“அறிவு உண்டாக”- என ஆங்கவன் வாழ்த்தினன்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 22 , தீராநதி, நவம்பர் 2018                         

மணிமேகலையின் கதை அமைப்பு சற்றுச் சிக்கலானது. ஆங்காங்கு பவுத்த அறங்களைக் காப்பியத்தின் கதைப் போக்கில் பொருத்தமாய்ப் பதிக்க வேண்டியது இப்படிக் கதை அமைப்பு சிக்கலாவதில் ஒரு பங்கு வகிக்கிறது. சோழ அரசன் கிள்ளிவளவன் நாக நாட்டு இளவரசி பீலிவளையுடன் கொண்ட காதற் கதையை சித்திராபதி சொல்வதன் நோக்கம் மணிமேகலையை சிறையிலிருந்து மீட்டு அழைத்துச் செல்வதே. கடலை ஆளும் மணிமேகலா தெய்வத்தின் வலிமையைச் சொல்வதற்கு அவள் இங்கே இந்த வரலாற்றைச் சொல்கிறாள். அப்போது பூம்புகார் அழியவில்லை. ஆனால் தீவகச் சாந்தி செய்யாவிட்டால் மணிமேகலா தெய்வம் கோபம் கொள்ளும். நகரம்  கடல் வயிறு புக நேரும் என்றொரு சாபம் இருக்கிறது. அதன் விளைவாக மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அத் தெய்வத்தின் பெயர் தாங்கிய தன் பேத்தியைச் சிறையில் இட்டுத் துயரில் ஆழ்த்தினால் அதை அத் தெய்வம் பொறுக்காது என வெளிப்படையாகவே சொல்லி விடுகிறாள் சித்திராபதி.

அரசி அதற்குத் தக்க பதிலைச் சொல்லிவரும் நேரத்தில்தான் அறவணரும் மாதவியும் மணிமேகலையை மீட்க அங்கு வருகின்றனர். அடிகளைக் கண்டதும் அரசியும் அவள் ஆயச் சுற்றமும், சித்திராபதி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்கின்றனர். வீழ்ந்து வணங்கிய அரசியை அறவணர், “அறிவு உண்டாக” என வாழ்த்துகிறார்.

“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு” வாழ்க என்றெல்லாம் அம் மாதவர் வாழ்த்தவில்லை. அறிவு உண்டாக என மட்டுமே அவர் வாழ்த்துகிறார். பவுத்தம் துறவை மட்டும் போதிக்கும் மதமல்ல, திறன் சாரந்த வாழ்வு என்பதையும் அது வலியுறுத்துகிறது, அறன் சார்ந்த வாழ்வே திறன் சார்ந்த வாழ்வாகவும் இருக்க முடியும் என்பதையும் அது முன்வைக்கிறது.  புத்தரின் இறுதி நேரத்தில் அவரோடு இருக்க வாய்த்த அடியார்கள் அவரிடம் இறுதியாய் எங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என வினவும்போது அவர், “புதிதாய் என்ன சொல்லப் போகிறேன். உனக்கு நீயே விளக்கு” என்றுதான் கூறுகிறார். தனது போதனைகளே உங்கள் வழிகாட்டி எனக் கூட அவர் சொல்லவில்லை. தனது போதனைகளையும் கூட அவரைப் பின்பற்றுபவர்கள் சிந்திப்பதற்கான ஒரு பொருள் என்றே அவர் முன்வைத்தார். ‘உபய கவுசல்ய’ என்பது ஒரு பவுத்தக் கருத்தாக்கம். அதாவது சூழலுக்குத் தகுந்த உபாயம். அவ்வப்போது எதிர் கொள்ளும் சூழலுக்குத் தக அவர்கள் தங்கள் அறிவின் துணை கொண்டு அறத்தின் வழி நின்று உபாயங்களைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இறைவனை வேண்டியோ, புனித நீராடியோ, நல்ல நேரம் பார்த்தோ, விரதம் இருந்தோ, புனித யாத்திரை சென்றோ வாழ்வில் வெற்றி பெற இயலாது. அப்படி வாழ்வது அறம் சார்ந்த வாழ்வாகாது.

புத்தர் காட்டும் எண்வழிப் பாதை ‘சம்மா திட்டி’ எனத் தொடங்கும். அதாவது சரியான பார்வை. தொடர்ந்து சரியான நோக்கம், சரியான நடத்தை சரியான பேச்சு, சரியான வாழ்முறை, சரியான முனைப்பு, சரியான ஓர்மை, சரியான தியானம் என முடியும். இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்? எது சரியான பாதை என பவுத்தம் சொல்லவில்லை. பின் நாம் அதை எப்படித் தேர்வு செய்வது? எது குறித்தும் நமக்கு சரியான பார்வை என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழலுக்குத் தக அறவழியில் அறிவைப் பயன்படுத்திக் காண்பதே. இதுவே புத்தர் அருளிய வழிகாட்டல். ‘சரியான’ என்பதை right எனப் பொருள் கொள்வதைக் காட்டிலும் correct, perfect  எனப் பொருள் கொள்ள வேண்டும். பவுத்தம் ஒரு மதமல்ல. புத்த பகவன் ஒரு தத்துவவாதியோ, சடங்குகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒரு மதத்தை உருவாக்கியவரோ  இல்லை என்றெல்லாம் சொல்வதன் பொருள் இதுவே.

அப்படியாயின் ‘இறுதி உண்மை’ என எதுவும் இல்லையா? பௌத்தம் அதைத்தான் ‘நிர்வாண நிலை’ என்கிறது. இவ்வுலக வாழ்வை வெறும் மாயை என அது மறுக்கவில்லை. மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகின் விதிகளையும், அவை குறித்த உண்மைகளையும் அது ஏற்றுக் கொள்கிறது.. மற்ற அனைத்து மதங்களும் விஞ்ஞான முடிவுகளை ஏற்காத நிலையில் பவுத்தம் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஏற்றுக் கொண்டது. கிரகங்களின் நிலையை வைத்து எதிர்காலத்தைச் சொல்ல இயலும் என்கிற கருத்தை புத்தர் அளவிற்கு வன்மையாகக் கண்டித்தவர் யாருமில்லை.  இந்த phenomenal world ன் விதிகளாகவும் உண்மைகளாகவும் அறிவியல் கோட்பாடுகளை அவர் அங்கீகரித்தார்.
ஆனால் இவை ஒப்பீட்டளவிலானவை. நமது அறிதல், அளவுகோல்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவையே இந்த அறிவியல் உண்மைகள்.. அந்த அளவிற்கு அவை உண்மையானவை. அதே நேரத்தில் அந்த வகையில் அவை ஒப்பீட்டளவிலானவையும் கூட. பொருள்களை உங்களின் கருத்துக்கள், முன் முடிவுகளின் அடிப்படையில் அணுகி நீங்கள் அடையும் முடிவுகள் அவை. அதையும் கூட அறிவியல் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டது. எல்லாம் சார்பானவையே; எதுவும் முற்றுண்மையானவை அல்ல என்பதுதானே ஐன்ஸ்டினின் கோட்பாடு.
ஆனால் எதையும் அதன் இயல்பில் அறிந்து கொள்வதற்கு (nominal truth) எல்லாவற்றையும் முற்றுண்மையானது  என அணுகும் பார்வை தடையாகிறது.  nominal truth ஐ அறிந்துகொள்ள வழி என்ன? எந்த முன்முடிவுகளும், நம்பிக்கைகளும், அறிதலும் அற்ற நிலை அடைவதுதான். அதைத்தான் புத்த பகவன் ‘நிர்வாண நிலை’ என்றார். அதுவே ஒளிபெற்ற நிலை. intuition, ப்ரக்ஞை, “பன்னா”.

எல்லா அறிதல்களிலிருந்தும் விடுதலை என்பதன் பொருள் இதுவே. அப்படித் துறக்க வேண்டியவற்றுள் புத்தர் தன்னுடைய சிந்தனைகளையும் கூட உள்ளடக்கினார். இப்படிக் கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் எப்போதும் சுமந்து திரிபவர்களை அவர் நதியைக் கடக்கத் தயாரித்த மரத் தெப்பத்தை நதியைக் கடந்தபின்னும் தலையில் சுமந்து வரும் மூடத் தனத்துடன் ஒப்பிட்டார் (மஜ்ஜிம நிகாயம், அலகத்தூபம சுத்தம்). மரணப்படுக்கையிலும் அவர்  சொன்னாரே: “உனக்கு நீயே விளக்கு..”

அறிவைப் போற்றிய பவுத்தம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. இந்தியாவில் உருவான நாளந்தா, தட்சசீலம், விக்ரம சீலம், வல்லபி, புஷ்பகிரி, சோமபுரி மகாவிகாரை முதலான பல்கlலைக் கழகங்கள் யாவும் பவுத்தம் உருவாக்கியவை என்பது நினைவுக்குரியது. இன்றைய ‘பல்கலைக்கழகங்களுக்கு’ ஒரு தொன்ம மாதிரிகளாக அவை இருந்தன. வைதீக குருகுலக் கல்வி முறையிலிருந்து அது பலவகைகளில் வேறுபட்டது. ஒற்றை ஆசிரியரிடம் அவரது இருப்பிடம் சென்று, பணிவிடைகள் மேற்கொண்டு அவர் அறிந்தவற்றை மட்டுமே கற்றுக் கொள்ளும் குருகுல முறை கடுமையான வருண நெறிகளுக்கு ஆட்பட்டிருந்ததை நாம் ஏகலைவன் வரலாற்றிலிருந்து அறிகிறோம். பவுத்த பல்கலைக் கழகங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஓரிடத்தில் குவிந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பலவற்றையும் கற்றுத் தரும் முறை அது. வருண வேறுபாடுகளுக்கு அங்கு இடமில்லை.

விஹாரைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டவை என்றால் பௌத்த மதக் கல்வியாக மட்டும்தானே இருக்கமுடியும் என்கிற ஐயம் தோன்றலாம். பிக்குகளாக வருபவர்களுக்கு மட்டும்தான் மதக் கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு மதம் சாராத secular கல்வி அங்கே கற்றுத் தரப்பட்டது.

பிராமணக் கல்வி முறைக்கும், சிரமணக் கல்வி முறைக்கும் இன்னொரு வேறுபாடும் உண்டு. பிராமணம் போலச் சிரமணம் புறச் சடங்குகளுக்கும், இதர புற வினைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அகப் பயிற்சிக்கே அது முதன்மை அளித்தது. நல்வாழ்வு, திறன் சார்ந்த வாழ்வு, அறம் சார்ந்த வாழ்வு ஆகியவற்றையே பௌத்தம் கல்வியின் நோக்கங்களாகக் கொண்டிருந்தது. அற வாழ்வு, ஆழ்நிலைஉள்நோக்குச் சிந்தனை (contemplation), ஞானம் (wisdom) ஆகியன கல்வியின் உள்ளடக்கங்களாக இருந்தன. ஆன்மீகப் பயிற்சி என்பதாகச் சுருங்காமல்  உடல், ஒழுக்கம், அறிவு, சிந்தனை ஆகிய முழுமையான ஆளுமை வளர்ச்சியை அது நோக்கமாகக் கொண்டிருந்தது. அவற்றோடு பவுத்தக் கல்வி முற்றுப் பெறுவது  இல்லை. உரிய தொழிற் பயிற்சிகளுக்கும் அதில் இடமிருந்தன.

அறவணர் அரசியை ‘அறிவுண்டாக’ என வாழ்த்தியதன் உட்பொருள் இதுவே.

அடிகளுக்கு ஆசனம் காட்டி, திருவடி விளக்கிச் சிறப்புச் செய்தபின், “என் நல்வினைப்பயனே உம்மை இங்கு அழைத்து வந்தது. உங்கள் சொல்வலிமை குன்றவில்லை என்ற போதிலும் உடல் தளர்ந்துள்ளது. மூத்த இவ்வுடல் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தினாள் அரசி. “தேவி ! கேட்பாயாக” -எனத் தன் அறவுரையைத் தொடங்கினார் அடிகள்.

“தவநெறி மேவிய உடல் கொண்டவனாயினும் நான் கீழிறங்கும் மாலைச் சூரியன் போன்றவனே. பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் என்பது இயல்புதானே ! பேதமை தொடங்கி வினைப்பயன் ஈறாக வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறிந்தால் பெரும் பேறு பெற்றவர்கள் ஆவர். அறியார் ஆயின் ஆழ் நரகை அடைவர்” -எனக் கூறி அவற்றை விளக்குவார்.

“பேதமை என்பது கண்ணால் கண்டு ஆராய்ந்து ஒன்றை நம்பாது சொல்லப்பட்டவற்றை அப்படியே நம்புதல்; மூவுலகங்களிலும் சேதனப் பிரபஞ்சம் எனப்படும் உயிர்களின் இவ்வுலகம் மிகப் பெரிது. ஒருவர் தான் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப இவ்வுயிர்களில் ஏதொன்றின் கருவில் உதித்து, அவ் வினைப்பயனுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை அனுபவிப்பர். கொலை, களவு, காமம், தீய ஆசைகள் ஆகியன உடலால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள்; பொய், கோள், கடுஞ்சொல், பயனற்ற சொல் ஆகிய நான்கும் சொல்லால் இழைக்கப்படும் குற்றங்கள்; தீய விருப்பு (வெஃகல்), கோபம், மயக்கம் முதலியன உள்ளத்தால் நிகழும் குற்றங்கள்; நல்லறிவுடையோர் இக் குற்றங்களில் மனம் செலுத்த மாட்டார்கள். அப்படிச் செய்வார்கள் என்றால் அவர்கள் விலங்கு, பேய், நரகர் முதலான பிறப்புகளை எடுத்து உழல்வார்கள்.

“இப்பத்து வகைக் குற்றங்களிலிருந்தும் நீங்கி, பஞ்சசீலம் தாங்கி, தானம் செய்து வாழ்வாராயின் வானவர், மக்கள்,  பிரமர் என்போராய் நல்வினைப் பயனை அனுபவிப்பார்கள்.

“அரசமா தேவியே ! உடனிருக்கும் மங்கையரே ! குற்றமற்ற நல் அறத்தினைப் போற்றுவீர் ! மறுபிறப்புணர்ந்த மணிமேகலையே ! நீ பிற சமய அறங்களை எல்லாம் கற்று வந்த பின் உன் பால் வந்து, இவ் அற நெறிகள் எல்லாவற்றையும், அவற்றின் கூறுகளையும் முற்படக் கூறுவேன்” – எனக் கூறி எழுந்தார்.

தொடர்ந்து மணிமேகலையும் எழுந்தாள். அறவணரின் நல்ல மொழிகளை மறவாது போற்றிச் சிறப்புறுங்கள் என வாழ்த்தினாள். பிறகு, “நான் இனி இங்கிருந்தேனாயின் இளவரசனின் மரணத்திற்குக் காரணமானவள் எனப் பழிப்பர். ஆதலால் நான் இப்போது ஆபுத்திரன் நாட்டை அடைந்து, அதன் பின் மணிபல்லவம் சென்று தொழுது, வஞ்சி மாநகருக்குச் சென்று  மா பத்தினியான கண்ணகிக்காகக் குறைவற்ற நல்லறத்தினை எங்கும் செய்து கொண்டிருப்பேன். என மனதுக்கு இனியவர்களே ! எனக்கு ஏதும் துன்பம் நேருமென்று யாரும் கலங்க வேண்டாம்” என்று அனைவரையும் வணங்கி நின்றாள்.

இங்கு நமக்கொரு கேள்வி எழுகிறது. கண்ணகி அன்று பத்தினித் தெய்வமாக போற்றப்பட்டவள். ஆலயம் எடுத்து வணங்கப்பட்டவள். அவளுக்காக இந்த இளம் பெண் அறம் செய்யப் போகிறேன் எனச் சொல்வதன் பொருள் என்ன? கண்ணகி தனக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு வெகுண்டு மதுரை மாநகரையே எரித்து அழித்ததை மணிமேகலையின் பவுத்த மனம் ஏற்கவில்லை எனக் கொண்டு, அதற்குப் பகரமாய் தனது அறச்செயல்களின் பலன்களைக் காணிக்கையாக்குகிறாள் எனப் பொருள் கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.

மணிமேகலை அங்கிருந்து புறப்படுகிறாள். காப்பியத்தின் இறுதிக் கட்டத்திற்குள் நாமும் அடியெடுத்து வைக்கிறோம். அந்த மாலைப் பொழுதில் அவளது சம்பாபதி ஆலயம், உலகவறவி , ஒளி சிந்தும் கந்திற்பாவை எல்லாவற்றையும் வணங்கி வலம் வந்தாள். வானில் பறந்து சென்று புண்ணியராசன் ஆளும் சாவகம் அடைந்து நகர் புறத்தே உள்ள ஒரு பூஞ்சோலையுள் இறங்கினாள். இளைப்பாறலுக்குப் பின் அங்கு உறையும் மாதவனான தரும சாவகனைச் சென்று வணங்கினாள். இந்நகரின் பெயர் யாது, ஆளும் மன்னனின் பெயர் என்ன என வினவினாள்.

நாகபுரம் எனப் பதில் வந்தது. பூமிசந்திரனின் மகன் புண்ணியராசன் இந்நாட்டு மன்னன். இவன் பிறந்தது தொடங்கி இங்கே மழை பொய்ப்பதில்லை; மண்ணும் மரங்களும் வளங்களை அள்ளித் தருகின்றன. எவ்வுயிர்க்கும் நோய் நொடிகள் இல்லை என அந்த மாதவன் பதிலுரைத்தான்.

புகார், மணிபல்லவம், சாவகம், வஞ்சி, காஞ்சி என மணிமேகலையின் பிரபஞ்சம் விரிவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நாம் பார்த்து வருவது போல மணிமேகலை விரிக்கும் பவுத்த பிரபஞ்சம் இவ்வாறு தமிழகம், ஈழம், சாவகம் என்பதாக அமைகிறது. புத்தபிரான் அவதரித்த லும்பினி, அவர் ஒளி பெற்ற புத்த கயா ஆகியனகூட ஓரிடத்திலும் சுட்டப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வோம். சாவகம் என்பது இன்றைய ஜாவா தீவைக் குறிக்கிறது. உலகின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான இது இன்று இந்தோனேசியாவில் அமைந்துள்ளதை அறிவோம்.. இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்த்தா இங்குதான் உள்ளது. இன்று இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. கி.மு 800 களில் அங்கு பவுத்த அரசு இருந்தது. முன்னதாக அங்கு இந்து மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது. சாவகத்தை ஆளும் புண்ணியராசன் இந்திரனின் வழி வந்தோன் என சாத்தனார் பதிவு செய்வதும் கவனிக்கத் தக்கது.

 

(துறவை நோக்கிய மணிமேகலையின் இறுதி நகர்வு தொடங்குகிறது)

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *