(தோழர் கே.இராமச்சந்திரன் எழுதிய பத்திக் கட்டுரை ஒன்றைத் தழுவியது)
யார் இந்த கௌரி லங்கேஷ்? ஏன் அவர் கொல்லப்பட்டார்? இந்தச் சின்ன அறிமுகம் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல முனைகிறது. எல்லா அரசியல் கொலைகளிலும் அதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு முன்பாக மேற்கொண்ட கள நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
கொல்லப்படும் அன்றும் அதற்கு முதல்நாளும் கௌரியும் அவரது பத்திரிக்கைக் குழுவும் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் வட கனரா தொகுதி பா.ஜ.க எம்.பி ஆனந்த் ஹெக்டே புதிய அமைச்சராக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனந்த் ஹெக்டேயை ஒரு ‘கிரிமினல்’ எனவும் ‘ரவுடிக் கும்பல் தலைவன்’ (gangster) எனவும் வெளிப்படையாகக் கௌரி விமர்சித்தார். இந்த ஹெக்டே ஒருமுறை சிர்சியிலுள்ள ஒரு மருத்துவமனைக்குட்தன் தாயைக் கொண்டு சென்றபோது அங்குள்ள ஒரு மருத்துவரை அறைந்த நிகழ்ச்சியை CCTV பதிவுகளை எல்லாம் எடுத்து அம்பலப் படுத்தியவர் கௌரி. அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் எனத் தீவிரமாகக் களத்தில் நின்று கௌரி போராடிக் கொண்டிருந்தபோது மோடி அந்த ஆளை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார். இந்தத் தருணத்தில்தான் அந்தத் தளர்ந்து மெலிந்த உடலில் ஏழு குண்டுகள் பாய்ச்சப்பட்டன.
மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹனின் தகிடுதத்தங்களையும் கௌரியின் பத்திரிக்கை தொடர்ந்து அமபலப்படுத்திக் கொண்டிருந்தது. கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ் கூடாரங்களாக உள்ள சாமியார் மடங்களின் மூட நம்பிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்திக் கொண்டிருந்த பேரா.கல்புர்கி இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்டதை அறிவோம். அப்போது சித்தாராமையா அரசு இத்தகைய மடங்களின் பாபாக்களும் சாமியார்களும் மேற்கொள்ளும் மூட நம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தடை கொண்டுவர முயன்றார். இது தொடர்பாகச் சட்டமொன்றை இயற்ற குழு ஒன்றையும் அமைத்தார். இந்தக் குழு பொதுமக்களிடமிருந்து இந்த மாதிரி நடவடிக்கைகளை அடையாளம் காட்டுமாறு வேண்டிக் கொண்டது. அவ்வாறு வந்த கருத்துக்களை அது தணிக்கை செய்யாமல் அப்படியே அரசு இணைய தளத்தில் வெளியிடவும் செய்தது. நம்முடைய தீவிர பகுத்தறிவாள நண்பர்களின் அதி உற்சாகம் சில நேரம் பெரிய அளவில் மக்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்துவதற்கு இட்டுச் செல்வதுண்டு. மூட நம்பிக்கைகளுக்கும் சில பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்குமான மெல்லிய இடைவெளியை மிக லாவகமாகக் கையாள வேண்டியுள்ளதைப் பற்றிக் கவலைப் படாத சில அதி உற்சாகிகள் குங்குமம் இட்டுக் கொள்வது, தாலி அணிந்து கொள்வது எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டிய மூட நம்பிக்கைகளாகப் பரிந்துரைத்தனர். அவையும் அரசு இணையத் தளத்தில் இடம் பெற்றன.
பாஜக எம்பி பிரதாப் சிம்ஹன் இதை மிகத் தந்திரமாகத் தமக்கு ஆதரவாகத் திருப்பினார். இந்த சிம்ஹன் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவனும் கூட. காங்கிரஸ் அரசாங்கம் குங்குமம் அணியக் கூடாது, தாலி கட்டிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்கப் போவதாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
இந்தப் பிரச்சினையிலும் கௌரிதான் பிரதாப சிம்ஹனை அம்பலப்படுத்தியது. இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் ஷிமோகாவில் வழிபாடு என்னும் பெயரில் பெண்களை அம்மணமாக ஊர்வலம் விடும் “பெத்தல சேவே”, உடுப்பி பெஜாவர் மடத்தில் பார்ப்பனர் சப்பிட்ட எச்சில் இலைகளின் மீது அடித்தள சாதி மக்களைப் புரள வைக்கும் “உருளு சேவே” போன்ற மூட நம்பிக்கைகளைத் தக்க வைப்பதுதான் பிரதாபனின் நோக்கம் என்பதை அவர் அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தினார்.
லிங்காயத்துகள் தம்மை இந்துக்களில் ஒரு பிரிவாகக் கருதக் கூடாது, இந்து மதத்திலிருந்து வேறுபட்ட தனி மதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போராட்டத்திலும் கௌரி முழுமையாக அவர்களோடு நின்றார். ஆதரவளித்தார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வீரசைவச் சனாதனிகளின் ஆத்திரத்திற்கும் அவர் ஆளானார்.
காவிக் கும்பல் கௌரியைக் குறி வைத்ததற்குப் பின்னணியான சம்பவங்களில் சில இவை.
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதோ தனது பத்திரிகையில் எழுதியும் முகநூல் போன்ற ஊடகங்களில் பதிந்தும் விட்டுத் தன் கடமையை நிறைவேற்றியதாக நினைத்து ஓய்பவராகக் கௌரி இருக்கவில்லை. அவர் ஒரு களப்போராளியாக இருந்தார். இலக்குகளைச் சரியாக நிர்ணயித்துத் தாக்கினார். நீண்ட கால அதிருப்தி உணர்வுகள் ‘ஜல்லிக்கட்டு’ போன்ற ஒரு மையப் புள்ளி அகப்படும்போது அதை மையமாகக் கொண்டு சிவில் உரிமைப் போர்கள் வெடிக்கின்றன. கர்நாடகத்தில் அப்படியான மையப் புள்ளியாக (Nodal Point) கௌரியின் செயல்பாடுகள் அமைந்தன.
கௌரியின் அரசியல் வரலாறும் வாழ்வும்
இந்திய அளவிலான பிரச்சினைகளில் கர்நாடகத்தில் செயல்படும் பல்வேறு முற்போக்கு, தலித். சிறுபான்மை இயக்கங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துக் களம் இறக்க யாரையாவது அணுக வேண்டும் என்றால் அது கௌரி லங்கேஷாகத்தான் இருந்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள உனாவில் மாட்டுத் தோல் உரித்த தலித்கள் தாக்கப்பட்ட நிகழ்வை ஒட்டி ஒரு புதிய தலைமுறை தலித் தலைமையாக ஜிக்னேஷ் மேவானி உருப்பெற்றபோது கர்நாடகத்திலிருந்து முதலில் நேசக் கரம் நீட்டியது கௌரிதான். தலித் உள்ளிட்ட அடித்தள மக்களை இழிவு படுத்தும் பெஜாவர் மடச் சாமியாரின் ‘உருளு சேவை’ க்கு எதிரான ‘சலோ உடுப்பி’ போராட்டத்திற்கு மேவானியை அழைத்து, தன் இல்லத்தில் தங்க வைத்து விருந்தோம்பினார். மேவானியைத் தன் மகன் என அன்புடன் கூறிக் கொண்ட கௌரி அதற்குப் பின் கர்நாடக தலித் தலைவர் தேவனூர் மகாதேவாவுடன் நடத்திய அத்தனை போராட்டங்களுக்கும் அவரை அழைத்தார்.
ரோஹித் வெமுலாவின் மரணத்தை ஒட்டி இந்தியாவே கொந்தளித்தபோது பெங்களூரில் கண்டனப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் கௌரிதான். பெரிய அளவில் தலித் அல்லாதவர்களை அவர் அந்தப் போராட்டத்தில் இறக்கியது குறிப்பிடத் தக்கது.
டெல்லி JNU மாணவர்கள் மீது மோடி அரசு தேசத் துரோக வழக்குகளைப் போட்டுத் துன்புறுத்தியபோது பெங்களூரு செய்ன்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களை அணுகி ஒரு மிகப்பெரிய ஆதரவுப் போராட்டத்தை உருவாக்கியதும் கௌரிதான். JNU விலிருந்து இளம் மாணவப் போராளி ஷீலா ரஷீதை அதற்கு அவர் வரவழைத்திருந்தார். மேவானியைத் தன் மகனாகக் கொண்டாடிய கௌரி ஷீலாவைத் தன் மகள் எனக் கூறிக் கொண்டார். கன்னையா குமாரை வரவழைத்து கர்நாடக மக்கள் மத்தியில் நிறுத்திய கௌரி அவரைத் தன் இளைய மகன் என்றார். இனி கன்னையா, ஷீலா, மேவானி இவர்கள்தான் நம் எதிர்காலம் என்று அடையாளம் காட்டினார். சாதி, இனம், மதம் எல்லாவற்றிற்கும் அப்பால் போராடும் இளைய தலைமுறைகளைத் தன் பிள்ளைகளாக அடையாளம் காணும் தாய் மனமுடையவராக கௌரி வாழ்ந்து மடிந்தார்.
இப்படியான பன்மைத்துவ, ஜனநாயக மனப்பாங்கையும் அரசியலையும் கொண்டவராக அவர் உருப்பெற்றதன் பின்புலம் என்ன?
கர்நாடக மாநிலத்தில் லோகியாவின் சாதி சமத்துவச் சோஷலிசக் கொள்கைகளைப் பரப்பிய முக்கிய சமூகச் சிந்தனையாளரான பி.லங்கேஷ் அவர்களின் மகள்தான் கௌரி. இந்திய மாஓயிஸ்ட் போராளிகளில் முதன்மையானவரும், தலைமறைவாக இருந்து என்கவுன்டரில் கொல்லப்படவருமான தோழர் சாகேத் ராஜனின் சம காலத்தவரான கௌரி அவரது கருத்துக்களாலும் ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டிருந்தார். சாகேத் பயின்ற டெல்லி Institute of Mass Communication ல்தான் கவுரியும் அவருக்குப் பின் பயின்றார். லோகியவாத அரசியல் பின்புலத்தில் உருவானவரான கௌரி ஆயுதப் போராட்டப் பாதையை ஏற்கவில்லை ஆயினும் சாகேத்தில் அரசியல் ஆளுமையிலும் அர்ப்பணிப்பிலும் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார்.
சாகேத் ராஜன் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கு எதிராக ஒரு போராட்டத்தை கௌரி முன்னின்று எடுதபோது அவரது தந்தை உயிருடன் இல்லை. அவரது தந்தை நடத்திவந்த “லங்கேஷ் பத்ரிகே” யை நிர்வகித்து வந்த கௌரியின் சகோதரர் அவரது அரசியலை ஆதரிக்கத் தயாராக இல்லை. அந்நிலையில் கௌரி தொடங்கியதுதான் “கௌரி லங்கேஷ் பத்ரிகே”. தந்தையின் அரசியல் பாதையைச் சரியாகத் தொடர்ந்தவர் என்கிற வகையில் லங்கேஷின் ஆதரவாளர்கள் அனைவரும் கௌரியுடனேயே நின்றனர். பி.லங்கேஷின் தொடர்ச்சியாக கௌரி உருவான வரலாறு இதுதான்.
ஆந்திர மாஓயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டப் பாதை கர்நாடகத்திற்குப் பொருந்தாது, இங்கொரு நீண்ட கால மக்கள் போராட்டம் தேவையாக உள்ளது என்கிற கௌரியின் கருத்தை சாகேத்தின் தோழர்கள் பலரும் ஏற்றனர்.
ஆனால் அப்போதைய கர்நாடக அரசு அவர்களை என்கவுன்டர்களில் வேட்டையாடும் வெறியில் இருந்தது. கௌரி சீதாராமையாவை அணுகிப் பேசி ஒரு சமாதானக் குழுவை (peace committee) அமைத்தார். குறி வைக்கப்பட்டிருந்த சுமார் பன்னிரண்டு மாஓயிஸ்டுகள் மையநீரோட்ட அரசியலுக்கு வர அது வழி வகுத்தது.
இதே காலகட்டத்தில்தான் குஜராத்திற்குப் பின் கர்நாடகாவை “இரண்டாவது இந்துத்துவச் சோதனைச் சாலையாக” அறிவித்து சங்கப் பரிவாரங்கள் களம் இறங்கின. சிக்மகளூரில் உள்ள பாபா புதன்கிரி என்கிற முஸ்லிம்களின் தலம் ஒன்றைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடங்கினர். இந்துக்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வழிபட்டுவந்த தலம் அது. சமூக அமைதியைக் குலைக்கும் இந்த முயற்சிக்கு எதிராக ஒத்த கருத்துக்கள் உள்ளவர்களை இணைத்தார் கௌரி. “கோமு சௌஹார்த்த வேதிகே” (சமூக ஒற்றுமை அமைப்பு) எனும் இயக்கம் உருவாகியது. பாபா புதன்கிரியைக் கைப்பற்றும் பா.ஜ.க முயற்சிக்கு எதிராக 10,000 பேர் திரண்ட ஒரு மிகப் பெரிய பேரணியை அது நடத்தியது. 2008 ல் மங்களூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படபோதும் அதற்கு எதிரான செயல்பாடுகளில் கோமு சௌஹார்த்த வேதிகே முன்னணியில் நின்றது. சமூக ஒற்றுமையைக் குலைக்கும் சங்கப் பரிவாரங்களுக்கு எதிரான ஒரு வானவில் கூட்டணியாக அது அமைந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பலரும் அதில் ஒன்றிணைந்தனர்.
கௌரி: மேவானி, கன்னையா, ஷெய்லா எல்லோரையும் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்ட ஒரு ‘அம்மா’
தற்போது கர்நாடக முதலமைச்சராக உள்ள சித்தாராமையா போன்ற தளைவர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் அரசியல் உறவைப் பேணி வந்தார். சட்ட விரோதமாகக் கனிவளக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக “பெங்களூரு முதல் பெல்லாரிவரை” ஒரு நடைப்பயணத்தை சித்தாராமையா மேற்கொண்டபோது கௌரி அதில் கலந்து கொண்டார். இந்த மாஃபியாக்களை எதிர்த்துத் தன் பத்திரிகையில் கடுமையாக எழுதவும் செய்தார். காங்கிரசுக்கு கௌரி ஆதரவாக உள்ளார் எனவும் லோகியாவாதிகள் இப்படிச் செய்யக் கூடியவர்கள்தான் எனவும் கௌரி மீது இந்த அடிப்படையில் விமர்சனங்களும் வந்தன.
ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.கவும் தான் தனக்கு முதல் எதிரி எனச் சொன்ன கௌரி, அதே நேரத்தில் தற்போது சித்தாராமையாவின் அமைச்சரவையில் உள்ள எச்.டி.சிவகுமார் எனும் காங்கிரஸ்காரரை அவரது கிரானைட் மாஃபியா தொடர்புக்காகத் தன் பத்திரிகையில் மிகக் கடுமையாக விமர்சித்து எழுதவும் செய்தார். இன்னொரு காங்கிரஸ் அமைச்சரான கே.எல். ஜார்ஜின் ரியல் எஸ்டேட் மாஃபியா தொடர்பையும் கௌரி அம்பலப்படுத்தினார். முஸ்லிம் ஓட்டு வங்கியை ஈர்க்கும் நோக்கில் சித்தாராமையா திப்பு ஜயந்தியைக் கொண்டாடியபோது அதையும் விமர்சித்தார். இப்படியான ஜெயந்திகளைக் கொண்டாடுவதெல்லாம் ஒரு மதச்சார்பற்ற அரசின் வேலையல்ல என்று கடுமையாகச் சாடினார்.
புரொமோத் முத்தாலிக்கின் ‘சிரீ ராம சேனா” அமைப்பு மங்களூர் ‘பார்’களில் புகுந்து பெண்களைத் தாக்கியபோது அதைக் கடுமையாகக் கண்டித்தார். மங்களூருக்கு வந்த அவர் அவர் புரமோத் மாலிக்கின் குண்டர் படையை மிகத் துணிச்சலுடன் எதிர் கொண்டார். அந்தக் குமபலை நோக்கிய அவரது கடுமையான எச்சரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மகாராஷ்டிர சித்பவன் பார்ப்பனர்கள் கோட்சே, சாவர்க்கரின் காலத்திலிருந்தே ஆயுதபாணி ஆனவர்கள். கர்நாடக சநாதனப் பார்ப்பனர்கள் கடந்த கால் நூற்றாண்டில் மிகத் தீவிரமான காவி வெறியர்களாகவும் வன்முறையாளர்களாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்கள். ‘பட்கல் கலவரம்’ (1993) கர்நாடகத்தில் காவித் தீவிரவாதம் வேர்கொள்ளத் தொடங்கியதற்கு ஒரு சாட்சியமாக அமைந்தது. தார்வாட் அருகில் இருந்தும் காவித் தீவிரவாதிகள் செயல்பட்டனர். சநாதன இந்துமதத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த ஒரு ஆய்வாளர் என்பதற்காகவே நேற்று கல்புர்கி கொல்லப்பட்டார். கர்நாடக மாநிலத்தின் மிக வலிமையான பாசிச எதிர்ப்பு அடையாளமாகவும் சிவில் சமூக அமைப்பை ஒருங்கிணைத்தவராகவும் இருந்ததால் இன்று கௌரி கொல்லப்பட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக கௌரிக்கும் அமைப்பாக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கும் (சி.பி.ஐ / சி.பி.எம்) இடையில் ஒரு இடைவெளி தொடர்ந்து இருந்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பொருத்த மட்டில் அவர்கள் கர்நாடகத்தில் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளர்களின் அமைப்பு என்கிற அளவிற்குச் சுருங்கி உள்ளனர். கௌரியின் ‘கோமு சௌகர்தா வேதிகே’யை அவர்கள் ஐயத்துடனேயே அணுகினர். கம்யூனிஸ்டுகளிடம் கௌரி நெருக்கம் கொள்ளாததற்கு அவரது லோகியாவாதப் பின்புலமும், சாகேத் ராஜன் முதலான மாஓயிஸ்டுகளின் தொடர்பும் தான் காரணம் என கம்யூனிஸ்டுகள் அவரை விமர்சித்தனர். இரண்டில் எது உண்மையோ கன்னையா குமாரையும் ஷகீலா ரஷீத்தையும் அணைத்துக் கொண்ட வகையில் தான் ஒன்றும் அமைப்பாகிய கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர் அல்ல என்பதை கௌரி நிறுவினார். மிகவும் நெருக்கடியான காலகட்டம் இது. இப்படியான விடயங்களில் மிகவும் விட்டுக் கொடுத்தல்களுடன் பாசிச எதிர்ப்பாளர்கள் இணைந்து இயங்க வேண்டும் என்பதைத் தவிர இது குறித்துச் சொல்வதற்கு ஏதுமில்லை.
ஒரு குறிப்பிட்ட பா.ஜ.க எம்.பி மற்றும் இன்னொரு பா.ஜ.க தலைவர் ஆகியோரின் ஊழல்கள் பற்றி அவர் எழுதியபோது (2008), அவற்றின் அடிப்படையில் போடப்பட்ட இரு அவதூறு வழக்குகளில் பா.ஜ.கவினர் கௌரிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றுத் தருவதில் வெற்றி அடைந்தனர். கௌரிக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை விடுதலை அளிக்கப்பட்டது. தார்வாடை விட்டு அகலக் கூடாது என்பது நிபந்தனை. நிபந்தனையின்படி அங்கு இருக்க நேர்ந்த அந்த இரண்டு மாத காலத்தையும் கௌரி, தார்வாடை மையமாகக் கொண்ட வட கர்நாடக முற்போக்காளர்களுக்கும் பெங்களூரு மற்றும் மைசூரை மையமாகக் கொண்ட பழைய மைசூர் மாநில முற்போக்காளர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியைக் குறைப்பதற்குப் பயன்படுத்துக் கொண்டார். இரு சாரருக்கும் இடையில் ஒரு பாலமாக நின்று அவர் செயல்பட்டார். கல்புர்கி கொலைக்கு நீதி பெறுவது என்கிற போராட்டத்தில் அவர்களை வெற்றிகரமாக இணைத்தார். கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்பு கூட (ஆகஸ்ட் 30) கல்புர்கியைக் கொன்ற கொலையாளிகளைக் கைது செய்ய அழுத்தம் கொடுக்கும் முகமாக அறைக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
டெல்லியில் உள்ள அரசியல் செயல்பாட்டாளர்கள், சிவில் அமைப்பினர் ஆகியோருடன் நெருக்கமாக இருந்ததால் அகில இந்திய அளவிலான சிவில் உரிமைச் செயல்பாடுகளில் சொந்தச் செலவில் கௌரி தொடர்ந்து பங்குபெற்று வந்தார்.
அவரது மனிதாபிமானம் இனம் மொழி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. காவிரிப் பிரச்சினையின் பின்னணியில் வன்முறைகள் வெடித்து குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்த் தொழிலாளிகள் இடம் பெயர்க்கப்பட்ட போது அவர்களுக்கு உணவு, உடை முதலிய உதவிகளை அளிப்பதிலும் அவர் முன் நின்றார். வகுப்புக் கலவரங்களின்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்செய்ய அவர் தவறியதில்லை. சாதி மற்றும் மதங்களுக்கு இடையேயான கலப்பு மணங்கள் பலவற்றை அவர் நடத்தி வைத்துள்ளார்.
சொந்த வாழ்விலும் அவருக்குப் பல பிரச்சினைகள் இருந்தன. அவரது திருமணம் முறிந்தது. அதற்குப் பின் அவருக்குச் சில பத்திரிகையாள நண்பர்களுடன் தொடர்பிருந்தது எனச் சொல்வதுண்டு. எனினும் அவர் தனியாகவே வாழ்ந்து வந்தார். மரபுகளை மீறிய அவரது வாழ்க்கை முறை பற்றி பலவிதமான கருத்துக்கள் உண்டு. தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் அவர். குடிப்பதும் உண்டு. இனொரு பக்கம் யோகா, ஆழ் மனக் குவிப்பு (meditation) முதலானவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்துள்ளது.
வயதான காலத்தில் ஏற்படும் காதல் குறித்து கௌரியும் அவரது சகோதரியும் ஒரு திரைப்படமும் கூட எடுத்துள்ளனர்.
இரண்டுநாள் முன்னர் கூட அவர் தன்னுடனும் இன்னொரு தலித் கிறிஸ்தவ இயக்கத் தோழருடனும் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், தலித்கள், இடதுசாரிகள், சிறுபான்மையினர் ஆகியோர் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து கிட்டத்தட்ட ஒருமணி நேரம் மிகத் தீவிரமாக அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் ஒரு பாதிரியார் நினைவு கூர்கிறார்.
கௌரிக்குச் சிறிது பணக் கஷ்டமும் இருந்துள்ளது. தனது கடைசி ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியையும் காசாக்கி ஒரு இலட்ச ரூபாய் பணத்தைத் திரட்டி வைத்திருப்பதாகவும், அதனைத் தன் ‘மகன்’ கன்னையாவுக்குக் கொடுத்து அவனை இந்தியா முழுவதும் சுற்றி பாசிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து இளைஞர்களை அணி திரட்டச் சொல்ல வேண்டும் எனவும் சமீபத்தில் ஒரு நெருங்கிய நண்பரிடம் கூறியுள்ளார்.
கௌரி லங்கேஷ் என்கிற புரட்சிகர “அம்மா” குறித்த ஒரு சித்திரத்தை உங்களுக்கு இந்தக் கட்டுரை அளித்திருக்கும் என நம்புகிறேன்.
அஞ்சலிகள் தோழி, புரட்சிகர அஞ்சலிகள் !