வாழும் இந்திய வரலாற்றறிஞர்களில் மிக முக்கியமானவர் சஞ்சை சுப்பிரமணியம். டி.டி.கொசாம்பி, ரொமிலா தபார் ஆகியோரளவு சாதாரண மக்கள் மத்தியில் இவர் அறிமுகமாகவில்லை. ஆயினும் அவர்களளவிற்கு மிக முக்கியமானவர் சஞ்சய். சமகால அரசியலில் வரலாறு மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்றைய சூழலில், வரலாற்றின் பெயரிலான குருட்டுத்தனத்தை (obscurantism) எதிர்கொள்ள கொசாம்பி, ரொமிலா முதலானோர் நமக்குப் பெரிதும் உதவினர். 15 முதல்18ம் நூற்றாண்டு வரையிலான காலத்திய “நவீனத்துவ” வரலாற்றாசிரியரான சஞ்சையின் “இணைப்புண்ட வரலாறு” (connected history) எனும் கருத்தாக்கத்தையும் வாசித்துச் செரித்திருந்தோமானால் இந்தியச் சூழலில் ‘மதச்சார்பின்மையின்’ பொருளை நாம் இன்னும் சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கவும், வரலாற்றின் பெயரிலான குருட்டுத்தனங்களை இன்னும் கூர்மையாக எதிர் கொண்டிருக்கவும் இயலும் எனத் தோன்றுகிறது.
இந்த நோக்கில்தான் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் ‘தீராநதி’ இதழில் இரு மாதங்கள் சஞ்சை சுபிரமணியம் குறித்தும், அவரது வரலாற்றுக் கோட்பாடு குறித்தும் எளிய முறையில் கவனம் ஈர்த்திருந்தேன், எனினும் தொடர்ந்து அதனை அடுத்த கட்டத்திற்கு என்னாலும் கொண்டு செல்ல இயலவில்லை.
வரலாற்றைத் தேசிய எல்லைக்குள்ளோ, இல்லை ஒரு பண்பாட்டு எல்லைக்குள்ளோ மட்டும் சுருக்கி விடாமல் உலகளாவிய தொடர்புகளுடன் இணைத்துப் புரிந்து கொள்வதன் மீது சஞ்சை கவனத்தை ஈர்க்கிறார். வரலாறு என்பது நமக்கு வேத, சங்க காலங்களுடனோ, இராமயண, மகாபாரதங்களுடனோ, இல்லை பவுத்த, சமண, சோழ காலங்களுடனோ முடிந்துவிடவில்லை. இன்றைய இந்திய உருவாக்கத்தில் இந்தக் காலங்களைப் போலவே பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலங்களும் மிக மிக முக்கியமானவை. எனினும் நாம் அதற்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. ஏராளமான இலக்கியங்கள், வரலாறு எழுது முயற்சிகள், மத, தத்துவச் சொல்லாடல்கள், சகல துறைகளிலும் வெளிநாட்டாரின் தொடர்புகள் நிகழ்ந்த இக்காலகட்டம் மிகமிக முக்கியமான ஒன்று. இந்தக் காலகட்டத்தையும், இன்றைய வரலாற்றுருவாக்கத்தில் அதன் பங்களிப்பையும் விளங்கிக் கொள்ள சஞ்சையின் அணுகல் முறைகளும் அவர் இது தொடர்பாக எழுதியுள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட நூற்களும் பெரிதும் உதவும்.
சஞ்சையின் மிகச் சில கட்டுரைகள், விவாதங்கள், நேர்காணல்கள், அவரது நூற்கள் குறித்த விமர்சனங்கள் ஆங்கில இதழ்களில் வெளிவந்துள்ளன. ‘அவுட்லுக்’ இதழில் அஷிஷ் நந்தியின் கருத்துக்களை மிகக் கடுமையாக அவர் விமர்சித்து எழுதிய குறுங்கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று, “மதச்சார்பின்மை” எனும் கருத்தாக்கம் மேலைச் சூழலிலும் இங்கும் எப்படி வேறுபட்டு உள்ளது என்பது குறித்த அவரது கவன ஈர்ப்பும், இவற்றை ஒன்றே போலக் கருதி ஒன்றை மற்றவற்றால் அளக்க முயல்வதின் பிழைகளையும் சஞ்சை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது மிக முக்கியமான ஒன்று, மேலைச் சூழலில் உள்ளது போன்ற இறுக்கமாக வரையறுக்கப்பட்ட மதக் கட்டமைப்பு இங்கிருந்ததில்லை. மேலைச் சூழலில் secularism என்பது இந்த மத இறுக்கத்திலிருந்து நிறுவனங்களைப் பிரித்து நிறுத்துவதாக இருந்தது. அந்தத் தேவையை மக்கள் எளிதில் உணரக் கூடிய நிலை அங்கிருந்தது. இங்கு அப்படி இறுக்கமாக வரையறுக்கப்பட்ட ஒற்றை மதம் இல்லாதது ஒரு பக்கம், பல்வேறு வலிமையான மக்கட் தொகுதிகளுக்கிடையிலான (communities) அதிகார ஊடாட்டம் முதலியன அந்தத் தேவையை இங்கு உருவாக்கவில்லை. இத்தகைய மக்கட் தொகுதிகள், நாடு, பெரிய நாடு, வலங்கை, இடங்கை முதலான அமைப்புகள் ஆகியன ஒருவகையான ‘போட்டி இறையாண்மைகளாக’ (contested sovereignty) அமைந்திருந்தன. இது இங்கு ஒருவகையான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி இருந்ததும் மேலைச் சூழலில் நடந்தது போன்ற ஒரு secularisation இங்கு உருவாகாமற் போனதற்கான காரணங்கள் எனலாம். இது குறித்தெல்லாம் நாம் மேலும் விளங்கிக் கொள்ள சஞ்சை நமக்குப் பெரிதும் பயன்பட வாய்ப்புள்ளது.
இங்கு secularisation என்பது வெறுமனே மதத்திலிருந்து நிறுவனங்களைப் பிரிப்பது என்கிற அளவில் நிற்காமல், மேலும் அதிகமான ஆழமும், முக்கியத்துவமும் மிக்க கருத்தாக்கமாக உள்ளது; அது முற்றிலும் ஒரு இந்திய வகைப்பட்ட கருத்தாக்கம் என்னும் சஞ்சையின் கருத்து, அசிஷ் நந்தி போன்றோரின் இந்துப் பாரம்பரியமே secular ஆனது என்னும் கருத்திலிருந்து மிக நுண்மையாகவும், வன்மையாகவும் வேறுபடுவது குறிப்பிடத் தக்கது. அதாவது நந்தி போன்றோர் secularism குறித்த மேலைக் கருத்தாக்கத்தை அப்படியே ஏற்று அது இந்தியாவில் பாரம்பரியமாக இருந்து வந்தது எனச் சொல்ல, சஞ்சையோ இங்கு secularism என்பதன் பொருளே வேறு எனச் சொல்வதிலுள்ள நுணுக்கமான வேறுபாடு முக்கியமானது.
(நவம்பர் 30, 2013 ஆங்கில இந்து நாளிதழில் வெளி வந்துள்ள சஞ்சை சுப்பிரமணியத்தின் நேர்காணலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்).
நேர்கண்டது : வைஜு நரவேன்.
குறிப்பும் மொழியாக்கமும் – அ.மார்க்ஸ்
“இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே சமரசம் செய்வது” – சஞ்சை சுப்ரமண்யம்
நீங்கள் நவீனத்துவம் குறித்த வரலாற்றாசிரியர். நாம் தற்போது என்ன வகையான விலகல்கள் மற்றும் எழுச்சிகளைச் (shifts and upheavals) சந்தித்துக் கொண்டுள்ளோம்?
அரசியல் அமைப்புகள் என்கிற வகையில் பல விலகல்கள், எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன. எனது ஆய்வுக்குட்பட்ட 17ம் நூற்றாண்டு உண்மையில் முடியாட்சிகளால் நிரம்பியது. இடப் பெயர்வுகளுக்கான தொழில் நுட்பங்கள், பயண வசதிகள் ஆகியவற்றில் இன்றைய மாற்றங்கள் வெளிப்படுகின்றன, தொலைவு மற்றும் சமூக உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள். குடும்பம் வரையிலான சமூகக் குழுக்கள் பற்றிய கருத்தாக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புலப் பெயர்வு வடிவங்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? நீண்ட காலப் போக்கில் இவை எவ்வாறு மாறியுள்ளன? புலப் பெயர்வு குறித்த விவாதம் எப்படி மாறியுள்ளது?
முன்னர் புலப்பெயர்வு அலைகள் என்பன பேரரசு உருவாக்கம் மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கம் ஆகிய பின்னணியில் நிகழ்ந்தன. எடுத்துக்காட்டாக காலனிய அமெரிக்காவில் ஏற்பட்ட புலப் பெயர்வு. ஏன் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்றவையும் கூட ஏகாதிபத்தியப் பரம்பல் என்கிற பின்னணியில்தான் நடை பெற்றன. அப்போது முன்வைக்கப்பட்ட வாதங்களை நாம் இப்போது ஏற்க மாட்டோம். “ஆளில்லாத நிலங்களில்” குடியேற்றங்கள் நிகழ்வதாக அப்போது சொல்லப்பட்டது. 1940, 50 களில் ஆஸ்திரேலியாவிலும் கூட இப்படிப் பேசப்பட்டது. முதல் உலகப் போர் மற்றும் மாபெரும் பொருளாதாரச் சரிவு ஆகியவற்றிற்குப் பின் வெள்ளையர் புலம் பெயர்வு என்பது சிறுபான்மை ஆகிவிட்டது.
நாம் இப்போது காண்பது ஐரோப்பா அல்லாத பகுதிகளிலிருந்து ஏற்படும் புலப் பெயர்வு. இவை (பேரரசு உருவாக்கம் என்பதுபோல) அரசியல் மறு சீரமைப்பு என்கிற பின்னணியில் நடைபெறுவதல்ல இது. இன்றைய கட்டமைக்கப்பட்ட அரசுகள் (Constituted States) இதை எதிர்க்கின்றன. மாற்றங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முனைகின்றன. இன அடிப்படையில் அல்லது தொழில் அடிப்படையில் ஒரு வகையான புலப்பெயர்வுகளைக் காட்டிலும் இன்னொரு வகையான புலப் பெயர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. எப்படியாயினும் உலக மக்கள் தொகைச் செறிவு இப்படி சமச்சீரற்றதாக உள்ள வரையில் இத்தகைய ‘அட்ஜஸ்மென்ட்’கள் இருக்கத்தான் வேண்டும்.ஆனால் விரிவான விசாலமான விவாதங்களைச் செய்வது ஒன்று; எவ்வாறு மக்கள் இடம் பெயர்கின்றனர், எவ்வாறு அவர்கள் இதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்கிற உண்மையை எதிர்கொள்வது இன்னொன்று,
வரும் ஆண்டுகளில் பன்னாட்டளவிலான இழுபறிகள் (tensions) அதிகம் உருவாகும் என எதிர்பார்க்கிறீர்களா? இஸ்லாம் மற்றும் புலப்பெயர்வு குறித்த அச்சத்தோடு அது பிணையுமா? ஒன்றோடொன்று பிணைந்த இரட்டை இழுபறிகளாக அவை அமையுமா?
ஆம், நிச்சயமாக. தற்போது, அமெரிக்காவைப் பொருத்த மட்டில் அவர்களின் அச்சம் லத்தீன் அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் புலப் பெயர்வு. ஆனால் ஐரோப்பாவில் இப் பிரச்சினை வேறு வகையாக முன்வைக்கப்படுகிறது. சில நேரங்களில் இஸ்லாம் பற்றிய பிரச்சினை ஒரு சாக்காக முன்வைக்கப்படுகிறது. ரோமா மற்றும் ஜிப்சிகள் குறித்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்களேன். இஸ்லாமுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் அபத்தமான கருத்துக்கள், குழந்தைகளைத் திருடிச் செல்பவர்கள் என்பது போன்ற மத்திய கால மூட நம்பிக்கைகள் மீண்டும் மேலுக்கு வருகின்றன. இன்னும் ஆழமான பெரிய ஒரு மனநோயின் இருப்பை இது சுட்டிக்காட்டுகிறது. ஃப்ரான்சிலும் இத்தாலியிலும் ஏராளமாக வங்கத் தேசவர்கள் உள்ளனர். ஆனால் யாரும் அவர்களை முஸ்லிம்களாகப் பார்ப்பதில்லை. இன்னொரு பக்கம் இந்தத் துருக்கியர்கள்.மேற்குலகு நீண்ட நாட்களாக அவர்களுடன் தொடர்பில் உள்ளது. அவர்களும் சென்ற நூற்றாண்டில் “மேற்கத்தியர்களாக’ ஆகும் விருப்பத்தில் தம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியையே உதறிவிடவும் முயற்சித்தனர். ஆனால் ஐரோப்பிய யூனியனில் சேர முயற்சித்தபோது அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். துருக்கியைக் காட்டிலும் கிரேக்கம்தான் ஐரோப்பாவுடன் அதிகமான பொதுமை அம்சங்களைக் கொண்டுள்ளது !
புல நுழைவு குறித்த பிரசினை என்னை மதச்சார்பின்மை குறித்த கேள்விக்கு இட்டுச் செல்கிறது. மதசார்பின்மையைக் கடைபிடிப்பதில் இந்தியாவுக்கும் ஃப்ரான்சுக்கும் இடையே என்ன முக்கிய வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?
இந்த அம்சத்தில், இந்தியாவுக்கும் ஃப்ரான்சிற்கும் இடையிலானவேறுபாடு இரண்டுஅம்சங்களில் வெளிப்படுகிறது. முதலில் மதச் சார்பின்மை என்பதற்கும் “laicite” என்கிற ஃப்ரெஞ்ச் கருத்தாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு. (laicite: மத நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட மக்கட் தொகுதி; laymen, laity என்பது போல. இதன் பொருள் அவர்கள் மதநம்பிக்கை அற்றவர்கள் என்பதல்ல; மத ஊழியத்திற்கு அப்பாற்பட்ட சாதாரண மக்கள்). அடுத்ததாக, தற்போது பயிலப்படுகிற நிறுவன நடைமுறைகள் சார்ந்த வேறுபாடு.
இந்த மத. நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட மக்கட் தொகுதியின் உருவாக்கத்தை மதப் போர்களின் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும். ஃப்ரெஞ்சுப் புரட்சி மற்றும் அதற்குப் பின் உள்ள வரலாற்றின் பின்னணியில் பார்க்க வேண்டும். கத்தோலிக்க நிறுவனத்திற்கு அதிகாரத்தில் ஒரு பங்கிருக்கிறது, அது பல்வேறு மட்டங்களில் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என அப்போது கருதப்பட்டதே அந்தப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும். எனவே கத்தோலிக்க நிறுவனத்தின், அதாவது மதத்தின் பிடியிலிருந்து அரசை விடுவிக்க வேண்டும் என்கிற நிலைபாட்டை இங்கு நாம் சந்திக்கிறோம். இன்றும் கூட இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பிரச்சினை முன்வைக்கப்படும்போது, அது அடி மன ஆழத்தில் கத்தோலிக்க நிறுவனப் பிடி குறித்த அச்சமாகவே உள்ளது. முகத்திரை (ஹிஜாப் / veil, ஃப்ரெஞ்சில் voil) பற்றிப் பேசும்போது அவர்களுக்குக் கத்தோலிக்கக் கன்னிமார்களே நினைவில் நிற்கின்றனர். ஃப்ரெஞ்சுக்காரர்களில் பலர் இன்று இஸ்லாத்தைப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை நிறுவனமாகக் காண்பதன் பின்னணியாக ஒரு காலத்தில் கிறிஸ்தவத்தை அவர்கள் அப்படிப் பார்த்த பார்வை அமைகிறது.
இந்தியாவில் நாம் வேறொரு சூழலை எதிர்கொள்கிறோம். மிக நீண்ட காலமாக, முஸ்லிம் அரசமைவுகள் இங்கு உருவான காலந் தொடங்கி, பல்வேறுபட்ட சமூகப் பிரிவுகளுக்கிடையேயான சமநிலையில் மாற்றங்கள் நடந்து கொண்டே இருந்துள்ளது. வரையறுக்கும் நிறுவனங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்து மதம் என ஒன்று இல்லாமையினால், அரசிலிருந்து மதத்தைப் பிரித்து விடுவதுதான் ஒரே வழி என யாரும் இங்கே எக்காலத்திலும் நினைத்ததில்லை. பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கிடையே mediate பண்ணி balance.பண்ணுவதே இங்கு பிரச்சினையாக இருந்தது. அரசன் மருத்துவனாகவும், அவனது ஆளுகைக்குட்பட்ட நாடு, சிகிச்சை வேண்டி அவன் முன் கிடத்தப்பட்ட உடலாகவும் உருவகிக்கப்பட்டது. (வாதம், பித்தம், சிலேட்டுமம் முதலான – humours) கூறுகளுக்கிடையே balance பண்ணி சமூக ஆரோக்கியத்தைக் காப்பது அரசனின் பணியாகக் கருதப்பட்டது.
ஃப்ரான்ஸ், பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்த் முதலான நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இயற்றப்படும் ஏராளமான சட்டங்களின் ஊடாக சமூகங்களுக்கிடையே காக்கப்பட வேண்டிய சமநிலை தவறுகிற அத்துமீறல் நிகழ்வதாகக் கருதலாமா?
ஆம், அவர்கள் தம் சிந்தனை முறையை அவர்களாகவே மறு வரையறை செய்து கொள்ளக்கூடிய திறன் உடையவர்களாக உள்ளார்களா என்பதுதான் இப்போது பிரச்சினை. குறிப்பாக ஃப்ரான்ஸ், மதத்தை அரசிலிருந்து பிரிப்பதே பிரச்சினைகளுக்கான சர்வ விடிவு என்கிற தனது மனச்சிக்கலை விட்டொழிக்குமா? ஏனெனில் சமூகங்களுக்கிடையேயான உறவுகளைப் பேசுவதற்கான சரியான மொழி அதுவல்ல. ஃப்ரெஞ்ச் குடியரசியம் (French Republicanism) உற்பவித்திருப்பது ஒரு உச்சபட்சமான நெகிழ்வற்ற தன்மை. குறிப்பிடத் தக்க அளவில் உள்ள கிறிஸ்தவரல்லாத சிறுபான்மைச் சமூகத்தவரைக் கையாள்வதற்கான கோட்பாட்டுக் கருவிகள் அவர்களிடம் கைவசம் இல்லை. நான் ஒரு முறை, “இது தொடர்பான நிறுவன ரீதியான தீர்வுகளுக்கு ஃப்ரெஞ்சியர்கள் இந்தியாவை அணுகலாம்” எனச் சொல்லி Le Monde இதழ் வாசகர்களின் ஆத்திரத்திற்கு ஆளானேன்.
ஃப்ரெஞ்சுக்காரர்கள் ஒரு பக்கம் தாங்கள் வீழ்ந்து கொண்டிருப்பதாக (idea of decline) மறுகுகின்றனர். இன்னொரு பக்கம் பிற நாடுகளில் தம் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பரப்பித் தம் பெருமையை மறு கட்டமைப்புச் செய்து கொண்டுள்ளனர். அவர்களின் இந்தப் பிளவுண்ட மனநிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது ஃப்ரான்சுக்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல. ஜெர்மனியை இரு கூராகப் பிரித்ததென்பது போருக்குப் பிந்திய நாற்பது ஆண்டுகளில் ஃப்ரான்ஸ் தனது கலாச்சார நிழலை வளர்த்துக் கொள்வதற்குக் காரணமாகியது. ஜெர்மானியர்கள் மொழி விஷயத்தில் பெரிய அளவில் விட்டுக் கொடுத்து ஆங்கிலத்தை இப்போது ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டனர். அமெரிக்கர்கள் தங்களின் வாரிசுகளாக உள்ளார்கள் என பிரிட்டிஷ்காரர்கள் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் அளித்துக் கொள்கின்றனர். ஃப்ரான்சின் பிரச்சினை என்னவெனில அதற்கு இப்படி ஒரு “கடல் கடந்த ஃப்ரான்ஸ்” இல்லை என்பதுதான். தவிரவும் ஃப்ரெஞ்ச் அமைப்பில் கலாச்சார உற்பத்தி உட்பட அனைத்து அம்சங்களும் பெரிய அளவில் அரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவைதான். எனவே அம் மக்கள் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுவதென்பது உண்மையில் ஃப்ரெஞ்ச் அரசின் ஒப்பீட்டு ரீதியான வீழ்ச்சியைத்தான். ஃப்ரான்ஸ் எதிர்கொள்ளும் உலகமோ அரசுத் தலையீடுகளை எதிராகப் பார்க்கும் ஒரு உலகம். ஐரோப்பா அதன் அரசுகளின் அதிகாரங்களை நீர்க்கச் செய்து கொண்டுள்ளது. கேள்வி இதுதான். அரசு இன்னும் குறைவான பங்கை ஆற்றக் கூடிய ஒரு ஃப்ரான்சை நாம் கற்பனை செய்ய முடியுமா? பியரி பூர்தோ போன்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுங்கூட இறுதியில் அரசுத் தலையீட்டின் சமூக விளைபொருட்களாகத்தான் உள்ளனர். அரசை அவர்கள் விமர்சித்தாலும் இல்லாவிட்டாலும் அதன் வெற்றியையே எடுத்துக்காட்டுகிறார்கள். அவர்கள் வலிமையான சிவில் சமூக நிறுவனங்களின் விளைபொருட்கள் அல்ல.
காலேஜ் டி ஃப்ரான்சின் Early Modern World History அமர்வுக்கு நீங்கள் தேந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். எத்தகைய குறிப்பான பிரச்சினைகளில் நீங்கள் கவனம் குவிக்கப்போகிறீர்கள்?
இந்த அமர்வுக்கு மிக விரிவான வரையறை அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் ஒவ்வொரு theme ஐ தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான theme 17ம் நூற்றாண்டின் உலகளாவிய வரலாறு. காலெஜ் டி ஃப்ரான்சில் வரலாறு என்பது ஒன்று ‘தேசிய வரலாறுகள்’ அல்லது ‘நாகரீக வரலாறுகள்’ என்பவையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு வகையான சோதனை முயற்சி. .கடந்த 15, 20 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வரும் ‘இணைப்புண்ட வரலாறு” (Connected History) எனப்படும் நெகிழ்ச்சியான எனது அணுகல்முறைகளில் ஆர்வமுள்ளவர்களாக அவர்கள் உணர்ந்தனர்.. நெகிழ்ச்சியான என்றால், புவி இயல் கண்ணோட்டத்தில் நெகிழ்ச்சியான வரலாறு.
சில தலைப்புகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள இயலுமா?
இந்த ஆண்டுக்கான தலைப்புகள் ’17ம் நூற்றாண்டின் உலகளாவிய நெருக்கடி’ எனச் சொல்லப்படுவதை உள்ளடக்குகின்றன. இதைச் சிலர், எடுத்துக்காட்டாக, பருவநிலை மாற்றத்துடன் (climate change) தொடர்பு படுத்திப் பார்க்கின்றனர். அதே நேரத்தில் நான் வேறு சில குறிப்பான கேள்விகளையும் எடுத்துக் கொள்கிறேன். எடுத்துக் காட்டாக 17ம் நூற்றாண்டு என்பது கடற் கொள்ளை வரலாற்றிலும் ஒரு முக்கியமான தருணம்.
அல்க்சான்ட்ரே எக்ஸ்கியூமெலின் என்கிற ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் இந்தத் தலைப்பில் ஒரு பகழ் பெர்ற நூலை எழுதியுள்ளார். ஐரோப்பாவின், குறிப்பாக சிவில் யுத்தப் பின்னணியில் இருந்த இங்கிலாந்தின் அன்றைய அரசியல் சூழல், அதன் கேள்விக்குள்ளாக்கப்பட்ட இறையாண்மை (contested sovereignty) ஆகியவற்றோடு தொடர்புடைய நிகழ்வு அது. கடற்கொள்ளை என்பது பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட இறையாண்மை, அரசு நிலைகுலைதல் ஆகியவற்றோடு தொடர்புடையது.