(காந்தியின் “ஹிந்த் ஸ்வராஜ்”: நவம்பர் 2018 ‘விகடன் தடம்’ – காந்தி 200 சிறப்பிதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை)
காந்தியிடம் காணப்படும் முரண்பாடுகள் பிரசித்தமானவை. காலையில் தன்னைச் சந்திக்க வந்த சுயமரியாதை இயக்கத் தலைவர்களிடம் அவர்களின் நியாயங்களை மறுத்துப் பேசுவார். மாலையில் பொதுக்கூட்டத்தில் அல்லது காங்கிரஸ் தலைவர்களிடம் பேசும்போது சுயமரியாதை இயக்கத்தவரின் நியாயங்களை ஆதரித்துப் பேசுவார். வருண அமைப்பு என்பது சமூகத்திற்குள் வேலைப் பிரிவினைக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக ஒழுங்கு என எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும் அதே நேரத்தில் தனது கூட்டு வாழ்க்கைப் பண்ணைகளில் அந்த ஒழுங்கைச் சீர்குலைப்பார். அங்கு வாழும் எல்லோரும் வருண வேறுபடுகளின்றி முறை நாட்களில் மலம் அள்ளுவதை விதியாக்குவார். இந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ஒரு மலம் அள்ளும் பெண்ணாக இருக்க வேண்டும் எனக் கருத்துரைப்பார்.
இவை மேலோட்டமாக நம் கண்ணுக்குத் தெரியும் முரண்கள். ஆனால் எதார்த்தத்தில் அவர் உறுயான சில நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே தன் வாழ்வையும் அரசியலையும் அமைத்துக் கொண்டார். அதைப் புரிந்து கொள்ள நாம் அவரது மிக முக்கியமான குறு நூலான -seminal work- எனப் போற்றப்படும் ‘ஹிந்த் சுயராஜ்’ (இந்தியத் தன்னாட்சி) நூலை ஆழமாகப் படிக்க வேண்டும். அது ஒப்பீட்டளவில் அவரது அரசியல் வாழ்வின் தொடக்க காலைத்தில் (1909) எழுதப்பட்டது. குஜராத்தி மொழியில் எழுதிப் பின் அவரே அதை ஆங்கிலத்திலும் பெயர்த்த ஒரே நூலும் அதுதான். நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களின் தொகுப்பு எனப் பெரும்பாலும் எல்லோராலும் ஒதுக்கப்பட்ட அந்நூல் 1980 களுக்குப் பின் உலகின் கவனத்தை ஈர்த்தது. அது எழுதப்பட்ட நூறாம் ஆண்டு (2009) அது உலகளவில் பேசப்பட்டது.
நவீனத்துவம், அறிவியல் வளர்ச்சி, நாடாளுமன்ற அரசியல் ஆகியவற்றின் ஊடாக மானுடம் எதிர்பார்த்த விடிவு கம்யூனிச ஆட்சிகள் உட்பட எதனாலும் கிடைக்காததைக் கண்ணெதிரே கண்ட சிந்தனையாளர்கள் அந்தச் சிறு நூலைத் தேடிப் படிக்கவும் விவாதிக்கவும் செய்தனர். இப்போது அதை வாசிக்கும்போது தான் வலியுறுத்திய அத்தனை விடயங்களிலும் அவர் எப்படி ஒரு முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முரணின்றி வாழ்ந்தார் என்பது விளங்குகிறது. அந்தக் குறுநூலில் வெளிப்படும் அவரது கோட்பாடுகளை இப்படிச் சுருக்கலாம்:
1.நவீனத்துவம் (Modernism), நவீன அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான கடும் விமர்சனம். 2.சத்தியாக்கிரகம் எனும் போராட்ட அணுகல்முறை. 3.அஹிம்சை எனும் வாழ்நெறி 4.எதிர்கால இந்தியாவின் பன்மைத் தன்மை.
இவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
1.நவீனத்துவம்: காந்தி குறித்து நூற்றுக்கணக்கான வெளிநாட்டு அறிஞர்கள் மிகவும் ஆழமான பார்வைகளை முன்வைத்துள்ளனர். முதற்கட்ட முன்னோடிகளில் ஒருவரான ரோமன் ரோலந்த் காந்தியத்தின் மையக் கோட்பாடே “வளர்ச்சி (progress) மற்றும் ஐரோப்பிய அறிவியலை மறுப்பதுதான்” என்றார். பின்னால் வந்தவர்கள், “நவீன நாகரித்தின் மீதான கடும் கண்டனம்” என இந்நூலைக் குறிப்பிட்டனர். பார்த்தா சட்டர்ஜி இந் நூலின் இன்னொரு பக்கம் சிவில் சமூகத்தின் மீதான விமர்சனமாக இருப்பதை விரிவாக விளக்குவார். ‘தேசியம்’ குறித்த காந்தியின் பார்வை இதில்தான் வெளிப்படுகிறது என்பார்.
இந்தியா அடிமைப்பட்டதற்கான மூலகாரணம் பிரிட்டிஷாரின் படைபலம், தந்திரம், திறமை ஆகியன அல்ல. மாறாக நமது “அற வீழ்ச்சியே” (moral failure) அதற்குக் காரணம் என இந்நூலில் காந்தி அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
“ஒரு அடிமை அரசை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனா அவர்கள் உள்ளே வந்தார்கள்? இல்லையே. அவர்களின் இந்த நவீன வளர்ச்சி, தொழில்நுட்பம், கொண்டுவந்து குவித்த வணிகப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்து நாம் மயங்கினோம். நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். அவர்களின் இராணுவ உதவியை நாடினோம். நாம் ஆங்கிலேயரை நொந்து கொள்வதில் பொருளில்லை. அவர்கள் இந்தியாவை வெற்றிகொள்ளவில்லை. நாம்தான் அதை அவர்களுக்குத் தூக்கிக் கொடுத்தோம். நவீனத்துவம் மினுக்கிய மினுக்கில் நாம் நம்மை இழந்தோம்.” – என்பதுதான் காந்தியின் வாதம்.
இந்த நவீனத்துவத்தின் கவர்ச்சியில் மயங்கி நிற்கும்வரை நமது அடிமைத்தனம் தொடரும். ஆங்கிலேயர்கள் அகன்றாலும் இது தொடரும். “ஆங்கிலேயர் இல்லாத ஆங்கில ஆட்சியாகவே அது அமையும்” என்றார். அவர் சொன்னபடிதான் நடந்தது. காலனியம் ஒழிந்து நவகாலனியம் அதன் உச்ச கட்டத்தில் ஆட்சி செலுத்துவதின் சாட்சிகளாக இப்போது நாம் வாழ்கிறோம்.
2. சத்தியாக்கிரகம்: இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது எங்ஙனம்? முதலில் நவீனத்துவத்தின் கவர்ச்சியிலிருந்து நாம் விடுபட வேண்டும். காந்தியின் எளிய வாழ்க்கை, சுய கட்டுப்பாடு முதலிய கோட்பாடுகள் இங்கிருந்து எழுகின்றன. ‘ராட்டை’ அதன் குறியீடாக நம்முன் சுழல்கிறது. எல்லாவகையான இந்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான நம் போராட்டம் எப்படி இருக்க வேண்டும்?. அதற்கு அவர் முன்னுரைத்த அரசியல் செயல்பாடுதான் சத்தியாக்கிரகம். ‘சத்தியம்’ என்பதை வெறுமனே ‘உண்மை’ என்பதாக மட்டும் மேலோட்டமாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ‘கிரகம்’ (அக்ரஹா) என்பது ‘இறுக்கமாகப் பற்றிக் கொள்ளுதல்’. சத்திய ஆற்றல் (True Force) என இதைப் புரிந்துகொள்ளல் தகும்.
தென்ஆப்ரிக்காவில் நடத்திய போராட்டங்களில்தான் காந்தி இம்முறையை அறிமுகப்படுத்தினார். எனினும் காந்திதான் இப்படியான ஒரு போராட்ட முறையை அறிமுகப்படுத்தினார் அல்லது தொடங்கி வைத்தார் எனக் கொள்ள வேண்டியதில்லை. ஆங்கிலோ-அமெரிக்கப் போராட்ட வரலாற்றில் வில்லியம் லாயிட் கேரிசன் போன்றோராலும் அடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடிய Non Resistance Society போன்ற அமைப்புகளாலும் முன்னதாக முன்னெடுக்கப்பட்ட வழிமுறைதான் இது. ‘சத்தியம்’ என்கிற சொல்லின் ஊடாக அதில் ஒரு தத்துவ அழுத்தத்தை காந்தி சேர்த்தார். 1849 ல் தோரோவின் Civil Disobedience குறித்த நூல் வெளிவந்தது. இப்படி அக்காலத்தில் பேசப்பட்ட ஒரு போராட்ட வடிவம்தான் அது. காந்தி இந்தியாவிற்கு வந்து போராட்டங்களை முன்னெடுத்தபோது சத்தியாக்கிரகம் என்பதை ‘செயலற்ற’ (passive) எதிர்ப்பு எனக் கொள்ள வேண்டாம். இது மிகவும் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பு (Active Resistance) என விளக்கினார்.
3. அஹிம்சை : சிறிய குழுக்களால் சிறிய அளவில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’, பகுதி அளவிலான சத்தியாக்கிரகங்கள் போன்ற சிறிய அளவுப் போராட்டங்கள் என்பதாக மட்டுமல்லாமல் முதன் முதலில் இலட்சக்கணக்கான மக்களை வீதியில் இறக்கி நிறுத்தும் மகத்தான போராட்டங்களாக மாற்றி அமைத்தது காந்தியின் சாதனை எனலாம். ‘முன்னோடி’ப் படை (vanguard) ‘என்கிற லெனினியக் கருத்தாக்கத்தை காந்தி ஏற்கவில்லை. இந்து, முஸ்லிம், விவசாயி, தொழிலாளி, பார்ப்பனர், ‘ஹரிஜனங்கள்’, பெரிய அளவில் பெண்கள் என, முடிந்தால், முப்பது கோடி மக்களையும் களத்தில் இறக்குவது அவரது நோக்கமாக இருந்தது. இப்படிப் பலரையும் இணைப்பதில் அவரது ‘அஹிம்சை’க் கோட்பாடு அவருக்குப் பெரிதும் உதவியது. இதன் பொருள் அகிம்சையை அவர் ஏதோ ஒரு தந்திரோபாயமாகப் பயன்படுத்தினார் என்பதல்ல. சத்தியாக்கிரகம் எனும் தனது போராட்ட வடிவின் பிரிக்க இயலாத அற அணுகல்முறையாக அவர் அகிம்சையை முன்னிறுத்தினார். அஹிம்சை என்பது பவுத்தம், சமணம் முதலான இந்திய சிரமண மரபில் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய கோட்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. சி.எஃப்.ஆன்ட்ரூஸ் போன்ற கிறிஸ்தவப் பாதிரிமார்களும் கூட காந்தியிடம் மயங்கி நின்றதில் அவரது அஹிம்சை அணுகல்முறைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. தன்னை வருத்திக் கொண்டு உயிர் பிரியும்வரை சிலுவையில் தொங்கிப் போராடிய இயேசுவின் மீது காந்திக்கும் ஒரு ஈர்ப்புண்டு.
காந்தி ஹின்ட் ஸ்வராஜ் எழுதிய பின்புலத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். தமது உரிமைகளுக்காக ஆங்கில அரசிடம் அப்போதைய காங்கிரஸ் கட்சி ‘பெட்டிஷன்”கள் கொடுப்பதோடு இருந்தது. இன்னொரு பக்கம் தனி நபர்கள் இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகளைச் சுட்டுக் கொல்வதன் ஊடாக ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு இப்படியான கொலைகள் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. அரவிந்தர், திலகர் போன்ற அன்றைய தலைவர்களின் ஆதரவும் இதற்கு இருந்தது. இத்தாலியையும் மாஜினி, கரிபால்டி போன்றவர்களையும் மேற்கோள் காட்டி இந்த வன்முறைகள் அன்று கொண்டாடப்பட்டன. பாரததியார் “மாஜினியின் வீரசபதம்” எழுதியதெல்லாம் இந்தப் பின்னணியில்தான். தென்ஆப்ரிகாவில் இருந்துகொண்டே காந்தி எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தார். இந்தப் பின்னணியில் அவர் லண்டன் சென்று சுமார் மூன்று மாதங்கள் அங்கே தங்க நேரிட்டது. சாவர்கர் முதலியோரை காந்தி முதன் முதலில் சந்தித்ததும் அப்போதுதான். அந்தச் சந்திப்பின்போது அன்றைய வழிமுறை குறித்த விவாதமும் எழுந்தது. வன்முறை அங்கு விதந்து பேசப்பட்டது. இப்படியான போக்கு வளர்ந்து வருவதைக் கண்டு கவலை கொண்ட காந்தி திரும்பி தென்ஆப்ரிகா வரும்போது உரையாடல் வடிவில் எழுதிய நூல்தான் ஹிந்த் ஸ்வராஜ். இதன் பொருள் ஏதோ அந்தச் சூழலை ஒட்டி, அதற்கு மறுப்பாக அவர் இதை எழுதினார் என்பதல்ல. அவரது பார்வையில் இந்தக் கருத்துக்கள் எப்போதும் உள்ளோடிக் கொண்டிருந்ததுதான்.
அஹிம்சைய அவர் வெறும் தந்திரோபாயமாகக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதை இன்னும் ஆழமான பொருளில் அவர் முன்வைத்தார். எதிரியின்மீது வன்முறையப் பிரயோகிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல. எதிரியை வெறுக்கவும் கூடாது. எதிரியை விமர்சிக்கவும் கூடாது என்றார். எதிரியை வெறுக்காமல் எதிர்ப்பது என்பதுதான் காந்தி அஹிம்சை எனும் கருத்தாக்கத்தின் ஊடாகக் கொண்ட பொருள். “அஹிம்சை என்பதை மிகவும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வுயிர்க்கும் இன்னல் விளைவிக்கக் கூடாது என்பதுதான் அஹிம்சை என்பதில் கருத்து மாறுபாடில்லை ஆனால் அது அஹிம்சை குறித்த குறைந்தபட்சப் புரிதல்தான். எந்தவிதமான வெறுப்பின் ஊடாகவும் ஒருவரைக் காயப்படுத்துவதும், யாரும் அழிய வேண்டும் என நினைப்பதும், எதிர்மறை விமர்சனங்களை ஒருவர் மீது வைப்பதும் கூட அஹிம்சைக்கு எதிரானதுதான்” என்றார் காந்தி. “அஹிம்சை காந்திக்கு ஒரு மதமாக இருந்தது” எனச் சொல்வதன் பொருள் இதுதான்.
அஹிம்சை குறித்த காந்தியின் இக்கருத்தாக்கம் அவர் தத்துவவியலுக்கு அளித்துள்ள முக்கிய பங்களிப்பு என்கிறார் தத்துவ இயல் பேராசிரியர் அகில் பில்கிராமி.
4. இந்தியாவின் பன்மைத் தன்மை: எதிர்கால இந்தியாவின் பன்மைத் தன்மை என்பது காந்தியின் இக்கருத்துக்களோடு பிரிக்க இயலாமல் பின்னிப் பிணைந்திருந்தது. இந்தியா ஒரு பன்மைச் சமூகம். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், சாதிகள் எனப் பிரிந்து கிடக்கும் எல்லா மக்களுக்குமான நாடு இது என்பதில் காந்தி மிக உறுதியாக இருந்தார். ஹிந்த் ஸ்வராஜின் இரண்டு அத்தியாயங்கள் (IX, X) இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினரின் உரிமைகள் குறித்துப் பேச ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களை உள்ளடக்குவது என்பது ஒரு தேசம் எனும் கருத்தாக்கத்தை மறுப்பதாகாதா என்கிற கேள்வியை எழுப்பி காந்தி அதற்கு இப்படிப் பதில் அளிப்பார்: “பல்வேறு மதத்தினர் வாழ்வதாலேயே அது தேசம் என்கிற தகுதியை இழந்துவிடாது. வெளிநாட்டார்களை உள்ளடக்குவதும் ஒரு தேசத்தை அழித்துவிடாது. உள்ளடக்கப்படுபவர்கள் அதோடு ஒன்றிக் கலப்பர். இப்படியான ஒருங்கிணைப்பதற்கு (assimilation) வாய்ப்பளிக்கும் அமைப்பு (faculty) உடையதாகவே ஒரு நாடு அமைய வேண்டும். இந்துக்கள் மட்டுமே வாழ்கிற நாடாக இந்தியா இருக்கவேண்டும் என நினைப்பார்களேயானால் அவர்கள் ஒரு கனவுலகில் வாழ்கிறார்கள் என்றே பொருள். இந்துக்கள், முகமதியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் என யார் இந்தியாவைத் தாயகமாக ஏற்றாலும் அவர்களை இந்திய மக்களாகவே நாம் ஏற்கவேண்டும்”
1909 தொடங்கி 1948ல் கோட்சேயின் குண்டுகளால் தன் உயிர் பறிக்கப்படும்வரை காந்தி இந்த நான்கு அம்சங்களிலும் ஒரு மாற்றமற்ற இறுக்கமான தோடர்ச்சியைப் பேணினார்.
காந்தியின் இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் அவர் கண்முன் கேலிக் கூத்தாக மாறிய வரலாற்றை நாம் அறிவோம். அவர் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் மாப்ளா முஸ்லிம்கள் எழுச்சியும் அதை ஒட்டிய கலவரங்களும் ஏற்பட்டன. 1930 ல் பெஷாவரிலும் ஷோலாபூரிலும் இப்படியான கலவரங்கள் நடந்தன. சிட்டகாங் ஆயுதசாலையின் மீது தாக்குதல், சட்டமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசியது எல்லாம் காந்தியின் கண்முன் நடந்தேறின. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதும் கலவரங்கள் இருந்தன. 1926 முதல் ஆங்காங்கு இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருந்ததையும் காந்தியால் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. அவர் நினைத்தபடி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தேசமாக வாழ முடியவில்லை. நாடு மத அடிப்படையில் இரண்டானது. சுதந்திரத்தை ஒட்டி நடைபெற்ற கொடுங் கலவரங்களின் பின்னணியில் அவரும் வன்முறைக்குப் பலியானார்.
காந்தியை ஒரு சமாதான தேவதையாகக் கருதி அவர் இருந்தவரை இந்தியா ஒரு அமைதிப் பூங்காவாக இருந்ததென நாம் பார்க்க வேண்டியதில்லை. விடுதலை அடைந்த நாடுகள் எல்லாமும் வன்முறைகளின் ஊடாகவே விடுதலை அடைந்தன என்றும் இந்தியா ஒரு விதிவிலக்கு என்றும் கருத வேண்டியதில்லை. இரத்தக் களறிகள் இல்லாமலேயே விடுதலை அடைந்த நாடுகள் எத்தனையோ உண்டு. எனினும் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், சாதிகள் என இருந்த ஒரு நாட்டின் மிக நெருக்கடியான ஒரு சூழலில் காந்தியின் இருப்பும் அவர் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் பேரளவில் இழப்புகளைக் குறைத்தன என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
என்ன இருந்தாலும் பிரிட்டன் ஒரு ஜனநாயக நாடு. இங்கே அவருடைய அஹிம்சை வடிவிலான சத்தியாக்கிரகப் போராட்டங்கள் வெற்றியை ஈட்டித் தந்ததுபோல ஹிட்லரின் ஜெர்மனியிலும் முசோலினியின் இத்தாலியிலும் அஹிம்சைப் போராட்டங்கள் செல்லுபடியாகி இருக்குமா என்கிற கேள்வியையும் நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அந்தக் கேள்வியை காந்தியிடமே லூயி ஃபிஷர் எழுப்பவும் செய்தார். 1930 தொடங்கி தனது போராட்டங்கள் அடைந்த வெற்றியின் பின்னணியில் காந்தியும் மிகவும் தன்னம்பிக்கையோடு அதற்குப் பதிலளித்தார். எல்லா இடங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் அகிம்சைப் போராட்ட வழிமுறை பொருந்தும் என்றார். ஹிட்லரின் ஜெர்மனியில் பத்து மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டபோது அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் எனக் கேட்டபோது அவர்கள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொண்டு உலகின் மனச்சாட்சியை உலுக்கியிருக்க வேண்டும் என்பதுதான் காந்தியின் பதிலாக இருந்தது. அதன் சாத்தியமின்மை குறித்த ஐயம் எழுப்பப் பட்டபோது எப்படி இருந்தாலும் அவர்கள் கொல்லப்படப் போகிறவர்கள். அவர்கள் அப்படி அமைதி வழியில் தம் எதிர்ப்பைக் காட்டியிருந்தால் அதன் விளைவு வேறாக இருந்திருக்கலாம் என்கிற ரீதியிலேயே காந்தியின் பதில் அமைந்தது.
காந்தியின் இந்தக் கருத்தை மார்டின் பூபர் போன்ற அவருக்கு மிக நெருக்கமான நண்பர்களும் கூட ஏற்கவில்லை. 1940 ல் தனது வன்முறைப் பாதையைக் கைவிட வேண்டும் என காந்தி ஹிட்லருக்கு ஒரு கடிதமும் எழுதினார். உங்கள் நண்பர் முசோலினியிடமும் சொல்லுங்கள் எனும் தொனியில் அக்கடிதம் அமைந்திருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் அப்படியான ஒரு கடிதம் எத்தனை அபத்தம் என்பது விளங்குகிறது. ஃபாசிசத்தையும் நாசிசத்தையும் அவற்றின் தனித்துவத்துடன் அணுகாமல், இங்கிலாந்தைப் பார்த்ததைப் போலவே காந்தி அவற்றையும் பார்த்ததுதான் பிரச்சினை என ஃப்ரெஞ்ச் அறிஞர் கிளாட் மார்கோவிட்ஸ் சொல்வது ஏற்புடையதாகவே தோன்றுகிறது.
ஆனாலும் வன்முறையை ஒரு அரசியல் வழிமுறையாக மேற்கொண்ட போராட்டங்களும்கூட எல்லாம் வெற்றி பெற்றதும் இல்லை; அப்படி வெற்றி பெற்ற போராட்டங்களும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பைத் தந்ததுமில்லை. லெனினின் ருஷ்யா, மாஓவின் சீனம் உட்பட இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. வன்முறையை ஒரு வழிமுறையாக ஏற்பது குறித்து ஹன்னா ஆரென்ட் முதல் டாக்டர் பாலகோபால் வரை வைத்துள்ள விமர்சனங்களுக்கும் இதுவரை யாரும் திருப்தியான பதில் சொன்னதுமில்லை.