டி.எம். உமர் பாரூக் (1944 – 2015)
ஒன்று
சுமார் இரண்டு மாதங்கள் இருக்கலாம். ஒரு காலை நேரத்தில் நான் பெரிதும், மதிக்கிற டி.எம்.உமர் ஃபாரூக் ஆகிய டி.எம்.மணி அவர்கள் என்னை அழைத்தார். நான் சற்றுப் பதட்டத்துடன் பதிலளித்தேன். என் பதட்டத்திற்குக் காரணம் குற்ற உணர்வு. அவருக்கு மாரடைப்பு வந்து ‘ஆஞ்ஜியோ’ செய்து சுமார் ஆறு மாத காலமாகியும் சென்று பார்க்கவில்லையே என்பதால் விளைந்த பதட்டம்.
சென்ற ஆண்டு இறுதியில் சுமார் ஒரு மாத காலம் அவர் சென்னையில் சிகிச்சை மேற்கொண்ட காலத்தில் எனக்கு அது தெரியாது. மாரடைப்புக்குச் சுமார் ஒரு வாரம் முன்னதாகச் என் வீட்டிற்கு வந்திருந்தார். சென்னை வரும்போது யாரையேனும் துணைக்கு அழைத்துக் கொண்டு அவர் என் வீட்டுக்கு வந்து போவது வழக்கம். ஏதாவது முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்துவிட்டுச் செல்வார். அன்று வந்தபோது சற்றுக் கோபமாகவும், கவலையோடும் காணப்பட்டார். பெ.மணியரசன் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள ‘தமிழ்த் தேசியமும் சாதியமும்’ எனும் நூலில் டாக்டர் அம்பேத்கர் அவதூறு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்குச் சரியான ஒரு பதில் எழுத வேண்டும் எனவும் கூறினார். நான் அந்த நூலைப் படிக்கவில்லை. எனக்கு ஒரு பிரதியை அவர் கொண்டு வந்திருந்தார். கூட இஸ்லாத்திற்கு மாறிய அவரது இரண்டாம் மகன் சம்சுதீனும் இருந்தார்.
மணியரசன் போன்றோர் கிட்டத்தட்ட இந்துத்துவவாதிகள் அளவிற்குப் போய்க் கொண்டிருப்பதையும், தமிழ்த் தேசியம் அங்கு போய் நிற்பதில் வியப்பில்லை எனவும் நான் கூறினேன். அம்பேத்கர் பற்றி மணியரசன் எழுதியுள்ளதற்கு ஒரு நல்ல பதில் எழுத வேண்டும் எனவும் படித்து விட்டு என்னுடைய கருத்துக்களைச் செல்லுமாறும் கூறி அகன்றார்.
இது நடந்த சில நாட்களில் மாரடைப்பு வந்து ஆன்ஜியோ எல்லாம் செய்து அவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளதைச் சற்றுத் தாமதமாக அறிந்த நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வந்து பார்க்கிறேன் என்றேன். தான் வேலூரில் மகள் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும், ஒரு மாதத்தில் குடந்தை வந்துவிடுவதாகவும் பிறகு வந்து பார்க்கலாம் எனவும் சொன்னார். அத்தோடு நிறுத்தவில்லை. மணியரசன் நூலுக்குத் தான் மறுப்புரை எழுதத் தொடங்கிவிட்டதாகவும், கூடவே ‘அம்பேத்கரின் மதமாற்றத்திற்குப் பின்னுள்ள அரசியல்’ என்றொரு குறு நூல் எழுத இருப்பதாகவும் சொன்னார். தேவையான குறிப்புகள் எதுவும் இருந்தால் உடன் அனுப்பி வையுங்கள் என்றார். தனது உடல்நிலை, சிகிச்சை மேற்கொண்டது இது குறித்தெல்லாம் அவர் ஏதும் பேசவில்லை. இதைத்தான் திரும்பத் திரும்பக் கூறினார். இருக்கட்டும், இப்போதைக்கு இது குறித்துக் கவலை கொள்ளாமல் ஓய்வெடுங்கள் என்று சொல்லி செல்பேசியை நிறுத்தினேன்.
மனம் கனத்திருந்தது. தமிழகத்தில் எவ்வளவோ மெத்தப் படித்த அம்பேத்கரியர்கள் எல்லாம் இருக்கும்போது, வெறும் ஆரம்பக் கல்வி மட்டுமே படித்த இந்த தலித் போராளிக்கு அம்பேத்கர் மீது பூசப்படும் அவதூறைக் களைய வேண்டும் என்கிற துடிப்பை நினைத்தபோது மனம் கசிந்தது.
பின் அவர் சற்று, ஆம் சற்றுதான் உடல் தேறி திருப்பனந்தாள் திரும்பியவுடன் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த மட்டியூரில் பொது இடத்தில் ஏற்றப்பட்டிருந்த தலித் இயக்கக் கொடிகளை அவ்வூர் வன்னிய சாதியினர் இருமுறை உடைத்துப் போட்ட பிரச்சினையில் அவர் ஈடுபட்டிருந்ததை அறிந்தேன். இதற்கிடையில்தான் இரண்டு மாதத்திற்கு முன் அதிகாலையில் அவரிடமிருந்து அந்த அழைப்பு வந்தது. “கும்பகோணத்திலா இருக்கீங்க?” என்றார். “ஆம்” என்றேன். “வந்து பார்க்கிறேன்” என்றார். வேண்டாம் நீங்க ஓய்வெடுங்க நான் வந்து பார்க்கிறேன் எனச் சொன்னேன்.
ஆனால் போகவில்லை. அடுத்தவாரத்தில் நான் சென்னையில் இருந்தபோது (ஜூன் 5, 2015) அவரது மூத்த மகனும், தற்போது அவரது ‘நீலப்புலிகள்’ இயக்கத்திற்கு அவருக்குப் பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவருமான புரட்சிமணி தன் தந்தை இறந்த செய்தியைப் பகிர்ந்துகொண்ட போது துடித்துப் போனேன்.
************************************
உமர் ஃபாரூக்காக அவர் மாறுமுன் டி.எம்.மணி என்கிற பெயரில் குடந்தையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சாதிவெறியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக அவர் அறியப்பட்டிருந்த காலத்திலிருந்தே எனக்கு அவர் பழக்கம். 90 களுக்கு முன் தலித் அமைப்புகள் மாநில அளவில் வலுவான திரட்சி பெறாமல் நிலவுடைமையும் சாதி ஆதிக்கமும் வேரோடியிருந்த இடங்களில் வலுவான இயக்கங்களை அமைத்துப் போராடி வந்தன. பல வெற்றிகரமான இயக்கங்களை நடத்தியுள்ளன. பல தியாகங்களைச் செய்துள்ளன. கும்பகோணம் பகுதியில் டி.எம்.மணி, பேராவூரணி பகுதியில் அரங்க குணசேகரன், பரமக்குடி பகுதியில் சந்திரபோஸ் இப்படிப் பலரையும் சொல்லலாம்.
மணி அவர்கள் செயல்பட்ட திருப்பனந்தாளும் சுற்று வட்டாரங்களும் வரலாற்றுக் காலந்தொட்டு நிலவுடைமை ஆழ வேர்விட்டிருந்த பகுதிகள். தஞ்சை மாவட்டத்தின் மூன்று முக்கிய சைவ மடங்களுள் திருப்பனந்தாளும் ஒன்று. இந்த மடங்கள் ஒவ்வொன்றிற்கும் 6,000 வேலி (சுமார் 40,000) ஏக்கர் நிலங்கள் உண்டு. இது தவிர இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் அவர்களுக்கு நிலங்கள் உண்டு. மணி அவர்கள் செயல்பட்ட திருப்பனந்தாள், கும்பகோணம், திருவிடைமருதூர் முதலானவை மேலத் தஞ்சையில் அடங்கும். அதாவது காவிரிக்கு மேற்புறம் உள்ளவை. கீழ்ப்புறம் உள்ள மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை முதலானவை கீழத் தஞ்சை. கீழத் தஞ்சையில் தலித் மக்கள் அளவில் அதிகம். இதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உள. இது குறித்து நான் எனது வெண்மணி பற்றிய கட்டுரையில் விரிவாகச் சொல்லியுள்ளேன்.
கீழத் தஞ்சையில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விவசாயத் தொழிலாளிகள் என்கிற வகையில் தலித் மக்கள் திரட்டப்பட்டனர். ஓரளவு சாணிப்பால், சாட்டையடி முதலானவை முடிவுக்கு வந்தன. மேலத் தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் காலூன்ற இயலவில்லை. இந்நிலையில் நிலப்பிரபுத்துவக் கொடுமையுடன் பின்னிப் பிணைந்து நின்ற சாதீய ஆதிக்கத்தை திருப்பனந்தாள் பகுதியில் எதிர்த்து நின்றவர் டி.எம்.மணி அவர்கள். ஒருபக்கம் வெள்ளாள மடம், இன்னொரு பக்கம் இங்கு ஆதிக்க சாதியினராக இருந்த வன்னியர்களின் சாதிக் கொடுமைகள் இரண்டையும் எதிர்த்து நின்றது டி.எம்.மணி அவர்களின் ‘அம்பேத்கர் மாணவர் இளைஞர் பேரவை’ மற்றும் ‘நீலப்புலிகள் இயக்கம்’. 1970 களின் பிற்பகுதி தொடங்கி சாவதற்கு முதல்நாள் வரை தலித்களுக்கான வீரஞ்செறிந்த பல போராட்டங்களை நடத்தி ஆயுள் தண்டனை வரை எதிர்கொண்டவர் மணி அவர்கள்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இங்கு உருவான தலித் எழுச்சியுடன் இணைந்து செயல்பட்ட எங்கள் மீது அத்தனை நல்ல கருத்து மணி அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் கிடையாது. எங்கள் மீது மட்டுமல்ல, அன்று உருவான “தலித் எழுச்சி” யின் விளை பொருட்கள் எதன் மீதும் அவருக்கு அப்படி ஒன்றும் பெரிய மரியாதை இறுதி வரை இல்லை. எனினும் அவரது வரலாற்றை அறிந்த எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை. இதழாளர் டி.என்.கோபாலனும் மதுரை வழக்குரைஞர் ரஜினியும் அப்போது ‘தலித் தோழமை மையம்’ என்றொரு தொண்டு நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். என்ன நிகழ்ச்சி என எனக்கு நினைவில்லை. ஏதோ ஒரு ‘ப்ராஜெக்ட்’டுக்கு அப்போது கும்பகோணத்தில் இருந்தவன் என்கிற முறையில் என்னிடம் உதவி கோரினார்கள். மகாமகக் குளத்தங்கரையில் இருந்த ஒரு அரங்கில் நடந்த உரையாடலுக்கு முக்கிய பேச்சாளராக நான் மணி அவர்களை அழைத்திருந்தேன்.
அவருடைய பேச்சு எங்களின் அன்றைய அந்த முயற்சி மீதான கடும் விமர்சனமாக இருந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் மன்னார்குடியில் நாங்கள் நடத்திய அம்பேத்கர் விழா அழைப்பிதழில் நண்பர்கள் சரியாக ‘புரூஃப்’ பார்க்காமல் அவரது பெயர் டி.எஸ்.மணி என அச்சாகியிருந்தது. அவர் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்ததோடு அவருக்குப் பதிலாக நீலப் புலிகள் இயக்கத்திலிருந்து பங்கேற்ற தோழர் எங்களைச் சாடித் தீர்த்துவிட்டார். இந்நேரம் ஒரு உயர் சாதித் தலைவராக இருந்திருந்தால் இத்தனை அலட்சியமாகப் பெயரை அச்சிட்டிருப்பீர்களா எனக் கடும் விமர்சனத்தை அவர் முன்வைத்தபோது நொந்து போனேன். பின் குடந்தையில் மணி அவர்களைச் சந்தித்து மன்னிப்புக் கோரினேன். “தமிழ்க்குடிதாங்கி” என்கிற ஒரு சிறப்பை மருத்துவர் இராமதாசுக்குத் தொல்.திருமாவளவன் அவர்கள் அளிப்பதற்குப் பின்னணியாக இருந்த குடிதாங்கி சுடுகாட்டுப் பாதைப் பிரச்சினை குறித்து ‘நிறப்பிரிகை’ இதழில் நாங்கள் வெளியிட்டிருந்த கள ஆய்வு குறித்த மணியின் காட்டமான விமர்சனத்தை இன்றும் நீங்கள் அவரது ‘சாதி ஒழிந்தது’ நூலில் காணலாம்.
எனினும் காலம் எல்லாவற்றிலும் மாற்றத்தை விளைவிக்கும்தானே. கடந்த பத்தாண்டுகளில் அவர் என் மீது மிக்க அன்பை வெளிக்காட்டினார். நூல்கள் எழுதும்போது ஆலோசனைகள் கேட்பது, அவரது நீலப்புலிகள் இயக்கத்தின் கூட்டங்கள் அனைத்திற்கும் என்னைத் தவறாது அழைப்பது என்பதாக அந்த நட்பு தொடர்ந்தது. கடைசியாக நான் அவரது மேடையில் பேசியது சென்ற ஆண்டு நடைபெற்ற அவரது மகன் புரட்சிமணியின் திருமணத்தின்போது.
*******************************************
மணி அவர்கள் எந்த ஆண்டில் பிறந்தார், அவருடைய சரியான வயது என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தாரிடம் இன்று உறுதியான தகவல்கள் இல்லை. 1995ல் வெளியிடப்பட்டுள்ள அவரது ‘தீண்டாமைக்குத் தீர்வு’ என்னும் நூலின் ‘என்னுரை’யில் அவர் அப்போது தனக்கு 48 வயது என்கிறார். கீழே கையொப்பத்தில் 10 -5 -92 எனத் தேதியிடப் பட்டுள்ளது. எனவே அவர் 1944ல் பிறந்திருக்கலாம். இறக்கும்போது அவருக்கு 71 வயதிருக்கலாம். எட்டாம் வகுப்புவரை படித்ததாகக் சொல்கின்றனர். அவரே எழுதியுள்ள ஒரு குறிப்பில் தான் ஆரம்பக் கல்வி வரை மட்டுமே படித்தவன் என்கிறார்.
இறுதிக் காலத்தில்தான் அவரது உடல் சற்றுத் தளர்ந்திருந்தது. மற்றபடி நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என்பார்களே அப்படி ஒரு தோற்றம். இரும்பால் அடித்துச் செய்தது போன்ற உடல், நறுக்குத் தெறித்தாற் போன்ற பேச்சு இப்படித்தான் கம்பீரமாக அவர் தோன்றுவார்.
அவரது அப்பா திருப்பனந்தாள் முத்து குறித்தும் அவர் இப்படித்தான் ஓரிடத்தில் கூறுகிறார். அவர் அழகானவர் எனவும் நிகண்டுகள் மற்றும் முக்கிய தமிழ் இலக்கியங்களின் பாடல்கள் பலவற்றை நினைவில் வைத்துச் சொல்லக் கூடியவர் எனவும் நன்றாகப் பாடுவார் எனவும் குறிப்பிடுகிறார். மணி அவர்களும் தமிழ் இலக்கியம், தமிழ் மற்றும் இந்திய மரபுகள், அம்பேத்கரியம், பெரியாரியம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை மிக்கவர் என்பதை அவரது நூற்களை வாசித்தால் புலப்படும். காந்தி அடிகள் தனக்குச் சத்தியத்தின் மேன்மையை உணர்த்திய வரலாறு எனச் சொல்லும் அரிச்சந்திரன் கதையின் தமிழ்வடிவமான ‘அரிச்சந்திரபுராணம்’ குறித்த மணி அவர்களின் கட்டுரை (தீண்டாமைக்குத் தீர்வு) அவரது தமிழ்ப் புலமைக்கும், விமர்சனப் பார்வைக்கும் ஒரு சான்று. அரிசந்திரன் கதை சத்தியத்தின் மேன்மையை விளக்குகிறதோ என்னவோ அது சாதீயத்தையும், தீண்டாமையையும், வருண வேறுபாட்டையும் எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறது என்பதை அவர் அதில் தோலுரிப்பார்.
அவரது அத்தனை குறுநூல்களுமே முக்கியமானவை ‘செந்தமிழ்நாட்டுச் சேரிகள்’. ‘சாதி ஒழிந்தது’ ஆகியன இலக்கியத் தரமானவை.
1956 டிசம்பர் 6. அப்போது மணிக்கு வயது 12. அவரும் சற்றே மூத்த அவரது மாமாவும் பந்தநல்லூர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த போதுதான் வானொலி அந்தத் துயரச் செய்தியை அறிவித்தது. அண்ணல் அம்பேத்கர் மறைந்தார். இதைக் கேட்டவுடன் மணியின் மாமா தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார். என்னவென்று தெரியாமலேயே மணியும் அழுதிருக்கிறார். சுற்றியிருந்த கூட்டம் வேடிக்கை பார்த்துள்ளது. மணி அம்பேத்கரை அறிந்து கொண்டது அப்படித்தான். அதன்பின் டிசம்பர் 6 மற்றும் ஏப்ரல் 14 ஆகியவற்றில் அம்பேத்கர் நினைவை அப்பகுதியில் ஏந்தத் தொடங்கினார் மணி.
அப்படித்தான் ஓர் நாள். 1962 ஏப்ரல் 14. அப்போது மணியின் வயது 18. ஒரு பன்னிரண்டு பேர் சைக்கிள்களில் அம்பேத்கர் படத்தை மாட்டிக்கொண்டு, ‘தீண்டாமை ஒழிக’, ‘தேசபிதா அம்பேத்கர் வாழ்க’ என முழங்கிய வண்ணம் திருப்பனந்தாளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட பயணம் மேற்கொண்டனர். திருலோகி கிராம எல்லையை அடைந்தபோது அங்குள்ள தோப்பு ஒன்றில் தோழர்கள் இளைப்பாற, மணி அருகிருந்த பழைய ஆளரவமற்ற வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது வீட்டு கதவைத் திறந்து கொண்டு ஒரு பெரியவர் வந்துள்ளார். தோற்றம் அவரை வெள்ளாளர் எனக் காட்டியது.
பார்த்தவுடன் மணி எழுந்திருக்கிறார். அவர் அமரச் சொல்லித் தானும் பக்கத்தில் அமர்ந்து, “தண்ணீர் வேண்டுமா” எனக் கேட்டுத் தந்தும் இருக்கிறார். வியப்பு. பின் அவர், “டி.எம்.மணி வாழ்க என்று சொல்கிறார்களே அது யார்?” எனக் கேட்டிருக்கிறார். மணி சற்றே சுதாரித்துக் கொண்டு. “அது எங்கள் தலைவர்” என்றவுடன் அந்தப் பெரியவர், “அவர் வந்துள்ளாரா?” எனக் கேட்டுள்ளார். மணி, “இல்லை” என்றிருக்கிறார்.
அந்தப் பெரியவர் அடுத்துக் கேட்ட கேள்வி மணியின் நெஞ்சில் சொறேர் எனத் தைத்தது. “நீங்கள் நூறு பேர்கள் இருக்கிறீர்கள். நாங்கள் இரண்டு பேர்தான். இருந்தாலும் உங்கள் அவ்வளவு பேரையும் கட்டி வைத்து நாங்கள் அடிப்போம். நீங்கள் நூறு பேர் இருந்தாலும் பேசாமல் வாய்பொத்தி இருப்பீர்கள். அது ஏன். அதுதான் எனக்கு விளங்கவில்லை.” இதை அந்தப் பெரியவர் இறுமாப்புடன் சொல்லவில்லை. அதில் ஒரு அக்கறை தொனித்தது.
அந்தச் சொற்கள் மணியிடம் ஆழ்ந்த சிந்தனைகளை ஏற்படுத்தின. தீண்டாமைக்கு எதிரான தனது போராட்டப் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பது அந்த உரையாடலின் மூலம் மணிக்கு விளங்கியது.
இரண்டு
தஞ்சை மாவட்டத்தின் ஒரு வகை மாதிரியான பண்ணை அடிமைக் குடும்பத்தில் ‘ஆறாவது தலைமுறை அடிமை’யாக ஆறு குழந்தைகளுக்கு மத்தியில் பிறந்த மணி வெகு விரைவில் அப்பகுதி மக்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானார். சென்ற மாதம் அவர் இறந்த போதுகூடத் திரண்டிருந்த தலித் மக்கள், “இனி எப்பிடிய்யா தைரியமா இந்தக் கடை வீதியில நாங்க வந்து போவோம்….” எனக் கதறி அழுததை ஒருவர் குறிப்பிட்டார்.
தலித் மக்களுக்குப் பிரச்சினைகளுக்கா பஞ்சம். அதுவும் அவர்கள் எதிர்கொள்பவை சாதாரணப் பிரச்சினைகளா? உயிர்ப் பிரச்சினைகள். இத்தகைய பெரும் பிரச்சினைகள் மட்டுமின்றி, “குடும்பச் சண்டையாக இருந்தாலும், கோழிச் சண்டை, குழந்தைச் சண்டையாக இருந்தாலும் என்னிடம் புகார் சொல்லி முடிந்தால்தான் எங்கள் சேரி மக்களுக்கு நிம்மதி வரும்” என மணி ஓரிடத்தில் குறிப்பிடுவார். அவர் ஆயுள் தண்டனை பெறக் காரணமாக இருந்த திருப்பனந்தாள் கலவரம் (1982) கிட்டத்தட்ட ஒரு போரைப் போலவே நடந்துள்ளது. ஒரு பக்கம் ஆதிக்க சாதியினர், இன்னொரு பக்கம் மணி அவர்களால் திரட்டப்பட்ட தலித் இளைஞர்கள் எனத் திரண்டு மோதிய நிகழ்வு அது. கையில் ஆயுதம் தாங்கிய 22 தலித் இளைஞர்கள் மாட்டு வண்டிகளில் கற்களை ஏற்றிக் கொண்டு எதிரிகளை நோக்கி விரைந்தோடிய போது, தங்கள் பிள்ளைகளைக் கூடத் தடுக்காத தலித் பெண்கள் மணியை மட்டும், “நீ இருந்தால் எங்களுக்குப் போதும் எனக் கண்ணீர் மல்கத்” தடுத்ததை மணி நினைவு கூர்கிறார்.
“இந்து”க்களுடனான அந்தச் சமர் ராஜேந்திரன் என்கிற ரவுடிப் பட்டியலில் இருந்த ஒரு இந்து கொல்லப்பட்டதில் முடிந்தது. ஆம். மணி சாதிக் கொடூரர்களை, “ஆதிக்க சாதி” அல்லது :”சாதி இந்துக்கள்” என்றெல்லாம் குறிப்பிடுவதில்லை. மாறாக அவர்களை “இந்துக்கள்” எனவும் “எதிரிகள்’ எனவும்தான் குறிப்பிடுவார். சாதி விலக்கல் மற்றும் தீண்டாமையை மத ரீதியில் நியாயப்படுத்தும் இந்து மதம், அதன் இயல்பிலேயே தீண்டாமையைக் கொண்டுள்ளது என்பது அதன் பொருள். அப்படிக் கடைபிடிப்போர் தலித் மக்களின் எதிரிகள். அவர்களிடம் தேசியம் என்றோ தேர்தல் மூலம் அதிகாரம் என்றோ சமரசம் ஆதல் தலித் மக்களின் விடுதலைக்கு எதிராகவே முடியும் என்பதுதான் இறுதிவரை டி.எம்.மணி என்கிற டி.எம்.உமர் ஃபாரூக்கின் கருத்தாக இருந்தது என்பது அவரது வாழ்வையும் எழுத்துக்களையும் வாசிப்போர் அறிவர். தலித் அல்லாத அனைவரையும் இந்துக்கள் எனச் சொல்வதன் மூலம் அவர் தலித்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் கூடவே வற்புறுத்துகிறார்.
சாதீய சக்திகளுடன் சமரசமற்ற போர் என்பதுதான் 18 வயதில் அந்தத் திருலோகிப் பெரியவரின் சொற்களினூடாக மணி அவர்கள் வந்தடைந்த ஞானம்.
ராஜேந்திரன் கொலை வழக்கில் 54 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். முதல் குற்றவாளி மணி. அவரது தம்பி மதியழகனும் மற்றொருவரும் ராஜேந்திரனைப் பிடித்துக் கொண்டதாகவும், மணி அவரை வெட்டிக் கொன்றதாகவும் காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடியது. மதம் மாறியிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலரின் பாதுகாப்பில் தலைமறைவாக இருந்துப் பின் குடந்தை ஆர்.பி.ஸ்டாலின் அவர்கள் மூலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார் மணி.
மணியின் வழக்கை நடத்தியவர் புகழ்பெற்ற வழக்குரைஞர் தஞ்சை இராமமூர்த்தி அவர்கள். அவரும் ஒரு ஆதிக்க சாதியினர்தான். அவர் மிகச் சிறப்பாக இந்த வழக்கை நடத்தினார். இறுதிவரை மணி அவர்கள் மிக்க நன்றியுடன் மதித்தவர்களில் இராமமூர்த்தி முதன்மையானவர். விசாரணை நீதிமன்றம் மணிக்கு ஆயுள் தண்டனையும் அவரது சகோதரர் உட்பட இதர ஆறு பேர்களுக்கு தலா ஓராண்டும் தண்டனை விதித்தது. மேல் முறையீட்டின் போதும் மணிக்காக வாதிட்டு விடுதலை வாங்கித தந்தவர் தஞ்சை இராமமூர்த்தி அவர்கள்தான்.
இந்த வழக்கில் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உண்மையில் ராஜேந்திரனைக் கொன்றவர் ஒரு 18 வயது இளைஞர். அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளத் தயாராக இருந்தார். ஆனாலும் அதற்கு மணி ஒப்பவில்லை.
தொடர்ந்து அப்பகுதி தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக மணி எடுத்த போராட்டங்கள் ஏராளம். ‘செந்தமிழ் நாட்டுச் சேரிகள்’ மற்றும் ‘சாதி ஒழிந்தது’ எனும் நூல்களில் வேட்டமங்கலம், குடிதாங்கி, அண்டக் குடி, புத்தூர், காவல்கூடம், பாலாக்குடி, 23 வேலூர் முதலான ஊர்களில் மணியின் வழிகாட்டலில் நடைபெற்ற போராட்ட வரலாறுகளைக் காணலாம். சேரி மக்கள் என்னென்னவிதமான பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை விளக்கும் கையேடுகளாக இவ்விரு நூல்களையும் சொல்லலாம்.
சாதீயத்தின் செயல்பாடுகளை அவர் தன் அனுபவங்களின் ஊடாகவும் படிப்பின் ஊடாகவும் நுணுக்கமாகப் புரிந்துகொண்டு இயங்கினார்.
சாதி குறித்தும், சாதி ஒழிப்பு குறித்தும் அம்பேத்கர் அவர்கள் கோட்பாட்டு ரீதியாகக் கூறுவனவற்றை 1,2,…. எனத் தன் நூற்களில் ஆங்காங்கு மிக நுணுக்கமாக மணி பட்டியலிட்டிருப்பதைக் காணலாம். எங்கு போனாலும் அங்குள்ள புத்தகக் கடைகளில் அம்பேத்கர் நூல்கள் அவை ஆங்கிலத்தில் இருந்தாலும் அவற்றை வாங்கிவிடுவார் என்றார் அவரது அருமை நண்பர் ‘வைகறை வெளிச்சம்’ நிறுவனர் குலாம் முகம்மது அவர்கள்.
அதே போலத் தந்தை பெரியார் சாதி ஒழிப்பு குறித்துச் சொன்னவற்றையும் மிக நுணுக்கமாகத் தன் நூற்களில் கோடிட்டுக் காட்டியிருப்பார் மணி.
தலித்தியத்தின் பெயரால் பெரியாரை அம்பேத்கருக்கு எதிர் நிலையில் நிறுத்திச் சிலர் தனிப்பட்ட நலன்களை முன்நிறுத்திச் சொல்லாடிய காலங்களில் பெரியாரை எந்நாளும் விட்டுக்கொடுக்காது உயர்த்திப் பிடித்த மணி பெரியாருக்கு எதிரான இந்தப் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டித்து சுவாமிமலையிலும், குடந்தை மகாமகக் குளக் கரையிலும் பொதுக் கூட்டங்களை நடத்திக் காட்டினார். தலித் மக்களின் இரு கண்களாக அவர் அம்பேத்கரையும் பெரியாரையும் ஏந்தி நின்றார்.
அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் ஊடாகப் பெற்ற கோட்பாட்டு பலம், அனுபவங்களின் ஊடாகக் கற்ற பாடங்கள் ஆகியவற்றின் ஊடாக நமது சாதி முறை குறித்து அவர் நுணுக்கமாகப் பல விடயங்களைக் கூறுவதை அவரது எழுத்துக்களில் நாம் காண இயலும்.
“கிராமங்களின் ஒற்றுமை என்பது அந்த அந்தச் சாதிக் கடமைகளை அவரவர் செய்ய வேண்டுமென்பதுதான்” என்பார் ஓரிடத்தில் (சாதி ஒழிந்தது, பக்.18).
“தலித்கள் தாக்கப்படும் போதும், கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப் படுவதற்கும், ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் மற்ற சாதியில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்த் தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை” என்பார் இன்னொரு இடத்தில் (சாதி ஒழிந்தது, பக்.25).
எத்தனை நுணுக்கமாக அவர் இந்தச் சாதீயச் சமூகத்தை அவதானிக்கிறார் என்பதற்கு மலைக்குறவர்கள் பற்றிய அவரது கட்டுரை சான்று (‘காத்தாயி மகன்’, சாதி ஒழிந்தது பக்.72 -82). மலைக்குறவர்கள் என்போர் ஒரு காலத்தில் குற்றப் பரம்பரையினராகக் கருதப்பட்டோர். பட்டியல் இனத்தில் (ST) இணைக்கப்பட்டுள்ள இவர்களை இன்னும் திருட்டு முதலான குற்றங்களைப் புரிகிறவர்களாகவே காவல்துறை அணுகி வருகிறது. தலித்களை விடக் கீழ் நிலையில் இருக்கும் இவர்கள் தலித்கள் மீது தீண்டாமையைக் கடைபிடிப்பதுதான் வேடிக்கை. பன்றி மேய்த்து வந்து மணியின் ஆதரவில் ஒரு குடியிருப்பை உருவாக்கி வாழ்ந்த இவர்களைப் பற்றிச் சொல்லும் மணியின் கட்டுரை ஒரு சிறுகதை போலச் செறிவுடன் அமைந்த ஒன்று. மலைக் குறவர்களுக்குள் இரு பிரிவுகள். இவர்களுக்குள் திருமண உறவு கிடையாது, இந்த அடிப்படையில் அங்கு உருவாகும் சாதிச் சிக்கல்கள், சாதிப் பஞ்சாயத்துக்கள், அவற்றின் ஊடாகப் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுதல் ஆகியவற்றை தொட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. “இந்து மதம் ஏழைகளாகப் பிறந்தவர்களைக்கூட எப்படிப் பிரித்து வைத்திருக்கிறது பார்த்தீர்களா” என வியக்கும் மணி (பக்.76), இந்தியச் சாதிகள் எதுவும் ‘செட்டியார், வெள்ளாளர், முதலியார்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் இந்தப் பெயரிலான பொது அடயாளங்களுடன் விளங்குவதில்லை. இவற்றிற்குள்ளும் உட் பிரிவினைகள் கடுமையாக, குறிப்பாகத் திருமண உறவுகளில், கடைபிடிக்கப் படுகின்றன, தலித் சாதிகளும் இதில் விதிவிலக்கல்ல என்பார்.
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
தலித்கள் அல்லாத அனைவரையும் அவர் ‘இந்துக்கள்’ எனக் கட்டமிட்டாலும் வரட்டுத் தனமாக அவர் மற்றவர்களை எதிர்கொள்வதில்லை. தஞ்சை இராமமூர்த்தியின் மீது அவர் கொண்டிருந்த அன்பைக் குறிப்பிட்டேன். அதேபோலக் குடந்தையில் வழக்குரைஞர் கீதாலயன், ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் முதலானோரும் அவரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். தனது போராட்ட வரலற்றை எழுதும்போதும் அவர் இப்படிப் பல அருமையான காவல் துறையினர், ரெவின்யூ அதிகாரிகள் ஆகியோரை அடையாளம் காட்டுகிறார்.
ஒரு பிரச்சினை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சற்றே உணர்ச்சி வயப்பட்டு சாதிக் கொடுமைகளுக்குக் காரணமான இரண்டு மூன்று பேர்களைச் சொல்லி அவர்களைத் தீர்த்துக் கட்டாமல் விட மாட்டேன் என மணி ஆவேசப்பட்ட போது அந்த அதிகாரி அவரை ஆசுவாசப்படுத்தி, அவரது மனைவியிடம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் கொடுத்துப் பின் தான் முதலியார் சாதியைச் சேர்ந்தவனான போதும் திருச்சியில் தொண்டு வீராசாமி நடத்திய விடுதியில் தங்கிப் படித்தவன் எனவும், தான் சரியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறி அவ்வாறே செய்து காட்டியதையும் மணி ஓரிடத்தில் குறிப்பிடுவார்.
இளைய பெருமாள் அவர்களைத் தலைவராக ஏற்றுச் செயல்பட்ட மணி அவர் குறித்து மிக்க மரியாதையுடன் எழுதுவார். இளையபெருமாள் அவர்கள் இறுதிவரை தலித் மக்களுக்காக உழைத்தவர். இந்து மதத்தை நம்பியவர். காங்கிரஸ்காரர்களும். இப்படியானவர்களுங் கூட தலித் பிரச்சினைகளில் அக்கறையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும் என்பதைச் சொல்லும் மணி, எனினும் இத்தகையோரின் நல்லெண்ணச் செயல்பாடுகளுக்குச் சில வரம்புகளுண்டு என்பதையும் நாசூக்காகக் குறிப்பிடுவார்.
காவல்கூடம் எனும் ஊரில் ஒரு பிரச்சினை. தலித் மக்களின் 47 குடிசைகள் கொளுத்தப்பட்டன.. நீலத்த நல்லூர் பள்ளிக் கூடத்தில் அம்மக்கள் தஞ்சம் புகுகின்றனர். கேள்விப்பட்டு மணி அங்கு போகிறார். இளையபெருமாளும் அம்மக்களைச் சந்திக்க வருகிறார். இதை அறிந்து அப்பகுதியில் மிக்க செல்வாக்கு உடையவரும், வீடுகளைக் கொளுத்தியவர்களின் உறவினரும், காங்கிரஸ்காரருமான இராமகிருஷ்ணன் என்பவரும் வந்து சக காங்கிரஸ்காரர் என்கிற வகையில் இளையபெருமாளிடம் பேசுகிறார். வீடுகள் எரிந்தவுடனேயே தான் அங்கு வந்து ஒரு மூட்டை அரிசி கொடுத்து சோறு சமைத்துப் போட்டதாகவும் தாசில்தாரிடம் சொல்லி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 ரூபாய் கொடுக்கச் சொன்னதாகவும், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஃபகீர் முகம்மதுவிடம் சொல்லி இன்னொரு 200 ரூபாய் கொடுக்கச் சொன்னதாகவும், இதை வைத்துக் கொண்டு இந்துக்களின் வீடுகளிலிருந்து மரங்களை வெட்டி குடிசை அமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். பின்னர் இளையபெருமாளை வீட்டிற்கு அழைத்துச் சென்று தலித்களில் சுப்பிரமணி என்பவர்தான் கம்யூனிஸ்ட் கட்சி வைத்துக் கொண்டு பிரச்சினைகள் செய்வதாகச் சொன்னதோடு, தலித்களே குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொண்டதாகவும் சொல்லி வைக்கிறார். அதே நேரத்தில் அந்தச் சுப்பிரமணி காவல் நிலையத்தில் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
வீடு கட்டிக் கொள்ளும் வரை தலித் மக்கள் எங்கே இருப்பார்கள் என இளையபெருமாள் கேட்டபோது பக்கத்தில் உள்ள திடலில் தற்காலிகக் கொட்டகை ஒன்று போட்டுக் கொள்ளலாம் என்கிறார் ராமகிருஷ்ணன். சரி, பார்த்துச் செய்யுங்கள் எனச் சொல்லி இளையபெருமாள் அகல்கிறார்.
இளையபெருமாள் சென்றவுடன் காவல் நிலையம் சென்று சுப்பிரமணியை மீட்டு வருகிறார் மணி. குடிசைகளைத் திருப்பிக் கட்டுவது மட்டுமல்ல குடிசைகளைக் கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் சொல்கிறார்.
அடுத்த சில நாட்களில் பள்ளிக்கூடம் நடத்தவேண்டும் எனச்சொல்லி அங்கு குடியேறியிருந்த தலித்களை வன்முறையாக அரசு வெளியேற்ற முனைந்தபோது மணியின் தலைமையில் மக்கள் வெளியேற மறுக்கின்றனர். “உதைத்து வெளியேற்றுங்கள்” என சப் கலெக்டர் ஆணையிட்டபோது, “உள்ளே நுழைந்தால் நீங்கள்தான் உதை வாங்குவீர்கள்” என மணி பதிலளித்ததைக் கண்டு திகைத்து வெளியேறினார் அதிகாரி.
பின் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா தலையிட்டு அம்மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் 52 வீடுகள் கட்டிக் கொடுக்கவும், குடிசைகளைக் கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார். கங்கப்பா ஒரு தலித் என்பதும் அடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுப் பழி வாங்கப்படார் என்பதும் குறிப்பிடத் தக்கன.
இளையபெருமாள் போன்றோரின் செயல்பாட்டு வரம்பிற்கும் மணி அவர்களின் தீரமிகுக் களச் செயற்பாட்டிற்கும் ஒரு எடுத்துக் காட்டாகத்தான் இந்தப் போராட்டத்தை மட்டும் இங்கு சற்று விரிவாகச் சொல்ல நேர்ந்தது.
பிரச்சினைகளை இப்படித் தைரியமாகவும் அஞ்சாமலும் மணி எதிர்கொள்வதற்கு இன்னொரு எடுத்துக்காட்டைப் பகிர்ந்து கொண்டார் குலாம் முகம்மது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் மனப்பூர்வமாக இஸ்லாத்திற்கு மாறுகிறார். குடந்தைப் பகுதியில் உள்ள இந்துத்துவ சக்திகள் இதை எதிர்த்து குடந்தை ‘நால் ரோடில்’ சாலை மறியல் செய்தனர். குடந்தையில் உள்ள முஸ்லிம்களுக்கு மதக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம். அந்தப் பெண்ணைத் திருப்பித்தான் அனுப்பி விடுங்களேன் என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் போக மறுத்திருக்கிறார்.
இந்நிலையில் சாலை மறியலைத் தடுத்து போக்குவரத்தைச் சீர்செய்ய காவலர்கள் குவிக்கப்படுகின்றனர். காவல்துறை உயர் அதிகாரி மறியல் செய்த இந்துத்துவ சக்திகளைக் கலைக்காமல் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக இருந்தவர்களிடம் வந்து அந்தப் பெண்ணை அவள் வீட்டுக்கு அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். “அந்தப் பெண் எந்தக் கட்டாயமும் இல்லாமல் விருப்பபூர்வமாக மதம் மாறியுள்ளாள். அதற்குரிய வயதும் அவளுக்கு உள்ளது. நாங்கள் அவளை அனுப்ப முடியாது. நீங்கள் மறியல் செய்யும் கூட்டத்தைக் கலைத்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யுங்கள். முடியாவிட்டால் சொல்லுங்கள் நாங்கள் கலைக்கிறோம்” என மணி சொன்னதைக் கண்டு அந்த அதிகாரி ஒரு கணம் திகைத்துப் போனதையும், பின் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைத்துப் போக்குவரத்திற்கிருந்த தடையை நீக்கியதையும் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார் குலாம் முகம்மது.
மூன்று
‘நீலப்புலிகள்’ இயக்கமாக இறுதி வடிவமெடுத்தத் தன் இயக்க வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்வார் மணி:
“1960 வாக்கில் சிறுவர்களால் துவக்கப்பட்டு, 1962ல் “அம்பேத்கர் கல்வி வளர்ச்சி மன்றம்” ஆகி, 1967ல் தந்தை பெரியாரின் அறிவுரைப்படி இயக்கத் தனித் தன்மையை இழக்காமல் காமராஜருக்கு ஆதரவு நிலை, 1974ல் காமராஜர் மறைவிற்குப் பிறகு விலகி நின்று கடும் போராட்டங்கள், நூற்றுக்கணக்கான தீண்டாமை வழக்குகள், சிறு பெரும் கலவரங்கள்…” என அவரது இயக்கம் வளர்ந்தது (விடுதலை முழக்கம், அக் 2009).
1982 முதல் 1992 வரை இளையபெருமாளின் மனித உரிமைக் கட்சியின் கீழ் இயங்கியபோதும் மணி தனது தனித் தன்மையை இழந்துவிடவில்லை. 1990 ல் தனது ‘அம்பேத்கர் கல்வி வளர்ச்சி மன்ற’த்தை விரிவாக்கி “அம்பேத்கர் மாணவர் இளைஞர் பேரவை” என ஒரு இயக்கமாக்கினார். அதுவே 1996ல் “நீலப் புலிகள் இயக்கம்” ஆக வடிவெடுத்தது. எனினும் இளைஞர்களுக்கு விரிவான சமூக அறிவு வேண்டும் என்பதால் 2010ல் “கற்பிப் பாசறை” என்றொரு படிப்பு வட்டத்தைத் தனது பொறுப்பில் உருவாக்கி நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் கோட்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் புரட்சிமணி கூறுகிறார்.
திருப்பனந்தாள் பகுதியை ஒட்டிய பிரச்சினைகளில் தன் சக்தி முழுவதையும் செலுத்தி இயங்கியபோதும் மணியின் பார்வை எப்போதும் தலித் மக்களின் பொதுப் பிரச்சினைகள், அவர்களுக்கான இறுதி விடுதலை குறித்த சிந்தனைகள் ஆகியவற்றிலிருந்து அகலவில்லை. ஆறு மாத காலம் அவர் சிறையில் கழிக்க நேரிட்டபோது அப்போது சிறையில் இருந்த அன்றைய நக்சலைட் தோழர்களுடன் அவர் விரிவான விவாதங்களை மேற்கொள்கிறார். வெளியில் வந்த பின்னும் இப்பகுதியில் களப் பணி புரிந்து தியாகிகளான தோழர்கள் சந்திரசேகர், சந்திரகுமார் ஆகியோருடன் கருத்துப் பரிமாற்றங்கள் புரிகிறார். அடிப்படை மார்க்சீயம், மாஓயிசம் ஆகியவற்றையும் பயில்கிறார். ஆதிக்க சாதியினராயினும் இப்பகுதியில் தலித் பெண்களை மணந்துகொண்டு களப்பணியாற்றிய தோழர்கள் குணாளன், ஞானப்பிரகாசம், தேவதாஸ் முதலானோரை மனமாரப் பாராட்டுகிறார். திருப்பனந்தாள் மடத்தை எதிர்த்த போராட்டங்களில் நக்சல் இயக்கத்தவரோடு பல்வேறு நிலைகளில் இணைந்து இயங்கியபோதும் எந்நாளும் அவர் இங்குள்ள இடதுசாரிக் கட்சிகளின் நிலைபாட்டை ஏற்கவில்லை என்பதை அவர் மகன் புரட்சிமணி வலியுறுத்துகிறார். இந்திய சமூகப் பிரச்சினைகளை வர்க்க வேறுபாடு என்கிற கருத்தாக்கத்தின் மூலம் புரிந்து கொள்ள இயலாது என்பதை மணி தன் எழுத்துக்களிலும் ஆங்காங்கு பதிகிறார்.
தமிழக அளவில் இவ்வாறு பல்வேறு நிலைகளில் பணி செய்து கொண்டு இருக்கும் தலித் இயக்கங்களை இணைப்பது அவசியம் என்கிற எண்ணம் இறுதிவரை அவரிடம் குடி கொண்டிருந்தது. அதற்கான முயற்சிகளையும் அவர் இறுதி வரை கைவிடவில்லை.
1984 தேர்தலுக்குப் பின் “தமிழக அளவிலுள்ள தலித் தலைவர்கள் அத்தனை பேரையும் பறையர், பள்ளர், அருந்ததியர் என்கிற பாகுபாடு இல்லாமல் ஒன்று திரட்ட” இளையபெருமாள் அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் அவருடன் இருந்து ஊக்கம் தந்தவர் மணி. இறுதியில் அம் முயற்சி ‘ஷெட்யூல்டு இன விடுதலைக் கூட்டமைப்பு’ என்பதாக விடிந்தது. வை.பாலசுந்தரம் தலைவராகவும், டாக்டர் சேப்பன் பொருளாளராகவும், சக்திதாசன் பொதுச் செயலாளராகவும், பெரியவர் மு.சுந்தர்ராஜன் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டனர். தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு, சென்னை முதலான மாவட்டங்களில் சிறு சிறு பொதுக் கூட்டங்களுக்குப் பின் ஜூன் 29, 1986 ல் மணி அவர்கள் முன்னின்று நடத்திய பந்தநல்லூர் மாநாட்டை அவரது மிகப் பெரிய சாதனையாக இன்று நீலப்புலிகள் இயக்கத்தவர்கள் நினைவு கூறுகின்றனர்.
மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில் இளையபெருமாள், வை.பாலசுந்தரம், டாக்டர் சேப்பன், சக்திதாசன், பெரியவர் சுந்தர்ராஜன், தலித் எழில்மலை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். நாங்கள் இனி இந்த ஒற்றுமைக்குத் துரோகம் இழைத்து விலகிப் போனால் “முச்சந்தியில் நிறுத்திச் செருப்பால் அடியுங்கள்” என மாநாட்டில் சூளுரைத்த தலைவர்களில் பலர் அடுத்து வந்த தேர்தலில் சொந்த நலன்களை முன்னிறுத்திப் பிரிந்து சென்றது குறித்து மனம் நொந்து எழுதுகிறார் மணி. எஞ்சி நின்ற இளையபெருமாள், சக்திதாசன், சேப்பன், சுந்தர்ராஜன், கொடிக்கால் செல்லப்பா, வை.பழனிவேலு ஆகியோரை வைத்து ‘ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கத்தை மணி உள்Liட்ட ஏழு பேர் கொண்ட குழு பதிவு செய்தது. 1989 சட்டமன்றத் தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டதில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நிறுத்தப்பட்ட தங்கராசு மட்டும் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் தலைவர்கள் நடந்து கொண்ட விதத்தை விரிவாக எழுதினால் அது தலித் மக்களுக்கு அவமானகரமாக இருக்கும் என்பார் மணி (சாதி ஒழிந்தது, பக். 68).
இதற்கிடையில் 1983 மீனாட்சிபுரம் மதமாற்றம் இந்திய அளவில் கவனம் பெற்றது, பணத்திற்காகவே தலித்கள் மதம் மாறினர் என இந்துத்துவ சக்திகள் பிரச்சாரம் செய்தபோது ஷெட்யூல்டு இன இயக்கத்தின் சார்பாக இளையபெருமாள் அவர்கள் சமூகக் கொடுமைகளே இந்த மதமாற்றத்தின் பின்னணி என அறிக்கை அளித்ததை ஒரு முக்கிய நிகழ்வாகக் குறிப்பிடுவார் மணி.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
தொண்ணூறுகளுக்குப் பின் தமிழக தலித் இயக்கப் போக்கில் ஒரு மிகப் பெரிய பண்பு மாற்றம் ஏற்பட்டது. உலக அளவில் ஏற்பட்ட ஊடகப் பெருக்கம், அடையாள அரசியலுக்குத் தத்துவார்த்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட பலம், இந்தியாவைப் பொருத்த மட்டில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி ஏற்பட்ட எழுச்சி முதலியன இதில் முக்கிய பங்கு வகித்தன.
தலித் அமைப்புகளைப் பொறுத்த மட்டில் இது இங்கு இரண்டு விளைவுகளை ஏற்படுத்தின. திருப்பனந்தாள் மணி அல்லது பரமக்குடி சந்திரபோஸ் என்கிற பகுதி அளவில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த தலைவர்களைத் தாண்டி தொல்.திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, முதலான தமிழக அளவிலான தலைவர்கள் உருவாயினர். இவர்கள் சென்னையை மையமாக வைத்து இயங்கத் தொடங்கினர். ஊடக வெளிச்சம் இவர்களுக்குத் தாராளமாகக் கிட்டியது.
இதன் இன்னொரு விளைவு இந்தப் புதிய தலைவர்கள் தமிழக அளவில் செயல்பட நேர்ந்ததன் ஊடாக இவர்கள் தலித் பிரச்சினைகளைத் தாண்டி தமிழக அளவிலான பொதுவான தேசிய அடையாளங்களைச் சூடிக் கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு செல்வாக்குடன் உருவான தலைவர் திருமாவளவன் தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு, அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுத்தார். தேர்தல் பங்கேற்பு மூலமான அரசியல் அதிகாரம் என்கிற நிலைபாட்டையும் இந்தப் புதிய தலைவர்கள் அழுத்தமாக முன்வைத்து அந்தத் திசையில் இயங்கவும் செய்தனர். ஆற்றல் மிகு பேச்சாளரான திருமாவளவனின் பின்னால் தமிழக அளவில் தலித் இளைஞர்கள் திரண்டனர். இதன் விளைவு பகுதி அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த டி.எம்.மணி, அரங்க குணசேகரன் போன்றோர் பலவீனமாயினர்.
நீலப்புலிகள் இயக்கத்திலிருந்து இராஜாங்கம், விவேகாநந்தன், இளங்கோவன், மணிசேகர் முதலானோர் விலகினர். விலகிய இளைஞர்களில் பலர் விடுதலைச் சிறுத்தைகள் முதலான பரந்த அளவிலான தலித் அரசியல் கட்சிகளில் இணைந்தனர். நீலப் புலிகள் இயக்கம் மணி அவர்களின் இறுதிப் பத்தாண்டுகளில் பலவீனமாகியது.
இது குறித்து நீலப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரும் மணி அவர்களின் மூத்த புதல்வருமான புரட்சி மணி இப்படிக் குறிப்பிட்டார்:
“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நீங்கள் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு ஒரு புதிய அதிகாரம் மட்டுமல்ல புதிய அங்கீகாரமும் கிடைத்தது. நீலப்புலிகள் இயக்கத்தில் இருந்தவரை அவர்கள் சைக்கிளில்தான் சென்று இயக்கப் பணிகள் செய்து கொண்டிருந்தனர். அப்பாவும் சைக்கிளில்தான் போய்க் கொண்டிருந்தார். இப்போது அவர்கள் கார்களில் பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றனர். மக்கள் மத்தியிலும் அதற்கு ஒரு ஈர்ப்பு இருந்தது”.
புரட்சிமணியின் சகோதரர்கள் சம்சுதீன், கவிமணி ஆகியோரும் இதை அங்கீகரித்தனர்.
தான் தலைவராக ஏற்றுப் பணி புரிந்த இளையபெருமாள் அவர்களையே விமர்சிக்கத் தயங்காத மணி அவர்கள் யாருடைய செயல்பாடுகள் மீதும் தன் கருத்தை முன் வைப்பதற்குத் தயக்கம் காட்டியதில்லை. தொண்ணூறுகளுக்குப் பின் உருவான புதிய தலைவர்கள் குறித்து அவர் இப்படி மதிப்பிடுவார்:
“தென் மாவட்டங்கள் கிருஷ்ணசாமி என்றும், வட மாவட்டங்கள் திருமாவளவன் என்றும் உருவாகியுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் தலித் அரசியலுக்கு வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை….. வட மாவட்டங்களைப் பொறுத்த வரையில் தலித்களின் அனைத்துப் பிரச்சினைகளிலும் (நாங்கள்) ஈடுபாடு கொண்டவர்களாய் இருந்தோம்…… அன்று தலைவர் திருமாவளவனும் அவரைச் சேர்ந்த தலைவர்களும் தலித் அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்றார்கள்…. பொதுவுடைமைச் சீர்திருத்தவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், நாம் முன் சொன்ன மீடியாக்களும் இவர்களை தலித் அரசியலுக்குத் தலைமை ஏற்கச் செய்தார்கள். அவர்கள் எதன் பொருட்டு இவர்களை இறக்குமதி செய்தார்களோ, அந்த வேலையை அழகாகவும் சிரத்தையுடனும் செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ் தேசியமும், ஈழ விடுதலையுமே கொள்கையாகக் கொண்டுள்ளார்கள்…” (தலித், விடுதலை முழக்கம், அக் 2009, பக்.6).
முத்தாய்ப்பாகப் புதிய சூழல் குறித்து மணி அவர்கள் தன் மதிப்பீட்டையும் கவலையையும் இப்படி முன்வைக்கிறார்:
“தற்போது அரசியல் அதிகாரம் என்ற பெயராலும், தமிழ்த் தேசியம் என்ற பெயராலும் தலித்துகள் போராட்ட குணமிழந்து இந்துக்களிடம் அடிமைப்படும் நிலை உருவாகியுள்ளது…” (தலித், விடுதலை முழக்கம், அக் 2009, பக். 32).
“”””””””””””””””””””””””””””””””””””””””
இங்கொன்றைச் சொல்ல வேண்டும். ஈழத்தில் தலித்கள் மீதான வன்கொடுமை தமிழகத்தைக் காட்டிலும் அதிகம். இதைத் தன் எழுத்துக்கள் மூலம் மிக அற்புதமாக ஆவணப்படுத்தியவர் எழுத்தாளர் டானியல். ஆனால் தமிழகத்தில் யாரும் அது குறித்துப் பேசியதில்லை. மற்றவர்கள் பேசாததது இருக்கட்டும். இங்குள்ள தலித் இயக்ககங்களும் பேசியதில்லை என்பதுதான் வேதனை. அப்படிப் பேசுவது ஏதோ ஈழப் போராட்டத்திற்கே துரோகம் இழைப்பது என்பது போன்ற நிலை இங்கு உருவாக்கப்பட்டது. இந் நிலையில் இது குறித்து விரிவாக தலித் இயக்கங்கள் மத்தியில் பேசியவராக நாம் மணி அவர்களைத்தான் காண முடிகிறது. மணி அவர்கள் உமர் ஃபாரூக்காகப் பிறப்பெடுத்தபின் எழுதிய “தமிழ் ஈழத்தில் தலித்கள்” (தலித் விடுதலை முழக்கம், அக்.2009). என்னும் கட்டுரை இந்த வகையில் மிகமிக முக்கியமானது. இக்கட்டுரை தனி வெளியீடாக வெளியிடப்பட வேண்டிய ஒன்று.
ஈழத்தில் எந்தெந்த வகைகளில் எல்லாம் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது, அதன் வரலாறு, அவர்களின் உரிமைப் போராட்டங்கள் எப்படி உயிர்ப்பலிகளில் முடிந்தன, தலித் கல்லூரி முதல்வர், யாழ் நகரசபைத் தலைவர் இவர்களெல்லாம் எப்படி விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், தலித்களுக்காக வழக்காட எப்படி டானியல் போன்ற தலித் தலைவர்கள் சிங்கள வழக்குரைஞர்களை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது என்றெல்லாம் அவர் மிக விரிவாக அக்கட்டுரையில் பதிவு செய்கிறார்.
“””””””””””””””””””””””””””””””””””””””””
மணி அவர்களின் விமர்சனங்கள் கூர்மையாக இருந்தபோதிலும் அது மிகவும் கண்ணியமாக இருக்கும், தான் விமர்சிப்பவர்களையும் அவர் தலைவர் என்றே குறிப்பிடுவது வழக்கம்.
தான் செயல்பட்ட பகுதிகளில் அம்பேத்கரின் புகழைப் பரப்பியதிலும் மணி அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்துக்களை மணியின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் காணலாம். சாதி ஒழிப்பிற்காக அம்பேத்கர் பரிந்துரைத்த மதமாற்றம் மற்றும் தனிக் குடியிருப்புகள் எனும் இரு வழிமுறைகளை அவரளவிற்குத் தமிழகத்தில் வலியுறுத்தியவர்கள் யாருமில்லை.
1992ல் திருவாய்ப்பாடியில் அம்பேத்கர் சிலையை நிறுவி அம்பேத்கரின் பேத்தி ரமா ஆனந்த் அவர்களின் கையால் அதைத் திறந்து வைத்தார். ஜான் பாண்டியன், திருமாவளவன் உட்படப் பல தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 1996ல் சோழபுரத்தில் நிறுவிய அம்பேதகர் சிலை பிரகாஷ் அம்பேத்கரால் திறந்து வைக்கப்பட்டது. 1996ல் திருத்துறைப் பூண்டியில் இம்மானுவேல் சேகரனின் சிலையை நிறுவியதன் மூலம் நீலப்புலிகள் இயக்கம் தலித் மக்களில் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் சார்ந்தது இல்லை என்பதைக் காட்டினார்.
2014ல் மணி அவர்களின் முன்முயற்சியில் நடத்தப்பட்ட கும்பகோணம் மாநாடு. தமிழக அளவில் செயல்படும் தலித் தலைவர்களை ஒன்றுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. “தமிழ்த் தேசியம் பேசாத, அரசியல் அதிகாரம் என்கிற பெயரில் தேர்தல் அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காத” தலைவர்கள் மட்டும் அதற்கு அழைக்கப்பட்டனர். சிவகாமி ஐ.ஏ.எஸ், திருவள்ளுவன், அரங்க செல்லதுரை, துரைராஜ் முதலானோர் இதில் கலந்து கொண்டனர்.
தேர்தல் அரசியலை மையமாக வைத்து மக்கள் திரட்டப்படுவதைக் கண்டித்த மணி, “மக்கள் தேர்தலுக்காக அல்ல, போராட்டங்களுக்காகத் திரட்டப்பட வேண்டியவர்கள்” என்றார்.
“””””””””””””””””””””””””””””””””””””””””””””
தொண்ணூறுகளுக்குப் பின் மேலெழுந்த தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் ஆகியவற்றின் மீதும் மணி அவர்கள் பல கூரிய அவதானங்களைச் செய்துள்ளார். பாமாவின் ‘கருக்கு’ நாவல் வெளிவந்து தமிழக இலக்கியச் சூழலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த தருணத்தில் அந்த நூலுக்கான விமர்சனக் கூட்டம் ஒன்றைக் குடந்தையில் நானும் மறைந்த தோழர் கணேசமூர்த்தியும் ஏற்பாடு செய்தோம். கணேசமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.. எனினும் மணி அவர்கள் மீது மிக்க மரியாதை உடையவர். மணியும் அவரிடம் மிக்க அன்பாக இருப்பார். கூட்டத்தை ஒரு தலித் குடியிருப்பில் நடத்துவது என முடிவு செய்து குடந்தை அரசு கல்லூரியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் காவிரிக் கரையை ஒட்டி அமைந்திருக்கும் சந்தனாள்புரத்தில் அதை நடத்தினோம். முன்னதாக கருக்கு நாவல் பிரதிகள் பத்து அம்மக்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டன. கூட்டத்திற்கு பாமா, அருட்தந்தை மாற்கு ஆகியோரும் வந்திருந்தனர். உள்ளூர் இலக்கிய நண்பர்களோடு, டி.எம்.மணி அவர்களையும் அழைத்திருந்தோம். ஒரு அரசியல் போராளியாக மட்டுமே அறியப்பட்டிருந்த மணி அவர்களின் அன்றைய பேச்சு அனைவரையும் அசர வைத்தது. மிக அழகான இலக்கிய மதிப்பீடாக மடுமின்றி சில கூரிய விமர்சனங்களையும் அவருடைய கோணத்திலிருந்து அவர் முன்வைத்தார்.
தலித் கலை என்கிற பெயரில் தப்படித்தல், தலித் மொழி என்கிற பெயரில் தலித்களின் பேச்சு மொழியில் எழுதுதல் ஆகியவற்றில் தனக்கு உடன்பாடில்லை என்பதை அன்று அங்கு ஆணித்தரமாக அவர் முன்வைத்ததோடு பின்னாளில் அவர் அதைக் கீழ்க் கண்டவாறு பதியவும் செய்தார்.
“கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத் தமிழ் வார்த்தைகளை நன்றாக தலித்களிடம் புரிந்து கொண்ட பாமா போன்ற எழுத்தாளர்கள். இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள். ‘தப்பு’ தான் தலித் கலை என்றால் குழல், யாழ் போன்ற ஏனைய இசைகள் எமக்கு உரிமை இல்லையா? பாமா சொல்வதுதான் தலித் இலக்கியம் என்றால் என் இனிய தமிழ் இலக்கியங்கள் எங்களுக்கு உரிமை இல்லையா? அகராதிகளில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்களைக் கூட இன்னும் எங்கள் தாய் வழிச் சொந்தமாகக் காத்து வரும் ஒரு கூட்டத்திற்கு ஊனத் தமிழ்தான் உரிமையா? தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வருண தருமக் கோட்பாடே. அண்ணல் அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கு இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதென்பதை சமத்துவத்திற்கான போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம். தப்புகளைச் செய்ய செத்த மாடு எங்களுக்குத் தேவையில்லை எனக் கோஷமிட்டோம்..” (சாதி ஒழிந்தது, பக்.11).
“மாட்டுத் தோல் மாடு உரித்தல், மாட்டிறைச்சி உண்ணுதல், மாட்டுத் தோலால் கயிறு பின்னுதல் போன்ற அருவருப்பான வேலைகளில் தொடர்பு ஏற்படுத்துவதுதான் இந்தத் தப்பு. பார்ப்பனர்களுக்கு எப்படி தர்ப்பையும், நாணலும் உயர்வுக்கு அடையாளமாகக் கருதப்படுகிறதோ அதைப் போலவே தலித்துகளுக்கு தப்பு தாழ்வுக்கான ஒரு அடையாளம்…” (சாதி ஒழிந்தது பக். 10).
சேரிகளை அவர் வெறுத்தார். தலித்களை நோக்கி, “அம்பேத்கரின் இலட்சியம் நிறைவேற ஒவ்வொரு சிந்தனை பெற்ற மனிதனும் சேரிகளை விட்டு வெளியேறுங்கள்” என்று அறகூவல் விடுத்தார் (செந்தமிழ்நாட்டுச் சேரிகள், பக்.94).
சேரிகளை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக இந்து மதத்தை விட்டு வெளியேறுவதை அவர் வற்புறுத்தினார்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
நான்கு
சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கென்று இதுகாறும் முன்வைக்கப்பட்ட வழிமுறைகள் பலவும் எவ்வாறு பொய்யாய்ப் போயின என்பதையும், எங்கே அவை தவறு செய்கின்றன என்பதையும் டி.எம்.மணி அவர்கள் தனது எழுத்துக்களில் பொருத்தமான இடங்களில் நச்சென்று சொல்லி வைக்கத் தவறுவதில்லை. சாதி ஒழிப்பிற்கான ஒரே தீர்வாக மதமாற்றத்தை அடையாளம் கண்டவராக அம்பேத்கர் அவர்களைப் போற்றும் மணி, ஆனால் அதுவும் கூட பவுத்த மதமாற்றம் என்கிற அளவில் சுருங்கியபோது இங்குப் பயனற்றுப் போனதை சுட்டிக்காட்ட தயங்குவதில்லை.
மதம் மாறுவதென்றால் இஸ்லாமால்தான் தீர்வு கிடைக்கும் என அம்பேத்கர் நம்பினாலும் என்ன பின்னணியில் அவர் பவுத்தத்தை நோக்கித் தள்ளப்பட்டர் என்பதை ‘அண்ணல் அம்பேத்கரின் மதமாற்றம்: பின்னணி என்ன’ எனும் குறு வெளியீட்டில் மணி விளக்குகிறார். இது குறித்து அவர் சொல்வதை இப்படிச் சுருக்கலாம்:
“தற்போதைய மதத்தை விட்டு வேறொரு மதத்தினரோடு ஒன்றாய்க் கலந்திடாமல் வேறு எவ்வழியிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பலமுடையவர்களாக முடியாது என்று கூறிய அம்பேத்கர், ‘நீங்கள் இப்படிப் பலமுடையவர்களாக ஆகாவிட்டால் உங்கள் எதிர்கால சந்ததியினரும் உங்களைப்போலவே பரிதாபமான வாழ்வைத்தான் வாழ முடியும்’ என 1936 மே 31 அன்று சக தாழ்த்தப்பட்டவர்களை எச்சரித்தார். அப்படி எச்சரித்ததோடு நிற்காமல், ‘நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன். அது என் குற்றமல்ல. நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன்’ என்ற உறுதியையும் வெளியிட்டார். மதம் மாறத் தயார் எனச் சொன்ன தன் சீடர்களிடம் அவர், ‘நீங்கள் மாறுவதாக இருந்தால் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறினார். அவர் நடத்தி வந்த ‘பகிஷ்கரித் பாரத்’ எனும் பத்திரிகை வழியாகவும் இந்தப் பிரச்சாரத்தைச் செய்தார்.
மதமாற்றம் என அம்பேத்கர் சொன்னவுடன் இந்துக்கள் பதறிப்போனார்கள். மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால் தாங்கள் (ஒன்றாக இருந்த இந்தியாவில்) சிறுபான்மை ஆகிப் போவோமே என்கிற அச்சம் அவர்களை ஆட்டுவித்தது. உடனே காரியத்தில் இறங்கினார்கள்.
இந்துக்களை எச்சரித்தார்கள். அம்பேத்கர் மனத்தை மாற்றுவது என ஒரு பக்கம் ‘இந்துமகாசபை’ முதலான இந்துத்துவ சக்திகளும், இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கின.
இந்துத்துவ சக்திகள் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் மூஞ்சே, ஜுகல் கிஷோர் பிர்லா, சங்கராச்சாரி கொண்ட மூவர் குழு ஒன்றின் மூலம் அம்பேத்கரிடம் பேச முடிவெடுத்தது. காங்கிரஸ் கட்சி காந்தியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
1930 களில் அம்பேத்கர் இவ்வாறு முடிவெடுத்தபோது அவர் முன் பவுத்தம் ஒரு தீர்வாக இல்லை. இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் ஆகிய மதங்களில் ஏதேனும் ஒன்று என்பதுதான் அன்று அவர் முடிவாக இருந்தது.
இந்நிலையில் டாக்டர் மூஞ்சே பம்பாய் சென்று மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தி அம்பேத்கரும் அவரைப் பின்பற்றுபவர்களும் இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்தைற்கோ போகாமல் சீக்கியத்திற்குப் போகுமாறு வற்புறுத்தினார். அம்பேத்கர் அதை ஏற்க வேண்டியதாயிற்று. பின்னர் தர்மானந்த கோசாம்பி முதலானவர்கள் அம்பேத்கரைச் சந்தித்து பவுத்தத்தைப் பரிந்துரைத்தனர்.”
-இது ‘அம்பேத்கரின் மதமாற்றம்’ எனும் குறு வெளியீட்டில் மணி அவர்கள் சொல்லியுள்ளதின் சுருக்கம். இவை 1930 களில் நடைபெற்ற நிகழ்வுகள். தன் வாழ்வின் இறுதியில் அம்பேத்கர் தன் ஆதரவாளர்களோடு மதம் மாறிய போது அவரது தேர்வு பவுத்தமாகவே இருந்தது என்பதை நாம் அறிவோம்.
இப்படி பவுத்தத்திற்கு மாறியது குறித்து ‘சாதி ஒழிந்தது’ எனும் நூலில் மணி கூறுவது:
“அம்பேத்கரின் அறிவுரையைக் கேட்டு மதம் மாறியவர்கள் மிகவும் சிறுபான்மை ஆனார்கள். மதமாற்றத்தின் மூலம் கூடுதல் பலம் பெற முடியும் என்கிற அம்பேத்கரின் கொள்கைக்கு மாறாக (உண்மையில் நடந்தது என்னவெனில் அம்பேத்கரின் அறிவுரையை ஏற்று) மதம் மாறிய பௌத்தர்கள் செயலற்றுப் போனார்கள். உதாரணமாக பெரியவர் சுந்தர்ராஜன், டாக்டர் சேப்பன், சக்திதாசன் போன்றவர்களை எடுத்துக் கொள்ளலாம். தற்பொழுது வி.டி.ராஜசேகர், பெரியார்தாசன் போன்றவர்கள் தன்னை பவுத்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
தனி மனிதனாக இவர்கள் தன்னை இந்து அல்ல என சொல்லிக் கொள்ள முடியும். (ஆனால்) இவர்களை ஆதரிக்க, அரவணைக்க, ஒன்றிணைந்து குரல் கொடுக்க, போராட, பெண் கொடுக்க, பெண் எடுக்க, ஒன்றிணைந்த கூட்டு வாழ்க்கைக்கு யாரோடு சேர்ந்து நிற்பார்கள்? தன்னை இந்து இல்லை என்று சொல்லிக் கொண்டால் போதுமா? மானுடத்தில் இணைந்திட வேண்டாமா? மதமாற்றம் என்பது பெயரை மாற்றிக் கொள்கிற விஷயமல்ல. மதமாற்றம் என்பது சமுதாயத்தில் கூட்டு வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். அதை விட்டு மேலும் மேலும் தன்னைத் தனிமைப் படுத்துவதாக இருக்கக் கூடாது (பக்.74).
‘கடவுளை மாற்றுவோம்’ எனும் குறு வெளியீட்டில் இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார். “நான் பவுத்தன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு, இந்துக் கோயில்களை வணங்கிக் கொண்டு, இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டு, இந்து சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றிக் கொண்டு” இருக்கும் நிலைக்குத்தான் இங்கு பவுத்த மாற்றம் கொண்டு விடும்.
அப்படித்தான் நடந்தது. முதல் தலைமுறையில் பவுத்தத்திற்கு மாறிய பலரது அடுத்த தலைமுறைகள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளதுதான் எதார்த்தம். நிறைய பவுத்த மதமாற்றங்களைச் செய்த பெரியவர் ஒருவரை ஒருமுறை நண்பர் அயன்புரம் ராஜேந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். “உங்களால் பவுத்தம் வந்தடைந்தவர்கள் தங்களின் மதக் கடைமைகளைச் செய்ய, கடவுளை வணங்க எங்கு போகிறார்கள்?” என நான் கேட்டபோது அவர் சோர்ந்து போனார். “அதுதான் சார் எங்களுக்குப் பிரச்சினை. இங்கே புத்த கோவிலே கிடையாது. எல்லாத்துக்கும் சென்னை வந்து கென்னத் லேனுக்குத்தான் போகணும்”. இது ஒரு முக்கியமான நடைமுறைப் பிரச்சினை. பவுத்தத்தில் கடவுள் என்கிற கருத்தாக்கமே இல்லை என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க முடியாது. மனிதர்கள் சமூகப் பிராணிகள். குழந்தை பிறந்தால், அல்லது ஒருவர் இறந்தால், ஒரு திருமணம் நடந்தால் அவற்றை ஏதோ ஒரு வகையில் புனிதப்படுத்துதல் (solemnize) சமூக வாழ்வில் அவசியமாகிறது. சமூகம் முழுமைக்கும் அரசியல் தெளிவு ஏற்படாத வரைக்கும் இது ஒரு பிரச்சினைதான்.
ஆக இந்துமதத்தை விட்டுப் போவது என்பதுதான் தலித்களுக்குள்ள ஒரே வழி. ஆனால் அப்படிப் போகும் இடம் ஒருவரை மேலும் தனிமை ஆக்கிவிடக் கூடாது. முழுமையான சமூக வாழ்க்கைக்கு அது இடமளிக்க வேண்டும். பவுத்தம் அதைச் சாதிக்காது என்பதுதான் முடிவாக மணி சொல்லும் சேதி.
சரி அப்படியானால் இரட்டை வாக்குரிமை மூலம் தலித்களுக்கு விடிவு கிடைத்து விடுமா? இந்தக் கேள்விக்கு ‘கிடைத்துவிடும்’ அல்லது ‘கிடைத்துவிடாது’ என பதில்சொல்ல முயற்சிக்காமல் மணி நம் கவனத்தை வேறு திசைப் பக்கம் திருப்புகிறார். ‘இன்றுள்ள தேர்தல் முறையில் தலித்கள் யாரையாவது அண்டிப் பிழைக்க வேண்டியுள்ளது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்றைய அமைப்பில் இரட்டை வாக்குரிமை என்பது சாத்தியமே இல்லை’ என்பதுதான் மணி இது குறித்து சொல்வது.
“தனித் தொகுதி குறித்துத் தலைவர் கன்சிராம் கூறுகிறார். ‘இந்தத் தனித் தொகுதிப் பிரதிநிதித்துவம் குறித்துப் போராடுவதில் நான் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஆங்கிலேயர் ஆட்சியில் பாபாசாகிப் அம்பேத்கருக்குச் சாத்தியமாகாதபோது, சாதியவாதிகள் ஆளும் காலத்தில் என்னால் எப்படிச் சாதிக்க முடியும்?’ என்கிறார். தலைவர் கன்சிராமின் இரத்தினச் சுருக்கமான இந்த கருத்து நிறைய பொருள் அடங்கியது. இந்திய அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு முடிவை எடுக்கின்ற அளவிற்கு தகுதியோ, திறமையோ, அதிகாரமோ இவர்களுக்கு (இன்றைய ஆட்சியாளர்களுக்கு) கிடையாது. மேலும் இவர்கள்தான் தம் உயிரைப் பணயம் வைத்து இரட்டை வாக்குமுறையை எதிர்த்தவர்கள். அவர்களிடமே போய் கையேந்தி நிற்பது சிறுபிள்ளைத்தனமானது.” (சாதி ஒழிந்தது, பக். 77, 78).
தமிழ்த் தேசியம்தான் சாதி ஒழிப்பிற்கான தீர்வு என்பவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார் மணி. தமிழ் மேன்மை பேசிய மறைமலை அடிகளார் போன்றோர் எப்படி இன்னொரு பக்கம் வேளாள மேன்மை பேசியவர்களாகவும், சாதி மற்றும் தீண்டாமையை ஏற்றுக் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பதை விரிவான ஆதாரங்களுடன் அவர் நிறுவுவதை (சாதி ஒழிந்தது பக்: 80-87) சுருக்கம் கருதி இங்கு தவிர்க்கிறேன்.
“தமிழ் தேசியத்தின் மூலம் அகமண முறையை ஒழித்து, பின் சாதியத்தை ஒழித்து ..” என்றெல்லாம் வாயாடுபவர்களிடம் சாதி உள்ளவரை அகமண முறை இருக்கும்; பொது மணம் சாத்தியமில்லை” எனக் கண்டிக்கிறார். கலப்புத் திருமணம் என்பதும் சாதியை ஒழிந்துவிடவில்லை. அது ஏதேனும் ஒரு சாதிக்குள் முடங்குவதற்கே இட்டுச் செல்கிறது என்கிறார் (அம்பேத்கரின் மதமாற்றம், பக்.3).
“பொதுவுடைமைக் கொள்கை தலித்களுக்கு எதிரானதல்ல” எனக் கூறும் மணி, ஆனால் வர்க்க ரீதியாக இங்கு மக்களைப் பிரிக்க முடியாத நிலை இங்கிருப்பதையும் ஏழைப் பிற்படுட்டப்பட்ட சாதிகளே தலித்களுக்கு எதிராகக் களத்தில் இருப்பதையும்” அவர்கள் உணர்வதில்லை என்கிறார் (சாதி ஒழிந்தது, பக்.16).
தொடர்ந்து கல்வி, பணம், நாகரீகமான பண்புகள் இவை தீண்டாமையைப் போக்குமா எனக் கேள்வி எழுப்பி இவை எதுவும் போக்கிவிடவில்லை என்பதுதான் எதார்த்தம் என முடிக்கிறார் (கடவுளை மாற்றுவோம், பக்.18).
அப்படியாயின் சாதியையும், சாதியால் இங்கு ஒட்டிக் கொண்ட இழிவையும் ஒழிக்க என்னதான் வழி?
அந்த வழியை அவர் சொன்னதோடும் எழுதியதோடும் நிற்கவில்லை. வாழ்ந்து காட்டினார்.
ஐந்து
2007 மே 7 அன்றுதான் டி..எம்.மணி அவர்கள் கலிமா ஓதி டி.எம். உமர் ஃபாரூக் ஆனார். அவரோடு அன்றே அவரது மனைவி அகிலம்மை அவர்களும் ஆயிஷா பேகம் ஆனார்கள்.
உமர் ஃபாரூக் தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள். நான்கு பெண்கள். மூன்று ஆடவர்கள். பெண்களில் ஒருவர் வழக்குரைஞர். மற்றவர் அரசு ஊழியர்கள். மூன்றாவது மகன் கவிமணி ஒரு பொறியாளர்.
இரண்டாவது மகன் வெற்றிமணி 1992ம் ஆண்டே இஸ்லாம் ஆனார். இப்போது அவர் சம்சுதீன். சுனாமியால் (2004) பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்தித்துக் கொண்டு வரும்போது பட்டினப்பாக்கம் பள்ளிவாசல் ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்த மீனவர்கள் மத்தியில் சேவை புரிந்து கொண்டிருந்த சம்சுதீன் எனக்கு சலாம் சொல்லி, “சார், நான் திருப்பனந்தாள் டி.எம். மணியின் மகன்” என அறிமுகப்படுத்திக் கொண்டபோது மகிழ்ந்து போனேன். மனம் நிறைய வாழ்த்தி விடைபெற்றேன். த.மு.மு.க அமைப்புடன் அவர் தொடர்பில் உள்ளார்.
மதம் மாறியபின் உமர் ஃபாரூக்கின் பெயர் மட்டும் மாறவில்லை. தொப்பி, தாடி, மூட்டிய வெள்ளை வேட்டி சகிதம் முழுமையான ஒரு இஸ்லாமியத் தோற்றம் கொண்டார். வெறும் வெளித் தோற்றம் மட்டுமல்ல. ஐந்து வேளைத் தொழுகை, ரம்சான் மாதத்தில் நோன்பு என அவர் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்தார். திருப்பனந்தாளில் இப்போது அவர் இல்லம் “பாய் வீடு” என அடையாளப் படுத்தப்படுகிறது. எனினும் அவர் மதமாற்றம் எந்த ஆர்பாட்டங்களுடனும் நடக்கவில்லை. மிக அமைதியாக அது நிகழ்ந்தது.
அவர் இறந்த அன்று என்னால் இறுதி அஞ்சலி செலுத்த இயலவில்லை. ஒரு வாரத்திற்குப் பின் நான் அங்கு சென்றபோது இறுதி நிகழ்ச்சி எப்படி நடைபெற்றது எனக் கேட்டேன். முழுமையான இஸ்லாமிய நெறிமுறைகளின்படி நடந்தது எனவும், இஸ்லாமியப் பெரியவர்கள் முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டனர் எனவும் பள்ளிவாசலை ஒட்டிய கல்லறைத் தோட்டத்தில் அவர் அடக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவரது பிள்ளைகள் கூறினர். அவரது அடக்கத் தலத்தில் சில மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்த எனக்கு விருப்பந்தான். ஆனால் இஸ்லாமிய மரபில் அதற்கு இடமில்லை என்பதை அறிவேன்.
“எங்க அப்பாவைத் தொட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டி உடை உடுத்தி அவர்களே (அதாவது அவ்வூர் இஸ்லாமிய மக்களே) எல்லாம் செய்தார்கள் சார். எங்களுக்கு முழு திருப்தி சார்.. “ இப்படிக் குறைந்த பட்சம் இரு முறையேனும் நான் உமர் ஃபாரூக் அவர்களின் இல்லத்தில் இருந்த அந்த இரண்டு மணி நேரத்தில் அவரது பிள்ளைகள் சொல்லியிருப்பர்கள்.
“எங்களுக்கு முழு திருப்தி சார்..” எனும் சொற்கள் அடுத்த சில நாட்கள் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. மரணம் என்பதைத் ‘துக்கம்’ என அழைப்பது தமிழ் மரபு. பௌத்தத்தில் ‘துக்க’ என்றால் முழுமையற்றிருப்பது. ஏதோ ஒன்றோ, சிலவோ குறைவது.
‘திருப்தி’ என்பது எல்லாம் நிறைந்ததால் ஏற்படும் உணர்வு. இங்கே மரணம் எப்படி திருப்தி ஆகிறது?
உமர் பாரூக் அவர்களின் சாதி ஒழிந்ததைக் கண்ணால் கண்டபோது அவரது பிள்ளைகள் அடைந்த திருப்தி, அவரது மறைவால் ஏற்பட்ட துக்கத்தை விஞ்சியது என்பதாகத்தான் அதை நான் விளங்கிக் கொண்டேன்.
“அப்பாவை எல்லாவற்றிலும் பின்பற்றுகிற நீங்கள் ஏன் அவரோடு மதம் மாறவில்லை?” என புரட்சிமணியிடம் கேட்டேன்.
“அப்பா யாரையும் காட்டாயப்படுத்தியதில்லை. சென்ற ஆண்டில் திருப்பனந்தாள் பகுதியில் அப்பா பெரிய அளவில் மதமாற்றம் செய்கிறார் என ஆர்.எஸ்.எஸ் பிரச்சினை செய்தது. நக்கீரன் இதழும் பெரிதாகக் கட்டுரை எழுதியது. அப்ப நக்கீரன் செய்தியாளர் அப்பாவை போனில் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டார். ‘மதம் மாறுவது பற்றிப் பேச எனக்கு உரிமை உண்டு. அனால் நான் என் பிள்ளைகள் உட்பட யாரையும் கட்டாயமாக மதம் மாற்றியதில்லை’ என்றார். அப்பா மதம் மாறியதில் எங்களுக்கெல்லாம் எந்த கருத்து மாறுபாடும் இல்லை. நாங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம்” என்றார் அவர்.
“அப்பாவின் மூலம் அப்படி எவ்வளவு பேர் மதம் மாறியிருப்பார்கள்?”
“ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும்”
இது எனக்குப் பெரு வியப்பு. உமர் ஃபாரூக் அவர்கள் குலாம் முகம்மது அவர்களின் ‘அறிவகம்’ அமைப்புடன் இணைந்து பல ஆண்டுகளாகத் ‘தாவா’ பணிகள் செய்து கொண்டிருப்பதாக அறிவேன். ஆனால் இவ்வளவு பேர்கள் அவர் மூலம் இஸ்லாமாயினர் என்பது எனக்கு வியப்புதான். உடன் குலாம் முகம்மது அவர்களைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டேன். அவர் சொன்னது என் வியப்பைக் கூட்டியது.
“அதைவிட அதிகமா இருக்கும் சார். அவரது பிள்ளைகள் சொன்னது கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் முதலிய பகுதிகளில் நடந்த மதமாற்றங்களின் அடிப்படையில்தான். அறிவகம் அமைப்பே திருப்பனந்தாளில் அவரது அலுவலகத்தில்தான் தொடங்கியது. பின்னாடி அது தேனி மாவட்டம் முத்துத்தேவன் பட்டிக்கு மாறிய அப்புறமும் அந்தப் பகுதியில் நடந்த மதமாற்றங்களிலும் அவருக்குப் பங்கிருந்தது. ஒரு தடவை ‘சாதி ஒழிந்தது’ ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக டெல்லி போயிருந்தோம். காலையில் அவர் வாக்கிங் போவார். மொழி தெரியாத இடத்தில்தனியாப் போகாதீங்கன்னு நான் சொன்னபோது சிரித்த அவர், ‘இரண்டு நாளும் நான் வாக்கிங் போற போது அங்கே தங்கியிருந்த இரண்டு தமிழ் பேசுறவங்களிடம் இஸ்லாம் ஆகிறதைப் பற்றிப் பேசி இருக்கிறேன்’ என்றார். ரொம்ப ஈடுபாட்டுடன் அதைச் செஞ்சார்.” என்றார் குலாம் முகம்மது.
நீ இஸ்லாத்திற்கு மாறினால் உன் மீது படிந்திருந்த தீண்டாமை ஒழியும் எனச் சொன்ன அவர் இதை அதற்கான ஒரு வழிமுறையாக மட்டுமே மேற்கொள்ளவில்லை. அவர் இஸ்லாத்தின் ஏக இறைத் தத்துவத்தை மனதார ஏற்றுக் கொண்டார்..
“இஸ்லாமியர் என்கிற அடையாளமான தாடியை, தொப்பியை எவ்வித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள். ‘அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!’ என உரக்கக் கூவுங்கள். அந்த அற்புத ஒலி ஏக இறைவனின் காதுகளில் உரக்க ஒலிக்கட்டும். உங்களை இரண்டாயிரம் ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்த உங்கள் எதிரிகள் காதில் அழைப்பொலியாக இருக்கட்டும். அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்! அஸ்ஸலாமு அலைக்கும்” என முடிகிறது அவரது ‘செந்தமிழ்நாட்டுச் சேரிகள்’ எனும் நூல்.
‘இறைவனின் இந்த இஸ்லாமியத் தத்துவங்கள் உலகெல்லாம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் எடுத்துச் செல்ல வெண்டிய மாபெரும் தத்துவங்களாகும். இவை இரகசியமாகக் கூட்டங்களில் சொல்லப்படவேண்டியவை அல்ல. மாறாக மலை மீதும், குன்றின் மீதேறியும் நின்று வெளிப்படையாக அனைத்து மக்களுக்கும் எட்ட வைக்கப்பட வேண்டிய உயர்ந்த தத்துவங்கள். ஆகும். அனைத்து மக்களுக்கும் வழி காட்டக் கூடிய கருத்துக்களாகும். இறைவன் ஒருவனே, நீங்கள் அவனையே நம்புங்கள். முஹம்மது நபி அவர்களையே ஏற்றுக் கொள்ளுங்கள், பின்பற்றுங்கள்”. இது அவரது ‘தீண்டாமைக்குத் தீர்வு’ நூலின் முடிவுரைச் சொற்கள்.
‘தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரே மார்க்கம் இஸ்லாம்” என்று சொன்னதோடு அவர் நிற்கவில்லை. அப்படி இஸ்லாத்தை நோக்கி வருபவர்கள் “உண்மை பக்தர்களாக, விசுவாசிகளகளாக” ஆக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.
அவரது ‘சாதி ஒழிந்தது’ என்னும் நூல் ஆங்கிலம், இந்தி, கன்னடம் முதலான மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலமொழியாக்கம் டெல்லியிலும், இந்தி மொழியாக்கம் லக்னோவிலும், கன்னட மொழியாக்கம் பெங்களூருவிலும் வெளியிடப்பட்ட போது சமூகச் செயல்பாட்டாளர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் முதலானோர் எழுப்பிய கேள்விகளை உமர் ஃபாரூக் அவர்கள் மிகச் சிறப்பாக எதிர் கொண்டதையும் பேச்சாளர்களும் பார்வையாளர்களும் அவரது பல்துறைப் புலமையைக் கண்டு வியந்துபோனதையும் அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் குலாம் முகமது நினைவுகூர்ந்தார்..
“””””””””””””””””””””””””””””””””””””””””””
தீண்டாமையின் தோற்றம், ஒழிப்பு முதலானவை குறித்து இங்கு நிலவும் கோட்பாடுகளை உமர் ஃபாரூக் தலைகீழாகத் திருப்பிப் போட்டார். மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்தார். தீண்டப்படாத மக்களின் தாழ்வு என்பது “வணங்குகிற கடவுளால் வந்தது. வணங்குகிற கடவுளை மாற்றாத வரை தீண்டப்படாத மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் காண முடியாது. சமூக விடுதலையைப் பெற முடியாது. ஒன்று திரண்டு போராடு, புரட்சி செய் என்பதெல்லாம் தற்காப்பு நடவடிக்கையே அன்றி சமூக விடுதலையைத் தந்து விடாது” என்றார் (கடவுளை மாற்றுவோம், பக்.27).
மற்ற தத்துவங்கள் இறுதி உபாயமாகச் சொன்னவற்றை உமர் ஃபாரூக் வெறும் தற்காப்பு நடவடிக்கைகள்தான் எனச் சொல்வதைக் கவனியுங்கள். பிறிதோரிடத்தில், “உற்பத்தி உறவா இங்கு ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கின?” என நகைப்பார்.
டி.எம்.உமர் ஃபாரூக்கைப் பொறுத்த மட்டில் இங்குள்ள ஏற்றத்தாழ்வுகள் சாதீய அடிப்படையில் ஆனவை. இவற்றை உருவாக்கியது மதம்தான். சாதீய இழிவுக்கான ஒரே தீர்வு இஸ்லாமிய மதமாற்றந்தான்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””
தன்னைப் பின்பற்றி வந்தவர்களிடம், இஸ்லாமிய மதமாற்றத்தால் எந்த இழப்பும் ஏற்படாது, பயன் மட்டுமே கிட்டும் என உமர் ஃபாரூக் உறுதி கூறினார். இஸ்லாமிய மதமாற்றத்தால் இட ஒதுக்கீடு போகுமே எனக் கவலை தெரிவித்தவர்களை நோக்கி அவர் சொன்ன பதில் அவரது சுயமரியாதை உணர்விற்கும் நறுக்கான பேச்சுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. “ஊனமுற்றோர் இருக்கையில் அமர ஊனப்படுத்திக் கொள்ளலாமா?” என்பதுதான் அந்தப் பதில் (கடவுளை மாற்றுவோம், பக்.19).
இஸ்லாத்தில் பலதார மணம் உள்ளதே என்கிற கேள்விக்கு தரவுகளின் அடிப்படையில் பிற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தில் அதிக அளவில் பலதார மணங்கள் இல்லை என நிறுவினார்.
“நேற்று வரை செல்வமாக இருந்தவர் இன்று முகமது மைதீன். பள்ளிவாசலில் தொழுகைக்கு அனைவரையும் அழைக்கும் முஅத்தீனாக இருக்கிறார்.
நேற்று வரை ஞானராஜாக இருந்தவர் இன்று ஜமாலுத்தீன். பள்ளிவாசலில் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கும் இமாமாக இருக்கிறார்.
நேற்று வரை ராஜேந்திரன் இன்று முகம்மது சுல்தான். எலெக்ட்ரிகல் கடையில் வேலை.
நேற்று வரை காமராஜ் இன்று ஹாலி முகம்மது, சூப்புக்கடை.”
இப்படி ஒரு நீண்ட பட்டியலைத் தந்து இஸ்லாம் உன் வாழ்வில் அனைத்து வகைகளிலும் ஒளியேற்றும் என்றார் (கடவுளை மாற்றுவோம், பக்.28,29).
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
2007 ல்தான் மதம் மாறியபோதும் இஸ்லாமிய அழைப்புப் பணியை உமர் ஃபாரூக் அவர்கள் கடந்த 35 ஆண்டு காலமாகவே செய்து வருகிறார் என அவரது பிள்ளைகள் கூறுகின்றனர். அவரது ‘அம்பேத்கர் மாணவர் இளைஞர் பேரவை’ மற்றும் ‘நீலப்புலிகள்’ இயக்கத்திலிருந்தவர்களில் சிலரும் அப்படி மதம் மாறியுள்ளனர். பாலக்குடி சிவசுப்பிரமணியன் சிராஜுதீனாகவும், சிக்கல் நாயக்கன்பேட்டை கன்னையன் ஜக்கரியா ஆகவும், பட்டம் சுந்தர்ராஜன் சதாத் அலி கானாகவும், டி.பழூர் கருணாநிதி முகம்மது கனியாகவும் இப்படி மதம் மாறினர். இவர்களில் கடைசி இருவர் குடும்பத்தோடு மாறினர்.
“இப்படி இயக்கச் செயல்பாடுகளில் இருந்து கொண்டே அழைப்புப் பணியையும் செய்ததற்கு இயக்கத்தில் ஏதும் எதிர்ப்பு இருந்ததா?” எனக் கேட்டேன்.
“இல்லை யாரும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அப்பா யாரையும் வற்புறுத்தியதும் இல்லை. அதோடு அவரது எந்தப் பணியும் தலித் பிர்ச்சினைகளில் அவரது கவனத்தைக் குறைத்ததில்லை. அதனால் யாரும் எதிர்க்கவில்லை” என்றார் புரட்சிமணி.
“இயக்கத்திலிருந்து வெளியேறியவர்கள் அப்படி ஏதும் குற்றச்சாட்டுகளை வைத்தார்களா?”
“வெளியேறியவர்கள் வேறு காரணங்களுக்காத்தான் வெளியேறினார்கள். அவர்களில் சிலர் மதம் மாறுவது என்கிற முடிவோடு இருந்தவர்கள் கூட. வேறு காரணங்களுக்காக வெளியேறிய ஒரு சிலர் மதம் மாறியதையும் ஒரு காரணமாகச் சொன்னது உண்மைதான்.”
35 ஆண்டுகளாக இஸ்லாமிய மதமாற்றம் குறித்துப்பேசி இயங்கியவராயினும், அவரது மகன் 23 ஆண்டுகளுக்கு முன்பே மாதம் மாறியிருந்த போதும் உமர் ஃபாரூக் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்தான் இஸ்லாம் ஆகியுள்ளார். தலித் மக்கள் மத்தியில் தொடர்ந்து பணி செய்வதற்கு இஸ்லாமிய மதமாற்றம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என அவர் நினைத்திருக்க வேண்டும்.
உமர்ஃபாரூக் அவர்கள் பற்றிய இந்தக் குறிப்பை முடிக்கும் முன் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
2007ல் அவர் இஸ்லாமான பின்னும், அவரது இல்லம் ‘பாய் வீடு’ என ஆன பின்னும் அவர் தலித் மக்களுடன்தான் இருந்தார். மட்டியூரில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் நீலப்புலிகள் இயக்கக் கொடி மரங்களை சாதி வெறியர்கள் இருமுறை உடைத்தெறிந்ததை எதிர்த்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த போதுதான் அவரது உயிர் பிரிந்தது. ஆஞ்ஜியோ செய்து வந்து முற்றிலும் ஓய்வாக இருக்க வேண்டிய நிலையில் அவர் மாவட்ட அதிகாரிகளைப் பார்ப்பதற்காக தஞ்சாவூருக்கு அலைந்து கொண்டிருந்தார். கொடிமரங்கள் உடைபட்டதோடு மட்டுமல்லாமல், அதை எதிர்த்துப் போராடியதற்காக 13 தலித்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுக் கூட்டங்களில் பேசினார். கடைசி நாட்களில் மட்டியூர் பிரச்சினை குறித்துக் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அது உமர் ஃபாரூக் அவர்களின் மரணத்தை விரைவு படுத்தியது என்றும் அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.
இஸ்லாம் ஆன பின்னும் ஏன் தலித் இயக்க வேலைகளைத் தொடர்கிறீர்கள் என்கிற கேள்வி உமர் ஃபாரூக் அவர்கள் முன் வைக்கப்பட்ட போது அவர் சொன்ன பதில்:
“யாருக்கு என்னுடைய பணி உடனடித் தேவையாக உள்ளதோ அவர்களோடு இருக்கிறேன்.”
உதவிய T.M. உமர் ஃபாருக் அவர்களின் நூல்கள்
சாதி ஒழிந்தது, வேர்கள் பதிப்பகம், 2008
செந்தமிழ்நாட்டுச் சேரிகள், வேர்கள் பதிப்பகம், 2008
கடவுளை மாற்றுவோம், வேர்கள் பதிப்பகம், 2010
அம்பேத்கரின் மதமாற்றம், வேர்கள் பதிப்பகம், 2014
தீண்டாமைக்குத் தீர்வு, இலக்கியச் சோலை, 1996
தலித் விடுதலை முழக்கம், மாத இதழ், அக்டோபர் 2009