“நான் சாகிறவரை ஈழத் தமிழர் யாருக்கும் அந்த நிலைமை வரக் கூடாது” – மயிலாடுதுறை இராமதாஸ்
திருநெல்வேலியில் ஒரு விடுதியில் தங்கியுள்ளேன். பழனிச்சாமி, சுகுமாரன் இருவரோடும். நாளை மதுரையில் கவுரவக் கொலை மற்றும் காதல் திருமணம் குறித்த எங்களின் கருத்தரங்கு உள்ளது.
பேச்சு மயிலாடுதுறை வழக்குரைஞர் இராமதாஸ் அவர்கள் குறித்துத் திரும்பியது. சிலருக்கு நினைவிருக்கலாம். ரயில்வேயில் பணியாற்றி, ஓய்வுக்குப் பின் வழக்குரைஞர் பணியில் வாழ்நாளைக் கழித்து மறைந்தவர்.
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவற்றில் செயல்பட்டுப் பின் கருத்துமாறுபாட்டில் பிரிந்தவர். மயிலாடுதுறையைச் சேர்ந்த பெரியவர் இராசமாணிக்கம் அவர்களுடன் இணைந்து ‘தமிழ் இன விடுதலைக் கழகம்’ என ஒரு அமைப்பை உருவாக்கி வாழ்நாள் இறுதிவரை செயல்பட்டவர்.
சற்றே வழுக்கை படர்ந்த நரைத்த தலை. கருப்புச் சட்டை, வெள்ளை பேன்ட், சில நாட்களில் வேட்டி இவற்றுடன் அவர் தோற்றம் நினைவில் பதிந்துள்ளது. தஞ்சையில் என் அம்மாலயம் சந்து வீட்டில் அவருடன் அமர்ந்து சாப்பிட்ட நினைவுகள் வந்து போயின. எப்போதும் அவருடன் இருக்கும் இராசமாணிக்கம் அசப்பில் தாகூரை நினைவூட்டுவார்.
ஈழப் போராட்டத்தின் துவக்க கட்டத்தில் இங்கு நடந்த சில நிகழ்ச்சிகளில் ஒன்று மாமங்கலம் வங்கிக் கொள்ளை. பத்துப் பேர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் எல்லாமும் கூட உடனடியாகக் கைப்பற்றப்பட்டன. முதல் குற்றவாளி ஆன்டனி என்கிற புனைபெயரில் எங்களால் அறியப்பட்ட உதயன் இன்னும் தேடப்படுபவர்.
சவுந்தரபாண்டியன், பாலு இருவரும் பூண்டி கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியர்கள். எங்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அருட் தந்தை சூசை மாணிக்கம் அடிகளாரும் நாங்கள் அறிந்திராத அருட்தந்தை அந்தோணிராஜும் கத்தோலிக்கப் பாதிரிமார்கள். மற்ற ஏழு பேரும் ஈழத் தமிழர்கள். தஞ்சையிலிருந்து செயல்பட்ட ‘ப்ளாட்’ இயக்கத்தின் வானொலி ஒலிபரப்பு மையத்தில் இருந்தவர்கள். பின் அங்கிருந்து தப்பிவந்து தனியாக ஒரு இயக்கத்தை அமைத்துக் கொண்டவர்கள். அந்தோணிராஜ் தவிர பிற அத்தனை பேரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அந்த வகையில் தொடக்கத்தில் எனது வீட்டிற்கும் காவல்துறையினர் வந்தனர்.
நான் அப்போது ஆசிரியர் சங்க நடவடிக்கை ஒன்றுக்காககப் பழி வாங்கப்பட்டு குடியாத்தம் அரசு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வார இறுதிகளில் ஊருக்கு வருவேன். எந்த நேரமும் பிரச்சினைகளை எதிர்பார்த்திருந்த மிகவும் நெருக்கடியான காலகட்டம் அது.
உடனடியாக அனைவரும் கைது செய்யப்பட்டதால் பிரச்சினை தற்காலிகமாக அகன்றது. அதற்கிடையில் இத்தகைய நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் எப்படியெல்லாம் விசாரிப்பார்களோ அப்படியெல்லாம் அவர்கள் விசாரிக்கப்பட்டனர். பேராசிரியர்கள் இருவரது குடும்பங்களும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டடன.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாதிரியார் இருவருக்கும் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர் விருதாசலம் ரெட்டியாரையும் தஞ்சை வழக்குரைஞர் பாலசுப்பிரமணியனையும் கத்தோலிக்க மத நிர்வாகம் நியமித்தது. மற்றவர்களுக்கு வழக்குரைஞர்கள் யாரும் இல்லை. ஈழப் போராளிகளுக்கு இங்கு உறவினர்கள் இல்லை. பேராசிரியர்களுக்கு இருந்தும் பயனில்லை. அச்சுறுத்தப்பட்டிருந்தனர்.
பேராசிரியர் கல்யாணியும் நானும் கையொப்பமிட்டு ஒரு அறிக்கை தயார் செய்தோம். அது 1988ம் ஆண்டு என ஞாபகம். நாங்கள் இருவரும் அரசு ஊழியர்கள். இருந்தும் ‘ரிஸ்க்’ எடுத்தோம். நிதி கேட்டு நாங்கள் எழுதிய கடிதம் சைக்லோஸ்டைப் செய்யப்பட்டு நண்பர்களுக்கு அனுப்பப்பட்டது. ஒரே மாதத்தில் 30,000 ரூபாய் நிதி சேர்ந்தது. அன்று அது ஒரு பெரிய தொகைதான்.
வழக்குரைஞர் யாரை நியமிப்பது?
அன்று மிகவும் புகழ்பெற்றிருந்தவரும், நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்புடையவருமான ஒரு வழக்குரைஞரின் பெயரை நான் சொன்னவுடன் கல்யாணி ஒத்துக் கொண்டார். சென்னையில் அவரைச் சந்திக்க நானும் கல்யாணியும் சென்றோம். வழக்குரைஞரின் இயக்கத்தைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் சுரேஷையும் அழைத்துக் கொண்டோம். வழக்குரைஞர் எங்களை வரவேற்றார். தான் அந்த வழக்கை நடத்துவதாக வாகுறுதி அளித்தார். “ஃபீஸ்..?” என நாங்கள் கேட்டபோது, “அதற்கென்ன, இருக்கிறதக் குடுங்க. இந்த வழக்குக்கெல்லாம் நான் பேரமா பேசப் போகிறேன்..” என்றார். கேஸ் கட்டுகளையும், நன்கொடையாகக் கிடைத்த பணத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு நன்றி சொல்லி வந்தோம். புறப்படுமும் மறக்காமல் பேராசிரியர்களின் குடும்பத்தாரின் முகவரியை வழக்குரைஞர் பெற்றுக் கொண்டார்.
வழக்கு விசாரணைக்காக ஒரிரு முறைதான் அந்த வழக்குரைஞர் விருதாசலத்திலிருந்த செஷன்ஸ் கோர்டுக்கு வந்தார். ஒவ்வொரு முறை வரும்போதும் அவருக்கு லாட்ஜ் முதலிய வசதிகள் செய்து தருமாறு குடும்பத்தாரை வற்புறுத்தினார். குடும்பத்தாரிடம் மேலும் பணம் மட்டுமின்றி, உதவிக்கு வழக்குரைஞர் ஒருவரை நியமிக்குமாறும் கோரினார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர் வருவதையும் நிறுத்தினார்.
தற்போது உயிருடன் இல்லாத அவர் குறித்து நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு விசாரணையின்போதும் பாதிரியார் இருவர் சார்பாக வழக்குரைஞர்கள் ஆஜராவதும் மற்றவர்களுக்கு யாரும் இல்லாததும் எங்களை வாட்டியது.
வேறு யாராவது ஒரு வழக்குரைஞரை நியமிக்க முடிவு செய்தோம். எப்படி ஒரே வழக்கிற்கு இன்னொருமுறை நிதி திரட்டுவது? இம்முறை எங்களுக்கு நினைவுக்கு வந்தவர்தான் மயிலாடுதுறை ராமதாஸ் அவர்கள்.
குடந்தையிலிருந்து செல்லும்போது மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு ஒரு நாள் காலை சென்றேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எல்லாவற்றையும் சொன்னேன். முழுமையாகக் கேட்டபின் அவர் சொன்னார்: “ஒண்ணும் பிரச்சினை இல்லை. நான் அந்த வழக்கை எடுத்துக்கிறேன்.பணம் ஒரு பிரச்சினை இல்லை. முடிஞ்சா குடுங்க. இல்லாட்டா நானே கூட பாத்துக்குவேன். நான் சாகிறவரை ஈழத் தமிழர்களுக்காக வழக்கு நடத்த தமிழ் நாட்டில வழக்குரைஞர் யாரும் இல்லைங்கிற நிலைமை வரக்கூடாது”
ராமதாஸ் அவர்கள் அன்று சொன்ன இச் சொற்கள் இன்றும் என் நெஞ்சில் கணீரென்று ஒலிக்கின்றன.
1989ல் அவரது இயக்க மாநாடு மயிலாடுதுறையில் நடந்தபோது நானும் கல்யாணியும் ஒரு 5,000 ரூபாய் அவருக்கு ஃபீசாகக் கொடுத்தோம். வழக்குரைஞர் பாலசுப்பிரமணியந்திடம் கேஸ் கட்டின் பிரதி ஒன்றையும் பெற்று வந்து தந்தேன்.
வழக்கை இறுதிவரை சிறப்பாக நடத்தித் தந்தார் ராமதாஸ். அதன்பின் நாங்கள் நடத்திய அத்தனை கூட்டங்கள், மாநாடுகள், நிறப்பிரிகை விவாதங்கள் அனைத்திலும் தவறாது கலந்து கொள்வார்….
ஒரு பின் குறிப்பைச் சொல்லியே ஆக வேண்டும். இப்படியான சாதி அடையாள அறிமுகத்தை நான் யாருக்கும் செய்வது கிடையாது. இருந்தாலும் நம் தமிழ் தேசியவாதிகளுக்காக இதைச் சொல்ல வேண்டியுள்ளது.
“நான் சாகிறவரை ஈழத் தமிழர்களுக்காக வழக்கு நடத்த தமிழ் நாட்டில வழக்குரைஞர் யாரும் இல்லைங்கிற நிலைமை வரக்கூடாது” என்று சொன்னாரே அந்த மரியாதைக்குரிய மயிலாடுதுறை வழக்குரைஞர் ராமதாஸ் ஒரு ‘வந்தேறி வடுக சாதியைச்’ சேர்ந்தவர்