(இது ஒரு மூன்று பகுதிக் கட்டுரை. இது முதல் பகுதி)
தன்னை ஒரு “உலகக் குடிமகன்” என அறிவித்துக் கொண்ட (“I am a citizen of the world”- Marx to Paul Lafargue) கார்ல் மார்க்ஸ் (1818 – 2018) பிறந்த இருநூறாம் ஆண்டை இன்று உலகமே கொண்டாடத் தொட்ங்கியிருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்போது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளன் என மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் பேரறிஞர் கார்ல் மார்க்ஸ். அவரைப் பற்றி லஃபார்க் சொல்ல வருகையில், “புத்தகங்கள் அவரைப் பொருத்தமட்டில் சொகுசுப் பொருட்கள் அல்ல. மாறாக அவை அவரது மூளையின் கருவிகள். ‘அவை என் அடிமைகள். என் விருப்பப்படி அவை எனக்குச் சேவை செய்ய வேண்டும்’ என அவர் கூறுவார்” – என்பார். அவர் கற்காத நூல்கள் இல்லை என நான் சொன்னால் அது வெறும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. அவரது கல்வியின் விரிவு அளவிடற்கரியது. அவருடைய எழுத்துக்களில் மேற்கோள்களாகக் காட்டியும் காட்டாமலும் அவர் எடுத்தாண்டுள்ள கருத்துக்களினூடாக உலக இலக்கியங்கள் குறித்த அவரது அறிவின் வீச்சை ஆராய்ந்துள்ள பேராசிரியர் எஸ். எஸ். ப்ராவர் (S.S.Prawer, ‘Karl Marx and World Literature’, OUP,1978) அது குறித்து 446 பக்கங்களில் நூலொன்றை எழுதியுள்ளார்..
“ஹோமர் முதல் தாந்தே வரை, ஷேக்ஸ்பியர், கொதே என எல்லாக் காலங்களிலும், உலகின் எல்லாப் பகுதிகளிலும் உருவாகியிருந்த மாபெரும் எழுத்தாளர்கள் எல்லோரது எழுத்துக்களிலும் பொதிந்து கிடந்த, இன்றும் பயன்படக் கூடிய உண்மைகளை நுனித்தறிய, இலக்கியங்கள் குறித்த வர்க்கப் பார்வை கார்ல் மார்க்சிற்குத் தடையாக இருந்ததில்லை…….. இறுதி ஆய்வில் மகத்தான இலக்கியங்கள் உண்மை மற்றும் அற மதிப்பீடுகள் பற்றிய மானுட நுன்னுணர்வைக் கொண்டிருக்கும் என அவர் நம்பினார்” என்பார் ப்ராவர். அதாவது இலக்கியங்கள் வர்க்க நலன்களைச் சுமந்திருக்கும் என்று அவர் கருத்துக் கொண்டிருந்தாலும் அந்த அடிப்படையில் அவர் உலக இலக்கியங்களைப் புறக்கணித்ததில்லை. உன்னத இலக்கியங்கள், அவற்றின் வர்க்க நலன்களுக்கு அப்பால் எப்போதுமே மானுட கரிசனம் கொண்டிருக்கும். நமக்குத் தேவையான உண்மைகள் அவற்றில் பொதிந்திருக்கும் என அவர் ஏற்றுக் கொண்டார். மார்க்சின் சிந்தனைகளை “மார்க்சீயர்கள்” எனத் தம்மைக் கருதிக் கொண்ட பலர் வரட்டுத்தனமாகப் பயன்படுத்தியதைப் போல மார்க்ஸ் இயல்பில் அப்படி இருக்கவில்லை என்பது இதன் உட்பொருள்.
மார்க்சின் எழுத்துக்கள் வாசிப்பதற்கு அத்தனை எளிதாவை அல்ல என்பது உண்மைதான். காரணம் அவர் எடுத்துக் கொண்ட பிரச்சினைகள் அத்தனை சிக்கலானவை என்பதுதான். எக்காரணம் கொண்டும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களுக்கு அவை இட்டுச் சென்றுவிடக் கூடாது என்று அவர் கொண்ட கரிசனத்தின் விளைவுதான் அவை சிக்கலாக வெளிப்படுவது. அப்படியும் அவர் கருத்துக்கள் பல எளிமைப்படுத்தப்பட்டே புரிந்து கொள்ளப்பட்டன. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு “மதம் மக்களின் அபின்” என்கிற அவரது கூற்று. முன்னும் பின்னும் இது குறித்து அவர் செறிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களிலிருந்து பிரித்து நிறுத்தி மதம் பற்றிய மார்க்சின் கருத்து என எத்தனை மலிவான புரிதல்கள் இதுகாறும் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளன ! ஒரு கொடிய நோயின் தீராத வலியில் துடிப்பவனுக்கு ஆறுதலை அளிக்க போதை மருந்து பயன்படுவதுபோல, சமூக வாழ்வின் துயர்களைத் தாங்க இயலாத மனிதனுக்கு மதம் பயன்படுகிறது என்றுதான் மார்க்ஸ் கூற வருகிறார். அது ஆறுதல் அளிப்பது உண்மை. அதே நேரத்தில் அது அந்தத் துயருக்குத் தீர்வு அளிப்பதில்லை. அது தீர்வு அளிப்பதில்லை என்பதை மட்டும் பார்ப்பது போதாது. அது உண்மையில் ஆறுதல் அளிப்பதையும் நாம் புரிந்துகொண்டால்தான் மதத்தை ஏன் அவ்வளவு எளிதாக மனிதர்களிடமிருந்து பிரிக்க இயலவில்லை என்பதை நாம் உணர முடியும்.
எல்லோருக்கும் தெரிந்த, மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எடுத்துக்காட்டு என்பதற்காக இதை இங்கு கவனப் படுத்தினேன். மார்க்சின் ஒவ்வொரு சொல்லும் இப்படி ஆயிரமாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியவை.
இன்றைப்போல தட்டினால் தகவல்களைக் கொட்டும் இன்டெர்னெட் வசதி மட்டுமல்ல, இன்றளவிற்கு வளர்ச்சி அடைந்த தகவல் தொடர்புகள் ஏதும் அற்ற காலத்திலேயே தனக்குக் கிடைத்த சொற்பத் தகவல்களிலிருந்து 1857 ல் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்பட்ட எழுச்சியை “முதல் சுதந்திரப் போர்” எனச் சொன்ன முதல் மனிதர் கார்ல் மார்க்ஸ் என்பது ஒன்றே அவரது நுனித்தறியும் அறிவுக்குச் சான்று. மற்ற அனைவரும் அதைச் “சிப்பாய்க் கலகம்” என்பதாகச் சிறுமைப் படுத்தி விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது அந்த எழுச்சியின் பின்னணியில் மக்களின் சுதந்திர தாகம் இருந்ததை அடையாளம் கண்டவர் அவர். இல்லையா?
பேராசான் மார்க்ஸின் சிந்தனைகள் தோற்றுத் தகர்ந்து விட்டன என உலக முதலாளித்துவமும் கெட்டிதட்டிப் போன மதவாதிகளும் செருக்கு கொண்டுள்ள தருணத்தில் நாம் அவர் பிறந்த 200 ம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மார்க்சீயத்திற்கு இப்படிக் கல்லறை வாசகம் எழுதிக் கொண்டிருப்போர் அதற்கு ஆதாரமாக எதைச் சொல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்கள் மார்க்சீயம் முன்வைத்த அடிப்படைக் கோட்பாடுகள் எதுவும் பொய்த்துப் போவிட்டன என நிறுவவில்லை. நிறுவவும் முடியாது. அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான். சோஷலிசக் கட்டுமானங்கள் எனச் சொல்லப்பட்ட புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் அனைத்தும் தகர்ந்து விட்டன என்பதுதான். இது மட்டுமே அவர்கள் காட்டும் ஒரே நிரூபணம்.
மார்க்ஸின் பங்களிப்பு என்பதில் புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் பற்றி ஏதும் இல்லை. ‘கோதா வேலைத் திட்டம்’ முதலானவற்றில் மெலிதாகச் சிலவற்றைக் கோடி காட்டியதற்கு அப்பால் அவர் அது குறித்து ஏதும் பேசவில்லை. அப்படியானால் மார்க்சின் பங்களிப்புகள்தான் எவை?
மார்க்ஸ் இறந்தபோது அவரது கல்லறையில் நின்று கொண்டு வாழ்நாள் முழுமையும் அவரோடு சிந்தனைத் தளத்தில் உழைத்தவரும் மார்க்சிலிருந்து பிரித்துப் பார்க்கவே இயலாதவருமான எங்கல்ஸ் அவரது பங்களிப்பை இரத்தினச் சுருக்கமாக இப்படிப் பட்டியலிடுவார். அவை:
1.உயிர் இன வளர்ச்சி விதிகளை டார்வின் கண்டறிந்தது போல மானுட வளர்ச்சி விதிகளைக் கண்டறிந்தவர் கார்ல் மார்க்ஸ்.
2.மானுட இருப்பின் முதல் அடிப்படை உணவு, நீர், ஆடைகள், வீடு முதலான பொருளாதயத் தேவைகள்தான். இதிலிருந்துதான் நாம் பிற அனைத்தையும் பார்க்க வேண்டும். தலைகீழாக அல்ல.
3.இன்றைய உற்பத்தி முறையான ‘முதலாளித்துவ உற்பத்தி முறை’யின் விதிகளைக் கண்டறிந்ததோடு, இதன் விளைவான பூர்ஷ்வா சமூகம் குறித்த ஆய்வையும் செய்தவர் அவர். ‘உபரி உற்பத்தி’ குறித்த அவரது மகத்தான கண்டுபிடிப்பு முந்தைய பூர்ஷ்வா ஆய்வுகள் எந்த இடத்தில் தடுமாறி நின்றனவோ அந்த இடத்தில் ஒளி வீசச் செய்தது.
4.இப்படியான இரண்டு கண்டுபிடிப்புகளே ஒரு மனித வாழ்வில் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால் மார்க்ஸ் அத்தோடு நிற்கவில்லை. அவர் தொட்ட எதையும் மேலோட்டமாகக் கடந்ததில்லை. அவர் தொட்ட அனைத்திலும் அவர் தடம் பதித்தார். கணிதம் உட்பட.
5.எவை எல்லாம் வளர்ச்சியின் கூறுகளாக உள்ளனவோ அவை குறித்தெல்லாம் அவர் ஆழமாகக் கவனம் கொண்டிருந்தார். மின்சாரம் குறித்த ஆய்வுகளில் அவர் காட்டிய ஆர்வம் அப்படியான ஒரு எடுத்துக்காட்டு
6.அவர் இயல்பில் ஒரு புரட்சியாளர். முதலாளியச் சமூகம் மற்றும் அதன் நிறுவனங்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது அவரது இலட்சியம். போராட்டம் அவரது உயிர். அவர் ஒரு பத்திரிகையாளர். களப் போராளி. பன்னாட்டுத் தொழிலாளிகள் கழகங்களை அமைத்தவர்.
7.அவர் கடுமையாக வெறுக்கப்பட்டவர். மோசமான அவதூறுகளுக்கு ஆளானவர். அரசுகள் அவரை நாடுகடத்தின. பூர்ஷுவாக்கள் அவர் குறித்துப் பொய்களைப் பரப்பினார்கள். அவசியம் நேர்ந்தால் ஒழிய அவர் இவற்றிற்கெல்லாம் பதில் அளித்ததில்லை. எனினும் உலகெங்கிலும் உள்ள தோழிலாளர்கள் அவரை நேசித்தனர். அவரது பெயரும் பணிகளும் காலத்தை விஞ்சி ஒளிரும்.
கார்ல் மார்க்சின் பங்களிப்பை அவரது ஆகச் சிறந்த தோழரும், அவர் விட்டுச் சென்ற எழுத்துப் பணிகளை நிறைவு செய்தவருமான எங்கல்ஸ் இப்படி ரத்தினச் சுருக்கமாக முன்வைத்தார்.
ஆக மார்க்சின் பங்களிப்புகளில் சோஷலிசக் கட்டுமானம் குறித்த ஆய்வுக்கு இடமிருக்கவில்லை என்பதுதான் இதன் மூலம் நாம் அறிவது. அவை பின்னாளில் ருஷ்யா, சீனா.. என அந்தந்த அரசுகளால் அவரவர்க்குப் புரிந்தபடி முயற்சிக்கப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட தோல்விகள் ஆய்வுக்குரியவை என்பதில் கருத்து மாறுபாடில்லை. ஆனால் அவற்றை மார்க்சீயத்தின் தோல்வி எனச் சொல்ல இயலாது. சோவியத் ருஷ்யா, சீனா, வியட்நாம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதுவும் சோஷலிசச் சமுதாயங்கள் இல்லை. அவற்றை ஆய்வாளர்கள் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் என்றுதான் குறிப்பிடுகின்றனர். அதற்கு மேலாக எதையும் உரிமை கொண்டாடுவதில்லை.
இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். முதலாளியமும் இங்கு வெற்றி பெறவில்லை என்பதுதான் அது. மார்க்ஸ் சொன்னது போலவே அது தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று பட்டினிச் சாவுகளையும் கடும் ஊழல்களையும், பெரும் சுற்றுச் சூழல் கேடுகளையும், சாதி, மத, இன வெறுப்புகளையும் வெளிப்படுத்தும் நாடுகள், சமூகங்கள் அனைத்தும் பூர்ஷுவாச் சமூகங்கள்தான். முதலாளித்துவ நாடுகள்தான். தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளால் திணறுபவையும் அவைதான். ஆயிரக் கணக்கில் பட்டினிச் சாவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காணா, எதியோப்பியா முதலான அரசுகள் எல்லாம் சோஷலிசக் கட்டுமானங்களா? முழுக்க முழுக்கச் சந்தைப் பொருளாதாரத்தைச் செயல்படுத்தும் முதலாளித்துவ நாடுகள்தானே.
சோஷலிசம் தோற்றுவிட்டது எனச் சொல்பவர்கள் உரிய ஆய்வு நெறிகளுடன் அதை நிறுவியதும் இல்லை. சந்தைப் பொருளாதாரத்தை ஒழித்து மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலை நடைமுறைப்படுத்துவது தோல்வியிலேயே முடியும் என இதுவரை கோட்பாட்டு ரீதியாக யாரேனும் நிறுவியுள்ளனரா?
சோஷலிசமும் ஜனநாயகமும் இணைந்திருப்பது சாத்தியமில்லை என இதுவரை நிறுவப்பட்டுள்ளதா?
தனிச் சொத்தும் சந்தைப் பொருளாதாரமும் மட்டுமே ஜனநாயகம் செழித்திருப்பதற்கான நிபந்தனைகள் என எந்த முதலாளித்துவ நிபுணர்களாவது கோட்பாட்டு ரீதியாக நிறுவியிருக்கிறார்களா?
இல்லை. இல்லை. இல்லை.
மறுபடியும் சொல்கிறேன் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களின் விழ்ழ்ச்சி நிச்சயமாக ஆய்வுக்குரிய ஒன்றுதான். மார்க்சீயர்களின் முக்கிய பணி இது என்பதில் எல்லாம் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை.
ஆனால் மார்க்சின் சிந்தனைகள் பொய்த்துவிட்டன என “நிறுவுவதற்கு” புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களின் வீழ்ச்சி மட்டுமே போதுமானவை அல்ல. கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மகத்தான சிந்தனையாளராக மார்க்ஸ் ஒளி வீசி நிற்பதை யாரும் மறுத்துவிட இயலாது.