நேற்று பெரம்பூரில் ‘பாசறை முரசு’ வாசகர் வட்டம் சார்பாக நடந்த கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். பெரம்பூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய நெல்வயல் சாலையில், நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள அரங்கத்திற்குள் நுழைந்தவுடன் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அது ஒரு சிறிய பௌத்த ஆலயம்.
‘தென்னிந்திய பவுத்த சங்கம்’ எனவும் அது அழைக்கப்படுகிறது, சுமார் 30 பேர்கள் உட்காரக் கூடிய அறை. மிக அழகான இரு புத்தர் சிலைகள். அந்த வெண்கலச் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாம்.
ஆலயத்திற்கு நிறைய நிலமிருந்ததாம். பவுத்த நெறியை ஏற்றவர்களுக்கு அது பிரித்தளிக்கப்பட்டு, அவர்கள் அவற்றை நல்ல விலைக்கு விற்று விட இப்போது அந்த ஆலயத்திற்கு எஞ்சியது வெறும் சுமார் 400 சதுர அடிகள்.
ஓய்வாக ஒரு முறை வந்து விரிவாக அதன் வரலாற்றைக் கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். பாலன் அவர்களின் மாமாதான் இப்போது அதன் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்குப் பின் யார் இதைப் பராமரிக்கப் போகின்றனரோ எனக் கவலையோடு கூறினார் பாலன்.
பாலன் பர்மாவிலிருந்து வந்தவர், ‘ரெப்கோ’ வங்கியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கலப்பு மணத் தம்பதியருக்குப் பிறந்தவர்களைச் சாதியற்றவர்களாக அறிவித்து, அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்தால் சாதி ஒழியும் எனக் கடந்த பல ஆண்டுகளாக இயக்கம் நடத்துபவர். நேற்று, அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார். எனது நீண்ட நாள் நண்பர்கள் அரக்கோணம் தமிழேந்தி, பெரம்பூர் கந்தன் முதலான திராவிட இயக்கத்தவர்களும் வந்திருந்தனர்.
நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு நேரெதிரே சுவற்றில் மாட்டியிருந்த பழைய படங்கள் சிலவற்றைப் பார்த்தபோது எனக்கு இன்னும் ஒரு இனிய அதிர்ச்சி. ஒன்று அங்கு பெரிதாய் மாட்டி வைக்கப்பட்டிருந்த அயோத்திதாசரின் ஒரு நல்ல புகைப்படம். சென்னையில் உள்ள ஒரு பழம் புத்த சங்கத்தில் அயோத்திதாசரின் படம் இருந்தது வியப்பில்லை. மற்றொரு படம் அநகாரிக தர்மபாலாவின் வண்ண வரை படத்தின் அச்சிட்ட பிரதி. தமிழகத்தில் தர்மபாலாவின் படம் ஒன்றைக் கண்டது எனக்குச் சற்று வியப்பளித்தது.
தோன்றிய மண்ணிலிருந்து அகற்றப்பட்டுக் கிட்டத்தட்ட அழிந்த நிலையிலிருந்த பவுத்தத்தை மறு உயிர்ப்புச் செய்ததில் தர்மபாலாவிற்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாக பவுத்தர்களின் புனிதத் தலங்கள் பலவும், அவர்களின் ஆகப் புண்ணிய பூமியாகிய புத்த கயாவும் இந்து மகந்த்களின் பிடியிலிருந்த நிலையைப் பெரும் போராட்டங்களின் ஊடாக மீட்டு மீண்டும் அவற்றை பவுத்த புண்ணிய ஷேத்திரங்களாக ஆக்கியது தர்மபாலாதான். இதற்கெனவே 1891 மே மாதத்தில் கொழும்பில் ‘மகா போதி கழகத்தை’ நிறுவி, இந்து மகந்த்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, லண்டன் வரை சென்று அன்றைய பிரிட்டிஷ் அமைச்சரவையில் இருந்த இந்திய அமைச்சரிடம் பேசி, உரிய நிரூபணங்களைத் தந்து கயாவை மீட்டவர் அவர்.
புத்த கயாவை மீட்பதற்கான முதல் உந்தத்தை அளித்தவர் எட்வின் ஆர்னால்ட் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். தர்மபாலாவால் உருவாக்கப்பட்ட மகாபோதி கழகத்தின் முதல் தலைவர் மலிகா கந்த விகாரையின் தலைமைப் பிக்குவும், வித்யோதயா கல்லுரி முதல்வருமான சுமங்கல மகாதேரர். இந்தச் சுமங்கலர்தான் அயோத்திதாசருக்குப் பஞ்சசீல தீட்சை அளித்து (1890) அவரைப் பவுத்தர் ஆக்கியவர். மகாபோதி கழகத்தின் செயலராக தர்மபாலா பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.
இக்கழகத்தை உருவாக்கியதில் மிக முக்கிய பங்காற்றியவர் என அவர்களால் நன்றியோடு நினைவு கூறப்படுபவர் அடையாறு தியாசபிகல் சொசைடியை நிறுவிய கர்னல் ஆல்காட். ஆல்காட்டும் மேடம் ப்ளாவட்ஸ்கியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தம்மைப் பவுத்தர்களாக அறிவித்துக் கொண்டனர். மகாபோதி கழகத்துக்கு முன்னதாக ‘அக்யப் மகாபோதி கழகத்தை’ நிறுவி 1896 வரை அதன் இயக்குனராகவும் இருந்தவர் ஆல்காட். 1880ல் கொழும்பில் தியாசபிகல் சொசைடியையும் அவர் நிறுவினார். கொழும்பு காலி வீதியில் ஆல்காட்டுக்கும் ப்ளாவட்ஸ்கி அம்மைக்கும் மிகப் பெரிய Royal Welcome அளிக்கப்பட்டதை நினைவு கூர்கிறார் தர்மபாலா (Maha Bothi society Journal, Centenary Volume, 1991). கொழும்பில் ஆல்காட்டிற்கு அமைக்கப்பட்ட சிலை இன்னும் உள்ளது.
அன்னிபெசன்ட் அம்மை ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் ‘கண்டுபிடித்தது’ போலவே கொழும்பில் ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்திருந்த ஹெவவிதர்னே தர்மபாலாவை, இவன் இந்தப் பணிக்கு உகந்தவன்’ எனக் கண்டுபிடித்து, பெற்றோரின் விருப்பத்தையும் மீறி, வற்புறுத்தி இந்தியாவுக்கு அழைத்து வந்து பவுத்த மீட்புப் பணியில் அவரை ஆட்படுத்தினார் மேடம் ப்ளாவட்ஸ்கி. தர்மாபாலாவைப் போலவே அயோத்திதாசருக்கும் அவரது பூர்வ பவுத்த உருவாக்கப் பணியில் துணை நின்றவர் ஆல்காட்.
“டாக்டர் அயோத்திதாசர் மற்றும் சிலரின் உதவியோடு” சென்னை இராயப்பேட்டையில் ஆல்காட் அவர்களால் கூட்டப்பட்ட (1898, ஆகஸ்ட் 8) கூட்டத்தில், ஆல்காட்டின் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்த தர்மபாலாவும், தமிழறிந்த பிக்கு குணரத்னேவும்,பங்கு பெற்றனர். அன்றுதான் ‘சாக்கைய புத்தக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் அதன்பெயர் ‘திராவிட புத்தக் கழகம்’ என்பது குறிப்பிடத்தக்கது. பேசும்போது தர்மபாலா அயோத்திதாசர் மற்றும் அவரது நண்பர்களை வெகுவாகப் பாராட்டினார். எனினும் 1911 வாக்கில் தர்மபாலாவிற்கும் அயோத்திதாசருக்கும் இடையிலான உறவு முற்றிலுமாய் முறிந்து போனது வேறு கதை (பார்க்க : எனது ‘பெரியாரும் அயோத்திதாசரும்’).
மீண்டும் தனது 35வது பிறந்த நாளில் (செப் 17, 1899) சென்னை வந்த தர்மபாலா ஏராளமான பொதுக் கூட்டங்களில் பேசினார். ‘மெட்ராஸ் ஸ்டான்டர்ட்’ இதழ் அவரது விரிவான பேட்டியை வெளியிட்டது. 1899 செப் 28 அன்று, தற்போது சென்னை எழும்பூர் கென்னத் லேனில் இயங்கும் மகாபோதிக் கழகத்தின் சென்னைக் கிளையைத் தொடங்கி வைத்தார். இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தவர் எம். சிங்காரவேலுச்செட்டி, பி.ஏ. வேறு யாருமில்லை நம் அறிஞர் மா.சிங்காரவேலனார்தான். கூட்டத்தில் கலந்து கொண்ட இன்னொரு முக்கிய நபர் பவுத்த அறிஞர் பேராசிரியர் லட்சுமி நரசு.
இந்த இடத்தில் நான் தர்மபாலாவைக் குறித்து ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அவர் எந்த அளவிற்கு பவுத்த மீட்பிற்கு ஆதாரமாக் இருந்தாரோ, அதே அளவில் சிங்கள பவுத்தப் பேரினவாத உறுதியாக்கத்திற்கும் அவரது செயற்பாடுகள் வழி வகுத்தன. இது குறித்து விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
என் மனசில் இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தபோது நான் பேச அழைக்கப்பட்டேன். பேச்சு முடிந்து புறப்படு முன் சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்தப் படங்களை நெருங்கி நின்று, அந்த மற்ற இருவரும் யார் எனப் பார்க்க முற்பட்டேன். எனக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவற்றில் ஒன்று லட்சுமி நரசுவின் படம். அவரின் உருவப்படத்தை நான் இதுகாறும் கண்டேனில்லை. எனது ‘புத்தம் சரணம்’ நூலை நான் எழுதியபோது பவுத்தம் தொடர்பான ஏராளமான நூல்களைப் படிக்க வேண்டி இருந்தது. அவற்றுள் பவுத்தம் குறித்த அறிதலுக்கு ஒரு அற்புதமான தொடக்க நூலாக அமைந்தது பேராசிரியர் அறிஞர் லட்சுமி நரசு அவர்களின் The Essence of Buddhism தான்.
1907 மே மாதம் வெளி வந்த அந்த நூல் இன்று ஏகப்பட்ட பதிப்பகங்களால் ஏராளமான பதிப்புகள் வெளியிடப்படுள்ளன. என்னிடம் உள்ள பிரதி புது டெல்லி Asian Educational Service (1993) வெளியிட்டுள்ள ஃபேசிமிலி அச்சுப் பதிப்பு. இதற்கொரு சுருக்கமான செறிவான இரு பக்க முன்னுரை ஒன்றை எழுதியுள்ளவர் அநகாரிக தர்மபாலா. ஏப்ரல் 28, 1907 அன்று சாரநாத்thiலுள்ள மகா போதி கழகத் தலைமையகத்திலிருந்து இம்முன்னுரையை அவர் எழுதியுள்ளார்.
வரலாற்று புத்தர், பவுத்தம் முன்வைக்கும் பகுத்தறிவு வாதம், பவுத்த அறம், பவுத்தமும் சாதியும், பவுத்தமும் பெண்களும், நான்கு பேருண்மைகள், பவுத்தமும் துறவு நிலையும், பவுத்தமும் சூனியவாதமும், எண்வழிப் பாதை, The Riddle of the World, Personality, மரணமும் அதற்குப் பின்னும், மொத்தத்தில்….. என்பதான தலைப்புகளில் அவர் அத்தியாயங்கள் பிரித்து எழுதியிருப்பதொன்றே அது எத்தகைய சிறந்த பவுத்த அறிமுக நூலென்பதற்கு ஒரு சான்று. ஒன்றைச் சொல்வேன். அறிமுக நூலென்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மேலதிக நுணுக்க நூல்களை எழுதுவதைக் காட்டிலும் காத்திரமான அறிமுக நூல்களை எழுதுவது கடினம். வேறு ஆழமான மேலதிக ஆய்வுச் செய்திகளை எல்லாம் படிக்கும்போதும் அந்த அறிமுக நூல் நம் நினைவுக்கு வர வேண்டும். அப்படி ஒரு நூல் அறிஞர் பொக்கல லட்சுமி நரசு அவர்களின் The Essence of Buddhism. (இந்நூல் முழுமையாக pdf வடிவில் இணையத்தில் கிடைக்கிறது).
எனது புத்தக சேகரங்கள் பலவும் இப்போது மூன்று இடங்களில் பிரிந்து கிடக்கின்றன. மகள் வீட்டில் அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை விரும்பியபோது எடுப்பதில் சில சிரமங்கள். இந்தப் பதிவை முடிப்பதற்கு முன் மகாகவி பாரதியின் ஒரு கட்டுரையை வாசிக்க விரும்புகிறேன். இயலவில்லை. ‘பவுத்த மதத்தில் மாதர் நிலை’ என்பது போன்ற ஒரு தலைப்பில் பாரதி ஒரு கட்டுரை எழுதி இருப்பார். அது இப்படித் தொடங்குவதாக நினைவு: “நேற்று நான் ஒரு கிறிஸ்துவக் கல்லூரி (தாம்பரம்) புரஃபஸரைச் சந்தித்தேன்.லட்சுமி நரசு என்று பெயர். நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். புத்த மதம் பற்றிச் சொன்னார். ஆகா, எத்தனை அற்புத விஷயங்கள். நான் இதுவரை அறியேன். புத்த மதத்தில் பெண்கள் நிலை குறித்து அவர் சொன்ன செய்திகள் வியப்பை அளித்தன…..” எனச் சொல்லி. பாரதிக்குக் கேட்கவா வேண்டும், நரசுவைக்காட்டிலும் சுவையாக, பவுத்தத்தில் பெண்கள் நிலை எவ்வாறு உயர்வெய்தி இருந்தது என்பதை அத்தனை அழகாகச் சொல்லி இருப்பார்.
யாரேனும் இக்கணத்தில் அக்கட்டுரையை வாசிக்க ஏதெனும் இணைப்பைத்தந்தால் என்றென்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.
புத்தம் சரணம்….
சங்கம் சரணம்….
தர்மம் சரணம்…..