வரும் கிறிஸ்துமஸ் அன்று (டிச 25, 2014) பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் தலைமையில் 1000 முஸ்லிம்களையும் 4000 கிறிஸ்தவர்களையும் இந்து மதத்திற்கு மாற்றுவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் கிறிஸ்துமஸ் என்றால் நிகழ்ச்சி நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் அலிகார். அலிகார் ரஜபுத்திரர்களின் நகரமாம். இந்துக் கோவில்களை அழித்து அங்கே முஸ்லிம் நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். முஸ்லிம்களிடமிருந்து அலிகாரை மீட்டெடுக்க வேண்டுமாம். ஆர்.எஸ்.எஸ்சின் பிராந்திய பிரச்சாரக் ராஜேஸ்வர் சிங் இப்படிக் கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் நாளை ஏன் தேர்வு செய்துள்ளனர் என்றால் இது ஒரு ‘சக்தி பரிட்சை’யாம். அதாவது கிறிஸ்து பிறந்த நாளில் அங்கிருந்து 1000 பேர் வெளியேறி இந்து மதத்திற்கு வருகின்றனர் என்றால் அது கிறிஸ்துவ மத நம்பிக்கைக்கு விடப்படும் சவாலாம்.
இந்த நாலாயிரம் கிறிஸ்தவர்களும் வால்மீகி சமாஜைச் சேர்ந்தவர்கள். அலிகார், புலந்த்சாகர், ஹத்ராஸ் முதலான பகுதிகளில் உள்ள சேரி மக்கள். “இவர்கள் இந்து சமூகத்தின் பாதங்கள். இந்தப் பாதங்கள் இன்றி இந்து சமூகம் முழுமை அடையாது” என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.
நான்கு வருண உருவாக்கம் குறித்த புருஷசூக்தத்தைச் சற்று நினைவு கூருங்கள். புருஷனின் வாயிலிருந்து பிராமணர், புஜங்களிலிருந்து சத்திரியர், தொடையிலிருந்து வைசியர், பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர் என்கிறது புருஷ சூக்தம். தீண்டத் தகாத நிலையிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறிய இந்த வால்மீகிகளின் இடம் மீண்டும் அவர்கள் இந்து மதத்திற்கு வரும்போதும் அதுவாகவேதான் இருக்கும் என வெளிப்படையாகக் கூறி இன்று இந்த மதமாற்றத்தை அரங்கேற்றுகிறார்கள் இந்துத்துவவாதிகள்.
மதம் மாற்றப்படும் ஆயிரம் முஸ்லிம்களும் தாகூர் மற்றும் பிராமண உயர் சாதியினராம். முஸ்லிம் மதமாற்றத்தின் மூலம் அவர்கள் “இழந்து போன (வருணப்) பெருமை” குறித்து அவர்களிடம் கூறி மதமாற்றத்திற்கு அவர்களைச் சம்மதிக்க வைத்தனராம்.
ஆக , திரும்பி வருபவர்களுக்கு அவரவர் வருணங்கள் திருப்பி அளிக்கப்படும். எக்காரணம் கொண்டும் இந்த வருண வேறுபாடுகளில் மாற்றம் ஏற்பட அனுமதிக்கப்படாது. வருண முறையில் எந்தச் சிதிலமும் ஏற்பட்டுவிடக் கூடாது.
இது ஆண்டுதோறும் நடைபெறுவதுதானாம். இம்முறை கொஞ்சம் ஆர்பாட்டமாக நடத்தப்படுகிறதாம். மோடி ஆட்சி நடக்கிறது அல்லவா?
“இப்போதெல்லாம் நிறையப் பேர் இப்படி மதம் மாற விரும்புகின்றனர். இம்முறை நாங்கள் எந்த அச்சுறுத்தலையும் செய்யவில்லை ” எனவும் ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது (The Economic Times, Dec 10, 2014).
ஆக இதுவரை அச்சுறுத்தித்தான் இப்படி மதமாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆக்ரா, ஃபடேபூர் சிக்ரி, மதுரா, ஃபெரோஸாபாத், ஈடா, மீருட், மைன்புரி உத்தரகான்ட் முதலான இடங்களிலும் இத்தகைய மதமாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
***********************
யாரொருவரும் விருப்பபூர்வமாக மனச்சாட்சி அடிப்படையில் மதம் மாறுவதை நாம் தவறு எனச் சொல்ல இயலாது. ஆனால் ஒரு மதமாற்றத்தில் வற்புறுத்தல் இருந்ததா இல்லையா என்பதை அவ்வளவு எளிதாகச் சொல்லி விட இயலாது. கிட்டத்தட்ட எப்படிவன்புணர்ச்சியில் “சம்மதம்” என்பதில் ஒருவரது vulnerability யும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதோ அப்படித்தான் இங்கும்.
ஒரிசாவில் இப்படி இந்துத்துவவாதிகளால் நடத்தப்படும் மதமாற்றச் சடங்குகள் குறித்து நான் விரிவாக எனது “குஜராத் மற்றும் கர்நாடகத்தில் கிறிஸ்தவர்களின் மீதான வன்முறை” நூலில் எழுதியுள்ளேன். மதம் மாற்றப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும் தப்பித் தவறி அவர்கள் தம் முந்தைய நம்பிக்கையை ஏதோ ஒரு வகையில் கடைபிடிப்பது தெரிந்தால் அவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
கிட்டத்தட்ட 10 மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் அனைத்தும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் மதங்களுக்கு மாறுவதைத்தான் குற்றமாக்குகின்றன. கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு மாற்றப்படுவது இந்தச் சட்டங்களின்படி குற்றமில்லை. அது மதமாற்றம் இல்லையாம். அது “கர் வபாசி”, அதாவது வீடு திரும்புதலாம்.
இந்தச் சட்டங்கள் மட்டுமில்லை. நமது அரசியல் சட்டமும் மதமாற்ற விசயத்தில் மிகவும் அநீதியாகத்தான் வரையப்பட்டுள்ளது. நமது அரசியல் சட்டப்படி இந்து, பவுத்த, சீக்கிய பட்டியல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனால் கிறிஸ்தவ, முஸ்லிம் பட்டியல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. இதன் விளைவாக இட ஒதுக்கீடு பெறும் பொருட்டு ஆண்டுதோறும் பல்லாயிரம் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் “சுய விருப்பத்தின் பேரில்” மதம் மாறுகின்றனர்.
என்னுடன் ஒரு பேராசிரியர் பொன்னேரி அரசு கல்லூரியில் பணி செய்து கொண்டிருந்தார். அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். ஒரு நாள் கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது அந்த ரயில் பெட்டியில் நானும் அவரும் தனியாக இருந்தோம். அவர், தான் ஒரு கிறிஸ்தவர் எனவும் இட ஒதுக்கீட்டிற்காக தனது உறவினரான ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ஆலோசனைப்படி மதுரை ஆதீனத்தில் மதம் மாறியதாகவும் கூறினார். அதைச் சொல்லும்போது அவர் கண்கலங்கி இருந்தார். இப்போதும் அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பணியில் உள்ளார்.
கருத்துரிமை, சொத்துரிமை முதலானஅடிப்படை உரிமைகளை நிபந்தனைகள் இன்றி சிறப்புற வரையறுக்கும் நம் அரசியல் சட்டம் மத உரிமையை வரையறுக்கும்போது மட்டும் தடம் மாறுகிறது. ஒவ்வொருவரும் தாம் விரும்பும் மதத்தை “கடைபிடிக்க, அடையாளப்படுத்திக் கொள்ள, பரப்ப” உரிமை அளிக்கும் அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தப் பரப்புதல் என்பதைப் பொருத்த மட்டில் “பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில்” என்றொரு நிபந்தனையை இடுகிறது. இந்த நிபந்தனையைக் காட்டித்தான் மாநில அரசுகள் மதமாற்றத் தடைச் சட்டத்தை நீதிமன்றங்களில் நியாயப்படுத்துகின்றன.
யார் கண்டது, மாநிலங்கள் இயற்றியுள்ள மதமாற்றச் சட்டங்களின் வடிவில் மத்தியிலும் ஒரு சட்டத்தை மோடி அரசு இயற்றலாம். கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாற்றுவது மட்டும் குற்றம்: அங்கிருந்து இந்து மதத்திற்கு “வீடு திரும்பினால்” அது குற்றமில்லை என மோடி அரசும் ஒரு மத்திய சட்டத்தை இயற்றலாம்.