பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளாகிய சிவ சேனா, தெலுகு தேசம், பிஜு ஜனதா தளம் முதலியனவும் தத்தம் பங்கிற்கு அதிக பட்ச இடங்களைக் குவித்துள்ளன. இது இவர்களுக்கு வரலாறு காணாத வெற்றி. இதற்கு முன் அவர்கள் பெற முடிந்த அதிக பட்ச இடங்கள் 198 தான் (1998 / 99). அது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களால் இம்முறை கால் பதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் உண்மையான ஒரு ‘தேசிய’க் கட்சியாகவும் இம்முறை அவர்கள் தம்மை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்தி பேசும் மாநிலங்கள் என்கிற எல்லையையும் தாண்டி அஸ்ஸாம் முதலான வட கிழக்கு மாநிலத்திலும் முதன் முதலில் வலுவாகக் கால் பதித்துள்ளனர். இமாசல பிரதேசம் தொடங்கி கர்நாடகம் வரையிலும் பரவலாகப் பா.ஜ.கவின் வெற்றி அமைந்துள்ளது.
அது மட்டுமின்றி சகல தரப்பு மக்களையும் உள்ளடக்குவதாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் ஆகியோரைக் குறி வைத்து அவர்கள் இம்முறை வேலை செய்தனர். மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர் என்கிற அடையாளத்தை அழுத்தம் கொடுத்து முன்னிறுத்தினர். அவரும் தான் பிற்படுத்தப்பட்டவன் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டார். அப்படிச் சொல்வதால் முற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகள் தமக்கு வராமற் போய்விடுமோ என்கிற அச்சம் அவருக்கும் இல்லை, அவருடைய கட்சிக்கும் இல்லை. ஏனெனில் தங்களின் கட்சி அது எனவும் தங்களின் நலனை அது விட்டுக்கொடுக்காது எனவும் உறுதியான நம்பிக்கை இங்குள்ள உயர் சாதியினருக்கு பா.ஜ.க மீது எப்போதும் உண்டு.
ஆக புவியியல் அடிப்படையிலும் சாதி, மொழி, இன அடிப்படையிலும் பரவலான ஆதரவுடன் பா.ஜ.கவின் வெற்றி இன்று அமைந்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் படு தோல்வி அடைந்துள்ளன. தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் அவர்களின் இருப்பே இல்லாமற் போய்விட்டது. கங்கிரஸ் மட்டுமல்ல இடதுசாரிகளும் அடித்த புயலில் அடையாளம் தெரியாமல் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த நாடாளுமன்றத்தில் ஒரே ஒருஉறுப்பினர்தான். அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை அது ஏற்கனவே இழந்தாயிற்று, வாக்கு எந்திரத்தில் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை (நோடா) என்கிற பொத்தானை எழுத்தியவர்களின் எண்னிக்கையைக் காட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதைச் சுட்டிக்காட்டிக் கிண்டலடிக்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று தன் அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை இழக்கும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. வெறும் 9 இடங்களை மட்டுமே அவர்களால் பெற முடிந்துள்ளது. மே.வங்கத்தில் அவர்களுக்கும் இரண்டு உறுப்பினர்கள்தான், பா.ஜ.கவிற்கும் இரண்டு உறுப்பினர்கள்தான். முக்கிய மூன்று மாநிலக் கட்சிகள் அதிக வெற்றிகளைக் குவித்துள்ளன. அ.தி.மு.க, திருனாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் முதலியன இதில் அடக்கம். ஆந்திரம் உடைந்து உருவான இரு மாநிலங்களிலும் கூட மாநிலக் கட்சிகளே முதன்மை பெற்றுள்ளன.
இந்தத் தேர்தல் முடிவுகளின் ஊடாக மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு உயரும்; டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக அவர்களே இருப்பர் என ஆருடம் சொல்லியவர்களும் ஏமார்ந்து போயுள்ளனர். இதில் மிகவும் ஏமார்ந்து போனவர் ஜெயலலிதாதான். வரலாறு காணாத வெற்றியை அவர் குவித்துள்ள போதும் அந்த மகிழ்ச்சியை அவரால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. டெல்லியில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டு, 40 சீட்களுடன் தான் பிரதமர் ஆவது என்கிற கனவை அவர் வெளிப்படையாக முன்வைத்து வந்தவர்தான். தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் “பாரதப் பிரதமர்” என்றே அவரது கட்சிக்காரர்கள அவரை விளம்பரப் படுத்தினர். அவர் அதைக் கண்டித்ததில்லை. இன்று அந்தக் கனவு பொய்த்துப் போய்விட்ட ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிகிறது.
ஆனாலும் வாக்கு வீதத்தைப் பொறுத்த மட்டில் பா.ஜ.க காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து (31 + 19.3) மொத்தம் 50 சத வாக்குகளைத்தான் பெற்றுள்ளன. இடதுசாரிகள் ஒரு நாலு சதம் எனக் கொண்டால் மீதம் 46 சத வாக்குகளை மாநிலக் கட்சிகள்தான் பெற்றுள்ளன, ஆனால் இந்தியத் தேர்தல் முறையில் (First Past the Post System) வாக்கு வீதமும் வெற்றி வீதமும் ஒன்றாக இருப்பதில்லை. 3.3 சத வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க 37 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் அதே அளவு வாக்கு வீதம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ளது வெறும் 9 உறுப்பினர்கள்தான். 31 சத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க 278 இடங்களையும் 19.3 சத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்றிருப்பதும் கூட இந்தத் தேர்தல் முறையின் அபத்தந்தான். அதனால்தான் தேர்தல் சீர்திருத்தத்தை வேண்டுவோர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கிற கோரிக்கையைத் முன்வைக்கின்றனர்.
பா.ஜ.கவின் இந்த வெற்றிக்குப் பின்னால் கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களும் இருந்தது ஊரறிந்த இரகசியம். ஒரு கணிப்பின் படி மோடியை முன்நிறுத்தி பா.ஜ.க இம்முறை செய்த செலவு 500 கோடி ரூபாய். ஒபாமா சென்ற தேர்தலில் செலவிட்ட மொத்த தொகையே 600 கோடிதான்.
ஆனாலும் இப்படித்தான் பா.ஜ.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என நான் சொல்ல மாட்டேன். மக்கள் விரும்பித்தான் பா.ஜ.கவையும் மோடியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். காங்கிரஸ் மீது கடுமையான ஒரு வெறுப்பை ஊடகங்கள் வெற்றிகரமாகக் கட்டமைத்திருந்தன. ஊழல், செயலின்மை, உறுதியற்ற தன்மை, பொருளாதாரச் சரிவு எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் ஆட்சியே காரணம் என மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சில முக்கிய நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது, மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சில புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது என்பதெல்லாம் மக்களின் கவனத்தில் ஏறவில்லை.
காங்கிரசை வெறுக்க உண்மையில் வேறு பல நியாயமான அடிப்படைகள் இருந்தன. அயலுறவில் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவை மேற்கொண்டது, பொருளாதாரத்தைத் திறந்து விட்டது…இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் இதற்காக வெறுக்கப்படவோ தோற்கடிக்கப்படவோ இல்லை. இந்த அம்சங்களில் காங்கிரசை விடத் தீவிரமான அணுகல்முறைகளை உடைய பா.ஜ.கவைத்தான் இன்று மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் மக்கள் உற்சாகமாகப் பங்கு பெற்றனர், 63.8 சத வாக்குப் பதிவு என்பது வரலாறு காணாத ஒன்று. இந்த முறை வாக்களித்த 550 மில்லியன் பேர்களில் 100 மில்லியன் பேர் புதிய தலைமுறையினர். உலகமயச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். “வளர்ச்சி” என்கிற முழக்கத்தை அவர்கள் மனப்பூர்வமாகக் கொண்டாடினர். அவர்களுக்குப் பாசிசம் அல்லது கம்யூனிசம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. குஜராத் 2002 என்பதெல்லாம், அதில் மோடியின் பங்கு என்பதெல்லாம் அவர்களது கவனத்தில் படியாத ஒன்று.
அப்புறம் உலக மயச் சூழலில் ஊதிப் பெருத்துள்ள மத்திய தர வர்க்கம். இதனுடைய ஆதரவும் பா.ஜ.க அரசியலுக்குத்தான், இந்து நாளிதழின் வித்யா சுப்பிரமணியம் இந்தி பேசும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பலரையும் சந்தித்து அவர்களின் மனநிலையை எழுதியிருந்தார், வித்யா சந்தித்தவர்களில் ஒருவர் ராம் அஷ்ரேய். மோடியை அவர் ஆதரிப்பதற்குச் சொல்லும் காரணம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.
“எல்லையில் நமது படை வீரர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன. நாட்டைப் பாதுகாக்கத் தக்க வலிமையான பிரதமர் நமக்கு வேண்டும்…”
அவர் எதைச் சொல்கிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. கடந்த சில ஆண்டுகளில் எல்லையில் பாக் மற்றும் சீன இராணுவங்களின் அத்துமீறல்கள் குறித்த பிரச்சினையைச் சொல்கிறார்.
இந்தப் பிரச்சினைகளை நான் அதே காலகட்டத்தில் மிக விரிவாக ஆராய்ந்து இதே பக்கங்களில் எழுதியுள்ளேன். இந்தப் பிரச்சினையில் பொறுமையாகவும், அயலுறவு நெறிமுறைகளின்படியும், அற அடிப்படையிலும், இரு நாட்டு மக்களின் நலன்களின் நோக்கிலும் மிகச் சரியாக நடந்து கொண்டது காங்கிரஸ் அரசு. குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சர் ஆன்டனியின் பண்பான அணுகல்முறையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால் அது நமது பலவீனத்தின் அடையாளம்; இந்திய அரசு “உறுதியான” ஒரு நிலையை எடுத்திருக்க வேண்டும் என்பது பா.ஜ.க வின் அன்றைய நிலைபாடு. அந்த நிலைப்பாடும் மத்திய தர வர்க்கத்தின் மனநிலையும் ஒத்துப்போவது கவனிக்கத்தக்கது.
ஆக உறுதியான, வளர்ச்சியை முன்நிறுத்தக்கூடிய ஒரு அரசை பா.ஜ.கவும் மோடியும் சாதிப்பர் என்கிற நம்பிக்கையோடு மக்கள் விருப்பபூர்வமாக இந்தத் தேர்வைச் செய்துள்ளனர் என்பதுதான் உண்மை. தேர்தலில் மக்களின் உற்சாகமான பங்கேற்பும் இதை உறுதி செய்கிறது.
இந்தத் தேர்வைச் செய்த எல்லோரும் பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலையோ, திட்டங்களையோ, தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்படும் இந்த அம்சங்களையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. தொடக்கத்தில் ஒரளவு எல்லோரையும் அனுசரித்துப் போகிறவர் போலப் பேசிய மோடியும், பா.ஜ.கவும் போகப் போக வெளிப்படையான இந்துத்துவ அரசியலைப் பேசினர். ராமனின் பெயரால் சூளுறைத்தனர்.
அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பொறுத்த மட்டில், இந்துத்துவக் கருத்துக்களுக்காக மோடியை ஆதரிக்காதவர்களும் கூட, அவரது பிந்தைய தீவிரமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்காகக் கவலைப்படாதவர்களாகவும் அவர்கள் உள்ளதுதான் பிரச்சினை.
மோடியையும் காங்கிரசையும் இன்று ஆதரித்து வாக்களித்துள்ளவர்கள் 30 சதம்பேர். ஆதரவு சக்திகளையும் சேர்த்துக் கொண்டால் 40 சதம் பேர். ஆனால் இதே அளவும் இதை விட அதிகமாகவும் மோடியையும் பாஜக அரசியலையும் ஏற்காதவர்களும் உளர். குறிப்பாக 180 மில்லியன் முஸ்லிம்களில் 99 சதம் பேர் மோடியை எக்காரணம் கொண்டும் ஏற்காதவர்கள். இந்த மக்கள் தொகை பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். இவர்கள் மனத்தில் இன்றொரு அச்சமும் பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளதே உண்மை. இத்தகைய அச்சம் ஒரு ஜனநாயக ஆளுகைக்குப் பொருந்தாத ஒன்று.
இதைப் புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பா.ஜ.கவை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இது குறித்துக் கவலைப் படுவதாக இல்லை. இப்போதே அவர்கள் தங்களின் ‘அஜெண்டா”வை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.
இறுதியாகத் தமிழகச் சூழல் குறித்து ஒரு சொல்.மோடி அலை வீசாத இரு மாநிலங்களில் தமிழகம் ஒன்று. மற்றது கேரளம். இங்கே அந்தக் கூட்டணியின் சார்பாக வென்றவர்கள் இருவரும் மோடி அலை இல்லவிட்டாலும் இங்கு வெல்லக் கூடியவர்களே. கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியில் பிளவு பட்ட ஒரு மாநிலம், இங்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சம அளவினர். தற்போது வெற்றி பெர்ற பா.ஜ.க வேட்பாளர் ஏற்கனவே இங்கு வெற்றி பெற்றவர். தருமபுரியில் வென்ற அன்புமணியைப் பொருத்த மட்டில் அப்பட்டமான சாதி அரசியலின் வெற்றி அது.
மோடி மற்றும் பா.ஜ.க ஆட்சியில் தமிழ் ஈழம் மலரும் என்றெல்லாம வாக்களித்த வைகோ இன்று படு தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் 12ல் தம் தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினை குறித்து வாய்திறக்காதவை இரண்டே இரண்டு கட்சிகள்தான். அவை பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும். ஈழப் பிரச்சினைக்காகத்தான் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தேன் எனச் சொல்லிய வைகோவிற்கு இது கடை வரையில் தரும சங்கடந்தான். ஆம் ஆத்மி கட்சி இங்கு படு தோல்வி அடந்துள்ளது. இந்திய அளவிலும் அது 4 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.
ஈழப் போராட்டத்தை முழுமையாகத் தொடக்கம் முதல் ஆதரித்து வந்த நெடுமாறன் அவர்கள் இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக்கும் பா.ஜ,கவிற்கும் அணுகல் முறைகளில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருக்கப்போவதில்லை.