(‘கலகம்’ இதழுக்காக குரு மகிழ்கோ செய்த நேர்காணல்)
கலகம்: தமிழகத்தில் மிக முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளர்களில் நிங்களும் ஒருவர் கடந்து வந்த பாதை குறித்து கலகம் வாசகர்களுக்காக ?
மனித உரிமைச் செயல்பாடுகள் என்பன என் நடவடிக்கைகளில் ஒரு பகுதி மட்டும்தான். எழுதுவதுதான் என் பிரதானப் பணி. பத்திரிக்கைகளில் எழுதுகிறேன். இலங்கையில் இரு பத்திரிக்கைகளில் என் பத்திகள் வெளி வருகின்றன. மார்க்சீயம், பின் நவீனத்துவம், தேசியம், இந்துத்துவம்,தலித்தியம் பெரியாரியம், காந்தியம், இலக்கிய விமர்னம் சார்ந்து சுமார் 60 குறுநூற்களும், சிறு வெளியீடுகளும் வந்துள்ளன. சமீபத்தில் அதிகம் இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் எழுதுவதோடு சரி. நூலாகத் தொகுத்து வெளியிடுவதில் ஆர்வம் குன்றியுள்ளது. பெரிய நூல் வெளியீட்டாளர்கள் என் நூற்களைத் தொகுப்புகளாக வெளியிட ஆர்வம் தெரிவித்தும் பல காரணங்களால் மனம் வரவில்லை. இன்று தமிழகத்தில் முக்கியமான நடுத்தர மற்றும் சிறு வெளியீட்டாளர்கள் பலரும் என் நூற்களை வெளியிட்டே தமிழ் வெளியீட்டுலகில் அறிமுகமானவர்கள். விடியல் பதிப்பகம் உட்பட. எனினும் பல்வேறு கசப்பான அனுபவங்களின் விளைவாக இபோது நூல் வெளியீட்டிலேயே பெரிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.. பத்திரிக்கைகளில் எழுதுவது, முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிட்டு அடுத்த்அ கணமே எதிர்வினைகளை எதிர்கொள்வது என்கிற அளவில் என் ஆர்வம் சுருங்கி விட்டது. பேசாமல் என் நூற்கள் எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு பெரிய நிறுவனத்திடம் தந்துவிடலாமா என்று கூட சில நேரங்களில் யோசிக்கிறேன்.
மனித உரிமைச் செயல்பாடுகள் பற்றிக் கேட்டீர்கள்.. மனித உரிமைப் பணிகள் என்பன எப்போதும் ஒரு ‘பாபுலரான’ செயல்பாடு அல்ல. நிறையப் பேர் இதில் ஆர்வமாக முன்கை எடுக்க வரமாட்டார்கள். காவல்துறை, அரசியல்வாதிகள், ஆதிக்க சாதியினர், தனியார் நிர்வாகங்கள், மதவாத அமைப்புகள் எனப் பல மனித உரிமைகளை மீறும் சக்திகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய பணி இது. இன்னொரு பக்கம் இது கொஞ்சம் செலவைக் கோரும் பணியும் கூட. ஒரு உண்மை அறியும் குழுவை ‘ஆர்கனைஸ்’ செய்து ஒரு ஊருக்குச் சென்று, தங்கி, ஆய்வு செய்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்துவது என்பது நிறையச் செலவை ஏற்படுத்துவது. நாங்கள் வெளியிலிருந்து எந்த நிதி உதவியையும் பெறுவதில்லை. நாங்களே பகிர்ந்துகொள்வது, நண்பர்களிடமிருந்து உதவி பெறுவது என்கிற வகையில்தான் செயல்படுகிறோம். வாய்ப்பிருக்கும்போது நண்பர்கள் வீடுகளில் தங்கி, சாப்பிட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் சில அமைப்புகள் நடத்தும் உண்மை அறியும் குழுக்களில் பங்கு பெறுவது உண்டு.. அப்போது அவர்கள் செலவு செய்வார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகத்தான் போகிறோம்; அவர்களுக்குச் சார்பாக இருக்கக்கூடிய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்கிறோம். ஆனால் எக்காலத்திலும் நாங்கள் யார் சார்பாகவும் உண்மைகளை கூட்டியோ குறைத்தோ சொல்வதில்லை. நூறு சதம் உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களையே சொல்கிறோம். இரண்டு நாள் ஆய்வில் சில நேரங்களில் முழு உண்மைகளையும் எங்களால் கண்டுபிடித்து விட இயலாது. அப்படியான நேரங்களில் சந்தேகத்திற்குரிய அமசங்களில் இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனாச் சுட்டிக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக நிறையச் சொல்லலாம். சமீபத்தில் இராமநாதபுரத்தில் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பினர் அனுமதி பெற்று நடத்திய ஒரு ஊர்வலத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல் துறையினர் கடுமையாக ஒரு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் மிகவும் அநீதியானது என்பது ஒரு பக்கம். இது குறித்து போலீஸ் எப்படி இரட்டை நாக்குடன் செயல்பட்டது என்பதை விரிவாகப் பதிவு செய்தோம். அதே நேரத்தில் ஒரு குறிப்பீட்ட கட்டிடத்திலிருந்து கலவரத்தைத் தூண்டும் சதி நோக்குடன் ஊர்வலத்தின் மீதும் போலீசின் மீதும் கற்கள் எறியப்பட்டன என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கூறினர். போலீஸ் அதை மறுத்தது. எங்களால் எது உண்மை என உறுதி செய்ய இயலவில்லை. முஸ்லிம்கள் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது மிகவும் ஆபத்தான கவலைக்குரிய ஒன்று. இக்குற்றச்சாட்டு உண்மையா என சீரியசாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதோடு நாங்கள் நிறுத்திக் கொண்டோம்.
இன்னொரு முறை விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இறையூரில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கிறிதவ தலித்களுக்கும் இடையில் பிரச்சினை. வன்னியர்கள் கடைபிடித்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தலித்கள் போராடியபோது வன்னியர்கள் தலித் மக்களின் வீடுகளைத் தாக்கிச் சூறையாடினர். தாக்குதல் நடந்தபோதெல்லாம் வராத போலீஸ் எல்லாம் முடிந்தபின் வந்தனர். எஸ்.பி. அமல்ராஜ் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கியை எடுத்துச் சுட்டதில் இரண்டு அப்பாவி வன்னியர்கள் செத்துப் போனார்கள்.. எங்கள் அறிக்கையில் வன்னியர்களின் சாதிக் கொடுமை, அன்று நடந்த சூறையாடல், பாதிரிமார்கள் சாதிக் கொடுமைக்குத் துணைபோதல் எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டு, அமல்ராஜின் துப்பாக்கிச் சூட்டையும் கண்டித்திருந்தோம். கொல்லபட்ட இருவருக்கும் உரிய இழப்பீடு தர வேண்டும் எனவும் வற்புறுத்தி இருந்தோம்.. பிரஸ் மீட்டில் ஒரு தொண்டு நிறுவனத்தினர் உள்ளே நுழைந்து துபாக்கிச் சூட்டை நாங்கள் கண்டித்ததை எதிர்த்துக் கலாட்டா செய்தார்கள். நாங்கள் அவர்களை வெளியேற்றி விட்டு கூட்டத்தை நடத்தினோம்.
இதுபோன்ற விடயங்களில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உள்ள உண்மைகளே அவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் போதுமானது. உண்மைகள் நமக்குச் சாதகமாக உள்ளன. தேவையற்ற பொய்கள் நமது பக்க நியாயங்களைப் பலவீனப்படுத்தத்தான் உதவும்.. இப்போது உருவாகியுள்ள் ‘இன்வெஸ்டிகேடிவ் ஜர்னாலிசம். காட்சி ஊடகப் போட்டிகள், முக நூல் ஆக்டிவிசம் முதலியன பலவகைகளில் அநீதிகளை வெளிக்கொணர்வதில் பெரிய பங்காற்றுகின்றன.. எனினும் சில நேரம் இவர்கள் காட்டும் அதீத உற்சாகம், பாதிக்கப்பட்டவர்களுடன் தாங்கள் நிற்பதாகக் காட்டிக் கொள்வதில் வெளிப்படுத்தும் அரை வேக்காட்டு அவசரத்தனம் முதலியன bad journalism என்கிற அளவிற்குப் போய்விடுகின்றன. தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலையா, கொலையா என்கிற பிரச்சினையில் அதைக் “கொலைதான்” என “நிரூபிக்க” சில ஜர்னலிஸ்டுகள் உண்மைகளை மறைத்தும், திரித்தும், மிகைப்படுத்தியும் செய்த அட்டகாசங்கள் இதற்கொரு எடுத்துக்காட்டு. அது தற்கொலை என்றாலுங்கூட அதற்கு ஆதிக்க சாதியினரின் சாதி ஒதுக்க அரசியலே காரணம் எனக் கொண்டு போயிருந்தால் இப்போதை விட அதிக விளைவுகளை உருவாக்கியிருக்கலாம்..போலீஸ்காரர்கள் சொல்வதெல்லாமே பொய் என நாம் கருத வேண்டியதில்லை. சமீபத்தில் காரைக்கால் பாலியல் வன்முறைப் பிரச்சினையில் வெளிபடுத்தப்பட்ட bad journalism ஒன்றை இங்கே நான் விளக்கமாகச் சொல்ல விரும்ப்வில்லை. அது அந்த இளம் பத்திரிகையாளரைப் பாதிக்கும் என்பதால்.
நாங்கள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுபவர்கள். இவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையை உண்மை அறியும் குழுக்கள் பெறுவது அவசியம்.
கலகம்: நிறப்பிரிகை காலம் கொண்டாடப்பட்டக் காலம் என்று தோழர் தமிழ்நேயன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி) அவர்களின் பேச்சில் பலமுறை கேட்டதுண்டு அந்த காலம் பற்றி சொல்லுங்கள் ?
நீங்கள் அடுத்த தலைமுறையினர் என்பது உங்கள் கேள்வியிலிருந்தே தெரிகிறது. நிறப்பிரிகைக் காலம் என்பது சோவியத்தின் சிதைவு, அம்பேத்கர் நூற்றாண்டு, ஈழப் போராட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றை ஒட்டிய காலம். இதுகாறுமான பல நம்பிக்கைகள் சிதைந்திருந்தன. பேரரசியலைத் தாண்டி நுண் அரசியல், அடையாள அரசியல், தலித்தியம் முதலியன மேலெழுந்த காலம் அது. மிக விரிவான விவாதங்கள், புதிய கோட்பாட்டு அறிமுகங்கள் என்பனவற்றிற்கு இடமிருந்த காலம் அது. கூட்டு விவாதம் என ஒரு பகுதி நிறப்பிரிகையில் உண்டு. மாற்றுக் கருத்துடையவர்களும் சந்தித்து ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உரையாடுவோம். .உடன்பட்ட கருத்துக்களையும், இன்னும் விவாதிக்க வேண்டியவற்றையும் தொகுத்து வெளியிடுவோம். தேதி, நாள் குறிப்பிட்டுப் பல இயக்கத்தவர்களும் கூடிப் பேசுவோம். சிறு பத்திரிகைகளும், சிறு இயக்கங்களும் இணைந்து புலம் பெயர்ந்த தமிழர் மாநாடொன்றையும் அன்று நடத்த முடிந்தது. இன்று அதெல்லாம் சாத்தியமில்லாமல் போய்விட்டது. எபோதும் முதல் தலைமுறையினரின் அறிவுச் சேகரத்தில் நின்றுகொண்டு அடுத்த தலைமுறையினர் அவற்றை ஒட்டியும், வெட்டியும்,மறுத்தும், விலகியும் முன்னேற வேண்டும். இங்கு அது நிகழாமல் போவிட்டது, இன்று எந்த விவாதத்திற்கும் சாத்தியமில்லை; மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. ஈழப் போராட்டத்தின் முதற்கட்டத்தில் தேசியப் பிரச்சினை குறித்தும் ஈழப் பிரச்சினை குறித்தும் எத்தனை ஆழமான விவாதங்கள் நடந்தன.. எவ்வளவு நூற்கள் வந்தன.. இன்று விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி குறித்து காத்திரமான ஆய்வு ஏதாவது உண்டா.? மாறியுள்ள உலகில் இந்தப் பிரச்சினைகளை எப்படி மேலே கொண்டு செல்வது என ஏதாவது ஆய்வுண்டா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், திரும்பி வருவார் என்பன போன்ற அபத்தக் கருத்துக்களுக்கு மறு பேச்சுண்டா? ஒன்றைச் சொல்ல வேண்டும். நிறப்பிரிகை என்பது அன்றைய ஆசிரியர் குழுவிலிருந்தவர்களின் சாதனை மட்டுமல்ல. அது அந்தக் காலத்தின் சாதனை. அதில் பலரும் பங்கு பெற்றனர்.
கலகம்: தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதி மோதல் நடக்கிறது இது புரட்சிகர இயக்கங்களின் தோல்வி என்று எடுத்துக்கொள்ளலாமா ?
ஏன் அந்தப் பழியைப் புரட்சிகர இயக்கங்களின் மீது மட்டும் போடுகிறீர்கள். இங்கே இடதுசாரி இயக்கங்கள் இருக்கின்றன; உங்களைப் போன்ற தமிழ்த் தேசிய இயக்கத்தவர்கள், தலித் இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் எல்லாந்தான் இங்கிருந்தன, இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இதில் பொறுப்பில்லையா? இப்போதெல்லாம் சாதி மோதல், தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கெல்லாம் திராவிட இயக்கம்தான் காரணம் எனக் கேட்பதுதானே ஃபேஷன். ஏதோ மகாராஷ்ட்ரா, உ.பி இங்கெல்லாம் சாதி மோதல்களே இல்லை என்பது போல. நல்லவேளை நீங்கள் அப்படிக் கேட்டுக் கடுப்பேத்தவில்லை. நன்றி.
கலகம்: இந்திய துனை கண்டத்தில் தேசிய விடுதலை போராட்டங்களின் இன்றைய நிலை ?
தேசிய விடுதலை இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திற்குள் பல தேசிய இனங்கள் இருந்தபோதும் அவை ஒருபடித்தானதாக, ஒரே புவியியல் எல்லைக்குள் செறிந்திருக்கவில்லை. அஸ்ஸாமுக்குள் போடோக்கள், போடோக்களுக்குள் ஆங்காங்கு முஸ்லிம்கள், ஆந்திராவுக்குள் தெலங்கானக்காரர்கள், மணிப்பூரிகளுக்கும் அகண்ட நாகா கோரிக்கைக்கும் உள்ள முரண்கள் இப்படி. இந்த முரண்களின் ஊடாக இந்திய அரசு தனது ஒடுக்குமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தி வருகிறது. காங்கிரசுக்கும் பா.ஜகவிற்கும் இதில் வேறுபாடு இல்லை. சர்வதேச உடன்பாடும் ஒத்துழைப்பும் இந்த ஒடுக்குமுறைக்கு உண்டு. மணிப்பூரிலும், அஸ்ஸாமிலும் இத்தகைய உள்முரண்பாடுகளின் ஊடாகத்தான் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்போது தேசிய இன முழக்கங்களைக் காட்டிலும் பிராந்திய, தனி மாநில, சாதி ரீதியான கோரிக்கைகள் மேலுக்கு வருகின்றன. மாயாவதி உ.பியை நாலு துண்டுகளாக்க வேண்டும் என்கிறாரே.
கலகம்: தேச விடுதலை முன்வைக்கும் தமிழ் தேசிய இயக்கங்கள் நிலை குறித்து உங்கள் கருத்து ?
எல்லாத் தமிழ் தேசிய இயக்கங்களையும் ஒரே மாதிரி மதிப்பிடமுடியாது. தமிழ்த் தேச விடுதலை என்பதற்கு அப்பால் பிற அம்சங்களில் மகா பிற்போக்குத்தனமான பாசிசக் கொள்கை உடையனவாகத்தான் பெரும்பாலான இயக்கங்கள் உள்ளன. ஒரு நூற்றாண்டுகால முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் பின் நோக்கி உருட்டக் கூடியவையாக அவை உள்ளன. வைகோ எல்லாக் கட்டங்களிலும் மோடி மற்றும் பா.ஜ.க மற்றும் அவர்கள் இயற்றிய பொடா சட்டம் முதலியவற்றின் ஆதரவாளராகவே உள்ளார். அவரைப்போன்ற ஒரு பச்சை ஏமாற்றுவாதியை யாரும் பார்க்க இயலாது. நெடுமாறன் ஒருபக்கம் ஈழ ஆதரவு என்கிற பெயரில் இந்துத்துவவாதிகளையும், நடராசன் போன்ற சாதி வெறி சக்திகளையும் மேடையேற்றி மகிழ்கிறார். மணியரசன் கொஞ்சமும் வெட்கமில்லாமல் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்கிறார். ராஜராஜனின் பார்ப்பன ஆதரவையும் , அவன் உருவாக்கிய தேவதாசி முறையையும் பொற்கால அடையாளங்கள் என்க்கிறார். பெரியாரை இவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டுகின்றனர். பார்ப்பன சேவகத்தை இவர்கள் வெட்கமற்றுச் செய்கின்றனர். ஈழத்திலிருந்து வேளாங்கன்னி கோவிலுக்கு வந்த தமிழர்களையும், பிழைக்கவந்து தமிழ் முதலாளிகளால் சுரண்டப்படுகிற வட மாநிலத் தொழிலாளிகளையும் இவர்கள் எதிரிகளாகக் கட்டமைக்கின்றனர். அவர்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர், சிவசேனாவை ரோல்மாடல் எனச் சொல்லி அரசியல் பண்ணுகிறது சீமானின் இயக்கம். தமிழ்ச் சாதிகளின் கூட்டமைப்பு எனச் சொல்லி சாதி முறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர் குணா வழிக் கூட்டத்தினர். தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான இடைவெளி மயிரிழைதான் என்பார்கள்.. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்தான் இந்த இயக்கனகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
கலகம்: ஏழு தமிழர் விடுதலை பற்றி ?
இதிலென்ன பிரச்சினை.மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆயுள் தண்டனை என்பது ஏழாண்டு காலம் எனக் குறைக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்றம் இப்போது இதற்குச் சாதகமாக உள்ளது. ஜெயலலிதா இதை அரசியலாக்காமல் முரைப்படி காயை நகர்த்தியிருக்கலாம். எதிர் வழக்காடுவதன் மூலம் காங்கிரஸ் தன்னை மேலும் தோலுரித்துக் கொண்டுள்ளது. ஆனால் ஒன்றை நாம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகச் சிறைகளில் இப்படி நீண்ட காலமாக அடைபட்டிருப்பவர்கள் இந்த ஏழு தமிழர்கள் மட்டுமல்ல. இன்னும் பல தமிழர்களும் உள்ளனர். 1500 கைதிகளைக் கருணாநிதி விடுதலை செய்தபோது முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. சொன்ன காரணம், அவர்கள் வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அது மத்திய அரசுச் சட்டம் என்பது.. இன்று அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு ஆணையிட்டது. அதை ந்நாம் மனப்பூர்வமாக வரவேற்கும் அதேநேரத்தில் இந்தப் பலன்கள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூற வேண்டும்.
கலகம்: மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறதாக நீங்கள் கருதுவதாக அறிய முடிகிறது. எப்படி ?
சார்பாக என்றில்லை. இதை ஈழப்பிரச்சினையுடன் தொடர்புடைய ஒன்றாகத்தான் அவர்கள் முன்வைத்தனர். இதை அவர்கள் அரசியல்தான் பண்னினார்களே ஒழிய மரணதண்டனை என்பது அற அடிப்படையிலேயே ஒழிக்கப்பட வேண்டும் என அவர்கள் முன்வைக்கவில்லை. அதனால்தான் அஃப்சல்குரு தூக்கிலிடப்பட்டபோதெல்லாம் இங்கு பெரிய எதிர்வினைகள் இல்லை.. “ தண்டனையை யார் நிறைவேற்றினாலும் அதை எதிர்க்க வேண்டும்: யாருக்கு நிறைவேற்றப்பட்டாலும் அதை எதிர்க்க வேண்டும்”. இதை. அவர்கள் ஏற்பார்களா?
கலகம்: இந்த காலகட்டத்தில் பெண்களின் அரசியல் பார்வை அல்லது பங்கு குறித்து ?
இந்தக் காலத்தில் மட்டுமென்ன எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அரசியலில் முக்கிய பங்கிருக்க வேண்டும். பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சாதனை புரியக்கூடிய நிலையில் உள்ளனர். பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு வேறெப்போதையும் விட அதிகமாகியுள்ளது. எனினும் இவை போதாது. தமிழகத்தில் பெண்கள் இயக்கம் ஏதும் வலுவாக இல்லை. இல்லை என்றே சொல்லலாம். அதேபோல நிறப்பிரிகை காலத்தில் நடந்ததுபோல பெரிய அளவில் பெண்ணிய விவாதங்களும் இப்போது நடப்பதில்லை.
கலகம்: ஈழத் தமிழர் இனப்படுகொலை பிற நாடுகள் அங்கம் வகித்ததின் நோக்கம் என்ன ?
செப்டம்பர் 11க்குப் பிறகு உலகம் மாறிவிட்டது என புஷ் சொன்னது நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு உண்மை இருந்தது. “பயங்கரவாதம்” என ஏதும் வ்ரையறுக்கப்பட்டால், பின் அதை ஒடுக்குவதில் ஒரு ஒப்புதல் உலக அளவில் ஏற்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடினாலும் அதற்குப்பின்தான் 40க்கும் மேற்பட்ட நாடுகள் அதைத் தடை செய்தன. கடைசி நேரத்தில் புலிகளை ஒழிக்க இந்தியா மட்டுமா முன்நின்றது / அமெரிக்காவும் பிரிட்டனும் கூடத்தான் முன்நின்றன. அவ்வளவு ஏன், இத்தனைக்குப் பின்னும் இன்று ராஜபக்ஷேவின் படைகளுக்கு இந்திய அரசு மட்டுமா பயிற்சி அளிக்கிரது. இன்றும் அமெரிக்கப் படைகளுந்தான் பயிற்சி அளிக்கின்றன..
கலகம்: தமிழகத்தில் எழுகின்ற எல்லா அரசியல் போராட்டங்களும் விரைவில் தேங்கி போகிறதே என்ன கரணம் ?
போராட்டங்களுக்கெதிரான ஒருவகை மத்திய வர்க்க மனப்பாங்கு இன்று அதிகமாகியுள்ளது. உலக மயம், அதனூடாக உருவாகியுள்ள புதிய பண்பாடுகள் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையில் முன்னேறுதல், பணம் சம்பாதித்தல், சமூகப் பிரசினைகளில் அக்கறையின்மை என்பன இன்றைய வாழ்முறைகளாகிவிட்டன. இன்றைய கல்விமுறை, செமஸ்டர் தேர்வு முறைகள், காம்பஸ் இன்டெர்வியூ,, ஓவர் ஸ்பெஷலிசேஷன் முதலியன இளைஞர் மத்தியில் சமூகப் பொறுப்புகளையும் அக்கறைகளையும் குறைக்கின்றன. ஈழப்பிரச்சினைகளை முன் வைத்து எழும் போராட்டங்களும் ஆண்டுக்காண்டு வலுவிழக்கின்றன. இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுடன் இணைக்காமல் வெறும் ஈழப் பிரச்சினையை மட்டும் வைத்தே இங்கொரு வலுவான எழுச்சியை தொடந்து இங்கு ஏற்படுத்திவிட இயலாது.
கலகம்: இன்றைக்கு நம் முன் இருக்கும் சவால் என்ன ?
உலக அளவிலும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை நாம் முழுமையாக உள் வாங்கவேண்டும்.கடந்த முப்பதாண்டு கால உலக வரலாற்றை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அப்படியான முயற்சி இங்கு நடக்கவில்லை. இது புதிய உலகம்; இந்தப் புதிய உலகை எவ்வாறு எதிர்கொள்வது?. நம்மீது சுமையாய் அழுத்திக்கொண்டிருக்கும் மரபுவழிப்பட்ட சிந்தனை முறைகள் எல்லாவற்றிலிருந்தும் நாம் எப்படி விடுதலை பெறுவது?.இதுதான் நமக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவால்.