[தினக்குரல் (கொழும்பு) நாளிதழுக்கு எழுதப்பட்ட பத்தி]
அஸ்ஸாமில் மீண்டும் ஒரு இனக்கலவரம் நடந்துள்ளது. சுமார் 65 பேர்களிலிருந்து 80 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். 500 கிராமங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சத்திலிருந்து நான்கு லட்சம் மக்கள் வரை உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 273 முகாம்களில் இவர்கள் கொண்டு சென்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும்கூட இல்லை என்பதோடு பெரிய அளவில் இங்கு தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது பற்றி செய்திகள் குவிகின்றன. இத்தகைய முகாம்களின் நிலை எப்படி இருக்கும் என இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக விளக்க வேண்டியடில்லை.
கொல்லப்பட்டவர்களிலும் அகதிகளாக்கப்பட்டவர்களிலும் சுமார் 80 சதத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். பிறர் போடோ பழங்குடியினர். போடோ பழங்குடி மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் அருகருகே வாழ்ந்து வந்த போடோக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூலையில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளஞர்கள் படு மோசமாகத் தாக்கப்பட்டனர். இதன் எதிர்வினையாகச் சென்ற ஜூலை 19 அன்று ‘போடோ விடுதலைப் புலிகள்’ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 20 முதல் 26 வரை நடைபெற்ற கலவரத்தில்தான் மேற்குறிப்பிட்ட அவலங்கள் அரங்கேறின. இந்த நாட்களில் அஸ்ஸாம் தலைநகரான குவாகாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த சுமார் 32 வேக ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன, குவாகாட்டி ரயில் நிலையத்தில் பல்லாயிரம்பேர் 72 மணி நேரம் போதிய உணவு, தண்ணீரின்றித் தவித்திருந்தனர். விமானச் சேவைகள் பயணத் தொகையை இரட்டிப்பாக்கின. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங் ஓடி வந்து பார்த்துவிட்டு இது ஒரு தேசீய அவமானம் என்றார். இப்படியான ஒரு கலவரத்திற்கு எல்லாவிதமான சாத்தியங்கள் உள்ளன என அறிந்திருந்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை. ஆறு நாட்கள்வரை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவுமில்லை.
இன அடிப்படையில் கலவரங்கள் உருவாவதும் மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆக்கப்பட்டும் துன்புறுவதும் அஸ்ஸாமுக்குப் புதிதல்ல. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி இது நடைபெற்று வருகிறது. வெளியார் ஊடுருவல் மற்றும் குடியுரிமை வழங்குதல் தொடர்பாக 1970 மற்றும் 80களில் அங்கு மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றதை அறிவோம். 1983 இல் நடைபெற்ற நெல்லிப் படுகொலையில் 2000த்திலிருந்து 3000 முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர். இன்றுவரை அது குறித்து எந்த விசாரணையும் நடத்தி யாரும் தண்டிக்கப்படவுமில்லை. வெளி நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் குடியுரிமை குறித்த 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் உடன்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பும் 1993-94ம் ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் தம் வீடுவாசல்களை இழந்து ஓடவேண்டியதாயிற்று. எனினும் இதுவரை நடந்த இந்தக் கலவரங்கள் அனைத்துமே மண்ணின் மைந்தர்களான போடோ பழங்குடியினர் உள்ளிட்ட அஸ்ஸாமியர்களுக்கும் வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்குமான மோதல்கள் என்பதில்லை. 1996-98 இல் சந்தாலிகள், ஓரான் மற்றும் முண்டா முதலான பழங்குடியினர் இலக்காக்கித் தாக்கப்பட்டனர்.
தொடர்ந்து அஸ்ஸாமின் பூர்வகுடியினரும், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, நில உரிமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுமான போடோக்கள் தனி மாநிலம் கோரி ஆயுதப் போராட்டம் தொடங்கினர். 1993ல் போராட்டத்தை முன்னெடுத்திருந்த ‘அனைத்து போடோ மாணவர் இயக்கத்திற்கும்’ (ABSU) அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓரளவு சுயாட்சித் தன்மையுடைய ‘போடோ சுயாட்சிக் கவுன்சில்’ (BAC) உருவாக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் திருப்தி அடையாத ஏராளமான போடோ இளைஞர்கள் தலைமறைவாயினர். முழு மாநில அந்தஸ்து கோரி தீவிரமான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ‘போடோ நாட்டிற்கான தேசிய ஜனநாயக முன்னணி’ (NDFB) மற்றும் ‘போடோ விடுதலைப் புலிகள்’ (BLT) எனும் அமைப்புகள் கடும் வன்முறையுடன் கூடிய ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசும் தன் தரப்பில் இன்னும் கொடும் வன்முறைகளுடன் இதை எதிர்கொண்டது.
2003ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக போடோ விடுதலைப் புலிகள் தம் பெயரை ‘போடோ மக்கள் முன்னணி’ (BPF) என மாற்றிக் கொண்டு, புதிய ஒப்பந்ததின்படி உருவாக்கப்பட்ட ’போடோ பிரதேச கவுன்சிலில்’ (BTC) பங்கேற்றது. அதன் தலைவர் ஹகராமா மொகிலாரி கவுன்சிலின் நிர்வாகத் தலைவர் ஆனார். எனினும் அனைத்து போடோ மாணவர் இயக்கமும் போடோ தேசிய ஜனநாயக முன்னணியும் முழு மாநில அந்தஸ்து என்கிற கோரிக்கையைத் தொடர்ந்தன. 2003 ஒப்பந்தத்தில் போராளிகள் தம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது கறாராக வற்புறுத்தப்படாததன் விளைவாக போடோ விடுதலைப் புலிகள் மற்றும் போடோ தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் திரிவது என்பது போடோலான்டில் அன்றாட நிகழ்வுகளாகியது.
தற்போதைய கலவரத்தில் போடோ தேசிய ஜனநாயக முன்னணியினர் வழக்கமாகப் பயன்படுத்துகிற எந்திரத் துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் முஸ்லிம்களைக் கொல்வதற்குப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன என உளவுத்துறை கூறுகிறது. ஹகராமா மொகிலாரியும் இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
மொகிலாரியின் தலைமையில் உள்ள போடோ பிரதேச கவுன்சில் ஊழலுக்கும் திறமையின்மைக்கும் பெயர்பெற்ற ஒன்றாகிவிட்டது. தாருண் கோகோய் தலைமையிலான அஸ்ஸாம் மாநிலக் காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை. இன்னொருபக்கம் சட்ட ஒழுங்கு அதிகாரம் அதாவது போலீஸ் அதிகாரம் இல்லாத போடோ பிரதேச நிர்வாகத்தால் தமக்கு எந்தப் பயனுமில்லை என்கிற கருத்து போடோக்களிடம் உள்ளது. போடோ மாவட்டக் கவுன்சிலுக்குள் பழங்குடியினரல்லாத அந்நியர்கள் யாரும் 2003க்குப்பின் நிலம் வாங்கக்கூடாது. அதாவது முஸ்லிம்கள், அஸ்ஸாமுக்குள் பழங்குடியினராக வரையறுக்கப்படாத சந்தாலிகள் ஆகியோர் இங்கு புதிதாக நிலம் வாங்கக்கூடாது. ஆனால் முன்னதாக இப்பிரதேசத்தில் அவர்கள் பெற்றிருந்த நில உரிமை செல்லுபடியாகும். ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவையும் போடோக்கள் ஏற்பதில்லை. அவர்களின் கருத்துப்படி ஏற்கனவே அவர்களின் நிலங்களெல்லாம் பறிபோய்விட்டதால் பழைய நில உரிமைகளை ஏற்க முடியாது.
இங்கொன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அஸ்ஸாம் பழங்குடியினரிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் போடோக்கள்தான் எனினும் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 5 சதம் மட்டுமே. போடோ பிரதேச மாவட்டத்திற்குள்ளும் கூட இன்று அவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. சுயாட்சி உரிமை பெற்றுள்ள இந்த மாவட்டக் கவுன்சிலில் மூன்றில் இரு பங்கினர் போடோ அல்லாதவர்கள். இவர்கள் எல்லோரும் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம்களும் அல்லர். சந்தாலி, முண்டா, ஓரான் போன்ற இதர பழங்குடியினர், ராஜ்பங்சிகள், நேபாளிகள், மார்வாரிகள், முஸ்லிம்கள் எனப் பலரும் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள இவர்கள் ‘போடோ அல்லாதவர் சுரக்ஷா சமிதி’ (NBSS) என்றொரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு தமது பிரச்சினைகளை முன்னெடுக்கின்றனர். பெரும்பான்மையாகத் தாமிருந்தும் அதிகாரத்தில் தமக்கிடமில்லை என்பது இவர்களின் பெரும் குறை. பட்டியல் சாதியில் இடம் மறுக்கப்பட்டுள்ள கோச் ராஜ்பங்க்சிகள் தாம் பெரும்பான்மையாக உள்ள ஒரு பகுதியை உருவாக்கி அதற்குக் ‘காம்டாபூர்’ எனப் பெயரிட்டு சுயாட்சி வழங்கக் கோருகின்றனர்.
வழக்கம்போல பிரச்சினை மிகவும் சிக்கலானது. இந்துத்துவவாதிகள் இதை ‘இந்து’ போடோக்களுக்கும் “அந்நிய’ முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரமாகக் கட்டமைக்க முயல்கின்றனர். எண்பதுகளுக்குப் பின் உலகெங்கிலும் உருவாகியுள்ள இந்த அடையாள அரசியலை (identity assertion) இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் சொல்வதுபோல போடோக்கள் எல்லோரும் இந்துக்களல்ல. வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ள கிறிஸ்தவம் போடோக்கள் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வேர்பிடித்துள்ளது. அதேபோல முஸ்லிம்கள் எல்லோரும் ஒருபடித்தானவர்கள் அல்ல. அவர்களுள்ளும் கோரியா, டேசி எனப் பல பிரிவுகள் உண்டு. எல்லோரும் அந்நியர்களுமல்ல. எல்லோரும் தற்போது ஊடுருவி வந்தவர்களுமல்ல. வங்க தேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள அஸ்ஸாம் மாவட்டங்களில் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அஸ்ஸாமின் பிற பகுதிகளைக் காட்டிலும் மக்கள்தொகையின் அளவு மற்றும் பண்பு மாற்றம் (demographic change) சற்றுக் கூடுதல்தான் என்றபோதிலும் இந்தக் கூடுதல் “சற்று”தான் என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இந்திய மக்கள் தொகைக் கணக்கீடுகளிலிருந்து இந்தப் பத்தாண்டு சனத்தொகை மாற்றம் (decadal population increase) கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.
ஆண்டு இந்தியா அஸ்ஸாம் துப்ரி தேமாஜி கர்பி ஆங்லாங்
1971-91 54.51 54.26 46.65 107.50 74.72
1991-01 21.54 18.92 22.97 19.45 22.72
2001-11 17.64 16.93 24.40 20.30 18.69
துப்ரி, தேமாஜி, கர்பி ஆம்லாங் என்கிற எல்லையோர மாவட்டங்களில் ஒவ்வொரு பத்தாண்டு சனத்தொகை மாற்றமும் இதர இந்திய மற்றும் அஸ்ஸாம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் மேற்கண்ட அட்டவணையில் ஒப்பிடப்படுகிறது. 1971;91 ஆண்டுக் கணக்கு இருபதாண்டுக்குரியது என்பதை கவனத்தில் கொள்ளவும். 1981 இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த வேறுபாடு தொடக்கத்தில் சற்றுத் தூக்கலாக இருந்தபோதிலும் போகப் போக இது பெரிதும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
அஸ்ஸாம் மக்கள்தொகை மாற்றம் குறித்து ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இந்துத்துவ சக்திகள் சொல்வதுபோல இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று. தேயிலைச் சாகுபடிக்காக வங்க தேசத்திலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் ஆசைகாட்டியும், கட்டாயமாகவும் கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இலங்கை மற்றும் மலேசியாவிற்கு தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலாளிகள் கொண்டு செல்லப்பட்டதுடன் இதை ஒப்பிடலாம். இது தவிர இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வணிக நோக்குடன் ராஜஸ்தானிகள், மார்வாரிகள், பஞ்சாபிகள் முதலானோரும் இங்கு வந்து ‘செட்டில்’ ஆகியுள்ளனர். புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா சொல்வதுபோல போடோக்கள் எதையும் சற்று ‘மெதுவாக’ச் (லேஹி…..லேஹி) செய்பவர்கள். கடும் உழைப்பாளிகளான வங்கதேச முஸ்லிம்கள் எதிலும் வேகம் காட்டுபவர்கள். நிலப் பஞ்சம் மிகுந்த வங்கப் பகுதியிலிருந்து இவர்கள் வளமிக்க பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கின் ஆற்றங்கரையோரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குடியேறி விவசாயம் செய்து நிலங்களை உரிமையாக்கிக்கொள்ளத் தொடங்கினர். இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தவை.
போடோக்களின் பழங்குடி மனப்பாங்கில் நிலத்தைத் தனியுடமை ஆக்கிக் கொள்வதற்கு இடமிருக்கவில்லை. பாசன விவசாயத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. சமூக உடைமை, இடம் பெயர் விவசாயம் என்பதாக இருந்த அவர்கள் நில உரிமையை இழந்த வரலாறு இதுதான். ஆற்றங்கரையோரம் குடியேறி இடம்பிடித்த முஸ்லிம்கள் காலப்போக்கில் சற்று உள்ளேயும் இடம்பெயர்ந்தனர். தேர்தல் அரசியல் உருப்பெற்றபோது குறிப்பிட்ட அளவு அரசியலதிகாரம் பெறவும் தொடங்கினர்.
இதெல்லாம் ஒரு நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக நடந்தது. சமீபகாலத்தில் நடைபெற்ற பெரிய அளவு புலப்பெயர்வு என்பது 1947 பிரிவினையின்போதும், 1971 வங்கதேச விடுதலைப் போரின்போதும் ஏற்பட்டதுதான். மேற்கண்ட அட்டவணையில் 1971-91 காலகட்டத்தில் ஏற்பட்ட சற்றுக் கூடுதலான அதிகரிப்பு இந்தப் பின்னணியில் உருவானதே. இந்த அதிகரிப்பெல்லாம் கூட வெறும் வங்கதேச முஸ்லிம்களால் மட்டுமே ஏற்பட்டது என்பது தவறு. தேமாஜி மற்றும் கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 1.84 மற்றும் 2.22 சதங்கள் மட்டுமே. இன்று கலவரம் நடந்துள்ள கோஹ்ராஜ்பூரில்தான் கடந்த பத்தாண்டில் அஸ்ஸாமிலேயே மிகக் குறைந்த அளவு மக்கள்தொகை அதிகரிப்பு (5.19சதம்) நடந்துள்ளது.
அந்நிய ஊடுருவல் என்கிற அரசியல் சொல்லாடல் அவிழ்த்து விடப்பட்டபின் இந்திய அரசு எல்லையோர ஊடுருவலைப் பெரிய அளவில் தடுத்துள்ளது. 4000கி.மீ நீளமுள்ள எல்லையில் 80சதம் இரட்டை முள்வேலியாலும் , தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் மின் விளக்குகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எல்லை ஓரங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையும் பெரிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருளை ஊடுருவக்கூடிய தொலைநோக்கிகளைக் கொண்டு இரவு பகலாக ஊடுருவல் கண்காணிக்கப்படுகிறது. வங்கதேசத் தூதரக அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவிய 600 வங்கதேச முஸ்லிம்கள் இன்று இந்தியச் சிறைகளில் அடைபட்டுள்ளனர். தவிரவும் அமார்த்யா சென் உருவாக்கிய ‘பிரடிசி ட்ரஸ்டின்’ முன்னாள் இயக்குனர் ஏ.ஜே.பிலிப் கூறியுள்ளதுபோல அஸ்ஸாமின் இப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது வங்கதேசத்தின் சமூக வளர்ச்சிப் புள்ளிகள் இன்று ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து இங்கே இப்போது புலம்பெயர்வதற்கான தேவையுமில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க அஸ்ஸாம் பற்றி எரிந்து கொன்டிருந்தபோதே அத்வானி, அருண்ஜேட்லி, நரேந்திரமோடி போன்றோர் பிரச்சினையை அந்நிய ஊடுருவலாகத் திசை திருப்பியதிலும், முஸ்லிம் வெறுப்பைப் பரப்பியதிலும், மோடி ஒருபடி மேலே போய் “இந்த ஊடுருவல் தேசப் பாதுகாப்பிற்கே ஆபத்து” என்பதாக முழங்கியதிலும் வழக்கம்போல எள்ளளவும் நியாயமில்லை. 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தத்தின்படி (1). 1966க்கு முன் வந்தவர்கள் அனைவருக்கும் முழுக் குடியுரிமை உண்டு. (2). 1966லிருந்து மார்ச் 24, 1971 வரை இடம்பெயர்ந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அடுத்த பத்தாண்டுகளில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும். (3). 1971 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கு வந்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளின்படி பெரிய அளவில் 1971க்குப் பின் வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல் நிகழவில்லை என்பதால் தற்போது கொல்லப்பட்டும், அகதிகளாக்கப்பட்டுமுள்ள முஸ்லிம்களில் கிட்டத்தட்ட அனைவருமே சட்டபூர்வமான குடிமக்கள்தான். இதில் கொடுமை என்னவெனில் இன்று அகதிகளாகியுள்ள முஸ்லிம்களின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அத்தோடு அவர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.
பிரச்சினை வழக்கம்போலச் சிக்கலானது. பூர்வகுடிகளான போடோக்கள், வங்கத்திலிருந்து தொழிலாளிகளாகக் கொண்டுவரப்பட்ட முஸ்லிம்கள் இருசாரருமே இன்று சமூகத்தின் ஆக அடிநிலையில் இருப்பவர்கள். இந்த முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்த வேர்களை இழந்து பல பத்தாண்டுகளாகிவிட்டன. அவர்களை அந்நியர்கள் எனச் சொல்லி வெளியேற்றுவது அடிப்படை மனித நியாயங்களுக்குப் புறம்பான ஒன்று. போடோக்கள் முஸ்லிம்கள் இருசாரரும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருப்பது பத்திரிக்கைப் பேட்டிகளைப் படிக்கும்போது விளங்குகிறது. பொருளாதார ரீதியாக அப்பகுதி மேம்படுத்தப்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது முதலான நடவடிக்கைகள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களை அச்சத்திலிருந்து விடுவிப்பதன் மூலமாகவுமே அங்கே அமைதி ஏற்படுத்தப்படவேண்டும். இன, மத வெறுப்புகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நாட்டெல்லைகள் என்பன மிகச் சமீபமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால் மனித உறவு காலங்காலமானது. இன்னுங் காலங்காலமாய்த் தொடரக்கூடியது.
Top of Form