ஹார்ட் மற்றும் நெக்ரியின் பேரரசும் பெருந்திரளும்

     கார்ல் மார்க்ஸ் 9       மக்கள் களம், பிப்ரவரி 2018                                 

இன்றைய முதலாளிய உலகு வெற்றிக் களிப்புடன் வலம் வருகிறது. சாமுவேல் ஹட்டிங்டன், ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா, மில்டன் ஃப்ரைட்மன் முதலான சுதந்திரச் சந்தை மற்றும் உலகமய ஆதரவுக் கோட்பாட்டாளர்கள் இனி முதலாளியத்தை எதுவும் சாய்த்துவிட முடியாது என்கிற எள்ளலோடு எழுதிக் குவிக்கின்றனர். ‘அமெரிக்க நூற்றாண்டு’ தொடங்கிவிட்டது என்கின்றனர். புவி அரசியல், உலக மயம், உலகளாவிய வெகுமக்கள் பண்பாடு ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனக் கண் சிமிட்டுகின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய இடதுசாரிகள் வெளியில் சற்று வீறாப்போடு காட்டிக் கொண்டபோதும் உள்ளுக்குள் பெரிதும் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். மிகச் சில உற்சாகக் குரல்கள், அவையும் மிகப் பலவீனமாகவே இடது வெளியிலிருந்து மேலெழும்புகின்றன. அப்படி ஒலிப்பவையும் மாறியுள்ள நிலையை ஏற்றுக் கொள்ளவோ, அந்த அடிப்படையில் 1990 களுக்குப் பிந்திய உலகைப் புரிந்துகொள்ளவோ இயலாமல் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. உள்ளார்ந்த நம்பிக்கை இன்மையை மறைத்துக் கொண்டு பழைய பார்வைகளை மிகவும் அடங்கிய குரலில் ஒலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் மிஷேல் ஹார்ட் என்கிற  ஃப்ரென்ச் இலக்கியக் கோட்பாட்டாளரும், அன்டோனியோ நெக்ரி என்கிற இத்தாலியத் தத்துவ இயலாளரும் இணைந்து எழுதிய “பேரரசு – EMPIRE” எனும் நூல் இன்றைய உலகைச் சற்றே மாறுபட்ட கோணத்தில் அணுகிப் புதிய நம்பிக்கை ஒன்றை முன் வைக்கிறது. கடந்த இருபதான்டு கால தொழிலாளர்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டன என்கிற எண்ணம், அந்த அடிப்படையிலான வெற்றிக் களிப்பு அல்லது அந்த அடிப்படையிலான நம்பிக்கை இழப்பு இரண்டுமே அபத்தம் என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

டெல்யூஸ், கட்டாரி எனும் இரண்டு ஃப்ரென்ச் தத்துவ இயலாளர்களின் முக்கிய நூலாகிய ‘ஆயிரம் மேடைகள்’ அல்லது ‘ஆயிரம் மேற்தளங்கள்’ எனும் பொருள்படும் Thousand Platues  எனும் நூலின் வழியில் நின்று இன்றைய உலகை அவர்கள் அணுகுகின்றனர். வழக்கமான ‘பொருளாதாரம்’, ‘அரசியல்,’ ‘வரலாறு’ என்கிற வகைப்பாட்டுக்குள் இன்றைய உலகைப் புரிந்துகொள்வது என்பதற்குள் முடக்கிக் கொள்ளாமல் சட்டம், தத்துவம், உளவியல், அரசியல், பொருளாதாரம், புனைவு முதலான கல்வியியல் ஒழுங்குகளை (disciplinary boundaries) எல்லாம் கடந்து திமிறி இயங்கும் ஒரு எழுத்து முறையை ஹார்ட்டும் நெக்ரியும் கையாள்கின்றனர்.

அன்டோனியோ நெக்ரி 1970 களில் இத்தாலியில் எழுச்சியுற்றிருந்த “நகர்ப்புற கெரில்லா இயக்கம்” “செம்படை” (urban guerilla movement / Red Brigade) ஆகியவற்றில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டு கொலைகள், ஜனநாயக அரசைக் கவிழ்க்கச் சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டபோது ஃப்ரான்சுக்குத் தப்பியோடி வந்தவர் அவர். மித்தரென்ட் கொள்கையின் அடிப்படையில் ஃப்ரான்ஸ் அவருக்கு அடைக்கலம் அளித்தது. ஃபூக்கோ, தெரிதா, கடாரி முதலான உலகப் புகழ் பெற்ற தத்துவ இயலாளர்களுடன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய நெக்ரி 1997 ல் இத்தாலிய அரசுடன் பேச்சு வர்த்தை நடத்தித் தனக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் தண்டனையைப் 13 ஆண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். பின் நாடு திரும்பி 13 ஆண்டுகள் கிராம்சி இருந்த அதே சிறையில் கழித்துப் பின் விடுதலையாகித் தற்போது இன்னொரு தத்துவ இயலாளரான ஜூடித் ரிவெல்லுடன் ஃப்ரான்சில் வாழ்கிறார். ஹார்ட்டும் பேராசிரியராக மட்டுமின்றி அரசியற் களத்திலும் செயல்படுபவர்.

ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கும் இன்றைய உலகு குறித்த பார்வையை நாம் இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்:

உலக முதலாளிய வீச்சின் ஊடாக தேசிய அரசுகளின் (Nation States) அதிகார அமைப்புகள் சிதைந்து கொண்டிருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். உலகமயம் என்பதை வெறுமனே சந்தைகளை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் ஒரு செயற்பாடாக மட்டும் சுருக்கிப் பார்க்க இயலாது. உண்மையில் அரசுக் கட்டுப்பாடுகள் என்பன உதிர்ந்து அழிவதற்குப் பதிலாக அவை இன்னும் பெரிய அளவில் பெருகி ஒன்றோடொன்று பிணைந்து, தேசங்களைக் கடந்த ஒன்றாக இப்போது ஒழுங்கமைக்கப் படுகிறது. இதைத்தான் அவர்கள் பேரரசு (Empire) என்கின்றனர். இந்த ஒழுங்கமைப்பின் வடிவத்தை ஒரு “தலையற்ற முண்டம்” (acephalous)  என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே விளிம்புகளிலிருந்து மையத்தை நோக்கி கப்பம் குவிவது என்கிற வழக்கமான பொருளில் முன்வைக்கப்படவில்லை. மாறாக இது ஒரு ஃபூக்கோவியக் கருத்தாக்கத்தில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. பேரரசு என்பது இங்கு இறுக்கமான வடிவம் கொண்டிராமல் பரவலாக அமைந்துள்ள. அடையாளமற்ற ஒரு உலகு தழுவிய வலைப்பின்னல் என்பதைக் குறிக்கிறது. முந்தைய காலங்களைப் போல எந்த ஏகாதிபத்தியத்தின் காலனி இது என எந்த இரு தேச அரசுகளையும் அடையாளம் காட்ட முடியாத சுரண்டல் இது.

இறையாண்மை என்பது இப்போது தேச அரசுகளிலிருந்து நீக்கப்பட்டு உலகமயமாக்கப் படுகிறது. தேச அரசுகளின் காலத்தில் அதிகாரம் குவிந்திருந்த புள்ளியை அடையாளம் காட்டுவது போல இப்போது  அப்படி ஒரு ஒற்றை அதிகார மையத்தை அடையாளம் காட்ட இயலாது என்பது இதன் பொருள். இதைத்தான் தலையற்ற முண்டமாக இன்றைய அதிகார அமைப்பு உள்ளது என்கிறோம். சதாமுக்குப் பிந்திய ஈராக்கில் சட்ட ஒழுங்கு அதிகாரம் பன்னாட்டுப் படைகளிடம் தரப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இன்றைய உலகில் யார் நம்மை ஆட்சி செய்கிறார், யாரால் நாம் கண்காணிக்கப்படுகிறோம், யாருடைய காவல்துறையும் உளவுத்துறையும் நம்மைக் கண்காணிக்கின்றன என்பதெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒன்றறாக அமைகின்றன.

இந்தப் புதிய ஒழுங்கைத்தான் ஹார்ட்டும் நெக்ரியும் “பேரரசு” என்கின்றனர். “ரோமப் பேரரசு’ உருவாக்கத்திலிருந்து அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தைத் தருவிக்கின்றனர். பல்வேறு நகரமைய ஆளுகைளை (polis) இணைத்து ரோமப் பேரரசு உருவானதோடு இன்றைய உலகமயச் சூழலை அவர்கள் பொருத்திப் பார்க்கின்றனர். சென்ற அத்தியாயத்தில் விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி தேச வளங்கள் உறிஞ்சப்படுகின்றன எனிம் இம்மானுவேல் வாலர்ஸ்டைனின் கோட்பாட்டைப் பார்த்தோம். அந்தப் பொருளிலும் ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்தத் தலையற்ற முண்டமாக உள்ள அதிகார அமைவின் உறுப்புகள்- அவற்றின் மக்கள் திரள்கள், தகவல்கள், சொத்துக்கள் முதலானவற்றின் தொடர்ச்சியான ஓட்டங்கள் அல்லது பாய்ச்சல்கள் என்பன அத்தனை எளிதாக எந்த ஒரு பெரு நகர ஒற்றைக் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்தும் கட்டுப்படுத்தப்பட இயலாதவை. ஆம், தகவல்களும் சொத்துக்களும் மட்டுமின்றி மனிதர்களும், ஊழியர்களும் இன்று தேசங் கடந்து பாய்ந்தோடில் கொண்டே இருக்கக் கூடிய நிலையில் உள்ளனர். இந்தப் ‘பாய்ச்சல்’ (flow) என்பது physical ஆக நிகழ்வதாகவும் இருக்கலாம். இல்லை நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கும்போதே ஒரு அடையாளமற்ற அதிகாரத்தால் நீங்கல் எங்கிருந்தோ கட்டுப்படுத்தப்படலாம், சுரண்டப்படலாம்.

பழைய தேச அரசுகளை (nation States) மையமாகக் கொண்ட உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் மையமாக ஆளும் வர்க்கமும், ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் திரளும் என்பதான எளிய வடிவில் இந்த ஆளுகை இப்போது இருப்பதில்லை; மாறாக இந்த அசமத்துவம் இப்போது உடைந்து, சிதைந்து மிகவும் சிக்கலான வடிவில் நிகழ்கிறது. ஒரு ஒட்டுமொத்தத்திற்குள் அடக்கிக் கணிக்க இயலாத தன்னிச்சையான கிரக சஞ்சாரங்களைப் போல, பேரரசுக்குள்  இந்த ஏற்றத்தாழ்வுகளும் இயக்க நிலையில் உள்ளன. முழுமை என்பது இன்று இவ்வாறு கையகப்படுத்த இயலாத ஒன்றாகக் கரைந்து ஆவியாகியுள்ளது. நாம் இதுகாறும் அரசியல் அறிவியலில் விரித்துரைத்து வந்த, அரசு / சமூகம் ; போர் / அமைதி ; கட்டுப்பாடு /  சுதந்திரம் ; மையம் / விளிம்பு – முதலான எதிர்வுகள் அனைத்தும் இன்று ஏற்பட்டுள்ள முழுமையின் சிதைவில் பொருளற்றதாகி விட்டன. இன்றைய இந்த அமைப்பை இதற்கு முந்திய தேசிய அரசுகளின் அடிப்படையிலான காலனியம் மற்றும் “விளிம்பு – மையம்” முதலான வடிவங்களில் புரிந்து கொள்ள முடியாது என்றால் பின் எப்படி இதை எளிமையாகப் புரிந்து கொள்வது?

பண்டைய நகர அரசுகளில் இருந்து ரோமப் பேரரசு உருவானது குறித்த வரலாற்றை விளக்க அன்றைய வரலாற்றை அப்போது எழுதிய பாலிபியஸ் எத்தகைய முறையியலைக் கையாண்டாரோ அது இப்போது நமக்குத் தேவைப்படுகிறது என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

1990 களுக்குப் பின் உருவாகியுள்ள இன்றையப் புதிய உலக ஒழுங்கை அவர்கள் வரைந்து காட்டும் முறையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். பண்டைய ரோமப் பேரரசுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் அமெரிக்காவின் அணு வல்லமை என்பது  அரசின் ஆற்றலாகவும். G7 மற்றும் பன்னாட்டு கார்ப்பொரேட்கள் என்பன அதிகார வர்க்கமாகவும், இணையம் (internet) என்பது ரோம அரசில் அமைந்திருந்த ஜனநாயக நெறியாகவும் அமைகின்றன (Bomb / Money / Ether) என ஒரு மேலோட்டமான பார்வையில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ரோமப் பேரரசு எனும் அமைப்பு  என்றென்றைக்குமாக நிலைத்திருக்கவில்லை. இன்றைய பேரரசும் ரோமப் பேரரசைப் போலவே அதன் அழிவைத் தனக்குள்ளேயே வைத்துள்ளது. பாலிபியஸ் ரோமப் பேரரசின் உருவாக்கத்தைச் சொன்னார் என்றால் கிப்பனும், மான்டேஸ்குவும் ரோமப் பேரரசின் வீழ்ச்சியைச் சொன்னார்கள். கிறிஸ்துவத்தின் எழுச்சி அன்றைய வரலாற்றில் ரோமப் பேரரசை வீழ்த்தியது.  தொடர்ந்த பழங்குடி மக்களின் இடப்பெயர்வுகள் என்பன மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

அன்று மதம் இந்த மாற்றத்திற்கான முகமையாக (agency) இருந்திருக்கலாம். முதலாளியமாக வரையறுக்கப்பட்ட காலத்தில் மாற்றத்திற்கான அந்த முகமை தொழிலாளி வர்க்கமாக இருந்தது. இன்று அப்படியான மாற்றம் ஒன்றை நிகழ்த்த வல்லதாகப் “பெருந்திரள் மக்கள்” (multitude) என்கிற கருத்தக்கத்தை ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கின்றனர்.

இதைப் புரிந்து கொள்ள இன்றைய பேரரசை ஒரு பிரமிட் வடிவத்தில் கற்பனை செய்து கொள்வோம். அதன் உச்சத்தில் இப்போதைய ‘சூப்பர் பவர்’ ஆக உள்ள அமெரிக்கா, G8 நாடுகள், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் NATO, IMF ஆகியன உள்ளன என்போம். அடுத்த படிநிலையில் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் இதர தேசிய அரசுகள் உள்ளன என்போம். இந்தப் பிரமிடின் அடித்தளமாக உலக நாடுகளின் பொது அவை (UN General Assembly), மத அமைப்புகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலானவை அமைகின்றன. இன்றைய அமைப்பில் “மக்களை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக இந்த கடைசிப் படிநிலை கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் இன்றைய புரட்சிகர சக்தியான ‘பெருந்திரள்’ உருவாகும் என்கின்றனர் ஹார்ட்ட்டும் நெக்ரியும்.

“சுதந்திரமான உற்பத்திச் செயற்பாடுகளின் உலகலாவிய வெளிப்பாடுதான்” இன்றைய மாற்றத்தை ஏற்படுத்தும் பெருந்திரளாக உருப்பெறுகிறது. இதை “பெருந்திரளாக” உருப்பெறவைக்கும் வேலையை ‘பேரரசே’ அதன் செயல்பாடுகளின் ஊடாக நிறைவேற்றி விடுகிறது. தன்னை அழிப்பதற்கான கருவியை அது தனக்குள்ளேயே வளர்த்து உருவாக்கிவிடுகிறது என்பது இதுதான்.

இன்றைய முதலாளிய உலகம் சேவைகள் (services) உடபட எல்லாவற்றையும் உலகமயமாக்கியுள்ளது,. தன் சேவைகளுக்குத் தொடர்ந்து எல்லை கடந்து இயங்கும் தொழிலாளிகளை அது உருவாக்குகிறது. தேச எல்லைகளற்ற உலகம் என்கிறபோது அவ்வாறே தேச எல்லைகளற்ற ஜனநாயகமும் தேவையாகிறது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டலும் தேச எல்லைகளற்றதாக ஆகிறது. சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அப்படி ஆகின்றன.

கார்ல் மார்க்ஸ் எதிர் கொண்டது 19ம் நூற்றாண்டு முதலாளியம். கரியாலும், பெட்ரோலாலும் இயங்கும் எந்திரங்களில் வேலை செய்கிற, மையப்படுத்தப்பட்ட, மேலிருந்து கீழாக படி நிலை வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் அது. இன்று material labour என்பது இல்லாமல் போய்விட்டது. எல்லை கடந்து இருந்து கொண்டு சுரண்டும் முதலாளி. எல்லை கடந்து சென்று சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளி என்றெல்லாம் சூழல் மாறியுள்ளது. தொழில்முறையிலும், தொழிலாளிகள் மத்தியிலும் ஒரு ‘நாடோடித் தன்மை’ (nomadism) உருவாகியுள்ளது.  இந்த மாற்றங்கள் எல்லாம் தொழிலாளி வர்க்கம் என்பது உலகளாவிய ‘பெருந்திரளாக’ உருப் பெறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னைவிட அகன்ற உலகளாவிய ஒன்றிணைவு இப்போது சாத்தியமாகி உள்ளது.

சுரண்டல் இன்று குறையவில்லை. அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் நாடுகளிடையே ஒரு வகையில் முதலாளித்துவ அதிகாரம் பரவி இருக்கிறது. சுரண்டலில் வடக்கு / தெற்கு, முதல் உலகம் / மூன்றாம் உலகம் என்றெல்லாம் இப்போது பிரித்துப் பார்ப்பது சிரமம். முதல் உலகிற்குள் மூன்றாம் உலகும், மூன்றாம் உலகிற்குள் முதல் உலகையும் அடையாளம் காண முடிகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் முதலாளியச் சுரண்டல், உபரி மதிப்பு உருவாக்கம் என்கிற வடிவங்கள் எதுவும் மாறவில்லை. மார்க்ஸ் இவை குறித்துச் சொன்னவை அனைத்தும் அதே போலவும், சொல்லப்போனால் இன்னும் கொடிய முறையிலும் தொடர்கின்றன. ஆனால் தொழில்முறை, தொழிலாளி தனது தன்னிலையை அமைத்துக் கொள்ளும் சூழல் முதலியன பெரிய அளவில் மாறியுள்ளன. இந்த மாற்றங்கள் என்பன, முதலாளி வர்க்கமும், முதலாளியச் சிந்தனையாளர்களும் எண்ணுவதையும் சொல்லுவதையும் போல, இனி போராட்டங்களுக்கும் புரட்சிகர மாற்றங்களுக்கும் சாத்தியங்கள் இல்லை என்பதைச் சுட்டவில்லை. அப்படிக் கருதுவது. பெருந்திரளை வெறும் நுகர்வோர்களாக (consumers) அணுகும் மூடத்தனம். இது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது.

மார்க்சியர்களும் ‘பெருந்திரளை’ அடையாளம் கண்டு, அதன் வல்லமையையும், அதன் இன்றைய பண்புகளையும், வடிவ மாற்றங்களையும் உரிய புரிதல்களுடன் அணுகுதல் அவசியம்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *