இன்று குடந்தையில் வெளியிடப்பட்ட எங்களின் உண்மை அறியும் குழு அறிக்கை
கும்பகோணம்
ஜூலை 15, 2017
கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற ‘எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தையும்” (Oil and Natural Gas Corporation – ONGC) அரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுள்ள செய்தி தற்போது தமிழக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. முப்பதாண்டு காலமாகக் காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து எரிபொருளை உறிஞ்சி எடுத்து, விவசாய நிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதால் தம் நில வளம் மட்டுமின்றி, குடிநீர் உட்பட சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசுபடுவதால் ONGC யின் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இன்று எழுந்துள்ளது. எரிபொருள் கசிவு ஒன்றை ஒட்டி நடந்த பிரச்சினையில் இன்று பத்து பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு மக்கள் தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து மக்கள் முன் வைக்க கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள்:
பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
இரா.பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,
மு.சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்,
வி.பி.இளங்கோவன், எழுத்தாளர், அம்மாசத்திரம், குடந்தை,
அகமட் ரிஸ்வான், பத்திரிகையாளர், நாகூர்
இக்குழுவினர் ஜூலை 13, 14 தேதிகளில் கதிராமங்கலம், குற்றாலம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள விளமல், அடியக்கமங்கலம் முதலான பகுதிகளுக்குச் சென்று போராடும் மக்களைச் சந்தித்தோம். திருவாரூரை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட சிலரைச் சந்தித்தோம். எரிவாயுக் குழாய் வெடித்த பகுதிகளுக்கும் சென்றோம். பாதிக்கப்பட்டு உயிர் வாழும் மக்கள் சிலரது துயரக் கதைகளையும் பதிவு செய்து கொண்டோம். குத்தாலத்தில் அமைந்துள்ள ONGC அலுவலகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் ஜோசப், கார்பொரேட் செய்தித் தொடர்பாளர் ராஜசேகர் ஆகியோருடன் விரிவாகப் பேசினோம். ஜூன் 30 அன்று நெல் வயலொன்றின் வழியே சென்று கொண்டுள்ள எரிவாயுக் குழாய் வெடித்த இடத்திற்கு நாங்கள் சென்று பார்க்க முனைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் எங்களை அருகே நெருங்க விடாமல் தடுத்தனர். நாட்கள் 15 ஆகியும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் இன்னும் வீசிக் கொண்டுள்ளது. அருகே நெருங்க அனுமதிக்காவிட்டாலும் சுமார் 20 அடி தொலைவில் நின்று குழாய் வெடித்த இடத்தைப் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்.
கதிராமங்கலம் மக்கள் சொன்னவை
ஊர் மத்தியில் உள்ள அய்யனார் கோவில் முன்னுள்ள திடலில் இப்போது அந்த ஊர் மக்கள் தினந்தோறும் கூடி நாள் முழுக்கத் தம் கோரிக்கைகளை முழங்கிக் கொண்டும், பார்க்க வருபவர்களிடம் தம் பிரச்சினைகளை விளக்கிக்கொண்டும் அமர்ந்துள்ளனர். நாங்கள் சென்ற அன்று (ஜூலை 13) அப்படி அவர்கள் அமர்வது மூன்றாம் நாள். தினந்தோறும் அந்த ஊரில் ஒரு வார்டைச் சேர்ந்தவர்கள் உணவு சமைத்து மதியம் போராடுபவர்களுக்கு வழங்குகின்றனர். பெரிய அளவில் பெண்கள் பங்குபெறுவது குறிப்பிடத் தக்கது.
போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த கலையரசி (க/பெ) முருகன், ராஜு, கவிஞர் கதிரை முருகானந்தம், அப்போது அங்கு வந்திருந்த திமுக ஒன்றியச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சமீபத்தில் நிகழ்ந்தவை குறித்துக் கூறியவை:
“கதிராமங்கலம் மிக்க வளம் கொழித்த பூமி, நெல் தவிர நாட்டு வாழை, பச்சை வாழை, மஞ்சள் முதலியன பெரிய அளவில் சாகுபடியான நிலம் அது. எல்லாம் 2010 க்கு முன். அதன் பின் எல்லாம் பழங்கதை ஆயின. பாதி நிலம் இப்போது தரிசாகிவிட்டது. நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் ‘போர்’ மூலம் விவசாயத்திற்காக நீர் எடுக்க 80 அடி துளையிட்டால் போதும். இப்போது 200 அடி துளைத்தாலும் நீர் வருவதில்லை. குடி நீரும் பெரிய அளவில் மாசுபட்டு உள்ளது. குடி நீரில் எண்ணை மிதப்பதைக் காணலாம். தூய நீர் போலத் தோற்றமளிப்பது சிறிது நேரத்தில் மஞ்சளாகி விடுகிறது. ஒரு சிறுவனுக்கு குடி நீராலேயே இருதய நோய் வந்துள்ளது இன்னொரு சிறுவனுக்குச் சதைச் சிதைவு நோய் வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் ONGC ஆழ் துளைக் கிணறுகள் தோண்டி எண்ணை உறிஞ்சுவதோடு அதை வயல்களுக்குக் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் 2 கிமீ தொலைவு கொண்டு சென்று பின் விக்ரமன் ஆறு ஊடாக குத்தாலம் கொண்டு சென்று தேக்குவதுதான். இது குறித்த விழிப்புணர்வை பேராசிரியர் ஜெயராமன் அய்யா போன்றவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தினர்.
“இது குறித்து நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளையும் ONGC நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசியும் எந்தப் பயனுமில்லாத நிலையில் சென்ற மே 19 அன்று ONGC நிறுவனம் ஊருக்குள் கொண்டு வந்து ஏராளமான கருவிகளை இறக்கியது. இது ONGC தன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கான முயற்சி என்பதை உணர்ந்த நாங்கள் கூடிச் சென்று தடுத்தபோது அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. சாலை மறியல் செய்தபோது மாலை 5 மணிக்குள் எல்லாவற்றையும் அகற்றி விடுவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கண்துடைப்பாகச் சில லாரிகள் அளவு கருவிகள் மட்ட்டுமே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன.
“தொடர்ந்து ‘சமாதானக் கூட்டம்’ என்கிற பெயரில் மக்கல் பிரதிநிதிகள் அடிக்கடி அழைக்கப்பட்டனர். எங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கேட்பது என்பதற்குப் பதிலாக அவ்ர்களின் கருத்துக்களை எங்கள் மீது திணிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஊர் மக்களைக் கலந்தாலோசித்து வந்து பேசுவத்ர்கும் உரிய அவகாசம் எங்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படவில்லை.
“இதற்கிடையில் ஜூன் 2 அன்று ஊரில் திருவிழா. காளியாட்டம் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. திருவிழா நடந்து கொண்டுள்ளதையும் பொருட்படுத்தாமல் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. திரண்டிருந்த மக்களும் சுமார் 400 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டோம். இரவில்தான் 10 பேர் தவிர இதரர் விடுதலை செய்யப்பட்டோம். சமாதானக் கூட்டத்தில் மக்கள் கருத்துக்களை உறுதியாகப் பேசியதாக அடையாளம் காணப்பட்ட அந்த 10 பேர்களும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊர் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டு எங்கும் அச்சம் நிலவியது. நாங்கள் ஊரைப் புரக்கணித்துச் செல்வது என முடிவு செய்து அகன்று ஓட்டைக்கால் திடலுக்குச் சென்று தங்கினோம். கம்பர் வாழ்ந்த பகுதி என இதைச் சொல்வார்கள். சப் கலெக்டர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். உலகத் தரமான குழாய்கள் வழியேதான் இந்த எண்ணை, எரிவாயு எல்லாம் கொண்டு செல்லப்படுகிரது. அது உடையாது, தெறிக்காது, எந்தப் பயனும் இல்லை என்றெல்லாம் அந்த சப் கல்க்டர் உறுதி அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இறக்கப்பட்ட கருவிகள் முழுமையாக திருப்பி எடுத்துச் செல்லப்படும் எனவும், நல்ல குடிதண்ணீர் வழங்கப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டது.
“இதை ஒட்டி கண்டனக் கூட்டம் ஒன்று குடந்தையில் நடத்தப்பட்டது. இரு முறை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மாசுபட்ட தண்ணீரை எல்லாம் காட்டி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினோம்..
“இந்நிலையில்தான் ஜூன் 30 காலை வயல் பக்கம் சென்ற பெண்கள் கடும் துர்நாற்றத்துடன் வயலொன்றின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு கடும் எரி சக்தியுடன் கூடிய வாயுவும் திரவமும் வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்து வந்து ஊருக்குள் கூறினர். அங்கு திரண்ட மக்கள் கூட்டம் சம்பவ இடத்தில் திரண்டது. யாரும் எளிதில் நுழைய இயலாமல் அங்கு கிடந்த முள், புதர் எல்லாவற்றையும் போட்டுத் தடுப்பு அமைத்து மக்கள் அங்கு கூடி நின்றனர். செய்தி அறிந்து அங்கு பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. “உலகத்தரமான குழாய்” என உத்தரவாதம் அளித்த அதே சப்கலெக்டர் மறுபடியும் மக்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பப்பட்டார். அவருடன் பேச முடியாது என மறுத்தோம். மாவட்ட ஆட்சியர் வந்து பேசி அதன் பின் கசிவை அடைக்கட்டும் என்றோம். மாவட்ட ஆட்சியர் கடைசி வரை வரவில்லை. அனால் கடுமையாக அடித்து எங்களை விரட்ட அவர் ஆணையிட்டார். இடையில் தடுப்புக்காக நாங்கள் வெட்டிப்போட்ட அந்த முட்புதர் நெருப்புப் பிடித்தது. இதச் சாக்காக வைத்துக்கொண்டு கடுமையக எங்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தி நாங்கள் அங்கிருந்து விரட்டப்பட்டோம். போலீஸ்காரர்கள் கடுமையாக அடித்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டவும் செய்தார்கள். ஜெயராமன் ஐயா உட்பட 10 பேர் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். வைக்கோல் போர் ஒன்றை நாங்கள் கொளுத்தியதாக முதலமைச்சர் சொல்வதெல்லாம் முழுப் பொய்.
“அந்த 10 பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படணும். அவங்க மேல ;போட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். ONGC யை இங்கிருந்து விரட்டி அடித்து காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.”
வழக்குகள்
பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1.Cr No. 126/2017 u/s 147, 506(11), 307, 3(1), 148, 294 b, 324,336, IPC 353,436 dt 01-07-2017
2.Cr No 127/2017 u/s 147,341,294 b, 353, 506(1), 505 (1) (b),r/w 3/1 PPd act dt 30-06-2017
இரண்டிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் : பேரா. ஜெயராமன், விடுதலைச்சுடர், தருமராஜன், செந்தில்குமார், முருகன், ரமேஷ், சிலம்பரசன், வெங்கட்ராமன், சந்தோஷ், சாமிநாதன்.
ONGC யினால் ஏற்படும்சுற்றுச் சூழல் கேடால் பாதிக்கப்பட்டோர்
1.ஜெயலட்சுமி (க.பெ) பழனிவேல். வயது 60. கதிராமங்லத்திற்குள் உள்ள நறுவெளியைச் சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் இரவு 10 மணி வாக்கில் கொல்லைப் பக்கம் சென்றுள்ளார். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் கழிப்பறைகள் கிடையாது. வெளியில்தான் செல்ல வேண்டும். அப்படிச் சென்று அவர் உட்கார்ந்த போது ONGC குழாய்கள் இரண்டின் இணைப்பு ஒன்று வெடித்து தீப்பற்றியது. முகத்தில் கடும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயலட்சுமி கும்பகோணத்தில் உள்ள அன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சுமார் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்த அவருக்கு 75,000 ரூ இழப்பீடு அளிக்கப்பட்டது.
2.முத்துசரண் (த.பெ) நாராயணன். வயது 8. மூன்றாம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் கூலி வேலை செய்யும் ஒருவரின் மகன். சென்ற ஜனவரியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு பல நாட்களுக்குப்பின் உடனடி உயிர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளான். இரத்தத்தில் கிருமி கலந்து இதயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இப்படி ஆனதற்குக் குடிநீரே காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்பகுதியில் உள்ள நீர் விஷமானதன் விளைவுதான் இந்தப் பாதிப்பு என அக்குடும்பத்தினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
எமது குழுவைச் சேர்ந்த சிவகுருநாதன் இவ்வாறு ONGC குழாய்க் கசிவின் விளைவாக அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள சில மரணங்கள் மற்றும் விபத்துகளைக் கடந்த சுமார் எட்டு ஆண்டுகளாகக் கவனத்தில் எடுத்து, நேரில் சென்று விசாரித்துப் பதிவுகள் செய்து வந்துள்ளார். அவரது ஆய்வில் வெளிக் கொணர்ந்துள்ள மேலும் சில உண்மைகள் வருமாறு.
- ஜூலை 30, 2011 சனி இரவு திருவாரூர் விளமல் – தியானபுரம் சாலையில் குறிஞ்சி நகருக்கு அருகில் ONGC எண்ணெய் / எரிவாயுக் குழாயில் லாரி ஏறி தீப்பற்றி எரிந்ததில் லாரி டிரைவரும் கிளீனரும் தீயில் கருகி இறந்தனர். செந்தாமரைச்செல்வி (12) என்ற சிறுமி காயமடைந்தார். அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த அந்த லாரி, அருகில் நின்றிருந்த மினி லாரி, கடை, வீடு, மரங்கள் என அவ்விடத்திலுள்ள அனைத்தும் எரிந்து சாம்பலானது. எரிவாயுக் குழாய் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் மக்கள் நடமாடும், வாகனங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் தரை மீது போடப்படும் அளவிற்கு மக்கள் பாதுகாப்பு குறித்து எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் ONGC நடந்துகொண்ட நிலை இதன் மூலம் அம்பலமானது. அதன் பின்புதான் இனி குழாய்களை எல்லா இடங்களிலும் மண்னுக்குள் புதைப்பது என்கிற நிலையை எடுத்ததாக நாங்கள் சந்தித்த அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.
4.. நவம்பர் 18, 2009 அன்று திருவாரூர் கமலாபுரம் அருகே தேவர்கண்ட நல்லூர் – உச்சிமேடு கிராமத்தின் ஆற்றங்கரைத் தோப்பில் காலைக்கடன் கழிக்கச் சென்ற கலியபெருமாள் (35) என்பவர் சிகரெட் பற்ற வைக்க, தீக்குச்சியை உரசியபோது ONGC எரிவாயுக் குழாயில் ஏற்பட்டிருந்த கசிவால் மூங்கில் காடுகள் நிறைந்த அவ்விடமே பற்றியெரிந்தது. கலியபெருமாள் தவிர அங்கு ஏற்கனவே ஒதுங்கியிருந்த குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆனந்தராஜ் (14), சேதுபதி (14) உள்ளிட்ட மூவர் பலத்த காயமடைந்து பின்னர் இவர்களில் ஆனந்தராஜ் இறந்தார்.. கலியபெருமாளும் சேதுபதியும் கடுமையான்காயங்களுடன் உயிர் தப்பினர். சேதுபதி அவரது தந்தை சேகர் ஆகியோரை சிவகுருநாதன் சந்தித்து உரையாடினார்.. சேதுபதி 9ம் வகுப்பு படிக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது. அவரை சென்னை குளோபல் மருத்துவமனையில் ONGC. நிர்வாகம் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியது. கோரமான முகத்தைச் சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி இன்னும் செய்யவில்லை. +2 க்குப் பிறகு தனியார் ஐ.டி.ஐ.யில் ஃபிட்டர் படிப்பு முடித்த அவருக்கு ஓராண்டிற்கு முன்னர் வெள்ளக்குடி ONGC யில் மெக்கானிக் வேலை தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கும் கலியபெருமாளுக்கும் இறந்த சக மாணவன் ஆனந்தராஜ் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்துதர ONGC.யை வலியுறுத்தவில்லை என்பதையும் சேதுபதியின் தந்தை பகிர்ந்துகொண்டார்.
ONGC க்கு எதிரான போராட்டங்களில் பங்குபெற்ற சமூக ஆர்வலரும் திருவாரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான ஜி.வரதராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலான பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. என்ணெய்க் கசிவால் விவாசாய நிலங்கள் பாழ்படுவது ஒருபுறம், விபத்துகளால் உயிரிழப்புகள் மறுபுறம். மாவட்ட நிர்வாகமும் ONGC யும் இரு வழிகளில் இதனைக் கையாள்கின்றன. ஒன்று போராட்டக்காரர்களை பணம் போன்ற காரணிகளைக் கொண்டு கட்டுக்குள் கொண்டுவருவது, மற்றொன்று, இவர்களைப் பிளவுபடுத்துவது. இங்குள்ள சமூக விரோத சக்திகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன” என்றார்.
“ மரணம், விபத்து, எரிவாயுக் குழாய் வெடிப்பு, கசிவு, விளைநிலம் பாழ், மூங்கில் மற்றும் மரத்தோட்டங்கள் தீயால் கருகுதல், தொடர்ந்து எரிய விடப்படும் எரிவாயுவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு, மழைக்குறைவு என ஏதோ ஒரு பாதிப்பு இங்குள்ள பல கிராமங்களில் உண்டு.” என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என்கிறார் சிவகுருநாதன்.
ONGC சார்பில் சொல்லப்பட்டவை
குத்தாலத்தில் உள்ள ONGC சேகரிப்பு நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது அங்கு ஏதோ ஒரு ‘மீட்டிங்’ நடக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றுபவராக அறியப்படுகிற நெல் ஜெயராமன் மற்றும் கதிராமங்கலம் கிராமத்தில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்யும் ஸ்ரீராம் அய்யர் ஆகியோர் அந்த ‘மீட்டிங்கிற்காக’ வந்து சேர்ந்தனர். எங்களை முதலில் சந்திக்க மறுத்த நிர்வாகம் இறுதியில் அவர்களின் ‘மீட்டிங்கிற்கு’ முன் சில நிமிடங்கள் பேசச் சம்மதித்தனர்.
ONGC யின் இப்பகுதித் தலைமையகமான காரைக்காலில் பணியாற்றும் கார்பொரேட் தொடர்பாளர் ஏ.பி.ராஜசேகர் எங்களிடன் சொன்னவற்றின் சுருக்கம்:
“ONGC என்பது ஒரு மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனம் (public sector unit). இதை ஒழித்துக் கட்டுவதில் பல்வேறு சக்திகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி இப்பகுதியில் செயல்பட்டு வந்த ONGC மீது இபோது அபாண்டமாக இப்படித் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் உண்மையான பிரச்சினை 2010 முதல் காவிரி நீர் வரத்து பெருமளவில் இல்லாமற் போனதுதான். மழையும் இல்லை. எனவே நீர்மட்டம் இங்கு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழ்இறங்குவது மட்டுமின்றி அதன் உப்புத் தனமையும் அதிகரித்து வருகிறது. ஆந்திரப் பகுதிகளில் கோதாவரி பேசினிலும் நாங்கள் பலகாலமாக இதே முறையில் எரிவாயு மற்றும் திரவ எரிபொருள் எடுத்து வருகிறோம். இங்குள்ளதை விடச் சுமார் 14 மடங்கு அதிகம் எரிபொருள் அங்கு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அங்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை புகார்கள் எழும்பவில்லை.
இப்பகுதியிலும் கூட எந்தப் புகாரும் இதுவரை எழுந்ததில்லை. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் செயல்பட்டு வரும் நெல் ஜெயராமன் மற்றும் இப்பகுதியில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வரும் ஶ்ரீராம் அய்யர் ஆகியோர் ONGC பணிகளால் எந்த பாதிப்புகளும் இல்லை என்று கூருகின்றனர்.”
இப்படிச் சொன்ன அந்த அதிகாரி இது தொடர்பாக ஒரு அறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிடப் போவதாக எங்களிடம் அதைக் காட்டினார். அதை வாசிக்கக் கேட்டபோது கையெழுத்தான பின் தருவதாகச் சொன்னார். அன்று குத்தாலம் ONGC அலுவலகத்தில் நடைபெற உள்ள ‘மீட்டிங்’ இது தொடர்பானதுதான் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். தொடர்ந்து அந்த அதிகாரி கூறியது:
“நாங்கள் பயன்படுத்துவது துளைக் கிணறு முறை பலகாலமாக எல்லா நாடுகளிலும் பயன்படுவதுதான் (conventional drilling). 1984 முதல் நாங்கள் செய்து வருவதுதான். மீத்தேன் எடுக்கும் திட்டத்தில்தான் பக்கவாட்டில் நிலத்தடியில் துளையிடப்படும். அது மரபுவழிப்பட்ட முறை அல்ல (non conventional drilling). இதில் ஆபத்துகள் நேர வாய்ப்புண்டு. ஆனால் தற்போது ONGC இதை முழுமையாகக் கைவிட்டு விட்டது. தவிரவும் செங்குத்தாக ஆழ் துளை இட நாங்கள் பயன்படுத்தும் திரவம் முற்றிலும் விஷமற்றது. எந்த ஆபத்தும் இல்லாதது. CSIR முதலான நிறுவனங்களால் எந்த ஆபத்தும் இல்லாதது என உறுதி வழங்கப்பட்டது.
‘தண்ணீர் மாசுபடுகிறது என்றால் அதற்கும் எங்கள் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவிரவும் அப்பகுதி மக்களுக்கு ‘டாய்லெட்’ முதலான வசதிகளையும் நாங்கள் செய்துதருகிறோம். அவர்கள் வெளியில் சென்று இப்படிப் பாதிப்படையத் தேவையில்லை.
“ஏதேனும் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாகச் சரி செய்து விடலாம். இந்தப் பிரச்சினையில் கூட ஜூன் 30 அன்று கசிவு ஏற்பட்ட போது அது காலை 8.30 மணிக்கு எங்களுக்குத் தெரிய வந்தது. 8.45 க்கு நாங்கள் அங்கிருந்தோம். 9 மணிக்கெல்லாம் எல்லாம் தயார் நிலையுல் இருந்தது. அன்று மக்கள் அனுமதித்து இருந்தால் அப்போதே எல்லாவற்ரையும் சரி செய்திருப்போம்.”
ஆக தங்களின் நடவடிக்கைகளால் எந்த பாதிப்பும் இல்லை என்ற அந்த அதிகாரிக்கு நாங்கள் 2011 ல் விளமலில் ஏற்பட்ட விபத்தில் இருவர் இறந்தது தெரிந்திருக்கவில்லை. அருகில் இருந்த இன்னொரு அதிகாரி அதை ஒத்துக் கொண்டார். தலைமைப் பொறியாளர் ஜோசப், “இங்குள்ள மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் நெருப்புப் பொறிகள் தெறிப்பதை எல்லாமும் கூட எங்களால் ஏற்பட்டது எனக் கூறுகின்றார்கள்” எனக் கூறி அப்படி ஏதோ ஒரு சம்பவத்தையும் விளக்கினார்.
எமது பார்வைகள்
1.இப்பகுதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரம் அழ்ந்து வருவதற்கு ONGC இப்பகுதியில் செய்து வரும் பணிகளே காரணம் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். கதிராமங்கலத்தைச் சேர்ந்த பட்டு நெசவாளி வைத்தீஸ்வரன் – கவிதா ஆகியோரின் மகன் வருண் குமார் (17) கடந்த சில ஆண்டுகளாக சதைச் சிதைவு நோய்க்கு ஆட்பட்டுள்ளார். இது மரபணு தொடர்பான வியாயதியாயினும் தங்கள் மரபில் யாருக்கும் இதுவரை இப்படியான நோய்கள் வந்ததில்லை எனச் சொல்லும் பெற்றோர், தங்கள் மகனின் இந்த நோய்க்கு ONGC செயல்பாடுகளே காரணம் என உறுதியாக நம்புகின்றனர்.
- இப்படியான ஒரு நிலையில் அரசு தலையிட்டு உண்மை நிலையை வெளிக் கொணரவும், உரிய பாதுகாப்புகளை மேற்கோள்ளவும், பாதுகாப்புகள் சாத்தியமே இல்லை எனும்பட்சத்தில் திட்டத்தை விரிவுபடுத்துவதை நிறுத்துவதும், தேவையானால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவற்ரையும் நிறுத்தி வைப்பதையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளையும், அச்சங்களையும் முன்வைத்துப் போராடும்போது காவல்துறையை அனுப்பித் தடியடி நடத்துவது, கைதுகள் செய்வது என்பது மட்டுமே தனது பணி என நினைத்துச் செயல்படுவது கண்டிக்கத் தக்கது.
- ONGC ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்களிலேயே இரண்டாவது பெரிய ஒன்று. 68 சத ‘ஈக்விடி ஸ்டேக்’ உள்ள ஒரு லாபம் ஈட்டக்கூடிய துறை. 1958 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் 26 பகுதிகளில் தன் பணிகளைச் செய்து வருகிறது. 11,000 கி.மீ நீளமுள்ள வாயுக் குழாய்களை அது பயன்படுத்தி எரிபொருளைக் கொண்டு செல்கிறது. இப்படியான ஒரு நிறுவனம் மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளாமையும், மக்கள் பிரச்சினைகளில் அக்கறையற்றும் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்று. மக்கள் எதிர்ப்பால் இப்போது மீதேன் எடுப்பது கைவிடப்பட்ட பின்னர் அப்படி எடுப்பது ஆபத்தானது என இன்று ஏற்றுக்கொள்ளும் ONGC அதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது இதை வெளிப்படையாகக் கூறவில்லை. பத்திரிகைச் செய்திகளை விரிவாக ஆய்வு செய்தோமானால் மிகப் பெரிய விரிவாக்கத் திட்டங்களுடன் அது செயல்படுவதும் தேவையானால் சுற்றுச் சூழல் கலந்தாய்வுகளுக்கு விலக்களிக்க அது கோருவதும் விளங்குகிறது. ஆனால் அது குறித்து பகுதி சார்ந்த மக்களிடம் அது உரையாடுவதோ கருத்துக்கள் கேட்பதோ இல்லை. விபத்துக்கள் ஏற்பட்டு மூவர் இறந்தது வரை இந்த ஆபத்தான எரி பொருள் குழாய்களை குடியிருப்புப் பகுதிகள் வழியாகத் தரை மீது கிடத்தப்பட்டிருந்ததி இருந்ததை என்னவென்று புரிந்துகொள்வது. இன்று ONGC செயல்பாடுகளை ஆதரித்து மக்கள் மத்தியில் பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரிக்கு அந்தச் சம்பவமே தெரிந்திருக்கவில்லை என்பது ONGC யின் அலட்சியப் போக்கை விளக்கும். இப்படியான விபத்துக்களில் மக்கள் உயிர்கள் பலியாக்கப்பட்ட பின்தான் உரிய பாதுகாப்புகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படும் என்றால் இதன் பொருள் என்ன? மக்கள்தான் ONGC யின் சோதனை எலிகளா?
- சுற்றுச் சூழல் ஆய்வு, அது தொடர்பான விதிமுறை கடைபிடிப்பு ஆகியவற்றை மீறுவதில் மிகவும் இகழ் வாய்ந்த வரலாற்றை உடையது ONGC. உரிய விதிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி அது கவலைப்படுவதே இல்லை. விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனச் சொல்லி காவிரிப் படுகையில் செயல்படும் இதன் எரிவாயுத் தளங்களில் 23 ஐ அனுமதிப்பட்டியலிலிருந்து மத்திய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் (Union Ministry of Environment, Forests and Climate Change) சென்ற மே 17, 2017ல் நீக்கியது குறிப்பிடத் தக்கது. இந்தச் செய்தியை மேலோட்டமாக வாசிக்கும்போது சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் ONGC பொறுப்பில்லாமல் நடந்துகொண்டாலும், மத்திய அரசு அக்கறையுடனும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது என்பது போலவும் தோன்றும். நுணுக்கமாகக் கவனித்தால்தான் இரண்டுமே மாநில மக்களைப்பற்றி இம்மியும் அக்கறையற்றுச் செயல்படுவது விளங்கும்.
இன்னொரு செய்தியைக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும். சுற்றுச் சூழலைப் பாதிக்கவல்ல எந்த ஒரு திட்டமானாலும் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்படும் மக்களைக் கூட்டி பொதுக் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்பது விதி. மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தக் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பரிந்துரை செய்வது அவசியம். ஒப்பீட்டளவில் மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசு மக்களுக்கு நெருக்கமாக இருப்பதால் மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அது தயங்கும். சென்ற 2015ல் காவிரிப் படுகையில் மேலும் 35 சோதனைக் கிணறுகளைத் தோண்ட ONGC திட்டமிட்டது. இவற்றில் 14 கடலூர் மாவட்டத்திலும் 9 நாகை மாவட்டத்திலும், 6 அரியலூரிலும், 5 தஞ்சாவூரிலும் அமைந்தன. இவற்றில் கடலூர் தவிர பிற மாவட்டங்களில் கருத்துத்துக் கணிப்புகள் நடந்தன. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துறை வழங்கத் தயங்கியது. சில காலம் பொறுத்திருந்த ONGC சென்ற 2015 மே 19 அன்று மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியது. பொதுக் கருத்துக் கணிப்புக் கேட்பது கால விரயத்தை ஏற்படுத்துகிறது எனவும், இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதில் தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகிறது எனவும் ONGC அதனிடம் புகார் கூறியது. அதை அப்படியே ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு உரிய அனுமதியை அளிக்குமாறு சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தது. அதை ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்ற ஜூன் 9, 2015 அன்று அந்த 35 திட்டங்களுக்கும் மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அனுமதி வழங்கியது.
சென்ற பிப் 15 (2017) அன்று மோடி தலைமையில் கூடிய ‘பொருளாதார விடயங்களுக்கான அமைச்சரவைக் குழு’ (Cabinet Committee on Economic Affairs) 31 பகுதிகளில் இயற்கை வாயு மற்றும் எண்ணை முதலான ஹைட்ரோ கார்பன் வளங்களைத் தோண்டி எடுப்பதற்கான அனுமதியை அளித்தது. 2016 ல் உருவாக்கப்பட்ட மோடி அரசின் “கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள்” (Discovered Small Fields) திட்டத்தின் கீழ் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.
சென்ற ஜூன் 28 (2017) ல் அந்த செய்தியின்படி காவிரி டெல்டா பகுதியில் மேலும் 110 சோதனைக் கிணறுகளைத் தோண்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் ONGC அனுமதி கோரியுள்ளது. ஒவ்வொரு கிணறு தோண்டவும் 2 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் எனவும் ‘நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்’ மூலம் உரிய நிலங்கள் குத்தகை அடிப்படையில் கைப்பற்றப்படும் எனவும், உற்பத்தி தொடங்கியவுடன் அந்த நிலங்கள் அவரவர் வசம் திருப்பித் தரப்படும் எனவும் கூறப்படுகிறது.
தவிரவும் இப்போது மத்திய அரசு எல்லாவிதமான ஹைட்ரோ கார்பன்களை எடுக்கவும் ஒரே உரிமத்தை (sigle license) வழங்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே இப்படி ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கத் தொடங்கியுள்ளன. மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே இத்திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன என மாநில அமைச்சர் கருப்பண்ணன் இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. .
1991 லெயே காவேரிப் படுகையிலிருந்து பெரிய அளவில் ஹைட்ரோ கார்பன் வளங்களை உறிஞ்சி எடுப்பதென ONGC திட்டமிட்டது. அப்போது அதனிடம் ஒன்பது “ரிக்” களும் 12 கிணறுகளுமே இருந்தன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 10 மடங்கு உற்பத்தியை அதிகரிப்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது. மக்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அந்தத் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
- 2010 க்குப் பின் ஏற்பட்ட வறட்சியின் விளைவாகத்தான் எல்லாப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன., அதற்கு முன் மக்களுக்கும் ONGC க்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போலச் சொல்வதையும் ஏற்க இயலாது. மீத்தேன் எதிர்ப்பிற்கு முன்பே பல இடங்களில் ONGC .யை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்துள்ளன. தொடக்கத்தில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆகியன டேங்கரில் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது தொடங்கி அவற்றை மறித்து போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது விளைநிலங்கள் வழியே குழாய் பதித்து எடுத்துச் செல்லும்போதும் உடைப்பு, விபத்து ஏற்படும் காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. .அடியக்கமங்கலம் பகுதியில் விளைநிலங்களில் பெட்ரோலியக் கசிவு மற்றும் எண்ணெய்ப் படலத்தால் பெருமளவு நிலங்கள் பாதிப்படைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கும் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இப்போது டேங்கர்களில் ஆயில் எடுத்துச் செல்லப்படுவதில்லை எனினும் இரவு நேரங்களில் ரகசியமாக இயக்கப்படும் டேங்கர்கள் வழியே எண்ணைய்க் கழிவுகள் வெள்ளக்குடி, கமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த உண்மைகலை விளக்கி மக்களின் அச்சத்தைப் போக்க இதுவரை ONGC முயற்சித்ததில்லை. ‘வாட்ஸ் அப்பில்’ பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்றார் எங்களிடம் பேசிய அதிகாரி. அப்படிப் பொறுப்பில்லாமல் சில வாட்ஸ் அப் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பதில் உண்மை இருக்கலாம். அது ONGC தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவு என்பதையும், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அதரற்கு உள்ளது என்பதையும் அது ஏற்கவில்லை.இவ்வளவு காலங்களையும் விட இப்போது திடீரென போராட்டங்கள் மேலுக்கு வருகின்றன என்றால் இப்போது அதிக அளவில் போராட்டங்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருகின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்திற்குப் பிறகு மக்களின் போர்க்குணமும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளன என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
- வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களிடம் நேரடியாக்கப் பேசி அவர்களின் ஐயங்களைப் போக்குவது என்பதற்குப் பதிலாக ஒரு சிலரைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கையூட்டு அளித்துத் தமக்கு ஆதரவாக முன் நிறுத்தும் வேலையை ONGC செய்வதாக ஒரு கருத்து மிகப் பரவலாக நிலவுவதை எங்களால் அறிய முடிந்தது.
- ஜூன் 30 சம்பவங்களைப் பொறுத்த மட்டில் அன்று காலை முதல் மக்கள் அங்கு கூடி நின்று மாவட்ட ஆட்சியர் அங்கு நேரடியாக வர வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆபத்தான நிலையில் எரிவாயு கசிந்து கொண்டுள்ள சூழலில் தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் இறுதிவரை அங்கு வந்து மக்களைச் சந்திக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சப் கலெக்டர் ஏற்கனவே கொடுத்த உறுதி மொழிகள் பொய்த்துப் போனபின் மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதியை மட்டுமே நம்ப முடியும் என்கிற மக்களின் கருத்திற்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பளித்திருக்க வேண்டும். அன்று மட்டும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வந்திருந்தால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்திருக்கும். தேவை இல்லாமல் தடி அடி நடத்தி, பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, இன்று அம்மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதை எல்லாம் தவிர்த்திருக்கும் வாய்ப்பை மாவட்ட நிர்வாகமும் ஆட்சியரும் தவற விட்டதும், அன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட தடியடியும் கண்டிக்கத் தக்க ஒன்று.
எமது பரிந்துரைகள்
- சிறைவைக்கப்பட்டுள்ள பத்து பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எந்த நிபந்தனைகளும் இன்றி நீக்கப்பட வேண்டும்.
- காவிரிப் படுகையில் எரிபொருள் தோண்டிவரும் ONGC யின் செயல்பாடுகளின் ஊடாகக் கடந்த காலத்தில் நடைபெற்ற விபத்துகள் மட்டுமின்றி மக்களின் நியாயமான ஐயங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு உரிய விசாரணை செய்ய பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையத்தில் உரிய ஆலோசனைகள் வழங்க துறை சார்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனித உரிமைச் செயலாளிகள் ஆகியோர் இணைக்கப்பட வேண்டும். தற்போது ஜூன் 30 அன்று நடைபெற்ற எரிவாயு மற்றும் திரவக் கசிவு தொடர்பாக ONGC அளவில் ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்க இயலாது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல அவர்களின் முடிவு நம்பகத் தன்மை உடையதல்ல.
- தற்போது கதிராமங்கலம் பகுதியில் ONGC யின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முழுமையாக இந்த ஆய்வுகள் எல்லாம் செய்யப்பட்டு மக்களின் ஐயங்கள் எல்லாம் தெளிவாக்கப்பட்டு அது ஏற்கப்படும்வரை ONGC யின் பணிகள் இப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.
- ONGC இப்பகுதியில் செய்துவருகிற, செய்யத் திட்டமிட்டுள்ள பணிகள், விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை குறித்து பல செய்திகள் பத்திரிக்கைகளில் அவ்வப்போது வெளி வருகின்றன. பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் திட்டமிடப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது. இவை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை ஒன்றை உடனடியாக ONGC வெளியிட வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக அது பலமுறை மத்திய – மாநில அரசு நிறுவனங்களாலும். இது குறித்த ஆர்வலர்களாலும் அது கண்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் அந்த வெள்ளை அறிக்கை பேச வேண்டும்.
- எதிர்காலச் செயல்பாடுகள் அனைத்திலும் ஊர் மக்கள் ஏற்றூக் கொள்ளக் கூடிய உள்ளூர்த் தலைவர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ONGC வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.
- அமைதியான முறையில், ஆனால் அதே நேரத்தில் உறுதியாகப் போராடி வரும் கதிராமங்கலம் மக்களை இக்குழு பாராட்டுகிறது.
- போராடுபவர்கள் வாட்ஸ் அப் முதலான நவீன சாதனங்களைப் பயன்படுத்தும்போது அதன் உண்மைத் தன்மைக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேறெங்கோ நடந்த ஒரு விபத்தைக் கதிராமங்கலத்தில் நடந்ததாக ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டதை எங்களிடம் பேசிய அதிகாரி சுட்டிக் காட்டினார். இது போன்ற செய்திப்பரப்பல்களில் நம்பகத் தன்மை மிக மிக முக்கியம் என்பதையும் நாங்கள் நினைவூட்டுகிறோம்.
தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை -20, செல்: 9444120582