கவிக்கோ : ஒரு தந்தையைப்போல என்னை நேசித்தவர்

 

கவிக்கோ அப்துல்ரஹ்மான் (1937 – 2017) அவர்களுக்கு அஞ்சலிகள்..

நேற்றுத்தான் சீதக்காதி ட்ரஸ்ட் உமர் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கவிக்கோ அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டுள்ள தகவலைக் கூறினார். பதறிப் போனேன். தற்போது வெளியூரில் உள்ளதால் சென்னை வந்தவுடன் அவரைப் பார்த்து வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

“நோன்பு முடியட்டும் சார். நாம அவர் வீட்டில்ற்கே சென்று நம் ஆலோசனைக் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம்..” என்று உமர் அவர்கள் சொன்னபோது ஒத்துக் கொண்டேன்

ஆண்டுதோறும்  ‘சீதக்காதி ட்ரஸ்ட்’ ஒரு சிறந்த படைப்புக்கு அல்லது சாதனை புரிந்த ஒரு படைப்பாளிக்கு ஒரு லட்சரூபாய் பரிசுடன் விருதொன்றை அளிக்கின்றனர். அதன் தேர்வுக்குழுவில் நானும் ஒருவன். சென்ற ஆண்டு கோம்பை அன்வருக்கு அந்தப் அரிசு அளிக்க்கப்பட்டது.

இது தொடர்பாகத்தான் கவிக்கோ அவர்கள் என்னிடம் கடைசியாகப் பேசியது. “நான் அப்துல்ரகுமான் பேசுகிறேன்..” என அவர் சொன்னபோது எதோ நினைவில் “எந்த அப்துல் ரஹ்மான்?” எனக் கேட்டுவிட்டேன். “அட நாந்தான் அப்துல் ரஹ்மான்..” என அவர் சொன்னபோது சுதாரித்துக் கொண்டு மன்னிப்புக் கோரியவண்ணம், “நீங்கள் கவிக்கோ அல்லவா? பெயரைச் சொன்னவுடன் சற்றுக் குழம்பிப் போனேன்..” என வருத்தம் தெரிவித்தேன்.

இந்த ஆண்டு சீதக்காதி விருது தொடர்பாக அவர் ஒரு எழுத்தாளரின் விவரங்களை என்னிடம் கோரினார். எனக்கு அவர் குறிப்பிட்டவருக்கு விருது அளிப்பதில் உடன்பாடில்லை. நான் அதை வெளிப்படையாகக் கூறி மறுத்தேன். “உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால் என்ன. நான் கேட்ட விவரங்களை உடன் அனுப்பி வையுங்கள்” எனச் சொல்லி முடித்துக் கொண்டார். உடல்நலம் பற்ரிக்கூட என்னால் விசாரிக்க இயலவில்லை.

உடன் உமர் அவர்களைத் தொடர்புகொண்டு எனக்கு அவர் கருத்தில் உடன்பாடு இல்லை எனச் சொல்லி, இந்தமுறை நான் தேர்வுக்குழுக் கூட்டத்திற்கு வர இயலாது என்பதையும் சொல்லி, என் பரிந்துரையாக ஒரு சிறந்த எழுத்தாளரின் பெயரையும் சொல்லி முடித்துக் கொண்டேன்.

இன்று காலை நண்பர் சுகுமாரனும் பேரா.ஹாஜாகனியும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டபோது மனம் பதறியது. இறுதியில் இப்படி ஒரு சர்ச்சையோடா எங்கள் உரையாடல் முடிய வேண்டும்…

*******************

கவிக்கோ அவர்களின் மிகச் சிறந்த பண்பாக நான் கருதுவது அவர் தன் முஸ்லிம் அடையாளத்தை எந்நாளும் மறைத்துக் கொண்டதில்லை. கவினர் இன்குலாப் போலவோ இல்லை கவிஞர் மேத்தா போலவோ அவர் புனைபெயரிலும் உலவியதில்லை. முஸ்லிம் சமூகம் இன்று உருவாகியுள்ள மதவாத அரசியலின் இலக்காக்கப்பட்டுள்ள சூழலில் அவர்களோடு அடையாளப்படுத்திக் கொள்வது என்பதில் அவருக்கு இணையாக யாரையும் சொல்ல இயலாது. தமிழ் கூறும் நல்லுலகால் ‘கவிக்கோ’ எனப் போற்றப்படுவதற்கு அவர் தரித்திருந்த இந்த அடையாளங்கள் எந்நாளும் தடையாக இருந்ததில்லை. இதை நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ் மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். வானம்பாடி இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடியாக அவர் போற்றப்பட்டார். அவரது ‘பால்வீதி’, ‘ஆறாவது விரல்’ முதலியன ஏராளமான பதிப்புகள் கண்டன. ஜூனியர்விகடன் இதழ் அவரது எழுத்துக்களாலேயே புகழ் பெற்றது. கஜல், ஹைகூ எனப் பலதுறைகளில் அவர் தன் தனித்துவத்தை நிறுவினார். கவிதைக்கு நிகரான அவரது உரைநடையும் மக்களின் மனதைக் கவர்ந்தது. அவரது உருதுமொழிப் பயிற்சி அவரது தமிழின் அழகைக் கூட்டியது.

முஸ்லிம் இயக்கங்களுடன் அவர் நெருக்கமாக இருந்தபோதும் அவர் தன்னை தி.மு,க உடனேயே அடையாளப்படுத்திக் கொண்டார். கலைனஜர் கருணாநிதி அவர்களின் நெருக்கமான நண்பராகவும் இருந்தார். நாளை நடக்க உள்ள கலைஞரின் 60 ஆண்டு சட்டமன்ற நிறைவு விழாதான் முதன் முதலாக கவிக்கோ இல்லாமல் நடைபெற உள்ள கலைஞரின் விழாவாக இருக்கும் என எண்ணுகிறேன். எனது “பெரியார்?’ நூல் வந்தபோது ஒரு நாள் இரவு ஒரு குழந்தைபோல என்னிடம் அவர் தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தியை மரக்க இயலாது. அந்த நூலை கலைஞர் வெகுவாகப் பாராட்டினார் எனவும் என்னை ஒருமுறை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். மிகப் பெரிய மனிதர்களின் அருகாமையைக் கூச்சமாகக் கருதும் நான் அதை மெலிதாகத் தவிர்த்தேன்.

கடைசியாகக் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது வக்ஃப் வாரியத் தலைவர் பதவி கவிக்கோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான ஒரு மருத்துவப் பல்கலைக் கழகம் உருவாக்குவது என்கிற திசையில் அவர் கடுமையாக உழைத்தார். எனினும் அந்த அவரது குறிக்கோள் அவரது வாழ்நாளில் நிறைவேறவில்லை. அது நிறைவேறும் காலத்தில் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு “கவிக்கோ அப்துல் ரஹ்மான் மருத்துவப் பல்கலைகழகம்” என முஸ்லிம் சமூகம் பெயரிடும் என நம்புகிறேன்.

****************************

கவிக்கோ அவர்கள் தனிப்பட்ட உரையாடலில் மிகுந்த நகைச்சுவையுடன் பேசக் கூடியவர். நண்பர் ஆளூர் ஷாநவாசின் திருமணத்திற்கு நான், அவர், அமீர் அப்பாஸ் ஆகிய மூவரும் ஒரே பெட்டியில் நாகர்கோவில் சென்று, ஒரே அறையில் தங்கி திரும்பிவந்த அனுபவம் மறக்க இயலாத ஒன்று. ஒரு கவிஞருக்கே உரித்தான  குறும்புகளும், ரஸங்களும் மிக்க அவரது உரையாடல்களும் அவர் பகிர்ந்து கொண்ட கதைகளும் அனுபவங்களும் மறக்க இயலாதவை.

ஒரு தந்தையைபோல அவர் என்னை நேசித்தார். கடைசியாகக் கவிக்கோ அரங்கில் ஒரு கூட்டட்ட்த்தில் அவரைச் சந்தித்தபோது, “எப்படி வந்தீர்கள்?” என்றார். வழக்கம்போல என் ‘டூ வீலரில்தான்’ என்றேன். “வயதாகிவிட்டது, இனி டூ வீலரை எல்லாம் தவிருங்கள். தெரிந்திருந்தால் உங்களை நான் வரும் வழியில் அழைத்து வந்திருப்பேனே.” என்றார்.

கண்ணீர் மல்க என் அஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *