அப்பா வளர்த்த நாய்கள்

என்னைப் போலவே என் அப்பாவும் ஒரு நாய்ப் பிரியர். அவர் நாயில்லாமல் எனக்குத் தெரிந்து வாழ்ந்ததில்லை. அவர் மலேசியாவில் இருந்தபோது, அவரது பத்துவராங் வீட்டில் ஒரு குரங்கை வளர்த்த கதையை அவரது வளர்ப்பு மகன் சுப்பையா அண்ணன் சொல்வார். குரங்கை வளர்ப்பது கொஞ்சம் தொல்லைதானாம். அப்பா ஏதாவது பேப்பரில் எழுதுவதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, அவர் அகன்ற பின் மேசையில் குதித்து அந்தப் பேனாவை எடுத்து அந்த பேப்பரில் கீறு கீறென்று கிறுக்கித் தள்ளி விடுமாம். எழுதி வைத்ததும் காலி, அந்தப் பேனாவையும் அப்புறம் பயன்படுத்த முடியாது. அப்பாவும் என்னைப் போலவே விலை உயர்ந்த அழகான பேனாக்களை நேசிப்பவர்.

அந்தக் குரங்கிற்கு அப்பா வைத்திருந்த பெயர் ‘ஊர்வசி’.

கழுத்தில் மணியுடன் அழகாககத் திரியும் அந்த ஊர்வசியின் மேல் நிறைய பேருக்குக் கண்ணாம். ஒருநாள ஊர்வசி (அவளா, அவனா தெரியவில்லை) காணாமற் போய்விட்டதாம். அப்பா எல்ல இடங்களிலும் தேடிப்பார்த்து வருத்தத்தோடு இருந்துள்ளார். அப்போது சுப்பையா அண்ணனுக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது. “ஊர்வசி !” என்று கூப்பிட்டால் அது எங்கிருந்தாலும் “ம்ம்ம்ம்” என எதிர்வினை ஆற்றுமாம்.

“சார், இங்கேதான் யாராவது நம்ம ஊர்வசியைப் பிடிச்சு கட்டி வச்சிருக்கணும். எனக்கு என்னவோ அந்த சீக்கியன் மேலதான் சந்தேகமா இருக்கு. நாம ஊர்வசி, ஊர்வசின்னு கூப்பிட்டுட்டே போவோம். அது நிச்சயம் ம்ம்ம் ன்னு குரல் கொடுக்கும்..”

இரண்டு பேரும் அப்படியே ஊர்வசி, ஊர்வசின்னு கூப்பிட்டுக் கொண்டு போயிருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்தச் சீக்கியரின் வீட்டிலிருந்து ம்ம்ம் எனப் பதில் வழக்கததைவிட வேகமாகவும் விடாமலும் வந்துள்ளது.

பிறகென்ன, அவரது வீட்டுக்குள் புகுந்து ஊர்வசியை மீட்டு வந்துள்ளனர். பிறகு ஊர்வசி எவ்வளவு நாள் இருந்தது, அப்பா எல்லாவற்றையும் விட்டுவிட்டு “ஒரு தோல் பையுடனும் சவரக் கத்தியுடனும்” ஒரு யுத்தக் கப்பலில் தப்பி வந்த வரைக்கும் அது அவருடன் இருந்ததா என்பதெல்லாம் தெரியவில்லை. (இந்த “தோல் பையும் சவரக் கத்தியும்” என்கிற சொற்கள், மிகுந்த ஏமாற்றத்தோடு என் அப்பாயி (பாட்டி) சொல்லிப் பொறுமும் வார்த்தைகள், இன்னும் என்காதில் அப்படியே ஒலிக்கின்றன. பின் என்ன சம்பாதித்துக் கொண்டு வருவான் என சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்த பிள்ளை இப்படி தலைக்கு விலை கூறப்பட்டு, ஒரு லெதர் பேக், ஒரு தங்க நிப்புடன் கூடிய பார்க்கர் பேனா, ஒரு கில்லட் ரேசர், பின் அவர் எப்போதுமே பயன்படுத்தாமல் போன இரண்டு செட் பேன்ட் சர்ட்டுகளுடன் வந்து நின்றால் எத்தனை வயிற்றெரிச்சலாக இருந்திருக்கும்)

அப்பா செத்து 43 ஆண்டுகள், அண்ணன் செத்து 23 ஆண்டுகள் ஓடி விட்டன.. நினைவிலுள்ளது இவ்வளவுதான்.

பத்துவராங் வீட்டில் அப்பா ஒரு மலை அணிலையும் வளர்த்தாராம். கழுத்தில் ஒரு காப்பு அணிவித்து ஒரு கூண்டுக்குள் இருக்கும் அதற்குப் பழங்கள், கொட்டைகள், தேங்காய் இவை தீனி. தப்பித் தவறி கூண்டுக்குள் கையை விட்டால் விரல்களைக் கடுமையாகக் கடித்டுவிடுமாம். அதை கூண்டிலிருந்து ஒரு நாள் அப்பா விடுவித்துள்ளார். அப்படியும் அது வீட்டை விட்டு ஓடாமல் இன்னும் அதிகம் பேரைக் கடிக்க ஆரம்பித்துள்ளது . பிறகு யாரோ சொல்லியிருக்கிறார்கள், கழுத்திலுள்ள காப்பைக் கழற்றி விட்டால் ஓடி விடும் என. அதே போல காப்பைக் கழற்றியவுடன் ஓடியிருக்கிறது. இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் வந்திருக்கிறது. அப்பா பழங்களைக் கொடுத்துள்ளார். சாப்பிட்டு விட்டு ஓடியிருக்கிறது. பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருமாம். அப்பா இல்லாவிட்டால் வரும்வரை காத்திருக்குமாம். வந்தபின் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுப் பின் ஓடிவிடுமாம்.

பத்துவராங் வீட்டில் ஒரு நாயும் இருந்துள்ளது. என்ன பெயர் என்று தெரியவில்லை. சீனர் ஒருவர் அன்பளிப்புச் செய்த பழக்கப்படுத்தப்பட்ட நாய் அது. காலையில் ஒரு கூடைக்குள், ஒரு பர்சில் வேண்டிய சாமான்களின் லிஸ்டையும், பணத்தையும் வைத்துக் கொடுத்துவிட்டால் கூடையை வாயில் கவ்விக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கடைக்கு முன் போய் நிற்குமாம். கடைக்காரர் சாமான்களைப் போட்டு பாக்கி சில்லறையை வைத்துக் கொடுத்தால் கச்சிதமாக வீட்டுக்குக் கொண்டு வந்து தந்துவிடும் என்பார் அண்ணன். எனக்கு அதை நம்புவதற்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். எப்படி அது வாங்கி வருவது உணவுப் பொருளாக இருக்கும் பட்சத்தில் அதை நடு வழியில் மோப்பம் பிடித்துத் தின்னாமல் கொண்டு வந்து தந்திருக்கும்? ஆனால் அன்ணண் அப்படியெல்லாம் பொய் சொல்ல மாட்டார். மிகைப்படுத்திப் பேசும் வழக்கமும் அவருக்குக் கிடையாது. சீனர்கள் அப்படி நாயைப் பழக்குவது வழக்கம் எனச் சொல்வார்.

இங்கே அப்பா வந்து, திருமணமாகி நாங்கள் எல்லாம் பிறந்து அவர் சாகும்வரை வீட்டில் நாய்கள் இல்லாமல் இருந்ததில்லை. பெரும்பாலும் எல்லாம் நம்மூர் சாதாரண தெரு நாய்கள்தான். யாராவது நண்பர்கள் வீட்டில் குட்டி போட்டால் நல்ல ஆண் குட்டியாகப் பார்த்து எடுத்து வந்து வளர்ப்பார். அடுத்தடுத்து வந்த அந்த நாய்கள் எல்லாவற்றிற்குமே “தம்பி” என்பதுதான் பெயர். அப்போது நாங்கள் அடிக்கடி ஊர் மாறிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு ஊருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் அந்த நாயும் வந்துவிடும்.

என் தாத்தாவிற்கு அப்போது தொண்ணூறு வயது. ஒரு காலத்தில் பெரிய மனிதராக இருந்த அவருக்கு, அப்போது எல்லாம் இழந்து ஓட்டாண்டியான போதும் துப்பாக்கி லைசன்ஸ் உண்டு. மசில் லோட் எனச் சொல்லப்படும் சாதாரணத் துப்பாக்கி. அப்பாவின் ஒரே பொழுதுபோக்காக அது இருந்தது. ஈயம் வாங்கி வந்து உருக்கி வீட்டிலேயே அப்பா குண்டுகள் செய்யும் போது நான் அருகில் இருந்து பார்த்த நினைவு இருக்கிறது. வெடி மருந்து மட்டும் எப்போதாவது தஞ்சாவூர் செல்லும் போது வாங்கி வருவார். தாத்தா பெயரில் லைசென்ஸ் இருந்ததால் மருந்து வாங்குவதில் பிரச்சினை இல்லை. தீபாவளி கேப்புகள், அல்லது அதுவும் இல்லாதபோது தீக்குச்சி மருந்தைச் சுரண்டி ட்ரிக்கரில் வைத்து மிகச் சரியாகச் சுட்டு விடுவார் அப்பா. குறி பார்த்துச் சுடுவதில் கில்லாடி. தலைக்குப் பத்தாயிரம் வெள்ளி விலை வைத்து சிங்கப்பூர் மலேயா வெள்ளை அரசு தேடியதென்றால் சும்மாவா?

அப்போது நாங்கள் ஒரத்தநாட்டுக்கு அருகில் வெள்ளூரை ஒட்டி ‘மேலப் பத்தை’ என்னும் படு குக்கிராமத்தில் இருந்தோம். கடும் வறுமை. தாத்தாவிடம் எஞ்சி இருந்தது பத்து மா நிலம் மட்டும். வயதான தாத்தா. அப்பாவுக்கோ விவசாயம் தெரியாது. ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது 14 வயதில் கூலித் தொழிலாளியாக பினாங்கிற்குக் கப்பலேற்றி அனுப்பப்பட்டவர் 28 வயதில்தான் இங்கு திரும்பி வந்தார். அப்பா, தாத்தாவுக்கு மூன்றாம் தாரத்துப் பிள்ளை. என் அப்பாயிக்கும் (பாட்டி) தாத்தாவுக்கும் 30 வயதுக்கும் மேல் வித்தியாசம். அப்பாயி சின்ன வயதில் ரொம்பவும் அழகாக இருப்பார் எனச் சொல்வார்கள். தாத்தாவும் அப்பாயியின் அப்பாவும் நண்பர்களாம். தாத்தாவின் கள்ளுக் கடையில் அவர் ரெகுலர் கஸ்டமர். அப்படித் தொடங்கிய நட்பு கடைசியில் சம்பந்திகளாவதில் முடிந்துள்ளது. அது தாத்தா ஓகோ என்றிருந்த காலம். எல்லாம் போனபின் ஒரு விரக்தி மனநிலையில் படித்துக் கொண்டிருந்த அப்பாவை அப்பாயிக்குத் தெரியாமல் பினாங்கிற்குக் கப்பலேற்றியிருக்கிறார்.

இங்கு வந்தவுடன் அப்பாவுக்குத் திருமணம். அம்மா தஞ்சாவூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் நடந்துள்ளது. ஏழைக் குடும்பந்தான். தந்தை வேறு இல்லை. ஆனாலும் இப்படியான ஒரு குக்கிராம வாழ்க்கைக்குப் பழக்கப்படாத ஒரு 16 அல்லது 17 வயதுப் பெண் என் அம்மா.

தினசரி அப்பா வேட்டைக்குப் போகும்போது அப்பாவின் செல்ல நாய் தம்பியும் கூடச் செல்லும். நிறையப் பறவைகளோடு அப்பா வீடு திரும்புவார். ஒரு காட்சி இன்னும் நினைவிருக்கிறது. வீட்டிற்கு எதிரே மிகப் பெரிய சவுக்குத் தோப்பு. யாரோ வந்து சொன்னார்கள். அப்படி வந்து அடிக்கடி சொல்வர்ர்கள். “சார், (ஆமாம், சாகும்வரை அப்பா எல்லோருக்கும் சார் தான்) சவுக்குத் தோப்புல ஏராளமா பழந்தின்னி வவ்வால் அடைஞ்சிருக்கு”. அப்பா அவசர அவசரமாகத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடினார். பின்னால் தம்பி ஓடியது. பக்கம் என்பதால் நானும் ஓடினேன் அம்மாவும் ஓடி வந்தார். ஏதோ பழம் காய்த்துத் தொங்குவது போல மரங்களிலெல்லாம் வவ்வால்கள். அப்பா சுட்டார். பொல பொல வென வவ்வால்கள் உதிர்ந்தன. நாங்கள் எல்லாம் ஓடி சென்று பொறுக்கினோம். குண்டுக் காயங்களுடன் தத்தித் தாவிப் பறக்க முயன்றவைகளைத் தம்பி ஓடி மறித்து உறுமி நிறுத்தியது.

ஏராளமான வவ்வால்கள். அந்தச் சின்னஞ் சிறு குடியிருப்பில் இருந்த எல்லோரும் கூடிவிட்டார்கள். எல்லோருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்தளித்தார் அப்பா.

அப்பாவுக்கு இங்கும் போலீஸ் தொல்லை இருக்கத்தான் செய்தது. நாடு கடத்தப்பட்டு சுப்பையா அண்ணனும் இங்கு வந்து சேர்ந்தார். சிலமாதங்களில் அவரது தம்பி முத்தண்ணனும் இங்கு வந்தார். அப்பா ஒரு சின்ன சோடா கம்பெனி தொடங்கினார். அப்போதும் தலைமறைவுத் தோழர்கள் வீட்டுக்கு வருவார்கள். வடசேரியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட இரணியன் ஆறுமுகம் இருவரும் கொல்லப்படுவதற்கு முன் எங்கள் மேலப்பத்தை வீட்டில்தான் தங்கி இருந்துள்ளனர். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி, அப்பாவைக் காரணம் காட்டி தாத்தாவின் துப்பாக்கி லைசன்சை ரத்து செய்தான். அப்பாவின் வேட்டை வாழ்க்கை அத்தோடு முடிந்தது.

1950 களில் தமிழகத்தை மிகப் பெரிய புயல் ஒன்று தாக்கியது. தாத்தாவும் அப்பாயியும் அன்று ஊரில் இல்லை. அன்று காலை முதலே கடும் மழை. அப்பா எங்கோ சென்றிருந்தார். அம்மா எனக்காக கேழ்வரகு அடை சுட்டுத் தந்திருந்தார். சூடாக இருந்தது. ஆறட்டும் என ஆவலோடு காத்திருந்தேன். திடீரென பலத்த காற்றுடன் மழை. சடசடவென எங்கள் கீற்று வீடு சரிந்தது. என்கிருந்தோ தம்பி ஓடி வந்து உள்ளே நுழைந்து கலவரத்தோடு பார்த்தது. அம்மா பயந்து போயிருந்தார். நல்ல வேளையாக அப்பா அப்போது ஓடி வந்தார். அவசரப்படுத்தி அம்மாவையும் என்னையும் அழைத்துக் கொண்டார். கொட்டும் மழையில், சீறும் புயல் காற்றின் ஊடே எல்லோரும் ஓடினோம். தம்பிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அருகிலுள்ள வெள்ளூரில் ஒரு மாடி வீட்டில் ஓடித் தஞ்சம் புகுந்தோம். அங்கு ஏற்கனவே நிறையக் கூட்டம். சற்று நேரத்தில் “சீச்சீ’..” என யாரோ விரட்டினார்கள். எட்டிப் பார்த்தால் தம்பி. என்ன செய்வது மனிதர்களுக்கே நிற்க இடமில்லை. அப்பாவால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. தம்பி கொஞ்ச நேரம் அங்கு நின்றுவிட்டு ஓடி விட்டது.

அடுத்த நாள் மழை விட்டு ஓய்ந்தபின் அப்பா எங்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். விடு முழுமையாகச் சரிந்து கிடந்தது. சரிந்திருந்த வீடுக்குள்ளிருந்து தம்பி வாலை ஆட்டிக் கொண்டு வந்த காட்சி இன்னும் எனக்கு நினைவில் தங்கியுள்ளது.

அதற்குப் பின், பாப்பாநாடு – மதுக்கூர் சாலையில் உள்ள கொத்தயக்காடு என்னும் ஊருக்கு இடம் பெயர்ந்தோம். இந்த வீட்டில்தான் தனது 93வது வயதில் தாத்தா செத்துப்போனார். சுப்பையா அண்ணனுக்குச் சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து அப்பா திருமணம் செய்து வைத்தார். சோடாகம்பெனி கொஞ்சம் நன்றாக ஓடத் தொடங்கியிருந்தது. பள்ளியில் சேர்க்கப்படாத எனக்கு பாடப் புத்தகங்களை வாங்கி வந்து அம்மாவே வீட்டில் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

அங்கும் ஒரு தம்பி இருந்தது. அது மேலப்பத்தை வீட்டில் இருந்த தம்பிதானா இல்லை வேறு நாயா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அப்போது ஒரு சம்பவம். எனக்கு நிழலாகத்தான் அது நினைவிருந்தபோதும் அப்பாயி அதைப் பலமுறை, வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நீட்டி முழக்கி அதற்குக் கண்ணும் காதும் வைத்துச் சொன்னதால் அது ஒரு காட்சிப் படிமமாகக் கண்ணிலும் மனதிலும் நிற்கிறது. ஏதாவது நாயைப் பற்றியோ இல்லை பாம்பைப் பற்றியோ பேச்சு வந்தால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு அப்பாயி இந்தக் கதையைத் தொடங்கிவிடுவார்.

நடந்தது இதுதான்.

அப்போது இரண்டு காளை மாடுகள் வீட்டில் இருந்தன. கொஞ்சம் நிலமும் வெளுவாடி என்னும் ஊரில் சாகுபடியில் இருந்தது. வீட்டில் ஒரு வைக்கோற் போரும் உண்டு. ஒரு மாலையில் அம்மா எனக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா ஏதோ படித்துக் கொண்டிருந்தார். மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கச் சென்ற அப்பாயி திடீரென “தம்பீ தம்பீ…” என அலறினார். அப்பாவை அவர் ‘தம்பி’ என்றுதான் அழைப்பார். அப்பா எழுந்தோடினார். நாங்களும் பின்னால் ஓடினோம். “கிட்ட வராதீங்க, வராதீங்க, அங்கேயே நில்லுங்க…” என்று கத்தினார் அப்பாயி. எல்லோரும் திகைத்து நின்றோம். வைக்கோற் போர் முன்னே அப்பாயி. அவருக்கு முன்னே படம் எடுத்துச் சீறி நிற்கும் ஒரு நல்ல பாம்பு. எல்லோரும் திகைத்து நின்ற அந்தக் கணத்தில், தம்பி தம்பி என்ற குரல் கேட்டு ஓடி வந்த எங்கள் தம்பி நாய், அப்பாயிக்கும் பாம்புக்கும் இடையில் புகுந்தது. உரத்த குரலெடுத்துக் குரைத்தது. பாம்பு சீறவும், தம்பி பின் வாங்கிக் குலைத்து முன்னேறவும்…. அதற்குள் அப்பாவும் சுதாரித்துக் கொண்டு கம்பொன்றை உருவினார். இதற்கிடையில் அந்த நல்ல பாம்பு வேகமாகப் பாய்ந்து புதருக்குள் நழுவியது.

தம்பியும் அங்கே நிற்கவில்லை. அதுவும் எங்கோ ஓடிவிட்டது. அப்பாயி அதற்கு ஒரு விளக்கம் சொன்னார். தம்பியின் மீது விஷம் தீண்டிவிட்டதாம். ஆனாலும் நாய்காளுக்கு மாற்று மூலிகை தெரியுமாம். அதைப்போய்ச் சாப்பிடத்தான் ஓடியிருக்கிறதாம். என்னமோ, சிறிது நேரத்தில் தம்பி திரும்பி வந்தது. அதன் மீது ஏதாவது காயம் உள்ளதா என அப்பா கவனமாகப் பார்த்தார். ஒன்றுமில்லை.

###

அப்பா என்னை பாப்பாநாடு உயர் தொடக்கப் பள்ளியில், Private Coaching என ஒரு சான்றிதழ் அளித்து ஐந்தாம் வகுப்பில் கொண்டு சேர்த்தார். நான்காம் வகுப்புப் படிக்க வேண்டிய வயது. முதலில் ஆறாம் வகுப்பில் சேர்த்துப் பின் ரொம்பவும் வயது குறைவு என மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஓராண்டு வயதுச் சலுகையுடன் ஐந்தாம் வகுப்பில் உட்காரச் சொன்னார்கள். எனது படிப்பிற்காக வீட்டையும் பாப்பாநாட்டிற்கு மாற்றினார் அப்பா. இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்றுவிட்டு சோடா கம்பெனியை விரிவுபடுத்தினார்.

ஜமீன் நிலத்தில் கட்டப்பட்ட கூரை வீடுதான் என்ற போதிலும் கம்பெனி நன்றாக ஓடியது. சுப்பையா அன்ணனின் குடும்பமும் எங்களோடுதான் இருந்தது. அப்பாயி நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். வயது அதிகமில்லை ஒரு 55 இருக்கலாம்.

தம்பிக்கு அப்போது ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும் மூப்பு கனிந்திருந்தது. சோடா கம்பெனியை ஒட்டிய நீண்ட கொட்டகையில் அப்பா ஒரு ஈசி சேரில் அமர்ந்திருப்பார், எதிரே கிடக்கும் ஒதியமர பெஞ்சில் ஆங்கில தமிழ் நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகள் எல்லாம் கிடக்கும். ஒரு சிறிய படிப்பகம் போல பலரும் வந்து படித்து விவாதங்கள் நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்கள் நடந்தால் தலைவர்களுக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அருகிலேயே மீன் மார்கெட். அப்பா சாப்பாட்டில் குறை வைக்க மாட்டார். தம்பி எப்போதும் அப்பாவின் காலடியில் படுத்துக் கிடக்கும்.

சோடா கம்பெனி அருகில் கணக்கன் குளம். குளத்தங்கரையில்தான் ஊர்ச்சாவடி. நரிக்குறவர்கள், வாத்து, ஆடு மேய்க்கும் நாடோடிகள் எல்லாம் சாவடிக்கெதிரில் எங்கள் சோடா கம்பெனியை ஒட்டி, கணக்கன் குளக் கரைப் புளியமரத்தடியில்தான் தங்குவார்கள். வைகாசியில் நடக்கும் திருமேனி அம்மன் கோவில் பல்லக்குத் திருவிழாவும் இங்குதான் நடக்கும். கணக்கன் குளக் கரையில் இப்படி எப்போதும் தங்கியிருக்கும் நாடோடிகளை வேடிக்கை பார்ப்பது என் பொழுது போக்குகளில் ஒன்று. நிறையப் பேர் இப்படி வந்து போவதால் தம்பியும் இந்த நாடோட்டிகளைக் கண்டு ரொம்பவும் ஓவராகக் குலைக்காது.

ஒருமுறை தென்மாவட்டம் ஒன்றிலிருந்து கீதாரிகள் ஆடுகளை ஓட்டி வந்து ஓரிரவு அங்கு தங்கினார்கள். நான் வழக்கம்போல ஓடிச் சென்று பார்த்தேன், அவர்களிடம் மிக அழகாக ஒரு சிறிய நாய்க்குட்டி இருந்தது, அப்படியான நாய்க்குட்டியை நான் பார்த்ததில்லை. அப்பாவிடம் ஓடி வந்து சொன்னேன். நாய்க்குட்டி என்றவுடன் அப்பா உடனடியாக எழுந்து வந்து அவர்களிடம் கேட்டு அதைத் தூக்கி வந்தார். அம்மாவிடம் சொல்லிக் கொஞ்சம் பால் கொண்டு வந்து தந்தார். வெள்ளை உடம்பில் கபில நிறத் திட்டுக்கள் மலிந்த நீண்ட உடம்பும், மடிந்த காதுகளையும் உடைய அழகிய அந்தப் பெண் நாய்க்குட்டியை விட்டுப் பிரிய எனக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் மனமில்லை.

சற்று நேரத்தில் நாய்க்குட்டியைத் தூக்கிச் செல்ல கீதாரி வந்தார். அப்பா அவரிடம் நாய்க்குட்டியை கொடுக்கும்படி கேட்டார். அவர்கள் தயங்கினர். அது ஒரு கலப்படமில்லாத கோம்பை நாய்க்குட்டி. அற்புதமான ஒரு தமிழக ப்ரீட். கடைசியில் பேரம் பேசி நூறு ரூபாய்க்கு அப்பா அந்த நாய்க்குட்டியை விலைக்கு வாங்கினார்.

நாய்க்குட்டியைக் காசு கொடுத்து வாங்கியது, அதுவும் நூறு ரூபாய்க்கு என்பது கொஞ்ச நாள் வரைக்கும் ஊரில் ஒரே பேச்சாக இருந்தது. ரொம்பச் செல்லமாக எங்களிடம் வளர்ந்த அந்தப் பெண் நாய்க்கு ‘ஜிக்கி’ எனப் பெயரிட்டிருந்தோம். ஏற்கனவே மூப்பை எட்டியிருந்த தம்பி, ஜிக்கியைப் பெரிய போட்டியாக நினைக்கவில்லை. ஒரு தேர்ந்த ஞாநியைப்போல அது ஒரு ஒதுக்கத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. கண் பார்வை குறைந்து அடுத்த ஓராண்டில் அது இறந்தும் போனது. கணக்கன் குளக் கரையில் வயலோரமாய் குழி வெட்டி அதை அடக்கம் செய்தார் அப்பா.

கோம்பை நாய் என்பது நீளமாகவும் உயரமாகவும் வளரக் கூடிய ஒன்று. காம்பவுன்ட் உள்ள ஒரு வீட்டில் முறைப்படி வளர்க்க வேண்டிய நாய் எங்கள் வீட்டில் சாப்பாட்டிற்குக் குறைவில்லை ஆயினும் எல்லா நாய்களையும் போலத்தான் அதையும் வளர்த்தோம். அது பெரிதானவுடன் நிறையப் பிரச்சினைகள் உருவாயின. கணக்கன் குளக் கரை கிழக்கிலுல்ள பல கிராமங்களுக்கு சென்று வரும் பாதையும் கூட. ஜிக்கியின் தோற்றம். கணீரென்ற குரலில் அது குரைத்துச் சீறி வருவது, இதெல்லாம் எல்லோரையும் வெருட்டின. ஒரு சிலரை ஜிக்கி கடிக்கவும் செய்தது. நிறையப் புகார்கள் வரத் தொடங்கின. அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தது. கட்டிப் போட்டால் பெருங்குரலெடுத்து அது எதிர்ப்புக் காட்டியது. அவிழ்த்து விட்டவுடன் இன்னும் ஆக்ரோஷமாய் நடந்து கொண்டது.

ஒருநாள் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கிக் கொண்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒருவரை நோக்கி ஓடிச் சென்று அவர் கையிலிருந்த மீன்கள் அடங்கிய தாழை மட்டைப் பையை அப்படியே கவ்விக் கொண்டோடிவிட்டது. இன்னொரு நாள் வீட்டருகில் இருந்த கைலாசம் பிள்ளை டீக்கடையில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரின் முன் போய் நின்று முன் கால்கள் இரண்டையும் தூக்கி மேசை மீது வைத்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோசையைச் சாப்பிடத் தொடங்கியது. அவர் பேயலறல் அலறினார். கைலாசம் பிள்ளை அப்பாவிடம் ஓடி வந்தார்.

ஜிக்கியை அப்பா தனது நனபரும் நிலப்பிரபுவுமான வீரைய்யாச் சோழகரிடம் கொடுத்துவிடுவது என முடிவெடுத்தபோது எனக்கும் தங்கைகளுக்கும் அதை ஏற்க முடியவில்லை. ஆனால் வேறு வழியில்லை.

வீரைய்யன் அடிக்கடி அப்பாவைச் சந்திக்க வருபவர். ஜிக்கியுடன் அவருக்கு நல்ல பழக்கம். அவரது வீடு பட்டுக்கோட்டை சாலையில் பாப்பாநாட்டைத் தாண்டி உல்ள அடுத்த ஊரான. சோழகன் குடிக்காட்டில்ல் இருந்தது. சாலையை ஒட்ட்டி அவர் வீடு. வண்டி கட்டிக்கொண்டு வந்து ஜிக்கியை அவர் ஏற்றிச் சென்றபோது அம்மா உட்பட எல்லோரும் கண்கலங்கி விட்டோம். அப்பாவுக்கும் மனம் சரியில்லை. அன்றிரவு அப்பா வழக்கத்தை விட அதிகமாகக் குடித்தார்.

வீரைய்யன் ஜிக்கியை நன்றாக வைத்துக் கொண்டார். நல்ல கறி சாப்பாடெல்லாம் போட்டார். தினசரி அதனுடன் கொஞ்ச நேரமும் செலவிடுவார். இரண்டு மாதங்கள் கட்டியே வைத்திருந்த அவர், ஒரு நாள் அதை அவிழ்த்து விட்டார். அடுத்த கணம் ஜிக்கி நாலுகால் பாய்ச்சலில் வேலியைத் தாண்டி ஓடியது சாலையில் வழி பிசகாமல் ஓடி வந்து அடுத்த அரை மணி நேரத்தில் எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தது. எல்லோர் மேலும் ஏறி, நக்கி, பிராண்டி, சோடா கம்பெனிக்குள் ஓடி இரண்டு மூன்று பாட்டிலகளை உடைத்து ரகளை பண்ணிவிட்டு அப்பாவின் காலடியில் போய்ப் படுத்துக் கொண்டது. எங்கள் எல்லோருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அம்மா முள்ளில்லாமல் மீனை விண்டு சோற்றில் பிசைந்து கொண்டு வந்து சாப்பிடக் கொடுத்தார். வயிறாரச் சாப்பிட்டது.

அடுத்த நாள் காலை வீரைய்யன் வண்டியுடன் வந்து மீண்டும் ஜிக்கியைக் கூட்டிச் சென்றார். இம்முறை இரண்டு மாதம் கடுங்காவலில் வைத்திருந்து கவனமாக ஒரு நாள் அவிழ்த்து விட்டார். இப்போது அவர் வேலியை உயர்த்திக் கட்டி ‘கேட்’டும் போட்டிருந்தார். உள்ளேயே சுற்றிச் சுற்றி வந்த ஜிக்கி, அவர் அசந்த நேரம் பாய்ந்து தப்பி எங்கள் வீட்டில் வந்து நின்றது. இம்முறை ஜிக்கியை மீண்டும் கொண்டு செல்ல வீரைய்யன் முயற்சிக்கவில்லை.

போகப் போக ஜிக்கியின் ஆவேசம் ரொம்பவும் குறைந்தது. யாரையும் அது கடிப்பதில்லை. பெருங் குறும்புகள் எதையும் செய்து எங்களுக்குச் சங்கடம் விளைவிப்பதுமில்லை.

ஜிக்கியின் அழகில் மயங்கி நிறைய ஆண் நாய்கள் எங்கள் வீட்டைச் சுற்றத் தொடங்கியதுதான் இப்போது எங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது. அந்த ஆண் நாய்களுக்குள் பெருஞ் சண்டை வேறு வந்து ஒரே களேபாரமாக இருக்கும்.

ஜிக்கி ஆண்டுக்கு ஒரு முறை நான்கைந்து குட்டிகள் போடும் அவை ஒரிஜினல் கோம்பை ப்ரீடாக இல்லாதபோதும் கொள்ளை அழகாக இருக்கும். எல்லாக் குட்டிகளையும் நாங்களே வளர்க்க ஆசையாக இருக்கும். அது சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம். இன்னோரு பக்கம் அந்த நாய்க்குட்டிகளுக்கு அத்தனை போட்டி. கொத்திக் கொண்டு போய்விடுவார்கள்.

அடிக்கடி குட்டி போட்டது ஜிக்கியின் உடலில் கொஞ்சம் தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வயிறும் முலைகளும் சற்றே கீழிறங்கித் தொங்க நேரந்த போதும் அதன் அழகும் கம்பீரமும் குறையவில்லை. அதன் குறும்புத் தனங்கள் முற்றாகக் குறைந்திருந்தன.

###

அப்பா இப்போதெல்லாம் நிறையக் குடிக்கத் தொடங்கியிருந்தார். மலேயாவில் ஒரு சாகசமிக்க வாழ்வை மேற்கொண்டிருந்த அவரது கால்கள் இங்கு பாவவே இல்லை. மலேயாவிலிருந்து சென்னைத் துறைமுகத்தில் வந்திறங்கியவுடன் நேரடியாக பிராட்வேயில் இருந்த கஒயூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத்தான் சென்றிருக்கிறார். எனினும் அவரால் இங்கு ஒட்ட இயலவில்லை. குடும்ப வாழ்க்கை அப்படி ஒன்றும் அவரை ஈர்த்ததில்லை. இதன் பொருள் அவர் எங்களிடம் பாசமாக இருக்கவில்லை என்பதல்ல. நான் கல்லூரியில் படிக்கும்போதும். ஏன் பொன்னேரி கல்லூரியில் வேலையில் சேர்ந்த பின்னும் வீட்டிற்கு வரும்போது ஆரத் தழுவிக் கொள்வார். எனக்கு ரொம்பக் கூச்சமாக இருக்கும். என் படிப்பில் ரொம்பவும் அக்கறையாக இருப்பார். இலக்கிய அரசியல் ஆர்வங்கள் மட்டும் அவரை திருப்தி செய்ய இயலவில்லை. வரவர புத்தகங்கள் படிப்பதும் குறைந்தது. குடி அதிகமாகியது. அது எங்கள் அவ்வளவு பேருக்கும் மிகப் பெரிய கவலையாக மாறியது. அம்மாவும் நானும்தான் மிகவும் பாதிக்கப்பட்டோம்.

குடித்தால் அப்பாவால் யாருக்கும் தொல்லை இருக்காது. ஒரு குழந்தையைப் போல ஆகி விடுவார். அவரால் யாருக்கும் துன்பம் இருக்காது. ஆனாலும் அதிகக் குடியில் அவர் மயங்கி விழுவது, ஆடை குலந்து நிற்பது இதுவெல்லாம் எனக்கு அழுகையை ஏற்படுத்திவிடும். அடுத்த நாள் காலையில் அந்தக் குற்ற உணர்ச்சியில் அவர் குன்றி அமர்ந்திருப்பர். ஆறடி உயர அந்தக் கம்பீரமான ஆகிருதி, அதற்குள் இருக்கும் அத்தனை விசாலமான இதயம் இப்படிக் குன்றி அமர்ந்திருப்பது இன்னும் என்னைத் துன்புறுத்தும்.

நான் பொன்னேரி அரசு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் தந்தி மூலம் எனக்கு அந்தத் துயரச் செய்தி வந்தது. அம்மா இறந்தபோது அவருக்கு 43 வயதுதான், பெரிய நோய் எதுவும் இல்லை. அப்பாவின் குடிப்பழக்கத்தால் அம்மா தற்கொலை செய்துகொண்டார் என ஊரில் சிலர் பேசிக் கொண்டனர். இன்று வரை அது உண்மையா என நான் யாரிடமும் விசாரித்ததில்லை. அம்மா இறந்தபோது ஒரே ஒரு தங்கைக்குத்தான் திருமணமாகி இருந்தது. அந்தத் தங்கையின் கணவருக்கும் நல்ல வேலை இல்லை. வயதுக்கு வந்த இன்னொரு தங்கை, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தம்பி, சின்னஞ்சிறு தங்கை, எல்லோரைவிடவும், இவ்வளவு பேர் இருந்தும் அம்மா இல்லாமல் நிராதரவாகிப் போன அப்பா, எல்லோரையும் விட்டு விட்டு அம்மா போய்விட்டார். சுப்பையா அன்ணன் குடும்பம் எங்களோடு இருந்தது மட்டுந்தான் எங்களுக்கு ஒரே ஆதரவு.

அப்போது நான் தற்காலிகப் பணியில்தான் இருந்தேன். நீண்ட நாள் விடுப்பு எடுக்க இயலாது. அடுத்த சில நாட்களிலேயே நான் பொன்னேரி திரும்ப வேண்டியதாயிற்று. அடுத்த வாரம் நான் பாப்பாநாடு வந்தபோது கண்ட காட்சி மனதைக் குலுக்கியது. அப்பா காவி வேட்டி, துண்டுடன் அமர்ந்திருந்தார். அவர் காலடியில் ஜிக்கி. அது அப்பாவையும் விடத் தளர்ந்திருந்தது. அப்பா யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை குடிப்பதுமில்லை எனத் தங்கைகள் சொன்னார்கள். சரியாகச் சாப்பிடுவதும் இல்லை.

நான் அடுத்த முறை பாப்பாநாடு வந்தபோது அப்பா இன்னும் சோர்ந்திருந்தார். எனது பெரியப்பா மகன் ஒருவர். தோபியாஸ் என்று பெயர். சி.பி.எம் கட்சிக்காரர். மன்னார்குடிக்குப் பக்கத்தில் காரிச்சாங்குடி என்றொரு ஊர்க்காரர். அவர் அன்று வந்திருந்தார். அப்பாவைப் பார்த்து அவர் நொந்து போனார். “தம்பி, அப்பாவை இப்படியே விடக் கூடாது அவரும் செத்து போயிடக் கூடாது. கொஞ்சம் இரு” எனச் சொல்லிவிட்டு எங்கோ சென்று கொஞ்ச நேரத்தில் ஒரு சாராய பாட்டிலுடன் வந்தார். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்பா அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார்.

நான் பொன்னேரி வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஊருக்குப் போகவில்லை. தங்கை ரோஸ்லினிடமிருந்து கடிதம் வந்தது. அப்பா ரொம்பக் குடிக்கிறார். தாங்க முடியவில்லை என. நான் ரொம்ப சோர்ந்து போனேன். இந்த வாரம் ஊருக்குப் போவது என முடிவு செய்து கொண்டேன்.

ஆனால் அடுத்த நாள் அதிகாலை என் அறைக்கதவு தட்டப்பட்டது, முத்தண்ணன் நின்றிருந்தார். சுப்பையா அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.உடனே புறப்படு என்றார். அண்ணன் நன்றாகத்தானே இருந்தார், என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை. ஒரு வாடகைக் காரில் அவர் வந்திருந்தார். ஏதோ விபரீதம் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது, வீடு நெருங்கையில் பெருங்குரல் எடுத்து எழுந்த அழுகை எல்லாவற்றையும் உணர்த்தியது.

அப்பா தினமும் இரவில் கணக்கன் குளத்தில் சென்று குளித்து வருவது வழக்கம். ஒரு நாளும் அவர் இப்படி இரு வேளை குளிக்கத் தவறுவதில்லை. அன்று காலை முதல் குடித்துக் கொண்டிருந்துள்ளார். இரவு குளிக்கப் போனவர் வரவில்லை. குளத்தில் இறங்கித் தேடித்தான் அவர் உடலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அப்பா அவரது ஒதிய மரப் பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்தார், காலடியில் ஜிக்கி. என்ன விரட்டியும் அது போகவில்லையாம். என்னைப் பார்த்தவுடன் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் கவிழ்த்துக் கொண்டது.

மூன்றாம் நாள் பால் தெளித்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டேன். எத்தனையோ கவலைகள். அப்பாவின் பாங்க் பாலன்ஸ் வெறும் 5000 ரூபாய்தான். மூத்த மகன் நான்.

தம்பி தங்கைகளைப் பார்க்க அடுத்த வாரமே ஓடோடி வந்தேன். குழந்தைகள் கொஞ்சம் தேறி இருந்தார்கள். அவர்களோரு சற்று நேரம் சிரித்துப் பேசிவிட்டு அப்புறந்தான் கவனித்தேன். ஜிக்கியைக் காணோம். “ஜிக்கி எங்கே?” எல்லோரும் மௌனமானார்கள். அப்போது வந்த சுப்பையா அண்ணன்தான் மௌனத்தைக் கலைத்தார். அப்பா இறந்த அன்றிலிருந்து ஜிக்கி சாப்பிடவில்லையாம். இரண்டொருமுறை தேடிச் சென்று அப்பாவின் கல்லறையிலிருந்து ஜிக்கியை அழைத்து வந்துள்ளனர். சாப்பிடாமலே இருந்து அப்பா இரந்த ஒரு வாரத்தில் அவர் கிடத்தப்பட்ட இடத்திலேயே செத்திருக்கிறது ஜிக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *