில்களையும் மடங்களையும் கட்டியவர்கள் என அவர்களைப் புகழ்கிறது. இக்காலகட்டத்தில் பார்ப்பன – வேளாள மடங்கள் ஏராளமாகத் தோன்றியமை இக்காலத்திய பார்ப்பன – வேளாள ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.
மடங்கள் மக்கள் வாழ்வில் பேராதிக்கம் செலுத்தத்தொடங்கின. தியானம் செய்யவும் தத்துவம் பயிலவும் மடங்கள் பயன்பட்டன. பார்ப்பன மடங்களில் வடமொழி வேதங்களும் சைவ மடங்களில் தமிழ் வேதங்களும் பயிற்றுவிக்கப்பட்டன. சிருங்கேரிமடம், காஞ்சி காமகோடி மடம் போன்றவை மான்யங்கள் அளிக்கப்பட்டுத் தலை ஓங்கின. 1561ல் குமரகுருபரர் தருமபுர ஆதீனத்தை நிறுவினார். நமச்சிவாய தேசிகர் திருவாடுதுறை ஆதீனத்தை நிறுவினார், திருப்பனந்தாள் மடம், சிதம்பரம் பெரியதேவ நயினார் மடம், தென் ஆற்காட்டில் திருநாவலூர் மடம், காஞ்சியில் ஞானப்பிரகாச சுவாமிகள் மடம் என மடங்கள் பெருகின. இவற்றைப் பதினெண் மடங்கள் என்பார் கவி காளமேகம். இப் பதினெட்டையும் பட்டியல் போட்டுக் காட்டுவார் அபிதான சிந்தாமணி சிங்காரவேலு முதலியார்.
பொருளாதாரத்தில் நிலவிய தேக்கமும் அமைதியற்ற அரசியல் சூழலும் அற்புத உணர்வுகளும் காவிய ரசனையும் குன்றிச் சமய உணர்வுகள் மிகுதியாகப்போன தன்மையும், வடமொழி இலக்கியங்களைக் கற்றுத் தமிழில் வடிக்கிற ஆர்வம் குன்றியமையும் காவிய காலம் ஒடுங்கியமைக்கான காரணங்கள் என்பார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.(44) பொதுவாகப் பெருங்காப்பியங்கள் என்பன தனிமனித முயற்சியின் விளைவு அல்ல. வாய்மொழியாகக் கூறுவனவற்றை அருகிலிருந்து எழுதுதல் திருத்துதல், படி எடுத்தல் போன்றவற்றிற்கு உதவக்கூடிய துணைக் கவிஞர்கள் பலருடன் சேர்ந்து காவியகர்த்தா உழைப்பதின் விளைவாகவே ஒரு காப்பியம் உருவாகும். அத்தனை பேரையும் ஒரு நீண்ட காலத்திற்குப் பராமரிக்கிற அளவிற்குப் பொருளா தார வளம் இல்லாமற்போவதும் காவியங்கள் ஒடுங்கிப்போனதற்கான பௌதீகக் காரணங்களில் ஒன்றெனச் சொல்லலாம். ஆனால் நீண்ட காப்பியங்களுக்கு ஒப்பான விருத்தியுரைகள் எப்படி எழுதப்பட்டன என்கிற கேள்வி இங்கு எழலாம். மடங்களின் ஆதரவில் ஸ்தல புராணங்களும் விருத்தியுரைகளும் எழுதப்பட்டதற்கும், அரசர்கள் அல்லது நிலப்பிரபுக்களின் ஆதரவில் அற்புத ரசனையுடன் கூடிய காப்பியங்கள் எழுதப்பட்டதற்கும் வேறுபாடுகள் உண்டு. மொத்தத்தில் பெருங்காப்பியங்கள் எழுகிற சூழல்களும், அவற்றை எழுதுகிற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிற சூழலும் இல்லாமற் போனதற்கான பௌதீகப் பின்னணிகளின் ஒன்றாக இதனை உணர வேண்டும். இத்தகைய சூழலைமீறி அன்று எழுந்த தணிகைப் புராணம், வில்லி பாரதம் போன்றவை கவித்துவம் குறைந்து காலத்தால் புறக்கணிக்கப் படத்தக்கனவாயின.
இவ்வாறு பொருளாதாரத்தில் ஓரு தேக்கத்தோடு, மதமும் மடங்களும் ஆதிக்கம் செலுத்திய ஒரு சூழலில் தத்துவ விசாரங்கள் அதிகமாயின. சைவ சாத்திர உரைகளும் வைணவ பிரபந்த வியாக்கியானங்களும் பெருகின. பார்ப்பனர் வேளாள ஆதிக்கப் போட்டியின் பின்னணியில், பெரும்பாலும் பார்ப்பனர்களே எழுதிய பிரபந்த வியாக்கியானங்கள், மணிப்பிரவாள உரை போன்றவற்றையும் சைவ வேளாளர்களே எழுதிய சைவ தத்துவ உரைகளையும் ஆராய்வது பயனுடையதாகும். மொத்தத்தில் உந்திக்களிற்றுப் பொழிப்புரை, திருஉந்தியார் உரை, ஞானாமிர்த உரை, சௌந்தர்ய லஹரி உரை, சிவஞான சித்தி உரை, சிவப்பிரகாச உரை, சித்தியார் பரபக்க உரை போன்ற சைவ சித்தாந்த உரைகளும் இராமானுஜ நூற்றந்தாதி வியாக்கியானம், அர்த்த பஞ்சக வியாக்கியானம், சப்த கதை வியாக்கியானம், திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்கியானம், தனியன் வியாக்கியானம், மணிப் பிரவாளம் போன்ற வைணவப் பிரபந்த உரைகளும் இக்காலத்தில் தோன்றியவையாகும்.
ஸ்வருபானந்த தேசிகரின் மாணவர் தத்துவராயர் அத்வைத நூல்கள் எழுதினார். வேதாந்த தேசிகரும் மணவாள மாமுனிகளும் மும்மணிக் கோவைகளும் நவரத்ன மாலைகளும் இயற்றினர். தாண்டவராய சுவாமிகள் கைவல்ய நவநீதம் இயற்றினார். இரு சமய விளக்கம், கச்சிக் கலம்பகம், திருக்காளத்தி நாதருலா ஆகிய நூற்கள் இயற்றப்பட்டன. திருவாரூர் வைத்தியநாத தேசிகர் இலக்கண விளக்கம் எழுதினார். அம்பலவாண தேசிகர் சிந்தாந்த சிந்தாமணி, நிட்டை விளக்கம், சன்மார்க்க சித்தியார் ஆகியவற்றை எழுதினார். தருமபுர மடத்தலைவர் மாசிலாமணி தேசிகர் ஆதரவில் கந்தர் கலிவெண்பா, கயிலாய கலம்பகம், மதுரைக் கலம்பகம், இரட்டை மணிமாலை ஆகியவை எழுதப்பட்டன. மொத்தத்தில் மத்திய கால ஐரோப்பாவில் மடாலயங்கள் வகித்த பங்கை, இக்காலகட்டத்தில் மடங்கள் வகித்தன எனலாம்.
குறிப்புகள்
- 10.
10b. கேசவன் – கோ. ‘பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை’ அன்னம் சிவகங்கை, 1981
17. கேசவன் கோ, ‘பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை’, அன்னம், சிவகங்கை, 1981, பக். 11 – 12
25. அந்தோணிமுத்துப்பிள்ளை, ‘சந்தமார் சிந்துக் கவிதைகள்’, திருச்சி, 1981 பக். 50 – 51
43. சதக இலக்கியம்: ஒவ்வொன்றும் கட்டளைக் கலித்துறையிலான நூறு பாடல்களைக் கொண்ட இவ்விலக்கியங்கள் இக்கால கட்டத்தில் ஏராளமாகத் தோன்றின. பாண்டிய மண்டல சதகம், சோழமண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், கார் மண்டல சதகம் என்பவை இவற்றில் முக்கியமானவை. ஏரெழுபது போன்ற நூல்கள் இவைகட்கு முன்பே உழவின் பெருமைகளைப் போற்றி வந்தாலும், வேளாளச் சமுகத்தின் பெருமைகளை போற்றுவதற்கெனவே ஓர் இலக்கிய வடிவம் தோன்றியது இக்கால கட்டத்தில்தான். பார்ப்பனர்களுக்கு ஒப்ப வேளார்களைத் தூய்மையானவர்களாகக் காட்டுவதும் வர்ணாசிரம, மனுதர்மக் காவலர்களாக வேளாளர்களைச் சொல்வதும் இவற்றின் முக்கிய அம்சங்களாக் காணப்படுகின்றன. வேளாளர்களின் அரசியல் முக்கியத்துவத்தை இவை வலியுறுத்தி யுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். யானைகளையும், குதிரைகளையும், ரதங்களையும் மன்னனுக்குக் கொடுத்துப் பாண்டிய மன்னரின் சிரத்தில் முடி சூட்டுபவர்களாக வேளாளர்களைப் பாண்டிய மண்டல சதகம் படம்பிடித்துக் காட்டுகிறது. கோவிலதிகாரிகளாகவும் நிலவுடைமையாளர்களாகவும் அரசனுக்கருகில் இருக்கும் வாய்ப்புப் பெற்றவர்களென வேளாளர்களைச் சோழ மண்டல சதகம் போற்றுகிறது. இதுவரை இலக்கிய, வரலாற்றாசிரியர்களால் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குட்படுத்தப்படாத சதக இலக்கியம் விரிந்த ஆராய்ச்சிக்குரிய ஒர் இலக்கிய வடிவமாகத் தோன்றுகிறது.’ அக்காலத்திய வேளாள ஆதிக்கத்தையும் பிராமண – வேளாள உறவுகளையும் வேளாள – தெலுங்கு அதிகாரிகளின் உறவுகளையும் புரிந்துகொள்ளச் சதக இலக்கியங்களை விரிந்த ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டும். சதக இலக்கியங்களை வரலாற்று மூலங்களாக ஏற்றுக்கொண்டு பர்ட்டன் ஸ்டெய்ன் தனது நூலில் சில குறிப்பிடத்தக்க முடிவுகளுக்கு வருகிறார். வேளாளர்கள் முக்கியப் பங்கு வகித்த சோழர்காலத்து நிர்வாக அமைப்புக்களாகிய பெரிய நாடு போன்றவை சிதைந்த பிறகு, தாங்கள் இழந்துவிட்டவற்றை ஈடுசெய்வதற்கு அகன்ற மண்டல ரீதியான உறவுகளையும் அடையாளங்களையும் தேடுகிற முயற்சியின் ஒரு வெளிப்பாடாகச் சதகங்களைக் காண வேண்டும் என்கிறார் ஸ்டெய்ன், 442-448
44. வையாபுரிப் பிள்ளை எஸ். ‘காவிய காலம்’, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 1912. ஜீ. 314 – 322
நான்கு
பொருளாதாரத்தில் ஏற்பட்ட இத்தகைய தேக்கத்தின் விளைவாகவும் விஜயநகரப் பேரரசு நிம்மதியான ஆட்சியை ஒரு நீண்ட காலகட்டத்திற்கு நடத்துகிற வாய்ப்பைப் பெற்றில்லையாதலாலும் இக்காலகட்டத்தில் தமிழகத்தில் சோழர் காலத்தைப் போன்று, பிருமாண்டமான கலசங்களுடன் கூடிய கோபுரங்களும் மிகப் பெரிய கோவில்களும் கட்டப்படுவது தவிர்க்கப்பட்டன. பழைய கோவில்களில் சிறிய சிறிய சேர்க்கைகள் இணைக்கப்பட்டன, வேற்றரசர்களின் படையெடுப்பாலும் காலத்தாலும் சிதிலமடைந்திருந்த கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டன. எங்காவது புதிய கோவில்கள் கட்டுவது அவசியமானால் மிகச்சிறிய கோவில்களையே கட்டினர். ஒரு பெரும் சுற்றுச் சுவருக்குள், சிறு தெய்வங்களுக்காக ஏராளமான சிறிய கோவில்கள் கட்டப்பட்டன, அம்மன் கோவில்களும் நிறையக் கட்டப்பட்டன, மதச்சடங்குகள் பல்கிப் பெருகிப் போனதற்கு ஏற்பச் சிறுகோவில்களும் மண்டபங்களும் அதிகரித்தன என்பார் டி.வி. மகாலிங்கம்.(45)
பிரும்மாண்டமான அமைப்புகள் தவிர்க்கப்பட்டுச் சிறிய வேலைப் பாடுகள் செய்யும்போது கலைஞர்களின் கலைத்திறம் யாவும் அச்சிறிய வேலைப்பாடுகளில் நுணுக்கமான அலங்காரங்கள் செய்வதில் செலவழிக்கப்பட்டது. வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலயத்திலுள்ளதைப் போன்று நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகுந்த கவின்மிகு கல்யாண மண்டபங்கள் நிறையக் கட்டப்பட்டன, மதக் கருத்துரைகள். சிந்தாந்த விளக்கங்கள் போன்றவற்றை நிகழ்த்துவதற்கு இத்தகைய மண்டபங்கள் நிறையத் தேவைப்பட்டன. உயர்ந்த மேடை, நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் ஆகியவற்றுடன் ரதத்தைப் போன்று சக்கரங்களும் குதிரைகளும் செதுக்கப்பட்டு இம்மண்டபங்கள் கலைக்கோவில்களாக விளங்கின. நாக பந்தனங்கள், அலங்காரக் கூடுகள் ஆகியவையும் உருவாக்கப்பட்டன. இக்காலத்தில் நிறுவப்பட்ட தூண்களின் அமைப்பையும் துவார பாலகர்களின் அமைப்பையும் இதற்கு முற்பட்ட சோழ – பல்லவர்
காலத்து வேலைப்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துல்லியமான வேறுபாடுகள் நன்கு விளங்கும், விஜயநகர காலத்துச் சிற்ப வேலைப்பாடுகள் பற்றிக் கூறும்போது பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் ‘வளம் கொழிக்கிற, மிகை வளமான, வளர்ச்சி ஆவேசமிக்க, சிற்ப நூதனங்களுடன் கூடிய வேலைப்பாடுகள் நிறைந்தனவாக’ அவை விளங்கின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.(46)
அவ்வாறே அக்கால ஓவியங்கள் பற்றிக் கூற வரும்போதும், “கோணம், கோலம் போன்றவை பற்றி நுட்பமான கண்ணோட்டங்கள் உடையவர்களாகவும் கண் கவர் ஓவியங்களைத் தீட்டுவதற்கேற்ற அபூர்வமான, வண்ணங்கள் பற்றிய அறிவுடை யவர்களாகவும் (அக்கால) ஒவியர்கள் விளங்கினர். கலை அலங்காரங்கள் செய்வதிலும் அணிகலன்கள் மிக்கதாக்குவதிலும் அன்றைய காலக்கட்டத்தின் சிறப்பியல்புகளாகிய அலங்கார வேலைபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எடுத்துக் காட்டாக அன்றைய ஓவியக்கலை விளங்கியமை வரலாற்று முக்கியத்துவமுடையதாகும்’’(47) எனக் கூறுவது மனங்கொள்ளத்தக்கது.
ஓரு காலத்தில் நிலவிய சிற்பம், ஒவியம், நடனம், இலக்கியம் போன்ற அனைத்துக் கலைகளையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்பர் நவீன ஆராய்ச்சியாளர். இக்காலத்தில் தமிழில் தோன்றிய இலக்கிய வகைகளையும் அப்போது சிறந்து விளங்கிய சிற்ப, ஓவியக் கலை களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால் சில வியக்கத்தக்க உண்மைகள் புலப்படும்.
சிற்ப, ஓவியங்களைப் போலவே இலக்கியத்திலும் இத்தகைய அலங்கார வேலைப்பாடுகளுக்கு நிறைய முக்கியத்துவம் ஏற்பட்டது. அதற்கேற்றாற்போல அணி இலக்கண நூற்களும் மிகுதியாகத் தோன்றத் தொடங்கின. தொல்காப்பியத்தில் அணி விளக்கங்கள் அதிகமில்லை. தொல்காப்பியர் கண்ட ஒரே அணி உவமம் மட்டுமே. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நிறைய அணி இலக்கணங்களும் அணி சாஸ்திரங்களும் தோன்றத் தொடங்கின. சிற்றிலக்கியக் காலகட்டத்தில் மாறனலங்காரம், குவலாயனந்தம் போன்ற நூல்கள் உருவாகின.
பதினான்காம் நூற்றாண்டு வாக்கில் புலவர் பற்றியும் கவிதை ஆக்கம் பற்றியும் ஈண்டு நிலவி வந்த கருத்துக்கள் பற்றிப் பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது இங்கு அறியத்தக்கது. கவிதை ஆக்கம் என்பது கவித்துவப் பிரவாகம் என்பது போய், அது பிரக்ஞைபூர்வமாகக் கட்டி எழுப்ப வேண்டிய நுண்ணிதான கட்டிடம் எனவும், செய்யுளியற்றல் என்பது பரீட்சை வழிவரும் திறன் எனவும் அக்காலத்தில் கருதப்பட்டன என்பார் டாக்டர் சிவத்தம்பி.(48) தனது ஞான விசேடத்தால் ஒருவன் சொல்லிய நூல் விகற்பத்தைப் பொருள்விரிக்க வந்த கமகனும் எடுத்துக்கொண்ட கோளுக்குப் பொருந்தின மேற்கோளும் காரணமும் சொல்லி முடிக்கிற வாதியும், கேட்டோர் விரும்ப இலக்கணத்தையாதல், இலக்கியத்தையாதல் செஞ்சொல்லால் விளங்கச் சொல்லும் வாக்கியும் கவித்துவம் மங்கி, தத்துவ விளக்கங்களும், வியாக்கியான உரைகளும் பல்கிப் போயிருந்த காலகட்டத்தில் கவிஞர் பட்டியலில் வலிந்து இணைத்துப் போற்றப் பட்டதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டுவார். இதனைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் தோன்றிய சிற்றிலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறவந்த பாட்டியல் நூல்களிலிருந்து அறியலாம். பன்னிரு பாட்டியல். குணவீர பண்டிதர் இயற்றிய வெண்பாப் பாட்டியல் (13ம் நூ.), நவநீத நடன் இயற்றிய நவநீதப் பாட்டியல் (14ம் நூ.), பரஞ்சோதியார் இயற்றிய சிதம்பரப் பாட்டியல் (16ம் நூ.), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் (17ம் நூ.) பிரபந்த மரபியல், இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற பாட்டியல் நூற்கள் வலியுறுத்தும் சில பொதுமையான கருத்துக்கள் மிகுந்த ஆராய்ச்சிக்குரியன. இவற்றுள் ஒன்று கவிஞர்களைப் போல, கவிகளையும் நான்காக வகைப்படுத்தும் தன்மையாகும்.
கவி கமகன் வாதியே வாக்கியெனக் காசில்
புவியின்மேல் நால்வர் புலவர் – கவி கடாம்
ஆக மதுரமே சித்திரம் வித்தாரமெனப்
பேசுவோர் நால்வர்க்கும் பேர்.
என்பது வெண்பாப் பாட்டியலில் செய்யுளியல் முதற் சூத்திரம். கவி, கமகன், வாதி, வாக்கி எனப் புலவர் நால்வர்; அவருள் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி எனக் கவிகள் நால்வர் என்பது இச்சூத்திரத்தின் பொருள்.
இக்கவி வகைகள் எத்தன்மையவை என்று வெண்பாப் பாட்டியல் வரையறுப்பதை இங்கு குறிப்பிடுவது முக்கியம். சூத்திரங்களின் பொருள்கள் மட்டும் ஈண்டு குறிப்பிடப்படுகிறது.
ஆசு கவி: ஒரு புலவன் மற்றொரு புலவனை நோக்கி, எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு ஆகிய இவை இன்ன இன்ன விதமாக இருக்கும்படி பாட வேண்டும் என்று கேட்கும்போது உடனே அவை யாவும் அமைய முட்டின்றிப் பாடுவது.
மதுர கவி: ஓசையும், பொருளுமினிதாய், முழுதுஞ் செஞ்சொல்லாய், அலங்காரமுந் தொடையுந் தெற்றென்று கேட்டார் துதிக்கும்படி பாடுவது மதுர கவியாம்.
சித்திர கவி: மாலை மாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம் எழுகூற்றிருக்கை, காதை கரப்பு, கரந்துறைப்பாட்டு, தூசாய்கொளல், வாவனாற்றி, கூடசதுக்கம், சோமுத்திரி, ஓரெழுத்துப்பா வல்லினப்பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப்பாட்டு,
சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்ப நடை வினாவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தனை, நாகபந்தம், முரச பந்தம், நிரோட்டகம், சித்து, ஒருபொருட்பாட்டு, பல பொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச் சுருக்கம் இன்னவை பிறவுமாகிய பல விசுற்பத்தாற் செய்யப்பட்டு ஓசை கெடாமல் குற்றமில்லாமலும் தொன்னூல் மரபு வழுவாமலும் பாடப்படும் கவி சித்திரகவியாம்.
வித்தார கவி: பல செய்யுட்கள் கூடி வந்த தொடர்நிலைச் செய்யுளும், அடிபலவாய் நடக்கும் தனிப்பாச் செய்யுளும் என்னும் இரு திறமும் அகலக் கவியாம்.
இவ்வாறு காவிய நயமும் கற்பனை வளமும், கருத்துலகை நிகழ்ச்சிக் களமாகக் கொள்ளுகிற தன்மையும் புறக்கணிக்கப்பட்டுக் கவிதையில் சிந்து விளையாட்டுக்கள் செய்வதும், அணி அலங்காரங்கள் செய்து வேடிக்கை காட்டுவதும் வாடிக்கையாயிற்று. அன்றைய சமூக பொருளாதாரச் சூழுலில் அதுவே சாத்தியம் என்பதும் தெளிவு. தற்புகழ்ச்சி மிக்க அன்றைய குறுநில மன்னர்கள் அவையில் இந்தக் கழைக்கூத்துக் கவிஞர்கள் செய்யும் வேடிக்கைகளை மகாகவி பாரதியும் தனது சின்ன சங்கரன் கதையில் நகையுணர்வு ததும்பச் சுட்டிக்காட்டுவார். 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய மாறனலங்காரத்தின் பதிப்பாசிரியர் திருநாராயணையங்கார் பதிப்புரையில் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது:
இதனால், கோயிலுள் நூன்முறையான் அமைக்கும் குணாலங்காரம் (வடிவழகு) போலச் செய்யுளுள்ளும் நூன்முறையான் அமைக்கும் குணாலங்காரங்கள் உண்டென்றும் கோயிலுள் தெய்வ பிம்பம், தீப ஜாலம், உற்சவ பரிகாரம் முதலியவற்றான் அமைக்கும் பொருளழகு போலச் செய்யுளுள்ளும் உவமை, உருவகம் முதலிய பொருள் வகையான் அமையும் அர்த்தாலங்காரங்கள் உண்டென்றும், கோயிலுள் வர்ண (அஷர) விசேஷங்களால் அமைக்கும் சப்தாலங்காரங்கள் உண்டென்றும், கோவிலுள் ஓரோ வழி நிகழ்ந்தபடி வரையும் வகிருத ரூபங்கள் போலச் செய்யுளுள்ளும் ஒரோவழி நிகழ்ந்தபடி வரையும் தோஷாலங்காரங்கள் உண்டென்றும் குறிக்கப்படுகின்றன.(49)
இக்கூற்றிலிருந்தும், 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவெங்கை உலாவில்,மல்லுறச்
சந்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடாதடுக்கிப்
புந்தி மகிழ் அற்புத அணித்தா – முந்தையோர்
செய்யுள் போற் செய்த திருக்கோயில்.
எனச் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியிருப்பதிலிருந்தும் அன்று கோவில் அலங்காரங்களுக்கும் செய்யுள் அலங்காரங்களுக்குமிடையே இருந்த ஒப்புமை பற்றிய பிரக்ஞை இங்கு மனங்கொள்ளத்தக்கது. எனவே, இத்தகைய பொருளாதாரத் தேக்கத்தோடும் சிற்றரசுகளின் பெருக்கத்தோடும் சிற்றிலக்கியங்கள் முக்கிய இலக்கிய வடிவங்களாகக் கருதப்பட்டு, பெருங் காவிய வடிவங்கள் வித்தார கவிகளாகப் புறக்கணிக்கப்பட்டு, அணி அலங்காரங்கள் மிக்க பிரபந்தங்கள் பெருகி வளர்ந்ததை நாம் ஓப்பிட்டுப் பார்க்க வேண்டும். வெற்றி வேற்கை, நைடதம் போன்ற இலக்கியங்களைப் படைத்த அதிவீரராம பாண்டியன் போன்றோரும்கூடக் கூர்ம புராணம், காசி காண்டம் போன்ற சைவப் புராணங்களைப் பாடத்தொடங்கியதும் மதம், மடம் ஆகியவற்றின் ஆதிக்கம் பெருகிய அன்றைய காலச்சூழலின் விளைவேயாம். இந்தச் சூழல் தமிழிலக்கிய வரலாற்றில் புதுயுகம் படைத்த மகாகவி பாரதியின் காலம்வரை நீடித்தது.
- குறிப்புகள்
48. சிவத்தம்பி, கா. ‘ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம்’ (கட்டுரை – அச்சில்)
49. அருணாசலம் மு. ‘தமிழ் இலக்கிய வரலாறு – 16ம் நூற்றாண்டு’, காந்தி வித்தியாலயம், மயிலாடுதுறை.