இன்று ஒரு தொலைக்காட்சியில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் (Quit India Movement) குறித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றார்கள். என்ன இந்தத் தலைப்பில் இப்போது திடீரென எனக் கேட்டேன். வெள்ளையனே வெளியேறு என்றெல்லாம் இயக்கம் நடத்திவிட்டு இப்போது உணவு, உடை என எல்லாவற்றிலும் மேற்கத்தியக் கலாச்சாரம் புகுந்துள்ளது, அதை எப்படி மீண்டும் Indianise பண்ணுவது என்றெல்லாம் விவாதிக்கலாம் என்றுதான் எனப் பதில் வந்தது.
நல்ல விடயம்தான், எல்லாவற்றையும் Indianise பண்ணுவது என்று கிளம்பியுள்ள ஒரு தருணத்தில் இப்படியாகச் சிரத்தையுடன் ஒரு விவாதம் பண்ணினால் நன்றாகத்தான் இருக்கும் என் நினைத்துக் கொண்டேன்.
Quit India Movement ல் தொடங்குகிறார்களே என நினைத்துக் கொண்டு அது தொடர்பான தீர்மானத்தை முன் மொழிந்து காந்தி பேசிய பேச்சைத் தேடினேன். ரொம்பவும் நெருக்கடியான சூழல் அது. கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் எல்லோரும் கை விட்டிருந்த நேரம், காங்கிரசுக்குள்ளும் கூட ‘பூரண சுயாட்சி’ எனும் முழக்கத்துடன் இந்த நேரத்தில் இப்படி ஒரு இயக்கம் தேவையா என்கிற தயக்கம் இருந்தது. ராஜாஜி கட்சியை விட்டே விலகினார்.
வரலாறு காணாத அடக்குமுறையைக் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில் காந்திக்குத் தனிப்பட்ட முறையில் இரண்டு இழப்புகள். மனைவி கஸ்தூரி பாயும், நம்பிக்கைக்குரிய அவரது தனிச் செயலர் மகாதேவ தேசாயும் மறைந்தது அக் காலகட்டத்தில்தான். காந்தியையும் முக்கிய தலைவர்களையும் நாடு கடத்திச் சென்று தென் ஆப்ரிக்கா அல்லது யேமனில் வைப்பது எனக் கப்பல் ஒன்று கூடத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம்.
கடுமையான அடக்குமுறைகளின் ஊடாக ஒடுக்கப்பட்ட அந்த இயக்கத்தில் தன்னெழுச்சியாகப் பங்குபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் பங்கு குறித்தெல்லாம் சொல்ல நிறைய உண்டு. இன்றளவும் அந்த இயக்கம் வெற்றியா தோல்வியா என்பது குறித்து இரு கருத்துக்கள் உண்டு. கடுமையாக ஒடுக்கப்பட்ட போதிலும் இனி இந்தியாவைத் தம் விருப்பம்போல ஆள இயலாது என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய வகையில் அது ஒரு வெற்றிகரமான இயக்கம்தான்.
அது போகட்டும். காந்தியின் உரைக்கு வருவோம். காந்தி அதில் மூன்று அம்சங்களை முன்வைக்கிறார்.
1. வழக்கம்போல இப்போராட்டம் முழுக்க முழுக்க அஹிம்சை வழியில் இருக்கும் என்கிறார். (ஆனால் வழக்கம்போல இதிலும் ஆங்காங்கு வன்முறைகள் தலைகாட்டத்தான் செய்தன. ஒரு துணைக் கண்ட அளவில் நடைபெறும் போராட்டத்தில் அப்படியெல்லாம் ஆவது தவிர்க்க இயலாதுதானே. ஆனாலும் காந்தி இம்முறை முன் ஒரு முறை சவ்ரி சவ்ரா வை ஒட்டிச் செய்ததுபோல இம்முறை போராட்டத்தை நிறுத்தவில்லை.)
2. இது அதிகாரத்தைச் சுவைப்பதற்கான போராட்டமல்ல. ஆட்சி அதிகாரம் கையில் வரும்போது அது யாரிடம் வேண்டுமானாலும் போகலாம். என்றார் பார்சிகள் போல் ஒரு மிகச் சிறுபான்மையிடம் கூடப் போகலாம். அவர்கள் சரியாகப் போராட்டங்களில் பங்கு பெறவில்லை, அல்லது அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர், எனவே அவர்களிடம் அதிகாரம் போகக் கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு இங்கு யாருக்கும் அதிகாரமில்லை.
3.போராட்டம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிரானதுதானே தவிர வெள்ளையர்களுக்கு எதிரானது அல்ல என்பதை மீண்டும் அழுத்திச் சொன்னார். மக்கள் மத்தியில் வெள்ளையர் மீது வெறுப்புள்ளது. இது தவறு. ஏகாதிபத்தியத்தையும் வெள்ளையர்களையும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். என்னைப் பொருத்த மட்டில் நான் எந்த நாளும் அவர்களை வெறுத்தது கிடையாது. அசர்களின் மீதான் அநுதாபம் இப்போது அதிகமாகி உள்ளது. அவர்கள் இப்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றனர்.
வெறுப்பிலாமல் எதிரியை எதிர்கொள்வது என்பது காந்தியின் அணுகல் முறைகளில் ஒன்று என்பதை முன்பே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். வெள்ளை அதிகாரிகளைக் கொன்று வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு விரட்டுவது என்கிற அடிப்படையில் இங்கே பகவத் கீதை மொழியாக்கங்களையும் விளக்கங்களையும் அன்றைய திலகர், அரவிந்தர் முதலான தேசியவாதிகள் அளித்துக் கொண்டிருந்ததும், குதிராம் போஸ் முதலான இளைஞர்கள் அவ்வாறே செய்து தூக்கு மேடை ஏறிக் கொண்டிருந்ததுமான ஒரு கால கட்டத்தில் இந்திய அரசியலில் நுழைந்து அதன் போக்கைத் திசை திருப்பியவர் அவர்.
இங்கு நான் சொல்ல வந்தது அதை எல்லாம் அல்ல. “இன்று பிரிட்டிஷ்காரர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர்” என்கிறாரே அதுதான் கவனத்தை ஈர்க்கிறது. அது பிரிட்டிஷாரை மட்டும் மனதில் வைத்துச் சொல்லவில்லை. ஒட்டு மொத்தமாக மேலை ஏகாதிபத்தியங்களை அவர் சொல்கிறார். ஏகாதிபத்தியங்கள் அவற்றின் இயல்பினால் அழியும் என்று அவர் நம்பினார். மார்க்சும் அதைத்தான் சொன்னர். இரண்டும் வெவ்வேறு அடிப்படைகளில் சொல்லப்பட்டவை என்ற போதிலும், இன்னொரு வகையில் பெரிய வேறுபாடுகள் இல்லை எனவும் சொல்லலாம். ஆனால் இரண்டுமே நடக்கவில்லையே எனத் தோன்றலாம். உண்மைதான். எனினும் ஏகாதிபத்தியங்கள் அப்படி ஒன்றும் இன்று நெருக்கடிகள் இன்றி வெற்றி நடை போட்டுக் கொண்டும் இருக்கவில்லைதானே.
காந்தியம் என எதையாவது சொல்வதானால் அதன் அடிப்படை அவரது மிக ஆரம்ப கால எழுத்துக்களில் (1909) ஒன்றான ‘ஹின்ட் ஸ்வராஜ்’ நூலில் அடக்கம் என காந்தியியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். ‘இந்தியச் சுயாட்சி’ என அதை மொழியாக்கலாம். அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால் Indian Self Government எனலாம். சாவர்கருடன் லண்டனில் ஏற்பட்ட ஒரு கருத்தியல் மோதலுக்குப் பின் கப்பலில் தென் ஆப்ரிக்கா திரும்பிக் கொண்டிருந்த பொழுது கெள்வி பதில் வடிவில் சுமார் நூறு பக்க அளவில் எழுதப்பட்ட ஒரு குறு நூல் அது.
சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். பெரிய கட்டுரைகளை நம் முகநூல் நண்பர்கள் படிப்பதில்லையே.
காந்தி அதில் மூன்று விடயங்களைச் சொல்கிறார்.
1.பிரிட்டிஷார்கள் இந்தியாவை வெற்றி கொள்ளவில்லை. அல்லது தம் பலத்தால் அவர்கள் இங்கே குந்தியிருக்கவில்லை. நாம் அவர்களுக்கு அதைத் தந்துள்ளோம். காந்தி இதைப் பெருந்தன்மை என்கிற அடிப்படையிலிருந்து சொல்லவில்லை.
பிரிட்டிஷ்காரர்கள் நம்மை நாகரீகப் படுத்துவதற்காக வந்ததாகத் தமது ஆளுகையை நியாயப் படுத்துகின்றனர் (legitimize). பிரச்சினை என்னவெனில் நாமும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டதுதான். நாமும் நம்மை (மேற்கத்திய பாணியில்) நாகரீகப் படுத்தப்பட வேண்டியவர்களாக ஏற்றுக் கொண்டதுதான், அல்துஸர் சொல்வாரே அது போல இது ஒரு வகை ‘விளிப்பின் அரசியல்’. “ஏய் திருடா” என ஒரு போலீஸ்காரன் நம்மைப் பார்த்துக் கூவுகிறபோது நாம் நம்மைத் திருடனாக உணர்வது போல.
காந்தியைப் பொருத்தமட்டில் ‘நாகரீகம்’ (Civilization) என்பது ஒரு அற அடிப்படையிலான விகசிப்பு (Moral and Ethical Enterprise). மேலை நாகரீகத்தின் “வலிமையே வெல்லும்”, “தகுதி உள்ளது மட்டுமே பிழைத்துக் கொள்ளும்” என்கிற அடிப்படைகளுக்கும் இது வெகு தூரம்.
ஆக, காந்தியைப் பொருத்த மட்டில் ஏகாதிபத்தியம் என்பது நமக்கு வெளியே இருக்கிற ஒன்றல்ல. ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபடுவதற்கு முதலில் நாம் அதை நமக்குள்ளிருந்து வெளியேற்றியாக வேண்டும்.
2. எந்திரங்களைக் கருவியாக்கிச் செயல்படும் முதலாளியத்தை காந்தி இரண்டாவது எதிரியாகச் சுட்டுகிறார். நவீன நாகரிகத்தின் குறியீடாக அவர் எந்திரங்களைச் சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில் அதை ஒரு “பெரும் பாவம்” எனவும் குறிப்பிடுகிறார். எந்திரங்கள் என்பதைச் சற்று விசாலமாக்கி நாம் “தொழில் நுட்பங்கள்” எனவும் எடுத்துக் கொள்ளலாம். எந்திரங்கள் மனிதனை மனிதாய நீக்கம் (dehumanizes) செய்கிறது; அந்நியமாக்குகிறது என்றார். கிட்டத்தட்ட எந்திரங்கள் குறித்த ஹெய்டெகரின் விமர்சனத்திற்கு (Question Concerning Technology) நெருக்கமாக வருகிறார். நாம் நமது இருப்பையே (being) ஒரு வகைத் தொழில்நுட்பச் சட்டகத்திற்குள் (technological paradigm) வைத்துப் புரிந்து கொள்ள நேர்கிறது என்பார் ஹெய்டெகர்.
நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான முதலாளியத்தை வெறும் பொருளாதாரச் சுரண்டல் என்பதற்கும் அப்பாலான இன்னும் கோடூரமான ஒன்றாக ஹெய்டெகர், காந்தி, மார்க்ஸ் முதலானோர் காண்கின்றனர். மார்க்ஸ் “கூலி, விலை. லாபம்”, Theories of Surplus Value ஆகியவற்றோடு முடித்துக் கொள்ள வில்லை, அதையும் தாண்டி “அந்நியமாதல்” என்கிற அளவிற்குப் பிரச்சினையைக் கொண்டு செல்வது குறிப்பிடத் தக்கது.
இதற்கு எதிரான ஒரு குறியீடாகத்தான் காந்தி ராட்டையையும் தக்களியையும் ஏந்தினார். மற்றபடி மானுட உழைப்பையும், நேரத்தையும் மிச்சப் படுத்துவது என்கிற வகையில் அவர் எந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் வெறுத்தார் இல்லை. தனது காலத்தில் மிக அதிகமாக ஒலி பெருக்கியையும் (mike), ரயிலையும் அதிகம் பயன்படுத்தியவர் அவர் என்பார்கள். எனக்குப் பிடித்த ஒரு கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெஷின்தான் என அவர் ஒரு முறை கூறியதாகவும் சொல்வர்.
3. “எல்லையற்ற பகுத்தறிவு” என்பது மேலைப் பண்பாட்டை வரித்துக் கொண்டதன் இன்னொரு பிரச்சினை என்பது காந்தியின் மூன்றாவது விமர்சனம். பகுத்தறிவே வேண்டாம் என நான் சொல்லவில்லை. அதற்குரிய எல்லையை உணர்ந்து செயல்படுவோம் என்றார்.
மேலை நாகரிகம் நம் மீது சுமத்திய இழிவுகளாக மட்டும் நாம் இதைக் கருத வேண்டியதில்லை. அது தனக்குத் தானே சுமத்திக் கொண்ட இழிவும் அழிவும் கூட.அந்த வகையில் மேலை நாகரீகம் அநுதாபத்துக்குரிய ஒன்றுங் கூட என்பது காந்தியின் கருத்து.
ஆக, காந்தி சொன்ன காலனியத்திலிருந்து விடுதலை என்பது வெறுமனே வெள்ளை ஆட்சியாளர்களை விரட்டி விட்டு அந்த இடத்தில் கருப்பு ஆட்சியாளர்களை உட்கார வைக்கிற விவகாரமல்ல (இது அவரே சொன்னது).
காந்தியின் பார்வையில் காலனீய நீக்கம் என்பது நம் உள்ளிருந்து தொடங்கி பல்வேறு மட்டங்களில் செய்யப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் நாம் என்ன செய்தோம்? ஆட்சியாளர்களை மட்டும்தான் மாற்றினோம். காலனியம் நம்மீது திணிக்கப்படவில்லை, நாமே வரித்துக் கொண்டது என்றார் காந்தி. நவ காலனியம் மட்டுமென்ன அதுவும் நாமே வரித்துக் கொண்டதுதான். இன்னும் நாம் நம்மை நாகரீகப்படுத்த வேண்டியவர்களாகத்தான் நினைத்துக் கொண்டுள்ளோம். அப்படி நினைத்துக் கொண்டுள்ளவரை நாம் அனைத்திற்கும் மேலை நாடுகளையே நம்பி வாழ வேண்டியுள்ளது. காந்தியின் காலத்தில் ஏகாதிபத்தியம் / காலனி நாடுகள் என உலகம் பிரிந்து கிடந்தது. இன்று வளர்ச்சியடைந்த நாடுகள் / குறை வளர்ச்சி நாடுகள் என உலகம் பிரிந்து கிடக்கிறது. இரண்டு நிலைகளும் ஒன்றுதான்.
அவ்வளவே.
{இதற்கு மாற்றாக காந்தி வேத காலத்திற்குத் திரும்புதல் என்பதை முன்வைக்கவில்லை. வேத காலத்திற்குத் திரும்புவது என்பதை முன்வைப்பவர்கள் காலனீய நீக்கத்தை முன்வைக்கவுமில்லை. பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கங்கையைத் தூய்மை செய்வது என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பொது இடங்கள் அனைத்திலும் ‘வை ஃபி’ வசதி செய்து கொடுப்போம் எனவும் சொல்கிறது, பா.ஜ.க சொல்லும் ‘இந்தியமயப் படுத்துதல்’ என்பதற்கும் காந்தி சொல்வதற்குமான வேறுபாடுகள் அடுத்த கட்டுரையில்…}