இந்தியாவில் எங்கு சென்றாலும் அங்குள்ள சிறைகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் வீதத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காணலாம். ஏன்? வெறொன்றுமில்லை. முஸ்லிம்களைக் கைது செய்வதும், சிறையில் அடைப்பதும், விசாரணைக் கைதிகளாகவே பிணையில்லாமல் ஆண்டுக் கணக்கில் வைப்பதும் எளிது. ஊடகங்கள் அதைக் கண்டு கொள்ளாது. பொதுப் புத்தி (common sense) அதை ஏற்கும். அரசியல் கட்சிகளும், அவை எதிர்க் கட்சிகளாக இருந்தாலும் கூட அதைப் பெரிதுபடுத்தாது.
“முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்தான்” என்பது இங்குள்ள சங்கப் பரிவாரங்கள் கண்டுபிடித்த ஒரு முழக்கந்தான். ஆனால் அது இன்று எல்லோராலும் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு கருத்தாக மாறியுள்ளது வேதனை. எனவே முஸ்லிம்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் மீது வைக்கப்படக் கூடிய குற்றச்சாட்டுகளை அப்படியே நம்புவதும், காவல்துறை விரிக்கும் கதையை முழுமையாக ஏற்றுக் கொள்வதும் வழக்கமாகிவிடுகிறது. கொஞ்ச நாள் அது பேசப்படும். பின் அப்படி ஒருவர் அல்லது சிலர் கைதாகிச் சிறையில் வாடுவது எல்லோர் கவனத்திலிருந்தும் மறைந்து விடும். பின் அது முழுக்க முழுக்க சிறைப்பட்டவர்களின் குடும்பத்தார்களின் கவலையாக மட்டும் தேங்கிவிடும்.
இப்படி அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்ய்ப்படுவது மட்டுமல்ல, மத வன்முறைகளில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், உள்நாட்டிலேயே இடம் பெயர்க்கப்படுவதும் கூடச் சில நாட்கள் பத்திரிகைச் செய்திகளாகிப் பின் பொது மனத்தின் நினைவுகளிலிருந்து மெல்லக் கரைந்து போகும். முஸ்லிம்களைக் கது செய்வதென்றால் அப்பாவிகளையும் கூடக் கைது செய்பவர்கள் முஸ்லிம்களைத் தாக்கியவர்கள் என்றால் குற்றவாளைகள் எல்லோரையும் கைது செய்வதில்லை, பேருக்குச் சிலர் மட்டும் கைது செய்யப்படுவர். ஒரு சில கவனம் பெற்றுவிட்ட சம்பவங்கள் தவிர, பிற வழக்குகளில். கைது செய்யப்பட்ட பிறரும் கூட விரைவில் பிணையில் வெளியே வருவர். வழக்குகள் விரைவில் முடிக்கப்பட்டு விடுதலை ஆவர்.
இங்கே நான் சொல்லியுள்ளவை எதுவும் எள்ளளவும் மிகைப் படுத்தப்பட்டவை அல்ல. எல்லாம் நம் கண்முன் நிகழ்ந்து கொண்டிருப்பவைதான். ஆமிர் என்கிற 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை செய்யப்படவில்லையா? ‘டெஹெல்கா’ இதழ் இப்படிப் பல ஆண்டுச் சிறைவாசத்தில் தம் இளமையையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு, இறுதியில் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட வரலாறுகளைச் சொல்லவில்லையா? இரண்டாண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரட் தலைமையில் ஒரு குழு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து இப்படி நீண்ட காலச் சிறைவாழ்வுக்குப் பின் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட 22 முஸ்லிம் இளைஞர்களின் பட்டியலைத் தந்து இந்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கோரவில்லையா? வேக விசாரணை நீதிமன்றங்களை (Fast Track Courts) அமைத்து முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகள் விசாரிக்கப்படும் என அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே வாக்குறுதி அளித்தாரே நடந்ததா?
இதன் இன்னொரு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் கைது செய்யப்படும்போது அப்படிக் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களும் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரை வேலைகளிலிருந்து நீக்குவது, அவர்களின் கடைகளைப் புறக்கணிப்பது, அடகுக் கடைகளில் கூட கடன் கொடுக்க மறுப்பது, பிள்ளைகளைக் கல்விக் கூடங்களிலிருந்து வெளியேற்றுவது, மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பது… இப்படி.
இது குறித்து எழுதுவதும், சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் தேசத் துரோகமாகப் பார்க்கப்படுவது என்பது இந்தப் பிரச்சினைகளில் கவனம் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய அம்சம். வன்முறைகளுக்கு ஆதரவானவர்கள், , பயங்கரவாதத்தைத் தூண்டுகிறவர்கள் என்கிற குற்றச்சாட்டுகளை மனித உரிமைகள் மற்றும் குடி உரிமைகள் பற்றிப் பேசுவோர்கள் எதிர்கொண்டாக வேண்டும்.
ஆனால் இப்படி அடிப்படை உரிமைகளுக்காக நிற்கிறவர்கள் யாரும் தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களோ இல்லை, வன்முறை என்பதை ஒரு வழிமுறையாக ஏற்பவர்களோ அல்ல. குண்டு வைத்து அப்பாவிகளைக் கொல்பவர்களை விட்டுவிட வேண்டும் என யார் சொல்லுவார்கள். அப்பாவிகளைக் கொல்லும் குற்றவாளிகளுக்கு நமது சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிக பட்சத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உரிமைகளைப் பற்றிப் பேசுவோருக்கு மாற்றுக் கருத்துகள் கிடையாது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகளுக்குச் சுருக்கு வழிகள் கிடையாது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படட்டும். நமக்குத் தெளிவான அரசியல் சட்டம் உண்டு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கடுமையான குற்ற விசாரணை மற்றும் தண்டனைச் சட்டங்களும் உண்டு. சட்ட ரீதியாக விசாரணைகளை நடத்தட்டும்; சட்டப்படியான தண்டனைகளை அளிக்கட்டும்; சட்டத்திலுள்ள உரிமைகள் காக்கப்படட்டும்.
இவை மீறப்படும்போது ஏற்படும் மனிதத் துயர்கள் பாரதூரமானவை. நாம் கற்பனை பண்ணிப் பார்க்க இயலாதவை. இந்தத் துயரங்களின் விளைவு சாதாரணமானவை அல்ல. தேசப் பாதுகாப்பு என்றோ, பயங்கராவத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இதெல்லாம் பொருட்டல்ல என்றோ எண்ணி இந்தத் துயரங்களைக் கண்டுகொள்ளாத நிலை இன்னும் பெரிய தீங்குகளுக்குத்தான் இட்டுச் செல்லும், ஏமாற்றமும் நம்பிக்கை இழப்பும் இன்னும் அதிகமான வன்முறைகளிலேயே கொண்டு நிறுத்தும். நமக்கு இந்த அமைப்பில் நீதி கிடைக்காது. நமக்காகப் பேச யாரும் கிடையாது. நாமும் நம் குடும்பமும் இந்த வேதனைத் தீயில் அழிந்து சாக வேண்டியதுதான் என ஒரு தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, ஒரு சமூகமோ நம்பிக்கை இழப்பதென்பது அரசு எந்த நோக்கத்திற்காக இந்தக் கடும் நடவடிக்கைகளையும் சட்ட மீறல்களையும் மேற்கொள்கிறதாகச் சொல்கிறதோ அதற்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். இப்படித் துன்புறுத்தப்படுபவன் துன்புறுத்துவோனாக மாறுவான்; சட்ட மீறல்களுக்கு ஆட்படுபவன் சட்டமீறல்களை மேற்கொள்பவனாக ஆகிறான். எந்தத் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டுமென அரசு இந்தக் கொடுமைகளை மேற்கொள்கிறதோ அந்தத் தீவிரவாதம் கிளைப்பதற்கே இது இட்டுச் செல்லும். அதனால்தான் அமைதியையும், நியாயத்தையும் வேண்டுவோர்கள், இந்த ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு அது தழைக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் அரசின் இந்த அத்துமீறல்களிலும், அற விலகல்களிலும் இடையீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இந்த இடையீடு மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கும். அவை:
1. அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது, 2. குடும்பத்தார் பாதிக்கப்படக் கூடாது, 3. குற்றவாளிகள் என்பதற்காகவே அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. தமிழகத்தில் நம் கண்முன் நடந்த மத அடிப்படியிலான மிகப் பெரிய வன்முறை 1996, 97 ஆண்டுகளில் கோவையில் நடைபெற்றதுதான். இந்தக் கலவரங்களின்போது அரசும் காவல்துறையும் மேற்கொண்ட அநீதிகளுக்கு எதிராக ஒரு இளம் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் இடையீடு செய்தது குறித்த அனுபவத் தொகுப்புத்தான் இந்தச் சிறு நூல்.
2. மறைந்த அப்துல் லதீஃப் அவர்களின் ‘இந்திய தேசிய லீக்’ சார்பாகத் தி.மு.க கூட்டணியில் நின்று புவனகிரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் (1996 -2001) தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏ.வி. அப்துல் நாசர் அவர்கள். இந்தக் காலகட்டத்தில்தான் காவல்துறையினரும் இந்துத்துவ சக்திகளும் சேர்ந்து 19 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற கொடு நிகழ்வும் (1997 நவம்பர்), தொடர்ந்து முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஒன்று மேற்கொண்ட தொடர் வெடிகுண்டு வெடிப்பில் 58 அப்பாவிகள் கொல்லப்பட்ட கொடுமையும், அதை ஒட்டிய போலீஸ் தாக்குதலில் சுமார் 8 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதும் நடந்தது. சமீப காலத் தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய வன்முறைச் சம்பவம் இது. இதை ஒட்டி மிகப்பெரிய அளவில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.1997 நவம்பர் தாக்குதலில் 500 கோடி ரூ மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்களும், 1998 பிப்ரவரி தாக்குதலின்போது அதில் சுமார் பாதியளவு மதிப்புள்ள சொத்துக்களும் அழிக்கப்பட்டன என்கிறார் நாசர். இந்த வன்முறைகளை ஒட்டி நூறு கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டதைச் சம்பவங்களை ஒட்டி உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்த உண்மை அறியும் குழுக்களும் உறுதி செய்துள்ளன.
முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டது தவிர உண்மைக் குர்றவாளிகளோடு ஏராளமான அப்பாவிகளும் கூடவே கைது செய்யப்பட்டனர். தேடுதல் வேட்டை என்கிற பெயரில் மீண்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சிறைவாசிகளின் குடும்பத்தார் பட்ட துயரங்களோ சொல்லிமாளாது. தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் நான்கு முஸ்லிம் சிறார்கள் உட்பட 58 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஒட்டி ஒரு மிகப் பெரிய முஸ்லிம் வெறுப்பு அங்கு கட்டமைக்கப்பட்டது. யாரும் இந்தத் தாக்குதல்களை ஒட்டியும் அதன் பின்னும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வாய் திறந்து கண்டிப்பது என்பதே தேசத் துரோகம் எனச் சொல்லத் தக்க அளவிற்கு அங்கு நிலைமை இருந்தது.
அப்போது ஆட்சியில் இருந்தது கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு. அது அப்போது பா.ஜ.க கூட்டணியினனோர் அங்கம். தங்களது அரசு மத்தியில் உள்ளது என்கிற துணிச்சலுடன் இயங்கிய இந்து முன்னணி முதலான பிளவு சக்திகள் கூட்டணிக் கட்சியே ஆனாலும் தி.முகவை ஐயத்தோடே நோக்கின. முஸ்லிம்களைக் கொன்று குவித்த கும்பல் (நவம்பர் 97) தி.முக சட்ட மன்ற உறுப்பினர் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.டி. தண்டபாணி ஆகியோரை எதிர்த்து முழக்கமிட்டது தவிர நாடாளுமன்ற உறுப்பினர் தண்டபாணி அவர்களைத் தாக்கவும் செய்தது. அவரது காரும் உடைத்து நொறுக்கப்பட்டது. 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அந்த மூன்று நாள் கலவரத்தின்போது இங்கு அரசு எந்திரம் இருந்ததற்கான அடையாளமே இல்லை என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரே அன்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் மிகவும் அடக்கியே வாசித்தார். 19 அப்பாவி முஸ்லிம்கள் தனது காவல்துறையாலும் இந்து முன்னணி முதலான மத வெறி சக்திகளாலும் கொல்லப்பட்டதை, “உங்க ஆட்கள்தான் எல்லாம் பண்றாங்கையா” என எள்ளளவும் இரக்கமின்றி கருணாநிதி தன்னிடம் கூறியதை நாசர் இந்த நூலில் நெஞ்சு நொந்து பதிவு செய்கிறார். 97 நவம்பர் கலவரத்தை ஒட்டி முதல்வர் அனுமதியுடன் கோவை சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்து மீண்டும் முதலமைச்சரைச் சந்தித்துச் செய்திகளைப் பகிர்ந்த போதிலும் நாசர் அவர்கள் தொடர்ந்து அந்தத் திசையில் பெரிதாய் ஒன்றும் செய்ய இயலவில்லை. சூழல் அப்படி இருந்தது. அதுவும் முஸ்லிமாக உள்ள ஒருவர் அந்தச் சூழலில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசவே இயலாத நிலை. இன்று மாட்டுக்கறி மற்றும் கருத்துரிமைக்கு எதிரான சகிப்பின்மையை எதிர்த்து ஆனந்த் பட்டவர்தன் போன்ற கலைஞர்கள் கண்டித்ததைக்கூடப் பொறுத்துக் கொண்ட மத வெறி சக்திகள் ஷாருக் கான் அதைச் சொன்னபோது பொங்கி எழுந்து அவரைப் பாகிஸ்தான் விசுவாசி என்றெல்லாம் ஏசியது நினைவிற்குரியது.
இந்தச் சூழலில்தான் அது நடந்தது. யாரும் எதிர்பாராத ஒரு சந்திப்பு அது. சென்னைக்கு ஒரு கல்லூரியில் பேச வந்த, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி அவர்கள் எப்படியோ அப்துல் நாசரைப் பற்றி அறிந்து, அவரைத் தான் பார்க்க விரும்புவதாகச் சொல்லியுள்ளார். சென்று சந்தித்தபோது கோவை வன்முறைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சட்ட உதவிகளைச் செய்யுமாறு அவர் வற்புறுத்திய வரலாற்றையும், அதைத் தொடர்ந்து உத்வேகம் பெற்ற நாசர் மிண்டும் கோவை சென்று சிறைக் கைதிகளையும் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்துக் கடும் முயற்சிகளின் ஊடாகத் தன்னால் ஆன உதவிகளைச் செய்த வரலாறுதான் இந்த நூல்.
நாசர் இந்தப் பணிகளை மேற்கொண்ட காலகட்டம் 1999 – 2001. அவரது பதவிக்காலம் 2001ல் முடிகிறது. எனினும் கோவை மதக் கலவரங்கள் தொடர்பான கோகுலகிருஷ்ணன் ஆணைய அறிக்கையை வாசித்தும், நேரடியாகத் தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையிலும் கோவையில் மத வெறுப்பு விஷ வித்து விதைக்கப்பட்ட காலந் தொட்டு, 97 நவம்பர் கலவரத்திற்கு முனளிரு தரப்பினர் மத்தியிலும் நடந்த தொடர் கொலைகள், அதன் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட 97 நவம்பர் படுகொலைகள் மற்றும் சொத்தழிப்புகள், அதன் தொடர்ச்சியாக நடந்த 98 பிப்ரவரி தொடர் குண்டு வெடிப்புகள், சிறைக் கொடுமைகள், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் வந்த வழக்கு முடிவுகள் வரை கோவைக் கலவரங்கள் குறித்த ஒரு முழுமையான கையேடாக இதை நாசர் தயாரித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு உதவும் பொருட்டுத் தான் Panel for Legal and Educational Aid (PLEA) எனும் அமைப்பை உருவாக்கியது, ஒரு அரசியல் கட்சியையும் உருவாக்க முனைந்தது முதலான முயற்சிகளையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.
இந்தக் கையேட்டின் ஊடாக நாசர் அவர்கள் முன்வைக்கும் சில முக்கியமான முடிவுகளையும் தகவல்களையும் தொகுத்துக் கொள்வோம்:
1. 1982 ல் கோவையில் நடைபெற்ற ‘இந்து எழுச்சி மாநாடு’ தொடங்கி இங்கே முஸ்லிம் வெறுப்பு கட்டமைக்கப்பட்டது. இந்து முன்னணி முதலான மதவெறி அமைப்புகள் இதில் முன்னணியில் இருந்தன. முஸ்லிம்கள் சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இதை ஒட்டி முன்னதாக இரண்டு முஸ்லிம்களைக் கொலை செய்த ‘வீர’ கனேஷ் என்பவரை முஸ்லிம்கள் கொலை செய்தனர் (1989). கனேஷின் இறுதிச் சடங்கின்போது இனி கனேஷின் ஒவ்வொரு நினைவு தினத்தின் போதும் ஒரு முஸ்லிமைக் கொல்வதாக காவல்துறையினர் முன்னிலையில் சபதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. எடுத்துக் கொண்ட சபதத்திற்கு இணங்க முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இந்தக் கொலை வரலாற்றின் தொடர்ச்சியாகவே 1997 நவம்பர் படுகொலைகளைக் காண வேண்டும்.
2.காவலர் செல்வராஜ் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதை ஒட்டி முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 97 தாக்குதல் காவல்துறையும் இந்து முன்னணி முதலான மதவெறி அமைப்புகளும் சேர்ந்து நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது. கொல்லப்பட்ட செல்வராஜ் உண்மையில் ஒரு கிறிஸ்தவர். பெயர் அந்தோணி செல்வராஜ். இந்த உண்மை மறைக்கப்பட்டு முஸ்லிம்கள் ஒரு இந்துவைக் கொன்றதாகவே பிரச்சினையை முன்வைத்துக் கலவரத்தைத் தூண்டியதில் காவல்துறையின் பங்கு முக்கியமானது.
3. நவம்பர் 97 கலவரத்தில் படு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 என அரசு சொல்வது பொய். உண்மையில் 24 பேர்கள் அன்று கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்கள் 10 பேர் என அரசு சொல்லியது கவனத்திற்குரியது.
4. பி.யூ.சி.எல் இயக்கத்தால் அமைக்கப்பட்ட அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழு, நவம்பர் 97 படுகொலைகளில் முக்கிய பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகள் என மாசானமுத்து (DC), நடராஜன் (AC), முரளி (Inspector), சந்திரசேகர் (SI) ஆகியோரைச் சுட்டிக் காட்டியது. இதை வழி மொழியும் நாசர், கலவரத்திற்கு முதல் நாள் இந்த அதிகாரி மாசானமுத்து, ஆயுதப் படையினர் காவல் முகாமில் அங்கிருந்த முஸ்லிம் காவலர்களை மட்டும் வெளியேற்றிவிட்டு ஒரு கூட்டம் நடத்தியதாகவும் அதில் இந்து முன்னணித் தலைவர் இராம கோபாலன் கலந்து கொண்டார் எனவும் நாசர் குறிப்பிடுகிறார்.
5. படுகொலை நாளில் மாசானமுத்து தலைமையில் நடைபெற்ற காவலர் ஊர்வலத்தில் அர்ஜுன் சம்பத், அதிரடி ஆனந்தன் உள்ளிட்ட இந்து முன்னணியினருடன் மதவெறி சக்திகளும் இருந்தனர். காவல்துறை அதிகாரி ஒருவர் அருந்ததிய மக்களிடம் முஸ்லிம் கடைகளிலும் வீடுகளிலும் புகுந்து வேண்டிய பொருட்களை அள்ளிச் செல்லுமாறு கூறினார். B1 காவல்நிலைய உதவி ஆய்வாளர் உக்கடம் நடைபாதையைத் தீ வைத்துக் கொளுத்தினார். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஷோபா சில்க் கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து கலலவரக்காரர்களை உள்ளே விட்டது காவல்துறையினர்தான். கலவரம் முடிந்த அடுத்த நாள் (டிசம்பர்1) அன்று ஒரு காவல்துறை அதிகாரி சாலையில் வந்து கொண்டிருந்த உபைதூர் ரஹ்மான் என்பவரை தலையில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார். நேரடி சாட்சியான முஸ்தபா தப்பி ஓடும்போது காலில் சுடப்பட்டார்.
6. ஆனால் காவல்துறையினர் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்து முன்னணித் தலைவர்களும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட சிலர் மீது போடப்பட்ட வழக்குகளும் முறையாக நடத்தப்படவில்லை. நான்கு முதல் தகவல் அறிக்கைகளாக வழக்கைப் பிரித்து, நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்கிற வகையில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையே (interested parties) முதல் நான்கு சாட்சிகளாகப் போட்டு கைது செய்யப்பட்ட சிலரும் விரைவில் விடுதலை ஆக வழி வகுக்கப்பட்டது. இதை அரசின் ‘கயமைத்தனம், என்னும் நாசர், கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்களைச் சந்தித்து முதலமைச்சர் கருணாநிதி ஆறுதல் கூறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
7. இந்தப் படுகொலைகளுக்குச் சரியாக இரண்டரை மாதத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள் 58 பேர்கள் கொல்லப்பட்டதும் கூடக் காவல்துறையின் ஒப்புதலுடன்தான் நடந்தது என்பது நாசர் சொல்லும் இன்னொரு முக்கிய செய்தி. ஒரு முஸ்லிம் அமைப்பு இப்படியான பயங்கரவாதச் செயலில் ஈடுபட இருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. வன்முறையாளர்கள் வெடிகுண்டுத் தயாரிப்பில் ஈடுப்பட்டிருந்தது உளவுத் துறைக்குத் தெரிந்துரவர்கள் கைது செய்யப்படவில்லை.. இதற்கு நாசர் சொல்லும் காரணங்கள் இரண்டு. அவை: i) நவம்பர் 97 படுகொலைகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன் ஆணையத்தின் கவனம் அந்தக் கலவரத்தில் காவல்துறையினர் முக்கிய பங்கு வகித்ததை நோக்கிச் செல்லாமல் தடுக்க வேண்டும் என்பது. ii) நவம்பர் 97 படுகொலைகளுக்குப் பின் பொது மக்கள் மத்தியில் பரவலாக முஸ்லிம்கள் மீது அனுதாபமும் காவல்துறை மீது வெறுப்பும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையை மாற்றி அமைப்பதும் காவல்துறையின் நோக்கமாக இருந்தது.
8. பிப்ரவரி 98 குண்டு வெடிப்புப் பயங்கரவாதத்திற்குப் பின் காவல்துறை எதிர்பார்த்தது போல ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீதும் ஒரு மிகப் பெரிய வெறுப்பு கட்டமைக்கப்பட்டது. இது மீண்டும் காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளுவதையும், விசாரணை என்கிற பெயரில் முஸ்லிம்களின் வீடுகளில் புகுவதையும், பெண்களின் பார்தாவை நீக்கிப் பார்ப்பதையும், பள்ளி வாசல்களை இழிவு படுத்துவதையும் எளிதாக்கியது.
9. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க தங்களின் கூட்டணிக் கட்சி என்கிற உரிமையில் இராமகோபாலன் போன்றோர் சிறை அதிகாரத்திலும் தலையிட்டு முஸ்லிம் சிறைக் கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தனர் என்கிற குற்றச்சாட்டையும் நாசர் வைக்கிறார்.
10. காவல்துறை எதிர்பார்த்தது போலவே நவம்பர் 97 படுகொலைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன் ஆணையத்திடமே பிப்ரவரி 98 தொடர் குண்டு வெடிப்பு குறித்த விசாரணையும் கையளிக்கப்பட்டது. இது முன்னதாக நடைபெற்ற முஸ்லிம்களின் படுகொலைகளைக் குறைத்து மதிப்பிடக் காரணமாகியது, இந்த இரண்டு கொடுஞ் சம்பவங்களையும் ஆராய இரண்டு தனித்தனி விசாரணை ஆணையங்களை அமைத்திருக்க வேண்டும் எனச் சரியாகவே குற்றம் சாட்டுகிறார் நாசர்.
3. இந்த இரண்டு கொடும் வன்முறைகள் தவிர 1993 ல் சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது குண்டொன்று வீசப்பட்டதை ஒட்டி கோவையில் கோட்டைமேடு முதலான முஸ்லிம் பகுதிகளில் கடும் அடக்குமுறைகளைக் காவல்துறை மேற்கொண்டது. முஸ்லிம் பகுதிகளின் நுழை வாயில்களாக இருந்த மூன்று இடங்களில் ‘செக் போஸ்ட்’ கள் அமைத்து முஸ்லிம் பகுதிகள் நகரத்திலிருந்து பிரிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் குற்றவாளிகளைப் போலவும் பயங்கரவாதிகளைப் போலவும் நடத்தப்பட்டனர். பல இளைஞர்கள் கைது செய்யவும் பட்டனர். முன்னதாக பாபர் மசூதி இடிப்பை ஒட்டி (1992) தேவையே இல்லாமல் கோவை பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
முஸ்லிம்கள் இவ்வாறு குர்றவாளிகளைப் போல நடத்தப்படுவதை பா.ம.க நிறுவனர் இராமதாஸ் போண்ரோரும் கூடக் கண்டித்தனர். இந்த அடக்குமுறைகள் தொடர்பான ஒரு உண்மை அறியும் குழுவில் (1994) நானும் பங்குபெற்றிருந்தேன். ஒரு சுருக்கமான அறிக்கை ஒன்றையும் நாங்கள் வெளியிட்டோம். நவம்பர் 97 முஸ்லிம் படுகொலைகள் குறித்து அமைக்கப்பட்ட அனைத்திந்திய உண்மை அறியும் குழு ஒன்று மிக விரிவான அறிக்கை ஒன்றைத் தந்தது. பின் தொடர் பிப்ரவரி 98 தொடர் குண்டு வெடிப்பை ஒட்டி முஸ்லிம்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட காவல்துறை வன்முறை குறித்து ஆய்வு செய்த உண்மை அறியும் குழுவிலும் நான் பங்கு பெற்றிருந்தேன். இந்த மூன்று அறிக்கைக்ளையும் 1998 நவம்பரில் ஒரு குறுநூலாக வெளியிட்டோம். கோவைக் கலவரம் தொடர்பான முக்கிய ஆவணங்களில் அதுவும் ஒன்று.
நாசர் அவர்கள் முன்வைத்துள்ள முக்கியமான தகவல்கள் தவிர இந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டும் சில முக்கியமான செய்திகள் மட்டும் இங்கே:
1. தியாகி குமரன் மார்கெட்டில் சுங்க ஏலம் எடுப்பது நீண்ட காலமாக மதக் கலவரம் உருவாவதில் ஒரு பங்கு வகித்தது. இப்படித் தனியாருக்கு ஏலம் விடாமல் பெங்களூருவில் உள்ளது போல அரசே இதை ஏற்று நடத்த வேண்டும் என்பது எங்களின் பரிந்துரைகளில் ஒன்றாக இருந்தது.
2. உக்கடம் முதலான பகுதிகளில் கோவையில் சுமார் 1000 முதல் 1500 நடைபாதைக் கடைகள் இருந்தன. இவை பெரும்பாலும் ஏழை எளிய முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. இந்தக் கடைகளிலிருந்து ஒரு கடைக்கு 25 ரூ முதல் 50 ரூ வரை தினசரி காவல்துறைக்கு மாமூல் சென்று கொண்டிருந்தது. ‘அல் உம்மா’ உட்பட இரண்டு முஸ்லிம் அமைப்புகள் தலை எடுத்து இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தது அல்லாமல் இந்த அளவு இல்லாவிட்டாலும் சற்றுக் குறைந்த அளவு மாமூலை இவர்களே வசூலிக்க ஆரம்பித்தனர். தவிரவும் நிறைய வழக்குகளில் கட்டைப் பஞ்சாயத்து நடத்துவதிலும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் காவல்துறைக்கும் பகை இருந்தது. முஸ்லிம்கள் மீது காவல்துறை அத்தனை வன்மம் காட்டியதன் பின்னணிகளில் ஒன்று இது.
3. பிப்ரவரி 98 தொடர் குண்டு வெடிப்பிற்குப் பின் முஸ்லிம்கள் மீது மிகக் கடுமையான அடக்குமுறைகளும் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து நாசர் விரிவாகப் பேசியுள்ளார். அவற்றில் ஒன்று இது: பிப்ரவரி 15 அன்று கோவை திருமால் வீதியில் ஒளிந்திருந்த தீவிரவாதிகளைப் பிடிக்கச் சென்ற போது அவர்கள் காவல்துறையினர் மீது குண்டுகளை வீசியதாகவும், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் சமயோசிதமாக அறைக் கதவைச் சாத்தியதால் குண்டு அறைக்குள்ளேயே வெடித்து ஆறு ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறை செய்திகளைப் பரப்பியது. ஊடகங்கள் அதைக் கொட்டி முழக்கின. இது ஒரு பச்சைப் பொய். ஊரெங்கும் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டு அஞ்சி ஒரு வீட்டில் ஒளிந்திருந்தவர்கள்தான் இந்த அப்பாவி இளைஞர்கள். அங்கும் போலீஸ் வந்ததைக் கண்ட அவர்கள் மொட்டை மாடி வழியாகத் தப்பிக்கும் நோக்கில் அடுத்த வீட்டு மொட்டை மாடியில் குதித்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல வழி இல்லாமல் மொட்டை மாடியில் இருந்த மேற் கூறை இல்லாத ஒரு பாத்ரூமிற்குள் ஒளிந்தனர். அப்படி ஒளிந்த அப்பாவி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது நவம்பர் 97 படுகொலைகளில் முக்கிய பங்கு வகித்த நான்கு காவல் அதிகாரிகள் என பி.யூ.சி.எல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உதவி ஆய்வாளர் சந்திரசேகரன்.
4. நவம்பர் 97 படுகொலைகளின் போது பல இந்து மருத்துவர்கள், இந்து மருத்துவமனைப் பணியாளர்கள் முஸ்லிம்களை தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறித்துக் கவலைப்படாமல் காப்பாற்றியுள்ளனர். இந்து காவல்துறை அதிகாரிகள் சிலரும் படு கொலை செய்த சக காவலர்களைக் கண்டித்துள்ளதோடு தடுக்கவும் முயற்சித்துள்ளனர். நாசரும் அப்படி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். அதேபோல இத்தனை வன்முறைகளுக்கும் மத்தியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் வசித்த இந்துக்கள் யாரும் தாக்கப்படவில்லை. அதே போல கோவை முழுவதும் பள்லிவாசல்கள் தாக்கி இழிவு செய்யப்பட்டபோதும் கோட்டை மேடு முதலான பகுதிகளில் இருந்த இந்துக் கோவில்கள் எதுவும் தாக்கப்படவில்லை.
5. முஸ்லிம்கள் பெரிய அளவில் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கூட முஸ்லிம்கள் யாரும் பணியில் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எங்களின் 1994 அறிக்கையிலேயே இதச் சுட்டிக்காட்டி இருந்தோம்.
4. இப்படியான வன்முறைகளில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் குற்றம் சாட்டுவதைக் காட்டிலும் ஒட்டு மொத்த சமூகமும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பார் ஜவஹர்லால் நேரு.
நம் காலத்தில் நம் கண்முன் தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறை இந்தக் கோவைக் கலவரங்கள்தான். இப்படித் தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர்கள் கொல்லப்பட்டது மிகப் பெரிய கொடுமை என்பதை நாசர் பல இடங்களில் வற்புறுத்துகிறார். ஆனால் நவம்பர் 97 படுகொலைகளை உரிய முறையில் இந்தச் சமூகம் கண்டித்திருந்தால் பிப்ரவரி 98 தொடர் குண்டு வெடிப்பு நடந்திருக்காது என நாசர் சொல்வது முக்காலும் உண்மை. நேரு அவர்களின் கூற்றை இது நினைவூட்டுகிறது. 19 அல்லது அதற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையே அதைச் செய்தும் எந்த ஒரு காவலரும் கைது செய்யப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை. அர்ஜுன் சம்பத் போன்றோர் கலவரத்தில் இருந்தும் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். முதலமைச்சர் கருணாநிதி இரக்கமே இல்லாமல் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என ஒரு முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினரிடம் சொல்கிறார். ஒப்புக்குக் கூட பாதிக்கப்பட்ட மக்களை வந்து சந்தித்து ஆறுதல் சொல்ல அவர் மனம் ஒப்பவில்லை. இழப்பீடு அளிக்கும்போது கூட பாரபட்சம் காட்டப்பட்டது. கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வெறும் ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடுதான் அளிக்கப்பட்டது. சுமார் 100 கோடிக்கும் மேல் ஏற்பட்ட பொருள் இழப்பிற்கு எந்த இழப்பீடும் தரப்படவில்லை. (ஆனால் தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு 2 இலட்ச ரூபாய்கள் கொடுக்கப்பட்டது).
அரசை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. எதிர்க் கட்சிகளும் கூட 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது எந்தப் பெரிய எதிர்ப்பையும் காட்டவில்லை. நாங்கள் சென்றிருந்த போது ஒரு முஸ்லிம் கூறினார்: “காவல் நிலையத்தில் ஒருத்தர் செத்துப் போனாக் கூட இந்தக் கட்சிகள் ஆர்பாட்டம் பண்றாங்க. பிரச்சினையை எடுக்கிறாங்க. ஆனா இப்படி அநியாயமா காவல் துறை இத்தனை முஸ்லிம்களைக் கொன்றதைக் கண்டிக்கலியே”.
நவம்பர் 97 ல் இப்படி அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தச் சமூகம் உரிய கண்டனத்தைத் தெர்ரிவித்திருந்தால் பிப்ரவரி 98 கொடுமையைத் தமிழகம் சந்தித்திருக்காது. அதே போல மனித உரிமை அமைப்புகளைப் பகையாக நினைக்காமல் நீதியரசர் இராமசுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது போல இத்தகைய அமைப்புகளை நீதி கிடைக்க வழி செய்யும் ஒரு “மூன்றாவது புலனாய்வு முகமை” என்கிற அடிப்படையில் அணுகி, அவர்களது பரிந்துரைகளை விசாரித்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பிப்ரவரி 98 தொடர்குண்டு வெடிப்புகள் நடந்திருக்காது. நவம்பர் 97 கலவரத்தில் மிகத் தீவிரமாக முஸ்லிம்களைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் எம பி.யூ.சி.எல் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட சந்திரசேகர்தான் பிப்ரவரி 98ல் திருமால் வீதியில் உள்ள மோட்டை மாடி ஒன்றில் பயந்து ஒளிந்திருந்த ஆறு முஸ்லிம் இளைஞர்களைச் சுட்டுக் கொன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசர் அவர்கள் தான் கண்டதை மனச்சாட்சிப்படி நேர்மையாகச் சொல்கிறார். கருணாநிதி இப்படிப் பொறுப்பின்றி நடந்து கொண்ட போதும், தான் கோவைக்குச் சென்று பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களையும் கைதிகளையும் சந்தித்து வந்து சட்ட மன்றத்தில் பேசியபோது “உங்கள் பேச்சு தீவிரவாதத்திற்குத்தான் துணை செய்யும்” என மிரட்டி வாயை அடக்கியபோதும் இரண்டாம் கட்டத்தில் தன் முயற்சிகளுக்கு அவர் ஒத்துழைத்தார் என்பதையும் பதிவு செய்கிறார். தி.மு.க முஸ்லிம்களுக்கு ஆத்ரவான கட்சி என்பதாக இந்துத்துவ சக்திகள் பிரச்சாரம் செய்து வந்ததைக் கண்டு கருணாநிதி சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கினார் என்றே நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. உண்மையைப் பேசினால் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமானவர்களாக நாம் சித்திரிக்கப்படுவோம் என ஆளும் கட்சிகள் மட்டுமின்றி எதிர்க் கட்சிகளும் அச்சப்படுவது பெரும் கேடு.
பிரிவினைக் கலவரங்கள் வந்தபோது கூட அமைதி காத்த பூமி நம் தமிழகம். அந்தப் பெருமைக்கு நிகழ்ந்த மிகப் பெரிய களங்கம் 1997- 98 கோவை வன்முறைகள். இது குறித்த ஒரு நேரடி சாட்சியாய் இருந்து துணிச்சலுடனும் நேர்மையுடனும் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள். அந்த வகையில் இது ஒரு மிக முக்கியமான பதிவு. ஒரு வேளை இதில் சொல்லப்பட்ட தரவுகளில் சிறு பிழைகள் இருக்கலாம். ஆனால் அடிநாதமாக இதில் இழையோடுவது உண்மை, சத்தியம். அந்த வகையில் நாசர் அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
நாசருக்கு மட்டுமல்ல,. இந்தப் பிரச்சினைகளோடோ, இந்த மண்ணுடனுமோ எந்த நேரடித் தொடர்பும் இல்லாத ஒரு எழுத்தாள மனம், அதுதான் துஷார் காந்தியின் நெஞ்சம் அதற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். எங்கோ வாழும் அந்த மனிதருக்கு இங்குள்ள முஸ்லிம் மக்களின் துயர் குறித்து விளைந்த அந்த அக்கறையை எப்படி விளங்கிக் கொள்வது?
மதச்சார்பின்மை என்பதற்காகவே உயிரைக் கொடுத்த ஒரு மகத்தான மனிதரின் ரத்தம் அவரது உடம்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது தவிர வேறு என்ன சொல்வது!