கலைஞர் கருணாநிதி : ஏற்றங்களும் இறக்கங்களும்

ஒன்று

தனது நீண்ட அரசியல் வாழ்வினூடாகக் கலைஞர் சாதித்தவைகளை முதலில் தொகுத்துக் கொள்வோம்.

சமூக நீதி, மாநில உரிமைகள் என்கிற இரு அடிப்படைகளை அரசியலாகக் கொண்டு உருவான தி.மு.க வின் கொள்கைகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திசைகளிலும் பலவற்றைச் சாதித்தவர் கலைஞர். இன்று இந்தியாவிலேயே சமூக நீதிக்கு ஒரு மாதிரி அரசாக விளங்குவது தமிழ்நாடுதான் என்பதில் கலைஞரின் பங்கு முக்கியமானது. அண்ணா நீண்ட நாள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அவர் பதவியில் இருந்த இரண்டாண்டுகளுக்கும் குறைவான அந்தக் குறுகிய காலத்தில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடாக மாற்றியது, பிற்படுத்தப்பட்ட சாதியினரது மேம்பாட்டிற்காக ஆணையம் ஒன்றை அமைத்தது, இந்தி நீக்கப்பட்ட இரு மொழிக் கொள்கைக்கு அடித்தளமிட்டது ஆகிய அரசியல் மாற்றங்களைச் செய்யவே அண்ணாவுக்கு வாய்ப்பிருந்தது..

அரசதிகாரத்தை அண்ணாவுக்குப் பின் தொடர்ந்து கைப்பற்றிய கலைஞர் அவரது ஆட்சிக் காலங்களில் இட ஒதுக்கீட்டை விரிவாக்கினார். பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கீட்டை 18+1 ஆகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீட்டை 31 ஆகவும் அவர் அதிகரித்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் இயற்றினார். பிற்படுத்தப்பட்ட்டோர் நலத்துக்கான அமைச்சகம் உருவாக்கினார். திராவிட இயக்கத்தின் இன்னொரு அடிப்படைக் கொள்கையாகிய மாநில சுயாட்சி எனும் திசையில் ஆகஸ்ட் 15 அன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றுவது, தமிழகத்துக்கென தனியாக ஒரு மொழி வாழ்த்துப் பாடலை அரசடையாளமாக்கியது என்பவற்றோடு நிற்காமல் மாநில அளவில் நிதி ஆணையம், காவல்துறை ஆணையம், திட்ட ஆணையம், தமிழகத்திற்கென நவீன மென்பொருள் உருவாக்கக் கொள்கை முதலானவற்றை உருவாக்கியது, குடிசை மாற்று வாரியம் ஒன்றை அமைத்தது எனப் பல திசைகளில் அவர் தமிழகத்தை முன்மாதிரி  மாநிலமாக நிறுத்திக் காட்டினார். மத்திய மாநில உரிமைகளை ஆராய ராஜமன்னார் குழு அமைத்து அறிக்கை ஒன்றைப் பெற்றதும் (1969), 1973ல் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானமும் இந்தத் திசையில் முக்கியமானவை

இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொது வினியோக அமைப்பு உருவானதும் தி.மு.க ஆட்சியில்தான். உணவு உரிமைச் சட்டம் ஒன்றை இந்திய அளவில் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உருவாக்கியபோது அதைவிடச் சிறந்த உணவுப் பொருட்கள் வினியோக அமைப்பு இங்கு ஏற்கனவே செயல்படுகிறது, இந்தப் புதிய திட்டத்தால் எங்களுக்குப் பயனில்லை என அன்றைய முதல்வர் சொல்லும் அளவிற்கு இங்கு பொது வினியோக அமைப்பு செயல்பட்டது. அதேபோல “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்கிற முழக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘குடிசை மாற்று வாரியம்’ கலைஞரின் இன்னொரு சாதனை. இதன் மூலம் குடிசை வாழ் மக்களுக்குக் கிட்டத்தட்ட இலவசமாக அவரவர்கள் வாழ்ந்த குடிசைப் பகுதியிலேயே கான்க்ரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பெண்களுக்குச் சொத்துரிமை, 30 சத ஒதுக்கீடு ஆகியனவும் அவரது காலத்தில்தான் அளிக்கப்பட்டன. மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் சந்தை முதலியனவும் அவரது ஆட்சியில் விளைந்தவைதான். கண்ணொளித் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, திருமண உதவித் திட்டம், பிச்சைக்காரர் மறு வாழ்வுத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் முதலியனவும் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டவைதான்.

கலைஞரின் இன்னொரு சாதனை எல்லாச் சாதியினரும் ஒன்றாக வசிப்பதற்கான சமத்துவபுரங்களை நாடெங்கும் அமைத்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைந்தபோது அவர் இட ஒதுக்கீட்டை அதிகரித்து வருமான உச்சவரம்பை நிபந்தனையாக்கினார். இந்த வருமான உச்சவரம்பைக் கடுமையாக எதிர்த்து அதைத் திரும்பப் பெற வைத்ததிலும் கலைஞர் தலைமையில் இருந்த திமுகவிற்குப் பங்கிருந்தது.

இன்று வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரின் இறப்பைப் பற்றிச் சொல்லும்போது தேர்தல் கூட்டணிகள் அமைக்கும்போது தலித் கட்சிகளைத் தீண்டத் தகாதவையாக எல்லோரும் பார்த்தபோது கலைஞர்தான் வி.சி.க விற்குப் 10 தொகுதிகள், புதிய தமிழகத்திற்குப் 10 தொகுதிகள் தந்து கூட்டணியில் இணைத்துக் கொண்டார் என்கிறார். பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் தலித்கள் பஞ்சாயத்துத் தலைவர்களாகச் செயல்பட அனுமதிக்கப்படாத நிலையை கலைஞரின் கவனத்திற்கு இட்டுச் சென்ற போது அவர் சுழற்சி முறை இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டுகள் அந்த ஊர்களில் நீடிக்க ஆணையிட்டு தலித் தலைவர்கள் பதவி ஏற்க வழி வகுத்ததையும் இன்று தலித் அமைப்புகள் கலைஞரின் சாதனையாகக் குறிப்பிடுகின்றன.

காங்கிரஸ் ஆட்சியால் 30 ஏக்கர் என வரம்பு விதித்து இயற்றப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தைத் திருத்தி உச்சவரம்பை 15 ஏக்கர்களாகக் குறைத்ததும் கலைஞர் ஆட்சியில்தான் (1970). அதேபோல குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென ‘குத்தகை நிலப் பதிவேட்டுச் சட்டம்’ (Conferment of Ownership of Homestead Act, 1971) இயற்றப்பட்டதும் அவர் காலத்தில்தான். அத்துடன் குத்தகைச் சட்டங்கள் திருத்தப்பட்டு குத்தகைத் தொகை 25 சதமாகக் குறைக்கப்பட்டதும் (1979) அவரது ஆட்சிக் காலத்தில் நடந்ததுதான்.

இரண்டு

இத்தனை சாதனைகள் கலைஞர் ஆட்சியில் நடந்தபோதும் அவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் தோற்க நேர்ந்தது எப்படி? அவர்களின் வலிமையைக் கலைஞர் சரியாக மதிப்பிடவில்லை என்றொரு பதில் எளிதாக முன்வைக்கப்படுகிறது. ஒரு மூத்த பத்திரிகையாளர் கூட சமீபத்தில் அவ்வாறு கூறி இருந்தார். என்னைப் பொருத்த மட்டில் இந்தக் கேள்விக்கான பதிலை நாம் அப்படிச் சொல்லி எளிதாகக் கடந்துவிட முடியாது எனத் தோன்றுகிறது.

மேற்குறிப்பிட்ட கலைஞரின் இந்தச் சாதனைகளில் பல காலப் போக்கில் மக்களுக்குப் பெரிய பலன்களை அளித்துவிடவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். அடித்தள மக்களை அதிகாரப்படுத்துவதற்கு அவை போதுமானவைகளாக இல்லை. பல திட்டங்கள் உலகமய நடவடிக்கைகளின் ஊடாக நீர்த்துப் போயின.

எடுத்துக்காட்டாக அடித்தள மக்களது நலன் நோக்கில் கலைஞரது ஆட்சி நிறைவேற்றிய ஆக முக்கியமான திட்டங்களில் ஒன்றான குடிசைமாற்று வாரியத்தை எடுத்துக் கொள்வோம். இத்திட்டத்திற்கு கலைஞர் அரசு உலக வங்கியிடம் கடன் வாங்கியபோது அது சுமத்திய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நிபந்தனைகளில் ஒன்று இனி கட்டப்படும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே கட்டப்படாமல் (சுமார் 30 கிமீ தாண்டி) நகரத்துக்கு வெளியே கட்டவேண்டும் என்பது; மற்றது ஏழெட்டு மாடிகள் உள்ள அடுக்கு வீடுகளாக இருக்க வேண்டும் என்பது; மூன்றாவது நிபந்தனை அந்த வீடுகளைக் கட்டுவதற்கான செலவை குடியேறும் ஏழை எளிய மக்களிடமிருந்து வசூல் செய்துவிட வேண்டும் என்பது. இவ் வாரியம் எவ்வாறு நிர்வக்கிக்கப்பட வேண்டும் என்பதிலும் உலகவங்கி தலையிட்டது. இனி குடிசைமாற்று வாரியத்திற்கு மக்கள் பிரதிநிதிகள், கட்சிக்காரர்கள் தலைவர்களாக ஆக்கப்படாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் தலைவர்களாக்கப்பட வேண்டும் (bureaucratization) என்றது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு துரைப்பாக்கம், கண்ணகிநகர் முதலான தொலைதூரங்களில் கட்டப்படும் அடுக்கு மாடிகளில் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு நாசமாகியுள்ளது என்பதை நாங்கள் குழு ஒன்றை அமைத்து நேரடி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளோம் (பார்க்க: ‘சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்’).

ஏழைகளின் வாழ்வில் இறைவனைக் காப்போம் எனத் தந்தை சொன்னார். மகனோ ‘சிங்காரச் சென்னை’ எனக் கூறி  நகரை அழகு படுத்தும் வகையில் அதிவேகப் பறக்கும் சாலைகள் உட்படப் பெரிய அளவில் குடிசை மக்கள் வெளியேற்றப்படுதலுக்குக் காரணமானார். வீடில்லாமல் நகர் வெளிகளில் தூங்கியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மருத்துவமனையில்  அடைக்கப்பட்ட கொடுமையும் சென்னையில் நடந்தது.

நில உச்சவரம்புச் சட்டங்களின் விளைவாக 1,36,236 பேர்களுக்கு 1,78,880 ஏக்கர் விவசாய நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆறு கோடி மக்கள் தொகை உள்ள ஒரு மாநிலத்தில் இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. பெரு நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களை பினாமிகள் பெயர்களில் எழுதி வைப்பது முதலான நடவடிக்கைகளின் ஊடாக இச்சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டனர். இதன் விளைவாகப் பெரிய அளவில் நில உறவுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் தலித்கள், அவர்களுள்ளும் ஆதி திராவிட சமூகத்தினர் இன்னும் நிலமற்றவர்களாகவும் தீண்டாமைக்கு ஆட்பட்டவர்களாகவும் தொடர்கின்றனர்.

கலைஞரின் இன்னொரு முக்கியமான திட்டமாகிய பொது வினியோக முறையும் இப்போதைய மோடி அரசு இதில் புகுத்தும் மாற்றங்களின் ஊடாக விரைவில் பயனற்றுப் போகும் நிலை உள்ளது. ரேஷன் கடைகளே மூடப்படும் வாய்ப்பும் உள்ளது.

மிகப் பெரிய அளவில் உயர் கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் தமிழகத்தில் இன்று உருவாகியுள்ளன. எனினும் உயர் கல்வி என்பது மேலும் மேலும் அடித்தள மக்களுக்கு எட்டாக் கனியாக ஆகும் நிலை அதிகரிக்கிறது.

அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதும், வேலைவாய்ப்பு, கல்வி முதலிய எல்லாமும் தனியார் மயமாவதும் இட ஒதுக்கீட்டை பொருளற்றதாக ஆக்குகின்றன.

இட ஒதுக்கீட்டை அதிகரித்தது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் எனச் சட்டம் இயற்றியது முதலான கலைஞரின் புரட்சிகரமான திட்டங்களின் ஊடாக பார்ப்பன மேற்சாதியினரும், ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகளும் அவரைத் தீராப் பகையாக நினைப்பதை அறிவோம். அவரது உடலை மெரினாவில் அண்னா சமாதிக்கு அருகில் புதைக்கக் கூடாது என வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு அவர்கள் வன்மத்தைக் கக்கியதையும் கண்டோம். ஆனால் இன்னொரு பக்கம் கலைஞர் உருவாக்கிய மாற்றங்களின் ஊடாகப் பொருளியல் ரீதியாகப் பெரும் பயன் ஏதும் ஆக அடித்தள மக்களுக்கு எட்டவில்லை என்பதையும் பார்க்கிறோம்.

கிடைத்த பயன்களும் ஆகக் கீழே சென்றடையாமல்  நடுத்தர மக்களின் கைகளைத்தான் சென்றடைந்தன. அவர்களைத்தான் அதிகாரப் படுத்தின.

தி.மு.கவின் மாவட்ட அளவிலான கட்சிப் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் நடுத்தர சாதியினராகவே உள்ளதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கீழத் தஞ்சை போன்ற தலித்கள் மிக அதிகமாக உள்ள பகுதிகளிலும் கூட மாவட்டப் பொறுப்பாளர்களாக ஆதிக்க சாதியினரே உள்ளனர். இதன் விளைவாக தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிப்படையாகக் கண்டிக்க இயலாதவர்களாக அக்கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளதை இவ்வாறான பல வன்முறைகள் குறித்த ஆய்வுகளைச் செய்துள்ள வகையில் நான் நேரில் கண்டுள்ளேன்.

மூன்று

கலைஞரின் அணுகல்முறைகளைப் பொருத்தமட்டில் அவரது இத்தனை சிறப்புகளுக்கும் அப்பால் சில முக்கியமான விமர்சனங்களையும் நாம் வைக்க வேண்டி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராகப் போராடிப் பல உரிமைகளப் பெற்றவர் அவர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை எதிர்த்து நின்று தன் ஆட்சியை இழந்தவர் அவர். ஆட்சியை மட்டுமல்ல அவரது கட்சியையே அழித்து ஒன்றுவிடாமல் செய்துவிட வேண்டும் எனும் நோக்குடன் அவரது மகன் ஸ்டாலின் உட்பட நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோதும் இம்மியும் பணியாமல் நிமிர்ந்து நின்றவர் அவர். நெருக்கடி நிலைக் காலம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட  ஷா கமிஷன், இஸ்மாயில் கமிஷன் அறிக்கைகளைப் படித்தால் யாரும் கண்ணீர் சிந்தாமல் அதைக் கடக்க முடியாது. என்னைப் பொருத்த மட்டில் கலைஞரின் ஆகப் பெரிய பெருமை அவர் நெருக்கடிநிலையை எதிர் கொண்ட தீரம்தான்.

ஒரு மாநில அரசின் உரிமைகளுக்காக நின்ற அவர் உலகமயச் செயல்பாடுகளின் ஊடாக மத்திய அரசின் உரிமைகள் மட்டுமல்ல மாநில அரசின் உரிமைகளும் பறி போகும் என்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. உலகமயச் செயற்பாடுகளை அவர் விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டார். நாங்குனேரி, கோயம்புத்தூர், சென்னை, ஹோசூர்… என இங்கே எந்த எதிர்ப்புகளும் இல்லாமல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திறக்கப்பட்டன. சுற்றுச் சூழலைப் பாதிக்கும் எனப் பிற தென் மாநிலங்களால் அனுமதி மறுக்கப்பட்ட சில தொழிற்சாலைகளுக்கு அவை விதித்த நிபந்தனைகளை ஏற்று கலைஞர் ஆட்சி அனுமதி அளித்தது குறித்து நான் எனது நூலில் பதிவு செய்துள்ளேன் (பார்க்க: உலகமயத்துக்குப் பின் இந்தியா). தொழில்துறைச் செயலாளராக அவரால் தேர்வு செய்யப்பட்ட எம்.எச்.ஃபரூக்கியை முதலீட்டாளர்களின் நியாயங்களை உணர்ந்தவர் (investment friendly) எனப் பத்திரிகைகள் எழுதின.

கலைஞரின் ஆட்சியில் தொழிலாளர் இயக்கங்கள் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. டி.வி.எஸ், எம்.ஆர்.எஃப், லெய்லன்ட் மற்றும் சிம்சன் போராட்டங்கள் (1969 -73) ஒடுக்கப்பட்ட விதங்கள் கலைஞரின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கங்களாக நிலை பெறுகின்றன. சிம்சன் போராட்டத்தின் போது கூட்டம் ஒன்றிற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவர் வி.பி.சிந்தனை தி.மு.க தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் தாக்கினர். பேருந்தை நிறுத்திப் பயணிகளை இறக்கி விட்டு இந்தத் தாக்குதல் நடந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார் (The Potics of Repression, EPW, Aug 1973). முன்னதாக இப்படியான ஆபத்து இருப்பது காவல்துறைக்குச் சொல்லப்பட்டும் நடவடிக்கை ஏதுமில்லை.

“இரும்புக் கரங்கள் கொண்டு தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவேன்” எனக் கலைஞர் உதிர்த்த வாசகங்கள் தொழிற்சங்க வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று.

நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர் போராட்டத்தில் (1970, மே 3) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 1999 ஜூலை 25 அன்று திருநெல்வேலியில்நடந்த மாஞ்சோலைத் தொழிலாளர்கள் ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 17 பேர்கள் கொல்லப்பட்டபோதும் முதலமைச்சராக இருந்தது கருணாநிதிதான். ஜூலை 2010 ல் ஸ்ரீ பெரும்புதூர் மென்பொருள் தொழிற்பூங்காவில்’ உள்ள ஃபாக்ஸ்கான் தொழிர்சாலையில் விஷவாயு கசிந்து 250 பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாதுகாப்பு வேண்டி தொழிலாளர் போராட்டம் நடந்தபோது அதுவும் ஒடுக்கப்பட்டது.

இன்றைய எடப்பாடி ஆட்சியில் எந்த ஒரு கூட்டம், போராட்டம் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லாமல் இருப்பதை அறிவோம். கடைசி முறையாகக் கலைஞர் ஆட்சியில் இருந்தபோதும் (2006 -2011) அவ்வாறே கூட்டங்கள், போராட்டங்கள் எதற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. போலி என்கவுன்டர் கொலைகளும் நிறைய நடந்தன. பதவி ஏற்ற உடனேயே நான்கு பேர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்காது என்கிற பிரச்சாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என அப்போது ‘குமுதம்’ இதழ் எழுதியது. கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதைக் கண்டித்து நாங்கள் ஒரு போராட்டத்தை நடத்தினோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மறுப்பை மீறி அதை நடத்தியபோது நான், தோழர் தியாகு உட்பட சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டோம்.

போலீஸ் அத்துமீறல்கள், இதுபோன்ற அடக்குமுறைகள், தொழிலாளர் போராட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று ஒடுக்குவது முதலான அம்சங்களில் எல்லா ஆட்சிகளையும் போலத்தான் கலைஞர் ஆட்சியும் இருந்தது.

நான்கு

கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்ற அதே ஆண்டுதான் இந்திய அளவில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. ‘இந்திரா காங்கிரஸ்’ எனவும் ‘பழைய காங்கிரஸ்’ எனவும் அவை அழைக்கப்பட்டன. இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா முதலானோர் பழைய காங்கிரசில் இருந்தனர். காமராஜரை முன்னிட்டு தமிழகத்தில் இந்திரா காங்கிரசைக் காட்டிலும் பழைய காங்கிரஸ்தான் வலுவாக இருந்தது.

அப்போது தி.மு.க பிளவுறவில்லை. கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.கவைப் பொருத்த மட்டில் அது ஒரு மாநிலக் கட்சி. அதற்கு அப்போதைய எதிரி காமராஜரின் பழைய காங்கிரஸ்தான். அதை வீழ்த்துவதே அப்போது அவருக்குத் தேவையாக இருந்தது. தமிழக அளவில் எந்த வகையிலும் தமக்குப் போட்டியாக இருக்க முடியாத இந்திரா காங்கிரசுடன் உறவு வைத்துக் கொண்டு 1971 பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார். இந்திரா காங்கிரஸ் மாநில அளவில் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டு எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரசைப் பொருத்த மட்டில் அதற்கு தமிழக மாநில அரசு முக்கியமில்லை. திமுக வைப் பொருத்தமட்டில் மத்திய ஆட்சி அதற்கு இரண்டாம் பட்சமே. மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் கூட்டணி அமைச்சரவையில் பங்கு பெறலாம் என்பதே அவரது அணுகல்முறையாக இருந்தது..

இன்றுவரை திமுகவினுடைய கூட்டணிக் கொள்கை இப்படித்தான் உள்ளது. ஆனால் இந்த அணுகல்முறை தி.முகவைப் பொருத்த மட்டில் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகக்  குறைந்த பட்சம் வரலாற்றில் இருமுறை அமைந்தது.

1971ல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்த இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தபோது (1977) கருணாநிதி அதை ஆதரிக்காத நிலையை எடுத்ததையும், நெருக்கடி நிலையை எதிர்த்த ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்றோருக்கு புகலிடம் அளித்து வந்ததையும் கண்ட இந்திரா கலைஞர் ஆட்சியைக் கலைத்து (1976) அவரையும் அவரது கட்சியினரையும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்படுத்தியதையும் அறிவோம்.

நெருக்கடி நிலைக்குப் பின் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதல்வரானார். மத்தியில் ஜனதா ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகளில் அது கவிழ்ந்தது. மீண்டும் 1980 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்தபோது விளைவித்த குழப்பங்களின் விளைவாக மீண்டும் அப்படியான கூட்டணி வெற்றி பெறாது என்றும் மீண்டும் இந்திரா வெற்றி பெறத்தான் வாய்ப்புள்ளது என்றும் உணர்ந்த கலைஞர் இம்முறை இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை முறியடிக்க அதுவே வழி என்பது அவர் கணக்கு. “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” என அவர் முழக்கம் வைத்து நெருக்கடி நிலையில் தம் ஆட்சியை அழித்து, கட்சியையும் குறி வைத்துத் தாக்கி, தொண்டர்களைக் கடும் துன்பங்களுக்கு ஆளாக்கிய இந்திரா காந்தியுடன் அவர் கைகோர்த்தது இன்றுவரை விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. கொள்கைக்காக நெருக்கடிநிலையை எதிர்த்து நின்ற கலைஞர் அதன் பின் கொள்கை பற்றிக் கவலைப் படாமல் தனக்கு அப்போது வலிமையான போட்டியாக அமைந்த அ.தி.மு.கவை வீழ்த்துவதையே ஒரே குறிக்கோளாக வைத்துத் தன் அரசியலைத் தொடர்ந்தார்.

அதன் விளைவு அவரை 1999 – 2004 காலகட்டத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க வைத்தது. அக்கால கட்டத்தில் பா.ஜ.க அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் கலைஞர் ஏற்றுக் கொள்ள நேரிட்டது. பாட நூல் திருத்தங்கள், கல்வி அமைப்புச் சீரழிவுகள், குஜராத் படுகொலைகள், சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ஆகிய அனைத்துக்கும் மௌன சாட்சியாய் கலைஞர் நிற்க வேண்டி வந்தது.

கோவைக் கலவரங்கள் நடந்தபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் முதற்கட்ட வன்முறைகளுக்குக் காரணமான இந்துத்துவ சக்திகளின்மீது நடவடிக்கை எடுக்க இயலாதவராகk கலைஞர் இருந்தார். அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து வெடிகுண்டுத் தக்குதல்கள் நடத்தப்பட்டபோது (1998) எடுத்த நடவடிக்கைகளிலும், முஸ்லிம் கைதிகளை நடத்திய வகைகளிலும் கலைஞர் ஆட்சி முஸ்லிம்களின் சட்ட ரீதியான உரிமைகள் எதையும் மதிக்கவில்லை.

இன்றளவும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இதழ்களும் இந்துத்துவச் சார்பாளர்களும் தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் தம்மை வலுப்படுத்தி நிலை நிறுத்திக் கொண்ட பொற்காலமாக பா.ஜ.க வுடன் கலைஞர் கூட்டணி அமைத்திருந்த இக் காலகட்டத்தையே குறிப்பிடுகின்றனர் (Aravindan Neelakandan, Muthuvel Karunanithi- The Lasr Dravidian?, Swarajya, Aug 7, 2018). இஸ்லாமிய சக்திகளுடன் கூட்டணி அமைத்து இந்துக்களுக்கு ஆதரவான அரசியலுடன் செயல்பட்ட காலமாகவும் இதையே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எந்தக் கொள்கைகளுக்காக அவர் தன் ஆட்சியை இழந்து, கட்சித் தொண்டர்களையும் பல்வேறு துன்பங்களுக்கும் ஆட்படுத்தினாரோ அந்தக் கொள்கைகளை ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றுக்காக அவர் கைவிட்ட கதைகள் இவைதான். இன்றளவும் தி.மு.க பா.ஜ.க உடன் தேர்தல்கூட்டணி அமைக்குகுமா அமைக்காதா என்கிற ஐயத்துடனேயே மக்கள் அதை நோக்க நேர்ந்ததன் பின்னணி இதுவே.

எனினும் கலைஞர் இயல்பில் ஒரு மதச்சார்பற்ற பார்வையைக் கொண்டவர்தான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. இந்துத்துவ வெறியர் ஒருவர் எழுதியுள்ள மேற்கண்ட கட்டுரையிலும் கூட சாராம்சத்தில் அவர் இந்துத்துவ எதிர்ப்பாளர் என்றே “குற்றம்”சாட்டப்படுகிறார்.

இந்த இடைக்கால அரசியல் தடுமாற்றங்களுக்கும் அப்பால் அவர் சமூகநீதி நோக்குடன் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வரலாற்றில் என்றென்றும் நினைவு கொள்ளப்படுவது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *