ஜூன் 27, 2016
(டெல்லியிலிருந்து வெளிவரும் ‘மில்லி கெஸட்’ இதழால் அனுப்பப்பட்ட உண்மை அறியும் குழு ஒன்று சென்ற ஜூன் 16 அன்று வெளியிட்டது அறிக்கையைத் தழுவி எழுதப்பட்டது.
உ.பி மாநிலம் ஷாம்லி மாவட்டத்திலுள்ள கைரானாவிலிருந்து அங்குள்ள பெரும்பான்மையான முஸ்லிம் மக்களால் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் கட்டாயமாக வெளியேற்றப் படுகின்றனர் எனும் செய்தி இன்று ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இதழ்களாலும் அவற்றின் ஆதரவு உள்ளூர் இதழ்களாலும் பரப்பப்பட்டு பெரிய சர்ச்சையை’ ஏற்படுத்தியுள்ளது.
இந்துத்துவவாதிகளின் இந்தப் பிரச்சாரம் முழுப் பொய் என்பதை இந்த உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே நடுநிலையான பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளதை இன்றைய (ஜூன் 27) இந்து நாளிதழில் பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் சுடிக்காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வெளியிடப்பட்ட “வெளியேற்றப்பட்ட இந்துக்கள் பட்டியலில்” பலர் இன்னும் அதே இடங்களில் குடியிருப்பதைப் பத்திரிகைகள் கண்டறிந்து வெளியிட்டன என்கிறார் பன்னீர்செல்வம்.
‘இந்துக்கள் வெளியேற்றம்’ என்கிற இந்தப் பொய்ப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தது உள்ளூர் பா.ஜ.க எம்.பி ஹுகும் சிங் எனும் நபர். இவர் ஏற்கனவே 2013 முசாஃபர் நகர் கலவரத்தில் பங்குபெற்றவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.
இப்பகுதியின் (ஷஹ்ரான்பூர்) காவல்துறை டி.ஐ.ஜி ஏ.கே.ராகவ் சென்ற ஜூன் 11 அன்று அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஹுகும் சிங் பரப்பிவரும் இந்தச் செய்தி பொய் எனவும், நடக்க உள்ள மாநிலத் தேர்தலில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இதை அவர் செய்து வருவதாகவும் சொல்லியுள்ளார். வரும் தேர்தலில் ஹுகும்சிங் தன் மகளை அந்தத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்த உள்ளதையும் டி.ஜி.பி தன் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சிறிய சம்பவத்தையும் மதப் பிரச்சினையாக முன்நிறுத்தி இந்த ஹுகும்சிங் செய்து வரும் பிளவுவாத அரசியலால் மிக விரைவில் அங்கு ஒரு மதக் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் அந்த அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார்.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கைரானாவில் உள்ள முஸ்லிம்களின் வீதம் 80.74%, இந்துக்கள் 18.34% . முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் இன்று இங்கே அடைக்கலமாயுள்ளனர்.
இந்த முஸ்லிம் பெரும்பான்மையினரின் வன்முறையால் இந்தப் பகுதியில் உள்ள 346 இந்துக் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப் பட்டுள்ளனர் என்பதுதான் ஹுகும்சிங் கிளப்பிவிட்ட வதந்தி. உடனடியாக இது பெரிய அளவில் நாடெங்கும் பெரிதுபடுத்தப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசிடம் அறிக்கை கேட்டது. இந்துத்துவ சக்திகள், “முஸ்லிம்களால் இந்துக்களால் கொடுமைப்[ படுத்தப்பட்டு” வெளியேற்றப்பட்டதாக ஊளையிட்டன.விசுவ இந்து பரிஷத்தின் இணைப் பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின், “ஜிகாதிகளால்” இந்துக்கள் வெளியேறுவதாக அறிக்கை விட்ட பின் (ஜுன் 13) மாவட்ட ஆட்சியரும் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார்
இந்த விஷ நோக்கமுள்ள பொய் வதந்தி இந்திய அளவில் செய்தியாக்கப்பட்டது இப்படித்தான்.
ஹுகும்சிங் வெளியிட்ட அந்தப் பட்டியலில் உள்ள நான்கு பேர் ஏற்கனவே இறந்துபோயுள்ளனர். பட்டியலிலுள்ள 20 குடும்பங்கள் இன்றும் கைரானாவில் இதர முஸ்லிம் மக்களோடு சுமுகமாக வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர். சென்ற ஜூன் 14 அன்று மில்லி கெசட் குழு அங்கு சென்ற போது ரமலான் நோன்பு தொடங்கிய எட்டாம் நாள் அது. அங்கே எல்லாக் கடைகளிலும் உணவுப் பொருட்கள் விற்பனையாகிக் கொண்டுதான் இருந்தன. இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தப் பகையும் இல்லாமல் ஒன்றாகத்தான் இருந்தனர்.
இந்த உண்மைகளையெல்லாம் இந்தக் குழு மட்டுமல்ல இதர பத்திரிகைகள் எல்லாம் அம்பலப்படுத்தியும் கூட கலக நோக்கத்துடன் செயல்படும் பாசிசக் கும்பல் தன் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அருகிலுள்ள கந்த்லா நகரத்திலிருந்து 163 இந்துக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அடுத்த ‘டுபாகூரை’ இன்று அரங்கேற்றியுள்ளன. ஒரு பெரும் மதக் கலவரத்தை உருவாக்கி இரத்தம் குடிக்காமல் அவர்கள் ஓயப்போவதில்லை எனத் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ் இதழ்களான ‘பாஞ்சஜன்யா’, ‘ஆர்கனைசர்’ எல்லாம் இந்த டுபாகூர்களை அட்டைபடக் கட்டுரைகளாக வெளியிட்டுக் கொண்டுள்ளன. ‘டைனிக் ஜாக்ரான்’, ‘ஸீ டிவி’ முதலியன ஒத்தூதுகின்றன.
.
எனினும் இன்று இந்தக் கும்பல்களின் அவதூறுகளும் பொய்களும் அம்பலப்பட்டுப்போன பின்னணியில் ஹுகும் சிங் சென்ற 14ந் தேதி அன்று ஒரு ‘பல்டி’ அடித்தார். “முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பதன் பின்னணியில் மதக் காரணங்கள் இல்லை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதன் விளைவுதான் இது” என வழிந்தார். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டதுதான் “இந்துக்களின் வெளியேற்றத்துக்கு” காரணம் என்றால் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏன் அப்படி நிகழவில்லை எனும் கேள்விக்கு ஹுகும் சிங்கிடமோ மதக்கலவரத்தைத் தூண்டி இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வினரிடமோ, எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் வகையறாக்களிடமோ எந்தப் பதிலும் இல்லை.
இன்றைய சூழலில் மக்கள் ஊர்களை விட்டு இடம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் இப்படி இடம் பெயர்ந்து வந்து மிக மோசமான சூழலில் வேலை செய்து கொண்டுள்ள வடமாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கை மட்டும் 40 லட்சத்திற்கு மேல் இருக்கலாம். இதில் மதச்சாயம் பூசுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
மில்லி கெசட் குழு கைரானா காவல் நிலைய அதிகாரி எம்.எஸ்.கில்லிடம் (SHO) பேசும்போது, “(இப்படிச் சிலர் வெளியேறுவதை) ‘இந்துக்களின் வெளியேற்றம்’ எனச் சொல்வது அபத்தம். இப்படி நல்ல வாய்ப்புகளுக்காக மக்கள் இடம்பெயர்வது என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. 2017 தேர்தலை நோக்கமாகக் கொண்டு சிலர் செய்யும் வேலை இது” என்றார். உதவி ஆய்வாளர் தன்வார் பேசும்போது. “தேவை இல்லாமல் (சில) மீடியாக்கள் இதைப் பிரச்சினையாக்கியுள்ளன. இரண்டு சமூகத் தலைவர்களும் கூடிச் சமூக ஒற்றுமை வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.
இனிப்புத் தின்பண்டங்கள் விற்கும்கடை ஒன்றை வைத்துள்ள ஒரு இந்து நண்பர் கூறியுள்ளது இன்னும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. “என்னுடைய அண்ணன் இப்போது இடம்பெயர்ந்துள்ளார். முகிம் காலா கும்பல் அவரிடம் மிரட்டிப் பணம் கேட்டுக் கொண்டிருந்தது. கிரிமினல் கும்பல்கள் மத வேறுபாடுகள் இல்லாமல் எல்லாரையும் மிரட்டி வருகின்றன..”
வாசிம் (42) எனும் உள்ளூர்க்காரர் பேசும்போது, “2013 லிருந்து ஹூகும் சிங் இப்படி ஒரு மதக் கலவரத்தி உருவாக்க முயற்சித்துக் கொண்டுள்ளார். ஆனால் என்ன செய்தபோதும் இந்த இரண்டு சமுதாயத்திற்கும் இடையில் உள்ள பிணைப்பை யாரும் அழித்துவிட இயலாது” என்றார்.
இப்படி ஒரு மதக் கலவரத்தை உருவாக்குவதில் தங்களுக்குள் ஒற்றுமை இருந்தபோதிலும் இப்பகுதியில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அமைப்புகளில் உள்ள உள்ளூர்த் தலைவர்களுக்கு இடையே உள்ள அரசியல் போட்டியும் இந்தப் பிரச்சினையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் மத்தியில் யார் அதிகப் பிரபலமாக இருப்பது என்பதில் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்குகின்றனர். மே26 அன்று சஹரன்பூரில் மோடி கலந்து கொண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பல்வானும் மீருட் ச.ம.உ சாங்கீத் சோமும் மோடி அமர்ந்திருந்த மேடை பக்கம் ஹுகும்சிங்கை அனுமதிக்கவில்லை. கடுப்பாகிய ஹூகும்சிங் எப்படியாவது தினம் மீடியாக்களில் இடம் பிடிப்பது எனும் வெறியோடு இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதன் விளைவாக இப்படி நாளொரு மேனி வதந்திகளைப் பரப்புவதாகவும் சொல்கின்றனர்.
என்ன கொடுமை பாருங்கள். இவர்கள் தங்களுக்குள் ஒன்றாக இருந்தாலும், பிளவுண்டு நின்றாலும் இரண்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளாகத்தான் வெளிப்படுகின்றன.
இப்படிப் பரப்பப்படும் பொய்களால் தற்போது நடக்க இருந்த 21 இந்துத் திருமணங்கள் ரத்தாகியுள்ளன என்கிறார் காவல் நிலைய அதிகாரி எம்.எஸ்.கில். “இப்படி வதந்திகளைப் பரப்பினால் யாருக்குத்தான் தம் பெண்களை இந்த ஊரில் கட்டிக் கொடுக்க மனம் வரும்” என்கிறார் அவர். தான் இப்பகுதில் நான்கு மாதங்களாகப் பணியில் இருப்பதாகவும், இதற்கு முன் ஒரு சின்ன மதப் பிரச்சினை கூட இங்கு எழுந்ததில்லை எனவும் அவர் மில்லி கெஸட் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார். “இது முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள ஊர்தான். ஆனால் 2013ல் முசாபர்நகர் வன்முறை நிகழ்ந்தபோது இங்கிருந்து ஒரு இந்து குடும்பம் கூட வெளியேறவில்லை” என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். வணிகர்கள் பணம் கேட்டுக் கொல்லப்பட்டபோது கூட அப்படி ஏதும் நடக்கவில்லை என்றுள்ளார். மக்கள் அஞ்சி வெளியேறுவதற்கான இந்திச் சொல்லாகிய ‘பலவான்’ எனும் சொல்லைத் தன் வாழ்நாளில் தற்போதுதான் முதன் முதலாகக் கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த நகரத்தில் நடைபெறும் ராமநவமி மற்றும் பாலாஜி ஷோபா யாத்திராக்களில் இந்துக்களைக் காட்டிலும் அதிக அளவில் முஸ்லிகள் கலந்துகொள்வதை நான் பார்த்துள்ளேன். ஆனால் இதையெல்லாம் யாரும் மீடியாக்களில் பேசுவதில்லை” எனவும் அவர் வருத்தப்பட்டார் எனவும் “வணிகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் இங்கே செயல்படுவது உண்மைதான். குறிப்பாக முகீம் காலா கும்பல் இதைச் செய்து வருகிறது. ஆனால் அவர்களின் முக்கிய இலக்கு முஸ்லிம்கள்தானே ஒழிய இந்துக்கள் இல்லை” எனவும் அவர் உண்மை அறியும் குழுவிடம் கூறியுள்ளார். வணிகர்களைப் ‘பாதுகாப்பதாக’ச் சொல்லி அந்தக் கும்பல் இப்படிப் பணம் பறிக்கிறது.அக்டோபர் 2015ல் முகிமும் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்த அவனது கையாள் சபீரும் சிறையில் அடைக்கப்பனர். இருந்தும் சிறைக்குள் இருந்தே அவன் இந்த வேலையைச் தொடர்ந்து வருகிறான் என்கிறார் கில்.
எனினும் இன்றைய பிரச்சினைக்கு முழுவதும் இந்தக் குற்றச் செயல்கள்தான் காரணமல்ல என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். முகீம் காலா கும்பல் போன்ற பணப் பறிப்புக் கும்பல்கள் மத வேறுபாடு இல்லாமல் இரு சமூகங்களிலும் உள்ள பெரும் பணக்காரர்களைத்தான் குறி வைக்கின்றன. ஒரு பணப் பறிப்பு ‘ரவுண்டில்’ ஒரு 40 -50 ஆயிரம் ரூபாய்கள் சேர்ந்தால் கொள்ளை அடித்தவர்களிடம் முகீம் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதும் உண்டு என மக்கள் கூறுகின்றனர்.
இங்கே வருமான வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் இரு சமுதாயத்திலும் உள்ள குடும்பங்கள் பிற நகரங்களை நோக்கி வெளியேறுகின்றனர் என்கின்றனர் உள்ளூர் வணிகர்கள். “வெளியேறிய பட்டியலில்” உள்ள பலரும் இப்படிப் போனவர்கள்தான். இங்கிருந்து டெல்லியின் தொலைவு வெறும் 98 கிமீ தான். நிறையப் பேர் வேலைவாய்ப்புகளை நாடி அங்கு இடம்பெயர்கின்றனர்.
கிரிமினல் நடவடிக்கைகளைப் பொருத்தமட்டில் 2014ல் கைரானாவில் 22 கொலைகள் நடந்துள்ளன. அதில் ஏழு பேர்கள்தான் இந்துக்கள். 14 பேர் முஸ்லிம்கள். ஒருவர் குறித்துத் தெரியவில்லை. 2014ல் மூன்று இந்து வணிகர்கள் கொல்லப்பட்டபோது, அதிக அளவில் முஸ்லிம்கள் நிரம்பிய அந்த ஊர் வணிகர் சங்கம் அந்தக் கொலைகளைக் கண்டித்து ஏழு நாட்கள கடை அடைப்பை நடத்தியது.
இந்தப் பிரச்சினையில் ஒரு கவனத்துக்குரிய அம்சம் என்னவெனில் இப்படித் தங்கள் ஊர் மீடியா கவனம் பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியாவது இந்த மாதிரியான பிரச்சினைகள் கவனப்படுத்தப்பட்டு நிலைமை சீராக வாய்ப்பாகுமா என்று. எந்த அடிப்படை வசதிகளும் இந்த ஊரில் கிடையாது. வைத்தியம் செய்து கொள்ள வேண்டுமானால் இவ்வூர் மக்கள் அருகிலுள்ள பானிபட் அல்லது மீருட்டுக்குத்தான் செல்ல வேண்டும். தினசரி இங்கிருந்து தினக் கூலி சம்பாதிப்பதற்காக சுமார் 5 -7 லட்சம் பேர் பானிபட்டுக்குச் சென்று வருகின்றனர்.
பாரம்பரியமாக இங்கே ஜெயின்களும் இந்துக்களும்தான் வட்டிக்குக் கடன் கொடுத்து வந்தனர். இப்போது இதைவிடக் குறைந்த வட்டியில் எளிதாக வங்கிகளில்கடன் பெற முடிகிறது. எனவே அவர்களும் வெளியேற நேர்கிறது. கும்பட் மொகலாவில் வசிக்கும் ஒரு பாரம்பரியமான இந்து அல்வா வியாபாரியை மில்லி கெசட் குழு சந்தித்தது. அவர் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். இந்த ஊரில் இப்போது வியாபாரம் சரியாக நடப்பதில்லை என வருத்தப்பட்டுள்ளார் அவர். முன்பெல்லாம் அரியானாவிலிருந்து மக்கள் பொருட்களை வாங்க இங்கே வருவர். 2013 முசாபர் நகர் கலவரத்திற்குப் பின் இங்கு யாரும் வருவதில்லை என்கிறார். அவரது மூத்த மகன் இப்போது அகமதாபாத்தில் ஒரு வங்கி அதிகாரியாக உள்ளான். இளையவன் சார்டட் அக்கவுன்டன்டுக்குப் படித்துக் கொண்டுள்ளான். ஒரே மகள் திருமணமாகிப் போய்விட்டாள். இவர்கள் யாரும் தந்தையின் பாரம்பரியத் தொழிலைச் செய்யத் தயாராக இல்லை. நல்ல விலை வந்தால் அவரும் இந்த ஊரிலுள்ள தம் சொத்துக்களை விற்று விட்டு மனைவியுடன் ஊரைவிட்டு வெளியேறி மகன்களுடன் வசிக்கச் செல்லத் தயாராக உள்ளார். இப்படித்தான் இன்று பலரும் அந்த ஊரை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளனர்.
இந்துக்கள் மட்டுமல்ல சுமார் 150 முஸ்லிம் குடும்பங்களும் அப்படி வெளியேறியுள்ளதாகக் காவல்துறைப் பதிவுகள் சொல்லுகின்றன. “வெளியேறிய இந்துக்கள் பட்டியலை” ஹுகும்சிங் வெளியிட்ட பிறகு இப்படி “வெளியேறிய முஸ்லிம்களின் பட்டியல்” ஒன்றை முஸ்லிம்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வெளியேற்றமும் எந்த நிர்ப்பந்தத்தினாலும் நடந்ததல்ல. இதைவிட ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடித்தான் அவர்களும் கைரானாவை விட்டு வெளியேறுகின்றனர்.
டெல்லியிலும் லக்னோவிலும் உள்ள ஆளும் வர்க்கம் இந்தப் பிரச்சினைகளுக்குச் செவிசாய்ப்பதில்லை. இந்த நகர மக்களின் பிரச்சினைகளத் தீர்ப்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. விளைவு, மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் கொழிக்கிறார்கள்.
எந்த அடிப்படையும் இல்லாமல் இப்படி “இந்துக்கள் வெளியேற்றம்’ என்கிற ஒரு பொய் அவதூறைப் பரப்பிய பா.ஜ.க எம்.பி மீது இதுவரை குற்றப்பத்திரிகை எதையும் உ.பி அரசு பதிவு செய்யவில்லை.
மில்லி கெஸட் குழுவின் பரிந்துரைகள்
- சமூக ஒற்றுமையைச் சீரழிக்கும் வகையில் பொய்யைப் பரப்பிய ஹுகும்சிங் மீது உ.பி காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
2. சட்டமன்றத் தேர்தளை ஒட்டி உ.பி மாநிலம் முழுமையும், குறிப்பாக கிழக்கு உ.பியில், பா.ஜ.கவும் அதன் கூட்டாளிகளும், இப்படியான மதக் கலவரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதை அரசு கவனமாகக் கண்காணித்துத் தடுக்க வேண்டும்.
3. ஊடகங்கள், குறிப்பாக இந்து ஊடகங்கள் இப்படியான செய்திகளை வெளியிடுவதில் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அடிப்படையற்ற வதந்திகளை அவை உண்மையா என ஆராயாமல் வெளியிடக் கூடாது.
குழு உறுப்பினர்கள்:
சமூக ஆர்வலர் உவைஸ் சுல்தான் கான்; இதழாளர் புஷ்ப் ஷர்மா; இதழாளர் கவ்சர் உஸ்மான்; சமூக ஆர்வலர் மொஹமட் உஸ்மான்.
நன்றி: The Milli Gazette, New Delhi